ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2015 ஜனவரி,பொதுவானவை

M.T.M முஜீபுதீன், இலங்கை

அக்டோபர் 2014 தொடர்ச்சி……
இதேபோல் ஏனைய திருநாமங்களும் அல்லாஹ் ஒருவன். அவனுக்கு நிகராக எவையும் இருக்க முடியாது என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன. அவற்றில் சிலவற்றைச் சுருக்கமாக அவதானியுங்கள்.
2. அல்லாஹ் அவ்வல் – (முதலானவன் -ஆதி)
3. அல்லாஹ் ஆகிர் – (முடிவானவன்-அந்தம்)
4. அல்லாஹ் பாரீ – (உருவாக்குபவன்)
5. அல்லாஹ் பாத்தின் – (முடிவானவன்-அந்தம்)
6. அல்லாஹ் பதீவு – (முன்மாதிரி இன்றி படைத்தவன்)
7. அல்லாஹ்வு பர்ரு – (நல்லது செய்பவன்)
நிச்சயமாக நாம் முன்னே உலகில் அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம். நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன் பெரும் கிருபையுடையவன்” (அல்குர்ஆன் : 52:28)
8. அல்லாஹ் பஸீர் – (பார்ப்பவன்)

அல்லாஹ் அல்லாதவற்றைத் தெய்வங்களாக வணங்குபவர்களுக்குத் தெரியும், உண்மையாகவே அவற்றினால் பார்க்க முடியாது என்பது. அவர்கள் வணங்கும் மனித தெய்வங்கள் இறந்துவிட்டார்கள். ஆகவே அவர்களினால் உலகில் நடைபெறும் நிகழ்வுகள் சகலவற்றையும் பார்க்க முடியும் என நினைப்பது மடமையாகும். ஆகவே ஏக இறைவனுக்கு மட்டுமே ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் உற்றுப் பார்க்க முடியும். ஆகவே அந்த அல்லாஹ்வை மட்டுமே அடிபணிந்து வழிபடுங்கள். அல்லாஹ் முன் வைக்கும் அல்குர்ஆனின் வசனங் களை அவதானியுங்கள்.

நிச்சயமாக(தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ் விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். இறைநெறி நூல்(வேதம்) கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர். எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

(இதற்குப் பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக. நான் அல்லாஹ் வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கிறேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்) தவிர, இறைநெறிநூல் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும் நீங்களும் (அவ்வாறே) வழிபட்டீர்களா? என்று கேளும்; அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்) அறிவிப்பது தான் உமது கடமையாகும். மேலும் அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக் கவனிப்பவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் : 3:19,20)

ஒவ்வொரு இறைத்தூதர்களும் அல்லாஹ்வின் பண்புகளை மக்களுக்கு முன்வைத்தே போதனை செய்தார்கள். அதேபோல் இறுதி இறைத் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் பண்புகளையும், அழகிய பெயரையும் முன் வைத்தே அல்குர்ஆனின் வழியில் போதனை செய்தனர். மேலும் சில அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களை அவதானியுங்கள்.

9. அல்லாஹ் தவ்வாப் – (மன்னிப்பை ஏற்பவன்)
நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை ஒப்புக்கொள்கின்றான் என்பதையும், அவர்களுடைய தர்மங்களை அங்காகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள்புரிபவன்.
(அல்குர்ஆன் : 9:104)

10. அல்லாஹ் ஜமிவு – (திரட்டுபவன்)
11. அல்லாஹ் ஜப்பார் – (அடக்கி ஆள்பவன்)
12. அல்லாஹ் ஹஸீப் – (கணக்கெடுப்பவன்)
13. அல்லாஹ் ஹஃபீள் – (காப்பவன்)
14. அல்லாஹ் ஹக்கீம் – (ஞானமிக்கவன்)
15. அல்லாஹ் ஹலீம் – (சகிப்பவன்)
16. அல்லாஹ் ஹமீத் – (புகழுக்குரியவன்)

மேல் குறிப்பிட்ட அல்லாஹ்வின் திருநாமங்கள் போல், அல்குர்ஆனிலும், நபி(ஸல்) அவர்களின் ஹதீஃத்களில் இருந்தும் நூற்றுக்குக் கிட்டிய அல்லாஹ்வின் திருநாமங்கள் காணப்படுகின்றன. மேலும் அல்லாஹ் படைத்தவன், நன்கறிந்தவன், இரக்கமுடையவன், அருளாளன், நிகரற்ற அன்பு டையோன், உணவளிப்பவன், கண்காணிப்பவன், செவியுறுபவன், நன்றியை ஏற்பவன் இவ்வாறான பல திருநாமங்களை உடையவன். ஆகவே அவனை எந்தத் திருநாமங்கொண்டு அழைத்தாலும் அல்லாஹ் ஒருவனே ஆவான்.

ஆகவே, அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக் கூடிய வேறு இறைவன் இல்லை. அறிவுடைய மக்கள் அல்லாஹ்வுக்கு இணை துணைகளை ஏற்படுத்த மாட்டார்கள், அவர்கள் தமது எல்லாத் தேவைக ளுக்கும் அல்லாஹ்வையே நம்பி இருப்பார்கள். எல்லா இறைத்தூதர்களும் அல்லாஹ்வை மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே நம்பிக்கை கொண்டு வாழவேண்டும் என்றே வலியுறுத்திச் சென்றார்கள். அல்குர்ஆன் அரபு மொழியில் இருப்பதனால் அல்லாஹ்வின் பெயர்களும் அரபு மொழிக் கருத்துடையதாக அமைந்துள்ளன. உதாரணமாக அல்லாஹ்வுக்கு ரப்பு என்ற அரபு மொழியில் அமைந்த பெயர் உண்டு. அதன் தமிழ்ப் பொருள் இரட்சகன் அல்லது பரிபாலிப்பவன் ஆகும். அதன் சமஷ்கிர்தம் மொழியில் பொருள் விஷ்ணு என்பதாகும்.

அது போல் அல்லாஹ்வுக்கு அரபு மொழியில் ஃகாலிக் என்ற பெயரும் உண்டு. அதன் தமிழ்ப் பொருள் படைப்பாளன் என்பதாகும். அந்தப் பெயரின் சமஷ்கிர்த மொழிப் பொருள் பிரம்மா ஆகும். ஆனால் முஸ்லிம்கள் அப்பெயரின் பொருளை அவதானித்து சிலைகளைக் கற்பனை செய்து, அமைத்து வணங்குவதில்லை. அத்துடன் அல்லாஹ்வுக்கு பல பெயர்கள் இருப்பதனால் அப்பெயர்களில் பல கடவுள்களைப் படைத்து வணங்குவதும் இல்லை. இவ்வாறு வணங்குவது இறைவனை அவமதிக்கக் கூடிய பாவம் என இறுதி இறைநெறி நூல் அல்குர்ஆன் கூறுகின்றது. இதே போல் இந்திய மக்கள் வைத்துள்ள ஆதி வேதத் தொகுப்புகளும் இறைவன் ஒருவன் என்றே கூறுவதை அவதானிக்க முடிகின்றது. அவதானிப்போர் இல்லையா?

இந்தியாவில் மக்கள் வைத்துள்ள ரிக்வேதம் கூறுவதைக் கவனியுங்கள்.
“”யா தேவனாம் நாமயா ஏக ஏவ!”
பொருள் : திருநாமங்களையயல்லாம் கொண்ட அவன் ஒருவனேயாவான். (ரிக்வேதம் : 10:114:5)
அல்லாஹ்வுக்குப் பல பண்புப் பெயர்கள் இருப் பதை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. அவதானியுங்கள்:

“”நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள் அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள் எப் பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறுவீராக!.
(அல்குர்ஆன்:17:110)

மேலும் ரிக் வேதம் கூறுவதை அவதானியுங்கள்.
உண்மையான இறைவன் ஒருவன் தான்; தெய் வீகத் தன்மை வாய்ந்த பண்புகளைக் கொண்டு அவ னுக்கு ஏராளமான பெயர்கள் இருக்கின்றன.
(ரிக்வேதம் : 1:16:46)

இந்திய மக்கள் வைத்துள்ள ஆதி வேதத் தொகுப்புகளில் சிலை வணக்கத்திற்கு எதிராக உள்ள ஏகத்துவக் கருத்துக்களை அவதானியுங்கள்.

அவன் வடிவத்தைக் காண முடியாது. எவர் கண்ணுக்கும் புலப்படாதவன். எவர்கள் மனதாலும் இதயத்தாலும் அவனை அறிந்திருக்கிறார்களோ, அவர்களின் இதயத்தில் நிலையாக இருப்பவன். (உபநி­த் 40:9)

எவர்கள் இயற்கை வஸ்துக்களை வணங்கு கின்றார்களோ, அவர்கள் இருளில் பிரவேசிக்கின்றார்கள். இன்னும் எவர்கள் மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்குகின்றார்கள்.
(யசூர் வேதம் : 40:9)

பொருள்களுக்கு மகேசுவரனாயுள்ள என்னு டைய உயர்ந்தத் தன்மையை அறியாதவர்களாய், மூடர்கள் மனித உடலை அடைந்ததாய் என்னை அவமதிக்கின்றார்கள். (பகவத் கீதை : 9:11)

இதேபோல் யூத வேதங்களிலும், கிறித்தவ வேதங்களிலும் ஏகத்துவக் கருத்துக்கள் காணப்படு வதைக் காணலாம். அவதானியுங்கள்:

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.  (யோவான் : 1:18)

தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமான உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

மேலே வானத்திலும் கீழே பூமியிலும், பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிக்கிறவற்றிற்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்ரகத்தை யாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவற்றை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.   (யாத்திரகாமம் : 20:1-5)

இவை யாவும் இறைவனுக்கு உருவம் கற்பிப்பது பாவம் என அல்குர்ஆனுக்கு முன் அருளப்பட்ட சிதைவடைந்த இறைநெறி நூல் தொகுப்புகள் கூறுகின்றன. அவ்வாறாயின் ஏன் அந்த மக்கள் பல தெய்வங்களை வழிபட வேண்டும் என வினவலாம். எல்லாம் அந்த இறைத் தூதர்களுக்குப் பின், பிற்காலத்தில் இவ்விறை நெறிநூல்களை மாற்றி, புரோகிதர்கள் ஷைத்தானியக் கொள்கைகளைப் புகுத்தியதனால் ஏற்பட்டதாகும். இதனால் பரம்பரை பரம்பரையாகப் பெற்றோர் வழியாகப் பெற்ற மதங்களை இன்னும் நேர்வழி என மக்கள் நம்பி, இறைவனை விட்டு சிலைகளை, இறந்து போன நல்ல மனிதர்களைத் தெய்வங்களாக ஆக்கிக் கொண்டனர். பகவத் கீதை இக்கொள்கையுடையவர்களை பின் வருமாறு கண்டிக்கின்றது. அந்தந்த ஆசைகளால் அறிவிழந்தவர்கள் அந்தந்த நியமனத்தை கைக்கொண்டு தம்முடைய இயல்புக ளுக்கு கட்டுண்டு கவரப்பட்டவர்களாய் வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர்.

ஆகவே அறிவு நிறைந்த மனித சமூகமே, இறைவனுக்கு இணை துணைகளைக் கற்பனை செய்யாதீர்கள். மாற்றப்பட்ட வேதங்களுக்குப் பதிலாக அல்லாஹ் இறுதியாக இறக்கி அருளிய அல்குர்ஆனை அவதானித்து, ஏக இறைவனின் பண்புகளை அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்தான் எம்மை அல்குர்ஆனின் ஒளியின் கீழ் நேர்வழியில் செலுத்தல் வேண்டும். நீங்கள் அல்லாஹ்வை சிலைகளாகக் கற்பனை செய்து வடித்து வணங்காதீர்கள். நபி(ஸல்) அவர்கள் இஹ்சான்(அழகிய முறையில் செயலாற்றல் என்ற சொல்லின்படி) சொன்ன விளக்கத்திற்கமைய அல்லாஹ்வை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான் என்ற அடிப்படையில், நாம் அல்லாஹ்வைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுதல் வேண்டும் என்பதாகும்.

இறைவனை இம்மையில் மனிதனால் காண முடியுமா?
ஏழு வானங்கள், பூமி, மனிதர்கள், ஏனைய உயிருள்ள, உயிரற்ற படைப்பினங்களைப் படைத்த வன் இறைவன் ஆவான். அந்த ஏக இறைவனே சகலவற்றையும் படைத்துப் பரிபாலித்து ஆட்சி செய்பவ னாவான். அவன் எல்லா அறிவும் ஆற்றலும் நிறைந்தவன். ஏக இறைவனின் அறிவும் ஆற்றலும் அளவிட முடியாதது. அல்லாஹ்வின் அறிவு ஏழு கடல்களுக்கு மேல் அதிகம் எனின், ஏக இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட அறிவு ஒரு சிட்டுக்குருவி அக்கடலில் இருந்து தன் சொண்டினால் எடுக்கும் நீரின் அளவை விடக் குறைந்ததாகும். இதனால் சான்றோர், மனிதன் கற்றது கை மண் அளவு எனவும், கல்லாதது உலகளவு எனவும் கூறுவர். அல்லாஹ் இதனை அல்குர்ஆனில் பின் வருமாறு விளக்குகின்றான்.

மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுவதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிக மாக்கப்பட்டு (மையாக) இருந்தபோதிலும், அல்லாஹ்வின் வார்த்தைகள் முடிவுறா; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன் ஞானம் மிக்கோன்.
(அல்குர்ஆன் : 31:27) மேலும் பார்க்க : 17:85

ஆகவே ஏக இறைவன் மிகைத்தவனாகவும், ஞானம் மிக்கவனாகவும் இருக்கின்றான். இந்த ஏக இறைவனை மனிதன் கண்களினால் பார்க்காவிட்டாலும் இறைவன் அருளிய இறைநெறி நூல்களினாலும், காலத்திற்குக் காலம் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் உண்மைச் செய்திகள் மூலமும் ஏக இறைவனை அறிந்து கொண்டுள்ளனர். இந்தப் பூமியிலுள்ள எந்த மனிதனும் தனது கண்களைக் கொண்டு அல்லாஹ்வைப் பார்க்கவில்லை. அல்லாஹ்வைப் பார்க்கக் கூடிய கண்களை அல்லாஹ் மனிதனுக்குக் கொடுக்கவில்லை. இறைநெறி நூல்கள் மூலமாக அல்லாஹ்வின் பண்புகளை அறிந்த மக்களுக்கு இதனைப் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் நாத்திகர்களைப் போல் தமது கண்களினால் காணும் வரை இறைவனை நம்பமாட்டோம் என சத்திய ஏக அல்லாஹ்வை மறுப்பதில்லை. அல்லாஹ் படைத்த உயிருள்ள உயிரற்ற படைப்புகளை அவதானிப்பதன் மூலம், இவற்றைப் படைத்த அல்லாஹ்வின் வல்லமையை அறிந்து, இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்வர். ஆதி வேதத் தொகுப்புகளில் தவறுகள் பிழைகள் மனிதனால் உள் நுழைக்கப்பட்டிருந்தாலும், அவற்றிலும் இறைவனை மனிதக் கண்களினால் பார்க்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண லாம். அவதானிக்குக :
அவன் மஹாத்மா, காணுவதற்கரியவன். (பகவத் கீதை : 7:19)

அவன் வடிவத்தைக் காண முடியாது. எவர் கண்ணுக்கும் புலப்படாதவன். எவர்கள் மனதாலும் இதயத்தாலும் அவனை அறிந்திருக்கிறார்களோ, அவர்களின் இதயத்தில் நிலையாக இருப்பான். (உபநி­த் : 40:20)

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. (யோவான் : 1:18)
இதே போல் மூசா(அலை) அவர்கள் அல்லாஹ் வைக் காண ஆசைப்பட்ட சம்பவத்தை அல்குர்ஆன் விவரிப்பதை அவதானியுங்கள்.

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூசா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான். அப்போது மூசா: “”என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும் எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக!” என்று வேண்டினார். அதற்கு அவன், “”மூசாவே! நீர் என்னை ஒருக் காலும் பார்க்க முடியாது. எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது அதன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம் மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான். அப்போது மூசா மூச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “”(இறைவனே!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மை யானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 7:143)

இந்த இறைவசனத்தின்படி அல்லாஹ் இந்த உலகையும், மனிதனையும் படைத்த மூலக்கூறுகளின்படி இப்பூமியில் மனிதர்களுக்கு அல்லாஹ்வை ஒருக்காலும் பார்க்க முடியாது. அல்லாஹ் ஒரு மலை மீது தனது பேரொளியைத் தோற்றுவித்தபோது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான். இச்சம்பவம் மூசா(அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து கொள்வதற்கும், அவன் மிகப் பரிசுத்தமானவன் என அறிவதற்கும் வெகு நேரம் எடுக்கவில்லை. ஆகவே மூசா (அலை) இவ்வாறாகக் கேட்டதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டார்கள். அத்துடன் அல்லாஹ் இருக்கிறான் என நம்பிக்கை கொண்டோர்களில் தான் முதன்மையானவனாக இருப்ப தாகவும் கூறினார்கள். மேலும் அல்குர்ஆன் கூறுவதை அவதானியுங்கள்.

பார்வைகள் அவனை அடைய முடியா, ஆனால் அவனோ எல்லோருடைய எல்லாப் பார்வைகளையும் சூழ்ந்து அடைகிறான். அவன் நுட்பமானவன் தெளிவான ஞானமுடையவன். (அல்குர்ஆன்:6:103)

ஆகவே இம்மையில் மனிதர்களுக்கு வழங்கியுள்ள உடல் கூறுகளின் ஆற்றலுக்கமைய மனிதர்களினால் இறைவனைப் பார்க்கவே முடியாது. இதுவே உண்மை நிலையாகும். ஆனால் மறுமையில் அல்லாஹ்வை பார்க்க முடியும் என ஹதீஃதிகள் காணப் படுகின்றன. ஹதீஃத்களை வாசித்து அறிந்து கொள்ளுங்கள். பின்வரும் நபி மொழிகளை அவதானி யுங்கள். அபூதர்(ரழி) அவர்கள் கூறியதாவது :

நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று (திருப்பிக் கேட்டார்கள்)
(முஸ்லிம் : 291)

முஸ்லிமில் உள்ள 293ம் ஹதீஃதில்-ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். மற்றோர் அறிவிப்பில் “”நெருப்பே அவனது திரையாகும்” என்று காணப்படுகின்றது. அத்திரையை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப் பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும்.

மேலும் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் விளக் கும் ஹதீஃதை அவதானியுங்கள். மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான்(அன்னை) ஆயிஷா(ரழி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) “”அபூஆயிஷா, மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்” என்று கூறினார்கள். நான் “”அவை யாவை”? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “”யார் முஹம்மது(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டிவிட்டார்” என்று சொன்னார்கள். உடனே சாய்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, “”இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள். அவசரப்படாதீர்கள். வலிவும் மாண்பு மிக்க அல்லாஹ், திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார் (81:23) என்றும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார் (53:13) என்றும் கூறவில்லையா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரழி) அவர்கள் பின் வருமாறு விளக்கமளித்தார்கள்.

இந்தச் சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப்பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது என்று கூறினார்கள்.
மேலும், ஆயிஷா(ரழி) அவர்கள் தமது கருத்துக்குச் சான்றாக அல்லாஹ் பின்வருமாறு கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள்.

கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்.  (அல்குர்ஆன் : 6:103)

அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? “”எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹியின் (தனது அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை (இறைநெறிச் செய்தியாக) அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தோனும் ஞானமிக்கோனும் ஆவான்”  (அல்குர்ஆன் : 42:51)

(தொடர்ந்து) ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இறைநெறி நூலில் இருந்து எதையும் மறைத்தார்கள் என்று யாரேனும் கூறினால், அவரும் அல்லாஹ்வின் மீதும் மிகப்பெரும் பொய்யை இட்டுக் கட்டிவிட்டார். அல்லாஹ்வோ, “”(எம்) தூதரே! உங்கள் இறைவனிட மிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற இறைநெறி நூலை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்! (இவ்வாறு) நீங்கள் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்” (5:67) என்று கூறுகிறான் என்று கூறினார்கள்.

Previous post:

Next post: