நடந்து முடிந்த ஏற்காடுத் தொகுதிச் சட்டமன்ற இடைத் தேர்தலில் இடம் பெற்ற அராஜகங்கள், அட்டூழியங்கள் லஞ்ச லாவண்யம், வாக்காளர்களுக்குப் பணம் மட்டுமல்ல, மது பாட்டில்கள் விநியோகம் என சகல முறை கேடுகளும், ஒழுங்கீனங்களும் நிறைவாக நிறைவேறியுள்ளன. வாக்காளப் பெருமக்களைப் பெரும் குடிகாரர்களாக மாற்றும் பெரும் சேவையும் வேட்பாளர்களால் மிகுந்த அக்கறையுடன் அரங்கேறியுள்ளன. தலைமைத் தேர்தல் அதிகாரியே இவற்றை எங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை எனக் கையை விரித்துள்ளார். பொறுப்புச் சாட்டப்பட்ட, அதற்காகப் பெருத்த அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையமே சாதிக்க முடியாது எனப் பகிரங்கமாக அறிவிக்கும்போது பணநாயகமோ, குண்டர் நாயகமோ இல்லாமல், முறையாகச் சரியாக தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியாதா? நிச்சயம் முடியும்.
ஆட்சியாளர்களும், அரசியல் கட்சிகளும், அரசிய லைத் தொழிலாக ஆக்காமல், தொண்டாக- சேவையாக ஆக்க முன்வந்தால் நிச்சயம் முடியும். தங்கள் நலனை விட, தங்கள் குடும்ப நலனை விட, பொதுமக்கள் நலனுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் மனநிலை இந்த அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டால் மட்டுமே முடியும். அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளாக மட்டுமே திகழ முன்வர வேண்டும். ஒருபோதும் அரசியல் வியாபாரிகளாக ஆகக் கூடாது. இது எப்போது சாத்தியமாகும்?
தங்களின் இந்த மக்கள் சேவைக்கு, தொண்டுக்கு மகத்தான வெகுமதி சகலத்தையும், மனித குலத்தையும் படைத்தாளும் சர்வசக்தனான, இணை, துணை, மதகுருமார்களின் இடைத்தரகு இவற்றுள் எதுவுமே தேவையில்லாத ஏகனாகிய இறைவனிடம் உண்டு என்ற உறுதியான நம்பிக்கையுடையவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். உலகே மாயம் என்பது பொய், உலகே சதம் என்பதே மெய் என நம்புபவர்களுக்கு இது ஒருபோதும் சாத்தியப்படாது.
ஆக, இவ்வுலக வாழ்க்கையே இறுதி வாழ்க்கை என உறுதி கொண்டு செயல்படும் அரசியல்வாதிகள் ஒரு போதும் தங்கள் நலனை, தங்கள் குடும்ப நலனை விட பொதுமக்கள் நலனைப் பெரிதாக நினைக்கவே மாட்டார்கள். அவர்கள் அரசியலைத் தொழிலாகக் கொண்டு, அரசியல் வியாபாரிகளாக மட்டுமே செயல்படுவார்கள்.
இறைவனையும், மறுமையையும், அந்த இறைவன் தேவையற்றவன், குறிப்பாக இறைவனை நெருங்கச் செய்கிறோம் என்று பசப்பு வார்த்தைக் கூறும் முஸ்லிம் மதம் உட்பட அனைத்து மதங்களின் மதகுருமார்களின் தேவையற்றவன். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இறைவன் இறக்கியருளிய இறுதி வாழ்க்கை நெறிநூலை நேரடியாகப் படித்து நேர்வழி வாழ்க்கையை அறிய முடியும் என்பதில் மிக உறுதியான நம்பிக்கை இல்லாதவர்கள், இவ்வுலகே மாயம் என்பதற்கு மாறாக இவ்வுலகே நிரந்தரம் என்ற பொய்த்தோற்றத்தில் மயங்கி பல தலை முறைக்குச் சொத்துச் சேர்க்கவே முற்படுவர். அவர்கள் ஒருபோதும் பொது மக்களின் நலன் பற்றி அக்கறை கொள்ளவே மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால்தான் ஜனநாயக ஆட்சி முறை அபகரிக்கப்பட்டு, பணநாயக, குண்டர் நாயக அரசியலாக உருமாறி வருகிறது.
இந்தப் போலி ஜனநாயக ஆட்சி முறையை மாற்றி உண்மையிலேயே மக்களாட்சி மலர வேண்டும் என்றால் அதற்கு அசலான வழி அவ்வைப் பாட்டி சொன்னது போல் “”கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு” அதாவது இறைவனது அறிவுடன் மனித அறிவை ஒப்பிடும் போது கடல் நீரில் ஒரு ஊசியை முக்கி எடுத்தால் அந்த ஊசியில் எந்தளவு நீர் ஒட்டிக் கொண்டிருக்குமோ அந்தளவுதான். இன்றைய கணினி கணக்கீட்டின்படி 1 விழுக்காடு அல்ல ஒரு புள்ளி(.) வைத்து அதற்குப் பின்னர் கோடி கோடி பூஜ்யம் (0) போட்டபின்னர் 1 போட்டால் அதன் அளவு எந்த அளவு இருக்குமோ அந்த அளவு தானும் மனித அறிவு இல்லை. இந்த உண்மையை வாழ்க்கை இறுதி நெறிநூல் 17:85-ல் திட்டமாகக் குறிப்பிட்டுக் கூறுகிறது.
தன்னைப் போல் அற்ப அறிவு படைத்தப் பிரிதொரு மனிதன் தயாரித்த ஒரு நவீன கருவியை இவனாக இயக்க முற்படாமல், அக்கருவியைப் படைத்த அம் மனிதனின் வழிகாட்டலை எதிர்பார்த்து அதனை ஏற்று அவ்வழி காட்டல்படி அக்கருவியை இயக்கும் மனிதன், உலக மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் படைக்க முடியாத மனிதக் கருவியை, மனிதனைப் படைத்த ஏகனான இறைவனின் இறுதி வழிகாட்டலைப் புறக்கணித்து நிராகரித்து விட்டு, அற்ப அறிவு படைத்த மதகுருமார்களின், அரசியல் குருமார்களின் வழிகாட்டல் படி நடக்க முற்படும் மனிதர்கள் முறையான அறிவுடையவர்களா? பகுத்தறிவாளர்களா? சிந்தியுங்கள்.
அப்படிச் சிந்தித்து விளங்கினால் அதை விடக் கேடுகெட்ட பிரிதொரு நிலை இருக்கவே முடியாது என்பதை எளிதாக விளங்க முடியும். ஆம்! இரண்டு கால் மனிதன் நான்கு கால் மிருகமாகத் தடம் புரண்டு மிருக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதையே இன்று பார்க்கிறோம். இன்றைய நிலையைவிட அதலபாதாள இழி நிலைக்கு மனித குலம் செல்ல முடியாது.
வாழ்வியல் வழிகாட்டி இறுதி நெறிநூல் கூறும் ஒரே நேர்வழி நடக்கத்தான் மனிதகுலம் தயாரில்லை. மனிதக் கற்பனையில் உதித்த ஜனநாயகத்தையாவது முறைப்படி பேணுகிறார்களா என்றால் அதுவும் இல்லையே! பெறுமதியான பொன்னான வாக்குச் சீட்டைப் பணத்தையும், மதுபாட்டில்களையும் லஞ்சமாகக் கொடுத்து அபகரிக்கும் கேடுகெட்ட நிலையில் அல்லவா இந்த அரசியல் வியாபாரிகள் இருக்கிறார்கள். இந்தக் கேடு கெட்ட நிலையை எங்களால் தடுத்து நிறுத்த முடிய வில்லை என்று தேர்தல் ஆணையமும், அதன் தலைவரும் கூறுகிறார்கள் என்றால், இந்த இழிநிலை எந்த அளவு புரையோடிப் போயிருக்கிறது என்பது புரிய வில்லையா?
இந்த இழிநிலையை மாற்றி மனிதக் கற்பனையில் உதித்த ஜனநாயக ஆட்சி முறையாவது உருப்பட வேண்டு மென்றால், தேர்தல் ஆணையம் துணிச்சலாக சில நட வடிக்கைகளை எடுக்க வேண்டும். எப்படித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆட்சியாளர்கள் புதியத் திட்டங்களை அமுல்படுத்த முற்படக் கூடாது. ஏற்கனவே திட்ட மிட்டு அறிவித்து மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் பொருள்களையும் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்ற நடைமுறை இருக்கத்தானே செய்கிறது.
உதாரணமாகச் சென்ற திமுக ஆட்சியில் மக்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டு மக்கள் வரிப்பணத்திலிருந்து கோடிக் கணக்கில் செலவிட்டுப் பல ஆயிரம் பெட்டிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. பல ஆயிரம் மக்களுக்குக் கொடுப்பதற்குரிய “”பயனாளியின் தகுதி அட்டை” வழங்கப்பட்டும் விட்டது. தொலைக் காட்சிப் பெட்டிகள் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. விளைவு கொடுப்பதற்கான உறுதி செய்யப்பட்ட அட்டையைப் பெற்றப் பயனாளிகளுக்குக் கொடுக்கப்படுவதும் நிறுத்தப்பட்டது. தேர்தலில் ஆட்சி மாறியவுடன் காட்சியும் மாறியது. எவர்களுக்காகக் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கப் பட்டனவோ அவர்களுக்குக் கொடுக்கப்படாமல் திசை மாறிக் கொடுக்கப்பட்டன. நமது கேள்வி வாக்களிக்கப்பட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தவற்றையே தடுத்து நிறுத்திய தேர்தல் ஆணையம், வாக்குச் சீட்டுக்களை அபகரிக்கும் தீய நோக்குடன் கையூட்டாகக் கொடுக்கப்படும் பணத்தையும், மது பாட்டில்களையும் கொடுப்பதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கைப் பார்ப்பது என்ன நியாயம்? தடுக்க முடியும்! எப்படி?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தொகுதிகளுக்குள் அந்தத்தத் தொகுதி மக்கள் மட்டுமே இருக்க வேண்டும். வெளியிலிருந்து வேட்பாளர்களோ, வேட்பாளர்களின் ஆதரவாளர்களோ, கட்சிக்காரர்களோ, தேர்தல் கைக்கூலிகளோ நுழையவே கூடாது. அப்படி மீறி நுழைந்தால், நுழைபவர்களின் வேட்பாளர் போட்டியிடு வதிலிருந்து தகுதி நீக்கப்படுவார் என்ற கடுமையான சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். வேட்பாளர்கள் தங்களின் வீரப் பிரதாபங்களைத் தமது தொகுதி மக்களி டம் எடுத்து வைக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுமே என்று சொல்லவும் இப்போது வழியில்லை.
ஜனநாயகத் தேர்தல் நடைமுறைக்கு வந்த காலக் கட்டத்தில் வேட்பாளர்கள் மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பதைத் தவிர வேறு வழி அன்று இருக்கவில்லை. ஆனால் அதன் பின் முதலில் ஒலிபெருக்கி வசதி ஏற்பட் டது. இப்போது தொலைக்காட்சி வசதியே ஏற்பட்டுவிட்டது. முன்னர் வேட்பாளர் தெருவில் மேடை போட்டுப் பேச முடிந்தது. அதிகபட்சம் வீட்டுவாசல் வரை போய் பேச முடிந்தது. ஆனால் தொலைக்காட்சி மூலம் இன்று ஒவ்வொரு வீட்டின் படுக்கை அறைவரைப் புகுந்து பேசும் வாய்ப்பு ஏற்பட்டுவிட்டதே. அதைத் தாராளமாகப் பயன்படுத்தலாம் தானே! தொகுதிகளில் பொதுக் கூட்டம் போடுகிறோம் என்ற பேரால் கூலிக்கு ஆட்களைப் பிடித்து பெருங் கூட்டத்தைக் காட்டி, மக்களின் ஆதரவு எங்களுக்கே இருக்கிறது என்று அப்பாவி மக்களை ஏமாற்றி வஞ்சிக்கும் அயோக்கியத் தனமும் அடங்கி விடும். மக்கள் நடுநிலையுடன் சிந்தித்து தொண்டுள்ளம் கொண்ட நன் மக்களைத் தங்களின் பிரதிகளாக தேர்ந்தெடுக்கும் அரிய சந்தர்ப்பம் வாய்க்கும்.
இன்று சட்ட சபைகளை, மக்கள் மன்றத்தை நிறைத்து அட்டூழியங்கள், அநியாயங்கள் புரியும், தாதாக்கள், ரவுடிகள், ஏமாற்றுப் பேர்வழிகள் ஒழுக்கங் கெட்டவர்கள், கிரிமினல் குற்றவாளிகள், நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டவர்கள், குறிப்பாக இரண்டு கால் மிருகங்கள் பிரதி நிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் அவலங்கள் இருக்கிற இடம் தெரியாமல் மறைந்து போகும். தகவல் உரிமை பெறும் சட்டத்திற்குள் நாங்கள் வர மாட்டோம். குற்றங்கள் செய்து தண்டனைப் பெற்றாலும் நாங்கள் தேர்தலில் நின்று அடாத செயல்கள் செய்து வெற்றி பெறுவதை யாரும், எந்த மக்கள் சக்தியும் தடுக்கவே முடியாது என்று வீராப்புப் பேசும் நிலை ஒழிந்து விடும்.
ஜனநாயகம், உண்மையில் ஜனநாயகமாக, நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றால் இதைத் தவிர வேறு வழி இல்லை. இந்த உண்மை கசப்பாகத் தான் இருக்கும். அரசியல் வியாபாரிகள், அவர்களின் கைத்தடிகள், கைக்கூலிகள், ஏதாவதொரு வகையில் உலகியல் ஆதாயம் அடையும் அற்பர்களுக்கே இத்திட்டம் வேம்பாகக் கசக்கும். ஆயினும் அறிவு ஜீவிகள் முன் வந்து குறைந்த அளவில் இந்த நடைமுறையையாவது அமுல்படுத்த முன் வரவேண்டும். இல்லை என்றால் ஜனநாயகம் போலி ஜனநாயகமாக, பணநாயகமாக, குண்டர் நாயகமாக மட்டுமே இருக்கும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை என்று நாம் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறோம்.