தேர்தலுக்கு முன்னைய கருத்துக் கணிப்புகள் தடை செய்யப்படவேண்டும்!

in 2014 மார்ச்,தலையங்கம்

மனித குலத்தினரில் பெரும்பாலான மக்கள் அறியாதவர்களாகவும், விளங்காதவர்களாகவும், மூட நம்பிக்கைகளில் எளிதாக மூழ்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் மத வியாபாரிகளும், அரசியல் வியாபாரிகளும் அவர்களை மிகமிக எளிதாக ஏமாற்றி உலகியல் ஆதாயங்களைக் கோடிக் கணக்கில் அடைய முடிகிறது. அந்த வரிசையில் தேர்தலுக்கு முன்னரே தேர்தல் கருத்துக் கணிப்புகள் படை எடுக்க ஆரம்பித்துவிட்டன. இந்தத் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் மிகப் பெரும்பாலானவை பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை. கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு பணம் கொடுப்பவர்களுக்குச் சாதகமானதைக் கருத்துக்கணிப்பு என்ற பெயரால் அனைத்து ஊடகங்களும், கருத்துக் கணிப்பாளர்களும் அவிழ்த்து விடுகின்றனர்.

அரசியல் வியாபாரிகள் மக்கள் சொத்தை அநீதமான முறைகளில் பல்லாயிரம் கோடிகளை நூறு தலைமுறைக்குச் சுருட்டுகிறவர்கள், அவற்றில் சில கோடிகளை இப்பொய்யான கருத்துக் கணிப்பாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் கொடுப்பதில் சிரமம் இருக்கிறதா? இல்லையே! அதுவும் அடுத்த ஐந்தாண்டுகளில் பல்லாயிரம் கோடிகளைச் சுருட்ட அச்சாரமாகவே இந்தக் கோடிகளைக் கொடுக்கின்றனர். மதவியாபாரிகளிடமிருந்தும், அரசியல் வியாபாரிகளிடமிருந்தும் பெருங்கொண்ட மக்களை விடுவிப்பது சாதாரண ஒரு காரியம் இல்லை.

பெரும்பாலான மக்களின் மனோ நிலை எப்படி இருக்கிறது என்பதை நோட்டமிட்டுப் பாருங்கள். தேர்தலில் வேட்பாளராக நிற்பவர் யோக்கியரா, அயோக்கியரா என்பதல்ல, மக்கள் தொண்டு செய்பவரா, மக்கள் சொத்தை அநீதமான முறைகளில் சுருட்டுபவரா என்பதல்ல; ஏழை மக்களின் நலனில் அக்கறை காட்டுபவரா? கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், பண முதலைகளுக்கும் குற்றேவல் செய்பவரா? என்பதல்ல. சுருக்கமாக யோக்கியரா? பரம அயோக்கியரா? ஒழுக்கங் கெட்ட வரா? ரவுடியா? தாதாவா? சாராய வியாபாரியா? விபச்சார விடுதிகள் நடத்துபவரா? என்பதெல்லாம் பெருங்கொண்ட மக்களின் பரிசீலனைக்குட்பட்ட விவகாரங்கள் இல்லை.

இவை எல்லாம் பெருங்கொண்ட மக்களின் சிந்தனைக்கு எட்டா! அந்தப் பெருங்கொண்ட மக்களின் மூட நம்பிக்கையில் முளைப்பது தோற்பவர்களுக்குத் தங்களின் வாக்கை அளிக்கக் கூடாது. வெற்றி பெறுகிறவர்களுக்கு மட்டுமே தங்களின் வாக்கை அளிக்க வேண்டும் என்ற அடாத எண்ணமே. இந்த அவர்களின் மூட நம்பிக்கை அயோக்கியர்களுக்கொரு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. அதனால்தான் அயோக்கியர்களின் இறுதிப் புகழிடம் ஜனநாயக அரசியல் என்று ஓர் அறிஞர் முன்னரே சொல்லி இருக்கிறார்.

மலை முழுங்கி அரசியல் வியாபாரிகளுக்கு இது நல்லதொரு அரிய வாய்ப்பாக அமைந்து விடுகிறது. ஏற்கனவே மக்கள் சொத்தைப் பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்துக் குபேரர்களாக ஆகியுள்ள அவர்களுக்கு அதில் ஒரு சிறு பகுதியான ஆயிரம், இரண்டாயிரம் கோடிகளைக் கருத்துக் கணிப்பாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் வாரிக் கொடுத்து, தாங்கள்தான் வெற்றி பெறும் நபர், தங்கள் கட்சிதான் தேர்தலில் வெற்றி பெறும் கட்சி என்ற பொய்யான கருத்துக் கணிப்பு முடிவுகளை எளிதாகப் பெருங்கொண்ட அறியாத, விளங்காத மக்கள் வரை போய்ச் சேர வழி வகுக்கின்றனர். அந்தப் பெருங்கொண்ட மக்களும் வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கே தங்கள் வாக்கை அளிக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையில், பரம அயோக்கியர்களுக்கும், மலை முழுங்கிகளுக்கும், மத வெறியர்களுக்கும் தங்கள் பொன்னான வாக்கைச் செலுத்தி அவர்களை வெற்றி பெற வைக்கின்றனர்.

இப்படிப்பட்ட அயோக்கியர்களும், பண முதலை களும், மத வெறியர்களும் தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுத்து நல்லவர்கள், ஒழுக்கப் பண்பாளர்கள், மக்கள் தொண்டில் ஆர்வமுள்ளவர்கள், உண்மையான சேவை மனப்பான்மையுடையவர் கள் மக்கள் மன்றத்திற்குச் செல்ல வேண்டுமென் றால், தேர்தலுக்கு முன்னைய பொய்யான தேர்தல் கருத்துக் கணிப்புகளை அரசும், தேர்தல் ஆணையமும் கண்டிப்பாகத் தடுத்தே ஆகவேண்டும். மக்கள் நலனில் உண்மையில் அக்கறையுள்ள அரசாக இருந்தால் நிச்சயமாக இதை நடைமுறைப்படுத்த முன்வரும்! இல்லை என்றால் இது போலி ஜனநாயகமே!

Previous post:

Next post: