ஆதாரப்பூர்வமான ஹதீத்களை நிராகரிப்பது குர்ஆனையே நிராகரிப்பதாகும்!
அபூ அப்தில்லாஹ்
மறுபதிப்பு :
2024 டிசம்பர் மாத தொடர்ச்சி….
குர்ஆனில், குர்ஆன், ஹதீத் ஆதாரம் இல்லாமல் சுய கருத்துக்களைப் நுழைத்து விவாதம் செய்வோர் குர்ஆனையும் நிராகரிக்கிறார்கள். ஹதீத்களையும் நிராகரிக்கிறார்கள். மாபெரும் வழிகேட்டில் இருக்கிறார்கள்; நரகை நோக்கி நடைபோடுகிறார்கள். ஒரு வகையில் கொடிய ´ர்க்கான கபுரு வழிபாடுகளைச் செய்வோரை விட வழிகேட்டில் ஒருபடி மேலே போய்விட்டனர். 42:21 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ் விதிக்காத சட்டங்களை விதிக்கிறார்கள். 49:16 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக்கொடுக்க முற்படுகிறார்கள். (நவூதுப்பில்லாஹ்)
இவருக்கு இந்த குர்ஆன் ஒரே தொகுப்பாக (முழுமையாக) ஏன் இறக்கப்படவில்லை? என்று நிராகரிப்போர் கேட்கவும் செய்தனர். அப்படித்தான் இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இன்னும் இதனைப் படிப்படியாக நாம் படித்துக் காண்பித்தோம். (25:32) என்றும் மேலும், 76:23ல், “நிச்சயமாக நாம் தான் உம்மீது இந்த குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம்‘ (76:23) என்றும் அல்லாஹ் கூறி இருப்பது எதனை உறுதிப்படுத்துகிறது. 17:85 இறை வாக்குக் கூறுவதுபோல் அற்ப அறிவு படைத்த மனித குலம் சுயமாக விளங்க முடியாது. அதை விளக்க ஓர் இறைத்தூதர் அவசியம் தேவை. இறைத்தூதரின் விளக்கமான ஆதாரபூர்வமான ஹதீஃத்களை ஒருபோதும் நிராகரிக்கக் கூடாது. அது கொடிய குற்றம். பெருத்த வழிகேடு, நரகில் சேர்க்கும் என்பது புரியவில்லையா?
இவனைப் போன்ற அற்ப அறிவுடைய ஒரு மனிதன் கண்டுபிடித்த ஒரு புதிய கருவி. அதை எப்படி இயக்குவது என்பதை விளக்க ஒரு சிற்றேடு கொடுப்பான். அதைப் படித்து மட்டும் அக்கருவியை இயக்குவது கடினம். எனவே அதைச் செயல் முறையில் இயக்கிக் காட்ட அத்துடன் அக்கருவியை இயக்கி அனுபவப்பட்ட ஒரு பேரறிஞரையும் கூடவே அனுப்பி வைப்பதைப் பார்க்கத் தானேசெய்கிறோம். அப்படிப்பட்ட சிற்றறிவு தான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. (பார்க்க: 17:85) இந்த நிலையில் இறைவனால் இறக்கியருளப்பட்ட வாழ்க்கை வழிகாட்டி நூல் குர்ஆனை அதனை வஹீ மூலம் பெற்றுப் படித்து, அல்லாஹ்வின் வழிகாட்டல்படி செயல்படுத்திக் காட்டிய நடைமுறை (நபியின் சுன்னத்) எங்களுக்குத் தேவை இல்லை. நாங்கள் சுயமாக நேரடியாக குர்ஆனை விளங்கிச் செயல்படுவோம் என்று ஆணவம் பேசும் ஹதீஃத்களை நிராகரிப்போர் எந்தளவு பெரிய வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பது புரியவில்லையா?
நாம் 6வது படிக்கும்போது கடிகாரங்களைச் சுயமாகப் பழுது பார்க்கும் ஆற்றலை அல்லாஹ் நமக்குத் தந்தான். அதன் பின்னர் பல் தொழில் கலைஞராகும் ஆற்றலையும் தந்தான். இத்தனைக்கும் எந்த குருவிடமிருந்தும் நாம் இவற்றைக் கற்றுக்கொள்ளவில்லை. அதிகபட்சம் அவை பற்றிய நூல்களை மட்டுமே படித்து விளங்கினோம். அல்லாஹ் தந்த அந்த ஆற்றல்களே எமது உலக வாழ்வை வளப்படுத்த வழிவகுத்துத் தந்தது. அப்படிப்பட்ட ஆற்றல் பெற்ற நாமே குர்ஆனை விளங்க நபியின் நடைமுறை விளக்கம் தேவை என்கிறோம். இவர்களின் நிலை என்ன?
ஆம்! அவர்கள் நாம் மேலே எடுத்தெழுதியுள்ள நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களை நிராகரிக்கிறார்கள். இப்லீஸ் ஆதத்துக்கு சுஜூது செய் என்ற ஒரே ஒரு கட்டளையைத்தான் நிராகரித்தான். இப்லீஸ் என்ற பெயரில் இருந்த அவன் தனது செயலுக்கு அழகான சுய விளக்கத்தையே தந்தான். ஆதத்திற்கு முன்னரே நெருப்பிலிருந்து படைக்கப்பட்டவன். மலக்குகளோடு சமஅந்தஸ்தில் இருந்தான். இறைக்கட்டளை மலக்குகளுக்குத்தான் மலக்குகளோடு இருந்ததால்தான் அக்கட்டளை அவனையும் கட்டுப்படுத்தியது. படைப்பின் அடிப்படையிலும், அந்தஸ்தின் அடிப்படையிலும் அவன் உயர்வானவன் தான். ஆயினும் அல்லாஹ்வின் ஒரே ஒரு கட்டளையை நிராகரித்தான் என்ற ஒரே ஒரு காரணத்திற்கு மட்டுமே இப்லீஸ் காஃபிரானான். விரட்டப்பட்டு ஷைத்தானானான். நிரந்தர நரகிற்கு உரியவனானான். அந்த ஆத்திரத்தின் காரணமாகவே ஆதத்தின் சந்ததிகளில் மிகப் பெரும்பாலானோரை அதாவது ஒவ்வொரு ஆயிரத்திலும் 999 பேரை நரகத்திற்கு இட்டுச் செல்கிறான். (பார்க்க: 32:13,11:118,119, புகாரி: 3348, 4741)
இந்த நிலையில் ஹதீத்களை நிராகரிப்போர் இறைவனின் நூற்றுக்கணக்கான கட்டளைகளை நிராகரித்து குர்ஆன் வசனங்களுக்குச் சுயவிளக்கம் கொடுத்து ஹதீத்களை நிராகரிப்பது எப்படிப்பட்ட பெருத்த வழிகேடு என்பதை அவர்கள் உணரமாட்டார்கள். என்ன காரணம்?
என்றைக்கு கபுரு,-சமாதி வழிபாடு முஸ்லிம் சமுதாயத்தில் கொடிய ஹராமான வழியில் வயிறு வளர்க்கும் ஆலிம் வர்க்கத்தினரால் புகுத்தப்பட்டதோ அன்றிலிருந்து விரல் விட்டு எண்ணப்படும் ஒருசில உண்மை முஸ்லிம்கள், குர்ஆன் வசனங்களை எடுத்துக்காட்டி கபுருவழிபாடு கொடிய சிர்க், அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் என்று தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். அதன் பின்னர் முஸ்லிம்களிடையே மதகுருமார்களால் புகுத்தப்பட்ட தரீக்கா–ஷைகு வழிபாடுகள் முஸ்லிம்களிடையே புகுத்தப்பட்டக் காலத்திலிருந்து ஒருசில உண்மை முஸ்லிம்கள் குர்ஆன் வசனங்களைக் காட்டி அதுவும் கொடிய சிர்க் என எச்சரித்து வருகிறார்கள். அதேபோல் மத்ஹபு வழிபாடுகளும் கொடிய சிர்க்கே என்று நேரடி குர்ஆன் வசனங்களைக் காட்டி சிலர் எச்சரிக்கத்தான் செய்கிறார்கள். அதேபோல் இயக்க வழிபாடு களும் கொடிய வழிகேடுகள்தான்; சிர்க்தான் என்று சிலர் குர்ஆன் வசனங்களைக் காட்டி எச்சரித்து வரத்தான் செய்கிறார்கள். இப்படி முஸ்லிம் சமுதாயத்தில் புகுந்துள்ள அனைத்து வழிகேடுகளும், உரிய குர்ஆன், ஹதீத் ஆதாரங்களை எடுத்துக்காட்டி தெளிவுபடுத் தத்தான் செய்யப்படுகிறது.
ஆயினும் இப்படிப்பட்ட கொடிய சிர்க்கான, அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன் என்று சொல்கிற (பார்க்க: 4:48,116) பெரும் பாவங்களில் மூழ்கி இருக்கும் முஸ்லிம்களில் எத்தனை பேர் தங்கள் தவறை–வழிகேட்டை உணர்ந்து அல்லாஹ் 6:153 குர்ஆன் வசனத்தில் கூறும் ஒரே நேர்வழிக்கு வருகிறார்கள். மிகப் பெருந்தொகையினர் நேர்வழிக்கு வருவதே இல்லை. (பார்க்க: 32:13,11:118, 119) காரணம் என்ன? 15:39 இறைவாக்குக் கூறுவது போல் ஷைத்தான் வழிகேடுகளான, சிர்க்கான பாவச் செயல்களையே அழகான செயல்களாக நன்மை தரும் செயல்களாகக் காட்டி அவர்களை வழிகெடுத்து நரகில் தள்ளுவேன் என்று சபதமிட்டு அல்லாஹ்விடம் அதற்குரிய வரத்தையும் பெற்றுக்கொண்டான். (பார்க்க : 15:34-44)
ஷைத்தானின் இந்த கடும் முயற்சியால் வழிகேட்டிலிருக்கும் ஒவ்வொரு பிரிவினரின் உள்ளங்களிலும் ஷைத்தானின் துர்போதனைகளும், தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களான மதகுருமார்களின் துர்போதனைகளும் நிறைந்து வழிகின்றன.
இந்த நிலையில் அவர்களிடம் எடுத்துவைக்கும் குர்ஆன் வசனங்கள் பலன் தருமா? ஒருபோதும் பலன் தராது. இதை ஓர் உதாரணம் மூலம் பலமுறை விளக்கி இருக்கிறோம். அதாவது ஒரு பாத்திரத்தில் நிரம்ப, நிரம்ப சாராயம் இருக்கிறது. இந்த நிலையில் அந்தப் பாத்திரத்தில் சுத்தமான பாலை ஊற்றினால், பால் பாத்திரத்தினுள் போகுமா? அதற்கு மாறாக வெளியே வழியுமா? சிந்தியுங்கள். பால் பாத்திரத்தினுள் செல்லவேண்டும் என்றால் முதலில் பாத்திரத்தினுள் இருக்கும் சாராயம் வெளியே கொட்டப்பட வேண்டும். பாத்திரம் சுத்தமாகக் கழுவப்பட வேண்டும். பின்னர் அப்பாத்திரத்தினுள் பாலை ஊற்றினால் மட்டுமே அது பாலை உள்வாங்கும். இதை ஓர் அறிவு குறைந்த மனிதனும் விளங்குவான். மறுக்கமாட்டான்.
இப்போது சிந்தியுங்கள். வழிகெட்டக் கொள்கைகளை உள்ளத்தில் நிரப்பி வைத்திருப்பவர் களுக்கு முன் வாசிக்கப்படும் குர்ஆன் வசனங்கள் அவர்களின் உள்ளத்தில் நுழையுமா? ஒருபோதும் நுழையாது. அவை வெளியே வழியத்தான் செய்யும். நரகில் கொண்டு சேர்க்கும் ´ர்க்கான வழிகெட்டக் கொள்கையுடையோருக்கு முன் அவர்களின் வழிகெட்டக் கொள்கையை நேரடியாக விளக்கும் குர்ஆன் வசனங்களை எடுத்து வைக்கும்போது அவர்களின் முகங்களில் ஒரு வெறுப்பு உணர்வையும் (பார்க்க: 17:41,45,47, 89, 22:72, 25:60, 39:45) பார்க்கலாம்.
மேலும் அந்த வசனங்களின் நேரடிக் கருத்துக்களை மறைக்கும் விதமாக (பார்க்க: 2:159-162) அவற்றில் தங்கள் சுயகருத்துக்களைப் புகுத்தி வீண் ஐயங்களைக் கிளப்பி அல்லாஹ் வெறுத்துக் கூறும் விதண்டாவாதங்களைச் செய்யவே முற்படுவார்கள். எனவே அவர்களின் பார்க்கும் கண்களில் தடுமாற்றம், கேட்கும் காதுகளில் தடுமாற்றம் உள்ளத்தில் திரை. இந்த நிலையில் அவர்களால் நேர்வழியை எப்படி அடையமுடியும் (பார்க்க: 17:45,46,47)
7:3 வசனத்தையும், 53:2,3,4 வசனங்களையும் படித்துப் பாருங்கள். 7:3 வசனத்தில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை என்றும் 53:4ல் அது (அவருக்கு) அறிவிக்கப்படும் வஹி அறிவிப்பே தவிர வேறில்லை என்றும் அல்லாஹ் கூறி இருப்பதை உற்று நோக்குங்கள். அல்லாஹ் குர்ஆனில் ஒவ்வொரு விடயத்தையும் நேராகவும், தெளிவாகவும், எவ்வித முரண்பாடும் இல்லாத நிலையில் கூறி இருப்பதாகப் பல இடங்களில் கூறி இருக்கிறான்.
ஹதீஃத் மறுப்பாளர்கள் கூறுவது போல் குர்ஆனை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றால் 7:3ல் இறக்கப்பட்டதை என்று கூறாமல் குர்ஆனையே பின்பற்றுங்கள் என்று நேரடியாகக் கூறி இருப்பான். பின்னால் வருகிறவர்கள் சுயவிளக்கம் கொடுக்கும் நிலையில் எந்த குர்ஆன் வசனமும் இல்லை. அப்படியே குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கொடுப்பதாக இருந்தால் 2:213, 16:44,64 அல்லாஹ்வின் கட்டளைகள்படி இறைத் தூதரே அப்படி விளக்கம் கொடுத்திருக்கவேண்டும். அதற்கு மாறாக இறைத் தூதரும் பின்பற்ற வேண்டிய இறக்கப்பட்டதை அதாவது அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹி மூலம் பெற்றதையே கூறினார்கள் என்று உறுதிப்படவில்லையா? (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)