நாஸ்திக நண்பர்களே! நாசத்தை தவிர்ப்பீர்! (9)

in பகுத்தறிவாளர்களே!,பொதுவானவை

மதங்களாலேயே நஷ்டம்!

நாஸ்திகர்களுக்கு இறுதி அறிவுரையாக ஒன்றைப் பார்த்தோம். அதாவது நாஸ்திகர்கள் இறைவனோ, மறுமையோ இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆஸ்திகர்கள் இறைவனும் மறுமையும் உண்டு என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதில் நாஸ்திகர்களின் கூற்று உண்மையானால் பாதிப்பு இரு சாராருக்கும் இல்லை. நாஸ்திகர்களும் தப்பி விடுவார்கள். ஆஸ்திகர்களும் தப்பி விடுவார்கள் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். அதே சமயம் நாஸ்திகர்களின் கூற்று பொய்யாகி ஆஸ்திகர்களின் கூற்று உண்மையானால் ஆஸ்திகர்கள் தப்பிக்கொண்டார்கள். நாஸ்திகர்கள் வகையாக மாட்டிக் கொண்டார்கள் என்பதையும் நாஸ்திகர்கள் மறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

மறுமை நம்பி இவ்வுலக வாழ்க்கையில் ஆஸ்திகர்கள் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனரே என்று நாஸ்திகர்கள் கேட்டால், மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட மதங்களை நம்பி மூட நம்பிக்கைகளில் மூழ்கி துறவற வாழ்க்கையையும், அனாச்சாரங்களைக் கொண்ட தடைகளையும் தாங்களாக ஏற்படுத்திக் கொண்ட மதவாதிகளே நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் இவ்வுலக வாழ்க்கையையும் நஷ்டப்படுத்திக் கொள்கின்றனர். மறுவுலக வாழ்க்கையையும் நஷ்டப்படுத்திக் கொள்கின்றனர். மாறாக இறை கொடுத்த நேரான வாழ்க்கை நெறியை முறையாகக் கடைபிடித்து ஒழுகிறவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்களை முறையாக முழுமையாக அனுபவித்து வருகின்றனர். அல்லாமல் அவற்றில் எதனையும் அவர்கள் இழக்கவில்லை நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை, என்பதையும் தெளிவுபடுத்தி இருந்தோம்.

மதவாதிகள் இவ்வுலக வாழ்ககையையும், மறுவுலக வாழ்க்கையையும் நஷ்டப்படுத்திக் கொள்கின்றனர். நாஸ்திகர்கள் இவ்வுலக வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் முழுமையான சுவையோடு அவற்றை சுவைப்பவர்களாக இல்லை என்பதோடு மறுமை வாழ்ககையை முற்றிலுமாக நஷ்டப்படுத்திப் பெரும் துன்பத்தில் மாட்டப் போகிறார்கள் என்பதே உண்மையாகும். நாஸ்திகத்தை விட்டு விடுபட்டும், மதங்களை விட்டு நீங்கியும், இறை கொடுத்த நெறிநூல் வழி ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு அது காட்டும் நேர்வழி நடப்பவர்கள் மட்டுமே இவ்வுலக வாழ்க்கையின் சுவையை முழுமையாகச் சுவைத்து வாழ்வதோடு, மறுமையில எல்லையில்லா பேரின்பத்தை அடைந்து அனுபவிக்கும் பாக்கியவான்களாக இருக்கிறார்கள். காரணம் இறைக் கொடுத்த மறைவழி என்பதே இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனிதன் பெற வேண்டிய அனைத்துப் பாக்கியங்களையும் தவறாது முழுமையாகப் பெற்று-பெறற்கரிய பேறுபெற்று-முழுமையான -நிறைவான வாழ்வு வாழ்வதற்குரிய தன்னிகரில்லா ஒரே வழியாகும்-வாழ்க்கை நெறியாகும்.

இறை கொடுத்த நெறிநூல் வழி அல்லாத வேறு வழி இல்லை.
மனிதனைப் படைத்த இறைவனையன்றி வேறு யார் அப்படிப்பட்ட உயரிய வழியைக் காட்டித்தந்துவிட முடியும்? மனித இனத்திலுள்ள ஒருவன் படைத்த ஒரு கருவியை முறையாக இயக்கக் கருவியைப் படைத்த மனிதனின் வழிகாட்டல் தேவைப்படுகிறது. இந்நிலையில் குறைமதி படைத்த மனிதன், இறைவன் படைத்த மனிதக்கருவியை இயக்க, படைத்த இறை கொடுத்த நெறிநூல் வழி விட்டு அதே குறை மதியைக் கொண்டு நாஸ்திக வழியையோ அல்லது மதவழியையோ அமைத்துக் கொண்டால் இந்த மனிதக் கருவி உருப்படுமா? என்பதைச் சிந்திக்க வேண்டுகிறோம். மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள சீரழிவிற்கு இந்த மனித அபிப்பிராயங்கள்தான் காரணமாகும். மனிதன் தனது மனித அபிப்பிராயங்களை நீக்கி இறை ஆணைக்குக் கட்டுப்பட்ட வாழ்க்கை வாழ்வது கொண்டே இங்கும், மறுமையிலும் வெற்றி பெற முடியும். இப்போது நாஸ்திகர்கள் அவர்கள் வெகுவாக முக்கியத்துவம் கொடுக்கும் இவ்வுலக வாழ்க்கையையும் முழுச்சுவையோடு, மனமகிழ்வோடு அனுபவிக்கும் நிலையில் இல்லை. அவர்களின் மனோநிலை அதற்கு இடம் தருவதில்லை என்பதை விரிவாக ஆராய்வோம்.

நம்பிக்கை :
மனித வாழ்வில் நம்பிக்கை பெரும்பங்கு வகிக்கின்றது என்பதனை நாஸ்திக நண்பர்கள் உணர வேண்டும். நம்பிக்கையில்லாது மனிதன் இயங்க முடியாது. மனிதனது அசைவு ஒவ்வொன்றும் அவன் பெற்றுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைகின்றது. நம்பிக்கை சம்பந்தப்படாத எந்த ஒரு முயற்சியும், மனிதனிலிருந்து வெளிப்படுவதில்லை. அந்த அளவு மனித இரத்தத்தோடு ஊறியதாக நம்பிக்கை திகழ்கிறது. மனித வெற்றியும், தோல்வியும் அவனது நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைகிறது. நம்பிக்கை மனித வாழ்வின் அடிப்படையாக இருப்பதால்தான் அவன் எளிதாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி விடுகிறான்.

பெரும் செல்வந்தன் ஒருவன் ஒரு ஏழையைப் பார்த்து, உனது மகன் படிப்பு விஷயத்தில் நான் பண உதவி செய்கிறேன் என்று வாக்களித்து விட்டால் போதும், இன்னும் அவன் வாக்களித்தபடி உதவி அளிக்கவில்லை. ஆயினும் அந்த ஏழைக்கு அந்த உறுதிமொழியிலுள்ள நம்பிக்கை எவ்வளவோ மன ஆறுதலையும், நிம்மதியையும் தருகிறது. நோயால் அவஸ்தைப்படும் ஒரு நோயாளி, டாக்டரிடம் சென்று காட்டி சிகிச்சை பெற்றுக் கொண்ட மாத்திரத்தில் அவனில் ஏற்படும் நம்பிக்கை பாதி நோயை குணப்படுத்தி விடுகிறது. ஒரு கல்லை, மனித கரங்களால் செதுக்கப்பட்ட ஒரு சிலையை தெய்வமாக நம்பி அதனிடம் வேண்டுதல் செய்வது கொண்டு எவ்வளவோ மன ஆறுதலையும், அமைதியையும் அடைகின்றான் மனிதன். மூட நம்பிக்கைகளில் மூழ்குவதற்கும், அவற்றை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு தொங்குவதற்கும் அடிப்படைக் காரணமே அவனது மன அமைதியேயாகும். ஆக மனிதன் கொள்ளும் நம்பிக்கை அது நன்னம்பிக்கையாக இருந்தாலும் சரி, அல்லது மூட நம்பிக்கையாக இருந்தாலும் சரி அவனது பிரச்சினைகள், அல்லது நோய்கள் தீர்ந்து போகும் என்ற உள்ள ஆறுதலைப் பெற்றுத்தந்து மன நிம்மதியை அளிக்கிறது. தனது துன்பங்களிலும், நோய்களிலும் இன்னும் இது போன்ற பிரச்சனைகளிலும், தனக்கு உதவி செய்யக்கூடிய ஒரு தெய்வீக சக்தி இருக்கிறதென்ற நம்பிக்கையானது ஆஸ்திகர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களில் மன ஆறுதலையும், நிம்மதியையும் தருவதை யாரும் மறுக்க முடியாது.

ஆஸ்திகர்களாக இருந்தாலும், நாஸ்திகர்களாக இருந்தாலும் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்தும் ஒன்றுதான். வறுமை, நோய் மற்றும் வாழ்ககையில் ஏற்படும் பலவிதமான நெருக்கடிகள் இவை அனைத்தும் ஒன்றேதான். ஆஸ்திகர்களுக்கு இவை அனைத்தும் ஒன்றேதான். ஆஸ்திகர்களுக்கு இவை அனைத்திலும் தமக்கு உதவி செய்யக் கூடிய தெய்வீக சக்திகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையானது அவர்களது பிரச்சனைகளில் பாதி தீர்ந்து விட்டது போன்ற மன ஆறுதலையும், நிம்மதியையும் தருகிறது. நாஸ்திகர்களைப் பொறுத்தமாட்டிலும் அப்படிப்பட்ட சக்திகளில் நம்பிக்கை இல்லாததால், அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மன உறுத்தல், அதேசமயம் அவர்கள் அடுத்தடுத்து ஊக்கத்துடன் உழைத்தாலும், மனித சக்திகளை மீறிய பிரச்சினைகளில் அவர்களால் ஒன்றும் சாதிக்க முடியாது தோல்வி ஏற்படும். இதனால் மன நிம்மதியும், அமைதியும் இல்லாது அவஸ்தைப்படும் நிலை. இதுவே உண்மையாகும். ஆக நாஸ்திகர்களைவிட ஆஸ்திகர்களே இவ்வுலக வாழ்க்கையை நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் அனுபவிக்க முடிகிறதென்ற  உண்மையை நாஸ்திகர்களும் மறுக்க முடியாது.

நல்ல நம்பிக்கையும் மூட நம்பிக்கையும் சமமாகா!
நம்பிக்கை நன்னம்பிக்கையாக இருந்தாலும், மூட நம்பிக்கையாக இருந்தாலும் மனித வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளில் அந்த நம்பிக்கை நல்ல விளைவை ஏற்படுத்தினாலும் நன்னம்பிக்கையும் மூட நம்பிக்கையும் சமமாகமாட்டா. நன்னம்பிக்கை மனிதனைப் படைத்த ஒரே ஒரு இறைவனை மட்டும் தெய்வமாக நம்புவதாகும். மூட நம்பிக்கைகள் கல்லையும், மண்ணையும், தன் கைகளால் செதுக்கிய சிலைகளையும், இறந்துபோன நல்லடியார்களையும், மிருகங்களையும், பட்சிகளையும் தெய்வீக சக்திகள் பெற்றவையாக – பெற்றவர்களாக நம்புவதாகும்.இந்த மூட நம்பிக்கைகள் படைத்த இறைவனுக்கு இணைவைக்கும் பெரும் குற்றங்களாக இருப்பதால் அவை கொண்டு இவ்வுலகில் மனிதனது பல பிரச்சினைகளில் அவனுக்கு மன நிம்மதியையும், ஆறுதலையும் தந்தாலும் மறுமையில் அதனால் அவன் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிறான்.

இதனை நாம் இவ்வாறு விளக்கலாம். திருடுவது குற்றம் என்பதை ஆஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள். நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள். ஆயினும் ஒரு மனிதன் ஒரு பத்து ரூபாயைத் திருடிப் பெற்றுக்கொண்டு ஒரு ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டால் அவனது பசி நீங்கத்தான் செய்யும், கஷ்டப்பட்டு உழைத்து பெறும் ரூபாயைக் கொண்டு பெறும் அனைத்து பலன்களையும் திருடிப் பெற்ற ரூபாயைக் கொண்டு அடைந்து கொள்ள முடியும். அதனால் திருடுவதை யாரும் நியாயப்படுத்த மாட்டார்கள். இங்கு இவ்வுலகில் உழைத்துப் பத்து ரூபாய் பெற்றுக் கொண்டாலும், திருடி பத்து ரூபாய் பெற்றுக் கொண்டாலும் அந்த பத்து ரூபாய்களில் வித்தியாசமில்லை. ஆனால் திருடிய குற்றத்திற்காக பின்னால் பிடிபட்டாலோ அல்லது மறுமையிலோ துன்பத்தை அனுபவிக்கப் போகிறான்.

எனவே நாஸ்திகர்கள் மக்களுக்கு திருட்டு மூலம் பணம் சேர்க்க முயல வேண்டாம். கஷ்டப்பட்டு உழைத்து பணம் சேர்க்க முயலுங்கள் என்று அறிவுரை கூற வேண்டுமேயல்லாது, ரூபாய் இருப்பதால் தானே மனிதன் திருடுகிறான். ரூபாய் நோட்டுக்களை எரித்து இல்லாமல் ஆக்கிவிட்டால் மனிதன் திருடு என்ற தீங்கில் ஈடுபட மாட்டான் என அறிவுரை பகர்வது அறிவுடைமையாகாது என்பதை நாஸ்திகர்கள் நிச்சயமாக மறுக்க முடியாது.

மூட நம்பிக்கை மன அமைதி தந்தாலும் அகற்றப்பட வேண்டும்.
இதேபோல் மனிதன் நன்னம்பிக்கை கொண்டாலும், மூட நம்பிக்கை கொண்டாலும் அந்த நம்பிக்கையானது பலவிஷயங்களில் அவனுக்கு மன ஆறுதலையும், நிம்மதியையும் தரத்தான் செய்கிறது. கடும் காய்ச்சலாக இருக்கும் நோயாளியை ராகு காலம் கழித்துத்தான் சிகிச்சைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற மூட நம்பிக்கை, இன்னும் பல நோய்களில் மக்களிலிருக்கும் மூட நம்பிக்கை காரணமாக சிகிச்சை செய்யாமல் உயிரிழப்பை ஏற்படுத்துவது, மூட நம்பிக்கைகள் காரணமாக இவ்வுலகில் பொருள் நஷ்டத்தையும், உயிர் நஷ்டத்தையும் ஏற்படுத்துவது போன்ற நம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி நாஸ்திகர்கள் நமது கூற்றை மறுக்கலாம். ஆயினும் அந்த நிலைகளிலும் தெய்வ சித்தப்படியே காரியங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை அவர்களுக்கு மன ஆறுதலையும், நிம்மதியையும் அளிக்கின்றது. எனவே தனது கஷ்ட நஷ்டங்களில் தனக்கு உதவி செய்யும் தெய்வீக சக்திகள் உண்டு என்ற நம்பிக்கை மனிதனுக்கு மன ஆறுதலையும், நிம்மதியையும் தருகிறது என்பது நாஸ்திகர்களும் மறுக்க முடியாத உண்மையேயாகும்.

ஆயினும் மக்கள் கொண்டுள்ள  மூட நம்பிக்கைகளை மக்களது உள்ளங்களில் இருந்து அகற்றி நன்னம்பிக்கையாளர்களாக அவர்கள் வாழ அவர்களுக்கு அறிவுரை பகர வேண்டும். இதுவே அறிவுடைமையாகும். திருடிச் சாப்பிட்டாலும் பசி அடங்குகிறது என்பதால் திருடுவதை நியாயப்படுத்த முடியாது. பின்னால் அதன் விளைவை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது போல், படைத்த இறைவன் மீது வைக்கவேண்டிய நம்பிக்கையை படைக்கப்பட்ட  படைப்புகள் மீது-கல்லிலும், மண்ணிலும், இறந்து மண்ணில் அடக்கப்பட்டவர்கள் மீதும் மற்றும் பிராணிகள் பட்சிகளிடம் வைப்பது குற்றம். அப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் இவ்வுலக வாழ்க்கையில் மனநிம்மதியும் ஆறுதலையும் அளித்தாலும், படைத்த இறைவனது கோபத்திற்கு ஆளாகி மறுமையில் மாபெரும் நஷ்டவாளி ஆகி நரகில் புக நேரிடும் என்பதை உணர்த்த வேண்டும்.  மூட நம்பிக்கைகளை முற்றாக நீங்கிடப் பாடுபடும் அதே வேளை படைத்த அந்த ஒரே இறைவன் மீது நன்னம்பிக்கை வைக்கவும் அறிவுறுத்த வேண்டும்.

ஆஸ்திகர்களே நிம்மதியடைகிறார்கள்!
இதுவரை நாம் விளக்கியதிலிருந்து மனிதனில் ஏற்படும் நம்பிக்கை காரணமாக இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாஸ்திகர்களை விட, இறைவனையும் மறுமை யையும் நம்பும் ஆஸ்திகர்களே இவ்வுலகில் மன ஆறுதலுடனும், நிம்மதியுடனும் வாழ முடிகின்றது. ஆயினும் அந்த நம்பிக்கை மூட நம்பிக்கையாக இருந்தால் இவ்வுலகில் மன நிம்மதி கிடைத்தாலும் மறுமையில் பெரும் நஷ்டமே ஏற்படும். அந்த நம்பிக்கை படைத்த இறைவன் மீது மட்டும் வைக்கும் நன்னம்பிக்கையாக இருந்தால் இவ்வுலகில் நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கையை அளிப்பதோடு மறுமை மீதும் ஈடில்லா வெற்றியையும், இணையில்லா உன்னத வாழ்க்கையையும் அளிக்கிறது. ஆக இறைவனைப் பற்றிய மறுமையைப் பற்றிய நம்பிக்கை என்ற அடிப்படையில் இவ்வுலகில் நாஸ்திகர்களை விட ஆஸ்திகர்களே அதிர்ஷ்டசாலிகள் என்பத உணர்ந்து கொண்டீர்கள்.

அடுத்து இஸ்லாமிய இறை நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் காரியங்களைக் கொண்டு மனிதன் இவ்வுலகில் நஷ்டமடைகின்றானா? அவன் அனுபவிக்க வேண்டிய இன்பங்களை இழக்கின்றானா? என ஆராய்வோம்.

Previous post:

Next post: