எனது ஹஜ்ஜின் நோக்கம்! அனுபவம்!!

in 2008 ஜனவரி

எனது ஹஜ்ஜின் நோக்கம்! அனுபவம்!!

அபூ அப்துல்லாஹ்

தொடர்:11

ஹஜ்ஜுக்குச் செல்லும் பெருன்பான்மை முஸ்லிம்கள் , பெரும் பணச்செலவுடன் செய்யும் அந்த மிகப்புனிதமான பயணத்தை, மூடச் சடங்குகள் சம்பிரதாயங்கள், ஷிர்க், பித்அத்கள் என பாழாக்கி விடுகிறார்கள்; அதற்கு தங்களுக்குத்தான் மார்க்கம் அதிகம் தெரியும், தாங்கள் தான் மார்க்கத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் அதிகாரம் பெற்றவர்கள் என அடம் பிடிக்கும் மவ்லவிகளே காரணம்; அவர்கள்தான் மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் நிலையில் 36:21 எச்சரித்துள்ளபடி நேர்வழி விட்டு பல கோணல் வழிகளில் முஸ்லிம்களை வழிநடத்திச் செல்கிறார்கள் என தொடர்ந்து விடாது நாம் முஸ்லிம்களை எச்சரிதது வருகிறோம்.

நாம் எச்சரித்து வருவது நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு அவர்களே ஆதாரம் தந்திருக்கிறார்கள். “ஹஜ் பயணிகளுக்கு வழி காட்டும் தகவல்கள்” என ஒரு தினசரியில், பெரும் மேதை என சொல்லிக் கொள்ளும் ஒரு ஆலிம் பிரமுகர் எழுதியுள்ள ஒரு கட்டுரை எமது கூற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுக் கூறியுள்ளது வருமாறு: “(இங்கே) சுருக்கமாகக் சொல்லும் நோக்கத்துடன் குர்ஆன் ஆயத்துக்களையும், ஹதீதுகளையும் எழுதப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.” இதுதான் குறிப்பாகக் கூறப்பட்டுள்ள விஷயம். மார்க்கத்தின் அடிப்படையே குர்ஆன், ஹதீஸ் மட்டும்தான். அவை அல்லாத எக்கருத்தும் மார்க்கமாகாது; வழிகேடாகும்; நரகில் கொண்டு சேர்க்கம் என்பது நபி(ஸல்) அவர்களின் மிகக் கடுமையான எச்சரிக்கையாகும்.

இங்கு குர்ஆன், ஹதீஸ் அல்லாத மனிதக் கருத்து எப்படி மார்க்கமாகும்? அச்செயலை அல்லாஹ் நற்செயலாக ஏற்பானா? என்றெல்லாம் முஸ்லிம்கள் சிந்திப்பதில்லை. அந்த அளவு அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எமது கருத்து உள்பட மனிதர்களில் யாருடைய சுய கருத்தையும் ஏற்காதீர்கள். குர்ஆனையும், ஹதீஸையும் நேரடியாகப் பார்த்து, சிந்தித்து, விளங்கி அதன்படி மட்டுமே செயல்பட வேண்டும் என்று கூறி வரும் எம்மை அணுக வேண்டாம்; அவர் உங்களை மூளைச் சலவை செய்து விடுவார்; அதாவது உங்களின் சுய சிந்தனையற்ற கண்மூடிப் போக்கிலிருந்து மாற்றி குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் பார்த்து சிந்தித்து விளங்கி செயல்படும் நிலைக்கு மூளைச் சலவைச் செய்து விடுவார் என்று மறைமுகமாகச் சொல்வார்கள்.

முஸ்லிம்கள் குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் பார்க்க முற்பட்டால், இவர்கள் செய்து வரும் தில்லுமுல்லுகள், திருகுதாளங்கள் அம்பலப்பட்டுப் போகும் என்ற அச்சத்திலேயே குர்ஆன், ஹதீஸை முஸ்லிம்கள் பார்ப்பதிலிருந்தும் தடுத்து வருகிறார்கள். அந்த நோக்கத்துடன் குர்ஆன் ஆயத்துக்களையும், ஹதீதுகளையும் எழுதப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. குர்ஆன், ஹதீஸை அல்குர்ஆன் 25:30 -ல் கூறப்பட்டுள்ளது போல் புறக்கணித்துவிட்டு, இவர்கள் சுயமாக வழிகாட்டினால் அது 36:21 படி வழிகேடாகவே இருக்கும் என்பது இந்த கட்டுரையின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுரையின் ஆரம்பத்தில் பொதுவாக அனைத்து மதப்புரோகிதர்களும் தந்திரமாக கையாளும் பொதுவான உபதேசங்கள் பெரும்பாலானவை மக்களின் மனதை கவர்ந்து இழுப்பவையே. ஏற்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. அதன்பின்தான் தந்திரமாக சூஃபிஸ அத்துவைத (ஈரேகத்துவம்) அடிப்படையிலான இவர்கள் கற்பனை செய்துள்ள இறைவனுக்கு நேரடியாகவோ மறைமுகமாவோ இணை வைக்கும் செயல்கள், ஸலவாத் என்ற பெயரால் கட்டுரையின் பெரும் பகுதியில் அதுவும் அரபி மொழியில் மட்டும் இடம்பெற்றுள்ளன. அவற்றின் பொருளை தமிழில் தந்தாலும் அவர்களின் பொருளை தமிழில் தந்தாலும் அவர்களின் மானம் கப்பலேறி விடும்.

அவற்றின் மொழி பெயர்ப்புகள் முஸ்லிம்கள் புரிந்து கொள்ளும் நிலையில் அவர்களின் தாய் மொழியில் தந்திருந்தால், அவர்கள் சிறிதளாவாவது சிந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில்தான் அந்த மனிதக் கற்பனை ஸலவாத்துகளின் பொருள் தமிழில் தரப்படவில்லை போலும்; அவற்றில் தலையாய ஸலவாத்தாக நேரடியாக நரகிற்கு இட்டுச் செல்லும் நெருப்பு ஸலவாத்தான “ஸலாத்துன் நாரிய்யா” இடம் பெற்றுள்ளது.

ஆயிஷா நாயகி(ரழி) அவர்களின் ஸலவாத்து – இது ஒரு லட்சம் ஸலவாத்துக்கும் சமமென்று இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை ஆலிம் வலியுல்லாஹ் அறிவிக்கிறார்கள் என எழுதப்பட்டள்ளது.

அந்த ஸலவாத்தில் காணப்படும் “சய்யிதினா” என்ற இவர்களின் கற்பனை பதமும், நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தை விட சிறப்பானது என்று கதையளந்திருப்பதுமே இது இவர்களின் கற்பனை ஸலவாத் என்பதை உறுதிப்படுத்துகிறது.

“இந்த நபியின்மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். நம்பிக்கையாளர்களே நீங்களும் அவர்மீது ஸலவாத்துச் சொல்லி அவர்மீது ஸலாமும் சொல்லுங்கள்” (அஹ்ஜாப் 33:56)

இந்த இறைவாக்கு இறங்கியவுடன் நபி தோழர்கள் துணிந்து அவர்களின் மனதில் தோன்றியவற்றை ஸலவாத்துக்களாகக் கற்பனை செய்து இயற்றி அவற்றை உருப்போட்டுக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை கீழ்வரும் ஹதீஸ் தெளிவாக்குகிறது. அது கீழ் வருமாறு :

(இந்த இறைவாக்கு இறங்கிய பின்னர்) நபி(ஸல்) எங்கள் முன் தோன்றினர். அப்போது நாங்கள் யாராஸூலல்லாஹ்! தங்களுக்கு எவ்வாறு ஸலாம் உரைப்பது? என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால், தங்கள் மீது எவ்வாறு ஸலவாத்துக் கூறுவது? என்று வினவினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதிவ் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம் இன்னகஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதிவ் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அல இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம் இன்னக்க ஹமீதும் மஜீத்” என்று கூறுங்கள் என்று கற்றுத் தந்தார்கள். கஃபுப்னு உஜ்ரா (ரழி) புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ, நஸயீ.

இந்த ஸலவாத்தின் பொருள் :

யா அல்லாஹ்! இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் நீ அருள்புரிந்தது போல், முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக. நிச்சயமாக நீ புகழப்படுபவன், கீர்த்தி மிக்கவன்; யா அல்லாஹ்! இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் நீ அபிவிருத்தி நல்கியது போல் முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அபிவிருத்தி நல்குவாயாக; நிச்சயமாக நீ புகழப்படுபவன், கீர்த்திமிக்கவன்.

நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த இந்த ஸலவாத்தை பொறுமையாக, கவனமாக மீண்டும் மீண்டும் படித்து உள்வாங்குங்கள். எத்தனை அற்புதமாக நபி(ஸல்) அவர்கள் தங்களின் எதார்த்த நிலையை படம் பிடித்துக்காட்டுவது போல் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

தான் நபியாக இருந்தாலும் அல்லாஹ்வின் அடிமைதான், அல்லாஹ்விடம் தேவையுடையவன்தான், எஜமானனான அல்லாஹ் மட்டும்தான் எவ்வித தேவையும் இல்லாதவன் என்பதை அற்புதமாக விளக்கி இருக்கிறார்கள். தமது பாட்டனார் இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் அருள்புரிந்தது போல், அபிவிருத்தி நல்கியது போல் தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் அருள்புரிந்து, அபிவிருத்தி நல்க தமது சமூகத்தார் அல்லாஹ்விடம் இறைஞ்சுமாறு, பிரார்த்தனை செய்யுமாறு கற்றுக் கொடுத்திருப்பதின் மூலம், முஸ்லிம்களாகிய நாம் இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுவதை உறுதி செய்திருக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்நத இந்த தலையாய ஸலவாத்தை அடிக்கடி, மீண்டும் மீண்டும் அதிமாக ஓதுவதன் மூலம், தாம் அல்லாஹ்வின் அடிமை என்பதையும், அல்லாஹ்விடம் தேவையுடையவர் என்பதையும் தமது உம்மத் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி தம்மை எந்த நிலையிலும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் மாபாதகச் செயலை ஒரு போதும் செய்துவிட வேண்டாம் என தெளிவுபடுத்துகிறார்கள்.

இப்போது நாம் சிந்திக்க வேண்டும். இந்த ஸலவாத் பற்றி நபி(ஸல்) அவர்களின் போதனையை சிரமேற்கொண்டு நபி(ஸல்) கற்றுத் தந்த ஸலவாத்தை மட்டுமே சொல்லி வந்தார்கள் நபி தோழர்கள்.

நபி(ஸல்) அவர்களிடம் கேட்காமல் தங்கள் மனம் விரும்புகிறபடி ஸலவாத்துக்களை கற்பனை செய்யவுமில்லை. நபி(ஸல்) கற்றுத் தந்த ஸலவாத்தைப் புறக்கணித்துவிட்டு பிரிதொரு ஸலவாத்தை உருப்போடவும் இல்லை. இப்போது சிந்தியுங்கள்! இந்தப் புரோகித மவ்லவிகளுக்கும் ஆலிம்களுக்கும் எந்தளவு அகம்பாவமும் ஆணவமும் இருந்தால், நபி(ஸல்) அவர்களை விட, நபி தோழர்களை விட நாங்கள் தான் மேலானவர்கள் என்ற இறுமாப்பில் தங்கள் மனதில் தோன்றியவற்றை எல்லாம் ஸலவாத்துகளாக கற்பனை செய்து உறுப்போட்டு வருவார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஸலவாத்தை விட ஹிஜ்ரி 600க்குப் பிறகு வந்தவர்கள் கற்பனை செய்துள்ள ஸலவாத்துக்களை மிக மேலானதாக, ஒரு லட்சம் ஸலவாத்துக்குச் சமமென்றும் முஸ்லிம்களை இவர்கள் ஏமாற்றி வருவதற்கும் தகுந்த காரணம் உண்டு. நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஸலவாத் ஏகத்துவத்தை – அல்லாஹ் தனித்தவன். இணை துணை இல்லாதவன் முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையாகவும், அவனிடம் தேவையுடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை நிலை நிறுத்துகிறது.

சூஃபிஸத்தை – அத்துவைதத்தை – ஈரேகத்துவத்தை நிலைநாட்டி மனிதனும் இறைவனுடன் இரண்டறக் கலக்க முடியும் என்ற இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய செயலை நிலை நிறுத்துவதாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஸலவாத்தை புறக்கணித்து, இவர்கள் கற்பனை செய்துள்ள ஸலவாத்துக்களை உருப்போட்டால் தான், அவர்களின் இந்த விபரீத எண்ணம் நிறைவேறும். அப்படிப்பட்ட தீய நோக்கத்துடன் தான் ஹிஜ்ரி 600க்குப் பிறகு வாழ்ந்து மடிந்த சூஃபிகளின் பெயரால் விதவிதமான ஸலவாத்துக்களை அரங்கேற்றி வருகிறார்கள்.

இவர்கள் ஸலவாத்துகளிலும், துஆக்களிலும் பயன்படுத்தி வரும் ஸய்யிதினா, மவ்லானா, முர்ஷிதினா, நூரி அர்ஷிஹீ போன்ற அரபி பதங்கள் அனைத்தும் பெருமானார் என்ற தமிழ் பதமும் இந்த ஈரேகத்துவ (அத்துவைத) அடிப்படையில் இவர்களின் கற்பனையில் உதித்தவையே!

இவர்களின் இந்த செயலை மறுக்கும் நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை வருமாறு:

பனூ ஆமீர் தூதுக்குழுவுடன் நபி(ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது நாங்கள் அவர்களை நோக்கி, “நீங்கள் எங்களின்(ஸய்யித்) தலைவர்” என்று கூறினோம். அதற்கு அவர்கள் (ஸய்யித்) “தலைவன் அல்லாஹ்வே!” என்று கூறினர். “தாங்கள் எங்களை விட மாண்புமிக்கவர், பெரும் கொடையாளர்” என்றோம். அதற்கு அவர்கள் “இவ்விதம் கூறுங்கள்; அல்லது இதில் சிலவற்றைக் கூறுங்கள். (இறைவனுக்குரிய அடைமொழிகளைக் கொண்டு என்னை வர்ணிப்பதன் மூலம்) உங்களுக்கு உறுதுணையாக ஷைத்தானை அழைக்காதீர்கள்” என்று எச்சரித்தார்கள்.

மத்ரஃப் இப்னு அப்துல்லாஹ்(ரழி) அபூதாவூது.

“இப்னு மர்யமைக் கிறிஸ்தவர்கள் மிகைப்படப் புகழ்ந்தது போல், நீங்கள் என்னை மிகைப்படப் புகழாதீர்கள்; எனினும் (என்னை) அல்லாஹ்வுடைய அடிமை என்றும் தூதர் என்றும் கூறுங்கள்” என்று நபி(ஸல்) கூறியதை உமர்(ரழி) கேட்டதாகச் சொன்னதை நான் கேட்டேன்.

இப்னு அப்பாஸ்(ரழி) ரஜீன்.

இவ்வளவு தெளிவான, நேரடியான, நெத்தியடியான எச்சரிக்கைகளை எல்லாம் ஆணவத்துடன் புறக்கணித்துவிட்டு , தங்கள் கற்பனை வளத்துடன் மனதில் தோன்றியதை எல்லாம் ஸலவாத் என வடித்து அவற்றை மக்கள் ஹஜ்ஜிலும் உருப்போட மக்களைத் தூண்டுகிறார்களே இவர்களை அல்லாஹ்வுடைய அச்சமுயைடவர்கள் என்று ஏற்க முடியுமா?

இவர்களின் சுயநலத்துடன் கூடிய உபதேசத்தை நம்பி, இந்தக் மனிதக்கற்பனை ஸலவாத்துகளை ஹஜ்ஜில் அனைத்து இடங்களிலும் உறுப்போட்டு திரும்புகிறவர்கள் தங்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புவார்களா? அதற்கு மாறாக மேலும் அதிகப் பாவமூட்டைகளை சுமந்து கொண்டு நெருப்பு ஸலவாத் (ஸலாத்துன் நாரிய்யா) சொல்வது போல் நரகிற்கு டிக்கட் எடுத்து பதிவு செய்து கொண்டும்(Reservation) அதை உறுதி செய்து கொண்டும் (Confirmation) திரும்புவார்களா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்தப் புரோகித மவ்லவிகளின் மிகமிக கேடுகெட்ட புத்தி என்ன தெரியுமா? அல்குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஒரு விஷயம் பற்றி நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கும் எச்சரிக்கையை – கட்டளையை எடுத்து நடக்க முன் வரமாட்டார்கள். அதற்கு மாறாக தங்களின் வழிகேட்டுக் கொள்கையை நிலைநாட்ட வேறொரு விஷயமாகச் சொல்லப்பட்டிருக்கும் ஒரு ஹதீஸில் தங்களின் கற்பனையைப் புகுத்தி தங்களின் தவறான கொள்கையை நிலைநாட்ட முற்படுவார்கள்.

உதாரணமாக மேலே எழுதப்பட்ட “ஸய்யிது” – தலைவர் பற்றிய ஹதீஸில் நபி(ஸல்) அவர்களை நேரடியாக அழைக்கும்போது, நபி(ஸல்) அதை மறுத்துக் கூறியதை விட்டு விடுவார்கள். அதற்கு மாறாக அன்று சில கோத்திரங்களுக்கு தலைவராக இருந்தவர்களை “ஸய்யிது” என்று நபி(ஸல்) அவர்கள் அழைத்ததை பெரிய ஆதாரமாகக் காட்டி, அந்த தலைவர்களை விட நபி(ஸல்) அவர்கள் அந்தஸ்தில் குறைந்தவர்களா? ஒரு கோத்திரத்தின் தலைவரை “ஸய்யிது” என்று நபி(ஸல்) அவர்களை அழைத்து வழிகாட்டி இருக்க, நபி(ஸல்) அவர்களை அவ்வாறு “ஸய்யிதினா” என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று கூறி தங்களின் தவறான வழிகேட்டுச் செயலை நியாயப்படுத்துகிறார்கள்.

ஒரு கோத்திரத்தின் தலைவரை “ஸய்யிது” என்று அழைத்த நபி(ஸல்) அவர்கள் தன்னை அவ்வாறு அழைப்பதை ஏன் தடுத்தார்கள்? என்று இந்த புரோகித மவ்லவிகள் சிந்திக்க மாட்டார்கள். அப்படி சிந்தித்தால் அவர்களின் ஈரேகத்துவ (அத்துவைதம் – வஹ்தத்துல் ஷஜூது) இணைவைப்புக் கொள்கை ஆட்டம் கண்டு விடுமே! இறைவன் நபிமார்களாகத் தேர்ந்தெடுத்தவர்களையே இந்தப் புரோகிதர்கள்அவதாரங்களாகவும், இறைக்குமாரர்களாகவும், தெய்வீகத்தன்மை உடையவர்களாகவும் ஆக்கி தங்களின் வயிற்கு பிழைப்புக்கு வழி வகுத்தார்கள். அந்த இணைவைக்கும் கொடிய குற்றத்ததிற்கு தன்னுடைய சமூகம் ஆளாகிவிடக் கூடாது என்ற நன்நோக்கிலேயே நபி(ஸல்) அவர்கள் தன்னை “ஸய்யிது” என்று அழைப்பதைத் தடுத்துள்ளார்கள் என்பதைத் தெளிவாக விளங்க முடியும்.

“இறைவனுக்குரிய அடைமொழிகளைக் கொண்டு என்னை அழைப்பதன் மூலம் உங்களுக்கு உறுதுணையாக ஷைத்தானை அழைக்காதீர்கள்” என்ற நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கை இதைத் தெளிவாக விளக்குகிறது. ஆனால் இந்தப் புரோகித மவ்லவிகள் ஸைத்தானின் நேரடி ஏஜண்டுகளாகச் செயல்படுவதால், அந்த ஷைத்தானையே நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கைக்கு முரணாக உறுதுணையாக அழைத்துத் தானே ஆக வேண்டும். தங்களின் புரோகிதத் தொழிலுக்குச் சாதகமாக நடந்து கொள்கிறார்களள்; அவ்வளவுதான்.

ஆக ஹிஜ்ரி 600க்குப் பிறகு ஈரேகத்துவத்தை (அத்துவைதம் – வஹ்தத்துல் – வுஜூது) இஸ்லாத்தில் நுழைத்து மக்களை வழிகெடுக்க இப்புரோகித மவ்லவிகள் – ஆலிம்கள் கற்பனை செய்துள்ள ஸலவாத்துகள் அனைத்தும் மக்களை நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை முஸ்லிம்கள் சிந்தித்து விளங்க வேண்டும். மேலும் ஹஜ்ஜுக்குப் போய் இந்த ஸலவாத்துகளை உருப்போடுவது, அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குப் பதிலாக மேலும் மேலும் பாவச்சுமை அதிகப்படவே வழிவகுக்கும் என்பதை ஹஜ்ஜூக்குச் செல்வோர் விளங்கி தெளபா செய்தால் மட்டுமே தப்ப முடியும்.

மக்கள் தவாஃப் செய்து கொண்டிருக்கும் போது சிலர் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு தவாஃப் செய்து கொண்டிருப்போருக்கு குறுக்காகச் சென்று குறிப்பிட்ட இடங்களில் 7:55க்கு முரணாக கோரஸாக துஆ செய்து விட்டு மீண்டும் தவாஃப் செய்வோருக்கு இடையூராக கூட்டமாக குறுக்கே வெளியேறுகிறார்கள் என்று முன்பு குறிப்பிட்டிருந்தோம். அதற்கு துஆ கபூலாகும் இடங்கள் என்று பதினைந்து இடங்களை இந்த கட்டுரையில் பட்டியலிட்டிருப்பது போதிய ஆதாரமாகும். தவாஃப் செய்யும் போதே தங்களுடைய தேவைகள் குறித்து அல்லாஹ்விடம் முறையிடலாம். குறிப்பிட்ட இடங்களைச் சுற்றி சுற்றித்தான் தவாஃப் செய்வோர் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தவாஃப் செய்யாமல், தவாஃப் செய்யும் மற்ற மக்களுக்கு இடையூறாக குறிப்பிட்ட இடங்களை நோக்கி கூட்டமாக குறுக்கே செல்வது எவ்வளவு பெரிய குற்றம்; தங்களின் நல்ல அமல்களையும் பாழாக்கும் செயல் என்பதை இவர்கள் உணராமல் இருக்கிறார்கள். அந்த அளவு இந்த புரோகித மவ்லவிகளின் பேச்சில் கட்டுண்டு கிடக்கின்றனர் ஹஜ்ஜுக்குச் செல்லும் முஸ்லிம்கள். பாவம்! அவர்களின் முடிவு வேதனை தரத்தக்கதே!

Previous post:

Next post: