நபிவழித் தொகுப்பு வரலாறு தொடர் – 9.

in 1987 செப்டம்பர்

  அபூஅஸ்மா

மாதங்களின் பெயரால் இடைச்செருகல்கள் :

சென்ற ஆகஸ்ட் இதழில் மத்ஹபுகளின் பெயரால் இடைச் செருகல்கள் நுழைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். இதோ புனிதமிகு முஹர்ரம் மாதம் வந்திருக்கிறது. இம்மாதத்தின் புனிதத்தைக் கூட பார்க்காமல், சில புண்ணியவான்கள் (?) புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருப்பதைப் பார்ப்போம்.

இம்மாதத்தில் கீழ்க்காணும் அத்துணை விஷயங்களும் ஒட்டு மொத்தமாக முஹர்ரம் பத்தாம் தினமாகிய “ஆஷுரா” தினத்தில் தான் நிகழ்ந்தனவென்று நீளமானதொரு கட்டுக்கதையைக் கட்டிவிட்டிருக்கிறார்கள், அது பின்வருமாறு:-

வல்ல அல்லாஹ் இந்த ஆஷுரா தினத்தில் தான் வானம் பூமியைப் படைத்தான். முதன்முதலாக மழையைப் பெய்ய வைத்தான். ஆதம்(அலை) அவர்களைப் படைத்தான், அவர்களின் தவ்பாவை ஏற்றான். இத்ரீஸ்(அலை) அவர்களுக்கு உயர்ப் பதவியளித்தான், நூஹ்(அலை) அவர்களின் கப்பலை “ஜுதிய்யு” என்னும் மலைமீது தங்கச் செய்தான், இப்றாஹீம்(அலை) அவர்களை நெருப்பிலிருந்து காப்பாற்றினான். தாவூத்(அலை) அவர்களின் பாவத்தை மன்னித்தான், சுலைமான்(அலை) அவர்களுக்கு ஆட்சியை மீண்டும் அளித்தான். அய்யூப்(அலை) அவர்களுக்கு நோயின் கஷ்டத்தை அகற்றினான், யூனூஸ் (அலை) அவர்களை மீனின் வயிற்றிலிருந்து வெளிப்படுத்தினான்; யஃகூப்(அலை) அவர்களையும், அவர் தம் மகனார் யூசுப்(அலை) அவர்களையும் ஒன்று சேர்த்துவைத்தான், ஈஸா(அலை) அவர்களைப் பிறக்கச் செய்து பல்லாண்டுகளுக்குப் பின்னர் அதே தினத்தில் வானத்திற்கு உயர்த்தினான்.

இவ்வாறு பாவா ஆதம்(அலை) அவர்கள் முதல் ஈஸா(அலை) அவர்கள் வரை வந்துள்ள பல நபிமார்களின் முக்கிய நிகழ்ச்சிகள் புனித ஆஷுரா அன்றே நிகழ்ந்திருப்பதாகக் கூறுவதுடன், அன்று எவர் குளிப்பாரோ அவருக்கு அவ்வருடம் முழுதும் நோய் ஏற்படாது என்றும், அன்று கண்ணுக்கு “சுருமா” அஞ்சணக்கல் உபயோகிக்கிறாரோ, அவ்வருடம் முழுதும் கண் நோய் அவருக்கு உண்டாகாது என்றும், அன்று மனைவி மக்களுக்குக் தாராளமாக எவர் உண்பதற்குக் கொடுக்கிறாரோ, அவ்வருடம் முழுதும் அவருக்கு குடும்பத்தில் தாராளத்தன்மை ஏற்படும் என்றும் துணிவோடும் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியிருப்பதாகவே கூறியிருக்கிறார்கள்.

மேற்கண்டவை அனைத்தும் ஸிஹாஹுஸ்ஸித்தாவிலும், ஏனைய ஆதாரமாகக் கொள்ளப்படும் எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் காணப்பாடாமல் இருப்பதுடன், இடைச் செருகல்களின் தொகுப்பில் அவை இடம் பெற்றிருக்கின்றன.

ஆனால் இறுதியாகக் கூறப்பட்ட ஹதீஸ், அதாவது, அன்று மனைவி, மக்களுக்குத் தாராளமாக… எனும் ஹதீஸ் பைஹகீ, ரஜீன் ஆகியவற்றில் இடம் பெற்றிருப்பினும் அது பலவீனமுடையது என்று முஹத்திஸீன்கள் குறிப்பிடுகிறார்கள்.

இவ்வாறு ஹதீஸ்கலா வல்லுனர்கள், இடைச்செருகல், பலவீனமானவை என்று அப்பட்டமாக எடுத்துக் கூறியிருப்பதை சிறிதும் கவனிக்காது, நமது இறை இல்லங்களில் உயர்பணிபுரியும் மரியாதைக்குரிய இமாம்கள், மக்களுக்கு மார்க்கத்தை எடுத்துக் சொல்லவேண்டிய பொறுப்பாளர்கள் இத்தகைய அண்டப் புழுகு, ஆகாசப்புழுகுகளைக் கூறி அப்பாவி மக்களின் நேரங்களை பாழ்படுத்துவதைக் காணும் யாதொரு முஸ்லிமும் மனம் வருந்தாதிருக்க முடியாது.

இனி ஹதீஸின் வெளிச்சத்தில் ஆஷுரா தினத்தைக் காணுவோம், அபுகதாதா(ரழி) அறிவிக்கிறார்கள்.

ஆஷுரா தினத்தன்று நோற்கப்படும் ஒரு நோன்பை கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்கு வல்ல அல்லாஹ் பரிகாரமாக்கி விடுவான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். (திர்மிதீ)

இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, யுதர்களைஆஷுரா தினத்தின் நோன்பு நோற்றவர்களாகக் கண்டு, நீங்கள் நோன்பு வைத்துள்ள இந்நாளின் விசேஷம் என்றார்கள. அதற்கவர்கள் இது ஒரு மகத்துவமிக்க தினம், இன்றுதான் நபி மூஸா(அலை) அவர்களையும், அவர்கள் தம் சமூகத்தாரையும் வல்ல அல்லாஹ் காப்பாற்றி (அவர்களின் எதிரிகளான) ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தாரையும் நீரில் மூழ்கடித்தான்.

அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதன் காரணமாகவே நாங்களும் நோன்பு நோற்றிருக்கிறோம் என்றார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், நபி மூஸா(அலை) அவர்களின் இவ்விஷயத்தில் உங்களைப் பார்க்கினும் நான் மிக்க தகுதியுடையோனும், கடமை உணர்வுள்ளவனுமாவேன், என்று கூறிவிட்டு தாமும் நோன்பு நோற்று பிறரையும் நோற்கும்படி ஏவினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மேலும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா அன்று தாமும் நோன்பு நோற்று, பிறரையும் நோற்க ஏவியபோது, அல்லாஹ்வின் தூதரே! இத்தினத்தை யூதரும் கிறிஸ்தவரும் பெரிதென மதிக்கிறார்களே (நாம் அவர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டுமே) என்றார்கள். அதற்கு நான் வரும் வருடம் உயிருடனிருந்தால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்றார்கள் (முஸ்லிம்)

ஆகவே நாம் ஹதீஸின் அடிப்படையில் ஆஷுரா தினத்தைப் பார்க்கும்பொழுது, அன்றைய தினம் நோன்பு பிடிப்பதும், அதற்குமுன் முஹர்ரம் ஒன்பதாம் நாளன்று நோன்பு பிடிப்பதும் தவிர்த்து வேறு எவ்வித கரியங்களும் செய்யவேண்டுமென்பதற்கு சிறிதும் ஆதாரமில்லை. மார்க்க ரீதியில் அது ஒரு குதுர்கல தினமோ, துக்க தினமோ கிடையாது என்பதை உணரக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆஷுரா சம்பந்தப்பட்ட வகையில் பாமர மக்களால் செய்யப்படும் அனாச்சாரங்கள் அனைத்தும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவைகளேயாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை மார்க்கத்தின் பெயரால் நடைபெறும் அனாச்சாரங்கள் அனைத்தை விட்டும் காப்பாற்றி, அவன் தம் தூதராம் நமது நபி(ஸல்) அவர்களின் அடிச்சுவற்றைப் பின்பற்றி நடக்க அருள்புரிவானாக! ஆமீன்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

அந்நஜாத்: செப்டம்பர், 1987 – முஹர்ரம், 1407

Previous post:

Next post: