நபி வழியில் நம் தொழுகை -6

Filed under 1987 மார்ச்,இறைவணக்கம் by அந்நஜாத்

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவற்றை நீங்களும் தொழுங்கள்! (நபிமொழி)

நூல்கள் : புகாரி, அஹ்மத்

சிறுநீர் கழித்த பின்னர்

மலம் கழித்த பின் சுத்தம் செய்வதற்கு தண்ணீரோ, கற்களோ போதுமானது என்பதை முன்பு கண்டோம். தண்ணீரால் சுத்தம் செய்வதே மிகவும் சிறந்தது என்பதையும் பார்த்தோம். மலம் கழித்து சுத்தம் செய்வதற்கே தண்ணீரோ, கற்களோ போதும் என்றால், சிறு நீர் கழித்தபின் சுத்தம் செய்யத் தண்ணீரோ, கற்களோ, போதுமானது என்று யாரும் உணரலாம். தண்ணீரால் சுத்தம் செய்ய முடிந்தால் தண்ணீரால் சுத்தம் செய்யலாம். அல்லது உறிஞ்சும் தன்மையுள்ள கல் போன்ற பொருட்களால் சிறுநீர்த் துளியை உறிஞ்சச் செய்யலாம்.

சிறுநீர் கழித்த பின் கனைக்க வேண்டும் என்பதற்கோ, சிறிது தூரம் நடக்க வேண்டும் என்பதற்கோ இது போன்ற இன்னும் பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டுமென்பதற்கோ மார்க்கத்தில் எந்த ஆதாரமுமில்லை. அல்லாஹ்வின் திருத்தூதரோஈ அவர்களின் அன்புத் தோழர்களோ அப்படிச் செய்யவுமில்லை, சொல்லவுமில்லை.

இப்படி எல்லாம் சிரமப்பட்டு சிறுநீாக் குழாயில் உள்ள சிறுநீர்த் துளிகளை எல்லாம் வெளிப்படுத்தியே ஆக வேண்டுமென்றால் அல்லாஹ்வின் திருத்தூதர் அப்படி செய்திருப்பார்கள். நமக்கும் சொல்லித் தந்திருப்பார்கள்.

சிறுநீர் கழித்தபின் இயல்பாகவே தான் நாம் நடந்து கொள்ள வேண்டும். தண்ணீரால் அந்த இடத்தைக் கழுகலாம், அல்லது ‘கல்’ போன்ற பொருட்களால் உறிஞ்சச்செய்யலாம்.

“சிறுநீர்த் துளி பின்னால் கசிந்திருக்கும்” என்றெல்லாம் எண்ணுவது ‘வஸ்வாஸ்’ (வீண் சந்தேகம்) ஆகும். இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள், அதற்கான ஹதீஸ் ஆதாரங்களைக் காட்ட கடமைப்பட்டுள்ளார்கள்.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் ஒரு மனனிதர் வந்து “சிறுநீர் கழித்த பின்னர், சில துளிகள் ஆடையில் கசிந்து விட்டதாக தனக்குக் தோன்றுகிறது” என்று முறையிட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் “உன்னுடைய ஷைத்தான் நாசமாகட்டும்! இது போன்ற எண்ணம் உனக்குத் தோன்றினால், உன் ஆடையில் சிறிது நீரைத் தெளித்துக் கொள்! உன் ஆடையில் ஏதேனும் ஈரம் தென்பட்டால் அதைத் தண்ணீர் என்று எண்ணிக் கொள்! எனக் குறிப்பிட்டார்கள். ஆதாரம் : பைஹகீ

இதிலிருந்து நபித் தோழர்கள் இது விஷயத்தில் ரொம்பவும் அலட்டிக் கொள்வதில்லை என்று உணரலாம்.

‘டேலா’ பிடித்து, 40 அடி தூரம் நடந்து பின்னர் தான் தண்ணீரால் கழுக வேண்டும் என்பதற்கு ஹதீஸ்களில் எவ்வித ஆதாரமும் இல்லை.

இது வரை மலஜலம் கழித்தல், காற்று பிரிதல் ஆகியவை ஒளூவை நீக்கக் கூடியவை என்பதையும், அதற்கான முறைகளையும் கண்டோம், இந்த மூன்று காரியங்களும் ஒளூவை நீக்கக் கூடியவை என்பதில் எவரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை. இனி, ஒளூவை நீக்குமா? நீக்காதா? என்று கருத்து வேறுபாடுள்ள சில காரியங்களையும், அதில் எந்தக் கருத்து சரியானது என்பதையும் காண்போம்.

பெண்களைத் தொட்டால் ஒளூ நீங்குமா?

“உங்களில் எவரும் பெண்களைத் தீண்டினால், தண்ணீரையும் பெற்றுக் கொள்ளாவிட்டால் “தயம்மும்” செய்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 4 : 43)

இந்தத் திருவசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘லாமஸ்தும்’ என்ற பதம் இரண்டு பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றது. சில இடங்களில் ‘தொடுதல்’ என்ற பொருளிலும், வேறு சில இடங்களிலும் “உடலுறவு கொள்ளுதல்” என்ற பொருளிலும் பயன்படுத்தப்படும். அந்தந்த இடங்களைப் பொறுத்து, பொருத்தமான அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம், இந்த ஆயத்தில் “பெண்களைத் தொட்டால் ஒளு நீங்கும்” என்று முடிவு செய்வதா? இது தான் கருத்து வேறுபாடு தோன்றக் காரணம்.

இந்த இடத்தில் என்ன பொருள் கொள்வது என்பதை ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் காணும் போது, ‘தொடுதல்’ என்ற பொருளில் அல்லாஹ் கூறவில்லை; ‘உடலுறவு கொள்ளுதல்’ என்ற பொருளிலேயே பயன்படுத்தியுள்ளான் என்று உணரலாம்.

(என் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் தங்கிய போது) இரவில் அவர்களைக் நான் காணவில்லை. (இருட்டில்) நான் அவர்களை (கைகளால் துளாவித்) தேடினேன். அப்போது பள்ளியில் பாதங்களைக் குத்திட்டு வைத்தவர்களாக (ஸஜ்தாவில்) இருந்தனர். அவர்களின் இரு பாதங்களிலும் என் கைகளை வைத்து (அவர்கள் இருக்குமிடத்தை அறிந்து கொண்டேன்) … … … என்று அன்னை ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார்கள்.

நூல்கள் : முஸ்லிம், அஹ்மத்

பெண்களைத் தொட்டால் ஒளூ நீங்கி விடும் என்றிருந்தால் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் நபியவர்களின் பாதங்களை தொட்டதுமே அவர்களின் ஒளூ முறிந்திருக்கும். உடனே மறுபடியும் ஒளூ செய்து தொழுதிருப்பார்கள். அன்னை ஆயிஷாவுக்கும் இந்த சட்டத்தை விளக்கி இருப்பார்கள். இந்த ஹதீஸிலிருந்து பெண்களைத் தொட்டால் ஒளூ நீங்காது என்பது தெளிவு.

“நான் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரண்டு கால்களும் அவர்கள் ஸஜ்தா செய்யும் இடத்தில் அமைந்திருக்கும். அவர்கள் ஸஜ்தா செய்யும் போது என்னைத் (தம் விரல்களால்) தொடுவார்கள். நான் என் கால்களை மடக்கிக் கொள்வேன். (ஸஜ்தாவிலிருந்து) அவர்கள் எழுந்தவுடன் மறுபடியும் (கால்களை) நீட்டிக் கொள்வேன்” என்ற அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல்கள் : புகாரி, முஸ்லிம், நஸயீ

இந்த ஹதீஸிலும், நபி(ஸல்) அவர்கள் தொழும் போது, அன்னை ஆயிஷா(ரழி) அவர்களைத் தொட்டிருப்பார்கள். பெண்களை தொடுவதால் ஒளூ நீங்கி விடும் என்றால், நபி(ஸல்) அவர்கள் தொழும் போது ஆயிஷா(ரழி) அவர்களைத் தொட்டிருக்க மாட்டார்கள். பெண்களைத் தொடுவதால் ஒளூ நீங்காது என்பதே ஹதீஸ்களிலிருந்து தெளிவாகின்றது. அது போல் ஆண்களைத் தொடுவதாலும், பெண்களின் ஒளூ நீங்காது.

‘பெண்களைத் தொடுதல்’ என்ற பிரச்சனை சர்வ சாதாரணமாகக் குடும்பங்களில் நடக்கக்கூடிய ஒரு காரியம். ஸஹாபாக்களின் வாழ்விலும் இது போல் நடந்திருக்கும். சர்வ சாதாரணமாக நிகழக் கூடிய இந்தக் காரியத்தால் ஒளூ நீங்கி விடும் என்றால் நபி(ஸல்) மிகத் தெளிவாக மக்களுக்குச் சொல்லி இருப்பார்கள்.

சிலர் “நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சட்டம் ” என்று அந்த ஹதீஸ்களுக்கு காரணம் கற்பிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சட்டம் என்றால், அதையும் நபி(ஸல்) அவர்கள் தெளிவாக்கி இருப்பார்கள். எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லித் தருவதற்குத்தான் அவர்களை அல்லாஹ் தூதராக்கினான்.

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் பார்க்கும் போது மேற்கூறப்பட்ட ஆயத்துக்கு “பெண்களிடம் உறவு கொண்ட பின்னர் குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யுங்கள்!” என்றே பொருள் கொள்ள வேண்டும். “பெண்களைத் தொட்டால்” என்ற பொருள் கொள்ள முடியாது.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் இன்னும் பல நபித்தோழர்களும் இந்த ஆயத்திற்கு இவ்வாறே பொருள் கூறியுள்ளனர். ‘தயம்மும்’ பற்றி நாம் எழுதும் போது இந்த ஆயத்திற்கு விரிவான விளக்கம் தருவோம். (இன்ஷா அல்லாஹ்)

*********************************

சிலரது பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படுவதில்லை?

ஒரு மனிதன் நீண்ட பிரயாணம் செய்து, புழுதி படிந்தவனாக, பரட்டைத் தலையனாக, இரண்டு கைகளையும் உயர்த்தி இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கிறான். ஆனால் அவனது உணவும், ஹராமானதாகவும் உள்ளது. அவன் அணிந்துள்ள ஆடையும் ஹராமானதாக உள்ளது. இந்த நிலையில் அவனது பிரார்த்தனை எங்ஙனம் ஏற்றுக் கொள்ளப்படும்? என்று நபி(ஸல்) கூறினார்கள்

அறிவிப்பு : அபூஹுரைரா (ரழி) நூல் : முஸ்லிம்

அந்நஜாத்: மார்ச், 1987 – ரஜப், 1407

Comments Off

Comments are closed.