அபூ ஃபாத்திமா
அல்குர்ஆன் அல்அஹ்ஸாப் : 33:56-ல் அல்லாஹ் கூறுகிறான்.
இத்தூதரின் மீது அல்லாஹ் அருள்புரிகிறான். வானவர்களும் அவருக்காக அருளை வேண்டுகிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவருக்காகப் பிரார்த்தித்து அமைதியையும் வேண்டுங்கள்! (33:56)
இந்த இறைவாக்கு இறங்கியவுடன் நபி தோழர்கள் ஸலவாத் எப்படிச் செய்வது என்று கேட்கிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத் துஆ இதுதான்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீது, அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீது.
பொருள் : யா அல்லாஹ்! இப்ராஹீம் அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர் மீதும் அருள் புரிந் தது போல் முஹம்மது அவர்களின் மீதும், அவர் களின் குடும்பத்தினர் மீதும் அருள் புரிவாயாக! நிச்சயமாக நீயே புகழுக்குரியவன். கீர்த்தி மிக்கவன். யா அல்லாஹ்! இப்ராஹீம் அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் அபிவிருத்தி செய்தது போல் முஹம்மது அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் அபிவிருத்தி செய்வாயாக, நிச்சயமாக நீயே புகழுக்குரியவன், கீர்த்தி மிக்கவன்.
இந்த ஸலவாத்தைப் படிக்கும் அல்லது படிப்பதைக் காதால் கேட்கும் ஒரு பாமரனும்(அவாம்) இது நபி(ஸல்) அவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்திற்காகவும் அல்லாஹ்விடம் கேட்கும் துஆ-பிரார்த்தனை என்பதை மிக எளிதாக விளங்குவான். அதற்கு மாறாகத் தாங்கள்தான் ஆலிம்கள் மார்க்கம் கற்ற மேதைகள் என வீண்பெருமை பேசும் மவ்லவிகளால் விளங்க முடியவில்லை என்றால் அதன் பொருள் என்ன?
ஸலவாத்தை அதாவது துஆ-பிரார்த்தனையைப் புகழாக மூடத்தனமாக நம்பிக் கொண்டு, பாங்குக்கு முன்னால், தொழுகையின் நடு இருப்பில் “அப்துஹுவரஸூலுஹு” என்று கூறுவதுடன் நிறுத்தால் மேலதிகமாக பித்அத்தாக ஸலவாத்தைச் சேர்க்கும் இம் மவ்லவிகளின் நிலை என்னவாகும் என்பதை “”பித்அத்கள் அனைத்தும் வழிகேடே” என்ற ஆக்கத்தைப் படித்து விளங்க முடியும்.
பொதுவாக நாம் துஆ கேட்பதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலவாத் மூலம் முதன் முதலில் துஆ கேட்டுவிட்டுப் பின்னர் நமக்காக துஆ கேட்பதை நபி(ஸல்) கற்றுத் தந்துள்ளனர். பாங்குக்கு முன்னர், நடு இருப்பில் அதாவது துஆ கேட்க முடியாத இடங்களில் இந்த மவ்லவிகள் ஸலவாத் என்ற துஆவை புகழாக நம்பி கேட்பது பித்அத்.
கலிமாவில், தொழுகை இருப்பில் சொல்லும் “அப்துஹு வரஸூலுஹு’ என்பதிலுள்ள நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்(ஜல்)வின் அடிமையாகவும், தூதராகவும் இருக்கிறார்கள் என்று கூறுவதிலிருந்தே, நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமை தான். அல்லாஹ்வுக்குரிய தனிப் பண்புகளில் எதையும் பங்கு போட முடியாது என்பதை எளிதாக விளங்க முடியும். மேலும் ஸலவாத் எனும் துஆவை கேட்பதன் மூலம் நபி(ஸல்) அவர்கள் தேவையுடையவர்கள், அல்லாஹ்(ஜல்) மட்டுமே எவ்விதத் தேவையுமற்றவன் என்பதையும் நபி(ஸல்) அவர்கள் தங்க ளின் உம்மத்திற்குப் பாடம் சொல்லித் தருகிறார்கள்.
இந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத இடங்களில் துஆவைப் புகழாக மூடத் தனமாக நம்பி சொல்கிறவர்களும், அவர்களைப் புகழுவதாகக் குருட்டுத்தனமாக நம்பி இறைவனுக்கு இணையாக்கும் மவ்லூது பாடல்களை பித்அத்தாகப் பாடி தொப்பையை ஹராமான வழியில் நிரப்புகிறவர்களின் நாளைய முடிவு? இந்த வீண் பெருமை பேசும் மவ்லவிகள் குர்ஆன் 7:146, 16:25 இறைவாக்குகளை மீண்டும் மீண்டும் படித்துத் தங்களின் பரிதாப நிலையை உணர்வார்களாக!