அபூபக்கர்(ரலி)யின் அறிவு கூர்மை!

in 1996 மார்ச்

M.S. கமாலுத்தீன்

 நபி(ஸல்) அவர்களால் சொர்க்கத்துக்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து நபர்களில் முதல் நபர் அபூபக்கர் (ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்து சொல்லிக்கொண்டிருந்த ஆரம்ப கால கட்டத்தில் பலரும் தயங்கும்போது தைரியமாக இஸ்லாத்தை ஏற்று தன்னுடைய செல்வங்களையெல்லாம் அதை செலவழித்தவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். இதை இந்த ஹதீஸின் மூலம் நபி(ஸல்) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களை அல்லாஹ்வின் நேசராக்கி வைக்கிறார்கள். நம்மிடம் எவருடைய  எந்த  உதவியும்  அதற்குரிய  பிரதி  அளிக்கப் பெறாமலில்லை. அபூபக்கர் (ரலி) அவர்களின் உதவியைத் தவிர. ஏனெனில் நிச்சயமாக அவர்களின் ஓர் உதவி நம்மீது இருக்கிறது. அதற்குரிய பிரதியை மறுமை நாளின்போது அல்லாஹ் அவர்களுக்கு நல்குவான். அன்றி எவருடைய பொருளும் எனக்கு அவ்வளவு பலன் தரவில்லை. அபூபக்கர்(ரலி) அவர்களுடைய பொருள் பலன் அளித்ததைப்போல, மேலும் நான் இஸ்லாத்தை தழுவுமாறு எடுத்துரைத்த பொழுது எல்லோரும் தயங்கவே செய்தனர். அபூபக்கர்(ரலி) அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவித்ததைத் தவிர நிச்சயமாக அவர் தயங்கவில்லை. ஒருவேளை நான் எனக்கு ஓர் ஆருயிர்த் தோழரைத் தேர்ந்தெடுப்பதானால் அபூபக்கர்(ரலி) அவர்களையே தேர்ந்தெடுப்பேன்.

   அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களின் தோழர் அல்லாஹ்வின் நேசராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதீ

   ஒருவேளை நான் என் இறைவனைத்தவிர வேரொருவரைத் தோழராகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் அபூபக்கர்(ரலி) அவர்களை தேர்ந்தெடுத்திருப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதாவூத்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ

    நபி(ஸல்) அவர்களுக்கு உடல் நலக்குறை அதிகப்பட்ட பொழுது மக்களுக்கு இமாமாக நின்று தொழவைத்த அல்லாஹ்வின் நேசரான அபூபக்கர்(ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குபின் ஏற்பட்ட கடுமையான சோதனையின்போது……

   நபி(ஸல்) அவர்கள் இறந்த நேரத்தில் அபூபக்கர்(ரலி) அவர்கள் ஸூன்ஹில் (மதினாவை அடுத்துள்ள சிற்றூர்) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று சிலரும், இறக்கவில்லை என்று மீதப் பேர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இறக்கவில்லை என்று சொன்ன கூட்டத்திற்கு உமர்(ரலி) அவர்கள் தலைமை தாங்கினார்கள். அல்லாஹ்வின் மீது ஆனையாக நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை, அன்றி அல்லாஹ் அவர்களை (மயக்கம் தெளிந்தபின்) நிச்சயமாக எழச்செய்வான். நபி(ஸல்) அவர்களை இறந்து போனார்கள் என்று சொன்னவர்களை கை, கால்களை வெட்டுவேன் என்று கூறினார்கள். உமர் ரலியல்லாஹ் அவர்களின் கோபம் தான் நபித் தோழார்களுக்கு நன்கு தெரியுமே. நபி(ஸல்) அவர்களும் மனிதரே; அவர்களுக்கும் மரணம் உண்டு என்பதை அறிந்த சில நபித் தோழர்களும் உமர்(ரலி)க்கு பயந்து கொண்டு பேசாமல் இருந்து விட்டார்கள். அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டு உடன் வந்தார்கள்.

   நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த துணியை அகற்றிய பின் அவர்களை முத்தமிட்டு, என் தாய், தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தாங்கள் உயிரோடிருந்த போதிலும் மணமுள்ளவர்களாகவே இருந்தீர்கள். இறந்த பின்னரும் மணமுள்ளவர்களாகவே இருக்கிறீர்கள். எவன் கைவசம் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக அல்லாஹ் உங்களை இரு முறை இறப்பை நுகருமாறு ஒரு போதும் செய்யமாட்டான் என்று கூறிவிட்டு வெளியே வந்து கூடி இருந்த மக்கள் மத்தியில்:

   ஆணையிட்டு கூறுவோரை! அமரும்’ என்று கூறினார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் பேசத்துவங்கியதும் உமர்(ரலி) அவர்கள் அமர்ந்துவிட்டனர். பின்னர் அபூபக்கர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்த பின் அறிந்து கொள்ளுங்கள்! எவர் முஹம்மது (ஸல்) அவர்களை வணங்கி வந்தார்களோ (அவர்கள் அறிந்து கொள்ளட்டும்) நிச்சயமக முஹம்மது(ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். அன்றி எவர் அல்லாஹ்வை வணங்கி வந்தார்களோ (அவர்கள் அறிந்து கொள்ளட்டும்) அல்லாஹ் உயிருடன் இருக்கிறான். அவன் இறக்கவே மாட்டான். என்று கூறி:

 நிச்சயமாக நீரும் இறந்துவிடக் கூடியவரே! நிச்சயமாக அவர்களும் இறந்துவிடக் கூடியவர்கள்தாம் (39:30) என்ற அல்குர்ஆனின் வசனததையும்

  முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி (வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால், நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (3:144)

   பின்னர் மக்கள் வாயடைத்தவர்களாக தேம்பித் தேம்பி அழுதனர். நபி(ஸல்) அவர்கள் மனிதர்தான் – அவர்களும் மரணிப்பவர்களே என்பதை விளக்கும் பல குர்ஆன் வசனங்கள் (பார்க்க 40:77, 43:41) இருந்தாலும் 39:30 வசனத்தை குறிப்பிட்டு விட்டு 3:144 வசனத்தையும் குறிப்பிடுகிறார்கள். காரணம் அன்று சிலர் தங்களின் பழைய மார்க்கத்திற்கு போய்விடலாம் என்று இருந்தார்கள். அந்த எண்ணத்திற்கு 3: 144 வசனத்தின் மூலம் சாவு மணி அடித்தார்கள். நபி(ஸல்) அவர்களை எங்கே அடக்கம் செய்வது என்ற சர்ச்சை எழுந்த போதும் தலமைத் தனத்தை ஏற்றுக் கொள்வதிலும் ஏற்பட்ட பிரச்னையில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் முடிவெடுத்து குழப்பங்களைத் தவிர்த்தவர்கள். அவர்கள் ஆட்சி காலமும் மிக சிறப்பாக இருந்ததை வரலாறு இன்றும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கிறது.

Previous post:

Next post: