அல்லாஹ்வைவிட, அல்லாஹ்வின் தூதரை விட அறிவாற்றல் மிக்கவர்களா மவ்லவி புரோகிதர்கள்?
மனிதனைப் படைத்த எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ், மனிதனின் இவ்வுலக வாழ்க்கை நெறியை, பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி மூலம் கற்றுக் கொடுத்தான். இறைத் தூதர்கள் அதில் எவ்வித கூடுதல் குறைவு இல்லாமல் அப்படியே மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து அதை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள். அவற்றில் இறைத்தூதர்கள் தங்களின் சொந்தக் கற்பனைகளைப் புகுத்தவில்லை. இதோ அல்குர்ஆன் கூறுகிறது.
அவர்கள்மீது தெளிவான நம் வசனங்கள் படித்துக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள் “இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும், அல்லது இதை மாற்றிவிடும்” என்று கூறுகிறார்கள். அதற்கு “என் மனப்போக்கின்படி அதை நான் மாற்றிட எனக்கு உரிமையில்லை. என்மீது வஹீயாக அறிவிக்கப்படவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு நான் நிச்சயமாகப் பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 10:15)
(மேலும் பார்க்க 17:73-75, 69:44-47)
இதுபோலுள்ள பல இறைவாக்குகளைப் படித்து உணர்கிறவர்கள், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமார்களே இறைவன் வஹீ மூலம் அருளிய நேர்வழிகாட்டலில், அவற்றை திரித்து, வளைத்து, மறைத்து சுய விளக்கங்களை புகுத்தவில்லை என்பதை உறுதியாக அறிய முடியும். அதற்கு மாறாக மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்களே எவ்வித அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக, திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்டு, தங்களின் சுயவிளக்கங்களைப் புகுத்தி தூய எளிய மார்க்கத்தைக் கடின மதமாக்கினார்கள். நேர்வழியைப் பல கோணல் வழிகளாக்கினர். இதற்காக இறைவன் அருளிய நேர்வழிகாட்டல் நூல்கள் (குர்ஆன், இன்ஜீல், தவ்றாத், ஸபூர் போன்றவை) உங்களுக்கு விளங்காது. மொழி பண்டிதர்களாகிய எங்களுக்கே அவை விளங்கும் என பொய்யுரைத்து, மக்களை மதிமயக்கி, மூளைச் சலவை செய்து பல கோணல் வழிகளில் செல்ல வைத்து நரகில் தள்ளுகிறார்கள். இந்த வகையில் இந்தப் புரோகிதர்கள் ஷைத்தானுக்கு உறுதுணையாக இருப்பதால் அவனுடைய உதவி ஒத்தாசைகளும், அவனது படை பட்டாளங்களின் ஒத்துழைப்பும் இந்தப் புரோகிதர்களுக்குத் தாராளமாகக் கிடைக்கின்றன.
அதே வரிசையில் இறுதி நபியின் முஸ்லிம் உம்மத்திலும் (சமூகம்) சட்ட விரோதமாக, திருட்டுத்தனமாக, கொல்லைப்புர இடுக்கு வழியாகப் புகுந்து கொண்டுள்ள மவ்லவி புரோகிதர்களும், இறைவனால் இறக்கியருளப்பட்ட நேர்வழிநூலான அல்குர்ஆனும் பாமரர்களாகி உங்களுக்கு விளங்காது;: அரபி படித்த எங்களுக்கே முழுமையாக விளங்கும். குர்ஆனில் உள்ளது உள்ளபடி நீங்கள் செயல்பட்டால் வழிகெட்டுவிடுவீர்கள். அந்த குர்ஆன் வசனங்களுக்கு மவ்லவிகளாகிய நாங்கள் கொடுக்கும் விளக்கத்தையே எடுத்து நடக்க வேண்டும்” என்று கோரஸ் பாடுவதுடன், அல்குர்ஆனின் நேரடிக் கருத்துக்களைத் திரித்து வளைத்து மறைத்து கோணல் விளக்கமாக்கி, அவற்றையே பின்பற்றி நடக்க வேண்டும் என போதிக்கின்றனர். முஸ்லிம்களை பல கோணல் வழிகளிலாக்கி வழி கெடுத்து நரகில் தள்ளுகின்றனர். ஷைத்தானின் தூண்டுதலால் பெருங்கொண்ட முஸ்லிம்களும் ஆட்டு மந்தைகளைப் போல் அந்த மவ்லவி புரோகிதர்கள் பின்னாலேயே செல்லுகின்றனர்.
ஆனால், அதற்கு மாறாக நேர்வழி நடந்து வெற்றிபெற்று சுவர்க்கத்தை அடைய விரும்பும் மிக சொற்ப மக்கள், அல்குர்ஆனை தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் தன்னம்பிக்கையோடு, சுய சிந்தனையோடு படித்து விளங்குகிறவர்கள், இந்த குர்ஆனை அல்லாஹ், மக்கள், குறிப்பாகப் பாமர மக்கள் (பார்க்க 62:2) எளிதாக விளங்கிக் கொள்ளும் நிலையில் மிக மிக எளிதாக ஆக்கி இருக்கிறான், தெளிவாக ஆக்கி இருக்கிறான், எழுதப்படிக்கத் தெரியாத ஒரு கைநாட்டுப் பேர்வழியும், பிறர் தான் பேசும் மொழியில் படித்துக் காட்டினால், அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதை விளங்க முடியும். உதாரணமாக 2:242 இறைவாக்கு இவ்வாறு கூறுகிறது!
மனிதர்களாகி நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்வதற்காக, அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விளக்குகிறான். (2:242)
இப்படி தெள்ளத் தெளிவாக, விளக்கமாக, கோணலே இல்லாத நிலையில் அல்லாஹ் அல்குர்ஆனிலுள்ள வசனங்களை விளக்கி இருப்பதாக சுமார் நானுறு (400) இ.டங்களுக்கும் மேலாக குறிப்பிட்டுள்ளான். நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அல்குர்ஆனின் “முஹ்க்கமாத்” வசனங்களுக்கு மேல் விளக்கம், சுயவிளக்கம் கொடுக்கும் தகுதி எவருக்கும் இல்லை என்பதை அதே அல்குர்ஆன் 33:36,66,67,68,42:21,49:16 இறைவாக்குகள் உறுதிப் படுத்துகின்றன.
அரபி மொழி படித்ததினால் அல்குர்ஆனை மக்களுக்கு விளக்கும் அதிகாரம் இந்த மவ்லவிகளுக்கு இருப்பதாக அல்குர்ஆனில் ஒரேயொரு வசனத்தையும் பார்க்க முடியவில்லை. ஒரேயொரு ஆதாரபூர்வமான ஹதீஸையும் இந்த மவ்லவிகளால் காட்ட முடியாது. அதற்கு மாறாக அரபி மொழி படித்திருக்கிறோம் என்ற ஆணவம் அவர்களை அபூ ஜஹீல் வழியில் வழிகேட்டில் இட்டுச் சென்று நரகில் தளளும் என்பதைத்தான் அல்குர்ஆனும், ஹதீஸ்களும் உறுதிப் படுத்துகின்றன. அல்குர்ஆன் 2:159 இறைவாக்கு இவ்வாறு உறுதிப்படுத்துகிறது.
“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும், அதனை நாம் (இந்)நூலில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும், யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்.” (2:159)
(மேலும் பார்க்க 2:160,161,162)
இறைவன் உங்களுக்குக் கொடுத்துள்ள ஆறாவது அறிவான பகுத்தறிவை முழுமையாக அல்ல: அதில் ஒரு 10% பயன்படுத்தி நாம் சொல்லுவதை சிந்தியுங்கள். மனிதர்களாகிய நாம் ஏகன் இறைவனின் படைப்பு. படைத்த எஜமானன் அவனது நேர்வழியை, அவனது கலாமான அல்குர்ஆனில் தெளிவாக விளக்கியுள்ளான். மேலும் தனது இறுதித்தூதரைக் கொண்டு நேர்வழியை தெளிவாக நடந்து காட்டவும் செய்துள்ளான். இதை அல்குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டவும் செய்துள்ளான்.
இந்த நிலையில் அல்லாஹ் தனது படைப்பான மனிதனுக்கு விளக்கிய நேர்வழியை மனிதர்களாகிய நாம் விளங்க முடியாது. நம்மைப் போன்ற மனிதர்களாகிய இந்த மவ்லவிகள் விளக்கித்தான் நாம் விளங்க முடியும் என்பதே இந்த மவ்லவிகளின் வாதம்.
அப்படியானால், மனிதர்களாகிய நமக்கு நேர்வழியை விளக்கும் ஆற்றல், அல்லாஹ்வைவிட, அல்லாஹ்வின் தூதரைவிட, இந்த மவ்லவிகளுக்குத் தான் அதிகமாக இருக்கிறது என்பதுதானே அதன் பொருள். அல்லாஹ் அல்குர்ஆனில் விளக்கியுள்ளது நமக்கு விளங்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் அதை நடைமுறைப்படுத்திக் காட்டித் தந்ததும் நமக்கு விளங்கவில்லை. இந்த மவ்லவிகள் விளக்கியதற்கும் பின்னர்தான் அது நமக்கு விளங்குகிறது. அப்படியானால் அதன் பொருள் என்ன? அல்லாஹ்வைவிட, அல்லாஹ்வின்தூதரை விட, நேர்வழியை நமக்கு விளக்கும் ஆற்றல்-திறமை இந்த மவ்லவிகளுக்குத்தான் இருக்கிறது என்பதுதானே அதன் பொருள், இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களின் ஈமான்-.இறை விசுவாசம் எஞ்சி இருக்க முடியுமா? அப்படியானால் அல்குர்ஆன் உங்களுக்கு விளங்காது;: ஹதீஸ் உங்களுக்கு விளங்காது. அதை நாங்கள் தான் உங்களுக்கு விளக்க வேண்டும் என்று வாய் கூசாது கூறும் இந்த மவ்லவி புரோகிதர்கள் யாராக இருக்க முடியும், “அனரப்புக்குமுல் அஃலா” – “நானே உங்களின் மிக மேலான ரப்பு” (79:24) என்று கூறிய ஃபிர்அவ்னுடைய வாரிசுகளாக இருக்க முடியுமா? அல்லது “வஹீ” மூலம் பெற்றதை உள்ளது உள்ளபடி சொன்ன நபிமார்களின் வாரிசுகளாக இருக்க முடியுமா? சிந்தியுங்கள்.
“மக்களுக்கு மார்க்கத்தைச் சொல்ல, எழுதப்படிக்கத் தெரியாத இந்த முஹம்மதுக்கு என்ன தகுதி இருக்கிறது? அரபி மொழி கற்றுணர்ந்த பண்டிதர்களுக்கல்லவா அந்த தகுதி இருக்கிறது” எனறு கூறி ஆணவம் பேசி அழிந்து நரகில் விழுந்த அபூஜஹீலின் வாரிசுகளா இந்த மவ்லவி புரோகிதர்கள்? அதற்கு மாறாக அல்லாஹ்வின் கட்டளைகளை ஒரு எழுத்துப் பிசகாது அப்படியே எடுத்துரைத்த நபிமார்களின் வாரிசுகளா இந்த மவ்லவி புரோகிதர்கள்?
தீர்க்கமாகச் சிந்திப்பீர்களேயானால், இந்த மவ்லவி புரோகிதர்களைவிட கேடுகெட்ட இழிவான ஒரு பிறவி இந்த வானத்தின் கீழ் எந்தப் படைப்பும் இருக்க முடியாது என்பதைத் திட்டமாக நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.
இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து தன்னம்பிக்கையுடன் குர்ஆனை படித்து சிந்தித்து நாம் விளங்கியபடி செயல்பட்டோம் என்று வைத்துக் கொள்வோம். நாளை மறுமையில் அல்லாஹ்விடம்தானே நமது விசாரணை, அல்லாஹ் ஒன்றைப்பற்றி இதை ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்கிறான். நாம் “யா அல்லாஹ் நீ உன் இறுதி வழிகாட்டல்நூலின் 7:3-ல் யாரையும் பாதுகாவலராக எடுக்கக் கூடாது. நீ இறக்கியதையே பின்பற்றி நடக்க வேண்டும் என்று கட்டளை இட்டிருக்கிறாய். உனது கட்டளையை ஏற்று உனது கலாமை படித்து நான் விளங்கியபடி செயல்பட்டேன் என்று பதில் அளித்தால், அதற்கு மேல் அல்லாஹ்விடமிருந்து அடுத்த கேள்வி வருமா? நிச்சயம் வராது. அதற்கு மாறாக நாம் தவறாகச் செய்திருந்தாலும், அல்குர்ஆனில் நேரடியாகப் பாடுபட்டதற்கு ஒர கூலி நிச்சயம் உண்டு. தண்டனையிலிருந்து தப்பி விடுவோம். (பார்க்க 29:69)
அதற்கு மாறாக தன்னம்பிக்கை இல்லாமல், இந்த மவ்லவி புரோகிதர்களை நம்பி, அவர்கள் சொன்னபடி செயல்பட்டோம் என்று வைத்துக் கொள்வோம். நாளை மறுமையில் அல்லாஹ் ஒன்றைப் பற்றி, இதை ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்கிறான். நமது பதில் எப்படி .இருக்கும்? “யா அல்லாஹ்! நீ குர்ஆனை அரபி மொழியில் இறக்கியுள்ளாய்;. எனக்கு அரபி தெரியாது. இன்னார் (உதாரணமாக P.J.) அரபி மொழி பண்டிதர், குர்ஆனை கரைத்துக் குடித்தவர்: வாதத்தில் திறமை மிக்கவர், அவர் மார்க்க விளக்கம் என்ற சொன்னது எனது மனோ இச்சையின்படியும் சரியாகத் தெரிந்தது. எனவே அதனை ஏற்று அதன்படி செயல்பட்டேன்” என்றுதான் பதில் சொல்ல முடியும்.
உடனே அல்லாஹ்விடமிருந்து எதிர் கேள்வி என்ன வரும்? அவரைப் பின்பற்றும்படி எனது வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில் எந்த இடத்தில் சொல்லியுள்ளேன். நான் அனைத்து மொழி மக்களும் எளிதாகப் புரியும்படி குர்ஆனை தெளிவாக விளக்கியுள்ளதாக நானுறு (400) இடங்களுக்கும் மேலாக பல இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறேனே, நீ படித்துப் பார்க்கவில்லையா? எனது விளக்கத்திற்கு மேல் விளக்கம் கூறும் தகுதி மனிதர்களில் யாருக்கும் இல்லை என்பதை 33:36ல் தெளிவாகக் கூறி இருக்கிறேன் படித்துப் பார்க்கவில்லையா? எனது சொல்லை மீறி இறைவனாகிய எனது விளக்கம், எனதுதூதரின் நடைமுறை விளக்கம் தவிர்த்து, வேறு யாருடைய சுய விளக்கமும் உன்னை வழிகேட்டிலாக்கி நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்பதை அதே 33-ம் அத்தியாயம் 66,67.68 மூன்று எனது வாக்குகளைக் கொண்டு கடுமையாக எச்சரித்திருக்கிறேனே அதைப் படித்துப் பார்த்து சிந்தித்து விளங்கவில்லையா? இந்த மவ்லவி புரோகிதர்களைப் பின்பற்றி நடக்க குர்ஆனில் ஒரு இடத்திலாவது சொல்லியிருக்கிறேனா? குறைந்தது எனது தூதராவது இந்த மவ்லவி புரோகிதர்களைப் பின்பற்றி நடக்கச் சொன்ன ஒரு ஆதாரத்தையாவது உன்னால் காட்ட முடியுமா? நீ உனது மனோ இச்சைக்கு வழிபட்டு, எண்ணற்ற எனது கட்டளைகளையும் பறக்கணித்துவிட்டாய். எனதுதூதரின் வழிகாட்டுதலையும் புறக்கணித்துவிட்டாய்: கேவலம் உன்னைப் போன்ற ஒரு அற்ப அறிவு மட்டுமே கொடுக்கப்பட்ட, பல குறைபாடுகள் உள்ள (பார்க்க 31:6, 42:42, 90:4-10, 96:6, 87:16, 17:11, 21:37, 70:19, 10:44, 89:20, 100:8, 77:20, 36:77, 76:27, 33:72, 4:28) மனிதனை அவன் மவ்லவி, ஆலிம், அறிஞன், அவன் சொல்லுவது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி செயல்பட்டாய், எனவே 33:66,67,68, 2:39 எச்சரிக்கைகளின்படி நீ நிரந்தரமாகத் தங்குமிடம் நரகம்தான்” என்று அல்லாஹ் சொல்ல வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா?
இந்த மவ்லவி புரோகிதர்கள் சுய விளக்கம் கொடுத்து சத்தியத்தை மறைப்பதால்தான் நாளை மறுமையில் நபி(ஸல்) ‘என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்களே” என்று கூறுவார்கள் போலும் (25:30)..
எனவே அன்பு சகோதர சகோதரிகளே, மனிதர்களில் அவர்கள் அல்லாமாவாக, மவ்லவியாக, அரபி பண்டிதராக, குர்ஆனையும், ஹதீஸையும் தலைக் கீழாக பார்க்காமல் படிப்பவராக இருந்தாலும், என்னைப்போல் சாதாரணமானவராக இருந்தாலும், அவர்கள் சொல்லுவது குர்ஆனில், ஹதீஸில் நேரடியாக இருந்தால், அதைப் பார்த்து உறுதி செய்து கொண்டு அதன்படி நடங்கள். மற்றபடி எவரது 9:17-ல் உள்ள பரிபாலனம் இமாமத்தைத்தான் குறிக்கிறது போன்ற சொந்த விளக்கத்தை -சுய விளக்கத்தை அதை ஷைத்தான் அழகாகக் காட்டினாலும் (ஷைத்தான் வழிகேட்டை அழகாகத்தான் காட்டுவான்) அதன் காரணமாக உங்களின் மனோ இச்சையினால் அமைந்த அறிவு சரி கண்டாலும் அதன்படி ஒருபோதும் நடக்காதீர்கள். அது கண்டிப்பாக உங்களை நரகில் கொண்டு சேர்க்கும். 33:36,66,67,68, 2:38,39 வசனங்களை திரும்ப திரும்ப படித்து உணர்வு பெறுங்கள்.