மக்கள் நலன் நாடுவோரே சிந்திப்பீர், சுதாரிப்பீர்!

in 2009 மார்ச்

மக்கள் நலன் நாடுவோரே சிந்திப்பீர், சுதாரிப்பீர்!

மக்கள் நலன் நாடுவோரே, மனித நேயமிக்கோரே உலகளவில், குறிப்பாக நமது தாய்த் திருநாடு இந்தியாவில் மக்கள் அனுபவித்து வரும் அவலங்களையும், அடாத செயல்களின் அக்கிரமங்களையும், கண்டுதான் வருகிறீர்கள்மனிதன் காட்டுமிராண்டி அநாகரீக வாழ்வை விட்டு முன்னேறி வருகிறான் என பெருமை பேசுகிறோம். அதற்கு மாறாக அநியாயங்களும், அட்டூழியங்களும், அக்கிரம அராஜக செயல்களும், வன்முறைச் செயல்களும், தீவிரவாதச் செயல்களும், மனித வெடிகுண்டு, தற்கொலைப் படை என நாளுக்கு நாள் பெருகி மனிதனாக வாழ வேண்டியவன் இரண்டு கால் மிருகமாக மாறி வருவதையே கண்டு வருகிறீர்கள். மனித உயிர்கள் காக்காய், குருவிகளின் உயிர்களைவிட மலிவாகப் போய்விட்ட சோகத்தையே பார்த்து வருகிறீர்கள்.

மன்னராட்சியை விட,சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியை விட கேடுகெட்ட ஆட்சிகளே ஜனநாயகத்தின் பெயரால் நடைபெற்று வருகின்றன. ஊழல்களுக்கும், லஞ்சத்திற்கும், ஒழுங்கீனங்களுக்கும் அளவே இல்லாமல் போய்விட்டது. சட்டங்கள் இயற்றும் மக்கள் மன்றமும், சட்டசபைகளும், மாநகர, நகர சபைகளும் இன்ற அமளிக்காடாக ஆகிவிட்ட கோரக்காட்சிகளையே கண்டு வருகிறார்கள்; வேதனைப்படுகிறீர்கள்!

நீதியை நிலைநாட்ட கடமைப்பட்ட நீதிபதிகள் லஞ்சத்தில் மூழ்கியிருக்கிறார்கள். நீதி விலை பேசப்படுகிறது. நீதியை நிலைநாட்டும் நோக்கத்தடன் சட்டம் படித்து வழக்குரைஞர்களானவர்கள் சட்டத்தை மீறி நடக்கிறார்கள். நீதியை கொலை செய்கிறார்கள். சட்ட ஒழுங்கை நிலைநாட்டக் கடமைப்பட்ட காவல் துறையினர் சட்டம் ஒழுங்கு சீர்கெடவே காரணமாக இருக்கின்றனர். மத்திய, மாநில மந்திரிகளின் நிலையோ சொல்லவே வேண்டியதில்லை. பல தலைமுறைக்கும் அதிகமாக பல லட்சம் கோடி சொத்துக்களைக் குவித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கி வருகிறார்கள். பேராசை அவர்களை பேயாக்குகிறது.

அரசு அதிகாரிகளின் நிலையும் இதுதான். லஞ்சத்திலேயே முங்கிக் குளிக்கிறார்கள். அரசுகள் நடத்தும் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நிலையும் அப்படியே.

அரசுகள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் நிலையோ சொல்லி மாளாது. அரசுத் துறைகள்தான் இப்படி ஊழல்களிலும் லஞ்சத்திலும் சீர்கெட்டுக் கிடக்கின்றன என்றால், தனியார்கள் நடத்தும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் நிலை அதைவிட மோசமாக இருக்கிறது. பெரும் பெரும் பண முதலைகள் நடத்தும் நிறுவனங்களிலும் ஒழுங்கீனங்கள் மலிந்து காணப்படுகின்றன. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாட்டை ஆளவில்லை. அவர்கள் அனைவரும் இந்தப் பெருங்கொண்ட பண முதலைகளின் பைக்குள்ளே அடக்கமாகிவிட்டார்கள். எனவே பெரும் பணம் படைத்தவர்கள் மேலும் மேலும் பல தலைமுறைகளுக்குக் கோடி கோடியாக பணம் சேர்க்கவும். அடிமட்ட மக்கள் அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கே ஆலாய்ப் பறந்து அல்லலுறவும் நேரிடுகிறது.

வியாபாரிகளிலிருந்து, தொழில்கள் நடத்துவோர்களிலிருந்து யாருமே நேர்மையாக, ஒழுங்காக, நடக்க முடியாத நிலையில் சீர்கேடுகளும், ஊழல்களும், லஞ்சமும், ஒழுக்கக் கேடுகளும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. ஊழலற்ற நேர்மையானவர்கள் பதவியில் இருக்க முடியாத ஆபத்தான நிலை! ஆம்! மனித வர்க்கமே நிம்மதி இழந்து நிலைதடுமாறி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குரிய நிவாரணங்களையும், கண்டறிந்து மக்கள் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ வழி காண வேண்டும். இது மக்கள் நலன் நாடுவோரின் தலையாய பணி.

மக்களின் அமைதி வாழ்க்கையை சீர்குலைத்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதில் முதலிடத்தை வகிப்பவர்கள் ஆன்மீகத்திற்கு வழிகாட்டிகள் எனக் கூறிக் கொண்டு, மனிதனைப் படைத்த இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களாகப் புகுந்து கொண்டுள்ள புரோகிதர்களான மதகுருமார்கள். இவர்களே பல கடவுள் கொள்கையைப் புகுத்தி மூட நம்பிக்கைகளிலும், மூடச் சடங்கு சம்பிரதாயங்களிலும், மூடத்தனமாக வணக்க வழிபாடுகளிலும், அறிவுக்கே பொருந்தாத அனாச்சாரங்களிலும் மக்களை மூழ்கச் செய்து அவர்கள் கஷ்டப்பட்டு ஈட்டும் பொருளை தவறான முறையில் அபகரித்துச் சீரழிப்பதுடன் அவர்களும் உண்டு கொழுக்கிறார்கள்.

நாங்கள்தான் கடவுளின் பிரதிநிதிகள், மோட்சத்திற்கு வழிகாட்டுகிறவர்கள், நேரான வெற்றிப் பாதையில் இட்டுச் செல்கிறவர்கள் என பொய்யாகப் பிதற்றிக் கொண்டு மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் இவர்களைவிட ஏமாற்றுப் பேர்வழிகள், மோசடியாளர்கள், பக்கா திருடர்கள், மனித விரோதிகள் வேறு யாரும் இல்லை.

இந்தப் புரோகிதர்களுக்கு மனிதன் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே அணுவளவும் அனுமதி கொடுக்கப்படவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். இந்த மதப் புரோகிதர்கள் சட்ட விரோதமாக அனைத்து சமுதாயங்களிலும் புகுந்து கொண்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தி வயிறு வளர்க்கும் சண்டாளர்கள்; கொடியவர்கள். இந்த மதப் புரோகிதர்களின் துர்போதனைகள் காரணமாகவே பல மதங்களும், பலவித மூட நம்பிக்கைகளும், அனாச்சாரங்களும், பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளாத பலவித மூடத்தனமான வணக்க வழிபாடுகளும் மக்களிடையே மலிந்து காணப்படுகின்றன.

இந்த முட்டாள் மதப்புரோகிதர்களின் வழிகெட்ட போதனைகளை ஏற்று, எவ்வளவு கொடூர பாவச் செயல்களைச் செய்தாலும், அவை மூலம் பொருளீட்டினாலும் அவற்றிற்குப் பரிகாரமாக இந்த மதக் குருமார்களுக்கு ஒரு பங்கும், கோவில், சர்ச், தர்கா, போன்றவற்றில் காணப்படும் உண்டியல்களில் ஒரு பங்கும் போட்டுவிட்டு, சில மூடச் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்தால் போதும், பாவ விமோசனம் பெற்று விடுவோம் என்ற மூட நம்பிக்கையில் பெருங்கொண்ட மக்கள் பாவங்களிலும் அட்டூழியங்களிலும் ஈடுபட்டு பணத்தை கோடி கோடியாகக் கொள்ளை அடிக்கின்றார்கள். அனைத்துத் துறைகளிலும் இப்படிப்பட்டவர்கள் நிறைந்து காணப்படுவதால் அனைத்துத் துறைகளும் சீர்கெட்டு சீரழிந்து காணப்படுகின்றன.

ஒரே கடவுள் பல கடவுள்களாக்கி அக்கடவுள்களின் பெயரால் மக்களை ஏமாற்றி வஞ்சிக்கும் இந்த மதப் புரோகிதர்களின் வஞ்சகச் செயல்களை கண்ட சகிக்காத போலி பகுத்தறிவாளர்கள் தாங்கள் தான் பகுத்தறிவாளர்கள், சுய மரியாதைக்காரர்கள் என்று கூறிக் கொண்டு, பொய்க் கடவுள்களையும், அப்பொய்க் கடவுள்களை போதிக்கும் மதகுருமார்களையும் ஒழித்துக் கட்டுவதற்கு மாறாக, படைத்த ஒரேயொரு இறைவனையும் ஒழித்துக் கட்டுவதாகக் கூறிக்கொண்டு தங்களால் முடியாத காரியத்தில் ஈடுபட்டு வழிகெடுகிறார்கள். ஐம்புலன்களை கொண்டு மட்டுமே செயல்படும் பகுத்தறிவுக்கு எட்டாத அபவ்தீக ஓரிறைவனோ, மறுமையோ இல்லை என்று மூடத்தனமாக மக்களுக்குப் போதித்து வருகின்றனர். அதன் விளைவு இறைவனோ, தங்களின் அடாத செயல்களுக்குரிய தண்டனையோ, மறமையோ இல்லை எனும் போது, தங்களை வருத்தி மற்றவர்களக்கு ஏன் நல்லது செய்ய வேண்டும்? அடாத செயல்கள் செய்வது கொண்டே இவ்வுலகில் சபீட்சமாகவும், வளமாகவும், மகிழ்வாகவும் வாழ முடியும். பஞ்சமா கொடிய குற்றங்களைச் செய்தாலும், அரசுகளையும், அரசு அதிகாரிகளையும், நீதிபதிகளையும், கொள்ளை அடித்து கோடி கோடியாக சேர்ப்பதில் ஒரு பகுதியைக் கொடுத்து ஏமாற்றித் தப்பித்து விடமுடியும் என்ற அசாதரண துணிச்சலில் அனைத்து அடாவடிகளிலும், அநியாயங்களிலும் ஈடுபடுகின்றனர். கடவுள் மற்றும் மறுமை பற்றிய அச்சம் இல்லாததால் அரசும், அரசு அதிகாரிகளும், நீதிபதிகளும் பணத்திற்கு அடிபணிந்து இப்படிப்பட்டவர்களுக்குத் துணை போவது இயற்கைதானே! கடவுளின் பெயரால் மக்களை வஞ்சிக்கும் மத குருமார்களான புரோகிதர்களுக்கு உலகின் சீர்கேட்டில் எந்த அளவு பங்கு உண்டோ அதேபோல் ஓரிறைவனையும், மறுமையையும், தீச்செயல்களுக்குரிய மறுமைத் தண்டனைகளையும், மறுக்கும் நாத்திகர்களக்கும் உலகின் சீர்கெட்டில் அதே அளவு பங்கு உண்டு.

மூன்றாவதாக ஆன்மீகத்தில் இடைத்தரகர்களாக மத குருமார்கள் திருட்டுத்தனமாக புகுவது போல், அரசியல் இடைத்தரகர்களாக அரசியல் புரோகிதர்கள் புகுந்து கொண்டு மக்களை வஞ்சித்து வயிறு வளர்க்கிறார்கள். ஆன்மீகமாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் சேவை மனதுடன் தொண்டு செய்பவர்கள் மட்டுமே நேர்மையாக நடக்க முடியும். ஆன்மீகத்தையும், அரசியலையும் தொப்பையை நிறைக்கும் தொழிலாகக் கொள்கிறவர்கள் ஒருபோதும் நேர்மையாக நடக்க முடியாது. இந்த அரசியல் புரோகிதர்களில் ஆத்திகர்களும் உண்டு. நாத்திகர்களும் உண்டு.

மதப் புரோகிதர்கள் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றவதைக் கண்டு வெறுப்புற்று பல கடவுள் கொள்கையை ஒழிப்பதற்கு மாறாக ஓரிறைவனை மறுக்கும் நாத்திகர்கள் இங்கு அரசியல் புரோகிதர்கள் மக்களை ஏமாற்றி வஞ்சிப்பதில் வெறுப்புற்று அரசியல் வேண்டாம் என்று சொல்வதில்லை. ஆம்! மக்களுக்கு மிகமிகத் தேவையானவற்றில் தான் இடைத்தரகர்கள் புகுந்து கொண்டு, மக்களை ஏமாற்றி வஞ்சிப்பார்கள் என்ற பேருண்மையை, உணர முடியாமல்தான் தங்களை பகுத்தறிவாளர்கள் என்று பீற்றிக் கொள்ளும் நாத்திகர்கள் இருக்கிறார்கள்.

மனித குலத்தை வஞ்சிக்கும் இம்முத்தரப்பாரையும் சினிமா துறை(வெள்ளித்திரை, சின்னத்திரை) போற்றி வளர்த்து வருகிறது. இம்முத்தரப்பாரும் சினிமா துறையைப் பேணி வளர்த்து வருகிறார்கள்.

ஆக ஆத்திகத்தின் பேரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதகுருமார்களிடமிருந்தும், நாத்திகத்தின் பேரால் ஓரிறைவனையும் மறுக்கும் போலி பகுத்தறிவாளர்களிடமிருந்தும், அரசியல் இடைத் தரகர்களான அரசியல் புரோகிதர்களிடமிருந்தும் மக்கள் விடுபட்டு, தங்களைப் படைத்த ஓரிறைவனை மட்டும் உறுதியாக நம்பி ஏற்று அந்த இறைவன் முன்னர் இறக்கிய அனைத்து தற்காலிக நெறி நூல்களையும்(வேதங்கள்) அரசு பழைய காகித நாணயங்களை (Currency) இரத்து செய்துவிட்டு புதிய காகித நாணயங்களை (Currency) அமுல்படுத்தவது போல் இரத்து செய்துவிட்டு இறுதியாக இறக்கியருளிய இறுதியும், உலக அழியும் நாள் வரை நிலைத்திருக்கும் நன் நெறிநூல் அல்குர்ஆனை பற்றிப் பிடித்து அதிலுள்ள வழிகாட்டல்படி மனிதகுலம் நடக்க முன்வந்தால் மட்டுமே, மனித குலம் இன்றிருக்கும் பேரழிவிலிருந்து விடுபட முடியும். மக்கள் நலன் நாடுவோரே சிந்தியுங்கள்! சுதாரியுங்கள்!

Previous post:

Next post: