இறை நம்பிக்கையாளர்களே… இஸ்லாத்திற்கு வாருங்கள்!

in 2022 பிப்ரவரி

இறை நம்பிக்கையாளர்களே… இஸ்லாத்திற்கு வாருங்கள்!

அப்தில்லாஹ் இப்னு அருணாசலம்

அட என்னப்பா நீ, வணங்கத் தகுதியான ஒரே இறைவனான அல்லாஹ்வை வணங்கக் கூடிய முஸ்லிம்களாகிய இறை நம்பிக்கையாளர்களையா இஸ்லாத்திற்கு அழைக்கிறாய், இஸ்லாம் என்றால் என்னவென்றே அறியாத மக்களை நோக்கி அழைத்தாலும் சரி எனலாம், முஸ்லிம்களாகிய எங்களைப் பார்த்தே…

என் சகோதர சகோதரிகளே! உங்கள் எண்ண ஓட்டத்தை ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு, ஏக இறைவனான அல்லாஹ் தன் இறை வேதமாக, மனிதகுல வழிகாட்டியாக, இறுதிநாள் வரை எந்த மொழிப் புலவனாலும் இயற்ற முடியாத இணையில்லா இலக்கிய நடையில் உங்களுக்காகவும், எனக்காகவும் அவனது இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினானே அதில் 3:102 வசனத்தை சற்று நிதானமாக வாசித்துப் பாருங்கள்.

என்ன வார்த்தையை ஏக இறைவன் பயன்படுத்துகிறான்? “யா அய்யுஹல்லதீன ஆமனூ” ஓ! இறை நம்பிக்கையாளர்களே! ஈமான் கொண்டவர்களே!

இதற்குப் பொருள் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, பிறகு அந்த வசன இறுதியில் எப்படி முடிக்கிறான்?

“வ லா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன்” மேலும் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்.

அல்லாஹ் தன் திருமறையிலே நம்பிக்கை கொண்ட ஆண்கள் பெண்களாகிய உங்களை என்னைப் போன்ற அனைத்து முஸ்லீம்களையும் அழைத்து அவனையே அஞ்சி, அவனுக்கே முற்றிலும் வழிப்பட்டவர்களாக அன்றி மரணித்துவிடாதீர்கள் என எச்சரிக்கிறான். நிச்சயமாக இதை நான் சொல்லவேயில்லை…

இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் எனும் பெயரில் இருந்து கொண்டு இஸ்லாத்தை தனது அற்ப உலக சுகங்களுக்காகவும், ஆதாயங்களுக்காகவும் கூறு போட்டு மக்களை பிளவுபடுத்தி, அவர்களது மனதில் பிறரைப் பற்றிய வெறுப்பை ஊட்டி, தாங்கள் தவ்ஹீத்வாதிகள், நீங்கள் ஃபித்னாவாதிகள் எனக் கூற வைத்த மார்க்க வியாபாரிகள்; மேலும் ஐந்து வருடமோ, ஏழு வருடமோ, 12 வருடமோ, படித்து ஆலிம் என்று பட்டம் வாங்கிவிட்டு, நாங்கள் உலமாக்கள் அறிவாளிகள், அரபி தெரிந்தவர்கள் என மக்களை தரம் பிரித்து அற்பக் காசுக்காக மார்க்கத்தில் இல்லாததை பிற மக்களின் கலாச்சாரத்திலிருந்து எடுத்து அதற்குப் புதியதாக உருதிலோ அல்லது அரபியிலோ பெயர் வைத்து அமல்கள் கொண்ட இஸ்லாமிய மார்க்கத்தை, சடங்குகள் கொண்ட சாக்கடையாக்கிய மெளலவிகளும்…

இவைகளுக்கு நடுவே, அதோ அவன் அழகாக பேசுகிறான், அவன் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என மார்க்கத்தை மனிதர்களிலிருந்து படிக்கும் பெரும்பான்மையான மக்களும்… மேலும் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு பிறவற்றை புறந்தள்ளும் மக்களும்…

இன்னும் பல கற்பனைகளைக் கைக் கொண்டு தன் வாழ்நாளைக் கழிக்கின்ற பெயர் தாங்கி (முஸ்லிம் பெயரிலே மட்டும்) மக்களும்… அவர்களோ எது தமது மார்க்கம், எது பிற மதக் கலாச்சாரம் என அறியாமல் பிறரைப் போல புத்தாண்டு, பிறந்தநாள் கொண்டாட்டம், வட்டி, மது, சூது என அனைத்துவித பாவங்களிலே உழன்று கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களும் சேர்ந்த ஒரு கூட்டத்தை நோக்கி மேலும் இறைவன் கூறுகிறான், “நிச்சயமாக உங்கள் “உம்மத்’ சமுதாயம். (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன், ஆகையால் என்னையே நீங்கள் வணங்குங்கள்”. (அல்குர்ஆன் 21:92)

ஒரே ஒரு சமுதாயமாக இருக்க வேண்டிய நாம் பிரிவுகளால், சூழ்ச்சிகளால், இயக்கங்களால், கழகங்களால் மேலும் பல்வேறு அமைப்புகளால் பிரிந்து போய் நிற்கிறோம். இதனால் தான் பெரும்பான்மையான ஒரு கூட்டத்தை சில குள்ளநரிகள் வேட்டையாடி விடுகின்றன. உதாரணமாக சில சம்பவங்களை நான் இங்கே பகிரவேண்டிய அவசியமேயில்லை, தினமும் பரவும் செய்திகளே போதும்,

நாம் ஒன்றுபடவே முடியாதா? தலைவர்களை விட்டுவிட்டு தொண்டர்கள் ஒன்றுகூட முடியுமா? மூளைச்சலவை செய்வதிலே வல்லவர்களான தலைவர்கள் விட்டு விடுவார்களா? அல்லது தங்களது சுகபோக வாழ்க்கையை விட்டுக் கொடுப்பார்களா? நிச்சயமாக மாட்டார்கள். அடிப்படையில் முதலில் நாம் பிரிந்து நிற்க என்ன காரணம் என்று ஆராய்வோம்? அதை எங்கேயும் தேட வேண்டாம்.

இதை சிந்திக்கமாட்டார்களா? உங்களது இதயம் பூட்டு போடப்பட்டு இருக்கிறதா? அறிவுடையவர்களுக்கு, சிந்திக்கக் கூடியவர்களுக்கு இதிலே நிறைய அத்தாட்சிகள் இருக்கிறது; இன்னும் பலவாறாக ஒரு பொருளை இறைவன் மீண்டும் மீண்டும் தனது இறுதி இறை வேதத்திலே கூறுகிறான். என்ன அது? அதேதான் அல்குர்ஆன். உறுதியாகப் பற்றிப் பிடித்தால் வழிதவறவே விடாத அற்புதக் கயிறு அல்குர்ஆன்! தாயத்துக் கயிறு இல்லை சகோதரர்களே! இதனை நாம் பற்றிப் பிடிக்காததால் பிரிந்து நிற்கிறோம்.

நபி(ஸல்) அவர்களது வாழ்வியல் நெறிகளை நாம் கற்காததால், அவர்களை விட்டு மார்க்கத்தை பேசுகிறோம் என்ற போர்வையில் வந்த பிரிவினைவாதிகளான தலைவர்களையே நாம் பின்பற்றிப் போகவேண்டிய சூழலிலே தள்ளப்பட்டோம். நமக்காக அனுப்பப்பட்ட உத்தமத் தூதரை புறந்தள்ளி அவரை அவமானம் செய்துவிட்டோம்.

நிச்சயமாக, அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல், எவனோ சொன்னதை எல் லாம் மார்க்கமாகக் கொண்டதால், அவரை அவமானப்படுத்திக் கொண்டும் இருக்கி றோம். எத்தனையோ உதாரணங்களைக் கூறலாம். வேண்டாம், பித்அத்களைப் பற்றி எழுதினால் கட்டுரை பெரிதாகிவிடும் என்பதால் இத்தோடு நிறுத்தி, அவைகளை உங்களது சுயசிந்தனைகளுக்கே விட்டு விடுகிறேன்.

மேலும் மக்கள் கலாச்சார மோகத்தில், இஸ்லாமிய ஆட்சி வேண்டாம், ஜனநாயகமே வேண்டும் என்று கூறக்கூடிய முஸ்லிம்களையும் பார்க்கிறோம். உதாரணமாக திருமண வரன் பார்க்கக்கூடிய விசயத்தை மட்டும் பார்ப்போம். காதல், காமம் என்று பெரும்பான்மையான இளைஞர்கள் இன்று வழி கெட்டு, தரம் தாழ்ந்து நிற்பது நமது சமூகத்தில்தான். இளைஞர்கள்தான் அப்படி யயன்றால், அவர்களது பெற்றோர்? தனது மகளுக்கு வரக்கூடிய ஆண், மார்க்கம், ஒழுக்கம் உள்ளவனா? என்று பார்க்கக் கட்டளையிட்டிருக்கும் மார்க்கம் இஸ்லாம். அதை விடுத்து பொருளாதாரம் உள்ளவனா? குடும்பப் பிண்ணனி என்ன? அழகாக இருக்கிறானா? என்று மட்டும்தான் பார்க்கிறார்கள். அதனாலே என்னவோ பெரும் பணக்கார முஸ்லிம் குடும்பத்திற்கு வாழ்க்கைப் பட்டுப்போகும் பெண்கள் அதிகமாக அடிமைகளாகவே வாழ வேண்டியிருக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் “மார்க்கத்திலும், ஒழுக்கத்திலும் சிறந்த ஆண் உங்களிடம் பெண் கேட்டு வந்தால், கொடுத்துவிடுங்கள், இல்லையேல் உலகத்தில் பெரும் குழப்பம் உண்டாகிவிடும்’ என்று எச்சரித்தார்கள். நிச்சயமாக இதனை அமல்படுத்தாத பெற்றோர்களுக்குத் தெரியும் அவை என்ன? என்று.

நிச்சயமாக நீங்கள் நடுநிலையோடு மட்டுமல்ல, இறையச்சத்தோடு குர்ஆனை வாசித்தால் அது உங்களை சுன்னாவின் பக்கம் இழுத்துச் செல்லும். தவ்ஹீத் மற்றும் சுன்னத் இரண்டும் சேர்ந்ததுதான் இஸ்லாம். குர்ஆன் மற்றும் ஹதீத் இரண்டும்தான் இஸ்லாமிய வழிகாட்டிகள், இக்காலத்தில் எழுதப்பட்ட எந்த நூலும், பேசுகின்ற எந்தத் தலைவனும் நமக்கு வழிகாட்டிகள் அல்ல.

உங்களுக்கு ஒரு பிரச்சனையோ, துன்பமோ, நோயோ ஏற்பட்டால் முதலில் இறைவனின் வேதத்தின் பக்கமும், தூதரின் வாழ்வியல் பக்கமும் செல்லுங்கள். தீர்வு நிச்சயம் கிடைத்துவிடும். பிறகு தேவையான மனிதர்களிடமோ, மருத்துவரிடமோ செல்லுங்கள்.

மார்க்க வழிகாட்டிகளாக தங்களை எண்ணிக் கொள்ளும் உலமாக்களே உங்களுக்கும், எங்களுக்கும் பொதுவாகத்தான் இறைவன் தந்தான் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை. ஞானத்தில் சிறந்தவர்களாக உங்களை நீங்களே எண்ணிக் கொள்ளும் முன் யாரிடம் இருந்து வந்தது இறை மார்க்கம் என்பதை எண்ணிப் பாருங்கள்.

எழுதப் படிக்கத் தெரியாத, நேர்மை யான, உண்மையாளரான முஹம்மத்(ஸல்) அவர்களிடமிருந்து. நபி(ஸல்) அவர்களை தூதராகவும் மார்க்க, உலக வழிகாட்டியாகப் பெற்ற நாம் அவரைவிடப் பணிந்து நடக்க வேண்டாமா? பெருமை இப்லீஸின் குணமல்லவா? நரகத்திற்கு நம்மை நடத்திக் கொண்டு போய்விடுமே? மார்க்கத்தின் ஞானத்தை காய்தல் உவத்தலின்றி உணர்ந்து எதையும் மறைக்காமல், மாற்றாமல் மக்களுக்கு உரைப்பது உங்களது கடமையல்லவா?

மனிதர்களிலே, அல்லாஹ்வை அஞ்சுகிற வர்கள்தான் உலமாக்கள் என்றுதானே அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதனையே பின்பற்றுங்கள். உண்மைகளை மக்களுக்கு போதி யுங்கள். குர்ஆனிய மற்றும் நபி(ஸல்) வாழ்க்கை வரலாறுகளை கற்றுத் தாருங்கள். வேறு எந்த மனிதரது வரலாறும் வேண்டாம். அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ்வுக்கே என்று வார்த்தையில் மட்டுமல்லாமல் வாழ்ந்து காட்டுங்கள்.

மார்க்கத்தை மனிதர்களிலிருந்து படிக்கும் முஸ்லிம் இளைஞர்களே! சகோதர சகோதரிகளே! ஒரு நாளில் குறைந்தளவேனும் நேரம் ஒதுக்கி மார்க்கத்தை நீங்களே நேரடியாகப் படியுங்கள். உண்மை உணர்த்தப்படும் உங்களுக்கு. இறைவன் புறத்திலிருந்து இன்ஷா அல்லாஹ்! பிறகு நீங்களே புரிந்து கொள்வீர்கள். உங்கள் வழிகாட்டி தலைவர்கள் பேசியது சரியா? உலக வழிகாட்டி இஸ்லாம் கூறியது சரியா? என்று.

அன்புள்ள சகோதர, சகோதரிகளான எனது இஸ்லாமிய உறவுகளே! உங்களைத் தான் இஸ்லாத்தின் பக்கம் அழைத்தேன். என்னையும், நான் சரியான நிலையில்தான் இருக்கிறேனா? என சீர்தூக்கிப் பார்க்கும் நிலையில் இருந்து கொண்டுதான் எழுதுகிறேன். எந்த ஒரு மனிதனும் முழுமையானவனல்ல, இந்த உலகமும் முழுமையடைந்தது. அல்ல, மறுமையே முழுமையானது, நிரந்தரமானது. இறைவன் மனிதர்களுக்கு கொடுத்து வழிகாட்டி அங்கீகரித்த “இஸ்லாம்’ எனும் மார்க்கத்தின் பாதையில், அவன் பெயரிட்ட முஸ்லிம்களாக மட்டுமே வாழ்ந்து இம்மை மற்றும் மறுமை வாழ்வில் வெற்றியடையும் நன்மக்களாக அந்த ஏக இறைவன் நம்மை ஆக்கி அருள்புரிவானாக.

Previous post:

Next post: