பிரிவினையை வேரறுப்போம்! ஒற்றுமைக்கு உரமிடுவோம்!

in 2014 மார்ச்

S.அமீர் ஜவஹர்  B.A.B.L., Cell:9380022444

ஓர் ஊரில் முஸ்லிம் இறந்து விடுகிறார். இறந்து போன அவருடைய பிரேதத்தைப் பொது மையவாடியில் அடக்கம் செய்யக் கூடாது. ஏனெனில் அவர் அந்தக் கொள்கையைச் சார்ந்தவர் என்று ஒரு சாரார் அடம் பிடிப்பதும், அவரைப் பொது மையவாடியில் அடக்கம் செய்தே தீரவேண்டும் என்று இன்னொரு சாரார் சண்டையிட்டுக் கொள்வதையும் பார்க்க முடிகிறது. இறந்து போன முஸ்லிமை அவர் அந்த கொள்கையைச் சேர்ந்தவர், இந்தக் கொள்கையைச் சேர்ந்தவர் என்று பார்க்கிறார்களே தவிர அவரை முஸ்லிம் என்று பார்க்க சிலரது மனம் மறுக்கிறது.

ஒரு சமயம் நபி(ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் போது ஒரு யூதரின் பிணம் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்தப் பிணம் கடந்து செல்லும் வரை எழுந்து நின்று மரியாதை செய்தார்கள். நபி(ஸல்) அவர்களின் இந்தச் செயல் நமது உள்ளத்தில் பதிந்திருந்தால் பிணத்தில் பிரிவினையை ஏற்படுத்தி, முஸ்லிம்கள் சண்டையிட்டுக் கொள்வார்களா? என்று ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளும் அவசியம் ஏற்படும்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள். (திருகுர்ஆன் 72:18) என்பது வல்ல இறைவனின் உறுதியான கட்டளை. இறைவனின் இந்தக் கட்டளையின்படி பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கு உரியன என்ற எண்ணம் நிறையப் பேருக்கு வருவதில்லை. மாறாக இது அவருடைய பள்ளிவாசல், இது இவருடைய பள்ளிவாசல், இந்தப் பள்ளி வாசல் இந்தக் குடும்பத்திற்குரியது. அந்தப் பள்ளி வாசல் அந்தக் குடும்பத்திற்குரியது. இந்தப் பள்ளி வாசலில் இந்தப் பிரிவைப் பின்பற்றுபவர்கள் தான் தொழ வேண்டும். மற்றவர்கள் தொழ அனுமதியில்லை. அந்தப் பள்ளிவாசல் தவ்ஹித் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல், அதனால் அந்தப் பள்ளிவாசலுக்குத் தொழப் போகக்கூடாது என்ற பேச்சு தான் எங்கும் கேட்கிறது. இந்தப் பேச்சின் மூலம் பள்ளி வாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்ற எண்ணம் மறக்கடிகப்படுகிறதா? இல்லையா? இந்த எண்ணம், சொல், செயலுக்கு காரணம் முஸ்லிம்களின் மனதில் மண்டியுள்ள பிரிவினைதான் என்பதை யாரேனும் மறுக்க முடியுமா? மறைக்கத்தான் முடியுமா?

ஓர் ஊரில் ஒரு திருமணம் நடக்கிறது. இஸ்லாமியத் திருமணத்தில் ஆண், பெண்ணுக்கு மஹர் கொடுக்க வேண்டும். மாப்பிள்ளை வீட்டார்தான் திருமண விருந்து வைக்க வேண்டும். இந்த இரண்டும் இந்தத் திருமணத்தில் இல்லை என்று சொல்லி, திருமணத்தையே புறக்கணிப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். “”திருமணம் எனது வழிமுறை, அதைப் புறக்கணிப்பவர் என்னைச் சேர்ந்தவர் இல்லை” என்ற நபி மொழி திருமணத்தை வலியுறுத்திச் சொல்லப்பட்ட நபி மொழி மட்டுமல்ல, திருமண அழைப்பைப் புறக்கணிக்கக் கூடாது என்ற கருத்தும் இதில் பொதிந்துள்ளது என்பதை எவராவது மறுக்க முடியுமா? ஒரு யூதப் பெண்மணி நபி(ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தாள். யூதர்களின் குலத் தொழிலே கந்து வட்டிதான். இந்த வட்டித் தொழில் செய்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று, நபி (ஸல்) அவர்கள் விருந்துண்டிருக்கும்போது ஒரு முஸ்லிம் திருமணத்தில் விருந்துண்ணக் கூடாது என்று எதை வைத்துத் தான் சொல்கிறார்களோ? தெரியவில்லை. “”விருந்துக்கான அழைப்பை ஏற்பது கட்டாயமான ஒன்றாகும்” என்பது நபிமொழியாகும். இந்த நபி மொழி முஸ்லிம்களுக்குத் தெரியாமல் போவது ஏனோ?

ஒரு தந்தை மார்க்கம் தடுத்த வழியில் பொருளீட்டி, நிறையச் சொத்துக்களை சேர்த்து விடுகிறார். இந்தச் சொத்தில் பிள்ளைகள் பாக உரிமை பெறலாமா? என்று கேட்டால் “”பெறலாம்” என்று தான் எல்லோரும் மார்க்கச் சட்டம் சொல்கிறார்கள். தந்தையின் ஹராமான சொத்தில் பிள்ளைகள் பாக உரிமை பெறலாம் எனும்போது வரதட்சிணைக் கொடுத்து நடக்கும் திருமணத்தில் மற்றவர்கள் விருந்துண்ணக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்?

இது விளங்குவதற்கு மிகவும் கடுமையாக உள்ளது. வரதட்சிணை வாங்குவது இஸ்லாமில் தவறு தான். அதை கொடுத்தவர்களும் வாங்கியவர்களும் நாளை மறுமையில் பதில் சொல்ல வேண்டும். அதற்காக அவர்கள் வைத்தத் திருமண விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேரடியாக எதுவும் சொல்லாத போது நாமாக எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்? “”அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர வேறு எவருக்கும் இல்லை” என்று திருகுர்ஆனின் 6:57 வசனத்திற்கு இது எதிரானது இல்லையா? பிரிவினை எண்ணத் தைத் தவிர வேறு எதுவும் இந்த முடிவுக்கு நம்மை இட்டுச் செல்வதில்லை என்று நாம் எல்லோரும் உணர வேண்டும்.

இஸ்லாமில் குலப் பிரிவினை கிடையாது. சாதிப் பிரிவினை கிடையாது, தர்கா, மத்ஹபு, இயக்கப் பிரிவினை என்பது கிடையவே கிடையாது. ஆனால் இவையெல்லாம் முஸ்லிம்களிடம் உள்ளன. உலக அளவில் சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் கொள்கை ரீதியில் ஆகாது. காரணம் சவுதி சுன்னத் ஜமாஅத் பிரிவுக் கொள்கையைப் பின்பற்றும் நாடு என்றும் ஈரான் ´ஷியா பிரிவு நாடு என்றும் சொல்லப்படுகிறது. சவுதிக்கும், ஈரானுக்கும் ஆகாது. ஆனால் சவுதிக்கும் அமெரிக்காவுக்கும் ஆகும் என்பது எந்த வகை நியாயம்? இந்த””ஆகாது” விவகாரம் கொள்கை ரீதியாகத் தெரியவில்லை. மனதில் உள்ள பிரிவினை எண்ணத்தின் விளைவு என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. உலகில் 52 முஸ்லிம் நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் இந்த முஸ்லிம் போராளிக் குழுக்கள்தான் சண்டையிட்டுச் சாகின்றன. இங்கு கொல்பவர்களும் முஸ்லிம்கள் தான். கொல்லப்படும் அப்பாவி மக்களும் முஸ்லிம்கள் தான்.

“”நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனின் கூலி நரகம் தான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனை சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.” (திருகுர்ஆன்: 4:93) என்ற திருகுர் ஆனின் வசனத்தை முஸ்லிம்கள் அப்பட்டமாக மீறி, நரகத்திற்குச் செல்கிறார்களா? இல்லையா? மனதில் உள்ள பிரிவினை எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களை நரகத்திற்கு அழைத்துச் செல்கிறதா? இதை இவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

“”நமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே) உமக்குச் சம்பந்தமில்லை, அவர்களின் வி­யம் அல்லாஹ் விடம் உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டி ருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்”
(திருகுர்ஆன் : 6:159)

மேற்கண்ட திருகுர்ஆன் வசனம் முஸ்லிம்களின் உள்ளத்தில் பதிந்திருந்தால் (´ஷியா-சுன்னா) சண்டை யேது? மற்ற பிரிவுகளுக்கு இடம் ஏது?

“”தங்களது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளாகிவிட்ட இணை கற்பித்தோரில் ஆகி விடாதீர்கள். ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சியடைகின்றனர்” (திருகுர்ஆன் : 30:31,32)
மார்க்கத்தைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிப்பது இணை கற்பிப்போரின் செயல் என்ற மேற்கண்ட திருகுர்ஆனின் வசனங்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் பதிந்திருந்தால் பிரிவினை எண்ணம் தான் ஏற்படுமா?

“”நெறிநூல் கொடுக்கப்பட்டோர் தமக்குத் தெளிவான சான்று வந்த பின்பே தவிர பிளவுபடவில்லை.”
(திருகுர்ஆன் : 98:4)

தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள். அவர்களுக்கே கடும் வேதனை உண்டு.
( திருகுர்ஆன் : 3:105)

மார்க்கத்தை நிலைநாட்டுங்கள், அதில் பிரிந்து விடாதீர்கள். (திருகுர்ஆன் : 42:13)

அவர்களிடம் அறிவு வந்த பின்னும் தங்களுக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே தவிர அவர்கள் பிளவுபடவில்லை. (திருகுர்ஆன் 42:14)

திருகுர்ஆனின் மேற்கண்ட வசனங்கள் முஸ்லிம் களிடையே பிரிவினை கூடாது என்பதை வலியுறுத்த வில்லையா? இதை எத்தனை முஸ்லிம்கள் மதித்து நடக்கிறார்கள்? என்பதை தங்களுக்குத் தாங்களே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து (ஜமாஅத்தாக) பிடித்துக் கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள். அவன் உங்கள் உள்ளங்களுக் கிடையை இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காகவே இவ்வாறு அல்லாஹ் தனது சான்றுகளைத் தெளிவு படுத்துகிறான். (திருகுர்ஆன் 3:103)

மேற்கண்ட திருகுர்ஆனின் வசனம் முஸ்லிம் களிடையே பிரிவினை கூடாது என்று மட்டும் சொல்ல வில்லை. ஒற்றுமையையும் அது வலியுறுத்துகிறது. முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்றும் அது சொல்கிறது.

அவர்கள் திருந்தி தொழுகையை நிலைநாட்டி ஜகாத்தும் கொடுத்தால் அவர்கள் மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள், அறிகிற சமுதாயத்திற்குச் சான்றுகளை தெளிவாக்குகிறோம். (திருகுர்ஆன் : 9:11)

மேற்கண்ட திருகுர்ஆனின் வசனத்தின்படி தொழுது ஜகாத் கொடுப்பவர்கள் உங்கள் சகோதரர்கள் எனும்போது அந்த சகோதரர்களிடம் பிரிவினை பாராட்டலாமா? சண்டையிடலாமா? என்பதை ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். எதிரில் உள்ளவர் முஸ்லிமா? இல்லையா? என்று சிலர் தோண்டித் துருவிப் பார்க்கிறார்கள். இதற்கான அளவுகோலை அவர்களே நிர்ணயித்துக் கொண்டு அவர் முஸ்லிமல்ல என்று சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது வேண்டாத வேலையாகும். நம்முடைய தொழுகையை யார் தொழுகிறாரோ, நம்முடைய கிப்லாவை யார் முன்னோக்குகிறாரோ, நாம் அறுப்பதை யார் சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம் என்றார்கள் நபி(ஸல்) அவர்கள்.

நபி(ஸல்) அவர்களின் இந்த அளவுகோலை வைத்து முஸ்லிம்களை அளக்கும் முறையை முஸ்லிம் சமுதாயம் மறந்து விட்டது. இதுதான் முஸ்லிம் சமுதாயத்தில் நிலவும் எல்லா குழப்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது. எதிரில் உள்ளவர் முஸ்லிமா? இல்லையா? என்று பார்ப்பது ஒரு முஸ்லிமின் வேலை இல்லை. மாறாக அவரவர் தாங்கள் முஸ்லிம்களாக இருக்கிறார்களா? என்று தான் பார்க்க வேண்டும்.

ஒரு முஸ்லிமின் ரத்தம், மானம், பொருள் இந்த மூன்றும் இன்னொரு முஸ்லிமுக்கு ஹராம் (விலக் கப்பட்டது) என்றார்கள் நபி(ஸல்) அவர்கள், இந்த நபி மொழியின் மூலம் ஒரு முஸ்லிமின் ரத்தத்தை இன்னொரு முஸ்லிம் சிந்தக் கூடாது. ஒரு முஸ்லி மின் மானத்தை இன்னொரு முஸ்லிம் வாங்கக் கூடாது. ஒரு முஸ்லிமின் பொருளை இன்னொரு முஸ்லிம் அநியாயமான முறையில் எடுக்கக் கூடாது. இதைச் செய்யாமல் நாம் இருக்கிறோமா? என்று ஒவ்வொரூ முஸ்லிமும் தன்னைச் சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பரிசோதனையில் தேறினால் அவர் முஸ்லிம், தேறா விட்டால் முஸ்லிமாக முயற்சி செய்ய வேண்டும். இந்த சுய பரிசோதனைக்கு எத்தனை முஸ்லிம்கள் தங்களை ஆட்படுத்திக் கொள்கிறார்கள்.

“”எவருடைய கரத்தாலும், நாவினாலும் பிற முஸ்லிம்கள் அமைதி பெறுகிறார்களோ அவரே முஸ்லிம்” என்றார்கள் நபி(ஸல்). இந்த நபி மொழியின் அடிப்படையில் நமது கரத்தால் பிற முஸ்லிம்களுக்கு தீங்கு தராமல் கவனத்துடன் நடக்க வேண்டும். நம்முடைய நாவினால் பிற முஸ்லிம்களின் மனது புண்பட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இப்படி நடந்து கொண்டால் தான் ஒருவன் முஸ்லிமாகவே இருக்க முடியும். இந்த அடிப்படையில் நாம் முஸ்லிமாக இருக்கிறோமா? இல்லையா? என்பதை ஒவ்வொருவரும் தங்களை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்த முஸ்லிம்கள் மறந்து விட்டார்கள். மாறாக அவரவருக்கு ஏற்ற அளவுகோலை வைத்து ஒருவன் முஸ்லிமா? இல்லையா? என அளந்து பார்த்து, மற்றவர்கள் யாரும் முஸ்லிமல்ல என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இது ஒரு மன நோயாகும். இந்த மன நோயிலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் விடுபட்டு, பிரிவினையற்ற ஒரே முஸ் லிம் சமுதாயம் அமைக்க-ஒன்றுபட ஒவ்வொருவ ரும் பாடுபட வேண்டும்.

நிச்சயமாக, இதுவே என்னுடைய நேரான வழி யாகும். ஆகவே, இதனையே பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்றவேண்டாம். அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்துவிடும். நீங்கள் (நேர்வழியைப் பின்பற்றி, இறைவனை) அஞ்சுவதற்காக இதனை அவன் உங்களுக்கு ஏவுகிறான். (6:153)

எவர் அல்லாஹ்வின் பக்கம்(மக்களை) அழைத்து, நற்செயலையும் செய்து “”நிச்சயமாக நான் (அல்லாஹ் வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் உள்ளவன்” என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகிய வர் யார்? (இருக்கின்றார்?) (41:33)

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீர் (தீமையை) மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, எவருக்கும் உமக்குமிடையே பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரைப் போல் ஆகிவிடுவார். (41:34)

உண்மையின்றி, பூமியில் பெருமையடிப்பவர்களை, என் அத்தாட்சிகளை (விளங்கிக் கொள்வதை) விட்டும் திருப்பிவிடுவேன். அவர்கள் அத்தாட்சிகள் யாவையும் கண்டபோதிலும் அவற்றை நம்பமாட்டார்கள். அவர்கள் நேர்வழியைக் கண்டால் அதனை (தங்களுக்குரிய) வழியாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியாக எடுத்துக் கொள்வார்கள். அது (ஏனெனில்), அவர்கள் நம் வசனங்களைப் பொய்யயனக் கூறினார்கள். இன்னும், அவற்றை விட்டும் அலட்சியமானவர்களாக இருந்தார்கள் என்ற காரணத்தினாலாகும். (7:146)

Previous post:

Next post: