ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு

in 2010 ஜுன்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம்:  39:17,18 இறைக் கட்டளைகள்படி யார் சொன்னாலும், எழுதினாலும் அதைக் கேட்டு, பார்த்து அதில் அழகானதை எடுத்து நடங்கள் என்று கூறும் நீங்கள் வாழ் உரிமை மாநாடு, ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு போன்ற கூட்டங்களை மறுத்துப் பேசுகிறீர்களே! இது உங்களுக்கு நீங்களே முரண்படுவதாக இல்லையா? அப்துல்லாஹ், திருச்சி.

விளக்கம்: மார்க்க உபதேசம் என்று யார் செய்தாலும், அதைக் கேட்டு அதில் அழகானதைப் பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் 39:18ல் கட்டளையிட்டிருப்பதற்கு அடிபணிந்து அவ்வாறு கூறுகிறோம். ஆனால் நீங்கள் குறிப்பிடும் வாழ்வுரிமை மாநாடு, ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு போன்றவை அல்லாஹ்வின் கட்டளைக்கும், நபி(ஸல்) அவர்களின் வழி காட்டுதல்களுக்கும் நேர்முரணானவையாகும். இறை உணர்வைத் துறந்து இன உணர்வுக்கு ஆளாகிச் செயல்படுவதாகும். சிலைகள், சமாதிகள் இவற்றிடம் முறையிடுவதுபோல் ஓர் அறிவீனமான முறையீடாகும்.

3:139, 186, 24:55, 13:11, 41:34 18:102-106 போன்ற எண்ணற்ற இறைவாக்குகளுக்கு நேர் முரணான செயலாகும். “பதவிகளை விரும்புகிறவர்களுக்குப் பதவிகள் கொடுக்கக் கூடாது” என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நிராகரிப்பதாகும். தகுதியற்றவர்களுக்குப் பதவிகள் கொடுப்பது நாசத்தை விளைவிக்கும். பெயரளவிலுள்ள முஸ்லிம்களுக்கு நபி(ஸல்) அவர்களது வழி காட்டலைப் புறக்கணித்து, ஷைத்தான் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த் என பிற மக்களுக்கு துன்பந்தரும் செயல்களை அழகாகக் காட்டுவதால், அதில் மயங்கி செயல்படுகிறவர்களின் இறுதி முடிவு என்ன? நரகம்!

ததஜவினர் நடத்தும் இந்த உரிமை மாநாடு முஸ்லிம்களின் நலனுக்காகக் கூட்டப்படும் மாநாடு அல்ல; தங்களின் ததஜ மத்ஹபை வளர்த்துக் கொள்ளவும், இன உணர்வுக்கு ஆளானவர்களிடம் பண வசூல் செய்யவுமே. அவர்களது செயலில் தூய்மை இருந்தால், அல்லாஹ்வின் தனி அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துப் பெருங்கொண்ட முஸ்லிம்களுக்கு முஷ்ரிக், காஃபிர், அவர்கள் பின்னால் தொழக் கூடாது என ஃபத்வா கொடுத்துத் தங்கள் ததஜ மத்ஹப் பள்ளிகளுக்கு கூட்டம் சேர்க்கும் அதே நேரத்தில், தங்களின் இந்த மாநாட்டுக்குப் பள்ளியில் காஃபிராக்கப்பட்டவர்களை முஸ்லிமாக்கி அழைப்பதன் மூலம் இரட்டை வேடமிடும் நயவஞ்சகச் செயலில் ஈடுபடுவார்களா? ஒருபோதும் முடியாது!

இப்படிப்பட்ட செயல்பாடுகளின் மூலம் கிடைக்கும் அற்பமான நலன்களை பெரிய ஆதாரமாகக் காட்டி மக்களை மயக்குவது ஷைத்தானின் செயல்தானே! சிலைகளுக்கு வழிபாடு செய்வதால் மன அமைதியும், சிலபல பலன்கள் கிடைப்பதாக மக்கள் எண்ணுவது போல், சமாதி வழிபாடு மூலம் மன அமைதியும், சிலபல பலன்கள் கிடைப்பதாக முஸ்லிம்கள் எண்ணுவது போல், இந்த ஆர்ப்பாட்டம், போராட்டம், வாழ் உரிமை மாநாடு, ஒடுக்கப் பட்டோரின் உரிமை மாநாடு போன்றவை மூலம் சிலபல பலன்கள் கிடைப்பது போல் ஷைத்தான் காட்டத்தான் செய்வான். அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணாக இப்படிப் பட்ட செயல்பாடுகள் மூலம் ஆனந்தம் அடைவோர் ஷைத்தானைப் பின்பற்றிச் செல்வோர் தானே? சிறிது நடுநிலையுடன் சிந்தியுங்கள். கோவில், சர்ச், தர்கா சடங்குகள் மூலம் சமுதாயம் பலன் அடைகிறது என்று பொய்யாகக் கூறி ஒரு பெருங்கூட்டம் அற்ப உலக ஆதாயம் அடைவது போல், குர்ஆனோ, ஹதீஸோ காட்டித் தராத இப்படிப்பட்ட செயல்களைச் செய்யத் தூண்டுவோர், முஸ்லிம்கள் பலன் அடைகிறார்கள் என பொய்யாகக் கூறிக் கொண்டு, உண்மையில் அவர்களே அற்பமான இவ்வுலக ஆதாயங்களை அடைகிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

இறை உணர்வு இல்லாமல், மத, இன உணர்வு அடிப்படையில், கோயில், சர்ச், தர்கா உண்டியல்களில் பணத்தைக் கொண்டு போய் கொட்டுவது போல், இறை உணர்வு இல்லாத முஸ்லிம்கள் குர்ஆன், ஹதீஸுக்கு முரணான சாலை மறியல், பந்த், ஆர்ப்பாட்டம், போராட்டம், வாழ்வுரிமை மாநாடு, ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு என இன உணர்வுக்கு ஆளாகி அவர்கள் இரத்தத்தை வேர்வையாகச் சிந்தி ஈட்டும் பணத்தைக் கொண்டு போய் கொட்டுகிறார்கள். நவீன இயக்க மத்ஹபினர் வளம் பெறுகிறார்கள்!

முஸ்லிம்களை இறை உணர்வை இழக்கச் செய்து இன உணர்வுக்கு அடிமையாக்கினால் அவர்கள் அதில் மயங்கி பணத்தை வாரிக் கொட்டுவார்கள் என்பதை அறிந்துள்ள புரோகிதர்களும், தலைவர்களும் இப்படிப்பட்ட தந்திரங்களைக் கையாண்டு மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள். இன்றைய தரங்கெட்ட அரசியல் வாதிகளுக்கும் இவர்களுக்கும் கடுகளவும் வித்தியாசமில்லை. தங்களின் சொந்த நலன் கருதியே இப்புரோகிதர்களும், தலைவர்களும் இப்படிப்பட்ட ஈனச் செயல்களைச் செய்யத் தூண்டுகிறார்கள் என்பதற்கு இதோ ஆதாரம். இவர்கள் முயற்சி செய்ததால் 3.5% இட ஒதுக்கீடு கிடைத்ததாகச் சொல்கிறார்கள். உண்மையில் சமுதாய நலன் கருதிச் செய்திருந்தால் இவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதோடு, முன்பை விட அல்லாஹ்வுக்கு அடிபணிந்து நடக்க முன்வர வேண்டும். மாறாக இவர்கள் ஒவ்வொரு இயக்கத்தினரும், கட்சியினரும் என்ன செய்கிறார்கள்? 3.5% இட ஒதுக்கீடு தங்களது முயற்சியால்தான் கிடைத்தது என்று ஒவ்வொரு கூட்டத்தாரும் பெருமை பேசி வருகிறார்கள், விளம்பரப்படுத்துகிறார்கள். காரூன் முயற்சித்து அவன் அடைந்த, அவன் கைவசமிருந்த பெரும் செல்வத்தைக் கொண்டு பெருமை பேசியவனின் நிலை என்னாயிற்று.(28:76-82, 29:39) அதைவிடகேடுகட்ட நிலையில் கைக்குக் கிட்டாத 3.5% பற்றி பெருமை பேசுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியுமா? 23:53, 30:32 இறைவாக்குகளில் அல்லாஹ் இடித்துரைப்பது போல் அவர்களின் இந்தத் தீய செயல்பாடு இருக்கிறதா? இல்லையா? இ வர்களா நேர்வழி நடப்பவர்கள்? ஷைத்தானைப் பின்பற்றிக் கொண்டு நேர்வழி நடப்பதாக தம்பட்டம் அடிக்கின்றனர். 2:74, 5:13 இறைக் கட்டளைப்படி அவர்களின் உள்ளங்கள் கற்பாறைகள் போல் இறுகி விட்டதால் இவ்வுலகில் இந்த உண்மையை கண்டு கொள்ள மாட்டார்கள். நாளை மறுமையிலேயே அவர்கள் நிச்சயமாகக் கண்டு கொள்ளப் போகிறார்கள். 3.5% இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்ததாகத் தம்பட்டம் அடிக்கிறார்களே, ஒவ்வொரு துறையிலும் முஸ்லிம்களுக்கு 3.5% கிடைத்துள்ளதா? புள்ளி விபரங்களுடன் இவர்களால் நிரூபித்துக் காட்ட முடியுமா? ஒருபோதும் முடியாது.

சில குறிப்பிட்டத் துறைகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் அந்தக் குறைந்த தகுதியுள்ள முஸ்லிம்கள் இல்லை. அந்த அளவு முஸ்லிம்கள் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள். சில துறைகளில் மேல்ஜாதி அதிகாரிகளின் வஞ்சகச் செயல்களால் தகுதி இருந்தும் 3.5% இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. ஆட்சியாளர்களும் நிர்வாகத் துறை சம்பந்தப்பட்ட அறிவு சிறிதும் இல்லாததால் அந்த மேல்ஜாதி வஞ்சக அதிகாரிகளுக்கு மறுப்புத் தெரிவித்து சரியான வழியில் இட்டுச் செல்லும் ஆற்றல் அற்றவர்களாக இருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்கத் தவறினால், அவர்கள் மீது அநியாயக்கார ஆட்சியாளர்கள் தான் நியமிக்கப்படுவார்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நினைவு கூறுங்கள். ததஜவினரின் தறுதலைத் தனத்தை விட்டு தவ்பா செய்து 3:102,103 இறைக் கட்டளைப்படி அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்தால் மட்டுமே முஸ்லிம்களுக்கு ஈருலகிலும் வெற்றி கிடைக்கும்.
ஐங்கால தொழுகைகளையும் முறையாக, முழுமையாக அதனதன் நேரத்தில் உள்ளச்சத்துடன் பேணித் தொழுபவர்கள் தங்கள் தேவைகளைத் தங்களைப் படைத்த இறைவனிடம் முறையிடுவார்களே அல்லாமல் இப்படிப்பட்ட குர்ஆன், ஹதீசுக்கு முரண்பட்ட செயல்களுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்.

Previous post:

Next post: