Feb 05 2010
நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!
Filed under 2010 பிப்ரவரி,பகுத்தறிவாளர்களே! by அந்நஜாத்
நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!
அபூ அப்தில்லாஹ்
ஜனவரி தொடர் : 9
உண்மை இதழ் ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களே, அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு என கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே உண்மையை-சத்தியத்தை – நேர்வழியை உள்ளது உள்ளபடி மிகச் சரியாக அறிந்து அந்த நேர்வழியில் நடப்பவர்களுக்கே இறுதி வெற்றி என நான் நல்வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கிறேன்.
வணங்கி வழிபடும் சிலையும் கல்லுதான், மிதிபடும் படியும் கல்லுதான். கல்லை தெய்வமாக கற்பிப்பவன் முட்டாள், அயோக்கியன்; கல்லை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று முழக்கமிட்டு வரும் நீங்கள், சீர்திருத்தவாதிகளாக நம்பியவர்களுக்கு சிலைகள் வடித்து மாலை மரியாதை செய்து வழிபட்டு வருவது எவ்வகையைச் சார்ந்தது என்று கூறுவீர்களா? இக்கற்சிலைகள் தான் இன்னும் ஐய்யாயிரம், பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின் சாமி சிலைகளாக புரோகிதர்களால் உருமாற்றம் பெறுகின்றன என்பதை விளங்க முடியாத நீங்கள், உங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று சொல்வது சரியா? இப்படி ஞாபகார்த்தமாக, மரியாதை நிமித்தம் வடிக்கப்பட்ட பல கற்சிலைகள் தான் இன்று சாமி சிலைகளாகி வணங்கப்பட்டு வருகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதை அல்குர்ஆனின் நூஹ் (நோவா) 71:23 இறைவாக்கு தெளிவுபடுத்துகிறது. மேலும் விளக்கமாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டு புகாரீயில் பதிவான செய்தியில் நூஹ் இறைத்தூதரின் இனத்தவரில் வாழ்ந்து மறைந்த பெரியார்கள்-நல்லவர்கள் இறந்தபோது ஷைத்தான் “இவர்கள் இருந்த இடங்களில் ஒவ்வொரு சிலையை நட்டு அதற்கு அவர்களின் பெயரிடுங்கள் என்று அவர்களின் இனத்தவர்களைத் தூண்டினான். அவர்களும் அவ்விதமே செய்தனர். ஆனால் அக்காலை அவற்றிற்கு மாலை மரியாதை செய்யப்பட்டதே தவிர அவை வணங்கப்படவில்லை. அக்காலத்தவர் இறந்து விட்ட பின்னர் அவர்கள் பற்றிய விபரங்கள் மறைந்து அக்கற்சிலைகள் தெய்வங்களாக வணங்கி வழிபடக் காரணமாயின.
இதே நிலையில்தான் இன்றைய போலி பகுத்தறிவாளர்கள் இருக்கின்றனர் என்று கூறினால் அதில் தவறு உண்டா? அன்று நோவா இறைத்தூதரின் இனத்தவர்களை ஷைத்தான் வழி கெடுத்தது போல், இன்று இந்தப் போலி பகுத்தறிவாளர்களை ஷைத்தான் வழிகெடுக்கிறான் என்று கூறினால் அது தவறா?
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றோர் மறைந்து அரை நூற்றாண்டு கழியு முன்னே இதய தெய்வம், கண்கண்ட தெய்வம் என்று அவர்களின் உருவச் சிலைகள் இன்று தெய்வ அந்தஸ்து பெற்று மக்கள் வணங்கி, வழிபடுவதையும் பார்க்க முடிகிறது. ஆம்! 1431 ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவாக விளக்கிய ஒரு பெரும் வழிகேட்டை தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்பவர்களின் பகுத்தறிவின் லட்சணத்தை இப்படி வெளிப்படுத்தி வருகிறார்கள். அதற்கு மாறாக இறைவனின் இறுதித் தூதர் மறைந்து இன்றைக்கு 1420 ஆண்டுகள் ஆகியும் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரின் சிலை இருக்கிறதா? அல்லது உலகின் எந்த மூலை முடுக்கிலாவது அவரது சிலை இருந்து காட்ட முடியுமா? அவரைப் போல் சொன்னதை செய்தவரையும், செய்ததைச் சொன்னவரையும் காட்ட முடியுமா? அவரால் சொல்லப்படாமல், செய்து காட்டப்படாமல் விடப்பட்ட ஓர் அற்ப சீர்திருத்தத்தையும் அதன் பின்னர் வேறு எந்த பெரியராவது, அறிஞராவது சுட்டிக்காட்டி செய்ததை இப்போலி பகுத்தறிவுவாதிகளால் காட்ட முடியுமா? நிச்சயமாகக் காட்ட முடியாது. அந்த சீர்திருத்தச் செம்மல் தான் ஐம்புலன்களுக்கு அடைபடாத, அகில உலகங்களையும் படைத்து நிர்வகித்து வரும் தன்னந்தனியனான, இணை துணை இல்லாத ஓரிறைவன் இருக்கிறான் என்று மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.
அது மட்டுமா? நான் அந்த இறைவனின் அடிமையும் தூதரும் ஆவேன் என்றே கூறினார்கள். அவருக்கு முன்னாலும் ஆதம், நோவா, ஏப்ரஹாம், ஜாகப், ஜோசஃப், மோஸஸ், ஜீஸஸ் போன்ற எண்ணற்ற இறைத் தூதர்கள், ஐம்புலன்களுக்குள் அடைபடாத ஓரிறைவன் இருக்கிறான். நாங்கள் அந்த இறைவனின் அடிமைகளும் தூதர்களும் ஆவோம் என்றே கூறினார்கள். அவனை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும். அவனுக்கு இணை துணை இல்லை என அக்கால மக்களுக்குப் போதித்தார்கள்.
அப்படிப்பட்ட மனிதப் புனிதர்களை, ஜாம்பவான்களை ஏற்று அவர்களின் போதனைப்படி நடப்பது பகுத்தறிவா? அல்லது அவர்களது அறிவு, ஆற்றல், செயல்பாடுகள் இவற்றிற்கு ஏணி வைத்தாலும் எட்டாத அறிவு, ஆற்றல், செயல்பாடுகள் அனைத்திலும் குறைபாடுடையவர்கள் ஐம்புலன்களுக்குள் அடைபடும் பொருள்கள் மட்டுமே உள் பொருள், ஐம்புலன்களுக்கு எட்டாதவை இல்பொருள் என்று விளங்காது புரியாது சொன்னவர்களை நம்பி அதன்படி நடப்பது பகுத்தறிவா? சொல்லுங்கள்.
ஆயினும் போலிப் பகுத்தறிவளர்களாகிய நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள அந்தப் பெரியார்களைக் குறை சொல்ல முடியாது. அதற்கு முழுமுதல் காரணம் இறைவனின் இறுதித் தூதரின் மறைவுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக முஸ்லிம் சமுதாயத்திலும் புகுந்துகொண்ட முஸ்லிம் மத குருமார் களேயாகும். காரணம் மனிதன் என்று படைக்கப்பட்டானோ, பல்கிப் பெருகினானோ அவர்களுக்கிடையில் வந்து ஓரிறைவனையே வணங்கி வழிபட வேண்டும், அவனது கட்டளைகள்படியே நடக்க வேண்டும் என்று போதித்த இறைத் தூதர் மறைந்த மிகக் குறுகிய காலத்திலேயே பல கடவுள்கள் பெயரால் மக்களை மயக்கி வழிகெடுக்கும் புரோகிதர்கள் மக்களிடையே புகுந்து அந்த இறைத் தூதர் போதித்த ஓரிறைக் கொள்கையை திரித்து வளைத்து பல தெய்வக் கொள்கையாகப் புனைந்து மக்களை வழி கெடுத்தார்கள். ஷைத்தானும் அவனது சபதப்படி அப்புரோகிதர்களுக்கு துணையாக நின்று அவன் புகும் நரகிற்கு ஆள் சேர்த்தான். மக்களின் பெருங்கூட்டம் அப்புரோகிதர்கள் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள்.
அடுத்து ஓர் இறைத் தூதர் வந்து மீண்டும் ஓரிறைவனைப் பற்றிய சத்தியத்தை-நேர் வழியைப் போதிப்பார்கள். அப்போது வழி கேட்டில் சென்று கொண்டிருப்பவர்களில் ஒரு சிறு கூட்டம் நேர்வழிக்கு வரும். இப்படி பல்லாயிரம் இறைத் தூதர்கள் காலத்திற்குக் காலம் வந்து வழிகேட்டில் சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு ஓரிறைவனைப் பற்றியும், நேர்வழி பற்றியும் போதித்தார்கள். இப்படிக் காலத்திற்கு காலம் ஒரு சிறு கூட்டம் நேர் வழிக்கு வருவதும் அந்த இறைத் தூதர்களுக்குப் பின்னால் இப்புரோகிதர்களின் தூண்டுதலால் அதில் பெருங்கூட்டம் மீண்டும் வழிகேட்டில் செல்வதும் தொடர்ந்தது, தொடர்கிறது.
இப்படித்தான் எண்ணற்ற மதங்கள் உலகில் தோன்றின. ஓரிறைவனுக்கு மாறாக பல கடவுள்கள் வழிபாட்டை போதிக்கும் அம்மதங்களை கற்பனை செய்து போதித்தவர்கள் கடவுளின் பெயரால் மக்களை மயக்கி வழிகெடுத்து அதன் மூலம் வயிறு வளர்க்கும் புரோகிதத் தொழிலே இவ்வழிகேட்டிற்குக் காரணமாக இருக்கிறது. பிறந்த குழந்தையின் வளர்ச்சி சுமார் 21 வயதளவில் பூர்த்தி அடைந்து அது இறக்கும் வரை அந்நிலை நீடிப்பது போல், இறைத்தூதர் ஆதத்தின் காலத்தில் குழந்தைப் பருவமாக இருந்த நேர்வழி- இஸ்லாம் இறுதி இறைத் தூதரோடு வளர்ச்சி முற்றுப் பெற்று உலகம் அழியும் வரை அதுவே சாந்தி மார்க்கமாக இருக்கிறது. இந்த உண்மையை அல்குர்ஆன் 5:3, 3:19, 83,84,85, 42:13 வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் முன்னைய சமுதாயங்களை, கடவுளின் பெயரால் பிழைப்பு நடத்தும் புரோகிதர்கள் எப்படி வழி கெடுத்தார்களோ அதே போல் நிறைவு செய்யப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களிடையேயும் கடவுள் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் இப் புரோகிதர்கள் சட்ட விரோதமாக, திருட்டுத் தனமாகப் புகுந்து கொண்டு மக்களை வழி கெடுத்து வருகிறார்கள்.
நமது இந்திய நாட்டில் பெரும்பான்மையினராக இருக்கும் ஹிந்துக்களிடம் காணப்படும் அனைத்துவகை வழிகேடுகள், மூடநம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் இவற்றை அரபி பதங்களைச் சொல்லி முஸ்லிம்களிடையே அரங்கேற்றி வருகிறார்கள் முஸ்லிம் மதப்புரோகிதர்கள். நமது நாட்டு முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர், உயர் ஜாதி மக்களால் தாழ்த்தப்பட்டவர்களாக, இழிஜாதிகளாக, தொட்டால் தீட்டு, பட்டால் தீட்டு என நாயிலும் கேடாக மதிக்கப்பட்ட மக்கள், அந்த இன இழிவைப் போக்கிக் கொள்ள முஸ்லிம்களாக ஆனவர்கள். அல்குர்ஆன் 49:14-ல் இறைவன் கூறுவதுபோல், இறை நம்பிக்கை உள்ளத்தில் புகாத நிலையில் முஸ்லிம்களானவர்கள். அவர்கள் மதம் மாறினார்களே அல்லாமல் மனம் மாறவில்லை. எனவே அவர்கள் ஹிந்து மதத்தில் இருக்கும்போது வணக்க வழிபாடுகளாக கடைபிடித்து வந்த மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அநாச்சாரங்கள் அனைத்தையும் அரபி பெயர்களுடனும், அல்ஃபாத்திஹா என்று வழிகேட்டில் இட்டுச் செல்லும், அரபியில் பித்அத் என்ற இறைத்தூதர் காட்டித்தராத, நரகிற்கு இட்டுச் செல்லும் புதியவற்றை அரங்கேற்றி வருகிறார்கள்.
வயிற்றுப் பிழைப்பைக் குறியாகக் கொண்ட முஸ்லிம் மதப் புரோகிதர்களும், இச்சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் அவர்களுக்கு கொழுத்த வருமானம் கிடைப்பதால் அவர்களே முன் நின்று இவ்வழி கேட்டுச் சடங்குகளை அரங்கேற்றி வருகிறார்கள். நீங்கள் பெரியார்களாக, அறிஞர்களாக மதிக்கும் அறிஞர்களும் இந்த மூட நம்பிக்கைகளையும், மூட சடங்கு சம்பிரதாயங்களையும், அநாச்சாரங்களையும் பார்த்தே இஸ்லாமும் மற்ற மதங்களைப் போன்ற மூட நம்பிக்கைகள் கொண்டதே, மக்களை வெறி கொள்ளச் செய்யும் அபின் போன்றதே என்ற தவறான முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
மேலும் அனைத்து மக்களுக்குமாக இஸ்லாம் என்ற இறைவன் கொடுத்த வாழ்க்கை நெறி பற்றி நாத்திகத்தைப் போதித்த அறிஞர்கள் தவறான எண்ணம் கொள்ள முஸ்லிம் மதப் புரோகிதர்கள் இன்னும் என்னென்ன தந்திரங்களைக் கடை பிடித்து வருகிறார்கள் என்பதை அடுத்துப் பார்ப்போம்.
Comments Off