நாடு எங்கே போகிறது?

in 2008 டிசம்பர்

நாடு எங்கே போகிறது?

12.11.2008 சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் மாணவர்களிடையே நடந்த மோதல், காட்டுமிராண்டி தாக்குதல்களை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். சினிமாக்களில் இடம் பெறும் போலி கிராஃபிக் வன்முறைக் காட்சிகளை எல்லாம் தோற்கடிக்கும் விதமாக சட்டக்கல்லூரி வளாகத்தில், அதுவும் காவல் துறையினரின் கண்காணிப்பிலேயே அரங்கேறின அக்கோரக் காட்சிகள்.

 ஆம்! நாளைய இந்திய நாட்டின் நீதிபதிகளாக, வழக்குரைஞர்களாக ஆகப் போகும் மாணவர்களிடையேதான் இந்த அராஜக அக்கிரம அநியாயங்கள் அரங்கேறின. தொலைக் காட்சியில் அந்த அக்கிரம நிகழ்வுகளைக் கண்டவர்களின் இரத்தம் உறைந்து போயிருக்கும். பலர் மூர்ச்சையாகிப் போயும் இருப்பார்கள்.

ஏதோ அதிர்ஷ்டவசமாக அக்கோரக் காட்சிகளை விடியோவில் படம் பிடித்து மக்களுக்கு காட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று சென்னையில் மட்டுமல்ல. மதுரையில் மட்டுமல்ல. தமிழகம் மட்டுமல்ல. நமது இந்திய நாடெங்கும் இந்தக் கோரக் காட்சிகளை எல்லாம் மிஞ்சும் அதிகோரக் காட்சிகள் காவல் துறையினரின் கண்காணிப்பிலேயே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

சிறிதும் ஈவு இரக்கமின்றி காக்காய் குருவிகளைச் சுட்டுப் பொசுக்குவது போல்  மனிதர்கள் சுட்டுப் பொசுக்கப்படும் கோரக் காட்சிகள், உயிரோடு நெருப்பிலிட்டு எரித்துக் கரிக்கப்படும கோரக் காட்சிகள், பெண்களை கற்பழித்துக் கொல்லும் கோரக் காட்சிகளை பெண்களை கற்பழித்துக் கொல்லும் கோரக் காட்சிகள். கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து, எந்தப் பாவமும் அறியா குழந்தையை சூலாயிதத்தில் குத்தி எடுத்து நெருப்பிலிட்டு பொசுக்கும் கோரக் காட்சிகள், சொத்து சுகங்களை சூரையாடுவதும், முடியாவிட்டால் எரித்து சாம்பலாக்கும் கோரக் காட்சிகள் இப்படிப்பட்ட பல வகையான கோரக் காட்சிகள் நமது தாய் திருநாட்டில் அனுதினமும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

மனிதன் நாகரீகமடையா காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தானே அந்தக் காலத்திலும்  இப்படிப்பட்டக் காட்டுமிராண்டி கோரக் காட்சிகள் இடம் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. ஆம்! மனிதனுக்கு வெளியே உள்ள பொருள்கள் அனைத்தும் முன்னேற்றமடைந்துள்ளன. நாகரீகம் அடைந்துள்ளனவே அல்லாமல் மனிதன் மிகமிகப் பின்னேற்றம் அடைந்துள்ளான்; மேலும் மேலும் பின்னேற்றம் அடைந்து வருகிறான் என்பதே உண்மை. மனிதன் தனக்கு வெளியே உள்ளவற்றில் அயராது பாடுபட்டு வருகிறானே அல்லாமல் தன்னில் பாடுபடுவதை மறந்துவிட்டான். அதனாலேயே இந்தப் பின்னேற்றம்.

சிறிது பின்னோக்கி நோட்டமிட்டுப் பாருங்கள். 25 ஆண்டுகளுக்கு முன்னால். 50 ஆண்டுகளுக்கு முன்னால் 100 ஆண்டுகளுக்கு முன்னால் இப்படிப்பட்ட கோரக் காட்சிகளை மக்கள் கண்டிருப்பார்களா? கண்டிருக்க முடியாது. இந்த அளவு மனிதன் இரண்டு கால் மிருகமாக மாறவில்லை. இந்த அளவு முன்னேற்றம் என்ற பெயரால் மனிதன் பின்னேற்றம் அடைந்திருப்பதற்குக் காரணம் என்ன?

ஆம்! சினிமா துறையே மனிதப் புனிதனாக ஆக வேண்டிய மனிதனை இரண்டு கால் மிருகமாக மாற்றி வருகிறது. இன்றைய சினிமாக்களை சிறிது நடுநிலையோடு நோட்டமிட்டுப் பாருங்கள் சகல சீரழிவுகளும், அநாச்சாரங்களும், அட்டூழியங்களும், குடி, கூத்து, மது, மாது, சூது, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஈவ்டீஸிங் என அனைத்து வகை அநியாயங்களும் சினிமாவிலிருந்துதான் உற்பத்தியாகின்றன. எப்படித் திருடுவது, எப்படி கொள்ளை அடிப்பது, எப்படி கொலை செய்வது, கற்பழிப்பது, ஏமாற்றுவது என அனைத்து வகை துர்க்கலைகளையும் கற்றுக் கொடுக்கும் கலாசாலையாக சினிமா துறை முன்னேறி வருகிறது. கிராஃபிக் தந்திரம் கொண்டு உண்மை போல் காட்டப்படும் போலிக் காட்சிகள், சண்டைக் காட்சிகள், காமக் களியாட்டங்கள், ஆட்டங்கள், இன்னும் பல அட்டூழியங்கள் இவை அனைத்தும் இன்றைய தலைமுறையினரின் பிஞ்சு நெஞ்சங்களில் அப்படியே பசுமரத்தாணிபோல் பதிந்து விடுகின்றன. சினிமாவில் நடிக, நடிகையரின் நடிப்பில் காட்டப்படும போலிக் காட்சிகளை உண்மைபோல் நம்பி விடுகிறார்கள் மக்கள்.

மக்களின் இந்த மூட நம்பிக்கையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க வரிசையாக நிற்கும் நடிகர்களைப் பார்க்கத்தானே செய்கிறோம். ஆக! மக்கள் நிஜ வாழ்க்கையிலிருந்து போலி வாழ்க்கைக்கு மாற சினிமா துறையே வழி வகுக்கிறது. சினிமாவில் அடிக்கடி பார்த்து வரும் போலிக் காட்சிகளை உண்மை என நம்பி அவற்றை நிஜ வாழ்க்கையில் அரங்கேற்ற முற்பட்டிருக்கிறார்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள். அதன் கோரவிளைவுகளைத்தான் நான்கு மாணவர்கள் அனுபவிக்க நேர்ந்தது. மக்களும் அங்கோரக் காட்சிகளை தொலைக் காட்சியில் பார்த்து அதனால் அவர்களின் இரத்தம் சுண்ட நேரிட்டது. சிலர் மூச்சையாக நேரிட்டது.

சென்றை சட்டக் கல்லூரி மட்டுமல்ல; தமிழகத்திலுள்ள இதர சட்டக் கல்லூரிகளிலும் அதன் தாக்கத்தைப் பார்க்க நேரிட்டது. ஒரு பொறியியல் கல்லூரியிலும் இரு பிரிவினரிடையே மோதல். சில இடங்களில் அரசு பேருந்துகள் எரிப்பு, இப்படி தமிழகமெங்கும் போராட்டங்கள், தமிழக வழக்குறைஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு என தமிழகம் அமைதி இழந்து தவிர்க்கிறது.

தமிக மக்களில் ஒரு சிறு தொகையினரான சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், துணை நடிகர், நடிகைகள், மற்றும் அத்துறையில் பணிபுரிவோர் பல்லாயிரம் கோடி பணம் ஈட்ட மனிதர்களின் பலகீனங்களைப் பயன்படுத்தி அவர்களின் காமம் மற்றும் சிற்றின்பங்களையும், வன்முறை மிருக உணர்வுகளை தூண்டும் வகையிலும் படங்கள் தயாரித்து வெளியிடுவதை அரசுகள் எப்படி அங்கீகரிக்கின்றன? அப்படங்களுக்கு மக்களின் வரிப் பணத்தில் கோடி கோடியாக மான்யமாக கொடுப்பதன் அவசியம் என்ன? வருடா வருடம் நடிகர், நடிகைகள், மற்றும் அத்துறையினர்களில் மக்களை மயக்குவதில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசு மழை பொழிவதின் இரகசியம் என்ன? ஆட்சியே சினிமா துறையிலிருந்து வந்தவர்களின் கையில் சிக்கி சீரழிவதாலாதானே இப்படிப்பட்ட அநியாயங்கள் நாட்டில் நீக்கமறக் காணப்படுகின்றன.

ஜனநாயகத்தின் பெயரால் மனித பலகீனங்களுக்கு அடிமையாகும் பெருங்கொண்ட மக்களை கவரும் நோக்கத்துடன் அரசுகள் செயல்பட்டால் இப்படிப்பட்ட அலங்கோலங்கள் மேலும் மேலும் வளருமே அல்லாது குறைவதற்கு வாய்ப்பு சிறிதும் இல்லை.

தமிழகத்தை மதுவில் மிதக்க வைக்கும் சாராயக்கடைகளை அரசே நடத்தும் இழிநிலை எதைப் படம் பிடித்துக் காட்டுகிறது? நாட்டில் நீக்கமற காணப்படும் அனைத்துவகை அராஜக அக்கிரமங்களை உற்று நோக்குங்கள். மனிதன் மனித நிலையில் இருந்துகொண்டு மனிதன் மனித நேயத்தை மறந்து செயல்பட முடியுமா என சிந்தியுங்கள். எங்கெல்லாம் இப்படிப்பட்ட அராஜக, அக்கிரம கலவரங்கள் இடம் பெறுகின்றனவோ அங்கெல்லாம் அப்படி  மோதிக்கொண்ட மக்கள் போதையில் மிதந்து கொண்டு அக்கொடூர செயல்களில் ஈடுபட்டதை அறியலாம்.

சென்னை சட்டக் கல்லூரியிலும் 12.11.2008-ல் இரண்டு மாணவர்களை பல மாணவர்கள் சேர்ந்துகொண்டு, துவைத்து எடுத்த காட்சியை தொலைக் காட்சியிலும், நேரிலும் பார்த்தவர்கள், அந்தக் கொடுமையான தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் சுய நினைவில் அப்படிக் கொடூரமாக நடந்திருக்க முடியாது; போதையில் மிதந்து மிருகமாக மாறியே அந்தக் கொடூர அராஜகத்தை அரங்கேற்றி இருக்க முடியும் என்றே சந்தேகிக்க முடியும். அந்த அளவு குடிப்பழக்கம் தமிழக மக்களைப் பாடாகப்படுத்துகிறது. இப்படிப்பட்ட கொடூர காட்சிகளைக் க்ண்ட பின்னரும் தமிழக அரசு மதுக்கடைகளை தானே நடத்துகிறது என்றால், அரசுக்கு மக்கள் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை. தங்களின் பாக்கொட்டுகள் நிரம்பினால் போதும் என்ற கொடூர எண்ணமே மிகைத்துக் காணப்படுகிறது என்ற எண்ணமே மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களுக்கு ஏற்படும்.

இந்த அரசாக இருந்தாலும், இனி வரக்கூடிய அரசாக இருந்தாலும் உண்மையிலேயே தமிழக மக்களின் நலனிலும், முன்னேற்றத்திலும், அமைதியான, வளமான, சந்தோசமான வாழ்க்கையில் அக்கறையுள்ள அரசாக இருந்தால், சினிமாத்துறையின் மனித பலகீனத்தைப் பயன்படுத்தி பணம் பண்ணும் போக்கை முற்றிலுமாகத் தடுப்பதோடு, டாஸ்மார்க் என்ற நல்ல சாராயத்தையும், கள்ளச் சாராயத்தையும் வேறோடு, வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்ட முன்வர வேண்டும். இல்லை என்றால், அரசு மக்களை வாழ வைப்பதற்காக செயல்படவில்லை; மக்கள் வேதனைகளிலும், துன்பங்களிலும் மூழ்கி அமைதி இழந்து இவ்வுலகிலேயே நரக வாழ்க்கையை வாழவைக்கும் செயல்பாடுகளில்லேயே அரசினர் மூழ்கி அதுகொண்டு சுய ஆதாயம் அடைவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்றே மனிதநேய விரும்பிகள் முடிவுக்கு வருவார்கள்.

இனம், மொழி, மதம், ஜாதி போன்ற மாச்சாரியர்களுக்கு அப்பால் நின்று மனித நேயத்துடன் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றக் கடமைப்பட்ட இராணுவத் துஐறயினரும், காவல்துறையினரும் தங்களின் அசலான கடமையை மறந்து மதவெறிக்கும், ஜாதிவெறிக்கும், சுயநலத்திற்கும் ஆட்பட்டு செயல்படும்போது நாட்டில் வன்முறைச் செயல்களும், தீவிரவாத போக்கும், குண்டு வெடிப்புகளும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் செழித்து வளர கேட்கவா வேண்டும். சென்னை சட்டக் கல்லூரியில் இடம்பெற்ற வன்முறைச் செயல்களையும், கல்லூரி வளாகத்திற்கு வெளியே ஓடிவந்து விழுந்த ஒரு மாணவன் மீது ஒரு மாணவக் கும்பலே கொலை வெறித் தாக்குகல் நடத்துவதைப் பக்கத்தில் நின்று எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த காவல் துஐறயினரின் செயல் எதைக் காட்டுகிறது? அது எமது கூற்றை உண்மைப்படுத்தவில்லையா?

அங்கு நின்றிருந்த பொறுப்பில்லாத பொதுமக்களுக்கு ஏற்பட்ட மனித நேய உணர்வு கூட சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தக் கடமைப்பட்ட பொறுப்புள்ள காவல் துறையினருக்கு ஏற்படவில்லைய என்றால் அது எமது கூற்றை உண்மைப்படுத்தவில்லையா? இராணுவத்தில் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும், பொறுப்பிலிருந்த உயர் அதிகாரிகளே மதவெளிக்கு ஆட்பட்டு, பல குண்டுவெடிப்புகளை திட்டமிட்டு நடத்த சதிசெய்து, அவற்றை நிகழ்த்திவிட்டு, அப்பழியை அப்பாவி முஸ்லிம்கள மீது சுமத்தியது எமது கூற்றை உண்மைப்படுத்தவில்லையா? இனிமேலாவது சரியான, நேர்மையான திசையில் சென்று கொண்டிருக்கும் புலனாய்வை ஆதிக்க சக்திகள், மந்திரிகள், அதிகாரிகள் திசை திருப்பாமல் இருந்தால் மட்டுமே நாடு நலம் பெறும். மக்கள் நிம்மதியாக சந்தோசமாக வாழ வழி பிறக்கும்.

*******************

Previous post:

Next post: