பூஜை செய்த பலகாரங்களை ஏற்றுக் கொள்ளலாமா?

in 1996 ஜனவரி,ஐயமும்! தெளிவும்!!,கேள்வி-பதில் (தொகுப்பு)

ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: ஹிந்துமத பண்டிகைகள் வந்தால் அவர்கள் பலவிதமான பலகாரங்கள் செய்து அதை அவர்களின் இணை தெய்வங்களின் முன்னால் வைத்து படைத்து, பின்னர் பூஜை செய்து, அதன் பின்னர் அந்த பலகாரங்களை எங்கள் வீட்டிற்கு அனுப்புகின்றனர்.இத்தகைய பலகாரங்களை ஏற்றுக் கொள்ளலாமா? அதை உண்ணலாமா? குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் தரவும். A.M.நூருல் ஹஸன்,சென்னை-80

தெளிவு : ஹிந்து மத நண்பர்களின் மனித நேயத்துடன் அனுப்பும் எதனையும் ஏற்பது தவறாகாது. அதனை நாம் உபயோகிக்கலாமா? வேண்டாமா? என்பதில் நாம் தான் கவனம் செலுத்த வேண்டும். ரசூல் (ஸல்) அவர்களிடம் சில சில்க் உடைகள் அள்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்டார்கள். அதில் ஒன்றை உமர்(ரழி) அவர்களுக்கு ரசூல்(ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். அதற்கு உமர்(ரழி) அவர்கள், நமக்கு ஹராமாக்கப்பட்ட பட்டு(சில்க்) உடையை எனக்கு தருகிறீர்களே? என வினவினார்கள்.

ரசூல்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அதனை நீர் உபயோகிக்க நான் தரவில்லை. அதனை நீ விற்றுவிடவோ அல்லது அதனை உபயோகிப்பவருக்கு கொடுத்து விடவோ கொடுத்தேன் என்றார்கள். அதனடிப்படையில் உமர்(ரழி) அவர்கள் தனது சகோதரருக்கு-இஸ்லாத்தில் இணையாமல் மக்காவிலிருந்தவருக்கு-அனுப்பி வைத்தார். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி), ஆதாரம்: புகாரி 8/11, 104 முஸ்லிம், அஹ்மத்

இந்நபிமொழி மூலம் தாங்கள் கேட்ட கேள்விக்கு தெளிவான பதில் கிடைத்திருக்குமென நினைக்கிறோம். இருப்பினும் சுருக்கமாக தெளிவு படுத்துகிறோம். தனக்கு தரப்படும் அன்பளிப்பு- பட்டு துணி-இஸ்லாமிய சட்டப்படி தனக்கு ஹராமானது என்பதை ரசூல்(ஸல்) அவர்கள் அறிந்திருந்தாலும் அதனை அன்பளிப்பளித்தவரின் கொள்கையுடன் மோதவிட்டு மனித நேயத்தை பாழ்படுத்தவில்லை. அவரது கொள்கைபடி கொடுத்ததை மனமுவந்து பெற்றக் கொண்டார்கள். அதனை உபயோகிக்கும் விதத்தில் நமது கொள்கையை தெளிவு படுத்தினார்கள். இதே நிலையை நாம் பின்பற்றலாமே!

இதற்கு மேலாக நமது ஹிந்து நண்பர்களிடையே நமது கொள்கையை நாம் தெளிவு படுத்தினால் அவர்களே பூஜை செய்த உணவுகளுக்கு பதிலாக சாதாரண உணவுகளை நமக்கு தருவார்கள். இதனை உண்பது தவறல்லவே! ஏனெனில் யூதப் பெண்மணி வீட்டு விருந்தையே ரசூல்(ஸல்) அவர்கள் சாப்பிட்டிருக்கிறார்களே! அதுவும் மனித நேயத்தின் அடிப்படையிலானவைதான் என்பதை அறியுங்கள். இந்த முன் மாதிரியை நாம் பின்பற்றலாமே! முயற்சியுங்கள். எங்களது அனுபவத்தில் இம்முன்மாதிரி நல்ல பலனளித்திருப்பதை நேரில் கண்டு வருகிறோம். இது எங்களது முன்மாதிரி-உஸ்வத்துன் ஹஸனா-அல்ல. ரசூல்(ஸல்) அவர்களின் முன் மாதிரியாகும். தாங்களும் முயற்சியுங்கள். மாற்று மதத்தினருடனும் மனித நேயத்துடன் பழகுங்கள். அதன் மூலம் இஸ்லாமிய கொள்கைகளை நடை முறையில் பரப்புங்கள். இதுவே இன்றைய தேவை.

Previous post:

Next post: