Jan 28 2008
ஒன்றுபடுவோம்! – 1
Filed under 1987 ஜுலை,படிப்பினை by அந்நஜாத்
புலவர் செ. ஜஃபர் அலி, பி.லிட்.,
சமூகவியல்:
பண்பாடு அமையப் பெற்றவனே மனிதனாவான். சமூகம் என்று சொல்லும்போது ஒரு கொள்கையின் அடிப்படையில் ஒன்று சேரும் மனிதக் கூட்டத்தையே ‘சமூகம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றோம். எந்த சமூகம் ஒழுங்கு நியதிகளால் கட்டுப்படுத்தப்பட்டு சிறப்பாக்கப்படுகின்றதோ அந்த சமூகம் உலகின் உச்சியில் வைத்து மெச்சப்படும் என்பது ஒப்புக்கொள்ளப்படும் உண்மையாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மாசு மருவற்ற மனித சமூக அமைப்பை உருவாக்க, தன் தெள்ளிய திருமறையின் மூலம் வழிவகைகளைக் கூறிக் காட்டுகின்றான்,
“…… நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிறைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் விவாதம் புரிந்து கொண்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) விரோதிகளாக (ப்பிரிந்து) இருந்த சமயத்தில், அவன் உங்கள் இருதயங்களுக்குள் (இஸ்லாம் மூலம்) அன்பையூட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே அவனுடைய அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக் கிடங்குக்கருகில் இருந்தீர்கள். அதிலிருந்தும் உங்களை அவன் இரட்சித்துக் கொண்டான். நீங்கள் நேர்வழி பெரும் பொருட்டு அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகின்றான்” (அல்குர்ஆன் 3 : 103)
மனித சமுதாய அமைப்புக்கு ‘ஒற்றுமை’ மிகமிக அவசியமாவதை இறைவன் கூட்டிக்காட்டிவிட்டான்னன. இந்த ஒற்றுமை மனப்பான்மையை மனிதக் கூட்டம் பெறுவதற்கு ஒரே வழி ‘ஏகத்துவம்’ என்னும் தவ்ஹீதீன் நறுமணத்தை நுகர்வதேயாகும்.
ஏகத்துவம் என்பது யாது? அல்லாஹ் ஒருவனையே மாபெரும் சக்தியாளன் என எண்ணி அவனையே வணங்கி – அவனிடமே உதவி தேடுவதும், அவனுக்கு எவ்விதத்திலும் இணை கற்பிக்காமல் ஒப்புவமையே கூறாமல் வாழ்வதாகும். அல்லாஹ்வுக்கு நிகர் அல்லாஹ்வே!
இவ்வுலக இயக்கங்களுக்கெல்லாம் முழுமையான உரிமையாளனும் அல்லாஹ்வே! அந்த வல்லனை வணங்கி ஒருமைப் படுத்துவதன் மூலம் மனிதனுடைய கண்ணியம் காக்கப்படுகின்றது. எதற்கும் எவருக்கும் தலை தாழ்த்தாத மனப்பக்குவத்தைப் பெற்று விடுகின்றான் மனிதன்.
“…..நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்ப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள் உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் வலிமை குன்ற ஏதுவாகும். ஆகவே, நீங்கள் (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) பொறுமையாக இருங்கள். உறுதியாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான்்” (அல்குர்ஆன் 8 : 46)
மனித பண்புக்கு மகுடமாகத் திகழ்வது பொறுமையாகும். அதனால்தான அல்லாஹ், தொழுகையைப் பற்றிக் கூறுமிடங்களில் பொறுமையை மேற்கொள்ளவும் கட்டளையிடுகின்றான்.
‘பொறுமை’ கடலின் ஆழத்தை விட ஆழமானது; அதாவது சிறப்புமிக்க குணங்களில் தலையாது எனலாம். மனிதனுக்கு பெருமை தரும் பொறுமையை நாம் எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட இயலாது. வலிவுள்ள – பொழிவுள்ள மனித சமுதாயத்துக்கு ‘பொறுமை’ப் பண்பு எத்துணை தேவையானது எனபதை அனுபவத்தின் வாயிலாக நாம் அறியலாம்.
ஒன்றுபட்டால் தானே சிறப்புயர் மனித சமுதாயத்தை அமைக்கலாம்!
“விசுவாசிகளே (யாவரும்) உறுதியாகச் சகோதரர்களே! ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையில் (ஒழுங்கையும் சமாதானத்தையும் நிலை நிறுத்தி) சுமுகமாக இருங்கள். (இதில்) அல்லாஹ்வுக்குப் பயந்து நடவுங்கள். (இதனால்) அவனுடைய அருளைப் பெறலாம்” (அல்குர்ஆன் 49 : 10)
இறை நம்பிக்கையாளர்கள் – இறைவனை ஏகத்துவப்படுத்தும் இறை ஒருமைப்பாடு காண்பவர்கள் அனைவருமே சகொதரர்கள் போன்றவர்களே! இதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், என்னும் பாகுபாடோ, கருப்பன் – வெள்ளையன் என்னும் நிற வேறுபாடோ – கற்றவன் – கல்லாதவன் எனும் பேதங்களோ இல்லையெனலாம். ஆனால், அதே சமயத்தில், பயபக்தியுடையவன் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியவானாகத் திகழலாம். (அல்குர்ஆன் 49 : 13)
இறை நம்பிக்கை – அச்சத்துடன் கூடிய உணர்வுடையோன் எச்சூழ்நிலையிலும் தடுமாறுவதில்லை! உணர்வற்ற மனிதக் கூட்டங்கள் ஒரு போதும் இறையாற்றலை உணர்வதில்லை.
உணர்வு கொண்ட மனிதன் சமுதாய அமைப்புக்கே ஒற்றுமை தேவை! இந்த அமைப்பினால் தான் எதிர்கால சமூகம் வாழ்வு பெறும்; வளமும் பெறும்!
வல்ல அல்லாஹ், நம் அனைவரையும் அவனுடைய ஏகத்துவம் என்னும் ‘ஒற்றுமைக் கயிறை’ப் பலமாக – உறுதியாகப் பிடித்து ஒன்றுபட்டு வாழப் பேரருள் புரிவானாக! (வளரும்)
————————————————————————————————
நபி(ஸல்) அவர்கள் தனது கடைசி ஹஜ்ஜை (ஹஜ்ஜுல் விதாஃ) முதலில் உம்ரா செய்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு பின் இஹ்ரமணிந்து ஹஜ் நிறைவேற்றினார்கள். (தமத்துஃமுறை)
அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரழி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
—————————————————————————————-
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் கடைசி ஹஜ்ஜில் (ஹஜ்ஜுல் விதாஃ) கலந்து கொண்டோம். எங்களில் சிலர் உம்ராவுக்கும், சிலர் ஹஜ், உம்ரா என இரண்டிற்காகவும், இன்னும் சிலர் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் அணிந்திருந்தனர். உம்ராவுக்காக இஹ்ராமணிந்தவர்கள் (உம்ரா முடித்து) இஹ்ராமிலிருந்து விடுதலைப் பெற்றனர். பின் ஹஜ்ஜுக்ககாக இஹ்ராம் அணிந்து ஹஜ் நிறைவேற்றினர்; ஹஜ்ஜுக்காக மட்டும் அல்லது ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராமணிந்தவர்கள் “குர்பானி” கொடுக்கும் நாள் வரை இஹ்ராமிலிருந்து விடுதலைப் பெறவில்லை.
அறிவிப்பாளர் : ஆயிஷா(ரழி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
அந்நஜாத்: ஜுலை, 1987 – துல்காஃதா, 1407
***************
Comments Off