குர்ஆனில் முரண்பாடில்லை!

in 1987 செப்டம்பர்,அல்குர்ஆன்

அறிவுப்போட்டி -2 முடிவு:

1987 மார்ச் இதழின் 52-ம் பக்கம் வெளியான குர்ஆனில் முரண்பாடா? பகுதி 2, மற்றும் 1987 ஏப்ரல் இதழின் 14ம் பக்கம் வெளியானன சகோதரர் சீனிவாசன் கடிதம், அதே இதழின் 15-ம் பக்கத்திலுள்ள, குர்ஆனில் முரண்பாடா? பகுதி 2. ஒரு திருத்தம். இவை அனைத்தையும் பார்வையிட்டுப் பல சகோதரர்கள் தங்கள் தங்கள் விளக்கங்களை அந்நஜாத்திற்கு அனுப்பி இருந்தார்கள் . அவை அனைத்தையும் ஆசிரியர் குழு பரிசீலனை செய்தது. பரிசு பெறும் அளவிற்கு முழுமையான விளக்கங்களை ஒருவரும் தரவில்லை.

1. ஹாஜா ஷர்புத்தீன், அஜ்மான்

2. A.S. செய்யது அஹ்மது தம்பி, கீழக்கரை

3. M. சவுகத் அலி, மதுரை

4. M. அஹ்மது கபீர், காரைக்கால்

5. S.G.S. சுல்தான்ஜி, சேலம்

6. இப்னு ஷேக், காயல்பட்டினம்

7. S. மாஹீன் அபூபக்கர், குளச்சல்

8. M. நூருல் ஹிதாயா, திருவிதாங்கோடு

9. S. அஸ்லம்(இலங்கை), உமராபாத்

10. S.M.K.M. ஹஸன், ஆழ்வார்திருநகரி

11. K. லியாக்கத் அலி, (கிளியனூர்) துபை

12. செய்யது முஹ்யீத்தீன், அபுக்காய்க் K.S.A.

13. Y.L. ஜினான், இலங்கை

இவர்கள் அனைவரும் வானங்கள் , பூமி இவற்றிற்கிடையிலுள்ளவை அனைத்தையும் 6 நாட்களில் படைத்தான் என்பதை எழுதியுள்ளார்கள். இவர்களில் S.G.S. சுல்தான்ஜி, இப்னுஷேக் இருவரும் 6 நாட்கள் என்பதற்குத் திருப்தியான பதில்களைத் தந்துள்ளனர்.

ஆனால், சகோதரர் முஸ்தபாவின் அறிவுப் போட்டி -1க்குரிய பரிசு பெற்ற பதிலில், சகோதரர் சீனிவாசன் கிளப்பியிருந்த ஐயத்திற்கு, அனைவரும் விடையளிக்கத தவறிவிட்டனர்.

புகாரி, கிதாபுத் தப்ஃஸீர் பகுதியில் காணப்படும் , ஸயீதுபின் ஜுபைர்(ரழி) அவர்கள், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் நாஃபிஉ பின் அஜ்ரக் என்பவர் கேட்ட கேள்விக்கு, இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அளித்த பதிலைக் குறிப்பிடுகிறார்கள். அதில் 41: 9,10,11,12, வசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் போது,

வல்ல அல்லாஹ் பூமியை மட்டும் இரண்டு நாட்களிலும், ஏழு வானங்களை மட்டும் இரண்டு நாட்களிலும், இவற்றிடைப்பட்டவற்றை மட்டும் இரண்டு நாட்களிலும், ஆக இவை அனைத்தையும் 6 நாட்களில் படைத்ததாக விளக்கம் தந்துள்ளனர்.

41: 10-ல் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு நாட்கள் பூமியையும், இடையிலுள்ள அனைத்தையும் சேர்த்துப் படைத்ததற்குரிய எண்ணிக்கையாகும்.

ஆக வானங்கள் பூமி, இடைப்பட்டவை அனைத்தும் 6 நாட்களில் படைக்கப்பட்டன என்பதே சரியாகும்.

இதையே 7:54, 11:7, 50:38 இந்த வசனங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.

2:117, 6:73, 16:40, 36:82, 40:68 இந்த வசனங்கள் அனைத்தையும் கவனிக்கும் போது, ஒன்றைப் படைக்க நாடினால், “குன்” என்று சொன்னால், அது ஆகிவிடும் என்று அல்லாஹ் தனது வல்லமையைச் சொல்லிக் காட்டுகிறானே அல்லாமல், வானங்களையோ, பூமியையோ, இடைப்பட்டவற்றையோ அவ்வாறு படைத்ததாகச் சொல்லவில்லை. மாறாக ஒவ்வொன்றையும் 2 நாட்களில் படைத்ததாகத் தெளிவாக அறிவித்து இருக்கிறான். எனவே வானங்கள், பூமி இடையிலுள்ளவை அனைத்தும் படைக்கப்பட்டதை விளக்கும் வசனங்களில், முரண்பாடில்லை என்பதே தெளிவான முடிவாகும்.

அடுத்து, அறிவுப் போட்டி – 1ல் சகோதரர் முஸ்தபா அளித்திருந்த பதிலில் சகோதரர் சீனீவாசன் கிளப்பியிருந்த ஐயத்திற்கு விளக்கமாவது, இறை வசனங்கள் 21:30, 24:45 இரண்டிலும் கையாளப்பட்டுள்ள “மாஃ” என்ற பதம் தண்ணீரையே குறிப்பிடுகின்றது. ஆதம்(அலை) படைக்கப்படும் போது, தண்ணீரில் குழைக்கப்பட்ட மண் (“தீன்” ….களிமண்) பயன்படுத்தப்பட்டுள்ளது. எல்லா உயிரினங்களும் நீர் சத்தையே அதிகமாக உடையவர்களாக இருக்கின்றன. எனவே எல்லா உயிரினங்களையும் அல்லாஹ் நீரிலிருந்தே படைத்துள்ளான் என்பதும் சரியாகும்.

இறைவசனங்கள் 77:20ல் “மாயின்மஹீன்” – அற்ப நீர்த்துளி என்றும், 86:6ல் “மாயின்தாபிக்” – குறித்து வெளிப்படும் நீர்த்துளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன; இந்த இரண்டு வசனங்களும் இந்திரியத்தையே குறிக்கின்றன.

ஆக இந்த இறை வசனங்களைக் கொண்டு குர்ஆனில் முரண்பாடு கற்பிக்க முடியாது. எனவே, குர்ஆனில் முரண்பாடில்லை என்று கூறி முடிக்கிறோம்.

அந்நஜாத்: செப்டம்பர், 1987 – முஹர்ரம், 1407

Previous post:

Next post: