முஸ்லிமை சந்திக்கும் போது…..?

in 1996 நவம்பர் - டிசம்பர்,பொதுவானவை

மர்ஹூம்

    (ஒரு  முஸ்லிம், இன்னொரு முஸ்லிமை சந்திக்கும்போது. ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுவதும் ‘முஸாபஹா’ செய்வதும் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்திய நடைமுறையாகும். நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான முஸ்லிம்கள் இரண்டு கைகளாலும், மிகவும் சிறுபான்மையினர் ஒரு கையாலும், ‘முஸாபஹா’ செய்து வருகின்றனர். “இதில் சரியான முறை எது?” என்று சென்னையைச் சேர்ந்த சகோதரர் நூர்முகம்மது அவர்களும், மதுரை நரிமேட்டைச் சேர்ந்த கலீபா குலாம் ஹுஸைன் சுஹரவர்தீ என்பவரும் கேள்வி கேட்டிருந்தனர். அதற்கு விளக்கமாக இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.)

    இரண்டு கைகளால் ‘முஸாபஹா’ செய்ய வேண்டும் என்போர் புகாரியில் இடம் பெற்றுள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர். “நபி(ஸல்) அவர்கள் இப்னு மஸஊது(ரழி) அவர்களுக்கு ‘அந்த ஹிய்யாத்’கற்றுக் கொடுக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் தனது இரு கைகளால் இப்னு மஸ்ஊது(ரழி) அவர்களின் ஒரு கையைப் பிடித்திருந்தனர்.” என்பதுதான் அந்த ஹதீஸ்.

    நபி(ஸல்) அவர்கள் தனது இரு கைகளைப் பயன்படுத்திய காரணத்தால். இரு கைகளால் ‘முஸாபஹா’ செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கின்றனர் சிலர். இந்த ஹதீஸை ஆராயும்போது இரண்டு கைகளால் முஸாபஹா செய்வதற்கு இந்த ஹதீஸில் எவ்வித ஆதாரமும் கிடையாது என்பதை உணரலாம். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் முஸாபஹா’ செய்யும் போது இரண்டு கைகளைப் பயன்படுத்தினார்கள் என்று இந்த ஹதீஸில் குறிப்பிடப்படவில்லை. மாறாக “அத்தஹிய்யாத்” கற்றுக் கொடுக்கும் போது தனது இரு கைகளைப் பயன்படுத்தினார்கள் என்றே உள்ளது. ” ஒரு ஆசிரியர், மாணவருக்குஎதையேனும் கற்றுக் கொடுக்க விரும்பினால் தனது இரு கைகளால் அவரது கையைப் பிடித்துக் கொள்ளலாம்” என்று மட்டுமே இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.

    “முஸாபஹாவுக்கும் அதில் அதிகாரம் உள்ளது என்ற கருத்தை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், அந்த ஹதீஸ்படி, முஸாபஹா செய்பவர்களில் ஒருவர் இரண்டு கைகளையும், இன்னொருவர் ஒரு கையையும் பயன்படுத்த வேண்டும்” என்று தான் புரிந்து கொள்ள முடியும். அந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் இரு கைகளையும், இப்னுமஸ்ஊது(ரழி) ஒரு கையையும் பயன்படுத்தியுள்ளனர். முஸாபஹாவுக்கு ஆதாரமாக இந்த ஹதீஸைக் கருதுபவர்கள், ஒருவர் இரண்டு கைகளையும், இன்னொருவர் ஒருகையையும் பயன்படுத்த வேண்டும் என்றுதான் முடிவு செய்ய முடியுமே தவிர இருவருமே இரண்டு கைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இதில் ஆதார மில்லை. (யார் இரண்டு கைகளைக் கொடுப்பது, யார் ஒரு கையைக் கொடுப்பது என்பதையும் முடிவு செய்தாக வேண்டும்)

    ஆனால் முஸாபஹா செய்யும் போது ஒரு கையைப் பயன்படுத்துவது பற்றி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் சிலதைக் கீழே பட்டியல் போட்டுள்ளோம்.

    இன்னும் பல ஹதீஸ்களும் ஒரு கையால் முஸாபஹா செய்வது பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இரண்டு கைகளால் முஸாபஹா செய்வதற்கு நேரடியாக எந்த ஒரு ஹதீஸையும் நாம் காணமுடியவில்லை; புகாரீயில் இடம் பெற்றுள்ள  அந்த ஒரே ஒரு ஹதீஸையும் முஸாபஹா பற்றியது அல்ல. அது முஸாபஹாவுக்கு உரியது என்று வைத்துக் கொண்டாலும் ஒரு கையால் முஸாபஹா செய்பவர்கள் தான் அந்த ஹதீஸையும் செயல்படுத்துகிறார்கள். யாரேனும் நம்மிடம் முஸாபஹாவுக்கு இரண்டு கைகளை மட்டும் நீட்டுங்கள்! அந்த ஹதீஸலில் உள்ளபடி அப்போதும் நாம் அமல் செய்து விட்டோம். ஏனெனில் அந்த ஹதீஸலில் ஒருவர் இரண்டு கைகளையும், இன்னொருவர் ஒரு கையையும் பன்படுத்தினார்கள் என்றுதான் உள்ளது. இரண்டு நபர்களும் இரண்டு கைகளைப் கொடுக்க அந்த ஹதீஸில் ஆதாரம் எதுவும் கிடையாது.

எண்    நூல்            பாடம்                        அறிவிப்பவர்

1                    புகாரீ            தப்ஸீர்                  அபூசயீது இப்னு முஅல்லா(ரழி)

2.                    புகாரீ            முஆனகா              இப்னு அப்பாஸ்(ரழி)

3.                 புகாரீ, அஹ்மத்    நேர்ச்சை       அப்துல்லா இப்னு ஹிஷாம்(ரழி)

4.                 முஸ்லிம்           பழாயில்          அனஸ்(ரழி)

5.                அபூதாவூத்           கியாம்           அன்னை ஆயிஸா(ரழி)

6.                திர்மிதீ                முஸாபஹா      அனஸ்(ரழி)

7.               அபூதாவூத்      ஹுஸ்னுல் உஷ்ரத்        அனஸ்(ரழி)

8.             இப்னுமாஜ்ஜா     இக்ராமுர்ஜுல்            அனஸ்(ரழி)

9.            அஹ்மத்                பாகம்3, பக்கம்111          அனஸ்(ரழி)

10.            திர்மிதீ                  பாகம்2, பக்கம் 97       அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி)

11.           அத்காருன்னவவீ        பக்கம் 2, 228        அனஸ்(ரழி)

12.            தாரமீ,                பாகம் 2, பக்கம் 286     அனஸ்(ரழி)

13.        அஹ்மத்                   பாகம் 4,  பக்கம் 289     அபூதாவூது(ரழி)

14.           அஹ்மத்                   பாகம் 5, பக்கம் 267      அபூ உமாமா(ரழி)

15.          தர்கீப், தர்ஹீப்      பாகம் 5, பக்கம் 103      ஹுதைபா(ரழி)

16.          அஹ்மத்,                   பாகம் 3, பக்கம் 142        அனஸ்(ரழி)

17.         அஹ்மத்                   பாகம் 4, பக்கம்291       பரா இப்னு ஆஸிம்(ரழி)

18.        தர்கீப் தர்ஹீப் ஹ       பாகம் 5, பக்கம் 104        சல்மான் பார்ஸீ(ரழி)

19.        அஹ்மத்              பாகம் 5, பக்கம் 360         அபூஉமாமா (ரழி)

20.       இப்னு அஸாகிர்                    இப்னு உமர்(ரழி)

21.        திரிமிதீ                பாகம் 2, பக்கம் 255            நாஃபிவு(ரழி)

22.       அஹ்மத்                பாகம் 5, பக்கம் 163        அபூதர் (ரழி)

    எவ்வித ஆதாரமுமில்லாமல் ஏன் மக்களிடம் இந்தப் பழக்கம் வேரூன்றியது தெரியுமா? அதற்கும் ஒரு பின்னணி உண்டு. ஹிழ்று(அலை) அவர்கள்  பல மனிதர்களின் தோற்றத்தில் வருவார்களாம். சிலருடன் முஸாபஹா செய்வார்களாம். அவர்களால் முஸாபஹா செய்யப்பட்டு விட்டால் உடனே அவர் இறை நேசராம்! ஹிழ்று(அலை) அவர்களின் வலது கைப் பெருவிரல் எலும்பு இருக்காதாம். இரண்டு கைகளால் முஸாபஹா செய்யும்போது  மற்றவர்களின் வலது கைப் பெருவிரலை அழுத்திப் பார்க்க வேண்டுமாம். எலும்பு இல்லாவிட்டால் ஹிழ்று(அலை) என்று புரிந்துக் கொள்ள வேண்டுமாம். இந்தக் கைகளால் முஸாபஹா செய்வது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஹிழ்று(அலை) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை முன்பே நாம் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தி இருக்கிறோம். எனவே ‘முஸாபஹா’ ஒரு கையால் செய்வதே சுன்னத் என்று நாம் தெரிந்து கொள்கிறோம், குன்யதுத் தாலி பீன் என்ற நூலில் அப்துல்காதிர் ஜிலானி(ரஹ்) அவர்கள் “வலது கையால் செய்ய வேண்டியவை” என்ற தலைப்பில் முஸாபஹாவையும் சேர்த்துள்ளார்கள். இமாம் நவவீ அவர்கள் வலது கையால் முஸாபஹா செய்வதுதான் விரும்பத்தக்கது என்ற கூறியுள்ளனர். இவற்றிலிருந்தும் ஒரு கையால்தான் முஸாபஹா செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.

    இரண்டு கைகளால் முஸாபஹா செய்பவர்களில் சிலர், வலது கையை இடது புறமாகக் கொண்டு சென்று, இடது கையை வலது புறமாகக் கொண்டு  சென்று (ஏறத்தாழ ‘பெருக்கல்’ வடிவத்தில் கைகளை வைத்துக் கொண்டு) முஸாபஹா செய்வதும், இன்னும் சிலர் வலது கையை, தன் தலைக்கு நேராக வைத்துக் கொண்டு இடது கையை அடிவயிற்றுக்கு நேராக வைத்துக் கொண்டு முஸாபஹா செய்வதும், பார்க்க தமாஷாக இருக்கும். இந்த விநோதங்களை எல்லாம் எங்கிருந்து கற்றார்களோ தெரியவில்லை.

    சுன்னத்தான முறைப்படி நாம் ஒருகையை நீட்டினால், ஏதோ அதிசயப் பிராணியைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள். நாகரீகமான ஒரு முஸாபஹாவை நம்மிடமிருந்து மேனாட்டவர் கற்றுக் கொண்டு செய்து வருகின்றனர். நம்மவர்கள்தான் அந்த “சுன்னத்தை மாற்றிக் கொண்டோம்” சுன்னத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு கையால் முஸாபஹா செய்வோம்.!

    முஸாபஹா செய்யும்போது எதுவும் ஓத வேண்டும் என்று எவ்வித ஆதாரமும் கிடையாது. “முஸாபஹா செய்யும் போது ஸலவாத் ஓத வேண்டும்” என்று இப்னுஹப்பானில் இடம் பெற்றுள்ள ஹதீஸ், முற்றிலும் நிராகரிக்ப்பட்டதாகும் என்று இமாம் இப்னு ஹப்பான்(ரஹ்) அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். முஸாபஹா செய்யும்போது வேறு எந்த திக்ருகளும் ஓத வேண்டும் என்பதற்கும் ஆதாரம் கிடையாது. குறிப்பிட்ட சில தொழுகைக்குப் பின் முஸாபஹா செய்வதற்கும் ஸஹீஹான ஆதாரங்கள் எதுவும் கிடையாது.

Previous post:

Next post: