மிகக் கடுமையான எச்சரிக்கை!

in 2022 டிசம்பர்

மிகக் கடுமையான எச்சரிக்கை!

K.M.H. அபூ அப்தில்லாஹ்

ஆதிபிதா ஆதம்(அலை) அவர்களுக்கும், ஷைத்தானாகிய இப்லீஸுக்கும் ஏற்பட்ட மோதலில் ஷைத்தான் அல்லாஹ்வால் சபிக்கப்பட்டான்; நரகத்திற்குரியவனா வான். அதனால் அவன் ஆதத்தின் மீதும், ஆதத்தின் சந்ததிகள் மீதும் வற்றாத வன்நெஞ்சம் கொண்டான். ஆதத்தையும், ஆதத்தின் சந்த திகளையும் வழிகெடுத்து தன்னோடு நரகில் கொண்டு சேர்க்க சபதம் ஏற்று அல்லாஹ் விடம் உலகம் அழியும் வரை அவகாசம் கேட்டான். (பார்க்க 7:11-25) அல்லாஹ்வும் அவன் கேட்ட இறுதி நாள் வரை சாகா வரத்தை அளித்தான். (7:15) ஷைத்தான் அவனது சபதப்படி ஆதத்தின் சந்ததிகளில் மிகப் பெரும்பாலோரை வழிகெடுத்து தன்னுடன் நரகில் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறான். அல்லாஹ்வால் மக்களின் நேர் வழிக்காக அனுப்பப்பட்ட பல ஆயிரக் கணக்கான நபிமார்களில் ஒவ்வொரு நபி யும் இவ்வுலகில் தோன்றி கடும் எதிர்ப்பு களுக்கிடையே நேரான சத்திய வழியையே போதித்தார். அந்த நபி இவ்வுலகை விட்டு மறைந்த மிகக் குறுகிய காலத்திலேயே அந்த நபியை ஏற்று நேர்வழிக்கு வந்த மக்களில் மிகப் பெரும்பான்மையினரை ஷைத்தான் வழிகெடுத்து தனது ஆதரவாளர்களாக்கிக் கொள்வான். இதற்குத் தனக்குத் துணையாக மார்க்கத்தை மதமாக்கித் தங்களின் தொழிலாக்கிக் கொள்ளும் புரோகிதர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் ஷைத்தான். எல்லா நபிமார்களுடைய சமுதாயமும் இப்படித்தான் ஷைத்தானின் வலையில் சிக்கி நரகை அடைகின்றனர்.

நபி(ஸல்) அவர்களுக்கு சுமார் 600 வருடங்களுக்கு முன் தோன்றி மக்களிடையே சத்திய வழியை – நேர்வழியைப் போதித்த ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்ட பின் மிகமிக குறுகிய காலத் திலேயே அதாவது சுமார் 70 ஆண்டுகளுக் குள்ளேயே பவுல் என்பவன் ஈஸா(அலை) அவர்களின் ஏகத்துவ போதனையை திரித்து திரித்துவமாக்கி ஷைத்தானுக்குத் துணை போனான். இன்று கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களின் போதனைப்படிதான் நடப்பதாக தவறாக எண்ணிக்கொண்டு ஷைத்தானின் வழியில் செல்கின்றனர். உண்மையிலேயே அவர்கள் தங்களுக்கு ஈஸா(அலை) அவர்கள் மீது அளவு கடந்த பாசமும், பிரியமும் இருப்பதாக வாதிட்டாலும், அவர்கள் பின்பற்றுவதோ பவுலின் திரித்துவ வழியை, அதாவது ஷைத்தான் போதித்த நரகில் கொண்டு சேர்க்கும் கோணல் வழியை.

அதே வரிசையில் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயமாகிய இஸ்லா மிய சமுதாயமும் நபி(ஸல்) அவர்கள் போதித்த அசலான நேர்வழியை மிகக் குறுகிய காலத்திலேயே தொலைத்து விட்டு ஷைத்தானின் போதனையை ஏற்று பல கோணல் வழிகளில் சென்று கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர் ஷைத்தானின் தோழர் களாக இன்னும் சொல்லப்போனால் அவனின் ஏஜண்டுகளாகவே மாறி நரகிற்குச் செல்லும் வழிகளையே மக்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் வழிகேட்டை அல்குர்ஆன் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த வழிகேடுகள் இன்று எந்த அளவு முஸ்லிம்களை ஆட் கொண்டு அலைக்கழிக்கிறது என்றால் அவர் களில் சிலர் திருப்பதி, சபரிமலை, பழனி, வேளாங்கன்னி, சமயபுரம் போன்ற ஹிந்து, கிறிஸ்தவ கோவில்களுக்கும் செல்லத் துணிந்து விட்டார்கள். ஒரு சிலரின் நிலை இப்படி என்றால் முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினரின் நிலையோ ஏறக்குறைய அதை ஒற்றியே இருக்கிறது. அவர்கள் இறந்து போனவர்களை அல்லது சிலரை கற்பனை செய்து சிலைகளாக வடித்து நிற்க வைத்து மாலை மரியாதை, பால் அபிஷேகம், நெய் அபிஷேகம், தேர் என்று வணங்கி வழிபட்டால், முஸ்லிம்களாகிய இவர்களோ இறந்து போனவர்களை அல்லது சிலரை கற்பனை செய்து (தர்கா) சமாதிகளைக் கட்டி அவர்களைப் படுக்க வைத்து மாலை மரியாதை, சந்தன அபிஷேகம், சந்தனக்கூடு என்று வணங்கி வழிபட்டு வருகின்றனர். இவர்களின் வழிகேடுகள் குறித்து அல்குர்ஆன் 18:102-106 வசனங்கள் மிகத் தெளிவாக அடையாளம் காட்டுகின்றன. இவர்களோ காஃபிர்களின் அதே செயல்களைச் செய்துகொண்டு அந்த வசனங்கள் காஃபிர்களுக்கு இறங்கியது என்று அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள ஆலிம்கள் கூறுவதை ஏற்று அப்படியே அந்த வழிகேடுகளில் மூழ்கி இருக்கின்றனர். ஷைத்தானை தங்களின் தோழனாக்கிக் கொண்டுள்ளனர்.

“சமாதி வழிபாடு’ என்ற வழிகேடுகளை விட்டும் நாங்கள் தூய்மையாளர்கள் என்று பீற்றிக் கொள்ளும் முஸ்லிம்களில் அடுத்த பெரும்பான்மையினர், அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றுவதை விட்டு அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள ஆலிம்களின் போதனைப்படி முன்சென்ற இமாம்களின் பெயரால் கற்பனை செய்யப்பட்டுள்ள மத்ஹபுகளைப் பின்பற்றுகின்றனர். இந்த வழிகேட்டை 7:3, 33:36,66,67,68 போன்ற அல்குர்ஆன் வசனங்கள் மிகத் தெளிவாக அடையாளம் காட்டுகின்றன. இவர்களும் சமாதி வழிபாட்டினர் 18:102-106 வசனங்கள் எங்களுக்கல்ல, காஃபிர்களுக்கு இறங்கியது என்று கூறுவது போல், 7:3, 33:36,66,67,68 வசனங்கள் எங்களுக்கல்ல, காஃபிர்களுக்கு இறங்கியது என்று அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள ஆலிம்கள் கூறுவதை ஏற்று அப்படியே அந்த வழிகேடுகளில் மூழ்கி இருக்கின்றனர். இவர்களும் ஷைத்தானை தங்களின் தோழனாக்கிக் கொண்டுள்ளனர்.

அடுத்து அல்லாஹ் வேறு; அல்லாஹ்வின் படைப்பினங்கள் வேறு என்று குர்ஆன் வசனங்கள் தெள்ளத் தெளிவாக கூறிக் கொண்டிருக்க, மனிதனும் தெய்வமாக லாம் என்ற அத்துவைதத்தைப் போதிக்கும் தரீக்கா வழிபாட்டுக்காரர்கள் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள சூஃபிகளான ஷைகுகளை குருட்டுத்தனமாகப் பின்பற்றி வழி கேட்டில் செல்கின்றனர். இவர்களும் ஷைத் தானை தங்களின் தோழனாக ஆக்கிக் கொண்டனர். அடுத்து “சமாதி வழிபாடு’, “மத்ஹபு வழிபாடு’, “தரீக்கா வழிபாடு’ போன்ற வழிகேடுகளை விட்டும் நாங்கள் தூய்மையாளர்கள் என்று பீற்றிக் கொள் ளும் முஸ்லிம்களில் அடுத்த பெரும்பான்மையினர் இறந்து போனவர்களை தக்லீது செய்வதை விட்டுவிட்டாலும், அவர்களின் அபிமான மவ்லவிகளை தக்லீது செய்வதை விட்டுவிடவில்லை. 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14,21 போன்ற குர்ஆன் வசனங்கள் தெள்ளத் தெளிவாக மார்க்கத்தில் பிரிவுகள் இல்லை, தனித்தனி இயக்கங்கள் இல்லை, அமைப்புகள் இல்லை, குழுக்கள் இல்லை, ஒரே உம்மத்-ஒரே சமுதாயம் என்று கூறிக்கொண்டிருக்க அதற்கு மாறாக தங்களின் அபிமான மவ்லவிகளின் போதனையை ஏற்று தனித்தனி இயக்கங்களாக, அமைப்புகளாக, குழுக்களாகச் செயல்பட்டு வருகின்றனர். வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். ஷைத்தானுக்குத் துணை போகின்றனர். இவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மவ்லவிகள், எப்படி தர்கா வழிபாடு, மத்ஹபு வழிபாடு ஆலிம்கள் 18:102-106, 7:3,33:36,66,67,68 குர்ஆன் வச னங்களுக்கு சொந்த விளக்கங்கள் கொடுப்பதை ஏற்றுள்ளனரோ, அவர்கள் மீதுள்ள முரட்டு நம்பிக்கையால் அப்படிப்பட்ட தவறான விளக்கங்களை ஏற்றுக் கொள்கின்றனரோ அதேபோல் இந்த மவ்லவிகள் மீது குருட்டு நம்பிக்கை வைத்துள்ள முஸ்லிம்கள், அவர்கள் அந்த 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14,21 ஆகிய தெள்ளத் தெளிவான குர்ஆன் வசனங்களைத் திரித்து தங்களின் சொந்த விளக்கங்களைக் கொடுப் பதை அப்படியே கண்மூடி ஏற்று அவர்கள் பின்னால் செல்கின்றனர்.

ஆக இப்படி முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர் அவர்கள் அபிமானம் வைத்துள்ள இறந்து போன, உயி ரோடுள்ள ஆலிம்கள் மீது அபார நம்பிக்கை -குருட்டு நம்பிக்கை வைத்து ஷைத்தானின் ஆசை வார்த்தைகளில் சிக்கி தர்கா, தரீக்கா, மத்ஹபு, இயக்கம், அமைப்பு, குழு என பல் வேறு பிரிவினர்களாகப் பிரிந்து ஒன்றுபட்ட ஒரே சமுதாயம், நடுநிலைச் சமுதாயம் என அல்குர்ஆன் கூறுவதற்கு மாறாகச் செயல்பட்டு சீரழிந்து சின்னப்பின்னப்பட்டு வருவதோடு நாளை மறுமையிலும் பெரும் நஷ்டத்திற்கு உரியவர்களாக ஆகிவிடுவர், நரகத்திற்கு உரியவர்களாகி விடுவர் என அல்குர்ஆன் மிகக் கடுமையாக எச்சரித்து வருகிறது. இந்த அல்குர்ஆனின் எச்சரிக்கைகளையே நாங்கள் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம். குர்ஆன் கூறும் இந்த கடும் எச்சரிக்கைகளை நாங்கள் எடுத்துச் சொல்லாவிட்டால் உண்மையிலே பிரசார பணி செய்தவர்கள் ஆகமாட்டோம்.

மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நேரிடுமோ; மககள் கடுமையான துன்பங்களைத் தருவார்களே, மக்களின் ஆதரவு இல்லாமல் போய்விடுமே, நாம் தனிப்படுத்தப்பட்டு விடவோமே போன்ற அச்சத்தை ஷைத்தான் நமது மனதில் தோன்றச் செய்து, இந்த உண்மைகளை துணிந்து சொல்ல விடாமல் தடுக்கிறான். நபிமார்களையே இப்படிப் பயமுறுத்தி பின்வாங்கச் செய்யத் துணிந்தான் என்றால் நாம் எல்லாம் எம்மாத் திரம்? ஆனால் ஷைத்தானின் இந்த அச்சுறுத்தலுக்குப் பயந்து நாம் மக்கள் மன் றத்தில் இந்த உண்மைகளை சொல்லாமல் மறைத்தால் நாம் உண்மையிலேயே மார்க் கப் பிரசாரம் செய்தவர்கள் ஆகமாட்டோம்.

இதோ அல்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது பாருங்கள்: “தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்’.  அல்குர்ஆன் 5:67   (மேலும் பார்க்க : 11:12, 17:73,74,75, 69:44,45,46,47)

இவை இறுதி நபிக்குரிய எச்சரிக்கை மட்டுமல்ல; அந்த இறுதி நபிக்குப் பின் பிரசார பொறுப்பு கடமையாக்கப்பட்ட முஸ் லிம்களுக்கும் இது எச்சரிக்கைதான். எனவே மக்களின் மிகப் பெரும்பான்மையினர் ஏற் றுக் கொள்ளமாட்டார்கள்; அவர்களின் உள்ளம் புண்படும்; அவர்கள் நம்மை வெறுப்பார்கள்; அவர்களிடம் மார்க்க பிரசாரம் செய்ய முடியாது; நமது மற்ற எல்லா நல்ல உபதேசங்களையும் நிராகரித்து விடு வார்கள் என்று இவர்களாக கற்பனை செய்து கொண்டு அல்லாஹ் குர்ஆனில் கூறியருப்பதில் சிலதை விட்டு சிலதை மட்டும் பிரசாரம் செய்பவர்கள் உண்மையில் பிரசாரம் செய்தவர்கள் ஆகமாட்டார்கள்.

மறுமையில் வெற்றியும் கிடைக்காது. அவர்களும் வழிதவறியவர்களே! மக்களைப் பற்றிய ஒரு பயம் அவர்களின் உள்ளத்தில் இருப்பதால்தான் குர்ஆன் கூறுவதில் சிலதை மறைக்க முற்படுகிறார்கள். அதாவது அல்லாஹ்வை விட மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துக் செயல்படுகின்றனர். மக்களிடையே பெருத்த எதிர்பார்ப்புக்கு இடையே செயல்படுகின்றனர். இவ்வுலகில் எவற்றையோ எதிர்பார்த்துச் செயல்படுகின்றனர். மற்றபடி இஃலாசுடன் அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறவர்கள் அல்குர்ஆனில் அல்லாஹ் கூறியிருப்பதை அப்படியே எடுத்துக் கூறுவதற்கு எவ்வித தயக்க மும் காட்டமாட்டார்கள். அல்லாஹ்வின் சொல்லுக்குச் சுய விளக்கம் கொடுத்து அதைப் புறக்கணிக்க முற்படமாட்டார்கள்.

அல்லாஹ் நேரடியாகச் சொல்லியிருக்கும் மிகத் தெளிவான கட்டளைகளுக்கு மாறாக இவர்கள் சுயவிளக்கம் கொடுக்க முற்படுவது மாபெரும் குற்றமாகும். “நிச்சய மாக அல்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கி இருக்கிறோம்; எனவே (விளங்கி) நல் லுணர்வு பெறுவோர் உண்டா? (54:17,22, 32,40) என்று அல்லாஹ் நான்கு இடங்களில் திரும்பத் திரும்ப கேட்பதற்கு முரணாக இவர்கள் சுயவிளக்கம் கொடுத்து வழி கெடுக்கின்றனர். உதாரணமாக 30:32ல் “”எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ, (அவர்களில் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்” என்று அல்லாஹ் கூறுகிறான்.

இதை ஓதி படித்து உணரும் ஒரு சாதா ரண அறிவு படைத்தவனும், மார்க்கத்தில் எந்தப் பிரிவுக்கும், இயக்கத்திற்கும், குழுவுக் கும் அனுமதி இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும். அமைப்பு களை ஆதரிக்கும் மவ்லவிகள் கொள்கை அடிப்படையிலான பிரிவுகள்தான் கூடாது; அடையாளம் தெரிந்து கொள்ள வைக்கப்படும் பெயர் அடிப்படையான பிரிவுகள் கூடும் என்று சுயவிளக்கம் கொடுப்பது இந்த 30:32ல் இல்லை என்பது பாமரனுக்கும் விளங்கும். அது மட்டுமல்ல; இவர்கள் தங்களின் கூட்டங்களில் தங்களின் இயக்கப் பெயரை பலமுறை பல வழிகளில் மாறி மாறி கூறிப் பெருமைப்படுவது கொண்டே இவர்களும் அல்லாஹ் 30:32ல் கண்டித்துக் கூறும் பிரிவினைவாதிகளே என்பதும் சாதாரண மக்களுக்கும் குன்றிலிட்ட தீபம் போல் புரியும். மார்க்க சேவையில்-பிரசார பணியில் தங்களைத் தனித்து அடையாளப் படுத்திக் கொள்ளும் ஆர்வமே இவர்களின் இஃலாசற்ற போக்கை உணர்த்தும். காரணம் யார் உண்மையான முஸ்லிம்; யார் போலியான முஸ்லிம் என்பதை இவர்களை விட அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான்.

எனவே அல்லாஹ்வுக்கு இவர்கள் தங் களைத் தனிமைப்படுத்திக் காட்டும் அவசியம் இல்லை. மக்களுக்காக தங்களைத் தனிப் பெயர்களில் அடையாளம் காட்டுகிறார்கள் என்றால் அவர்கள் மக்களிடம் எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது. இது மக்களிடம் புகழ் பெறுவதற்காக தங்களைத் தனிமைப்படுத்திக் காட்டுவதாகவே இருக்க முடியும். மேலும் இது 41:33 குர்ஆன் கட்டளைக்கும் முரணாகும். ஆனாலும் ஷைத்தானின் ஆசை வார்த்தைகளில் மயங்கி இந்த மவ்லவிகளும் அவர்களைப் பின்பற்று வோரும் வழிகேட்டில் செல்கின்றனர். ஆதம்(அலை) அவர்களை ஷைத்தான் மயக் கியது போல் இவர்களையும் ஷைத்தான் மயக்கியுள்ளான். அது வருமாறு :

“ஆதமே! நீரும் உம் மனைவியும் இச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாகப் புசியுங்கள்; ஆனால் நீங்களிருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்’ என்று சொன்னோம் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன் 2:35

பாருங்கள்: இந்த 2:35 வசனத்தில் அல் லாஹ்வின் கட்டளை எவ்வளவு தெளிவாகவும் நேரடியாகவும் இருக்கிறது. அக்கட்டளையை மீறினால் அது அவர்களை அக்கிரமக்காரர்களாக்கும் என்று மிகவும் கடிந்து கூறியுள்ளான். ஆனால் அவர்களை அல்லாஹ்வின் இக்கட்டளையைப் புறக்கணித்து அம்மரத்தை நெருங்கச் செய்தது எது? ஷைத்தானின் ஆசை வார்த்தையில் மயங்கியே அல்லாஹ்வின் இக்கட்டளை யைப் புறக்கணித்தனர். இதோ பாருங்கள்.

“எனினும் அவ்விருவருக்கும் மறைந் திருந்த அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தன் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான். (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாகி விடுவீர்கள். (இச்சுவனபதியில்) என்றென்றும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காக வேயன்றி, (வேறெதற்கும்) இந்த மரத்தை விட்டும் உங்களை இறைவன் தடுக்கவில்லை’ என்று ஆசை வார்த்தை காட்டினான். அல்குர்ஆன் 7:20

ஷைத்தானின் ஆசை வார்த்தையில் மயங்கியே அவ்விருவரும் அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்தார்கள். ஆயினும் தங்கள் தவறை உணர்ந்து தெளபா செய்ததால் மன்னிக்கப்பட்டார்கள்.

இதுபோலவே இந்த இயக்கவாதிகளை ஷைத்தான் “நீங்கள் இப்படி இயக்கமாக அமைத்துக் கொண்டு செயல்பட்டால்தான் பிரசார பணியை எளிதாகச் செய்ய முடியும். கூட்டங்கள் நடத்த, பிரசாரம் செய்ய அரசு எவ்வித தடையும் விதிக்காது. நீங்கள் வாங்கும் சொத்துக்களை மற்றவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள இப்படி இயக்கம் அமைத்துப் பதிவு செய்தால்தான் சாத்தியப்படும். இதன் மூலமாகத்தான் வாலிப உள்ளங்களை உங்களால் ஈர்க்க முடியும். பிரசார பணியை வேகமாகவும் பரவலாகவும், ஆர்வமாகவும் செய்ய முடியும் என்றும் இன்னும் பலவாறாக ஆசை வார்த்தை காட்டுகிறான். இவர்களின் உள்ளங்களில் வீணான எண்ணங்களை ஊசலாடச் செய்கிறான்.

ஆக ஷைத்தானின் இந்த ஆசை வார்த் தைகளில் மயங்கியே இயக்க மவ்லவிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14,21 போன்ற அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளைப் புறக் கணித்து இயக்கங்களாகச் செயல்படுகின்றனர். இவர்கள் ஆதம்(அலை) அவர்களைப் போல் தங்களின் தவறை உணர்ந்து தெளபா செய்தால் தப்பினார்கள். அல்லாஹ் மன்னிப்பவனாக இருக்கிறான். மீண்டும், மீண்டும் ஷைத்தான் காட்டிய வழியிலேயே அவர்கள் முன்னேறினால் அது அவர்களை வழிகேட்டிலாக்கி நரகத்தில்தான் கொண்டு சேர்க்கும். ஷைத்தானின் சபதத்தை நிறைவேற்ற அவர்கள் துணை போனதாகத்தான் ஆகும்.

ஆதம்(அலை) அவர்களை ஏமாற்றியது போல் இவர்களையும் ஏமாற்றவே ஷைத் தான் இப்படிப்பட்ட பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறானே அல்லாமல் இயக்கங் களை நியாயப்படுத்தி இவர்கள் கூறும் எந்தக் காரணமும் அல்லாஹ்விடம் எடுபடாது. இதோ அல்குர்ஆன் 4:120 கூறுகிறது பாருங்கள்;

“ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங் களையும் உண்டாக்குகிறான். மேலும் ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) வாக்களிப்பதில்லை’. அல்குர்ஆன் 4:120

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் ஷைத்தானின் ஆசை வார்த்தையில் மயங்கி அல்லாஹ்வின் தெளிவான நேரடிக் கட்டளைகளைப் புறக்கணித்து பல இயக்கங்களில் செயல்பட்டு வழிகேட்டிலாகி நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பவர்கள், மத்ஹபுவாதிகள், தரீக்காவாதிகள், தர்காவாதிகள் போன்றோருக்கு குஃப்ர் ஃபத்வா கொடுத்து காஃபிராக்கி அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்ற சட்டம் சொல்வதுதான்.

இதில் இன்னும் பெரிய வேடிக்கை என்னவென்றால் நாம் 18:102106, 33:36,66, 67,68, 7:3 போன்ற வசனங்களை ஆதாரமாகக் காட்டி தர்கா, தரீக்கா, மத்ஹபு செயல்பாடுகள் வழிகேடு, நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று அல்லாஹ்வின் எச்சரிக்கையை மறைக்காமல் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதைக் காட்டி நாமும் அவர்களை காஃபிர் என்று சொல்லுகிறோம் என்று கூறி தங்களின் குஃப்ர் பத்வாவையும் அவர்கள் பின்னால் தொழக் கூடாது என்று சட்டம் சொல்வதையும் நியாயப்படுத்துவதுதான். இது நம்மீது அவர்கள் கூறும் வீண் பழியாகும். அறிவில் குறைந்தவர்களை வழிகேட்டில் இட்டுச் செல்லச் செய்யும் இழிவான தந்திரமாகும்.

தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் தனது இறுதி வேதத்தில் எவை எல்லாம் வழிகேடு; நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று எச்சரித்துள்ளானோ, முஸ்லிம்கள் ஷைத்தானின் தூண்டுதலினால் அவனது வசீகர மாயாஜால ஆசை வார்த்தைகளில் மயங்கி அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளைப் புறக்கணித்து தர்கா, தரீக்கா, மத்ஹபு மாயைகளில் சிக்கி சீரழிந்து வழிகெட்டு நரகத்திற்கு உரியவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தங்களின் தவறுகளை உணர்ந்து ஆதம்(அலை) அவர்கள் தெளபா செய்து மீண்டது போல், தெளபா செய்து மீள வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து அல்குர்ஆனின் வசனங்கள் கூறும் எச்சரிக்கைகளை எடுத்து வைக்கிறோமே அல்லாமல், அவர்களை இவ்வுலகில் காஃபிர் என்று சொல்லவோ, அவர்கள் பின்னால் தொழக்கூடாது; அப்படித் தொழுதால் அத்தொழுகை நிறைவேறாது என்று கூறி சிந்திக் கத் துணியாத மக்களை ஏமாற்றி எங்களின் பிடிக்குள் வைத்துக் கொள்ளவோ ஒருபோதும் துணிந்ததில்லை. இனிமேலும் அந்த துணிச்சல் எங்களுக்கு ஏற்படாது. அல்குர்ஆனில் எவை எல்லாம் வழிகேடு; எவை எல்லாம் நரகில் கொண்டு சேர்க்கும் என்று கூறும் வசனங்களை எடுத்து எழுதி எச்சரிப்பது ஒருபோதும் அவர்களை இவ்வுலகில் காஃபிராக்குவதும்; அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்று கூறுவதும் ஆகாது.

இது இயக்கவாதிகளின் வெறும் கற்பனையே. மாறாக அவர்கள் மரணிப்பதற்கு முன் தங்கள் தவறை உணர்ந்து தெளபா செய்து மீள வழிவகுப்பதாகும். மற்றபடி இவ்வுலகில் முஸ்லிம்களில் எப்பிரிவாரையும் “காஃபிர்’ என்று சொல்வதோ “காஃபிர் ஃபத்வா’ கொடுப்பதோ, அவர்கள் பின்னால் தொழக் கூடாது; அத்தொழுகை நிறை வேறாது என்று ஃபத்வா கொடுப்பதோ அல் லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் மிகப் பெரும் குற்றமாகும். 42:21 குர்ஆன் வசனப்படி இணை வைக்கும் பெரும் குற்றமாகும். “தக்லீது’ மனப்பான்மை உடையவர்களே. தக்லீதை ஆதரிப்பவர்களே “குஃபர்’ ஃபத்வாவையும், முஸ்லம்களில் சில பிரிவார் பின்னால் தொழக்கூடாது என்ற ஃபத்வாவை யும் நியாயப்படுத்த முடியும். நேர்வழி நடப்பவர்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் இந்த அதிகாரத்தில் தலையிட்டு வழிகேட்டில் செல்லமாட்டார்கள்.

அதிகாரம் பெற்ற அல்லாஹ்வே தனது அந்தத் தீர்ப்பை நாளை மறுமைக்கு என்று தள்ளி வைத்துள்ளான். நாளை மறுமையில் தான் “குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல் லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்’ (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்) (36:59) என்று தெளிவாக குர்ஆன் கூறுகிறது. மனிதர்கள் செய்யும் குற்றங்களுக்காக உடனுக்குடன் தீர்ப்பு அளிப்பதாக இருந்தால் இவ் வுலகில் ஒருவர் கூட தப்பமுடியாது என்றும் அல்லாஹ் கூறுகிறான். இவ்வுலக வாழ்க்கை பல சுற்றுக்களைக் கொண்ட ஒரு தொடர் ஓட்டம் போன்றதாகும். அதன் ஆரம்ப சுற் றுக்களில் முன்னால் ஓடுபவர்கள் இறுதி வரை முன்னால் ஓடுவார்கள் என்றும் சொல்ல முடியாது. கடைசியில் ஓடிக்கொண்டிருப்பவர்கள் இறுதிவரை கடைசி யில்தான் இருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது; ஆரம்பத்தில் நேர்வழி நடந்தவர்கள் மரணிக்கும்போது கோணல் வழி செல்லும் வாய்ப்பும் இருக்கிறது. ஆரம்பத்தில் கோணல் வழி சென்றவர்கள் மரணிக்கும் போது நேர்வழி செல்லும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே இவ்வுலகில் மற்றவர்களுக்கு “குஃப்ர் ஃபத்வா’ கொடுப்பது தமக்குத் தாமே “குஃப்ர் ஃபத்வா’ கொடுப்பதாகும். பார்க்க : 42:21

இப்போது பாருங்கள்: தெளஹீத்வாதி கள் என்றும், ப்யூர்(Pற்re) முஸ்லிம்கள் என் றும் (அதனால் தான் தங்களை குர்ஆன், ஹதீத்படி நடப்பவர்கள் என்று அடையா ளம் காட்டுகின்றனர்) பீற்றிக் கொள்ளும் இவர்கள் மற்ற முஸ்லிம்களுக்கு “குஃப்ர் ஃபத்வா’ கொடுத்து அவர்கள் பின்னால் தொழக் கூடாது என்று சட்டம் சொல்லு கின்றனர். அவர்கள் மற்ற முஸ்லிம்களுக்கு காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுத்து அவர் கள் பின்னால் தொழுவதைத் தடுப்பதற்கு என்ன என்ன காரணங்களை-ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனரோ, அத்தனை காரணங்களும் -ஆதாரங்களும் அவர்களுக்கும் பொருந்தும்; அப்படியானால் அதன் பொருள் என்ன? தங்களைப் பின்பற்றியும் யாரும் தொழக்கூடாது என்று அவர்களே தங்களுக்கு விரோதமான ஃபத்வா அளித்த தாகத்தான் பொருள்படும்.

அவர்களும் அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளான 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14,21 குர்ஆன் வசனங்களுக்கு சுயவிளக்கம் கொடுத்து அந்த வசனங்களைப் புறக்கணிப்பவர்களாகவே இருக்கின்றனர். தர்கா,தரீக்கா, மத்ஹபுவாதிகள் 18:102-106. 7:3, 33:36,66,67,68 ஆகிய வசனங்களுக்கு சுயவிளக்கம் கொடுத்து எப்படி அவற்றைப் புறக்கணிக்கிறார்களோ, அதே போல்தான் இவர்களும் 3:103,105, 6:153, 159, 30:32, 42:13, 14,21 ஆகிய வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுத்து அவற்றைப் புறக்கணிக்கின்றனர். பின்னர் எப்படி அவர்களுக்கு “காஃபிர் ஃபத்வா’ கொடுக்கும் துணிச்சல் இவர்களுக்கு வந்தது? 42:21 குர்ஆன் கட்டளைப்படி தெளஹீத்வாதிகள், மத் ஹபுவாதிகளை விட அல்லாஹ்வை விட்டும் மிகத் தூரத்தில் அதாவது வழிகேட்டில் இருக்கிறார்கள் என்றே சொல்லமுடியும். காரணம் அவர்கள் அல்லாஹ்வுக்குச் சொந் தமான தனி அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மற்ற முஸ்லிம்களுக்கு “காஃபிர் ஃபத்வாவும்’ அவர்களுக்குப் பின்னால் தொழக் கூடாது என்ற ஃபத்வாவும் கொடுக்கின்றனர். இது அவர்களின் ஆணவத்தையே காட்டுகிறது. அணுவத்தனை பெருமை உடையவனும் சுவர்க்கம் புகமாட்டான் என்பது நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையாகும். செருப்பு அழகாக இருக்கவேண்டும், சட்டை அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புவது பெருமை அல்ல; சத்தியத்தை மறுப்பதும், மற்றவர்களை இழிவாகக் கருதுவதுமே பெருமையாகும் என்றும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். மற்ற முஸ்லிம்களை கேவலமாக, இழிவாகக் கருதியே அவர்களுக்கு “குஃப்ர் ஃபத்வா’ கொடுக்கின்றனர்; அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்றும் ஃபத்வா கொடுக் கின்றனர். பின்னர் எப்படி இவர்கள் சுவர்க்கம் புக முடியும்?

18:102-106, 7:3, 33:36,66,67,68 ஆகிய வசனங்களில் “(அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்மு டைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருக் கும்’ என்ற கடுமையான அல்லாஹ்வின் எச்சரிக்கை இல்லையா? ஆனால் தெளஹீத் வாதிகள் புறக்கணிக்கும் 42:14,21 இறைக் கட்டளைகளில் இந்தக் கடுமையான எச்சரிக்கை காணப்படுகிறது. இவ்வுல கிலேயே “குஃப்ர் ஃபத்வா’ பெறும் தகுதி யுடையவர்களே மற்றவர்களுக்கு “குஃப்ர் ஃபத்வா’ கொடுப்பது எவ்வளவு கொடூரமானது என்பதைச் சிந்திப்பார்களாக. இவர்களின் இந்த மிகக் கொடூரமான செயலை நாங்களும் சரி காண்கிறோம் என்று எப்படி மக்களை ஏமாற்ற முடியும்?

எனவே மிகக் கடுமையாக எச்சரிக்கி றோம்! தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் எந்த முஸ்லிமையும் நாங்கள் காஃபிர் என்று சொல்லவோ, “குஃப்ர் ஃபத்வா’ கொடுக்கவோ, அவர் பின்னால் தொழக்கூடாது; அந்தத் தொழுகை நிறை வேறாது என்று ஃபத்வா கொடுக்கவோ ஒரு போதும் நாங்கள் முற்பட்டதில்லை; இதற்கு மேலும் அந்தத் துணிச்சல் எங்களுக்கு ஒருபோதும் ஏற்படாது. காரணம் அது அல்லாஹ்வுக்குச் சொந்தமான தனி அதிகாரம் ஆகும். ஆனால் எந்தெந்த செயல்கள் வழிகேட்டை உண்டாக்கும். குஃப்ரை உண்டாக்கும், நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று அல்குர்ஆன் மிகக் கடுமையாக எச்சரிக்கிறதோ அவற்றை மிகத் தெளிவாக அப்பட்டமாக எவ்வித ஒளிவு மறைவுமின்றி மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பது அல்லாஹ் முஸ்லிம்கள்மீது விதித்துள்ள கடமையாகும். அதுவே முழுமையான பிரசார பணியாகும். நரகிற்குச் செல்லும் மக்களை அதை விட்டும் மீட்டு சுவர்க்கத்தில் கொண்டு சேர்க்க செய்யப்படும் முயற்சியே முழுமையான பிரசார பணியாகும். எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அந்த பிரசார பணியையே மக்களில் யாருக்கும் அஞ்சாமல் செய்து வருகிறோம். அல்லாஹ் 5:67ல் வாக்களித்துள்ளது போல் மனிதர்களின் தீங்குகளிலிருந்து எங்களைக் காப்பாற்ற அவன் மட்டுமே போதுமானவன். அவன் மீது மட்டுமே பரிபூரண நம்பிக்கை வைத்து அவனிடமே உதவி தேடுகிறோம்.

Previous post:

Next post: