எனது ஹஜ்ஜின் நோக்கம்! அனுபவம்!!

Filed under பொதுவானவை by அபூ அப்துல்லாஹ்

- அபூ அப்துல்லாஹ்

தொடர் : 8

நபி(ஸல்) அவர்களால் தெள்ளத் தெளிவாக, எளிதாகக் காட்டித்தரப்பட்ட ஐம்பெறும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை, மார்க்கத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பேர்வழிகள் என்று கிளம்பி இருக்கும் மவ்லவி புரோகிதர்கள் எந்த அளவு கடினமானதாகவும், மூட நம்பிக்கைகள் நிறைந்ததாகவும், ஆதாரமற்ற வெற்றுச் சடங்குகள் நிறைந்ததாகவும் ஆக்கி, மக்களை ஏமாற்றி அற்ப உலக ஆதாயம் அடைந்து வருகிறார்கள் என்பதை, அனுபவ வாயிலாக, நேரடியாகக் கண்டதை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம்.

அந்த வரிசையில், இந்த இதழில் ஆதி இல்லமாம் கஃபாவில் தவாஃபின் பெயரால் நடந்து வரும் பித்தலாட்டங்களைப் பார்ப்போம். இறை இல்லமான கஃபாவில் கடமையான தொழுகைக்குப் பிறகு செய்யப்படும் செயல்களில் மிகவும் ஏற்றமானது தவாஃபாகும். ‘தவாஃப்’ என்றால் இறை காரியத்தை ஏழு முறை இடது புறமாக சுற்றி வருவதாகும். அதாவது ஏழுமுறை சுற்றுவதாகும். இது சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து, மக்களுக்கு நேர்வழியைப் போதித்த இறைவனின் நேசர் இப்றாஹீம்(அலை) அவர்கள், அந்த இறைவனின் ஆணைப்படி நடைமுறைப்படுத்திய, இறைவனை நினைவு கூறும் ஓர் உயரிய செயலாகும். அன்றிலிருந்து இன்று வரை 5000 வருடங்களாக இந்த தவாஃப் எனும் செயல் தடைபடாது நடந்து வருகிறது.

ஆனால், காலத்திற்குக்காலம் ஒவ்வொரு சமுதாயத்திலும் சட்ட விரோதமாக, திருட்டுத்தனமாக நுழைந்து கொண்டு, ஆதிக்கம் செலுத்தி அற்ப உலக ஆதாயம் அடைந்து வரும் புரோகித வர்க்கம், இறைவனது கட்டளைப்படி இறைவனை நினைவு கூறும் இந்த “தவாஃப்” என்ற ஆதி ஆலயத்தைச் சுற்றிவரும் பழைமையான செயலிலும், பல கற்பனைகளைக் கலந்து மாசுபடுத்தி அதனை வெற்று மூடச் சடங்காக ஆக்கி வருகின்றனர்.

இன்றைக்கு சுமார் 1450 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இறை இல்லமான கஃபாவை சுற்றி வாழ்ந்து கொண்டிருந்த, இப்றாஹீம்(அலை), அவர்களின் மகனார் இஸ்மாயீல்(அலை) அவர்களின் வாரிசுகளான குறைஷ்கள், அந்த இறை இல்லத்தின் உள்ளே எண்ணற்ற சிலைகளையும், வெளியே பல சமாதிகளையும்(கபுரு) வைத்துக்கொண்டு, படைத்த அந்த ஓரிறைவனை மட்டுமே வழிபட கடமைப்பட்ட அவர்கள், தங்கள் கைகளால் வடித்துக் கொண்ட பொய்க் கடவுளர்களை வழிபடும் வழிகேட்டில் மூழ்கி இருந்தார்கள். பற்பல மூட சடங்கு சம்பிரதாயங்ளோடு இந்த ‘தவாஃப்’ என்ற செயலையும் அரங்கேற்றி வந்தார்கள்.

முழு நிர்வாணமாக ஆணும், பெண்ணும் அந்த ஆலயத்தைச் சுற்றி வருவதும் அதில் அடங்கும். தங்கள் கைகளால் கற்பனையாக கடைந்தெடுக்கப்பட்ட கற்சிலைகளையும், சமாதிகளில் உள்ளவர்களையும் சப்தமிட்டு அழைத்து வழிபடுவதும் அவற்றில் அடங்கும்.

இப்படி இறைநேசர் இப்றாஹீம்(அலை) அவர்களாலும், பொறுமைசாலி என இறைவனே புகழ்ந்துரைக்கும் இப்றாஹீம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களாலும் (37:101) புதுப்பித்துக் கட்டப்பட்டு, அந்த ஒரே இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்ற அறிவுரையோடு, நடைமுறைப்படுத்தப்பட்ட, மிக உயரிய செயலான இந்த “தவாஃப்”, அவ்விருவரது சந்ததிகளான குறைஷ்களாலேயே இந்த அளவு அலங்கோலப்படுத்தப்பட்டு, மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், இறைக் கட்டளைகளுக்கு முரணாக, முன்சென்ற நபிமார்கள், நல்லவர்களை சிலைகளாகவும், சமாதிகளாகவும், தங்கள் கைகளாலேயே கற்பனையாக வடிவமைத்துக் கொண்டு, தாங்கள் செய்யும் தவாஃப்களில் அந்த முன்னோர்களை அழைத்து உதவி தேடும், ஷிர்க்கான இணை வைக்கும் கொடிய பாவமான செயல்களைச் செய்து, தங்களை நரகின் விறகுக்கட்டைகளாக ஆக்கிக் கொண்டிருந்தனர். அவற்றையே இப்றாஹீம்(அலை) கற்றுக் கொடுத்த வணக்க வழிபாடாக நம்பிக்கொண்டிருந்தனர்.

அப்படிப்பட்ட தவறான துர்போதனைகளை அன்றைய தாருந்நத்வா ஆலிம்கள்-அறிஞர்கள் அந்த மக்களுக்குப் போதித்தும் கொண்டிருந்தனர். அந்த மக்களும் கண்மூடித் தனமாக அந்த ஆலிம்கள் பின்னால் சென்று இப்படிப்பட்ட இறைவனுக்கு இணைவைக்கும் செயல்களை வணக்க வழிபாடாக நம்பி மிகுந்த பக்தி சிரத்தையுடன் அரங்கேற்றி வந்தனர்.

“ஆதத்தின் சந்ததிகளை வழிகெடுத்து, அவர்களைக் கொண்டு நரகத்தை நிரப்புவேன்” என்று அல்லாஹ்வின் முன்னால் சபதம் செய்து, தன்னுடைய அக்காரியத்தில் கண்ணாக இருக்கும் ஷைத்தானும், அந்த தாருந்நத்வா ஆலிம்களுக்குப் பெரிதும் துணையாக இருந்து, அவர்களின் வழிகேட்டுப் போதனைகளை – நரகை நிரப்பும் போதனைகளை குறைஷ்களுக்கு மிக அழகாகக் காட்டினான். அல்லாஹ் 62:2, 3:103-ல் கூறி இருப்பது போல் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் நரகின் விளிம்பில் இருந்தார்கள்.

இந்த நிலையில் அல்லாஹ், முஹம்மது(ஸல்) அவர்களை இறுதி நபியாகத் தேர்ந்தெடுத்து, நேர் வழியை – சத்திய பாதையை ‘வஹீ’ எனும் தனது அறிவிப்புகள் மூலம் தெளிவு படுத்தினான். அதற்கு முன்னர் தமது 40-வது வயதுவரை நபி(ஸல்) அவர்களுக்கு நேர்வழிகாட்டல் நூல் என்பதோ, ஈமான்-விசுவாசம் என்பதோ – நேர்வழி என்பதோ, என்னவென்றே தெரியாத நிலையில் இருந்தார்கள் என்று, அல்லாஹ் தனது இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனின் 42:52-ல் தெள்ளத் தெளிவாகத் திட்டமாக அறிவித்துள்ளான்.

இறைவன் புறத்திலிருந்து ‘வஹீ’ மூலம் நேர்வழி இதுதான் என திட்டமாக அறிந்துகொண்ட பின்னர், நபி(ஸல்) அவர்கள், தமது குடும்பத்தாரான குறைஷ்கள் தாருந் நத்வா ஆலிம்களின் வசீகர வலையில் சிக்கிச்சீரழிந்து நரகின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு (பார்க்க3:103) இரத்தக் கண்ணீர் வடித்தார்கள், துடியாகத் துடித்தார்கள். குறைஷ்களின் வழிகேட்டை தெளிவாக விளக்கி அதிலிருந்து விடுபட வேண்டினார்கள், விடாது அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் அழகிய உபதேசங்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகின. அதற்கு மாறாக நபி(ஸல்) அவர்களையே, இறைவனின் இல்லமான கஃபாவில், இறைவனின் வழிகாட்டல்படி இறைவனை மட்டும் வழிபட, அந்த குறைஷ்கள் அனுமதிக்கவில்லை. எண்ணற்ற கொடுமைகளை இழைத்தனர். இறைவழிபாட்டில் ஈடுபட்டிருக்கும்போது நாற்றமெடுக்கும் ஒட்டகக் குடலை நபி(ஸல்) அவர்கள் மீது தூக்கிப் போட்டுக் கொடுமைப்படுத்தினார்கள். இப்படி ஏட்டில் எழுத முடியாத அளவிற்கு நபி(ஸல்) அவர்களுக்கும், அவர்களின் போதனையை ஏற்று நேர்வழி நடந்த நபிதோழர்களுக்கும் கொடுமைகள் இழைத்து வந்தனர் குறைஷ்கள்; அவர்களை இவ்வாறு கொடுமைகள் புரிய தூண்டிவிட்டவர்கள் தாருந்நத்வா ஆலிம்கள்.

குறைஷ்களின் கொடுமைகள் தாங்க முடியாது நபி(ஸல்) இறைவனின் கட்டளைப்படி மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்கள். கடுமையான உழைப்பிற்குப்பின்னர், நபி(ஸல்) அவர்களின் தலைமையில் இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு ஜமாஅத்-கூட்டம் அமைந்தது. எனவே மக்காவை விட்டு மதீனா சென்ற எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், போர் இன்றி, இரத்தம் சிந்தாமல், இறை இல்லமான கஃபத்துல்லாஹ் நபி(ஸல்) அவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் வந்தது. மக்காவின் மதீனாவின் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றார்கள். உடனடியாக நபி(ஸல்) அவர்கள் செய்த வேலை என்ன தெரியுமா? அலீ(ரழி) அவர்களுக்குக் கட்டளையிட்டு, கஃபாவினுள் இருந்த சிலைகளை எல்லாம் உடைத்து தூக்கி எறியச் சொன்னார்கள். வெளியே இருந்த சமாதிகளை – கப்ருக்களை எல்லாம் உடைத்து தூக்கி எறியச் சொன்னார்கள். வெளியே அவற்றில் இப்றாஹீம் (அலை), இஸ்மாயீல்(அலை) இருவரது சிலைகளும் இருந்தன. இன்று கஃபாவினுள் சிலைகளும் இல்லை, கஃபாவிற்கு வெளியே சமாதிகள் – கப்ருகளும் இல்லை. கடந்த 1420 ஆண்டுகளாக இந்த புனித நிலை காப்பாற்றப்பட்டு வருகிறது.

இங்கு ஒரு முக்கிய விஷயத்தை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சில மாதங்களுக்கு முன்னர் களியக்காவிளையில் சமாதி வழிபாட்டுக்காரர்களுக்கும் இயக்க வழிபாட்டினரான TNTJயினருக்கும் இடையில் இடம் பெற்ற விவாதத்தில், சமாதி வழிபாட்டை ஆதரித்துப் பேசிய அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் “ஸவ்வா” என்ற அரபி பதம் சீர்படுத்துகிறது ஒழுங்குபடுத்துகிறது என்ற பொருளில்தான் அல்குர்ஆனில் இடம் பெறுகிறது. உடைத்து தரைமட்டமாக்குவதை “ஸவ்வா” என்ற பதம் குறிப்பிடாது. கப்ரு சம்பந்தப்பட்ட ஹதீஸ்களில் வரும் “ஸவ்வா” என்ற பதம் கப்ருகளை சீர்படுத்தி ஒழுங்குபடுத்துவதைத்தான் குறிக்கும். உடைத்து தரைமட்டமாக்குவதைக் குறிக்காது என சமாதி வழிபாட்டை நியாயப்படுத்திப் பேசினார். இயக்க வழிபாட்டினர் தங்கள் சொத்தை வாதத்தை வைத்தனரே அல்லாமல், ஆதாரத்தை எடுத்து வைக்கவில்லை.

அவரது கூற்றுப்படி கஃபாவின் வெளியிலிருந்த கப்ருகள் – சமாதிகள் சீர்செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தால், அவை இன்றளவும் கஃபாவிற்கு வெளியில் இருக்க வேண்டுமே! அப்படி ஒரு கப்ரும் இல்லையே! இதை கப்ரு வழிபாடு செய்கிறவர்கள் சிந்திக்க வேண்டாமா? மேலும் அல்குர்ஆன் அத்.91- வச.14-ல் இறைவன்

“ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தரித்துவிட்டனர். ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும்(அழித்துச்) சரியாக்கி விட்டான்”

என்று கூறுகின்றானே? அவர்களை அழித்து இல்லாமலாக்கிவிட்டதை அல்லாஹ் ஃபஸவ்வாஹா” என்று தெளிவாக நேரடியாகக் கூறுகிறானே? இதற்கு கப்ரு வழிபாட்டுக்காரரான ஜமாலி என்ன விளக்கம் வைத்திருக்கிறார்? 18:102-106 வரையிலுள்ள இறைக் கட்டளைகளான எச்சரிக்கைகளை எவ்வித சுயவிளக்கமும் இல்லாமல் படித்து விளங்குகிறவர்கள், அல்லாஹ்வின் அடியார்களை தங்களுடைய பாதுகாவலர்களாக – அதாவது அவுலியாக்களை இடைத்தரகர்களாக -பரிந்துரை செய்பவர்களாக? எடுத்துக் கொள்ளும், இந்த கப்ரு வழிபாட்டுக்காரர்கள் தெளிவான நிலையில் இறைவனுக்கு இணை-ஷிர்க் வைக்கிறார்கள். அவர்களின் நற்செயல்கள் அனைத்தும் அழிந்துவிடும். அவர்கள் சென்றடையும் இடம் நரகமே, அதிலிருந்து அவர்களுக்கு விடுதலையே இல்லை என்பதைத் திட்டமாக விளங்க முடியும்.

இப்போது எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு வருவோம். ஹிஜ்ரி 8-ல் மக்கா வெற்றிக்குப்பிறகு கஃபாவுக்குள் இருந்த சிலைகள் அகற்றப்பட்டன. வெளியே இருந்த கப்ருகள் அனைத்தும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. நிர்வாணமாக தவாஃப் செய்யும் கேவலமான செயல் தடுக்கப்பட்டது. இறைவனுக்கு சிலைகளையும், கப்ருகளையும் இணைவைத்து வணங்கும் காஃபிர்கள் – அதாவது இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் கொண்டு வந்த நிறைவுபெற்ற இஸ்லாம் மார்க்கத்தை ஏற்கமாட்டோம், எங்களின் மூதாதையர்களின் மதத்திலேயே நிலைத்திருப்போம் என்று பகிரங்கமாக கூறியவர்கள் அடுத்த ஆண்டிலிருந்து மக்காவுக்கு வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

இப்படி, இறை இல்லமான கஃபாவில் இறைவனுக்கு இணை வைக்கும் அனைத்துச் செயல்பாடுகளும் ‘நிர்மூலமாக்கப்பட்டு, ஏகன் இறைவனை மட்டும் வழிபட்டு, அவனது கட்டளைப்படி ‘தவாஃப்’ எப்படிச் செய்ய வேண்டுமோ, அந்த முறைப்படி ‘தவாஃப்’ செய்வது, நபி(ஸல்) அவர்களின் விடைபெறும் ஹஜ்ஜில் செயல்படுத்திக் காட்டப்பட்டது. கஃபாவை இடப்புறமாக ஏழுமுறை சுற்றி வருவது ஒரு ‘தவாஃப்’ ஆகும். முதல் சுற்றை ‘ஹஜ்ருல் அஸ்வத்’ என்ற கருப்புக் கல்லுக்கு நேராக நின்று ஆரம்பித்து, ஒவ்வொரு சுற்றாக முடித்து ஏழாவது சுற்றை அதே கருப்புக் கல்லுக்கு நேராக வந்து தவாஃபை முடிக்க வேண்டும். தவாஃபின் ஒவ்வொரு சுற்றிலும் குறிப்பிட்ட இந்த துஆவைத்தான் ஓத வேண்டும் என்று நபி(ஸல்) காட்டித்தரவில்லை.

அதற்கு மாறாக தங்களுக்குத் தெரிந்த துஆ, குர்ஆன் வசனங்கள், நபி(ஸல்) கற்றுத்தந்த திக்ருகள், தங்களுடைய ஆகுமான தேவைகளை தங்களுக்குத் தெரிந்த மொழிகளிலேயே இறைவனிடம் கேட்பது, இப்படி எவ்வித நிபந்தனையுமில்லாமல் ‘தவாஃப்’ செய்வதையே நபி(ஸல்) கற்றுத்தந்தார்கள். ருக்னுல் யமானி, (யமனை நோக்கியுள்ள மூலை) மற்றும் ஹஜ்ருல் அஸ்வத் (கருப்புக்கல்) இவற்றிற்கு இடைப்பட்ட இடத்தில் மட்டும் “ரப்பனா ஆத்தினாஃபித்துன்யா ஹஸனத்தன், வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்” – எங்கள் இறைவா இவ்வுலகில் அழகானதையும், மறுமையில் அழகானதையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக, நரக நெருப்பிலிருந்தும் எங்களைக் காப்பாயாக என்று பிரார்த்தனை செய்யக்கற்றுத் தந்தார்கள்.

ஜன நெருக்கடி இல்லாத சமயத்தில் நேரடியாகக் கருப்புக் கல்லை முத்தமிடவும், நெருக்கடி சமயத்தில் கையால் தொட்டு முத்தமிடவும், இன்னும் நெருக்கடி ஏற்பட்டால் கைத்தடியால் தொட்டு முத்தமிடவும், அதிக நெருக்கடி சமயத்தில் கைகளால் சமிக்கை செய்து முத்தமிட்டுக் கொள்ளவும், நபி(ஸல்) காட்டித்தந்தார்கள். அதற்காக முண்டியடித்துக் கொண்டு, மற்றவர்களை இடித்துத் தள்ளிக் கொண்டு, மற்றவர்களை சிரமப்படுத்தி அக்கல்லை தொடவேண்டாம். அது உங்களின் நற்செயல்களை அழித்துவிடும் என்றும் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

ருக்னுல்யமானி மூலையை நேரடியாகத் தொட வாய்ப்பிருந்தால் தொட்டு முத்தமிடவும். அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால், இதர இரண்டு மூலைகளைப்போல் அந்த மூலையையும் கடந்து விடவும். அதைத் தொடுவதற்கு தள்ளுமுள்ளில் ஈடுபட வேண்டாம். சமிக்கை மூலம் தொடுவதாக காட்டவும் வேண்டாம் என்பதை தெளிவாக நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள் நபி(ஸல்) அவர்கள். மேலும் கஃபாவின் வேறு எந்த இடத்தையும் தொடுவதால் நன்மை கிடைக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லை. ஆக அல்லாஹ்வுக்கு பொருத்தமான முறையில் தவாஃப் செய்வது எப்படி என்பதை நபி(ஸல்) அவர்கள் வெள்ளை வெளேர் என்ற நிலையில் மிகத் தெளிவாக நடைமுறையில் செய்து காட்டியும், தவறான செயல்பாடுகளை சுட்டிக் காட்டியும் எச்சரித்துள்ளார்கள்.

ஆனால் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டுள்ள புரோகித மவ்லவிகள் இன்று தவாஃபுடைய பெயரால் என்னென்ன அநியாயங்களை, அட்டூழியங்களை, மார்க்க முரணான காரியங்களை, ஷிர்க், பித்அத்களை கொஞ்சமும் இறை அச்சமின்றி நடைமுறைப்படுத்தி, அவர்களை நம்பியுள்ள அப்பாவி முஸ்லிம்களை வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள் என்பதை விரிவாக அடுத்துப் பார்ப்போம்.

அன்று அந்த அய்யாமுல் ஜாஹிலியா காலத்தில் கஃபதுல்லாஹ்வில் இருந்த சிலைகள் இன்று இல்லை, சமாதிகள் இன்று இல்லை. முழு நிர்வாணமாக தவாஃப் செய்வது இன்று இல்லை. ஆனால் அந்த சிலைகளின் பெயரால், சமாதிகளின் பெயரால், அந்த சிலைகளுக்குரியவர்களை சமாதிகளுக்குரியவர்களை அழைத்து எப்படி அன்றைய குறைஷ்கள் இறைவனுக்கு இணை வைக்கும் மாபெரும் குற்றத்தை-பாவத்தைச் செய்தார்களோ அதுபோன்றே இணை வைக்கும் மாபாதகச் செயலை இன்றைய முஸ்லிம்கள் செய்யும் அவல நிலைக்கு இன்றைய புரோகிதர்களான மவ்லவிகள் கற்பனைகளை அவிழ்த்து விட்டிருப்பதை விரிவாக அடுத்துப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

Comments Off

Comments are closed.