ஐயமும்! தெளிவும்!!

in 2025 பிப்ரவரி

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : காயிஃப் ஜனாஸா தொழுவதற்கு மார்க்கத்தில்  அனுமதி  உண்டா?

தெளிவு : “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு விசயத்தை முடிவு செய்துவிட்டால் அக்காரியத்திற்கு மாற்றமாக நாமாக வேறு ஒரு சுய முடிவை செய்வது இறை நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தகுதியானதல்ல. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கிறானோ அவன் பகிரங்கமாக வழிகெட்டுவிட்டான்  .கு. 33:36

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் தான் மார்க்க விசயத்தில் நாம் எதுவொன்றையும் செய்வதா செய்யக்கூடாதா என்பதை பார்க்கவேண்டும். அதன் அடிப்படை யிலேயேகாயிஃப் ஜனாஸாதொழுகை செய்யலாமா? செய்யக்கூடாதா? என்றே நாம் பார்க்கவேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு முறை காயிஃப் ஜனாஸா (இறந்தவர்கள் உடல் முன் வைக்காமல்) தொழுகை நடத்தியிருக்கிறார்கள்.

ஒன்று : அபிஸினியா மன்னரான நஜ்ஜாஸி அவர்களுக்கு,

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரழி) அறிவித்தார்:

இன்றைய தினம் அபிஸினியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் மரணித்துவிட்டார். எனவே வாருங்கள்; அவருக்காக ஜனாஸாத் தொழுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அணியில் நின்றிருந்தேன். 

ஆதாரம் : புகாரி: 1320, அத். :23  ஜனாஸாவின் சட்டங்கள்.

மற்றொன்று: இரவில் அடக்கம் செய்யப்பட்டு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்ட ஒரு பெண்மணிக்கு காயிஃப் ஜனாஸா தொழுகை நடந்தது. அதாவது பள்ளிவாசலை சுத்தம் செய்யும் பணியில் இருந்த சஹாபிய பெண்மணி இறந்துவிட்டார். சஹாபாக்கள், ஜனாஸா தொழுகை நடத்தி (அந்த) பெண்மணியை அடக்கம்  செய்துவிட்டார்கள்.

அந்த பெண்மணியைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்து விட்டதாகக்  கூறினார்கள். (அதற்கு) நபி(ஸல்) அவர்கள் இதை முன்பே என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா? அவரின் அடக்கத்தலத்தை எனக்கு காட்டுங்கள்! என்று கூறிவிட்டு, அந்த பெண்மணியின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (ஜனாஸா)  தொழுகை நடத்தினார் கள். 

அபூஹுரைரா(ரழி)  அறிவித்தார்:

பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுத்த பெண்மணி இறந்துவிட்டார். அவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். இதை(முன்பே) என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா? அவரின் அடக்கத்தலத்தை எனக்கு காட்டுங்கள்! என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள். புகாரி : 458, அத்தியாயம்: 8 தொழுகை.

மேற்கண்ட இரண்டிலும் இறந்தவருக்கு காயிஃப் ஜனாஸா தொழுததாக ஹதீதில் இடம் பெற்றுள்ளது. எனவே நபி(ஸல்) அவர்கள் செய்ததாக (காயிஃப் ஜனாஸா) இருக்கும்பொழுது நமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு தொழுவது தான் சிறந்து.

ஐயம் : ஒருவன் இருமுறை தலாக்கூறி தவணைக்குள் மனைவியை மீட்டுக் கொண்டவன் மூன்றாவதாக தலாக் கூறினால் அந்த பெண்ணுக்கு இத்தா காலம் வரை உணவு, உடை, உறைவிடம் தரவேண்டுமா? சுல்தான்.

தெளிவு : தலாக் தொடர்பான சட்டங்களின் அடிப்படையில் மூன்றாவது தலாக் கூறிவிட்டால் அந்த திருமண உறவு முற்றிலும் நிறைவடைகிறது. அதற்கு பின், அந்த பெண்ணுக்கான பொறுப்புகள் கணவனுக்கு இல்லை. ஆனால் சில விசயங்கள் செய்யப்பட வேண்டும். அதாவது மூன்றாவது தலாக் பிறகு இத்தா காலம் எனப்படும் 3 மாதவிடாய் சுழற்சி  அல்லது கருவுற்று இருப்பின் குழந்தை பிறப்பு வரை காத்திருக்க வேண்டும். இத்தா காலத்தின்போது மட்டும் மனைவிக்கு உணவு, உடை, உறைவிடம் வழங்கவேண்டியது கணவன் மீது கட்டாயம். ஆனால் இது திருமண உறவைப் புதுப்பிக்க அல்ல. அந்த பெண்ணின் (மனைவியின்) பாதுகாப்புக்காகவே.

இத்தா காலத்திற்குப் பிறகு, திருமண உறவு முற்றிலும் முடிவடைந்துவிடுகிறது.  ஜீவனாம்சம் தரவேண்டியது இல்லை. ஆனால் நன்மையின் அடிப்படையில் உதவி செய்யலாம். அதுவே குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பு தொடர்ந்து கணவனுக்கு இருக்கும். 

மேலும் பார்க்க வசனம் : 2:229. மற்றும் முஸ்லிம் : 2695. (அத்.மணவிலக்கு)

Previous post:

Next post: