பசுமைப்பூத்த நினைவுகள்
இது சுவனக்கன்னியர் ஆடும் ஊஞ்சலன்றோ!”
கேப்டன் அமீருத்தீன்
நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் கழிந்தன. ஆண்டுகள் பல கடந்தன. ஆனால் நான் மட்டும் மாறவில்லை. தாடி வளர்த்து என்னை நான் மாற்றிக் கொள்ளவில்லை. கட்டிமேடு கிராமத்தில் பரிவுடன் நான் பட்ட குட்டும். அதனால் எனக்கு ஏற்பட்ட குற்றவுணர்வும் நாளடைவில் மறைந்தது. கால வெள்ளத்தில் கரைந்தது. அதற்காக நான் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளாமல் இல்லை. மீலாது மேடைகளுக்கும் இன்ன பிற கூட்டங்களுக்கும் அழைக்கப்படாமல் இல்லை. எனக்கு தாடி இல்லாதது அதற்கெல்லாம் ஒரு தடையாக இருக்கவில்லை. எனக்கும், என்னை அழைத்தவர்களுக்கும் அது ஒரு குற்றமாகவோ அல்லது குறைவாகவே தெரியவில்லை. தெளஹீது எழுச்சி ஏற்படாத அக்கால கட்டத்தில் அதுதான் யதார்த்த நிலமையாக இருந்தது.
1984-ம் ஆண்டு சவூதி அரேபியா டெஹ்ரானில் வேலை கிடைத்து அங்கு பயணமானேன். அப்போது நான் 40 வயதை தாண்டியிருந்தேன். “அராம்கோ” என்று சுருக்கமாக அழைக்கப்படும் அரேபியா – அமெரிக்கா கூட்டு எண்ணை நிறுவன ஊழியர்களக்காக நடத்தப்படும் பெரிய மருத்துவமனையில் “பார்மஸி” துறையில் எனக்கு வேலை. அராம்கோ “சர்வதேச அளவில் புகழ் பெற்ற நிறுவனம். அது சவூதி அரேபியாவின் வர்த்தக – பொருளாதார மையமென்றும், முதுகெலும்பு என்றும் கருதப்படுகிறது. அந்த கம்பெனியில் பல்லாயிரம் மக்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் மேற்குலகு அமெரிக்கா, ஐரோப்பியர் முதல் கீழை நாட்டு இந்தியா, பாக்கிஸ்தான், வங்காளதேசம், பிலிப்பைன்ஸ் முதலிய நாட்டினரும் அடங்கவர். ஆப்ரிக்கா கண்டத்தைச் சேர்ந்த எகிப்தியர், சூடானியர், நைஜீரியர் முதல் அரபு நாடுகளைச் சேர்ந்த பாலஸ்தீனியர், லெபனான் ஜொர்தான் மற்றும் சிரியா நாடுகளைச் சேர்ந்தவர்களும் அங்கு வேலை பார்த்தனர். அதனால் பல்வேறு நாட்டினரை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பும், அவர்களின் மதம், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பண்பாட முதலியவைகளை நேரில் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைத்தது. அது வாழ்க்கையில் பெரும் அனுபவம் என்றே சொல்ல வேண்டும். அராம்கோவிற்கு, சொந்தமான எண்ணை கிணறுகளும்,எண்ணை சேகரிப்பு அதன் சுத்திகரிப்பு, ஆகிய தொழிற் கூடங்களும் நாட்டின் பல பகுதிகளில் பரவிக் கிடந்தாலும் அதன் தலைமை நிர்வாகம் டெஹ்ரானில் மட்டுமே இருந்தது. அதை ஒட்டியே நான் வேலை பார்த்த ஸ்பெஷலிட்டீஸ் ஆஸ்பத்திரியும் இருந்தது.
நான் அங்கு போய் ஒரு ஆண்டு கழிந்த பின் மறு ஆண்டு “ஹஜ்” செய்ய நாடினேன். அதற்கு தோதாக சில மாதங்களுக்கு முன் என் மனைவியாரை அங்கு அழைத்துக் கொண்டேன். 1986-ல் இருவரும் ஹஜ் செய்தோம். ஹஜ் முடிந்து டெஹ்ரானுக்கு திரும்பியபோது, ஹஜ் காலத்தில் மழிக்காமல் வளர்ந்திருந்த தாடியை எடுக்க வேண்டாமென்றும் அப்படியே அதை விட்டு விடுமாறும் என் மனைவி எனக்கு பரிந்துரை செய்தார். அவர் கூறிய ஆலோசனை எனக்கு பரிந்துரை செய்தார். அவர் கூறிய ஆலோசனை எனக்குச் சரியாகவேப்பட்டது. ஆனால் என்ன காரணமோ அதனை நான் நடைமுறை படுத்தவில்லை. என் மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு டெஹ்ரானிலிருக்கும் அராம்கோ வின் அல்முனிரா ஆண்கள் தங்கும் முகாமுக்கு திரும்பினேன்.
அராம்கோ ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை. வாரத்தில் வியாழன், வெள்ளி இரண்டு நாட்கள் ஓய்வு, என் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக்க விரும்பினேன். பல சமூக நல காரியங்களில் ஈடுபடலானேன் அந்த நோக்கத்தில் நம் சகோதரர்கள் பலருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். நான் அங்கு போன ஆரம்ப காலத்தில் தாவா மையம் என்று எதுவும் அங்கு இல்லை. ஆனால் தமாம் நகரின் எதுவும் அங்கு இல்லை. ஆனால் தமாம் நகரின் மூலையில் நஸ்ரியா என்னும் பகுதியிலிருந்த பள்ளிவாசலில் வியாழக் கிழமைகளில் மஃரிபு தொழுகைக்குப்பின் ஒரு ஆப்ரிக்கா நாட்டு கறுப்பர் பிலிப்பினோக்களுக்கு “தாவா” செய்து வருவதாக நண்பர்கள் அறியலானேன். ஒருநாள் நான் அங்கு போனேன். பள்ளியின் ஒரு மூலையில் சுமார் 25 பேர் கூடியிருந்தனர். அவர்களில் பெரும்பான்மையோர் பிலிப்பினோக்கள். அவர்களிடையே அந்த மனிதர் ஆங்கிலத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். நானும், என் நண்பர்களும் போய் அங்கு அமர்ந்தோம். அவர் நன்றாக ஆங்கிலம் பேசினார். அரபியும் அத்துப்படி, பைபிலும் நன்கு வாசித்திருந்தார். “தாவா” செய்ய முறையாக பயிற்சிப் பெற்றவராகத் தெரிந்தார். அவர் ஒரு இளைஞர் ஆனாலும், அவரது பேச்சும், ஆளுமையும் அனைவரையும் கவரக்கூடியது. சில வாரங்கள் தொடர்ந்து நான் அவர் கூட்டங்களுக்கு போனேன். ஒருநாள் அவரை சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவரது பெயர் ஹாலித் பனாலா; ஜாம்பியா நாட்டைச் சேர்ந்தவர். தாமாமிலிருந்த “அல்ஜாமில்” கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
நாளுக்கு நாள் பள்ளிவாசலில் கூட்டம் பெருகியது. அது அறிந்த சில உள்ளூர் அரேபியர் தமது நாடு நகரங்களில் வந்து குழுமியிருக்கும் முஸ்லிம் அல்லாத தொழிலாளர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையை உணர்ந்தனர். அந்த வகையில் அவர்களது முயற்சியால் அல்கோ பரில் “அக்ரபியா” எனடற இடத்தில் முதன் முதல் ஒரு “தாவா மையம்” திறக்கப்பட்டது. அதற்கு அஹமது அல் அஹமது என்பவர் பொறுப்பாளராக இருந்தார். தமாம் பள்ளிவாசலுக்கு வந்த கூட்டம் தாவா மையத்துக்கு திருப்பப்பட்டது. முதல் சில வாரங்கள் வேன்கள் மூலம் அங்கு கொண்டு செல்லப்பட்டார்கள். நாளடைவில் பள்ளியில் நடந்த தாலா முற்றிலுமாய் நிறுத்தப்பட்டது. பிற்காலங்களில் தமாமிலும் இரு “தாவா மையங்கள்” திறக்கப்பட்டன.
சகோ.ஹாலித் பனாலா “தாவா”வில் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிலிப்பினோக்கள் அனேகர்; அதில் ஒருவர் தமக்கும் ஹாலித் என்றே பெயர் சூட்டிக் கொண்’ார். அவர் ஒரு இளைஞர். அராம்கோ ஊழியர், நான் வசித்து வந்த அல்முனிரா முகாமில்தான் அவரும் வசித்து வந்தார். தாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பது போல் ஹாலித் ஒவ்வொரு வியாழன் மாலையும் பிலிப்பினோ நண்பர்களை தமது காரில் ஏற்றிக் கொண்டு “அக்ரபியா” தாவா மையத்துக்கு அழைத்துப் போவதை கடமையாக செய்து வந்தார். அவரது பெற்றோர்கள் அமெரிக்கா குடியுரிமைப் பெற்றவர்கள். அங்கு தான் அவர்கள் வாழ்ந்து வந்தார். ஹாலித் பெற்றோர்களைப் பரர்க்க விடுமுறையில் அங்க செல்வது வழக்கம். அந்த ஆண்டு இஸ்லாத்தை தழுவிய பின் முதன் முதலாக விடுமுறையில் அங்கு போக இருந்தார். ஆனால் அதற்கு முன் தாவா மையம் ஏற்பாடு செய்திருந்த ஹஜ் யாத்திரை குழுவுடன் சேர்ந்து ஹஜ் கடமையை முடித்து விட்டு வந்தார்.
ஹஜ்ஜிலிருந்து திரும்பி வந்த ஹாலித்திடம் பெரும் மாற்றம் தெரிந்தது. தாடி வளர்த்திருந்தார். பிலிப்பினோ இளைஞர்களுக்கு அடர்த்தியாக முடி முகத்தில் வளருவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வளர்ந்திருக்கும். அவ்வாறே அவருக்கும் இருந்தது. இருப்பினும் அதுபற்றி கவலைப்படாது அவர் தாடி விட்டிருந்தார். அவரது நண்பர்கள் அவரை கேலி செய்தனர். அதற்கெல்லாம் புன்முறுவல் ஒன்றையே அவர் பதிலாக அளித்தார். அமெரிக்கா போக இருந்த அவரிடம், “மைக்கேல் ஹெச் ஹார்டு” என்ற அமெரிக்க அறிஞர் எழுதிய “நூற்றவர்” (The 100) என்ற நூல் ஒன்றை வாங்கி வரும்படி கேட்டிருந்தேன். அந்த நூலில் உலக வரலாற்றில் 100 புகழ் பெற்ற மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் யார் மனித குல வாழ்க்கையில் அதிக செயல்வாக்கு செலுத்தியவர்கள் என்பதை திறனாய்வு செய்து வரிசைப்படுத்தி இருந்தார். அந்த தர வரிசையில் முதல் இடத்தை முகம்மது நபி(சல்) அவர்களுக்கு கொடுத்திருந்தார் அந்த அறிஞர். அப்போது வெளியிடப்பட்டிருந்த அந்த நூல் பற்றி பிரபல்யமாக பேசப்பட்டது. அப்போது அது அமெரிக்காவில் மட்டுமே கிடைத்தது. ஆகவே, அந்த நூல் ஒன்றை எனக்கு வாங்கி வரும்படி ஹாலிதிடம் கேட்டுக் கொண்டேன்.
ஒரு மாதத்திற்குப்பின் விடுமுறையிலிருந்து திரும்பி வந்த ஹாலிதை தாவா மையத்தில் சந்தித்தேன். அமெரிக்க பயணம் பற்றியும், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்த அவரிடம் பெற்றோர்களும், உறவினர்களும் நடந்து கொண்ட எதிர்வினை (Reactipn) பற்றியும் விசாரித்தேன். சுவாரஸ்யமான செய்திகள் இருப்பதாகக் கூறியவர். நான் கேட்ட புத்தகம் வாங்கி வந்திருப்பதாகக் கூறினார். அவரது இருப்பிடம் வந்து அந்த புத்தகத்தை பெற்றுக் கொள்ளும்படி அழைத்தார். அவரது அழைப்பை ஏற்று ஒருநாள் மாலை அவரது இல்லம் போனேன். அல்முனிராவில் உள்ள வீடுகள் எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கும். புறாக் கூடுகளைப் போல் அடக்கமாக இருக்கும். ஆனால் போதுமான வசதிகள் இருக்கும். பயன்படுத்துபவரைப் பொருத்தே அந்த வீடுகள் சோபிக்கும்.
ஹாலிதின் வீடு “பளீச்” என்று தூய்மையாக இருந்தது. சோபாக்கள். மேஜை நாற்காலிகள் எல்லாம் முறையாக இருக்க வேண்டிய இடத்தில் இருந்தது. ஜன்னல்களுக்கு திரைச் சீலைகள் போடப்பட்டிருந்தது. சோபாவுக்கு எதிரே சிறிய டி.வி.யும் டேப்ரெக்கார்டரும் இருந்தன. படுக்கையில் விரிப்புகள் விரிக்கப்பட்டும். போர்வை மடிக்கப்பட்டும் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தது. அலமாரியில் விரிவுரையுடன் கூடிய திருகுர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்புகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆங்கில மொழி பெயர்ப்பு ஹதீஸ் நூல்களும் இருந்தன. வரலாற்று நூல்கள், கலைகளஞ்சியங்களும் அங்கு காணப்பட்டன. தொழுகை முஸல்லாலும் மடித்து ஓரமாக தொங்க விடப்பட்டிருந்தது. வீட்டைச் சுற்றி வட்டமிட்ட என் பார்பையைக் கண்ட ஹாலித் புரொபஷர், என்ன பார்க்கிறீர்கள்? என்று கேட்டார். அவ்வாறே அவர் மரியாதையுடன் என்னை அழைப்பது வழக்கம். வீட்டை சுத்தமாகவும், நேர்த்தியாவும் வைத்திருக்கிறீர்கள். ஒரு பேச்லர் வீடு போல் இல்லை என்று பாராட்டினேன். அதற்கு அவர், சுத்தம் ஈமானில் பாதி அல்லவா! என்று பதில் கூறினார்.
டீ போட்டு டீயுடன் பிஸ்கட்டும் கொடுத்தார். அவரது பெற்றோர்களும், மற்ற உறவினர்களும் அவரது மதமாற்றம் பற்றி என்ன சொன்னார்கள்? எப்படி நடந்துக் கொண்டார்கள் என்று விசாரித்தேன். தாடியுடன் முதலில் அவரை பார்த்தபோது திகைத்துப் போனார்கள் என்றும், பின்னர் வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்டினார்கள் என்றும் கூறினார். மது அருந்தாமலும், புகை பிடிக்காமலும் அவர் இருந்ததும் நேரத்தில் தொழுது வந்ததும் அவர்கள் மனதில் அவரைப்பற்றி ஒரு மரியாதையை நாளடைவில் ஏற்படுத்தியது என்று கூறினார். கொஞ்ச நாட்கள் ஹலால் உணவை தாமே சமைத்து, சாப்பிட்டு வந்ததாகவும் அதைக் கண்டு மனம் இரங்கி அவர் தாய் ஹலால் உணவையே எல்லோருக்கும் தயாரித்து கொடுத்தார் என்றும் கூறினார். மேலும் ஒரு சுவாரஸ்யமான செய்தியையும் சொன்னார்.
அதாவது, மேல்நாட்டினர் கழிவு அறைகளில் டாய்லட் பேப்பர்களையே சுத்தம் செய்வதற்கு பயன்படுத்துவார்கள். அதற்கு தண்ணீர் வசதி அங்கு இருக்காது. குளியலுக்கு மட்டுமே ஷவர் அல்லது டப்புகள் இருக்கும். ஆகவே, நீள மூக்குடைய ஒரு பிளாஸ்டிக் ஜக்கில் தண்ணீர் எடுத்துக் கொண்டு போய் ஹாலித் கழிவறையில் வைத்திருந்ததைப் பார்த்த அவரது தந்தை பீட்டர் (இது அவர் இயற்பெயர்) நீ கழிவறையில் வைத்திருக்கும் ஜக்குக்கும் உனது புதுமதத்திற்கும் என்ன தொடர்பு? என்று கேட்டாராம். அதற்கு ஹாலித், ஆம் தத்தையே! தொடர்பு இருக்கிறது. கழிவறையில் உள்ள கோப்பையை பயன்படுத்திய பின் அதை கழுவுவதற்கு, நாம் 2 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர்விட்டு ஃபிளஸ் செய்கிறோம். அப்படியே குறைந்தது அரை லிட்டர் தண்ணீர் விட்டு கழிவு செய்த உடல் உறுப்பை கழுவிக் கொள்ளும்படி இஸ்லாம் சொல்லுகிறது என்று பதில் கொன்னாராம். அதைக் கேட்ட அவர் தந்தை ஆமாம். நீ சொல்வதிலும் பாய்ன்ட் இருக்கிறது என்றாராம். அதன்பின்னர், அபுல் அஃலா மெளதூதி எழுதிய சிலநூல்களை அவருக்கு படிக்கக் கொடுத்ததாக ஹாலித் கூறினார்.
அவரது தாடிபற்றி அவரது தாயும், தந்தையும் கேலி பேசியதாக ஹாலித் வருத்தத்துடன் கூறினார். அப்போது ஏதோ ஒரு பேச்சில் எந்த நோக்கமும், காரணமுமின்றி ஹாலித், இந்த தாடி உங்களுக்கு நன்றாகத்தான் இல்லை என்று நானும் அறியாமல் கூறிவிட்டேன். எனது சொல்லைக் கேட்டு வியந்து போன ஹாலித், புரொபஷர்! அப்படி சொல்லாதீர்கள். என் போன்றவர்களின் தாடிகளை சுவனக் கன்னியர்கள் (ஹுர்கள்) விரும்புகிறார்கள். அதில் ஆடி மகிழ்கிறார்கள் என்னும் ஹதீதை நீங்கள் அறிந்ததில்லையா? அப்படியென்றால் அதனை நான் விரும்புகிறேன். (If it is so, I like it) என்று மிகவும் அழுத்தமாகச் சொன்னார். அவரது சொற்களின் வேகமும் கேள்வியும் என் தலையில் சம்மட்டியால் அடித்ததுபோல் வந்து விழுந்தது. அப்படி ஒரு ஹதீதை அதற்கு முன் நான் அறிந்திருக்கவில்லை. ஹாலிதுடைய ஈமானின் ஆழமும், அழுத்தமும், நபிகளால் சுன்னத்தை பேணுவதில் அவர் காட்டிய வேகமும், விருப்பமும், என்னை வெட்கமடையச் செய்தது. அவருக்கு பதில் ஏதும் சொல்லத் தெரியாமல் அங்கிருந்து நான் புறப்பட்டேன். அவர் கொடுத்த புத்தகத்தையும் வாங்கிக் கொண்டேன். ஆனால் அங்கிருந்து புறப்பட்டும் முன் நானும் தாடி வளர்த்து சுன்னத்தை பேண வேண்டும் என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டேன்.
பின்னர் ஒரு சமயம் சகோ. அப்துல்காதிர் மதனி அவர்களிடம் அந்த ஹதீது பற்றி கேட்டு அறிந்தேன். அதன் கருத்து வருமாறு: சகாபி ஒருவருக்கு அடத்தியில்லாத தாடி இருந்தது. முகத்தில் அவருக்கு முடி அங்கொன்றும் இங்கொன்றுமாய் வளர்ந்திருந்தது. ஒருமுறை அவரைக் கண்ட நபிகளார் புன்முறுவல் வலித்தார்கள். தமது தாடியைப் பார்த்தே நபிகளால் நகைப்பதாக அவர் எண்ணிக் கொண்டார். அதனால் தாடியை எடுத்துவிட்டு நபிகள் முன் தோன்றினார். நபிகளால் தாடி பற்றி அவரிடம் வினவியபோது, அதன் காரணத்தை அவ் சொன்னார். அதற்கு நபியவர்கள் “உங்கள் தாடி பற்றி நான் கேலியாக சிரிக்கவில்லை. சுவனக் கன்னியர் உங்கள் தாடியைப் பற்றி பிடித்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தே சிரித்தேன்” என்று கூறினார்கள். இந்த ஹதீது பலஹீனமானது என்றும் அப்துல் காதர் மதனி அவர்கள் கூறினார்கள்.
எப்படியோ, இந்த பலஹீனமான ஹதீது தான் ஹாலிதின் ஈமானை பலப்படுத்தியது. தாடி பற்றி பொடுபோக்காக இருந்த எனக்கும் அவர் மூலம் பாடம் படித்துக் கொடுத்தது. அல்லாஹ் பிழை பொறுத்து மன்னிப்பானாக!