குர்ஆனை விளங்குவது யார்? தொடர்-3

in 1987 செப்டம்பர்,அல்குர்ஆன்

  இப்னு ஹத்தாது

சென்ற ஆகஸ்ட் இதழில் அல்குர்ஆன் 3:7 வசனத்தின் தமிழ்மொழி பெயர்ப்பையும், இந்த வசனம் பற்றி ஹதீது நூல்களில் பதிவாகியுள்ள ஒரு ஹதீதின் தழிழ் மொழிப் பெயர்ப்பையும் பார்த்தோம்.

அடுத்து இந்த வசனம் சம்பந்தமாக இன்னும் தெளிவாக ஆராய்ந்து அறிவதற்கு முயற்சிப்போம். காரணம் இந்த வசனத்தின் தெளிவான விளக்கத்தை நாம் அடைந்து கொள்வது, அல்குர்ஆனின் இதர அனைத்து வசனங்களையும் பிரித்தறிந்து கொள்வதற்கும், “முஹக்கமாத்” வசனங்களைத் தெளிவாகப் புரிந்து செயல்படுவதற்கும், அது நமக்குப் பெரிதும் உதவும்.

இந்த 3:7 திருவசனத்திலிருந்து, இரண்டு வகையான வசனங்களள் திருமறையில் இடம் பெற்றுள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றி நமக்குத் தெளிவாக விளங்குகின்றது. அதிலும் “முஹக்கமாத்” வசனங்களே அல்குர்ஆனின் அடிப்படை நோக்கமாகும் என்பதும் தெளிவாகப் புரிகின்றது. “மதஷாபிஹாத்” வசனங்கள் மார்க்க அடிப்படையில் செயல்பாட்டுக்கு உரிய வசனங்கள் அல்ல என்பதும் தெளிவாகப் புரிகின்றது. ஒன்றைச் செயல்படுத்துவதாக இருந்தால், அதைப் புரிந்து கொள்வது அவசியமாக இருக்கிறது. ‘முதஷாபிஹாத்’ வசனங்களின் உண்மையான கருத்துக்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியார் என்று அல்லாஹ்வே தெளிவாக அறிவித்திருப்பதால், அறியாத ஒன்றை செயல்படுத்தும்படி அல்லாஹ் நம்மை நிர்ப்பந்திக்க மாட்டான் என்பது தெளிவான விஷயம். “வமாஜஅல அலைக்கும் ஃபித்தீனி மின் ஹரஜின்” இம்மார்க்கத்தில் நாம் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை” என்று அல்லாஹ் 22:78 அல்குர்ஆன் வசனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான். இன்னும் நபி(ஸல்) அவர்கள் “இன்னமாபுஹிஸ்தும் முயஸ்ஸரீன்”… “நீங்கள் எளிதாக்கப்பட்டவர்களாகவே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறீர்கள்” (புகாரி) என்று இதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார்கள். ஆக ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத்தரும். “முதஷாபிஹாத்” வசனங்களின் உண்மை கருத்துக்களை அல்லாஹ்வே அறிவான் என்பதிலிருந்து, அவை மார்க்க விஷயங்களில் மனிதர்களால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை அல்ல என்று விளங்குகிறோம். இதிலிருந்து மார்க்க விஷயங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய “முஹக்கமாத்” வசனங்கள் ஒரே கருத்தைச் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகவும், பகிரங்காமவும் அறிவிக்கக் கூடியவையாக இருக்கின்றன. இதை அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் “ஆயாத்தும்முபீன்” – தெளிவான வசனங்கள், என குறிப்பிட்டு பலமுறை ஊர்ஜிதம் செய்கிறான். ஆக நம்மால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய “முஹக்கமாத்” வசனங்களில், இப்படியும் பொருள் எடுக்கலாம் – அப்படியும் பொருள் கொள்ளலாம் – என்று யாராவது சொல்வார்களேயானால் அவர்கள் உள்ளத்தில் மாறுபாடு இருக்கிறது. மக்களை வழி கெடுக்க அவர்கள் முற்படுகிறார்கள் என்பதை அறிந்து, அவர்கள் விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது நமது அபிப்பிராயம் அல்ல. அதே குர்ஆன் வசனமும், அதற்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த விளக்கமும் தெளிவாக எச்சரிக்கின்றன.

மார்க்க விஷயங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமற்ற “முதஷாபிஹாத்” வசனங்களை அல்லாஹ் ஏன் இறக்கி இருக்க வேண்டும்? என்ற பெரிய சந்தேகம் நமக்கு எழக் கூடும். இன்ஷா அல்லாஹ் அதன் தெளிவை பின்னால் நாம் விரிவாக ஆராய்வோம். இப்போது நாம் அவசியமாக விளங்கிக் கொள்ள வேண்டிய விஷயம் மார்க்க விஷயங்களள் தெள்ளத் தெளிவானவை. அதற்கு மனிதர்கள் யாரும் எந்தவித விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், நபிமார்களையே அல்லாஹ் தனது கண்காணிப்பில் வைத்து, தன்னால் அறிவிக்கப்பட்டதைக் கூட குறைய எதுவும் செய்யாமல் அப்படியே மக்களுக்கு அறிவிக்கும்படி கட்டளையிடுகிறான். அது விஷயத்தில் அவர்கள் குறைவு செய்தால் மிகக் கடுமையாகத் தண்டிப்பாகவும் எச்சரிக்கிறான். நபிமார்களும் தங்கள் சுய அபிப்பிராயங்களையோ, யூகங்களையோ மார்க்கக் கட்டளைகளில் நுழைக்க அல்லாஹ் ஒரு சிறிதும் அனுமதிக்கவில்லை. மார்க்கச் செயல்பாட்டுக்குரிய அறிவிப்புகள் அப்படியே எவ்வித மாற்றமும் இல்லாமல் மக்களைப் போய்ச் சேரவேண்டும் என்ற விஷயத்தை, அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருந்திருக்கிறான். இவையனைத்தும் நமது அபிப்பிராயங்களோ, யூகங்களோ அல்ல. இவை அனைத்தையும் தெளிவுபடுத்தும் குர்ஆன் வசனங்களே தெள்ளத்தெளிவாக இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மார்க்க விஷயங்கள் அல்லாஹ்வின் அறிவிப்புப்படியே இருக்க வேண்டும் என்பதற்குரிய ஆதாரங்கள்:

ஆதம்(அலை) சுவர்க்கலோகத்தில் வாழ்ந்து அனுபவவாயிலாக தன்னுடைய சந்ததிகளை விட சுவர்க்கத்தையும், மலக்குகளையும், ஷைத்தானையும், நேரடியாகவும் தெளிவாகவும் அறிந்திருந்தார்கள். அப்படிப்பட்ட ஆதம்(அலை) இவ்வுலகிற்கு வந்தபின், தான் பெற்றுள்ள அனுபவங்களை வைத்து சுய அபிப்பிராயப்படியும், யூகங்கள் படியும் மார்க்க காரியங்களை செய்து கொள்ள அல்லாஹ் அனுமதிக்கவில்லை. அல்லாஹ் அவர்களுக்கு இட்ட கட்டளையை கீழ்க்காணும் வசனம் தெளிவுபடுத்துகிறது.

நாம் சொன்னோம், “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும். யார் என்னுடைய (அவ்)வழியைப் பின்பற்றுகிறார்களோ, அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (அல்குர்ஆன் 2:38)

அல்குர்ஆன் 20:123 வசனமும் இதையே ஊர்ஜிதப்படுத்துகிறது. கப்ரு வணங்கிகள் அடிக்கடி ஓதி மக்களை ஏமாற்றும் ஒரு சொற்றொடர் “லா கவ்ஃபுன் அலைஹிம் யஹ்சனூன்” – அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள், இந்த 2:38 வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டலின்படி நடப்பவர்களுக்கு பயமோ, துக்கமோ இல்லை. அவுலியாக்கள் அப்படி நடந்து வந்ததால் அவர்களுக்கு பயமோ துக்கமோ இல்லை. இந்த சொற்றொடரைக் காட்டி “அவலியாக்களிடம் போய்க் கேட்கலாம், அவர்கள் கொடுப்பார்கள், அல்லது அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள்” என்று மக்களை வழி கெடுப்பவர்கள் 3:7 வசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி தங்கள் உள்ளங்களில் மாறுபாடு உடையவர்களேயாவார்.

இற்த 2:38, 20:123 வசனங்களிலிருந்து மார்க்கம் என்றால் அது அல்லாஹ்வின் அறிவிப்பின்படியே இருக்க வேண்டும். மறுமை விஷயத்தில் ஓரளவு அனுபவமுள்ள ஆதம்(அலை) அவர்களையே சுயமாக நடந்து கொள்ள அல்லாஹ் அனுமதிக்கவில்லை; இந்த நிலையில் மறுமையைப்பற்றி அறவே அனுபவமில்லாத மற்ற மனிதர்கள் தங்கள் சுய அபிப்பிராயப்படியும், யூகங்களின் படியும் நிச்சயமாக நடக்க முடியாது என்பது நமக்குத் தெளிவாகப் புரிகின்றது. அப்படி நடப்பவர்கள் நரகத்திற்குரியவர்கள் என்பதையும் அடுத்த வசனம் உறுதிப்படுத்துகின்றது.

“அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக நெருப்பின் தோழர்களாவர். அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர். (2:39) 20:124-127 வசனங்களும் இதையே ஊர்ஜிதப்படுத்துகின்றன.

ஆதம்(அலை) அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைத் தொடர்ந்து எல்லா நபிமார்களும் வஹிமூலம், தனது நேர்வழியை அல்லாஹ் தெளிவுபடுத்தினான்.

“ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து , என் வசனங்களை விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருத்திக் கொண்டார்களோ, அவர்களுக்கு அச்சமில்லை, அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.” (7:35)

இந்த வசனத்திலும் கபுரு வணங்கிகள் மக்களை அவுலியாக்களின் பேரால் ஏமாற்றப் பயன்படுத்தும் “லாகவ்ஃபுன்”… என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளதை ஊன்றிக் கவனிக்கவும்.

“அல்லாஹ்வின் ஆணைப்படி ஒழுகுவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் யாதொரு தூதரையும் அனுப்பி வைக்கவில்லை.” (4:64)

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மர்க்கமாக்கியிருக்கிறான். ஆகவே(நபியே) நாம் உமக்கு வஹி மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால், “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதேயாகும். (42:13)

மார்க்கத்தில் பிரிவுகள் இல்லை; இஸ்லாத்தில் பிரிவுகளைக் கற்பிக்கக் கூடாது என்பது இந்த வசனத்திலிருந்து தெளிவாகின்றது. மார்க்கக் காரியங்களில் கூடுதல் குறைவு செய்யக் கூடாது, வஹியாகப் பெறுவதை அப்படியே மக்களுக்கு அறிவித்து விட வேண்டும் என்று இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களை மிகக் கடுமையாக எச்சரித்து இறக்கப்பட்ட பல குர்ஆன் வசனங்களைப் பார்க்கிறோம்.

நேரான மார்க்கத்தில் தான் நபியே உம்மை ஆக்கி இருக்கிறோம். அதனைப் பின்பற்றி நடப்பீராக. அறிவற்றவர்களின் வழியைப் பின்பற்றாதீர். (45:18)

(நபியே!) நீர் இப்றாஹீமுடைய நேரான மார்க்கத்தைப் பின்பற்றுவீராக! என்று உமக்கு நாம் வஹி அறிவித்தோம். (16 : 123)

“வஹிமூலம் உமக்கு அறிவிக்கப்பட்டதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளும். நிச்சயமாக நீர் நேரான பாதையில் தான் இருக்கின்றீர்” (43:43)

“நிச்சயமாக இது உமக்கும், உமது சமூகத்திற்கும் நல்லுபதேசமாகும்” (43:44)

“(நபியே) உமது முகத்தை இஸ்லாமிய மார்க்கத்தின்பால் திருப்பி விடுவீராக” (30 :30)

“(நபியே) உமது இறைவனால் உமக்கு வஹிமூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கிறான் (33:2)

“அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்டதன் பின் எதுவும் உம்மை அவற்றை விட்டும் நிச்சயமாகத் திருப்பி விடாதிருக்கட்டும்” (28:87)

“அல்லாஹ்வின் வழி காட்டலே மெய்யான வழி காட்டல்”. (3: 73)

“அல்லாஹ்வின் மார்க்கம் விட்டு, வேறு மார்க்கம் விரும்புகிறீர்களா? (3:83)

“நேர்வழி செல்லுங்கள், வேறு வழி தேட வேண்டாம்” (6:153)

“(நபியே) இவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ, அதனை நீர் தெளிவாக்குவதற்காகவே இவ்வேதத்தை உம்மீது நாம் இறக்கி வைத்தோம: அன்றி, விசுவாசமுடைய மக்களுக்கு (இது) நேரான வழியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது” (16: 64)

“அல்லாஹ்வின் வழிதான் நிச்சயமாக நேரான வழி” என்று கூறிவிடும். (2:120)

இவ்வளவு தெள்ளத் தெளிவான இத்தனை வசனங்களைப் பார்த்த பின்பும், வஹி வந்து கொண்டிருந்த நபி(ஸல்) அவர்களின் சுய அபிப்பிராயங்களையே, யூகங்களையே மார்க்கமாக்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்பும், நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னுள்ள மனிதர்கள் விளக்கங்களை ஏற்று நடக்க வேண்டும் என்று சொல்பவர்கள் யாராக இருக்க முடியும்? என்பதை நாம் சிந்தித்து விளங்கக் கடமைப் பட்டுள்ளோம். 3:7 வசனம் குறிப்பிடும், உள்ளத்தில் மாறுபாடு உடையவர்களைத்தான் அவர்கள் இருக்க முடியும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் நபி(ஸல்) அவர்களே அல்லாஹ்வின் கண்காணிப்பில் இருந்தார்கள். அவர்களது சொந்த விருப்பங்களும், மார்க்கமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை; அல்லாஹ்வால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்குரிய ஆதாரங்களையும், இன்னும் பல விபரங்களையும் பார்ப்போம்.

(இன்ஷா அல்லாஹ் வரும்)

அந்நஜாத்: செப்டம்பர், 1987 – முஹர்ரம், 1407

Previous post:

Next post: