குர்ஆனை விளங்குவது யார்? தொடர் -2

in 1987 ஆகஸ்ட்,அல்குர்ஆன்

இப்னு ஹத்தாது

அல்குர்ஆனின் 62:2 வசனப்படி எழுத்தறிவில்லாத மக்களும் குர்ஆனை எளிதாகப் புரிந்து கொள்ளும் நிலையில் குர்ஆன் இறக்கப் பட்டது என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். அடுத்து வரும் 62:3 வசனம் இதனை இன்னும் உறுதிப் படுத்துகின்றது.

“இவர்களுக்காகவும், இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காவும் (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் யாவரையும் மிகைத்தவன், ஞானமிக்கவன்.

62:3 ஆயத்திற்கு ஹதீது விளக்கம், அபூஹுரைரா(ரழி) கூறுவதால் புகாரியில் இடம் பெற்றுள்ளது.

“நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு அமர்ந்திருக்கும் போது சூரத்துல் ஜும்ஆ அவர்களுக்கு இறங்கியது. அப்போது “இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும்” என்று கூறப்பட்டிருக்கிறதே அவர்கள் யார்? என்று நபித்தோழர்கள் கேட்க, அதற்கவர்கள் மும்முறை கேட்கும் வரை மெளனமாக இருந்துவிட்டு, எங்களிடையே அமர்ந்திருந்த ஸல்மானுல் பார்ஸீ(ரழி) அவர்கள் மீது தமது கையை வைத்துக் காட்டி ஈமான் என்பது ஸுரையா என்னும் நட்சத்திரக் கூட்டத்தின் தூரத்திலிருப்பினும் இவருடைய ஆட்கள் அதை அடைந்தே தீருவர் என்று கூறினார்கள்.” (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ) மேற்கூறிய திருவசனத்தில் கூறப்படும் “பிற்காலத்திய மற்றவர்கள்” என்பதற்கு அரபியர் அல்லாத வேறு பாஷைகள் பேசுபவர்களென்றும், நபி(சல்) அவர்களை நபியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்து பாஷை பேசக்கூடிய மக்களும் இதில் அடங்குவர் என்று முஜாஹித்(ரஹ்) கூறுகிறார்கள். (ஆதாரம்: தப்ஸிர் இப்னு கதீர்)

“ஆக குர்ஆனை எல்லோரும் விளங்கிக் கொள்ள முடியாது” என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது மேல் கண்ட விளக்கங்களிலிருந்து தெளிவாகின்றது. சிலர் சுய ஆதாயத்திற்காக அவ்வாறு கூறுகின்றனர் என்பதும் புரிகின்றது.

அடுத்து அரபியில் ஒரே வார்த்தைக்குப் பல பொருள்கள் உண்டு, வசனங்களிலும் பல பொருள் பெற இடமுண்டு. இதுபற்றிய தெளிவான ஞானமில்லாதவர்கள் குர்ஆனை விளங்க முடியாது என்றும் கூறி வருகின்றனர். இதுவும் மக்களைக் குர்ஆனை விட்டும் திசை திருப்பும் ஒரு முயற்சியே ஆகும். இந்த நிலை அரபி மொழிக்கு மட்டுமல்ல. உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் இப்படிப்பட்ட நிலைகளைப் பார்க்கலாம். பொதுவாக மொழிகளுக்குரிய இந்த தடுமாற்றங்கள் குர்ஆன் அளவில் கொண்டு சேர்க்கலாமா? குறிப்பாகக் குர்ஆனின் “ஆயாத்தும் முஹ்க்கமாத்” என்று குர்ஆன் 3:7 ல் குறிப்பிடப்படும் வசனங்கள் பற்றி அவ்வாறு சொல்லலாமா? என்று பார்த்தால் நிச்சயமாக அவ்வாறு சொல்ல முடியாது. இந்த 3:7 வசனத்தின் விளக்கத்தைப் பின்னால் பார்ப்போம்.

இங்கு ஒன்றை, நன்றாக நாம் ஞாபகத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். உலகில் காணப்படும் ஏனைய நூல்களைப் போல் அல்குர்ஆன் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நூல் அல்ல. அன்றைய பெரும்புலவர்கள், அரபி இலக்கண, இலக்கிய விற்பன்னர்கள் எல்லாரும் ஏகோபித்து ஒன்றைச் சொன்னார்கள். அதாவது “மஹாதா கவ்லுல்பஷர் – நிச்சயமாக இது மனிதனின் சொல் அல்ல” என்பதாகும்.

ஆக அல்குர்ஆன் தெய்வீக் வெளிப்பாடாக இருந்ததால், சாதாரண அறிவு படைத்தவர்களும் அதி அற்புதமாக விளங்கும் நிலையிலும், எளிதாகவும் இருக்கும் அதே வேளை மறுபுறம் சாதாரண அறிவு படைத்தவர்கள் பேசும் கொச்சை நடையிலும் அது அமைந்திருக்கவில்லை. இதுவும் அல்குர்ஆனின் ஓர் அற்புதமே. நாங்கள் கற்றவர்கள், அறிஞர்கள் என்ற மமதையோடு குர்ஆனை அணுகுவோருக்கு அது விளங்காத புதிராகவும், அதே சமயம் தான் அல்லாஹ்வின் அடிமை, நான் என்ற பெருமை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம், என்ற உண்மையான உள்ள உணர்வோடு குர்ஆனை அணுகுவோருக்கு அது எளிதாக விளங்கும் நிலையிலும் அமைந்திருப்பதும் ஓர் அற்புதமே! இதைத்தான் அல்லாஹ்(ஜல்) “இக்குர்ஆனை உபதேசிக்க எளிதாக ஆக்கி இருக்கிறோம். எனவே உபதேசம் பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:17,22,32,40) என்று கேட்கிறான். குர்ஆனை விளங்குவதாக இருந்தால், ஒருவருக்குக் கண்டிப்பாகத் தேவை. “தக்வா” -பயபக்தி- இறையச்சம், இதையே அல்குர்ஆனின் 2:2 வசனமும், இன்னும் பல வசனங்களும் வலியுறுத்துகின்றன. இறையச்சம் இல்லாதவர்கள் என்னதான் படித்தவர்களாகவும், பண்டிதர்களாகவும் இருந்தாலும், குர்ஆனை விளங்கிக்கொள்ள மாட்டார்கள்.

இன்னும் கேளுங்கள், இவ்வளவு அழகான முறையில் சாதாரண அறிவு படைத்தவர்களும் விளங்கும் முறையில் எளிதாக்கியதோடு, அல்லாஹ்(ஜல்) விட்டுவிடவில்லை. அவனுடய அளவற்ற கருணையைப் பாருங்கள். தனது தூதரின் செயல்பாடுகளின் மூலம் அதை இன்னும் தெளிவாகவும், சந்தேகத்திற்கு இடமில்லாமலும் நிலை நாட்டிவிட்டான்.

தெளிவான அத்தாட்சிகளையும், வேதங்களையும் (அத்தூதர்களுக்கு கொடுத்தனுப்பினோம்; நபியே!) அவ்வாறே இந்த வேதத்தையும் உம்பால் அருளினோம்; மனிதர்களுக்காக (உம்பால்) அருளப்பட்ட இ(வ்வேதத்)தை அவர்கள் சிந்திக்கும் பொருட்டுத் தெளிவாக அவர்களுக்கு நீர் விளக்குவீராக! (அல்குர்ஆன் 16:44)

23 வருடங்களாக நபி(ஸல்) அவர்களும், அவர்களது அருமைத் தோழர்களும் குர்ஆனை செயல் வடிவில் கொண்டுவந்து விட்டார்கள். குர்ஆன் 3:7ல் “ஆயாத்தும் முஹக்கமாத்” என்று சொல்லப்படக் கூடிய கட்டளைகளுக்குரிய ஒவ்வொரு வசனத்தின், சொல்லின் பொருள் இன்னதுதான் என்பதைத் தெள்ளத்தெளிவாகச் செயல்படுத்திக் காட்டிவிட்டார்கள். அவற்றில் சந்தேகத்திற்கே இடமில்லாமல் ஆகிவிட்டது.

இதைத்தான் நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ் என்னைக் கற்றுக் கொடுப்பவனாகவும், எளிதாக்குபவனாகவும் அனுப்பி இருக்கிறான்.” அறிவிப்பவர், ஜாபிர்(ரழி) நூல் : முஸ்லிம்

“வெள்ளைவெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டு செல்கிறேன். அதன் இரவும், பகலைப் போன்றது. அதில் அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டார்கள்”. அறிவிப்பவர் : இர்பான் இப்னு ஸாரியா(ரழி) நூல் : இப்னுமாஜா என்று தெளிவாக அறிவித்துச் சென்றார்கள்.

இவ்வளவுக்கும் பிறகு குர்ஆனின் அடிப்படையான “ஆயாத்தும் முஹக்கமாத்” வசனங்களுக்கு, அல்லாஹ்வும், அவனது ரஸுலும் கொடுத்த விளக்கங்கள் போதாது, மனிதர்கள் விளக்கம் கொடுத்தே விளங்க முடியும் என்று எண்ணினால், அது உண்மை மார்க்கத்தை விட்டு வழிகெட்டுச் செல்ல ஷைத்தான் செய்யும் ஒரு மாபெரும் சூழ்ச்சி என்பதை அறிவுடையவர்கள் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும்.

“எவர் திருமறைக்குத் தம் நோக்கப்படி விளக்கம் கூறுகின்றாரோ! அவர் சரியாகக் கூறியிருந்த போதிலும், நிச்சயமாக அவர் குற்றவாளியே ஆவார்; தவறிழைத்தால் நிராகரிப்பவர் ஆகின்றார்”, என்பது நபி(ஸல்) அவர்களின் அமுதவாக்காகும்.

அறிவிப்பவர் : ஜுன்துப்(ரழி) நூல்கள் : அபூதாவூது, திர்மிதீ

மார்க்க விவகாரங்களில் குர்ஆன் என்ன கூறுகிறது? நபி(ஸல்) அவர்கள் அதற்கு என்ன விளக்கம் கூறி இருக்கிறார்கள் என்று பார்த்து விளங்கி நடப்பதே நமது கடமை. முன் சென்ற அறிஞர்கள், பெரியார்கள் சொல்லியுள்ளதாகச் சொல்லப்படும் கருத்து குர்ஆன், ஹதீதுக்கு முரண்பட்டால், உடனடியாக நாம் அந்தக் கருத்தை விட்டு, விட்டு, குர்ஆன், ஹதீதை எடுத்து நடப்பதை விட்டு, அந்தப் பெரியார் தப்பாகவா சொல்லி இருப்பார்? அவருக்கு குர்ஆன் ஹதீதுகள் தெரியாதா? என்ற ஐயங்களைக் கிளப்ப, ஆராய, நாம் போக வேண்டியதில்லை. காரணம் குர்ஆனில் அல்லாஹ் இதைத்தான் தெளிவாகத் தடுத்துள்ளான்.

“அந்த உம்மத்(சமூகம்) சென்று விட்டது, அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்”.

(அல்குர்ஆன் 2:134, 141)

இவ்வளவு தெளிவாக அல்லாஹ் கட்டளையிட்டபின் முன்னோர்களைப் பற்றிப் பேசுபவர்கள் நேர்வழியில் இருக்க முடியுமா?

இப்போது சமுதாயத்தில் நடைமுறையில் என்ன நடைபெற்று வருகின்றது. மேலே கூறப்பட்ட ஹதீதைச் சொல்லிக்காட்டி, இப்போதுள்ளவர்கள் குர்ஆனை சுயமாக விளங்க முடியாது; முன் சென்ற பெரியார்கள், இமாம்கள் எழுதி வைத்துள்ள கருத்துக்களையே எடுத்துச் செயல்பட வேண்டும்: என்று திசை திருப்பப்படுகின்றது. ஆனால் உண்மை என்ன?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீது இன்றுள்ள முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, நபி(ஸல்) அவாகள் அல்லாத எல்லா முஸ்லிம்களுக்கும் அதுதான் சட்டம். முன்னோர்களுக்கும் அதுதான் சட்டம். முன்னோர்களுக்கும் தங்கள் இஷ்டத்திற்குக் குர்ஆனுக்கு விளக்கம் கொடுத்திருக்க முடியாது என்ற மறுக்க முடியாத உண்மையை அறியத்தவறி விடுகின்றனர். மார்க்க விவகாரங்களில் வஹியின் தொடர்புடன் இருந்த நபி(ஸல்) அவர்களின் விளக்கத்தையே நாம் பார்க்க வேண்டும். இந்த அடிப்படைக் கொள்கையை நாம் காற்றில் பறக்க விடடு விட்டதால், இன்று எழுதி வைக்கப்பட்டிருக்கும் மனித அபிப்பிராயங்கள் அடங்கிய தப்ஸீர்களையும் மற்றும் கிரகந்தங்களையும், குர்ஆன் ஹதீதுகளோடு சரிபார்க்காமல், கண்மூடித்தனமாக அப்படியே வேதப் புத்தகங்களாக ஏற்று, உண்மை மார்க்கத்தை விட்டும் வெகுதூரம் சென்று விட்டோம்.

குர்ஆனும், ஹதீதுகளும் தெளிவாகக் கூறும் காரியங்களிலும், அவற்றிற்கு முற்றிலும் முரணாகச்ச செயல்படடுக் கொண்டிருக்கிறோம். முன்னோர்கள் மீது நமக்கிருந்தும் முரட்டு பக்தியானது, குர்ஆன் வசனங்களையும், உண்மை ஹதீதுகளையும் தெளிவாகத் தெரிந்து கொண்டே, முன்னோர்கள் என்ன தப்பாகவா நடந்திருப்பார்கள்? என்று சொல்லிக் கொண்டே தவறான போக்கிலேயே போய்க் கொண்டிருக்கிறோம். சமுதாயத்தின் இந்த இழிநிலை மாற வேண்டும்.

குர்ஆனும் தம் இஷ்டப்படி கருத்துக்களைத் தேடிப்பிடிப்பவர்கள், வழி தவறியவர்கள் என்பதைக் குர்ஆன் அழகாகத் தெளிவு படுத்துகின்றது.

“அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் (விளக்கமான) கட்டளைகளுக்குரிய வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துக்கள்) ஆகும். எனினும் எவருடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கிறதோ, அவர்கள் இதில் குழப்பங்களை உண்டு பண்ணுவதற்காக (அந்த முதஷாபிஹாத் என்னும் ஆயத்துகளில் தவறான) விளக்கங்களைத் தேடிப் பின்பற்ற முற்படுவர். ஆனால் இதன் உண்மையான கருத்துக்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியார். கல்வி அறிவில் உறுதிப்பாடு உடையவர்களோ, “நாங்கள் பூரணமாகவே அதில் நம்பிக்கைக் கொள்கிறோம். அவை முழுவதுமே எங்கள் ரப்பிடமிருந்து வந்தவைதான்,” என்று கூறுவர். ஆக அறிவுடையோரைத் தவிர வேறெவரும் இதைக் கொண்டு உறுதியும் நல்லுபதேசமும் பெறமாட்டார்கள். (அல்குர்ஆன் 3:7)

இந்த வசனத்திற்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த விளக்கம் வருமாறு:

நபி(ஸல்) அவர்கள் 3:7 வசனத்தை “உலுல்அல்பாப்” முடிய ஓதினார்கள். பின்னர், “பல பொருளுடைய வசனங்களில் குதர்க்கம் புரிபவர்களை நீங்கள் காணின் இவர்களைப் பற்றித்தான் இறைவன் இந்த வசனத்தில் கூறி இருக்கிறான் என்று அறிந்து, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாய் இருந்து கொள்ளுங்கள்” என்று தனது உம்மத்தை (சமூகத்தை) எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ,

(இன்ஷாஅல்லாஹ் வரும்)

********************

“எங்கள் ரப்பே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து, எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை நன்கொடையாய் அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக – (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக”! (அல்குர்ஆன் 25: 74)

அந்நஜாத்: ஆகஸ்ட், 1987 – துல்ஹஜ், 1407

Previous post:

Next post: