குர்ஆனை விளங்குவது யார்? தொடர்-4

in 1987 அக்டோபர்,அல்குர்ஆன்

இப்னு ஹத்தாது

நபி(ஸல்) அவர்களே அல்லாஹ்வின் கண்காணிப்பில் இருந்தார்கள்; அவர்களின் சொந்த விருப்பங்களும் நிராகரிக்கப்பட்டன என்பதற்குரிய ஆதாரங்கள்:-

“(நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்”. (52:48)

உஹத் யுத்தத்தில், நபி(ஸல்) அவர்கள் எதிரிகளால் மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள். முகத்தில் படுகாயம் ஏற்பட்டு, வேதனை தாங்க முடியாத நிலை. அப்போது அவர்கள், “தங்களுடைய நபிக்கு இந்தளவு சிரமத்தைக் கொடுத்த இந்த சமூகம், எவ்வாறு சித்தியடையும்? என்று கேட்டுவிட்டார்கள். இதைக் கண்காணித்துக் கொண்டிருந்த அல்லாஹ்(ஜல்), இதைக் கண்டித்து, உடனே வஹீ இறக்கினான்.

“(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் யாதொரு அதிகாரமும் இல்லை(தீர்ப்பு அவனுடையது). அவன் அவர்களை மன்னித்து விடலாம் அல்லது வேதனைப் படுத்திடலாம். நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கிறார்கள்,” (3:128)

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியர்களைத் திருப்திப்படுத்த, அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை தமக்கு ஹராமாக்கி இருப்பதாகச் சத்தியம் செய்து விட்டார்கள். இதைக் கண்காணித்துக் கொண்டிருந்த அல்லாஹ்,உடனே வஹீ மூலம் அறிவித்து , அவர்களின் சத்தியத்தை (பரிகாரமுடன்) முறிக்கச் செய்து விட்டான்.

“நபியே! உம் மனைவியரின் திருப்திக்காக அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்! மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன்,” (66:1)

“அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை, உங்களுக்குக் கடமையாக்கி இருக்கிறான். மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும் அவன் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.” (66:2)

நபி(ஸல்) அவர்களே, தமது விருப்பங்களை மார்க்கமாகவே, மேலே காட்டிய வசனங்களிலிருந்து , அல்லாஹ் அனுமதியளிக்கவில்லை என்பதை நன்கு அறியலாம்.

அடுத்து, மார்க்க விஷயத்தில், அல்லாஹ்வின் அனுமதியின்றி, ஒன்றைச் சொல்ல, நபி(ஸல்) அவர்கள் எந்த அளவு பயந்து இருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள்:

வேதக்காரர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, குகைவாசிகளைப் பற்றித் தங்களுக்கு அறிவிக்குமாறு கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும், அல்லாஹ் வஹி அறிவிப்பான் என்ற நம்பிக்கையில், நாளை சொல்லுகிறேன் என்று கூறிவிட்டார்கள். எதிர்பார்த்தபடி வஹி மறுநாள் வரவில்லை. நாட்கள் பதினைந்து ஆகியும் வரவில்லை. வேதக்காரர்கள், ‘நாளைச் சொல்வதாகக் சொன்னீர்களே’ என்று ஒவ்வொரு நாளும் வந்து கேட்டு, தொந்தரவு, ஏளனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நபிகளாரோ பதில் சொல்ல முடியாது தவித்தார்கள். இக்கட்டான இந்த நிலையிலும், தமது அபிப்பிராயத்தையோ -யூகத்தையோ சொல்ல முன் வந்தார்கள்களில்லை. நபி(ஸல்) அவர்கள் குழம்பித் தவித்திருந்த 15 நாட்களுக்குப் பிறகு அல்லாஹ்விடமிருந்து வஹி வந்தது.

“(நபியே!) இன்ஷா அல்லாஹ் சொல்லாமல், நான் சொல்வேன் அல்லது செய்வேன் என்று சொல்லாதீர்” (18:23,24) என்று எச்சரித்துவிட்டு, அவர்களைப் பற்றிய விபரங்களை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான். (தஃப்ஸீர் இப்னுகஸீர்). பின்னர், அல்லாஹ் அறிவித்துக் கொடுத்ததை, வேதக்காரர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பெரும் இக்கட்டான நிலையிலுங்கூட, நபிகளார், தம் சொந்த அபிப்பிராயத்தை – யூகத்தைக் கூற முன்வந்தார்களில்லை. இதிலிருந்து அறிவுடையோர் படிப்பினை பெற வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

“ஃபஸ் அலூ அஹ்லதிக்ரி இன்குன்த்தும் லாதஃலமூன்” “நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் ‘திக்ரை’ உடையவர்களிடம் கேளுங்கள்” என்ற அல்லாஹ்வின் கட்டளைப்படி, ஒருவர் நம்மிடம் மார்க்கம் பற்றிய ஒரு விஷயத்தைக் கேட்டால், அது, குர்ஆனில், இன்ன அத்தியாயத்தில், இன்ன வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கூற வேண்டும்; அல்லது நபி(ஸல்) அவர்களின் ஹதீதை ஆதாரத்துடன் எடுத்துக் கொடுக்க வேண்டும். இதை விடுத்து, முன்னோர்களின் அபிப்பிராயங்களையும், யூகங்களையும் எடுத்துச் சொல்லுவது பெருந்தவறாகும். அதேபோல் இவர்களள் சொந்த அபிப்பிராயங்களை, யூகங்களை சொல்லுவதும் குற்றமாகும். அதனால்தான் ‘திக்ரை’ உடையவர்களிடம் கேளுங்கள் என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறானே அல்லாமல் “அஹ்லல் இல்மி” – அறிவுடையவர்களிடம் கேளுங்கள் என்று சொல்லவில்லை. இதற்கும் குர்ஆன் வசனமே தெளிவான ஆதாரமாக இருக்கிறது.

(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹி கொடுத்து, நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர, வேறல்லர். ஆகவே, “நீங்கள் அறிந்து கொள்ளாமல் இருந்தால், வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள் (என்று கூறுவீராக)” (16:43)

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள், முன்னரே உலகில் நடந்து முடிந்து விட்டவையாகும். தெரியாவிட்டால், இவற்றைத் தெரிந்து வைத்திருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது மட்டுமே. இந்த இடத்தில் கேட்கப்படுபவர் வேதத்தின் மூலம் தெரிந்து வைத்திருப்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறாரே தவிர, தனது சொந்த அபிப்பிராயங்களையோ, யூகங்களையோ, அவர் ஒரு போதும் சொல்லக் கூடாது. அப்படிச் சொல்வது பெருங்குற்றமாகும். இது விஷயத்தில் மனிதர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களையே, அல்லாஹ் எந்த அளவு கண்டிக்கிறான் என்பதை, கீழ்வரும் இறை வசனங்கள் இன்னும் தெளிவாக நிரூபிக்கின்றன.

“அன்றியும், நம்மீது, சொற்களால் சிலவற்றை இட்டுக்கட்டி கூறியிருப்பாரானால் அவரை நம் வலக்கரப் பிடியாகப் பிடித்து. அவருடைய நாடி நரம்பை நாம் தரித்து விடுவோம்; அன்றியும் உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்)வதைத் தடுப்பவர்களில்லை.” (69: 44,45,46)

“நிச்சயமாக நாம் உமக்கு வஹி மூலம் அறிவித்ததை (விட்டு)விட்டு, அதல்லாததை, நம்மீது நீர் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி, உம்மை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். அவ்வாறு நீர் செய்திருந்தால் உம்மை அவர்கள்(தங்கள்) நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். உம்மை நாம் ஸ்திரப்படுத்தி வைக்காவிட்டால், நீர் ஒரு சிறிதேனும், அவர்களின்பால் சாய்ந்து விடக்கூடுமாயிருந்தது. அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால், நீர் ஜீவித்திருக்கும் பொழுதும், நீர் மரித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுகிக்கும்படி செய்திருப்போம். அதன் பின்னர் நமக்கெதிராக, உமக்கு உதவி செய்வோர் ஒருவரையும் நீர் காணமாட்டீர்” (17 : 73-75)

மக்கள் எதிர்க்கிறார்கள் – மக்கள் ஏற்க மறுக்கிறார்கள் அவர்கள் தயவு நமக்கில்லாமற் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக, குர்ஆனிலுள்ளதை, உண்மை ஹதீதுகளிலுள்ளவற்றை, சத்தியம் என்று நன்கு அறிந்து கொண்டதைப் பகிரங்கமாகச் சொல்லத் தயங்கும் அறிஞர்கள், இயக்கங்கள் மேற்கண்ட வசனங்களை நன்கு சிந்தித்துப் படிப்பினை பெறுவார்களாக.

“உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டு விடுவீரோ?” (11:12)

“தூதரே! உம் இறைவனிடமிருந்து , உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும். இவ்வாறு நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர். அல்லாஹ் மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து உம்மைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர் வழியில் செலுத்த மாட்டான்” (5:67)

அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள எந்த ஆதாரமும் இல்லாமல் இறை வசனங்களைப்பற்றி விவாதம் செய்வது பெருங்குற்றம், அதில் சம்பந்தப்படாதீர் என்று இறை தூதரையே அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கிறான்.

“(நபியே!) நம் வசனங்கள் பற்றி விவாதங்களில் ஆழ்ந்திருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் பிரவேசிக்கும் வரையில், நீர் அவர்களைப் புறக்கணித்துவிடும். (இக்கட்டளையை) ஷைத்தான் உமக்கு மறக்கடித்து (அவர்களுடன் நீரும் இருந்து) விட்டால், அது நினைவுக்கு வந்த பின்னர், அவ்வக்கரமக்கார மக்களுடன் உட்கார்ந்து இருக்க வேண்டாம்” (6:68)

அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்வோரை, அக்ரமக்காரர்கள் என்றே அல்லாஹ் வர்ணிக்கிறான். அப்படி தர்க்கம் செய்வதாய் இருந்தால், அதற்கும் இறைவனிடமிருந்தே ஆதாரங்கள் இருக்க வேண்டும்.

“(இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த யாதொரு ஆதாரமுமின்றியே அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றித் தர்க்கிப்பது, அல்லாஹ்விடத்திலும், விசுவாசிகளிடத்திலும் மிக்க அருவருப்பானது. இவ்வாறே பெருமையும் கர்வமும் கொண்ட ஒவ்வொர் இதயத்திலும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்.” (40:35)

அல்லாஹ் சொல்லியுள்ளதற்கு மேல் விளக்கம் தேட முயல்வது, யூகங் செய்வது, அறியாமையும், குற்றமுமாகும் என்பதை 18:22 வசனமும் தெளிவு படுத்துகின்றது. அல்லாஹ்வின் வசனங்களை அப்படியே ஏற்று செயல்படவேண்டும். பேசுவதாக இருந்தால் வேறு இறை வசனமோ உண்மை ஹதீதோ ஆதாரமாக வைத்துப்பேச வேண்டும். இவர்கள் சொந்தக் கருத்துப்படி, இப்படிப் பொருள் செய்யலாம், அப்படிப் பொருள் செய்யலாம் என்று தர்க்கிக்க முற்பட்டால், அவர்கள் பெருமையும் கர்வமும் கொண்டவர்கள் என்று அல்லாஹ் சொல்லுகிறான். மேலும் அவர்களுடைய இதயங்களில் முத்திரையிட்டு விடுவதாகவும் எச்சரிக்கிறான். அப்படியானால் அவன் வழிகேட்டிலிருந்து நேர்வழிக்கு வரவே முடியாது. இது எவ்வளவு பெரிய ஆபத்தான செயல் என்பதைச் சிந்திக்கவும்.

“உங்களுக்கு சிறிது ஞானமிருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம்செய்து கொண்டிருந்தீர்கள். (அப்படியிருக்க) உங்களுக்கு சிறிது கூட ஞானமில்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் யாவற்றையும் நன்கு அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.” (3:66)

இந்த இறைவசனம் பட்டவர்த்தனமாக மனிதனின் நிலையை வர்ணிக்கிறது. மறுமையில் இதைக் கொண்டு நன்மை கிடைக்கும், இதைக் கொண்டு தீமை ஏற்படும் என்று மனிதன் எப்படி அறிவான்? எனவே இது விஷயத்தில் அவனது அபிப்பிராயங்களையும், யூகங்களையும் நுழைக்க முற்படுவது பெருங்குற்றமாகும். மரணத்திற்குப் பின் நன்மை கிடைக்கும் அல்லது தீமை கிடைக்கும் என்பதை அல்லாஹ் மட்டுமே நன்கு அறிவான். எனவே மார்க்கக் காரியங்களில், அல்லாஹ்வின் அறிவிப்பின்றி, மனிதர்களின் அபிப்பிராயங்களும், யூகங்களும் செல்லவே செல்லாது. இதை இன்னும் தெளிவாக ஊர்ஜிதப்படுத்துகின்றது இன்னொரு இறைவசனம்:

“அல்லாஹ்வும் அவனது தூதரும், யாதொரு விஷயத்தைப் பற்றி கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதற்கு மாறாக வேறு) அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வும் அவனுடைய தூதருக்கும், எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள், பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.” (33:36)

இவ்வளவு ஆதாரங்களுக்குப் பிறகும், இது விஷயத்தில் விவாதம் செய்வொர் இந்த இறை வசனத்தைக் கவனிக்கவும்.

“நாம் அருளியவற்றை மனிதர்களுக்காக, வேதத்தில் தெளிவு படுத்திய பின்னும், எவர்கள் மறைக்கின்றார்களோ, அவர்களை , நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கிறான், சபிப்போரும் சபிக்கின்றனர்.” (2: 159)

இப்படிப் பட்டவர்கள் வேத வசனங்களை மறைப்பவர்களாகவும். புரட்டுகிறவர்களாகவும் மட்டுமே இருக்க முடியும். நன்கு அறிந்து கொண்டே, இவ்வாறு செய்கின்றனர்.

“வேதம் கொடுக்கப்பட்டவர்கள், எவரும் தங்கள் குழந்தைகளை அறிவதுபோல், (உண்மையை) அறிவார்கள்” (6:20)

அவர்கள் அறிந்து கொண்டே, சத்தியத்தை மறைக்கவும், புரட்டவும்முற்படுகின்றனர்.

அல்லாஹ் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிட அநியாயக்காரர்கள் யார்? அத்தகையோர் மறுமையில், தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள்; இவர்கள் தாம் தாங்கள் இறைவன் மீது, பொய் கூறியவர்கள், என்று சாட்சி கூறும் மலக்குகள் சொல்லுவார்கள் இத்தகைய அநியாயக்காரர்கள் மீது, அல்லாஹ்வின் சாபம் உண்டாகும் அவர்களை மனிதர்களை, அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கிறார்கள். மேலும் கோணலையும் உண்டு பண்ண விரும்புகிறார்கள். இவர்கள்தாம், மறுமையை நிராகரிப்பவர்கள். (11: 18,19)

உண்மையில் நபிகளாரைப் பின்பற்றி நடப்பவர்கள், நபி(ஸல்) அவர்களுக்கு, அல்லாஹ் இட்டுள்ள கட்டளையையே தாங்களும் எடுத்து நடப்பார்கள்.

அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டே, நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பாராக. அவர்களுடைய விருப்பங்களை, நீர் பின்பற்றாதீர். அன்றி உமக்கு அல்லாஹ் அருளியவற்றில், எதிலிருந்தும் உம்மை அவர்கள் திருப்பி விடாதபடியும், நீர் அவர்களைப்பற்றி, எச்சரிக்கையாக இரும். (உம்முடைய) தீர்ப்பை, அவர்கள் புறக்கணித்து விட்டால், நிச்சயமாக நீர் அறிந்து கொள்ளும், அவர்களின் சில பாவங்களுக்காக அல்லாஹ் அவர்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்புகிறான். நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர், பாவிகளாகவே இருக்கின்றனர். (5:49)

இவ்வளவு தெளிவான ஆதாரங்களுக்குப் பிறகும், மார்க்கக் காரியங்களில், மனித அபிப்பிராயங்களையும், யூகங்களையும் புகுத்த முற்படுகிறவர்கள், உண்மையில் மார்க்கம் பற்றி அல்லாஹ்வுக்குக் கற்றுத் தர முற்படுகின்றனர்.

“மார்க்கம் பற்றி அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கிறீர்களா?” (49:16)

இவை அனைத்தையும் ஒட்டு மொத்தமாகச் சிந்திப்பவர்கள் ‘முஹக்கமாத்’ வசனங்களில், நபி(ஸல்) அவர்கள் தவிர, வேறு மனிதர்களின் ஆராய்ச்சியோ, தெளிவோ, விளக்கமோ, வழி காட்டலோ அவசியமே இல்லை; தப்ஃஸீர் என்ற பெயரில் மனித அபிப்பிராயங்களையும், யூகங்களையும் இஸ்ரவேலர்களின் கற்பனைக் கட்டுக்கதைகளையும் எழுதி வைத்திருப்பவர்கள், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற அடிப்படையில், தங்கள் உள்ளங்களில் மாறுபட்டு எண்ணத்துடன் தாங்களும் வழிகெட்டு, மக்களையும் வழி கெடுக்கிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட தஃர்ஸீர்களை, வேதப் புத்தகங்களாக மதித்து, நம்பி, எடுத்து நடப்பவர்கள், நிச்சயமாக வெற்றி பெற முடியாது, நாளை மறுமையில், அல்லாஹ்வின் கோபத்திற்கும் பயஙகர நரக வேதனைக்கும் ஆளாக நேரிடும் என்பதை எச்சரிக்கிறோம். அடுத்து இந்த ‘முஹக்கமாத்’ வசனங்களை அறிந்து கொள்ள, அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யம் அவசியமா? என்று சிந்தித்துப் பார்த்துவிட்டு, “முத்தஷாபிஹாத்” வசனங்களைப் பற்றி ஆராய்வோம்.

இன்ஷா அல்லாஹ், இன்னும் வரும்.

———————————————————————————————— பிறருக்கு இடையூறு விளைவிப்பவர் மீது அல்லாஹ்வின் சாபம்

“ஒரு மூமினுக்கு சூழ்ச்சி செய்பவரும், இடையூறளிப்பவரும் அல்லாஹ்வினால் சபிக்கப்பட்டவராவன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அபூபக்ரு ஸித்திக்(ரழி) (திர்மிதீ)

அந்நஜாத்: அக்டோபர், 1987 – ஸஃபர், 1407

Previous post:

Next post: