இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?
தொடர் – 11
அபூ அப்தில்லாஹ்
மறு பதிப்பு
மத்ஹபுகளை நியாயப்படுத்த, மார்க்கமாக்க மத்ஹபு முகல்லிது புரோகிதர்கள், ஏகன் இறைவனின் இறுதி வழிகாட்டியான அல்குர்ஆனின் வசனங்களை எப்படி எல்லாம் திரித்து வளைத்து மறைத்து வருகின்றனர் என்று சென்ற தொடரில் பார்த்தோம். அதே வரிசையில் அவர்களின் இருட்டடிப்புக்கு ஆளாகும் இன்னும் சில அல்குர்ஆன் வசனங்களை இத்தொடரில் பார்ப்போம்.
அல்குர்ஆன் அன்னிஸா 4:59ம் வசனம் வருமாறு :
“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள், இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர் களுக்கும் கட்டுப்படுங்கள், உங்களில் ஏதா வது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால், உண்மையாக நீங்கள் அல்லாஹ்வை யும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின், அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்”. (அல்குர்ஆன்:4:59)
இந்த இறைவாக்கு. எவரது மேல் விளக்கமும் இல்லாமல் தெள்ளத் தெளிவாக சாதாரண அறிவு படைத்தவருக்கும் விளங் கும் நிலையிலேயே உள்ளது. அல்லாஹ் வுக்கு வழிபடுவது எனும்போது அல்குர்ஆனின் கட்டளைகளுக்கு அப்படியே வேறு அபிப்பிராயம் கொள்ளாமல் கட்டுப்படுவது. அல்லாஹ்வின் தூதருக்கு வழிப்படுவது என்றால், இறுதி இறைத்தூதரின் வழிகாட்டல்களுக்கு எவ்வித மாற்று அபிப்பிராயமும் கொள்ளாமல் அப்படியே ஏற்று நடப்பது. ஆக அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளுக்கும் சொந்த விளக்கமோ, வியாக்யானமோ, யூகமோ கொள்ளாமல் அப்படியே எடுத்து நடப்பது யாருக்குச் சாத்தியம் என்றால், உண்மையிலேயே அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்பிச் செயல் படுகிறவர்களுக்கு மட்டுமே. அரைகுறை நம்பிக்கை உடையவர்கள் மட்டுமே வேறு அபிப்பிராயம் கொண்டு வழிகேட்டில் செல்லமுடியும்.
வழிப்பட்டு நடக்கும் வியத்தில் இறைத்தூதரோடு “வ உலில் அம்ரி மின்கும்” உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் வழிப்படுங்கள் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது. கட்டளை இவ்வளவு தெளிவாக இருக்க மத்ஹபு முகல்லிது புரோகித மவ்லவிகள் “உலில் அம்ரி மின்கும்” என்ற இந்தக் கட்டளைக்கு “உங்களது இமாமுக்கும் வழிப்படுங்கள்” என்று விளக்கம் அளிக் கின்றனர். அதன்மூலம் தங்களின் மத்ஹபு வழிகேட்டை நியாயப்படுத்த முற்படுகின்றனர்.
“உங்களில் அதிகாரம் வகிப்பவர்” என்று நிகழ் கால அடிப்படையில் மிகத் தெளிவாக இருக்கும் ஒரு இறைக்கட்டளையில், சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போன இமாம்களுக்கு வழிப்படுங்கள் என்று கூறி, தங்கள் பிடியிலுள்ளவர்களை வழிகெடுக்கின்றனரே. இது எவ்வளவு பெரிய கொடூர பாவமான செயல் என்பதை அவர்களால் விளங்க முடியவில்லையா?
ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் என்று அல்லாஹ் சிறப்பித்துக் கூறியுள்ளதற்கு ஏற்ற நிலையில் சமூக ஒற்றுமையை நிலை நாட்டும் அவசியத்தைக் கருதி “உலில் அம்ரி மின்கும்” உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் வழிப்படுங்கள் என்று இறைவன் கட்டளையிட்டுள்ளான்.
மூவர் பயணத்தில் புறப்பட்டால் அவர்கள் தம்மில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ சயீத் அல்குத்ரீ(ரழி), நூல்: அபூதாவூது.
“உங்களில் அதிகாரம் வகிப்பவர்” என்பதற்கு “ஆட்சி’ அதிகாரம் என்று சமீபத்தில் ஒரு தவ்ஹீத் மவ்லவி “சுய விளக்கம்’ கொடுத்து தமது புரோகித புத்தியை வெளிப்படுத்தினார். இந்த 4:59 வசனத்தில் ஆட்சி அதிகாரம் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தால் அதை அல்லாஹ் மிகத் தெளிவாக நேரடியாகவே கூறியிருப்பான். இந்தப் புரோகித மவ்லவிகள் விளக்கம் கூறி விளங்கும் நிலையில் அரைகுறையாகக் கூறி இருக்கமாட்டான். அதிகாரம் வகிப்பவர் என்றால் பொதுவாக அதிகாரம் வகிப்பவர் என்று மட்டுமே பொருள் கொள்ளவேண் டும். ஆட்சி அதிகாரம் என்று கற்பனை செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை.
இந்த உண்மையை மேலே எழுதியுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஃத் உறுதிப்படுத்துகிறது. பிரயாணத்தில் மூவர் சென்றாலும் ஒருவரை அமீராக ஆக்கிக் கொள்ளுங்கள் என்பது நபி(ஸல்) அவர்களின் கட்டளை. பிரயாணத்தில் செல்லும் இம்மூவரில் யாருக்கும் ஆட்சி அதிகாரம் இருப்பதாக நாம் கற்பனை செய்ய முடியுமா? ஒருபோதும் முடியாது. அப்படியானால் இங்கு “அமீர்’ என்று குறிப்பிடுவதில் பொருள் என்ன?
அந்த மூவரும் சேர்ந்து தங்களில் ஒருவரை அந்தப் பிரயாணத்தில் அமீராக ஆக் கிக் கொள்வதாகும். அதாவது குறிப்பிட்ட அந்தப் பிரயாணத்தில் அவர் அதிகாரம் கொடுக்கப்பட்டவராகிறார். அந்தப் பிரயாணத்திலேயே மாறுபட்ட கருத்துக்கள் வரலாம். அவற்றில் குர்ஆன் ஹதீஃதுக்கு முரண்பட்ட கருத்தை நிராகரித்துவிட முடியும். ஆனால் அவர்களிடையே ஏற்படும் குர்ஆன், ஹதீஃதுக்கு முரணில்லாத கருத்து வேறுபாடுகளை எப்படித் தீர்ப்பது?
உதாரணமாக தங்களது பிரயாணத்தை ஒருவர் தொடர் வண்டியிலும், இரண்டாமவர் பேருந்திலும், மூன்றாமவர் ஆகாய விமானத்திலும் தொடரலாம் என்று கருத்துக் கூறுகின்றனர். இந்த மூன்று கருத்துகளும் குர்ஆன், ஹதீஃதுக்கு முரணானதல்ல. அப்படியானால், இந்த கருத்து வேறுபாட்டை எப்படித் தீர்ப்பது? அப்படியானால் இந்த மூன்று கருத்துக்களில் ஏதாவதொரு கருத்துக்கு அந்த மூவரும் இணங்கித் தான் ஆகவேண்டும். யாருடைய கருத்தை ஏற்றுக் கொள்வது என்று வரும்போது அதை முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவர் ஒருவர் அவர்களில் இருந்துதான் ஆக வேண்டும். பிரயாணத்தில் அந்த அதிகாரத்தைப் பெற்றவரையே “அமீர்’ என்கிறோம். இப்படி குர்ஆன், ஹதீஃதுக்கு முரணில்லாத அதே சமயம் ஒற்றுமையைக் குலைக்கக் கூடிய கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்கே அதிகாரம் பெற்ற ஒரு “அமீர்’ அவசியம் தேவைப்படுகிறது. இதே நிலையை ஒன்றுபட்ட சமூக வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் நாம் காண முடியும்.
எனவே ஒன்றுபட்ட சமூக நிலையை நிலைநாட்டவே அவர்களிடையே ஓர் அதிகாரம் பெற்ற அமீர் தேவைப்படுகிறார். அதன் அதிகபட்ச உச்சகட்டமே ஆட்சி அதிகாரம் பெற்ற அமீர், மற்றபடி அமீர் என்றாலே ஆட்சி அதிகாரம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது தவறான கற்பனையாகும்.
அல்குர்ஆனை முறையாகச் சிந்தனையுடன் படித்து விளங்குகிறவர்கள் யாராக இருந்தாலும் அது சமூக ஒற்றுமைக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதையும், ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதையும் உணர முடியும். அந்த சமூக ஒற்றுமையைக் குலைக்கும் காரணிகளை எப்படி எல்லாம் களைந்து சமுதாய ஒற்றுமையை நிலைநாட்ட முடியும் என்பதையே இந்த 4:59 இறைவாக்கு தெளிவாக விளக்குகிறது. கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபடுவதற்கு மூன்று வழிகளை இந்த இறைக்கட்டளை கற்றுத் தருகிறது. கருத்து வேறுபாடு வந்து விட்டால் அந்த விஷயத்தில் அல்குர்ஆனின் கட்டளைக்கு அப்படியே கட்டுப்படுங்கள்.
சொந்த விளக்கம் வியாக்யானம் செய்து அல்குர்ஆனின் கட்டளையிலிருந்து நழுவிச் செல்லாதீர்கள். உதாரணமாக அல்குர்ஆன் 7:3,55,205, 18:102,106, 33:66,67,68, 3:103, 105, 6:153,159, 30:32, 42:13 இறைக்கட்ட ளைகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அவற்றிற்கு வேறு அபிப்பிராயம் கொள்ளாமல் அப்படியே ஏற்று கருத்து வேறுபாட்டைக் களைவது. இரண்டாவது நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளான ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களில் சொல்லப்படும் கட்டளைகளுக்கு வேறு அபிப்பிராயம் கொள்ளாமல் அப்படியே கட்டுப்பட்டு கருத்து வேறுபாடுகளைக் களைவது. மூன்றாவது குர்ஆன், ஹதீஃதுகளுக்கு முரணில்லாத உலகக் காரியங்களில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை அமீரின் உத்திரவுக்கு வேறு அபிப்பிராயம் கொள்ளாமல் அப்படியே கட்டுப்பட்டு கருத்து வேறுபாடு களைக் களைந்து ஒன்றுபட்டு, ஒரே சமுதாயம் என்று அல்லாஹ் கூறியிருப்பதை நிலைநாட்டுவதாகும்.
இது யாருக்குச் சாத்தியம்? அல்லாஹ் வையும், மறுமை நாளையும் உறுதியாக நம்பிச் செயல்படுகிறவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். அல்லாஹ் மீதும் மறுமை நாளின் மீதும் அரைகுறை நம்பிக்கை உடையவர்கள் இறைவனின் கட்டளைகளான குர்ஆன் வசனங்களுக்கும் சுயவிளக்கம் கொடுத்து இறைக்கட்டளையை நிராகரிப்பார்கள். ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களுக்கும் சுய விளக்கம் கொடுத்து நபியின் கட்டளைகளையும் நிராகரிப்பார்கள். அமீரின் கட்டளைகளுக்கும் நொண்டிச் சாக்குகள் சொல்லி நிராகரிப்பார்கள். இன்று இந்த நிலையை தர்கா, தரீக்கா, மத்ஹபு, தவ்ஹீது, இயக்க மவ்லவி புரோகிதர்களிடமும் அவர்களின் ஆதரவாளர்களிடமும் கண் கூடாகக் கண்டு வருகிறோம்.
அந்த வரிசையில்தான் “உலில் அம்ரி மின்கும்”, உங்களில் அதிகாரம் வகிப்பவர் என்பது 1200 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போன இமாம்களையே குறிக்கிறது என்று மத்ஹபு முகல்லிது மவ்லவி புரோகிதர்களும், ஆட்சி அதிகாரம் பெற்ற அமீரையே குறிக்கிறது என்று தவ்ஹீது இயக்க மவ்லவி புரோகிதரும் சுய விளக்கம் கொடுத்து இறைக்கட்டளையை நிராகரிக் கின்றனர். கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கு வழிகாட்டும் 4:59 இறைவாக்கையே கருத்து வேறுபாட்டிற்கு ஆளாக்கும் இவர்கள், மற்ற மற்ற குர்ஆன் கட்டளைகளுக்கும், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல்களுக்கும் எந்த அளவு சுய விளக்கம் கொடுத்து தாங்களும் வழிகெட்டு, மக்களையும் வழிகெடுப்பார்கள் என்பதை யாருமே எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.