விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 2013 நவம்பர்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : எழுத்து வழி பிரச்சாரத்திற்கும் கூலி வாங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி 3 பக்க அளவில் ஆதாரங்களைத் தந்து கடந்த பத்து மாதங்களுக்கு முன் கடிதம் எழுதி இருந்தேன். இதுவரை பதிலளிக்கவில்லையே ஏன்?
எஸ்.முஹம்மத் ஸலீம், ஈரோடு.
நீங்கள் 12.10.2012ல் அனுப்பிய கடிதம் இதுதான்.
கண்ணியத்திற்குரிய சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர்களுக்கு ஸலீம் எழுதிக் கொள்வது நலம் நலமே உண்டாகுக. மார்க்க பிரச்சாரத்திற்கு கூலி கொடுப்பது, வாங்குவது கூடாது என்று குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் கூறிவரும் தாங்கள் ஒரு சில வாதங்களை முன்வைத்து எழுத்து வழி பிரச்சாரத்திற்கும், மொழிபெயர்ப்பு பணிகளுக்கும் மார்க்க பத்திரிக்கை பணிகளுக்கும் கூலி வாங்கலாம் என்று கூறி வருகிறீர்கள். தாங்கள் கூறும் இந்த கருத்து குர்ஆன் ஹதீஃத் அடிப்படையில் சரியானதா என்பதை பார்ப்போம்.

எழுத்து வழி பிரச்சாரம் கடமை என்றிருந்தால் நபி(ஸல்) அவர்கள் எழுத படிக்க கற்றிருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் எழுத படிக்க கற்று கொள்ளாததால் எழுத்துவழி பிரச்சாரம் கடமை இல்லை என்று கூறுகிறீர்கள். முதலில் இந்த வாதமே தவறானது; ஏனென்றால் அவனே எழுதப் படிக்க தெரியாத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான் (62:2) என்று அல்லாஹ் கூறுகிறான். ஒரு சமுதாயத்தில் மிகப் பெரிய அள வில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் எழுதப் படிக்கக் கற்று கொள்வதில் மிகப் பெரிய பயன் இருக்க முடியுமா? மேலும் எந்த முறையில் கூறினால் மக்கள் விளங்கி கொள்வார்களோ அந்த முறையில் கூலி வாங்காமல் நம்மால் இயன்ற அளவு பிரச்சாரம் செய்வது நம்மீது கடமையாகும்.

1. இது அனைத்து இறைத் தூதர்களும் செய்தது போல் வாய்வழியாகவும் இருக்கலாம். 2.அல்லது ஸுலைமான் நபி செய்தது போல் எழுத்து வழியாகவும் இருக்கலாம். (பார்க்க 27:29,30,31) 3.அல்லது ஜக்கரியா, மர்யம், துல்கர்னைன் ஆகியோர் செய்தது போல் சைகை மூலமாகவும் இருக்கலாம். (பார்க்க:18:93,94,95, 19:11,29)

4.அல்லது மொழி பெயர்ப்பு மூலமாகவும் இருக்கலாம் (பார்க்க: புகாரீ, ஹதீஃத் 7)

5.கவிதை மூலமாகவும் இருக்கலாம் (பார்க்க முஸ்லிம் 4897, 4903, 6.கடிதம் மூலமாகவும் இருக்கலாம் (பார்க்க: புகாரீ 7162)

ஒருவருக்கு பேச்சாற்றல், எழுத்தாற்றல், கவிதை எழுதும் ஆற்றல் சைகை மூலமாக விளக்கும் ஆற்றல் ஆகியவைகளை அல்லாஹ் கொடுத்திருந்தால் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் பிரச்சாரம் செய்வது அவர்மீது கடமையாகும் என்பதே குர்ஆன், ஹதீஃதுக்கு உட்பட்ட கருத்தாகும்.

வாய்வழி பிரச்சாரம் மட்டும்தான் கடமை மற்ற பிரச்சார வழிமுறைகள் நம்மீது கடமையில்லை என்று கூறும் தங்களிடம் ஒருசில கேள்விகளை முன் வைக்கிறேன். அதற்கு சுயவிளக்கம் தராமல் குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் பதில் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

1. காது கேட்காத, வாய்பேச முடியாதவர்களுக்கு பிரச்சாரம் செய்வதற்காக எழுத்தாற்றலம், சைகை மூலமாக பேசும் திறனும் கொண்டவர்களை அழைக்கும் போது கூலி கொடுத்தால்தான் வருவேன் என்று அவர்கள் கூறுவது சரியா?

2. படிக்கும் ஆர்வம் கொண்ட சகோதர, சகோதரிகளிடம் மார்க்கம் சென்றடைய என்பதற்காக எழுத்தாற்றல் கொண்டவரிடம் குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் ஒருசில பக்கங்களில் நோட்டீஸ் அடிப்பதற்காக எழுதி தர கேட்கும்போது எழுத்து பணி என்மீது கடமையில்லை; ஆகவே நான் எழுதி தரமாட்டேன் என்று கூறலாமா?

3. வஹீயை எழுதுவதற்கு நபி(ஸல்) அவர்களால் நியமனம் செய்யப்பட்ட ஸஹாபாக்கள் எழுதுவது எங்கள் கடமையில்லை என்று கூறி கூலி ஏதும் பெற்றார்களா? அல்லது எழுத்து பணி கடமையில்லை என்று கூறி நபி(ஸல்) அவர்களாகவே முன்வந்து கூலி ஏதும் கொடுத்தார்களா? அல்லது திண்ணை தோழர்களுக்கு எந்த ஏற்பாட்டையும் செய்யாததைப் போலவே எழுத்தர்கள் விஷயத்திலும் நடந்து கொண்டார்களா?

4. குர்ஆனை தொகுக்கும் தலைமை பணியில் ஈடுபட்ட ஸைத் பின்ஸாபித்(ரழி) அவர்கள் தொகுக்கும் பணி என்மீது கடமையில்லை என்று கூறி அபூபக்ர் (ரழி) அவர்களிடம் கூலி ஏதும் பெற்றார்களா?

5. ஹுதைபிய்யா உடன்படிக்கையை எழுதியதற்கு அலீ(ரழி) அவர்கள் கூலி வாங்கினார்களா?

6. நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை உரையாற்றுகையில் அந்த உரையை எழுதி தருமாறு ஒரு ஸஹாபி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது எழுத்து பணி கடமையில்லை என்று கூறி கூலி ஏதும் வாங்கி கொண்டு எழுதி கொடுக்க சொன்னார்களா? (பார்க்க: புகாரீ: 6880)

7. இஸ்லாத்தை குறை கூறி வரும் கட்டுரைகள் மற்றும் குர்ஆன், ஹதீஃதிற்கு எதிரான கட்டுரைகளுக்கு எழுத்தாற்றல் மிக்கவர்கள் கூலி கொடுத்தால் தான் பதிலளிப்போம் என்று கூறி மெளனம் காப்பது குர்ஆன் ஹதீஃதிற்கு உட்பட்டதா?

8. யூதர்களுக்கு கடிதம் எழுதவும், யூதர்கள் எழுதும் கடிதங்களை நபி(ஸல்) அவர்களுக்கு படித்துக் காட்டுவதற்காகவும், யூதர்களின் மொழியை கற்றுக் கொண்ட ஸைத்பின் ஸாபித்(ரழி) அவர்க ளுக்கு நபி (ஸல்) அவர்கள் கூலி ஏதும் கொடுத்து வந்தார்களா?

ஒருவர் ஒரு பிரச்சனைக்காக அறிஞர் ஒருவரை அணுகி மார்க்க தீர்ப்பு கேட்கும்போது அவர் வாய் வழியாக ஒரு தீர்வை வழங்குகிறார். இதற்கு அவர் கூலி வாங்ககூடாது, அதே வேளையில் வாய்வழியாக கூறிய அதே தீர்வை அந்த நபரே எழுத்துப் பூர்வமாக கேட்கும்போது அவர் கூலி வாங்கி கொள்ளலாம் என்ற முரண்பட்ட நிலையை தான் தாங்கள் ஆதரிக்கிறீர்கள் என்பதை உணரவும். அடுத்து மொழி பெயர்ப்பு பணி கடமையில்லை. அதனால் கூலி வாங்கலாம் என்றும் கூறிவருகிறீர்கள். இதற்கும் நாம் மேலே எழுதியுள்ள ஆதாரங்களே போதுமானதாகயிருப்பினும் வேறு சில ஆதாரங்களை பார்ப்போம்.

இது மனித குலத்திற்கு சென்றடைய வேண்டியதாகும். இதன்மூலம் அவர்கள் எச்சரிக்கை செய்யபடவும், இறைவன் ஒருவனே என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவம், அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் (குர்ஆன் அருளப்பட்டுள்ளது14:52). இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை. (6:90, 68:52, 81:27)

உலக மக்கள் அனைவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நூலாக குர்ஆனை அல்லாஹ் அருளியுள்ளான் என்பதை மேற்கண்ட வசனங்களின் மூலமாக அறிகிறோம். இத்தகைய குர்ஆனை தமக்கு தெரிந்த மொழியில் மொழிப் பெயர்ப்பு மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடமையில்லையா? மேலும் மொழிபெயர்ப்பு செய்யும் அளவிற்கு கற்றவரிடம் குர்ஆன் தொடர்பாக ஒரு விஷயத்தை மொழிப் பெயர்த்து தாருங்கள் எனக் கேட்கும்போது மொழிபெயர்ப்பு பணி என்மீது கடமையில்லை. ஆகவே கூலி கொடுத்தால் மட்டுமே மொழிபெயர்த்து தருவேன் என்று கூறுவது, நிச்சயமாக நாம் நூலில் மக்களுக்காக தெளிவு படுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்பவர்களும் சபிக்கின்றனர் 2:159,174 ஆகிய இந்த வசனங்களின் அடிப்படையில் தவறில்லையா?

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்குள் இஸ்லாம் நுழைந்திருந்தும் கடந்த பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் குர்ஆனை பற்றிய அறிவும், இஸ்லாமிய சட்டதிட்டங்கள் பற்றிய அறிவும் ஒரு சிறிதும் இல்லாமல் வாழ்ந்து மரணித்துள்ளனர். இதற்கு தங்களது தாய்மொழியில் குர்ஆன் மொழி பெயர்ப்பு கிடைக்காமல் போனதும் ஒரு முக்கியமான காரணம் என்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம். அப்படியானால் மொழிப் பெயர்ப்பு செய்யும் அளவிற்கு அறிந்த அறிஞர்கள் இருந்தும் மக்களுக்கு குர்ஆனை மொழிப் பெயர்த்து கொடுக்காமல் மக்களை அறியாமையில் விட்டுவிட்டார்கள் என்று கூறி அந்த காலத்தில் வாழ்ந்த அறிஞர்களை குறை காண்பீர்களா அல்லது விதிக்கப்படாத மொழிப் பெயர்ப்பு பணியை அவர்கள் செய்யாமல் விட்டது சரியே என்று கூறுவீர்களா?

குறிப்பு : நஜாத் ஆசிரியர் அவர்களுக்கு, எழுத்து வழிகளான மொழிபெயர்ப்பு பணி, இஸ்லாமிய பத்திரிக்கைக்கு ஆசிரிய பணி கட்டுரை எழுதி கொடுத்தால், தனி தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிடுவது போன்றவற்றின் மூலம் சம்பாதிப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல என்று தாங்கள் கூறி வருவதை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நான் அறிந்தேன். தாங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வாறு கூறுகிறீர்கள் என்பதை அறிவதற்காக பழைய நஜாத் இதழ்களை தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது 1995 செப்டம்பர் இதழில் இது சம்பந்தமாக கேள்வி கேட்கப்பட்டு பதிலளித்துள்ளதையும் பார்த்தேன். முழுமையாக படித்து பார்த்ததில் 7 பக்கத்திற்கு பதில் அளித்துள்ளீர்கள். ஆதாரமாக ஒரு வசனத்தையும் குறிப்பிடவில்லை சம்பந்தமில்லாத ஒரே ஒரு ஹதீஃதை மட்டுமே எழுதியுள்ளீர்கள் மீதியெல்லாம் சுயவிளக்கங்களால் பக்கங்கள் நிரப்பப்பட்டிருந்தது. மொத்தத்தில் குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் அந்த பதில் அமையவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். மேலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கோவையில் நாம் சந்தித்தபோது ஒரு சகோதரர் இது சம்பந்தமாக கேள்வி கேட்டபோதும் குர்ஆன் ஹதீஃதை ஆதாரமாக காட்டி பதில் தராமல் சுய விளக்கமே தந்தீர்கள். தங்களின் விளக்கத்தில் அங்கிருந்த சகோதரர்கள் யாரும் திருப்தியடையவில்லை என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தயவு செய்து குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் எனது கடிதத்தை ஆய்வு செய்து பதில் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

விளக்கம் : நீங்கள் குர்ஆன், ஹதீஃதிலிருந்து கொடுத்துள்ள ஆதாரங்கள் ஒரு நாளின் சிறு பகுதியிலும் பெருத்த பொருளாதார சுமை இல்லாத நிலையிலும் செய்யப்பட்டவை என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள். இந்த நிலையில் ஒரு நாளின் வேலை நேரத்தின் முழுப் பகுதியையும், பெருத்த பொருளாதார சுமையுடன் செய்யும் பணிக்கு கூலி வாங்கக் கூடாது என்பதற்கு ஆதாரமாக எடுக்க முடியுமா? எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி சோதிப்பதில்லை என்று கூறும் பல குர்ஆன் வசனங்களைக் கவனியுங்கள்.

இதற்கெல்லாம் மேலாக 42:21, 49:16 இறை வாக்குகளில் அல்லாஹ் கூறுவது போல், அல்லாஹ்வோ அவனது தூதரோ ஹலால், ஹறாம் என்று கூறாத நிலையில் மனிதர்களில் யார் அவற்றைக் கையில் எடுத்தாலும், அவர்கள் அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாகிப் பெருத்த வழிகேட்டில் போகிறார்கள் என்பதை அறியவும்.

நாங்கள் செய்யும் இப்பணிக்கு உங்களிடம் கூலி கேட்கவில்லை எங்களுக்குரிய கூலி அல்லாஹ்விடமே இருக்கிறது என்று கூறிய நபிமார்கள் எப்படிப் பட்ட பணியைச் செய்தார்கள். அவர்கள் எழுதுவித்த கடிதம் ஆதாரம் கொண்டு, முழுநேரம், நாட் கணக்கில், மாதக் கணக்கில், வருடக் கணக்கில் மட்டுமல்ல, பெருத்த பொருளாதார சுமையுடன் செய்யப்படும் எழுத்துப் பணிக்கு கூலி வாங்குவது ஹராம் என்று கூறுவது மார்க்கமா? 10:59, 16:116 குர்ஆன் வசனம் பாருங்கள். படிப்பினை பெறுங்கள்!

நீங்கள் குர்ஆன், சுன்னா எண்களைக் கொடுத்து இருக்கும் அனைத்தையும் இன்றும் முஸ்லிம் செய்யத்தான் செய்கிறார்கள். அதற்காக யாரும் கூலி கேட்பதில்லை. நீங்களே குறிப்பிட்டிருப்பது போல் ஒரு சில பக்கங்களில் நோட்டீஸ் அடிப்பதற்கு எழுதித் தர கேட்கும்போது யாராவது உங்களிடம் கூலி கேட்டார்களா? இவை அனைத்தும் ஷைத்தான் அழகாகக் காட்டும் வீண் கற்பனையே. 3:31, 33:21,36 இறை வாக்குகளை முறையாகப் படித்துச் சிந்தித்தால் நீங்கள் எழுதி இருப்பவை அனைத்தும் வீண் கற்பனை என்பதை நீங்களே விளங்க முடியும்.

இறுதி நபி உட்பட அனைத்து நபிமார்களும் “”இதற்காக உங்களிடம் எவ்விதக் கூலியும் நாங்கள் கேட்கவில்லை, இதற்குரிய கூலி அல்லாஹ்விடமே இருக்கிறது” என்று சொன்ன 13 இறைவாக்குகளை வைத்தே மார்க்கப் பணிக்கு கூலி கூடாது என்கிறோம் 33:21 இறைக்கட்டளைப்படி அவர்கள் செய்து காட்டாத ஒன்றுக்கு நாமாக ஹறாம் என்று மவ்லவிகளைப் போல் ஃபத்வா கொடுப்பது சரியா? சிந்தியுங்கள். இப்படி சுயமாக ஃபத்வா கொடுப்பது குர்ஆன், ஹதீஃத் இதர வழிகளில் வந்து மக்கள் மார்க்கத்தை அறிந்து கொள்ளக் கூடாது என்று ஷைத்தான் அழகாகக் காட்டும் சூழ்ச்சியாகும்.

அன்று எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் அதிகமாக இருக்கும் நிலையில் நபி(ஸல்) எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வதில் மிகப் பெரிய பயன் இருக்க முடியுமா? என்று கேட்டிருக்கிறீர்களே! நபி(ஸல்) அவர்கள் அந்த மக்களுக்கு மட்டும்தான் நபியாக அனுப்பப்பட்டார்களா? உலகம் அழியும் வரை அகில உலக மக்களுக்கும் நபியாக அனுப்பப்பட்டார்களா? சிந்தியுங்கள். யுக முடியும் வரை மக்களுக்கு அழகிய முன் மாதிரியாக நபி(ஸல்) அவர்கள் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் இறுதித் தூதரான முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின்னர் மார்க்கத்தில் ஒன்றை ஹலாலாக்கவோ, ஹறாமாக்கவோ மனிதர்களில் யாருக்கும் அதிகாரம் இருக்கிறது என்று யாரும் நம்பினால் 3:19,85, 5:3, 33:36 வசனங்கள் கூறுவது போல் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நாம் 1986 ஏப்ரலிலிருந்து அந்நஜாத்தை ஆரம்பத்திலிருந்து 2013 நவம்பர் வரை மட்டுமல்ல என் வாழ்நாள் வரை அப்பணிக்காக ஒரு பைசா கூட கூலியாக வாங்குவதில்லை. அச்சடிப்பு, அனுப்புதல் வகையில் துண்டு விழும் தொகையை எம் கையிலிருந்தே கொடுத்து வருகிறோம். அதனால் எழுத்துப் பணிக்கு கூலி வாங்குவது ஹறாம் எனச் சட்டம் சொன்னால் எல்லாவல்ல அல்லாஹ் என்னை 33:36 இறைவாக்கு சொல்வது போல் பகிரங்க வழி கேடனாகவே பதிவு செய்வான்; அல்லாஹ் பாதுகாப்பனாக.

Previous post:

Next post: