இஸ்லாமிய சட்டங்கள் (கடமைகள்) சக்திக்கேற்றவையா?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
நம்மோடு நட்பாக, வியாபார ரீதியாக, அக்கம் பக்கம் வீட்டினராக, சேர்ந்து தொழில் சாலையில், மற்றும் கடையில் பணி புரிபவராக இருக்கக்கூடிய மாற்றுமத சகோதர, சகோதரிகள் இஸ்லாமிய சட்டங்கள் (கடமைகள்) மனித சக்திக்கேற்றவையில் இல்லை. அது அனைவராலும் பின்பற்ற இயலாது மற்றும் எல்லா காலத்திற்கும் பொருந்தாது என்பதாக நினைக்கின்றார்கள், சொல்கின்றார்கள், இன்னும் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவும் தயங்குகிறார்கள்.
இந்த எண்ணங்கள் சரியானவையா?
இஸ்லாமிய சட்டங்கள் (கடமைகள்) மனித சக்திக்கேற்றவை இல்லையா? இஸ்லாமிய சட்டங்கள் (கடமைகள்) செயல்படுத்த முடியாதவையா?
அதாவது இஸ்லாமிய சட்டங்களில் (கடமைகளில்) ஐவேளை தொழுகை, ரமழான் மாத 30 நாட்கள் நோன்பு, ஜகாத் (தர்மம்) 2.5 சதவீதம் செய்வது, இறை இல்லமான புனித காஃபா ஆலயத்தை நோக்கி ஹஜ் செய்வது மற்றும் குற்றவியல் சட்டங்கள்.
இவைகள் எல்லாம் மனித சக்தியால் செய்யமுடியாததை கூறுகிறது என்பது பல மாற்றுமத சகோதர, சகோதரிகளின் எண்ண மாகும். அதுமட்டுமல்ல “இறைவன் தேவை அற்றவன்‘ அவ்வாறு இருக்க இந்த கடமைகள் எதற்காக, யாருக்காக என்பதாகவும் அவர்களின் கேள்வி.
இத்தகைய கேள்விகளுக்கு மிக தெளிவான பதிலை நாமும் தெரிந்துகொண்டு மற்றும் நம்மோடு பழகக்கூடிய நண்பர்களும் எடுத்து கூறுவது நமது கடமையாகும்.
இதைப் பற்றி இறைநூலில் (அல்குர்ஆனில்) இறைவன் என்ன கூறுகிறான். “அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். ஏனெனில் மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.” (அல்குர்ஆன் 4:28)
மேலும் மற்றொரு வசனத்தில், “எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையைப் பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்படமாட்டார்கள்.’’ (அல்குர்ஆன் 23:62)
(உண்மையை பேசும் ஏடு பற்றி தனி கட்டுரையாக இன்ஷா அல்லாஹ் தெளிவுபடுத்துவோம்)
மேற்கண்ட இரண்டு வசனங்களின் மூலம் மனிதர்களுக்கு தாங்க முடியாத எதையும் இறைவன் சுமத்துவது இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டான். எனவே அவைகள் (சட்டங்கள்) சக்திக்கேற்றவையே என்பதாக தெளிவாக தெரிகிறது. அது மட்டுமல்ல அதை பின்பற்றக் கூடியவர்களும் அவை சக்திக்குறியவையே என்பதை நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே இப்போது நமது கடமை என்ன என்பதைப் பார்ப்போம்.
ஏன் என்றால், நாம் தெளிவான முறையில் எடுத்துக் கூறாததே மேற்கண்ட கேள்விக்கு காரணமாகும். எனவேதான் இறைவன் முஸ்லிம்களைப் பார்த்து கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் கட்டளையிடுகிறான்.
“காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும், பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர!” (அல்குர்ஆன் 103:1,2,3)
மேற்கண்ட வசனங்களின் சிறப்பு என்னவென்றால் சுருக்கமாக வார்த்தைகளில் அதிக கருத்துக்களைச் சொல்கின்ற சிறப்பு வாய்ந்த வசனங்களாகும். இந்த அத்தியாயத்தில் இடம்பெற்ற வசனங்களைப் பற்றி இமாம் ஷாபிஃ(ரஹ்) அவர்கள் கூறியிருப்பது மிகவும் பொருத்தமானது.
அது என்னவென்றால்,
இதில் மனிதனின் வெற்றிக்கான பாதை எது? அவனது அழிவுக்கும், நாசத்திற்கும் வழிகோலும் பாதை எது? என்பதை தெளிவாக எடுத்து கூறியுள்ளது. மக்கள் இந்த அத்தியாயத்தைச் சிந்தித்துப் பார்த்தால், அதுவே அவர்களுக்கு நேர்வழி காட்டப் போதுமானதாகும்! என்று கூறியுள்ளார்கள்.
மேலும் நபி தோழர்களின் வாழ்க்கையில் இது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்றால், அத்தியாயம் இறங்கிய சமயத்தில், நபிதோழர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது இந்த அத்தியாயமான “அல் அஸ்ரை‘ ஓதிக்காட்டாமல் பிரிந்து செல்ல மாட்டார்கள் என ஹதீத் நூலில் (தப்ரானீ) பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சத்தியத்தை எடுத்துரைத்து கொண்டே இருப்போம்.
ஆனால் முஸ்லிம்களாகிய பலரும் சத்தியத்தை எடுத்துரைப்பதை செய்வதில்லை. இன்னும் தெளிவாக சொல்லப்போனால், இறைநூலில்(அல்குர்ஆனில்) இடம்பெற்றுள்ள” அல்காபீரூன்‘ என்ற அத்தியாயத்தை தவறான புரிதல் காரணமாக, “உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்‘ என்று தவறான புரிதலில் பலர் சென்றும்கொண்டிருக்கிறார்கள்.
அல் காஃபிரூன் அத்தியாயத்தில் வரலாற்று பின்னணியையும், நமது கடமையையும் யாரெல்லாம் தெளிவாக புரிந்து கொண்டார்களோ அவர்கள் ஒருபோதும் தவறான புரிதலில் இருக்கமாட்டார்கள். அதுமட்டுமல்ல “இஸ்லாம் சக்திக்கேற்ற மார்க்கமே‘ என மரணம் வரை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
இதில் வேதனை படக்கூடிய விசயம் என்னவென்றால் “இஸ்லாம் மார்க்கம் சத்தியமானதும், சக்திக்கு உட்பட்டதுமாகும்‘ என சொல்ல வந்தவர்களே. பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சமுதாயத்தை சங்கடப்படுத்திக் கொண்டிருப்பதுதான் வேதனை ஆகும்.(நாம் இக்கட்டுரையின் சுருக்கத்தை கருதி சமுதாய பிரிவுக்கு காரணமான பிரிவினைவாதிகளைப் பற்றி விரிவாக குறிப்பிடுவதை இக்கட்டுரை யில் தவிர்த்துள்ளோம்)
“பூமியில் குழப்பம் செய்யாதீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்போது நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே” என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 2:11)
இனி அல்காஃபிரூன் அத்தியாயத்தின் வரலாற்று பின்னணியை அறிந்துகொண்டால் இஸ்லாத்தைப் பற்றி எடுத்துரைப்பது நம்மீது எந்த அளவிற்கு கடமை என புரிந்துவிடும்.
வரலாற்றுப் பின்னணி:
மக்கா நகரில் ஆரம்ப காலகட்டத்தில் இஸ்லாமிய அழைப்பு பணிக்கு எதிராக எதிரிகளின் கை ஓங்கியிருந்தது. (அதாவது குரைசீத் தலைவர்களின் கை ஓங்கியிருந்தது) ஆயினும் நபி(ஸல்) அவர்கள் அழைப்பு பணியை செய்து கொண்டே இருந்தார்கள். வளர்ந்துகொண்டும் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் செய்யக்கூடிய அழைப்பு பணியை தடுக்க பல திட்டங்களை வகுத்து அதை கோரிக்கையாக குரைசீத் தலைவர்கள் எடுத்துரைத்தார்கள்.
கோரிக்கைகள் :
ஓன்று : நாங்கள் உங்களுக்கு தேவையான செல்வம் தந்துவிடுகின்றோம்.
இரண்டு: நீங்கள் விரும்புகின்ற பெண் யாராக இருந்தாலும் உங்களுக்கு மணம் முடித்துத் தந்து விடுகிறோம்.
மூன்று : நீங்கள் ஓர் ஆண்டு எங்கள் கடவுள் களான “லாத்‘ மற்றும் “உஸ்ஸாவை‘ வணங்க வேண்டும். மறு ஆண்டு நாங்கள் உங்கள் இறைவனை வணங்குகிறோம் என்பதாக கோரிக்கை வைத்தார்கள்.
இந்த அத்தியாயம் தவறான புரிதலில் உள்ள சிலர் நினைப்பது போல் மதச் சகிப்புத் தன்மையை அறிவுறுத்துவதற்காக இறக்கப்படவில்லை மற்றும் அவர்களின் சமரசத் திட்டங்களுக்கு பதிலாகவும் அருளப்படவில்லை. மாறாக முஸ்லிம்கள் மரணம் வரை மார்க்கத்தை சொல்லாலும், செயலாலும் அறிவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஆகும்.
அதாவது இது அறிவுபூர்வமான மார்க்கமாகும். மற்றும் சக்திக்கேற்ற மார்க்கமும் ஆகும் என்பதை எடுத்துரைக்க வேண்டும் என்பதை முஸ்லிம்கள் உலக ஆசையில் மயங்கிவிடாமல் இறுதி நாள் வரை கூறுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.