குர்ஆன், ஹதீஸை அந்த தர்ஜமாக்களை எல்லாம் ஆலிம்கள்தானே மொழி பெயர்த்தார்கள்?

in 2010 ஏப்ரல்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : நீங்கள் சொல்கிறீர்களே! குர்ஆன், ஹதீஸை படியுங்கள் என்று அந்த தர்ஜமாக்களை எல்லாம் ஆலிம்கள்தானே மொழி பெயர்த்தார்கள்? ஜெ.அப்துர் ரஹ்மான், IS சிம்நகர், நாகர்கோவில்

விளக்கம்: அல்குர்ஆனை ஆலிம்கள்தான் மொழி பெயர்த்தார்கள் என்பதற்காக எவ்வித சுய சிந்தனையும் இல்லாமல் அவர்களின் சொல்லை வேதவாக்காக(?) ஏற்று அவர்களை தக்லீது செய்ய வேண்டும்; கண்மூடிப் பின்பற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா? நமது நாட்டுப் பிரதமர் உலகின் பல மொழிகள் பேசும் பல நாடுகளுக்குச் சென்று வருகிறார். எல்லா மொழிகளும் பிரதமருக்குத் தெரியாது. அதனால் கூடவே ஒரு மொழி பெயர்ப்பாளரை அழைத்துச் செல்கிறார். பிற நாட்டுப் பிரதமர் அவரது மொழியில் சொல்வதை மொழி பெயர்ப்பாளர்கள் நமது பிரதமருக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்துச் சொல்கிறார். நமது பிரதமர் மொழி பெயர்ப்பாளர் சொல்வதைக் கேட்டு விஷயத்தை அறிகிறார். இப்போது நமது பிரதமர் மொழி பெயர்ப்பாளரை கண்மூடி பின்பற்றுகிறார்-தக்லீது செய்கிறார் என்பீர்களா? இதுபோல் எல்லா நாட்டுத் தலைவர்களும் மொழி பெயர்ப்பாளர்களை தக்லீது செய்கிறார்களா?

உண்மை என்ன? குறிப்பிட்ட விஷயம் பற்றி மொழி பெயர்ப்பைக் கேட்ட தலைவர்கள் மிகச் சரியாக விளங்குகிறார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? காரணம் என்ன? நம் பிரதமர்தான் குறிப்பிட்ட விஷயத்தோடு சம்பந்தப்பட்டவராக இருக்கிறார். எனவே பிரதமருக்கே தெளிவாக விஷயம் புரிகிறது. அதேபோல் சத்தியத்தை-நேர்வழியை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நீங்கள் முயற்சி எடுக்கும்போது இறைப் பணியை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்களை விட நீங்கள் நன்கு விளங்க முடியும். இதை அல்குர்ஆன் 29:69 உணர்த்துகிறது. அல்குர்ஆனை எடுத்துப் படித்துப் பாருங்கள்.

———————————————————
விமர்சனம் : ஆலிமே வேண்டாம் என்றால் உங்கள் குடும்பத்து குழந்தைகளை ஏன் ஆலிமாவாகப் படிக்க வைக்கிறீர்கள்?
ஜெ.அப்துர் ரஹ்மான், IS சிம் நகர், நாகர்கோவில்

விளக்கம்: ஆலிம்கள் வேண்டாம் என்று நாம் ஒரு போதும் கூறியதில்லை. ஆலிம்கள் லிமிட்டெட் கம்பெனி என குருகுல கல்வி கற்றவர்களை மட்டும் ஆலிம்கள் என ஏற்காதீர்கள். நபி(ஸல்) அவர்களது காலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என எவ்வித பாகுபாடுமின்றி மிக எளிய முறையில் மார்க்கத்தை குர்ஆன், ஹதீஸைக் கற்றுக் கொண்டது போல் நாமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறோம்.

இதை அந்நஜாத்தின் ஆரம்பத்திலிருந்தே ஆலிம்கள் தேவையில்லை என்று நாங்கள் சொல்லவில்லை! மதரஸா சென்று வந்தவர்கள் மட்டும் ஆலிம்களல்லர். குர்ஆன், ஹதீஸ்களை விளங்கி நடப்பவர்கள் அனைவரும் ஆலிம்களே! ஆக, முஸ்லிம்கள் அனைவரும் நபி தோழர்கள் கற்றுக் கொண்ட அதே எளிய முறையில் கற்று ஆலிம்கள் ஆக வேண்டும் என்றே நாங்கள் கூறுகிறோம்”என்று தொடர்ந்து வெளியிட்டு வருவதை நீங்கள் படித்ததில்லையா?

புரோகித மவ்லவிகள் மீது உங்களுக்கிருக்கும் குருட்டுப் பக்தியே உங்களை இப்படி எல்லாம் சிந்திக்க வைக்கிறது.
இன்னொரு உண்மையை நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள். இன்றைய மதரஸாக்களில் குர்ஆன், ஹதீஸை கற்றுக்கொடுப்பதில்லை. குருகுல கல்வி என்ற அடிப்படையில் தங்களின் புரோகிதத் தொழிலை லாபகரமாக நடத்துவதற்குத் தேவையான, முன்சென்ற புரோகிதர்களின் கற்பனையில் உருவான பிக்ஹு நூல்கள், நடைமுறைக்கு ஒத்துவராத வரட்டு வேதாந்தங்களைச் சொல்லும் தத்துவக்கலை புரோகிதர்களை எதிர்ப்பவர்களின் வாயை அடைக்க வாதக்கலை(ஃபல்சபா, மன்திக்) இவைதான் “சில்சிலயே நிஜாமிய்யா” என்ற பாட திட்டப்படி புகட்டப்படுகிறது. புதிய மத்ஹபினராகிய இயக்கத்தினர் குர்ஆன், ஹதீஸ் என வாயளவில் சொல்லிக் கொண்டு லாஜிக், பாலிஸி என இவர்களின் சுய கற்பனைகளை அவர்களது புரோகித மதரஸாக்களில் புகட்டுகின்றனர். இவை அனைத்தும் பித்அத்களே! வழி கேடுகளே.

நாங்கள் எங்கள் பிள்ளைகளை இப்படிப்பட்ட புரோகித மதரஸாக்களுக்கு அனுப்புவதில்லை. நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருந்தது போல் மிக எளிய முறையில் குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் படித்து மனதில் இருத்தி அதன்படி நடக்கும் பயிற்சியை அளிக்கவே பாடுபட்டு வருகிறோம்.

Previous post:

Next post: