ஸலவாத்.

Filed under 1986 செப்டம்பர்,எச்சரிக்கை by அந்நஜாத்

முகம்மது அலி. M.A., திருச்சி.

இதுவரை நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவனால், நமக்கு ஏற்படுகின்ற நன்மைகளையும், அதன் தத்துவங்களையும் கண்டோம்.

“ஸலவாத்” என்ற பெயரில் புதுப்புது ஸலவாத்கள் உருவாக்கப்பட்டுள்ளதைப் பற்றி ஆராய்வோம்.

நபி(ஸல்) அவர்களிடம் அருமை ஸஹாபாக்கள் “உங்களுக்கு நாங்கள் எப்படி ஸலவாத் கூறுவது” என்று கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் “ஸலவாத்” கூறும் முறைகளை நமக்குத் தெளிவாக கற்றுத் தந்துள்ளனர். அவர்கள் எவற்றை ‘ஸலவாத்’ என்று கற்றுத் தந்தார்களோ அதை விடுத்து, நாமாகப் புதிய ‘ஸலவாத்’ களை உருவாக்கிக் கொண்டால் அது ஸலவாத் ஆக முடியாது. மாறாக ‘பித்அத்’ஆக அவை கருதப்படும். இதற்கு உதாரணமாக ‘இப்னு அபீ ஜைது’ என்ற அறிஞர் “வர்ஹம் முஹம்மதன் வஆல முஹம்மத்” என்று ஒரு புதிய ஸலவாத்தை அவராக தயாரித்தபோது அன்றைய அறிஞர் உலகம் அவரை வன்மையாகக் கண்டித்து, “அவர் மார்க்கத்தை அறியாதவர்” என்றும் முடிவு கட்டியது. நபி(ஸல்) அவர்கள் ஸலவாத் எப்படிக் கூறுவது என்று நமக்கு தெளிவாக கூறியிருக்கும் போது “புதிதாக ஒரு ஸலவாத்தை உருவாக்குவது பித்அத் ஆகும்” என்றும் அன்றைய அறிஞர் பெருமக்கள் அவரைக் கண்டித்துள்ளனர். ‘திர்மிதி’ என்ற ஹதீஸ் நூலுக்கு விரிவுரை எழுதிய இமாம் அபூபக்ரு இப்னுல் அரபி(ரஹ்) அவர்கள் திர்மிதியின் விரிவுரையில் இதனைக் குறிப்பிடுகிறார்கள். இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்ட பின் “ஸலவாத்துன்னாரிய்யா” என்று நம்மவரிடையே பிரபல்யம் அடைந்துள்ள ஸலவாத்தை அலசுவோம்.

இந்த “ஸலவாத்துன்னாரியா” என்ற ஸலவாத்தை நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தரவில்லை. அருமை ஸஹாபாக்கள் இதை ஓதியதுமில்லை. நாற்பெரும் இமாம்களின் காலத்திலும் இந்த ஸலவாத் இருந்ததில்லை. மிகமிகப் பிற்காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இந்த ஸலவாத்தைத் தயார் செய்தனர். நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ள எண்ணற்ற ஸலவாத்துக்கள் இருக்க, இப்படிப் பிற்காலத்தில் சிலரால் உருவாக்கப்பட்ட “ஸலவாத்துன்னாரியா” மக்களிடம் நன்கு அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இதைச் சொல்வதால் ஸலவாத்தின் நன்மை நிச்சயம் கிடைக்காது.

இதன் பின்னனியில் ஏராளமான பித்அத்கள் வேறு நடந்து கொண்டுள்ளன. இதை 4444 தடவை ஓத வேண்டுமாம். இந்த எண்ணிக்கை நிர்ணயம் செய்தவர் யார்? அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்(ஸல்) அவர்களுக்கும் தவிர இப்படி எண்ணிக்கைணை நிர்ணயிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.

இந்த “ஸலவாத்” ஓதுவதால் செல்வம் பெருகும் நோய் நீங்கும் என்ற குருட்டு நம்பிக்கை வேறு!

இந்த “தீனை” வைத்து சம்பாதிப்பவர்கள் தான், திட்டமிட்டு உருவாக்கினார்கள் என்பதை சிந்தனை உள்ள எவரும் உணரலாம். 4444 என்று பெரும் எண்ணிக்கைணைச் சொன்னால் மக்கள் தானானக அவ்வளவு பெரும் எண்ணிக்கையை ஓத இயலாது. அதற்கென்று ஓதத் தெரிந்தவர்கள் அழைப்பார்கள், அதற்கு சில்லரைகள் கிடைக்கும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு நோக்கம் எதுவும் இருக்க முடியாது.

“ஸலவாத்துன்னாரிய்யா” என்றால் நெருப்பு ஸலவாத் என்று பொருள். அந்த ஸலவாத்தில் நார் (நெருப்பு) என்ற சொல் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை. பிறகு ஏன் “நாரிய்யா” என்று பெயர் வைத்தார்கள்? என்று நாம் ஆராயும்போது ஒரு செய்தி நமக்குத் தெரிய வந்தது.

அதாவது மலேஷியாவின் சில பகுதிகளில் மிகப்பெரும் நெருப்பு குண்டத்தை வளர்த்து அதைச்சுற்றி இருந்துகொண்டு அதில் நெய்யை ஊற்றிக் கொண்டு ஓதி வருகிறார்களாம். நெருப்பு வளர்த்துக் கொண்டு அது ஓதப்படுவதால் தான் அதற்கு “நாரிய்யா” என்று பெயர் வந்ததாக ஒரு மலேசியா நண்பர் ஒருவர் நம்மிடம் கூறினார்.

(மலேஷியா நண்பர்கள் இதைப் பற்றிய உண்மை விபரங்கள் எழுவதை வரவேற்கிறோம்)

இந்த தகவல் உண்மையாக இருக்குமேயானால், பிற இனத்தவர்கள் அக்னி பூஜை நடத்துவதைப் பார்த்து அதுபோல் இங்கேயும் சிலர் திட்டமிட்டு உருவாக்கி விட்டனர்; மாபெரும் பாதகச் செயலை உருவாக்கி விட்டனர் என்பது தெளிவாகும்.

ஆக இந்த “ஸலவாத்துன்னாரிய்யா” என்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதால் அது முதல் குற்றம். அதற்கு (மிகப்) பெரும் எண்ணிக்கையை நிர்ணயம் செய்தது இரண்டாவது குற்றம் ஆகின்றது. அதற்கு உலக நோக்கம் கற்பிக்கப்பட்டது மூன்றாவது குற்றம். அதன் பின்னணியில், நெருப்புக் குண்டம் வார்க்கப்படுவதை ஏற்படுத்தி அதற்கு “நாரிய்யா” என்று பெயர் சூட்டியது உண்மையானால் அது நான்காவது மாபெரும் குற்றம்.

இத்தகைய பித்அத்தான சொற்றொடர்களைச் சொல்வதால் நன்மை கிடைப்பதற்கு பதிலாக தீமைதான் ஏற்படும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் எல்லா பித்அத்களும் வழிகேடு என்று சொல்லி இருக்கின்றார்கள். (புகாரி)

இவை எல்லாவற்றுக்கும் மேலாக “ஸலவாத்துன்னாரிய்யா” வின் பொருளும் குர்ஆன், ஹதீதுகளின் வழிகாட்டுதலுக்கு முரண் படுகின்றது. அதை அடுத்த இதழில் அலசுவோம். (வளரும்)
*******************************
எளிய விருந்து

ஸபிய்யா(ரழி) அவர்களை நபி(ஸல்) மணமுடித்தபோது, சிறிது வறுத்த மாவையும், சிறிது பேரீத்தம் பழத்தையுமே திருமண விருந்தாக அளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்கள்: அபூதாவூது, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்.

பெற்ற மகளென்றாலும்…

“நான் விருந்து சமைத்து நபி(ஸல்) அவர்களை அழைத்தேன். அவர்கள் வீட்டிற்கு வந்த போது உருவப் படங்களைக் கண்டதும் உடனே திரும்பி விட்டனர்.” என்று நபி(ஸல்) அவர்களின் மருமகன் அலி(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், (தன் மகள் பாத்திமாவின் வீடாக இருந்தும், மார்க்கம் அனுமதிக்காதவைகளைக் கண்டதும் புறக்கணித்தனர் நபி(ஸல்) அவர்கள்”) நூல்கள் : அபூதாவூது, இப்னுமாஜா.

அபூ அய்யூப்(ரழி) ஹுதைபா(ரழி) இப்னுமஸ்ஊது(ரழி) ஆகியோரும் இவ்வாறு தீமைகளைக் கண்ட இடத்தில் விருந்துண்ணாமல் திரும்பியுள்ளனர். (அஹ்மத், தப்ரானி, பைகஹீ)

**********************

அந்நஜாத்: செப்டம்பர், 1986

Comments Off

Comments are closed.