ஆத்திகர்கள் நாத்திகர்களாக மாறக் காரணம் என்ன?

in 2012 ஆகஸ்ட்

அஜ்மல்கான், ஜகதாபட்டினம்

இன்றையச் சூழலில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கம்யூனிஸ்ட் சித்தாத்தங்கள்தான் முன் மாதிரிக் காரணமாகத் தெரிகின்றது. 18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற் புரட்சிகள் அதன் விளைவாகத் தோன்றிய மதசார்பின்மை (Secularism)  கொள்கையே தொழிலாளர் நலன்களைக் காக்க முடியும் என நம்பினர் . ஐரோப்பாவில் உள்ள நில பிரபுக்களால் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக ஆண்டாண்டு காலம் அடிமைப்பட்டவர்களுக்கு விடுதலையின் வடிகாலாக தென்பட்டது கம்யூனிஸ்ட் சித்தாந்தம். அத்தொழிலாளர்களும், கம்யூனிஸ்ட் சித்தாந்திகளும் உங்கள் கடவுளர்களை வழிபாடு தலங்களில் மட்டுமே வழிபடுங்கள் உங்களுடைய மத நம்பிக்கைகளை பொது நிர்வாகங்களில் தலையிடுவதை தடுத்து மதச்சார்பற்ற (Secularism)  முறை ஏற்படுத்தினர்.

இதில் பலரின் நம்பிக்கை மதத்தின் பெயரால் மனிதன் அடிமையாக்கப்படுகின்றான். ஆகவே மதத்தை துறந்துவிடுங்கள். மதத்தை துறந்தால் மட்டும் போதாது; கடவுளர்களையும் துறந்தால் தான் (நாத்திகவாதி) ஒரு மதச்சார்பற்றக் கொள்கையில் மக்களை ஒன்றிணைக்க முடியும். இப்படி ஏற்பட்டால்தான் அடிமை, பிரிவு முறை ஒழியும் என்று கம்யூனிஸ்ட் சித்தாந்திகள் நம்பினார்கள். இன்றும் கம்யூனிஸ்ட்கள் வாழும் நாடுகளில் சீர்கேடான நிர்வாகமும், ஊழலும், வறுமையும், பொருளாதார பின்னடைவுகளும், மனித(உயிர்களை) உரிமைகளை வதை செய்வதையும் அவர்கள் மறுக்க முடியுமா? எதை நோக்கி அவர்கள் புறப்பட்டார்களோ (பொருளில் சமநிலை) அதை இழந்து ஊழலிலும், கையூட்டிலும் சிக்கியுள்ளார்கள். ஒரு சிலர் இதில் விதிவிலக்காகலாம்.

தமிழகத்தில் “நாத்திகம்’ என்றப் பெயரை வெளியில் கொண்டுவந்தவர் தந்தைப் பெரியார் என்றால் அது மிகையில்லை. தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி வாழ்ந்த சமுதாயச் சூழல் இந்தியாவின் சுதந்திர போராட்டங்கள் அஹிம்சை வழியிலும், ஆயுத போராட்டங்களும் நிறைந்த காலம். தந்தைப் பெரியார், டாக்டர் B.R. அம்பேத்கர் போன்றோர் சுதந்திர தாகத்தில் அஹிம்சை வழியில் போராடினார்கள். அவர்கள் முன் இருந்தப் பிரச்சனை ஒன்று இந்தியாவிற்கு சுதந்திரம் இரண்டாவது பிரச்சனை மேல்ஜாதி மக்கள் தீண்டத்தகாத மக்களாக “தலித்’ மக்களைக் கருதினர்.

டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை, தேவதாசி(கடவுளர்களுக்கு பெண்களை நேர்ச்சை செய்து விடுவது) வழிபாட்டுத் தலங்களில் பிற்போக்குத் தன்மை, தொழிலை ஜாதிதான் தீர்மானிக்கும் என்ற “மனுதர்மம்’ இவை ஏன் மனித சமுதாயத்தை அடக்கி ஆளுகின்றன என்ற எண்ணற்றக் கேள்விகளுக்கு விடைத் தேடும்போது டாக்டர் B.R.. அம்பேத்கார் 14.11.1956ஆம் ஆண்டு தன்னுடைய ஆதாரவாளர்களுடன் புத்த மதத்திற்கு மாறி விட்டார். தந்தைப் பெரியார், வைக்கம் வீரர் ஆரம்ப நிலையில் ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து மேல் ஜாதிக்கெதிராக எழுந்து, சாஸ்திர, சம்பிரதாய, புராணங்களுக்கு எதிராக எழுந்து இந்து மத நம்பிக்கைக்கு எதிராகவும் இறுதியில் ஒட்டுமொத்த மத நம்பிக்கைகளையும், போலியான கடவுளர்களையும் துறந்து, உண்மையான சர்வ வல்லமையுள்ள இறைவனான “அல்லாஹ்’வையும் மறுத்து நாத்திகவாதி ஆனார்.

அவரின் மொழித்திறன், பேச்சுத்திறன், துணிவு (1950களில் மேல் ஜாதிக்கெதிராக மேடைகளில் வாயைத் திறப்பதற்கு தனித் துணிச்சல் வேண்டும்) போன்றவை அடிமைப் பட்ட சமுதாய மக்களையும், மொழிப் பற்றுள்ளவர்களையும் கவர்ந்தது விளைவாக நாத்திக மும், திராவிட இன உணர்வும் தமிழகத்தில் வேரூன்ற ஆரம்பித்தது.

பெரியார் கூறுகிறார் “நான் ஜாதி கூடாது என்று சொன்னேன். ஐயா அப்படி பேசாதீங்க அது சாஸ்திரங்களில் இருக்கு. அப்படியா? அப்ப சாஸ்திரங்கள் வேண்டாம் என்றேன். ஐயா அப்படி சொல்லாதீங்க. சாஸ்திரங்களைத் தந்தது கடவுள். அப்படியா, அப்ப கடவுளே வேண்டாம்’ எனறார். இங்கே உண்மை தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஜாதிக் கொடுமைகள்தான் கடவுள் மறுப்பு (நாத்திகம்) கொள்கைகளுக்கு மூலக்காரணம். இவர்கள் மனிதர்களால் கற்பனை செய்யப்பட்ட கடவுளர்களையும், புராணங்களையும் புறம் தள்ளி விட்டு, ஜாதிக் கொடுமைக்கு நன் மருந்து “இஸ்லாம்’ மட்டுமே என்பது மட்டுமே! விளங்கியுள்ள நாத்திகர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையில் பிடிவாதமாக இருப்பது பகுத்தறிவா? இஸ்லாமிய நன்னெறிகளை இன்றைய முஸ்லிம்கள் கைவிட்ட நிலையிலும் பள்ளிவாயில்களிலும், விருந்துக்களிலும் அவர் களின் நிலையில் ஜாதியோ, ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகள் இல்லாமல் இருப்பது ஒரு சான்று இல்லையா? இறைத்தூதர்(அல்லாஹ்வின் அருள் உண்டாவதாக) தடுத்தக் கொடுமைகளைப் பாருங்கள்.

1. பெண்களுக்கு வாரிசுரிமை, விவகாரத்துப் பெறும் சட்டம், மறுமணம் (உடன்கட்டை ஏற்றுதல் என்ற சதி முஸ்லிம்களிடம் உண்டா?) விபச்சாரம் ஒழிப்பு, வறுமையை ஒழிக்க (ஜகாத், சதக்கா), பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் மூடத்தனத்தை வேறுடன் ஒழித்தல், அடிமைகளை உரிமை விடுதல், குடி (சாராயம்)யை ஒழித்தல், அநீதங்களையும், அக்கிரமங்களையும் இன்னும் அனேக சமுதாய சீர்கேடுகளையும் தடுத்து மனித குலம் வாழ்வதற்கு ஏவாத (கட்டளை) இடாத செயல்கள் உண்டா? புனித ஹஜ்ஜில் மக்காவில் உள்ள ஆலயத்தில் இலட்சக்கணக்கான மக்கள் மொழி, இன, நாட்டு, நிறம், தொழில் போன்ற எண்ணற்ற வேறுபாடுகளையும் மறந்து எப்படி தீண்டாமைக்கு, ஜாதிக் கொடுமைகளுக்கு மரண அடி கொடுக்கும் செயல் திட்டத்தை பொய்ப்பிக்க முடியுமா? இந்த மனித குலம் நேர்வழியடைய தான் தேர்ந்த நபரைக் கொண்டு அவருக்கு நன்னெறி(அல்குர்ஆனை) கொடுத்து நடைமுறைபடுத்திய அல்லாஹ்தான் உங்களையும், எங்களையும் படைத்தவன். அவனை விட்டு போலிக் கடவுள்களையும் போலி போதகர்களையும் விட்டு விலகிய நாத்திகர்கள் உண்மையை உணருங்கள்.

உதாரணமாக இந்திய அரசு ரூபாய் நோட் டுக்களை அச்சிடுகிறது  (Reserved Bank of India) RBIஐ அதை காண்காணிக்கின்றது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ரூ.500 ரூபாய் நோட்டுக்களை அடிக்கடி அதை மாற்றி மாற்றம் கொண்டுவருகிறது. ஏனெனில் கள்ளப்பணம் புழக்கம் சந்தைகளில் ஏற்படக்கூடாது என்பதற்காக இதைச் செய்கிறது. அது மட்டுமில்லாமல், கள்ளப் பணம் புழங்கும் Serial No. களையும், அடையாளங்களையும் வெளியிடுகிறது. இந்திய அரசு தான் பணத்தை அச்சடிக்க வேண்டும், அதற்குரிய மதிப்பையும் தரவேண்டும் அதற்கு மாற்றமாக கள்ளப் பணக்கும்பல்கள் அதை வெளியிடுகின்றன.

அரசு ஏன் கள்ளப் பணக் கும்பலைத் தடுக்கிறது, கடுமையான குற்றங்களில் அந்தக் குற்றவாளிகள் தண்டனையைப் பெற வேண்டும்? அந்த குற்றவாளிகள் அறிந்தே வைத்துள்ளனர். இது தேச விரோதக் குற்றம், சாதாரண குற்ற மில்லை.

உண்மையான இறைவன் அருளிய அல்குர் ஆன் நன்னெறியை விட்டு விட்டு மற்றைய மத புரோகிதர்கள் இதுதான் இறைவனின் பாதை என்று ஜாதி, இன, உணர்வுகள் மதத்தின் பெயரால் செய்து பிழைப்பு செய்தார்கள், நாத்திகர்கள் விளங்கினீர்கள். உண்மையாகவே போலிக் கடவுள்களை புறம் தள்ளினீர்கள். உண்மைக் கடவுளை புறம் தள்ளுவது பகுத்தறிவா?

ஒரு 500 ரூபாய் கட்டில் கள்ள நோட்டுகளும், நல்ல நோட்டுகளும் இருந்தால் அந்தக் கட்டில் கள்ள நோட்டுகள் இருப்பதால் ஒட்டு மொத்த பணக்கட்டையும் வீசுவீர்களா? உலக ஆதாயத்தில் பகுத்தறிவு மிகச் சரியாக செயல்பட்டு தனக்கு நஷ்டம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பீர்களா, இல்லையா?

இந்த சமுதாயத்தில் கடவுளர்களின் பாதை இது என்றும் போலிக் கடவுளர்களையும், உண்மையான மார்க்கத்திலும் நுழைந்துவிட்ட புரோகிதர்களையும் அடையாளம் கண்டு இறைவன் வழங்கிய இறைநெறி(குர்ஆன்) யைப் பற்றிப் பிடித்து, தமிழில் உள்ள மொழிப் பெயர்ப்புகளை படித்து, படித்து, உணர்ந்து கற்றுச் செயல்பட்டால் என்றுமே நஷ்டம் அடைய மாட்டீர்கள். அல்லாஹ் உங்களையும், எங்களையும் நேர்வழியடைய நான் ஆதரவு வைக்கின்றேன்.

Previous post:

Next post: