நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!

in 2010 ஏப்ரல்,பகுத்தறிவாளர்களே!

நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!
அபூ அப்தில்லாஹ்
பிப்ரவரி தொடர் :10
உண்மை இதழ் ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களே, அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு எனக் கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே உண்மையை-சத்தியத்தை-நேர்வழியை உள்ளது உள்ளபடி மிகமிகச் சரியாக அறிந்து அதன்படி நடப்பதோடு அதையே மக்களுக்குப் போதிப்பவர்களுக்கே இறுதி வெற்றி கிடைக்கும் என நான் நல்வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கிறேன்.

போலிப் பகுத்தறிவாளர்களாகிய நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள இறந்துபோன பெரியார்களை, சீர்திருத்தவாதிகளை, பகுத்தறிவாளர்களைக் குற்றம் பிடிக்க வழியில்லை. காரணம் அவர்களுக்கு இஸ்லாத்தின் பெயரால் அறிமுகப்படுத்தப்பட்டதே முஸ்லிம் மதகுரு மார்கள் நடைமுறைப்படுத்திய இஸ்லாமிய மதமே அல்லாமல் இறைவன் அளித்த தூய இஸ்லாமிய மார்க்கம் அல்ல. தெடர் 9ல் நாம் விளக்கியபடி இறைவனால் கொடுக்கப்பட்ட தூய வாழ்க்கை நெறி முன்னைய மதகுருமார்களால் அவர்களின் வருமானத்திற்கு ஏற்றவாறு மூட நம்பிக்கைகள், மூடச்சடங்கு சம்பிரதாயங்கள், அறிவு ஏற்றுக் கொள்ளாத நடைமுறைகள், இவை அனைத்தையும் முஸ்லிம் மதப் புரோகிதர்கள் அப்படியே நகல் எடுத்து, முஸ்லிம்களி டையேயும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

இதற்கு முஸ்லிம் மத குருமார்களுக்குள்ள ஒரே ஆதாரம் ஏனைய மதங்களின் மக்களிடையே ஆதிக்கம் செலுத்தி வரும் அந்தந்த மத குருமார்களைப் போல் அவர்களும் முஸ்லிம் மத மக்களிடம் ஆதிக்கம் பெற்றவர்கள் என்கிறார்கள். மற்ற மதங்களிலுள்ள மதருகுமார்கள் குருகுல கல்வி கற்று பட்டம் பெற்று அதிகாரம் பெற்றிருப்பது போல் நாங்களும் குருகுல கல்வி கற்று பட்டம் பெற்று அதிகாரம் பெற்றிருக்கிறோம் என்கின்றனர்.

மக்களுக்கு மதத்தைப் போதிப்பது எங்களுக்கு மட்டுமே உள்ள உரிமை; அதில் பிறர் தலையிட முடியாது என்று இதர மதங்களின் குருமார்கள் உரிமை பாராட்டுவதுபோல் முஸ்லிம் மதகுருமார்களும் உரிமை பாராட்டுகிறார்கள். அல்குர்ஆன் முஸ்லிம்களின் வேதம்; அதில் மற்ற மதத்தாருக்கு எவ்வித உரிமையும் இல்லை; குர்ஆனுக்கு நாங்கள் கொடுக்கும் விளக்கத்தையே முஸ்லிம்களும் ஏற்று நடக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்கள்.

பொதுவாக உலகியல் நடைமுறை என்ன? எந்தத் துறையில் யார் படித்து பட்டம் பெறுகிறார்களோ அத்துறையில் அவர்களே அறிஞர்கள்; விற்பன்னர்கள்; வல்லுநர்கள் என்பதே அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. அப்படி மருத்துவம் படித்தவர் மருத்துவத்தில் நிபுணர். சட்டம் படித்தவர் சட்டத்தில் நிபுணர்; பொறியியல் படித்தவர் பொறியியலில் நிபுணர்; இப்படி அந்தந்தத் துறையில் படித்தவர்கள் அந்தத் துறையில் நிபுணர்கள் என்பது அனைவரும் ஏற்கும் நிலைபாடாகும். இதே போல் மதத் துறையில் படித்துப் பட்டம் பெற்றவர்கள். அம்மதத்தில் நிபுணர்கள்; அவர்களின் தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அறிவு ஜீவிகள் அனைவரிடமும் வேரூன்றிக்காணப்படுகிறது.

இந்தப் பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் நாத்திகத்தை போதித்த அறிஞர்கள் அனைவரும் மதகுருமார்கள் சொன்னவற்றைத் தான் மதங்கள் போதிக்கின்றன. முஸ்லிம் மதகுருமார்கள் சொல்பவைதான் இஸ்லாமிய மதத்தின் போதனைகள். ஆக அனைத்து மதங்களும் மூட நம்பிக்கைகளை வளர்த்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தவே கடவுளின் பெயரை கற்பனையாகக் கூறுகின்றன. மதங்கள் அனைத்தும் அபின் போல் மக்களை போதைக்கு ஆளாக்கி ஏமாற்றுகின்றன என்ற எண்ணத்தில் கடவுள் என்ற ஒரு சர்வசக்தி இல்லை; கடவுளை மற; மனிதனை நினை என்ற தவறான தத்துவத்தை முழங்க ஆரம்பித்தார்கள். இதுதான் அவர்கள் செய்த பெருந்தவறு.

உண்மை என்ன தெரியுமா? உலகியல் துறைகளில் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு அத்துறையில் அனுபவ அறிவு இருப்பது போல், மதத் துறையில் அனுபவ அறிவு பெற முடியாது. மேலும் உலகியல் துறையில் ஒருவன் படித்துப் பட்டங்கள் பல பெற்றிருந்தாலும் மக்கள் அவனுக்கு அத்துறையில் எந்தளவு ஆற்றலும் திறமையும் இருக்கிறது என்பதை அனுபவத்தில் அறிந்து கொள்ள முடியும். ஒரு மருத்துவரிடம் தனது நோயைத் தீர்க்கச் செல்லும் நோயாளி பலமுறை சென்றும் அவர் கொடுத்த மருந்தினால் நோய் தீரவில்லை என்றால் அவர் தகுதியற்றவர் என்பதை தனது சொந்த அனுபவத்திலேயே அறிந்து கொள்ள முடியும்.

இப்படி உலகியல் துறைகளில் அந்தத்துறை வல்லுநர்களின் திறமையை மக்கள் சொந்த அனுபவத்திலேயே அறிந்து கொள்ள முடியும். அவர்களைப் புறக்கணித்துவிட முடியும். அதற்கு மாறாக மதத்துறையில் மத குருமார்களின் அறிவை, ஆற்றலை தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் அறியும் வாய்ப்பு இல் லவே இல்லை. உதாரணமாக ஒரு கல்லை தெய்வமாக வடித்து வைத்துக்கொண்டு இந்தத் தெய்வத்தைத் தினசரி வணங்கி வழிபட்டால், மறுமையில் வெற்றி பெறலாம்; மோட்சம் அடையலாம் என்று ஒரு மத குரு சொல்கிறார். அது எந்த அளவு உண்மை என்பதை அதை நம்பும் ஒருவர் இவ்வுலகில் அறிந்து கொள்ள முடியுமா? ஒருபோதும் முடியாது.

அதேபோல் ஒரு முஸ்லிம் மதருகு ஒரு சமாதியை கட்டி வைத்துக் கொண்டு, அச் சமாதிக்கு வழிபட்டால் மறுமையில் இறைவனின் திருப்தியும், சுவர்க்கமும் கிடைக்கும் என்று கூறுவதின் உண்மை நிலையை அதை நம்புகிறவர்கள் இவ்வுலகிலேயே அறிய முடியுமா? ஒருபோதும் முடியாது. அதனால் தான் இப்படிப்பட்ட வழிகேடுகளை அவை நம்பிக்கை சார்ந்தது. ஆதாரம் பார்க்க முடியாது என்று கூறி மக்களை எளிதாக ஏமாற்றிப் பிழைக்க முடிகிறது. அதனால்தான் உலகியல் துறையில் படித்துப் பட்டம் பெற்று அதைத் தொழிலாக- வயிற்றுப் பிழைப்பாகக் கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது போல், மதத் துறையில் படித்துப் பட்டம் பெற்றவர் அதைக் கொண்டு பிழைப்பு நடத்த அனுமதி இல்லை. இதை இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில் இறைத் தூதர்களையே பகிரங்கமாகப் பிரகடனப் படுத்த இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

இதற்கு முன்னைய இறைத் தூதர்களின் சமூகங்களில் புகுந்து கொண்ட மதகுருமார்கள் என்ன தந்திரத்தைக் கையாண்டார்கள் தெரியுமா? அந்த இறைத் தூதர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைத்த செய்திகள் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படவில்லை. வெறும் வாய்ச் செய்திகளாகவே மக்களிடையே பரவின. அதனால் கடவுள் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் இப்புரோகிதர்களுக்கு இது பெரும் வாய்ப்பாகப் போய்விட்டது. கடவுள் சொன்னதாகவும், இறைத் தூதர் சொன்னதாகவும் வயிறு வளர்க்க வாய்ப்பாக உள்ள கட்டுக்கதைகளைக் கலந்து இறைச் செய்தியின் தூய நிலையை மாசுபடுத்தி வேதங்களைக் கற்பனை செய்து தங்கள் கைப்பட பின்னால் எழுதிக் கொண்டார்கள். இந்த உண்மையை இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனின் 2:79 இறைவாக்கு அம்பலப்படுத்துகிறது. ஆக அல்குர் ஆனுக்கு முன்னுள்ள இறை வெளிப்பாடுகள் என்று சொல்லப்படும் இந்திய வேதங்கள், பைபிள், தோரா போன்றவை அனைத்தும் அவற்றின் தூய நிலையை இழந்து மனிதக் கரம் பட்டு கலப்படமாகிவிட்டன.

அவற்றில் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளாத பல அசிங்கங்கள், அநாகரீகங்கள், கற்பனைக் கட்டுக் கதைகள் காணப்படுவதால் பகுத்தறி வாளர்களால் அவை நிராகரிக்கப்பட்டு கடவுள் மறுப்புக் கொள்கை ஏற்படக் காரணமாயிற்று. இது முன்னைய வேதங்களின் நிலையாகும்.
அதற்கு மாறாக இறைவன் அளித்த இறுதி வழி காட்டல் நூல் அல்குர்ஆன் உலகம் அழியும் வரை மனித வாழ்க்கை நெறியை தெளிவாக விளக்கும் நூலாக இருப்பதால், 1450 வருடங்களுக்கு முன்னர் அது இறைவன் புறத்திலிருந்து இறக்கப்படும் போதே உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டது. அதன் ஒரு புள்ளி, ஓர் எழுத்து முதல் மாற்றமில்லாமல் அதன் தூய நிலை பாதுகாக்கப்பட்டு வருகிறது. 20ம் நூற்றாண்டுக்குப் பிறகு மனிதன் கண்டுபிடிக் கும் பல விஞ்ஞான உண்மைகளை அன்றே அல்குர்ஆனில் சொல்லி இருப்பது, அது இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்டது தான் என்பதற்கு வலுவான ஆதாரமாக இருக்கிறது.

அப்படியானால் மனிதக் கரம்பட்டு மாசுபட்ட முன்னைய வேதங்களைப் போல், பாதுகாக்கப்பட்ட இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனும் பகுத்தறிவாளர்களால் நிராகரிக் கப்படுவதற்குக் காரணம் என்ன?

ஆம்! அங்குதான் முஸ்லிம் மதகுருமார்களான மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்களின் தந்திரங்கள், உபாயங்கள் மயக்கத்தைத் தருகின்றன. முதலில் மனித குலத்திற்கே, அகில உலக மக்களுக்கே சொந்தமான இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனை முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என வரையறைப்படுத்தி முஸ்லிம் அல்லாதவர்களை அல்குர்ஆனைப் பார்ப்பதை விட்டும் தடுத்தார்கள். மாற்றுமத அறிஞர்களும், பகுத்தறிவாளர்களும், நாம் முன்னர் விளக்கியது போல், முஸ்லிம் மதத்தைக் கற்றுப் பட்டம் பெற்ற மவ்லவி, ஆலிம் வர்க்கத்தினருக்கே அதிகாரம் உண்டு என்ற தவறான எண்ணத்தில் அவர்களின் சொல்லை ஏற்று முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் அல்குர்ஆனுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என முடிவு செய்து ஏற்று அல்குர்ஆனை படித்துச் சிந்திப்பதை விட்டும் ஒதுங்கிக் கொண்டார்கள்.

மேலும் அல்குர்ஆன் மற்ற மொழிகளில் தரப்படுவதையும் முஸ்லிம் மதப் புரோகிதர்கள் நீண்ட காலம் தடுத்திருந்தார்கள். அகில உலகத்திற்கும் சொந்தமான அல்குர்ஆனையும், அகில உலகிற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறுதித் தூதரையும், முஸ்லிம்கள் நம்ம குர்ஆன், நம்ம ரசூல் என்ற மூடத்தனமான குறுகிய வட்டத்திற்குள் சிறைப்படுத்தும் அளவில், முஸ்லிம் மதப் புரோகிதர்களின் போதனை இருந்து வருகிறது.

அது மட்டுமா? முஸ்லிம்களும் தூய்மையான நிலையில் அல்லாமல் அல்குர்ஆனைத் தொடக் கூடாது என குர்ஆன் சொல்லாத ஒரு சட்டத்தைச் சொல்லி முஸ்லிம்களையும் அச்சப்படுத்தி அல்குர்ஆனை நெருங்காமல் செய்து விட்டார்கள். மேலும் அரபி மொழி படித்த மவ்லவி ஆலிம்களுக்கு மட்டுமே அதுவும் 14 கலைகள் கற்ற அரபி பண்டிதர்களே குர்ஆனின் கருத்துக்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். குர்ஆனின் மொழிபெயர்ப்புகளைப் படித்து அதன் கருத்துக்களை விளங்க முடியாது எனத் தொடர்ந்து சொல்லி முஸ்லிம்கள் குர்ஆனைப் படித்து விளங்குவதை விட்டும் தொடர்ந்து தடுத்து வருகிறார்கள். மேலும் குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திற்கும் உள் அர்த்தம் உண்டு; வெளி அர்த்தம் உண்டு எனப் பொய்யாகக் கூறி முஸ்லிம்களையும், மற்றவர்களையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். ஆம்! இப்படி முஸ்லிம்களையும், முஸ்லிம் அல்லாதவர்களையும் தொடர்ந்து ஏமாற்றி அதன் மூலம் வயிறு வளர்த்து வருகிறார்கள். மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொள்வது கொடிய குற்றம் என்று கூறும் சுமார் 50 இறைவாக்குகளை நிராகரித்துப் புறக்கணித்து விட்டு மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட வர்கள் இப்புரோகிதர்கள். இவர்களைவிடக் கொடிய குற்றம் செய்பவர்கள் உலகில் இல்லை.

உண்மையில் மார்க்கத்தில் இப்புரோகிதர்களுக்கு அணுவளவும் அதிகாரமில்லை என்பதை முதலில் இப்பகுத்தறிவாளர்கள் உணர வேண்டும். இறைவனே மக்கள் அனைவருக்கும் மார்க்கத்தைத் தெள்ளத் தெளிவாக விளக்கி இருப்பதாகப் பல இறைவாக்குகளில் கூறி இருக்கிறான்.எடுத்து நடக்க வேண்டிய, கடை பிடிக்க வேண்டிய கட்டளைகளான இரண் டாம் கருத்துக்கு இடமின்றி ஒரே கருத்துள்ள வசனங்களே(ஆயாத்தும் முஹ்க்கமாத்) அல்குர்ஆனின் அடிப்படை. இவற்றை இறைத் தூதரின் நடைமுறையைக் கொண்டு அனைவரும் அவர்களுக்குத் தெரிந்த மொழி பெயர்ப்புகளைக் கொண்டு எளிதாக விளங்க முடியும். இதற்கு எண்ணற்ற குர்ஆன் வசனங்களே போதுமான ஆதாரங்களாக இருக்கின்றன.

அல்குர்ஆன் கூறும் இந்த உண்மைகள் கடந்த ஆயிரம்(1000) வருடங்களாக இந்த முஸ்லிம் மத குருமார்களால் மறைக்கப்பட்டிருந்தன. அதன் காரணமாகத்தான் கடவுள் மறுப்புக் கொள்கையை மக்களுக்குப் போதித்த பகுத்தறிவாளர்கள் ஏனைய மதங்களைப் போல் முஸ்லிம் மதமும் பகுத்தறிவுக்கு முரணா னவற்றைப் போதிக்கும் புரோகிதர்களின் கற்பனை கட்டுக்கதைகளின் தொகுப்பு என நினைத்து, மதங்கள் அனைத்தம் அபின் போல் மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவன. எனவே மதங்களை நம்பாதீர்கள்; மதங்கள் போதிக்கும் ‘கடவுளை மற; மனிதனை நினை‘ என மக்களுக்குப் போதித்து வருகிறார்கள். கடந்த ஆயிரம் வருடங்களாக இந்த நிலை நீடித்து வந்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

ஆனால் இன்றோ நிலை வேறு; முஸ்லிம் மத குருமார்களின் கடுமையான எதிர்ப்பைப் புறந்தள்ளி அல்குர்ஆன் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு கிடைக்கிறது. தங்களின் தாய் மொழியிலுள்ள மொழி பெயர்ப்பைப் பார்த்தே இணை, துணை இல்லாத ஏகன் இறைவனின் நேர்வழி காட்டலை அறிய முடியும். அதற்கு மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட இப் புரோகிதர்களின் உதவி தேவையே இல்லை. அந்த அளவு இறைவாக்குகள் மிக மிகத் தெளிவாக இருக்கின்றன. அதற்கு மேலும் இறைவனின் இறுதித் தூதரின் நடைமுறை விளக்கம் இரவையும் பகலைப் போல் ஆக்கும் நிலையில் இருக்கின்றது. இறுதித் தூதரே இப்படி உறுதி மொழி அளித்துள்ளார்கள்.

இறைத் தூதர்களைப் போல் மார்க்கப் பணிக்கு மக்களிடம் கூலி-சம்பளம்-கைமடக்கு இவை எதையும் எதிர்பாராமல்-கேட்காமல், தொண்டாகச் செய்ய யார் முன் வருகிறார் களோ அவர்கள் மட்டுமே மார்க்க நெறியை வளைக்காமல், திரிக்காமல், மறைக்காமல் உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்வார்கள். அதற்கு மாறாக மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டவர்கள் நேர்வழிக்குப் பதிலாக கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டுவார்கள். அவையே இஸ்லாம் மதம் உட்பட பல மதங்களாகும். இறைவன் கொடுத் துள்ளது தூய இஸ்லாமிய வாழ்க்கை நெறியே- மார்க்கமே அல்லாமல் மதமதப்பையும், மயக் கத்தையும், வெறியையும் ஏற்படுத்தும் மதம் அல்ல.

இந்தத் தெளிவுகள் இப்புரோகிதர்களைப் புறக்கணித்து நிராகரித்துவிட்டு அல்குர்ஆன் மொழி பெயர்ப்புகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் விளங்கும் உண்மையாகும். அப்படி விளங்கியவர்களில் ஒருவர்தான் இது காலம் வரை பெரியார் தாசனாக இருந்தவர் 11.03.2010 முதல் அப்துல்லாஹ் ஆக இறைதாசனாக மாறிவிட்டார். இதுபோல் முஸ் லிம் மதகுருமார்களின் தவறான போதனை களையே இஸ்லாமிய போதனையாக நம்பி கடவுள் மறுப்புக் கொள்கையில் இருப்பவர் கள், நடுநிலையோடு அல்குர்ஆன் மொழி பெயர்ப்பைப் படித்துச் சிந்திக்க ஆரம்பித்தால் அவர்களுக்கும் மனமாற்றம் ஏற்பட வாய்ப் புண்டு.

 இந்த வாய்ப்பு ஆரம்ப கால கடவுள் மறுப்புப் பகுத்தறிவு சிந்தனையாளர்களுக்குக் கிடைக்கவில்லை; கிடைத்திருந்தால் நிச்சயம் கடவுள் மறுப்புக் கொள்கையை பரப்பி இருக்க மாட்டார்கள். மதப்புரோகிதர்களுக்கு தூய இஸ்லாமிய மார்க்கத்தில் அணுவளவும் அனு மதி இல்லை; இறைவனுக்கும் அடியானுக்கும் இடையில் இப்புரோகிதர்கள் ஒருபோதும் இடைத் தரகர்களாக-புரோகிதர்களாக வர முடியாது என்பதைத் திட்டமாகத் தெரிந்த இன்றைய காலகட்டத்தில் “கடவுளை மற; மனிதனை நினை’ என்று கூறுவதை விட்டு, சர்வ சக்தனான ஓரிறைவன் இருக்கிறான். அவனுக்கு இடைத்தரகர்களாகிய புரோகிதர்கள் தேவையில்லை. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அந்த இறைவனின் நேர்வழிகாட்டலை அவனது இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆன் மூலமும், அவனது இறுதித் தூதரின் வழிகாட்டல்கள் மூலம் திட்டமாக, தெளிவாக அறிந்து அதன் படி நேர்வழி நடக்க முடியும் என்று மக்களுக் குப் போதிக்க முன்வருகிறவர்களே உண்மை யில் மனிதனை நினைத்து அவனது நலனுக்காகப் பாடுபடுகிறவர்களாக இருக்க முடியும்.
 

Previous post:

Next post: