சகோதரர் மவ்லவி பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்களுக்கு மீண்டும் விவாத அழைப்பு!

in 2013 நவம்பர்,பிறை,பொதுவானவை

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்….
அன்புள்ள சகோதரர் மவ்லவி பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்களுக்கு அபூ அப்தில்லாஹ் எழுதியது,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எனக்கும், உங்களுக்கும், உலக முஃமின்களுக்கும் 6:153 குர்ஆன் வசனம் கூறும் ஒரே நேர்வழி கிடைத்து அதன்படி நாம் அனைவரும் செயல்பட அல்லாஹ் அருள்புரிய துஆ செய்கிறேன். நீங்களும் துஆ செய்யுங்கள்.

இன்று உலகளாவிய முஸ்லிம்கள் ஒரே தினத்தில் (ஒரே நேரத்தில் அல்ல) ஜுமுஆ தொழுவது போல், ஒரே தினத்தில் (ஒரே நேரத்தில் அல்ல) நோன்பை ஆரம்பித்து, நோன்பை முடித்து, ஒரே நாளில் (ஒரே நேரத்தில் அல்ல) பெருநாள் கொண்டாடுவதற்கு மாறாக மூன்று நாட்கள் இவற்றைச் செயல்படுத்தும் வேதனைக்குரிய நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். இது ஒவ்வொரு ஊருக்குள் மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் பெரும் பிளவை உண்டு பண்ணியிருப்பதையே நாம் பார்க்கிறோம். இது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

இதற்கு அடிப்படைக் காரணம் “”அன்று போல் இன்றும் முதல் பிறையைப் புறக் கண்ணால் மட்டும் பார்த்தே மாதத்தைத் துவங்க வேண்டும்” என்று நீங்கள் கூறுவதும், அன்று நடைமுறையில் இல்லாமல் இன்று நடைமுறைக்கு வந்திருக்கும் விண்ணியல் அறிவியல் – Astronomy  (அன்று நடைமுறையில் இருந்த ஜோதிட கணிப்பு – Astrology அல்ல), மற்றும் அதிநவீன கணினி கணக்கீட்டு முறையில் (கணிப்பு முறை அல்ல) முன்கூட்டியே மாதம் பிறப்பதைக் கணக்கிட்டு மிகமிகத் துல்லியமாக முதல் பிறையை அறிந்து செயல்பட முடியும் என்று நான் கூறுவதும் முரண்படுவதுதான்.

தலைப்பிறைப் பற்றி நம்மிருவரிடையே இருக்கும் இப்பலமான கருத்து வேறுபாட்டை, நாமிருவரும் ஓரிடத்தில் கூடி குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஃத் அடிப்படையில் கலந்துரையாடி அவற்றிற்கு நெருக்கமான கருத்தை ஏற்று ஒன்றுபட்டு இம்முரண்பாட்டிற்குத் தீர்வு காண்போம் என்று நான் உங்களை அழைத்துக் கொண்டே இருக்கிறேன். அதற்காகப் பல பகிரங்க அழைப்புப் பிரசுரங்கள் வெளியிட்டிருக்கிறேன். எனது நோக்கம் சமுதாய ஒற்றுமை மட்டுமே! இதை அல்லாஹ்வே மிக அறிந்தவன்!

இந்த நிலையில் உங்களின் ஆதரவாளர்களான ததஜவினர் உங்களுக்கு நேரில் தபாலில் அழைப்பு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று உங்களுக்கு இக்கடிதத்தைப் பதிவுத் தபாலில் நேரில் அனுப்பியுள்ளேன்.

அழைப்பை விடுக்கும் எனது இடத்திற்கு நீங்கள் நான் குறிப்பிடும் தேதியில் வந்து கலந்து பேசி ஒப்பந்தம் மற்றும் கலந்துரையாடல் (விவாதம்) தேதி, இடம் முடிவு செய்வதோ, அல்லது அழைப்பை ஏற்கும் உங்கள் இடத்திற்கு நீங்கள் குறிப்பிடும் தேதியில் நான் வந்து கலந்து பேசி ஒப்பந்தம் மற்றும் கலந்துரையாடல் (விவாதம்) தேதி, இடம் முடிவு செய்வதோ நீதியோ, நியாயமோ ஒருபோதும் ஆகாது.

நீங்கள் எனது இந்த அழைப்பை ஏற்று ஒப்புதல் அளித்து இதுபோல் கடிதம் மூலம் தகவல் தந்த பின்னர், அலைபேசி மூலம் நாம் இருவரும் தொடர்பு கொண்டு பொதுவான ஓர் இடத்தையும், தேதியையும் முடிவு செய்து, குறிப்பிட்ட அந்த இடத்தில், தேதியில் நாம் இருவரும் கலந்துரையாடி ஒப்பந்தத்திற்குரிய தேதியையும், இடத்தையும், கலந்துரையாடலுக்குரிய (விவாதம்) தேதியையும், இடத்தையும் முடிவு செய்வோம். இன்ஷா அல்லாஹ்!

இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு இஃக்லாஸான எண்ணத்திலேயே அனுப்புகிறேன். எனது எண்ணத்தை அல்லாஹ் மிக அறிந்தவன். எனவே இக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளையோ, சொற்களையோ எடுத்துக் கொண்டு, அவற்றையே விவாதப் பொருளாக்கி இறுதியில் உங்களோடு கடித விவாதம் புரியும் நிலைக்கு என்னை ஆளாக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நேரடி விவாதத்திற்கு உங்களது ஒப்புதலை மட்டுமே எதிர்பார்க்கிறேன்.

நாம் இருவரும் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களாக அல்குர்ஆனையும், ஸஹீஹான ஹதீஃத்களையும் மட்டுமே நம்பியுள்ளதால், அவ்விரண்டையுமே ஆதாரமாக வைத்து முதலில் இப்பிறை விஷயத்தை மட்டுமே இஃக்லாஸோடு விவாதிப்போம். இன்ஷா அல்லாஹ்!

விவாத அழைப்புக் கடிதத்தை உங்களுக்கு நேரடியாக அனுப்ப வேண்டும் என்று உங்கள் இயக்கத்தவர்களின் வேண்டுகோளை ஏற்றே நான் உங்களுக்கு நேரடியாக இக்கடிதத்தை எழுதியுள்ளேன் என்பதை மீண்டும் தெரிவிக்கிறேன். எனவே இக்கடிதத்திற்கான பதில் நீங்கள் என்னோடு விவாதத்திற்கு வருவதற்கு ஒப்புக் கொள்வதாகவே அமையட்டும். விவாதம் எங்கே, எப்படி, என்ன முறையில், பிறை பற்றிய என்னென்ன தலைப்புகளில் நடைபெற வேண்டும் என்பன போன்ற விவாதம் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் விவாத ஒப்பந்த நாளில் இன்ஷா அல்லாஹ் நாம் இருவரும் பேசி முடிவெடுக்கலாம்.

ஒப்பந்தத் தேதியில் பிறை பற்றி மட்டும் விவாதத்திற்குரிய அனைத்து விதிமுறைகளையும் குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஃத்களுக்கு உட்பட்டு எழுதி நாம் இருவரும் கையெழுத்திட்டு அதன்படி குறிப்பிட்டத் தேதியில் குறிப்பிட்ட இடத்தில் அவ்விதிமுறைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அழகிய முறையில் விவாதித்து 4:59 இறைவாக்குக் கட்டளையிடுவது போல் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் கட்டுப்பட்டு ஒத்தக் கருத்துக்கு வர முற்படுவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நாமிருவரும் ஒத்தக் கருத்துக்கு வரவும் சமுதாய ஒற்றுமை ஏற்படவும் அருள் புரிவானாக. வஸ்ஸலாம்!

இப்படிக்கு
அபூ அப்தில்லாஹ்

Previous post:

Next post: