ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2019 பிப்ரவரி

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

M.T.M.  முஜீபுதீன், இலங்கை

2019 ஜனவரி தொடர்ச்சி…..

அத்துடன் இந்த வியாபாரப் பொருட்கள், விவசாயக் கருவிகளாகவும், கைத் தொழில், சேவைத்துறை சார்ந்த கருவிகளா கவும், பங்குச் சந்தையில் விற்பனை செய்யப் படும் பங்குகளாகவும் இருக்கலாம். இன்று ஏழைகளுக்கு தொழில் வாய்ப்பு அற்றிருக் கலாம். அவர்களிடம் பெரிய மூலதனம் இல்லாதிருக்கலாம். ஆனால் அவர்கள் இந்த ஜகாத் மூலம் கிடைத்த சிறிய பெறுமதியுடைய கருவிகளைப் பயன்படுத்தி, பெரிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு முன்வராத, சந்தையில் நிரம்பல் குறைவாக வுள்ள சுய தொழில்கள், சிறு கைத்தொழில் களில் ஈடுபடுவதன் மூலம் தமது வருமானங்களை அதிகரித்துக் கொள்ள முடியும். இதனால் நாட்டின் விவசாய, கைத்தொழில் உற்பத்திகளை அதிகரித்து நாடு பொருளாதார வளர்ச்சி அடைய உதவமுடியும். பெரிய முதலீட்டாளர்களுக்குத் தேவையான மூலப் பொருட்கள், இடைநிலைப் பொருட்களை உற்பத்தி செய்து வழங்குவதனூடாக பெரிய முதலீட்டாளர்களும் தமது தொழிற்துறை களை இலகுவாக கொண்டு நடத்த உதவ முடியும்.

அத்துடன் பங்குச் சந்தையிலுள்ள பங்குகள் ஜகாத் பொருளாக வழங்கப்படுவதால், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழைகளின் வருமானம் உயர்கிறது. அவர்களுக் கும் முதலீட்டுச் சந்தையில் பங்கு கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். இதனால் சிறிய முதலீட்டாளர்களின் சிறிய நிதி பெரிய முதலீடாக வளர்வதற்கு துணையாக அமைகி றது. ஆகவே ஜகாத் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு வழிகாட்டுவதனூடாக வருமான ஏற்றத்தாழ்வைக் குறைத்து, வேலையின்மையை நீக்கி, கீழ் உழைப்பை போக்கி, வறுமையினால் ஏற்படும் தீங்குகளைத் தவிர்க்க வழிகாட்டும்.

(ஆ) நாட்டில் மக்கள் இருப்பாக வைத்திருக்கும், சட்டப் பணம், நிதி நிறுவனங்களில் வைத்துள்ள வைப்புகள், குறுகிய கால திரவத்தன்மை கூடிய பணவகைகள், பிரதிப்பணங்கள், தங்கம், வெள்ளி வைப்பு போன்ற செல்வங்களுக்கு, வருட இறுதி நாணய மீதிக்கு 2.5 சதவீதம் ஜகாத் அளவிட்டு ஏழைகளுக்கு பகிரப்பட வேண்டும் என இஸ்லாம் கடமையாக்கியிருக்கிறது.

பண வகைக்கான வருமானங்களுக்கு ஜகாத் அளவீடுகள் செய்யும் போது பண்டங்களின் விலை அதிகரிப்புக்கு நேரடியான தாக்கக் காரணியாக அமைவதில்லை. பொருட்கள் சேவைகளைக் கொள்வணவு செய்வதற்கு பணம் அவசிய மாகிறது. அப்பணவகைகள் இருப்பாக சேமிக்கப்படும் போது பண நிரம்பல் குறைவடைந்து நாட்டில் பண நிரம்பலில் மந்தம் ஏற்படக் காரணமாகலாம். இதனால் பொருளாதார வீழ்ச்சிக்கும், முதலீட்டு வீழ்ச்சிக்கும், வேலை இன்மை அதிகரிப்புக்கும், மக்கள் வருமான ஏற்றத் தாழ்வு அதிகரிப்புக்கும், வறுமையின் விளைவுகள் நாட்டில் ஏற்படுவதற்கும் அடிப்படையாக அமைகின்றது. ஆகவே மக்கள் தங்கம், வெள்ளி, விற்பனைக்குள்ள பொருட்களை வருமான சுற்றோட்டத்தில் பயன்படுத்தாது, ஆபரணங்களாக அணிந்தும், சேமித்தும் வைப்பதனால் பொருளாதாரத்தினைப் பாதிக்கும். ஆகவே இதனைத் தவிர்த்து பணச் சுழற்சியை சீரமைக்க ஜகாத் ஒவ்வொரு வருடமும் அளவிடுவது அவசியமாகும். இது அவர்களின் தேங்கியிருக்கும் செல்வங்களை தூய்மைப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியையும், அதிகரிப்பையும் ஏற்படுத்தவும் உதவும். மற்றும், இதனால் அல்லாஹ் வின் அருள் அதிகரித்து, வறுமை நீங்கி, சமூக வாழ்வில் வாழ்க்கைத் தரத்தில் நல்ல பேறுபெறும், பொருளாதார சுற்றோட்டத் திலும், பணச் சுற்றோட்டத்திலும் சமநிலை யும், பொருளாதார சீர்மையும் ஏற்படக் காரணமாகும்.

ஜகாத்தின் சிறப்பும், அதை மறுப்பவர்களுக்கான இறை தண்டனையும் :

அல்லாஹ் இறுதி இறை நெறி நூலான அல்குர்ஆனில் ஜகாத் பற்றி விபரிப்பதை கவனியுங்கள்.

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மைப்படுத்துவீராக. (அல்குர்ஆன் : 9:103)

அல்லாஹ் தனது அடியானுக்கு வழங்கிய செல்வங்களைத் தூய்மைப்படுத்துவதற் காக ஜகாத்தை கொடுக்கப் பணிக்கிறான். அல்லாஹ் மேலும் ஜகாத் பற்றி விளக்கு வதை கவனியுங்கள்.

அவ்வூரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும், வழிப்போக்கருக்குமாகும். மேலும், உங்களிலுள்ள செல்வந்தர் களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்க கட்டளையிடப்பட்டுள்ளது) மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகிறாரோ அதை விட்டும் விலகில் கொள்ளுங்கள் மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன். (அல்குர்ஆன்: 59:7)

ஆகவே அல்லாஹ் சில மக்களுக்கு வழங்கிய செல்வங்கள் அவர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்காது. ஏழைகளுக்கும் பகிர்ந்து போவதற்காக ஜகாத்தைக் கடமை யாக்கியதாகக் குறிப்பிடுகிறான். மேலும் இறுதி இறைத் தூதரின் கட்டளையை கவனியுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் முஆத்தை யமனுக்கு ஆளுநராக அனுப்பினார்கள். அப்போது அவரிடம், “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதி மொழியின்பால் அவர்களை அழைப்பீர்களாக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கி இருக்கிறான் என்பதை அவர் களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களின் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற் காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஜகாத்தைக் கடமையாக்கி இருக்கிறான் என்பதை அறிவிப்பீராக! என்று கூறினார்கள். (புகாரி : 1395)

அல்லாஹ்வை விசுவாசித்து, முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத் தூதராக ஏற்றுக் கொண்ட ஒரு முஸ்லிம் கடமையான ஜகாத்தை வழங்குவது கடமையாகும். அவ்வாறு வழங்குவதன் மூலம் இறை விசுவாசம் அதிகரிக்கிறது. இதனால் எண்ண முடியாத நன்மைகளை ஒரு மனிதன் பெற்றுக்கொள்ள முடியும். பின்வரும் ஹதீஃத்களை கவனியுங்கள்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “என்னைச் சுவனத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்” எனக் கேட்டார். அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) “இவருக்கென்ன (ஆயிற்று)?” “இவருக்கென்ற (ஆயிற்று)? என்றனர். நபி (ஸல்) அவர்கள் “இவருக்கு ஏதோ தேவைப்படுகிறது (போலும்)!” (என்று கூறிவிட்டு அவரிடம்) “நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும் அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது தொழுகையை நிலைநாட்ட வேண்டும் ஜகாத் வழங்க வேண்டும் உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்” எனறு கூறினார்கள். (புகாரி:1396)

ஒரு மனிதன் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, ஏழைகளுக்காக தனது செல்வத்தில் இருந்து ஜகாத் வழங்குவதன் மூலம் சொர்க்கத்தினை பெற்றுக் கொள்ள முடிகின்றது. ஒரு மனிதனிடம் அல்லாஹ் செல்வத்தினை வழங்கியுள்ளான். ஆனால் அவனது சகோதரர்கள் ஏழைகள். ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் அந்த செல்வந்தன் தனது சகோதரனுக்கு உதவாவிடின் அந்த ஏழைச் சகோதரர்களுக்கு போசாக்கின்மை, வீட்டு வசதியின்மை, உடைகள் இன்மை போன்ற காரணங்களால் அவதியுற நேர்கிறது. இதனால் அந்த ஏழை சகோதரர்களுக்கு நோய்கள், சிசு, தாய் மரணங்கள், கல்வி அறிவு இன்மை, இதனால் களவு, தீய செயல்கள் போன்ற பல வறுமையின் கொடுமைகள் ஏற்படுகின்றன. அவ்வாறாயின் அந்த ஏழை சகோதரனுக்கு உதவ முன் வராமலிருந்த செல்வந்த மனிதனை, சகோதரன் என உண்மையாக அழைக்க முடியுமா? ஆகவே கஷ்டத்திற்கு உள்ளான மனிதர்களுக்கு உதவி செய்பவர்களையே சகோதரர்கள் எனலாம். இதனை அல்லாஹ்வினால் மனித குலத்தின் நல்வாழ்வுக்கு வழங்கப்பட்ட அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந் திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைபிடித்து, ஜகாத்தையும் (முறையாகக்) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம். (அல்குர்ஆன் : 9:11)

அல்லாஹ்வை விசுவாசித்த முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைக்கமைய ஜகாத் வழங்குபவர்கள் சகோதரர்கள் என விளக்குகிறான். அத்துடன் அல்லாஹ் வழங்கிய செல்வங்களை அல்லாஹ்வின் கட்டளைக்கமைய முறையாக ஜகாத்தாக வழங்குபவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அவர்கள் அல்லாஹ்வின் இறை இல்லங்களை பரிபாலிக்க தகுதியானவர்கள் என அல்லாஹ் குறிப்பிடுவதை கவனியுங்கள்.

அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள் தான் இத்தகையவர்தாம் நிச்சயமாக நேர்வழி பெற்றவர்களில் ஆவார்கள். (அல்குர்ஆன்: 9:18)

ஒரு மனிதன் பிறந்தவுடன் செல்வங்களுடன் பிறப்பதில்லை. அல்லாஹ்வின் அருளின் காரணமாக அவன் பெரும் செல்வங்களுக்கு உரிமை உடையவனாக மாறுகின்றான். அச்செல்வங்கள் எல்லாவற்றையும் ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிடும்படி இறைவன் குறிப்பிடுவதில்லை. அவனிடம் பணவடிவில் செல்வங்கள் காணப்படின் அச்செல்வங்களில் அவனுக்கும் தேவையுண்டு என அல்லாஹ் அறிந்தே உள்ளான்.

எனவே அவனதுசெல்வங்களில் 97.5 சதவீதத்தை அவனது தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, பொழுதுபோக்கு மற்றும் மனிதனுக்கு நன்மை பயக்கும் நல்ல கருமங்களில் வீண் விரயம் இன்றி மனித சமுதாயத்தினருக்கு உச்ச பயன்பாட்டை கொடுக்கக் கூடிய விதத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கிறான். அவனுக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தில் 2.5 சதவீதத்தினையே ஏழைகளுக்கு ஜகாத்தாக வழங்கும்படி கட்டளையிடுகிறான். இந்த சாதாரண கட்டளையை புறக்கணித்து 2.5 சதவீதத்திலும் அவன் ஜகாத் வழங்காது மோசடி செய்கிறான். இதனால் எளிய மனித சமுதாயத்திற்கு ஏற்படும் துன்பங்களோ ஏராளம். அவற்றை கவனிப்போம்.

  1. ஏழை பணம் படைத்தவர்களுக்கிடையில் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரித்துச் செல்லும்.
  2. ஏழை மக்களிடையே முழு வறுமை, சார்பு வறுமைகள் தோன்றும். இதனால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் வீதாசாரம் அதிகரிக்கும்.
  3. நாட்டில் பொருளாதார வளர்ச்சியும், பொருளாதார அபிவிருத்தியும் வீழ்ச்சி அடையும்.
  4. இதனால் வேலையின்மை, கீழ் உழைப்பு, உற்பத்தி, முதலீடு, நுகர்வு என்பவற்றில் பெரிய பின்னடைவுகள் ஏற்படும்.
  5. இதனால் சமுதாயங்களில் வறுமையின் விளைவுகளான நோய்கள் அதிகரித்தல், இறப்பு வீதம், சிசு மரண வீதம், தாய் மரண வீதங்கள் அதிகரிப்பதுடன் மக்களிடையே போசாக்கின்மையுடைய சமுதாயம் உருவாகும். இது பட்டினி மரணங்களுக்கும் காரணமாகும்.
  6. இதனால் கல்வி அறிவு வீதமும், சுகாதார நலன் வீதமும், மனித உரிமை சார்ந்த செயற்பாடுகளும் வீழ்ச்சி அடையும்.
  7. நாட்டில் தீமைகள் அதிகரிக்கும் சண்டை, சச்சரவுகள், போட்டி, பொறாமை, பெருமை, களவு, விபசாரத் தொழில்கள், கொலை, கொள்ளை, மதுபானம், சட்ட விரோதமான தொழில்கள் அதிகரிக்கும். நிம்மதியற்ற மனித சமுதாயம் நாட்டில் அதிகரிக்கும்.

Previous post:

Next post: