குர்ஆனை விளங்குவது யார்?

in 1987 ஜுலை,அல்குர்ஆன்

  இப்னு ஹத்தாது

(ஒரு முஸ்லிம் அரபியை நேசிப்பவன், அரபியைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுபவன் என்பதில் நமக்கு ஐயம் இருக்க முடியாது. முஸ்லிம்கள் அனைவரும் அரபியைக் கற்றுக்கொள்ள முயலவேண்டும். இக்கட்டுரையைக் காரணம் காட்டி, “அரபி கற்றுக் கொள்ளத் தேவையில்லை” என்ற தவறான முடிவுக்கு யாரும் வந்துவிட வேண்டாம். அரபி மொழியைக் காரணம் காட்டி, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வையும், பிரிவினையையும் உண்டாக்கி , மார்க்கத்தை வியாபாரமாக்கி, ஒன்றுபட்ட சமுதாயத்தைச் சிதறிடித்து, ஒரு சாரார் உலக ஆதாயம் அடைவதைத் தெளிவுபடுத்தி, சமத்துவ சமுதாயம், ஒன்றுபட்ட சமுதாயமாக உருவாக, சிந்தனையைத் தூண்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.)

நீண்ட நெடுங்காலமாக அரபி கற்றவர்கள் மட்டுமே, அதிலும் 16 கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே குர்ஆனை விளங்க முடியும் என்ற ஒரு வலுவான எண்ணம் முஸ்லிம் சமுதாயத்தில் நிலவி வருகின்றது. இதன் காரணமாக அரபி மதரஸாக்களில் 7 ஆண்டுகள் செலவிட்டு ஸனது பெற்றுவரும் மவ்லவிகளும் குர்ஆனை நேரடியாக விளங்க முற்படுவதில்லை. அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கக் கூடிய முன் சென்ற பெரியார்களின் மனித அபிப்பிராயங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை எடுத்து நடந்து வருகின்றனர். மார்க்கப் பிரச்சனை ஏதும் எழுந்தால், (இந்த மவ்லவிகள் குர்ஆனையும், ஹதீதையும் பார்ப்பதைவிட்டு, மனித அபிப்பிராயங்களுடன் கலந்து எழுதப்பட்ட பிக்ஹு நூல்களையே வேத நூலாக ஏற்று செயல்பட்டு வருகின்றனர். மவ்லவிகளின் இந்தப் போக்கும், இந்த மவ்லவிகளின் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் போக்கும் சரியானதா? என்று நமது வழமையான கொள்கைப்படி குர்ஆன், ஹதீது வெளிச்சத்தில் ஆராய்வோம்.குர்ஆன் தன்னைப் பற்றி இவ்வாறு பிரகடனப்படுத்தியது.

“இது வேதநூல், இதில் சந்தேகமே இல்லை; பயபக்தியுடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும்” (2:2)

“நிச்சயமான இந்தக் குர்ஆன் (மனிதர்களுக்குத் தெளிவான) மிக நேரான வழியை அறிவிக்கின்றது.” (17:9)

“விசுவாசங்கொண்டோருக்கு அருளாகவும், பரிகாரமாகவம், உள்ளவைகளையே குர்ஆனில் இறக்கி இருக்கிறோம். எனினும், அக்கிரமக்காரர்களுக்கு (இது) நஷ்டத்தையேயன்றி அதிகரிப்பதில்லை. (17 :82)

“உம்முடைய பாஷையில் நாம் இதை எளிதாக்கி வைத்ததெல்லாம், இதன்மூலம் பயபக்தியுடையவர்களுக்கு நன்மராயங் கூறுவதற்கும், (வீண்) விதண்டவாதம் செய்யும் ஜனங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவுமே” (19 : 97)

“விசுவாசங் கொண்டோருக்கு (இது) நேர்வழியாவும், நன்மாரயமாகவும் இருக்கிறது” (27 :2)

“நன்மை செய்வோருக்கு ஒரு நேர்வழி காட்டியாகவும், ஓர் அருளாகவும் இருக்கின்றது” (31 :3)

இந்த வேத வசனங்கள் குர்ஆன் மூலம் நேர்வழிபெற “தக்வா” என்றும் இறையச்சம் அவசியம் என்றும், அக்கிரமக்காரர்களுக்கு நஷ்டமே இதன்மூலம் அதிகரிக்கும் என்றும் தெளிவுபடுத்துகின்றன.

இன்னும் 12:1, 15:1, 16:64, 27:1, 28:2, 36:69, 43:2 இந்த வேத வசனங்கள் அனைத்தும் குர்ஆன் தெளிவானது என்பதைப் பறைசாற்றுகின்றன. இப்போதைய மவ்லவிகள் சொல்வது போல் குர்ஆன் வசனங்களைப் புரிய முடியாது, பல அர்த்தங்கள் இருக்கின்றன என்ற வாதங்களுக்கு ஆதாரமாக குர்ஆனில் ஒரே ஒரு வசனத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு வசனத்தையும் இதுவரை எந்த மவ்லவியும் எடுத்துக்காட்டியதாகவும் இல்லை. ஜ.உ.சபையினரால் வெளியிடப்பட்ட ஷரீஅத் மலரில் 4:83 வசனத்தை ஆதாரமாகக் காட்டி இந்த வசனத்தின் அடிப்படையில் கற்று அறிந்த அறிஞர்கள் குர்ஆனிலிருந்து யூகம் செய்து சொல்வார்கள் என்று கட்டுரை வரைந்திருந்தார்கள். நாம் ஏப்ரல், மே இரண்டு இதழ்களிலும் அவர்களின் கூற்று முற்றிலும் தவறு என்பதற்குரிய ஆதாரங்களை எடுத்துக் கொடுத்திருந்தோம்.

முஸ்லிம்களால் குர்ஆனை விளங்க முடியாது. ஹதீதுகளை விளங்க முடியாது, என்று இந்த மவ்லவிகள் ஏன்? வரிந்து கட்டிக் கொண்டு போராடுகிறார்கள் என்று , நாம் சிந்திக்கும் போது உண்மை பளிச்சென்று தெரிகின்றது. ஒரு வியாபாரி தான், பொருட்களை எங்கிருந்து கொள்முதல் செய்து கொடுக்கிறோம் என்பது தனது வாடிக்கையாளர்களிடமிருந்து மறைக்கவே முற்படுவார். காரணம், வாடிக்கையாளர்களுக்கு அந்த இடம் தெரிந்துவிட்டால் இந்த வியாபாரியின் தயவு தேவை இல்லாமல் போய்விடும். வியாபாரி தனது வாடிக்கையாளர்களை இழந்து நஷ்டமடைவார். ஆகவே அவர் வியாபார இரகசியத்தை மறைப்பதில் நியாயம் இருக்கிறது. மார்க்கமும் இதற்கு அனுமதி அளிக்கிறது. காரணம், அனைவரும் வியாபாரிகளாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆன இந்த வியாபாரம் கூடும். ஆனால் நமது மவ்லவிகள் இதே அடிப்படையில் மார்க்கத்தையும் வியாபாரமாக்குகிறார்கள். மவ்லவிகள் இப்படி அடிக்கடி சொல்லி வருவதை நீங்கள் பலமுறை கேட்டிருப்பீர்கள். அதாவது “வியாதி வந்துவிட்டால் தலை சிறந்த டாக்டரைப் பார்க்கச் செல்லுகிறோம். கோர்ட்டில் வழக்கு என்றால் கெட்டிக்கார வக்கீலைப் பார்க்கச் செல்லுகிறோம். கடிகார ரிப்பேருக்கு நல்ல கடிகார ரிப்பேரரிடம் செல்லுகிறோம். இதே போல் மார்க்கத்தைத் தெரிந்து கொள்ள மவ்லவிகளிடம் தான் வரவேண்டும். வேறு யாரிடமும் செல்லக் கூடாது” என்று, மவ்லவி அல்லாதவர்கள் மார்க்கத்தைப் பற்றி பேசுவதைப் பெருங்குற்றம் போல் மக்கள் முன் எடுத்து வைக்கிறார்கள். மேல் எழுந்த வாரியாகப் பார்ப்பவர்களுக்கு இவர்களின் இந்தப் பேச்சு நியாயமாகவே படும். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், இவர்களின் இந்தப் பேச்சு குர்ஆன், ஹதீஸுக்கு எந்த அளவு முரணானது என்று புலப்படும். அவர்களின் இந்தக் கூற்றுப்படி மற்ற வியாபாரப் பொருட்களைப் போல, மார்க்கமும், ஒரு வியாபாரப் பொருளாக இவர்களின் பார்வையில் இருக்கிறது.

“மார்க்கத்தை உங்களுக்குப் போதிப்பதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்குரிய கூலி அல்லாஹ்விடமே இருக்கிறது” என்று தெள்ளத் தெளிவாக நபிமார்கள் கூறியது குர்ஆனில் பல இடங்களில் பார்க்க முடிகின்றது. (25:57, 26:109, 27:145,164,180) மார்க்கத்தை வியாபாரப் பொருளாக்கி வயிறு வளர்ப்பவர்களைக் கண்டித்துப் பல ஹதீதுகளைப் பார்க்க முடிகின்றது. இந்த மவ்லவி இனத்திற்கு இந்தக் குர்ஆன் வசனங்களோ, ஹதீதுகளோ கண்ணில்படுவதில்லை. அவர்களின் வயிற்றுப் பிரச்சரனதான் அவர்கள் கண்முன்னால் நிற்கிறது. நிரந்தரமான மறுமை வாழ்க்கையை விட அற்புதமான இவ்வுலக வாழ்க்கையையே அவர்கள் பெரிதாக எண்ணுகிறார்கள். அதன் காரணமாக இப்படிப்பட்ட பொருத்தமற்ற காரணங்களைக் கூறுகிறார்கள்.

அனைவரும் டாக்டராகவோ, வக்கீலாகவோ, கடிகார ரிப்பேரராகவோ ஆக வேண்டியதில்லை. ஒரு சிலர் இருந்தால் போதும். ஆனால் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வோர் அனைவரும் மார்க்கத்தை அறிந்தவர்களாக இருப்பது அனைவர் மீதும் கண்டிப்பான கடமையாக இருக்கிறது. மார்க்க விஷயங்களில் ஒரு சாரார் இன்னொரு சாராரை சார்ந்து இருப்பதையோ, நம்பிச் செயல்படுவதையோ “உங்கள் ரப்பிடமிருந்து இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அல்லாஹ் அல்லாதவர்களை உங்கள் பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்” (7:3) என்ற குர்ஆன் வசனம் தெளிவாககத் தடை செய்கிறது. அனைவரும் குர்ஆனையும் ஹதீதையும் புரிந்து செயல்பட வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுவதற்கு ஏற்ப, எழுதப் படிக்கத் தெரியாத மக்களும் குர்ஆனையும், ஹதீதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையிலேயே அவை அமைந்திருக்கின்றன. இது நமது அபிப்பிராயமல்ல. குர்ஆனும், ஹதீதும் தெளிவாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் விஷயமாகும்.

“அவன்தான், எழுத்தறிவில்லாத மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்க முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (அல்குர்ஆன் 62 :2)

“, வெள்ளை வேளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறென். அதன் இரவும் பகலைப் போன்றது. அதில் அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டார்கள்”

அறிவிப்பவர் : இர்பான் இப்னு ஸாரியா நூல் : இப்னுமாஜா

“அல்லாஹ் என்னைக் கற்றுக் கொடுப்பவனாகவும், எளிதாக்குபவனாகவும் அனுப்பி இருக்கிறான்”

அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி) நூல் : முஸ்லிம்

குர்ஆனும், ஹதீதும் இவ்வளவு தெளிவாக இருந்தும்நொண்டிச்சாக்குகள் சொல்லி, மக்களை குர்ஆனையும், ஹதீதையும் விட்டு திசை திருப்புபவர்கள் நிச்சயமாக சுயநலக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமுண்டா?

62 : 2 ஆயத்திலும், அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத மக்களாக இருந்தாலும், அரபி பேசும் மக்களாக இருந்தார்கள். ஆகவே அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாது என்று காரணம் சொல்வார்கள். அப்படியானால் “எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்காக அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி……” என்று அல்லாஹ் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்? இதிலிருந்து எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கும், எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதையும், அதே சமயம் எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்காகத்தான் குறிப்பாக குர்ஆன் இறக்கப்பட்டது என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் இதை விரிவாகப் பார்ப்போம். (வரும்)

அந்நஜாத்: ஜுலை, 1987 – துல்காஃதா, 1407

Previous post:

Next post: