முஹம்மது நஸீர், ஜாக் நெல்லை மாவட்ட நிர்வாகி, செல்: 9994027895
சர்வதேசப் பிறை நிலைப்பாடு மார்க்கம் ஆதாரமுள்ளதா? அறிவுப்பூர்வமானதா?
சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன் சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும் என்று அக் கருத்துடையோர் கூறி வருகின்றனர். தத்தமது பகுதி பிறை மற்றும் மண்டல மாநில தேசியப் பிறை நிலைப்பாடுகளிலிருந்து முன்னேற்றம் அடைந்து, நாங்கள் உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கவே சர்வதேசப் பிறை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம் என்றும் கூறுகின்றனர். எனவே மேற்படி சர்வதேசப் பிறை நிலைப்பாடு சரியானதுதானா? அறிவுப்பூர்வமானதுதானா? இந் நிலைப்பாட்டிற்கு மார்க்க ஆதாரம் இருக்கிறதா? என்பதை உணர்த்துவதற்காக சர்வதேசப் பிறை கருத்துள்ளவர்களை நோக்கி கீழ்க்காணும் கேள்விகளை மிகமிக கண்ணியத்தோடு வினவுகிறோம். இதற்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் நேரடியான விடைகளைக் கண்டறிய முற்படுங்கள் என்றும் வேண்டுகிறோம்.
1. இன்று உலகில் சுமார் 150 கோடிக்கும் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறோம். இஸ்லாமிய நாட்காட்டியில் ஒரு கிழமைக்கு மூன்று தேதிகளும், ஒரு தேதிக்கு மூன்று கிழமைகளும் ஏற்படுத்தப்பட்டு நாட்காட்டியின் அடிப்படையே தகர்க்கப்பட்டு விட்டது. இதனால் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளை சுட்டிக்காட்டி மேற்படி நாளில் வருகை தாருங்கள் என்று யாரையும் அழைக்கக் கூட இயலாத துர்பாக்கிய நிலை உலக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாம் கேட்பது என்னவெனில் இத்தகைய அவல நிலையைப் போக்கிட முரண்பாடற்ற துல்லியமான குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமைந்த ஒரு இஸ்லாமிய சந்திர நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசியமான ஒன்றா இல்லையா?
2. அவ்வாறு துல்லியமான இஸ்லாமிய நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசர அவசியம்தான் என்றால், மஃரிபு வேளையில் மறையும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து விட்டு அடுத்த நாளை முதல் நாளாகக் கொள்ளும் சர்வதேசப் பிறை நிலைப்பாட்டின் மூலம் அத்தகைய நாட்காட்டியை ஏற்படுத்திட இயலுமா?
3. துல்லியமான இஸ்லாமிய நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசியமில்லை என்று சர்வதேசப் பிறை கருத்துடையோர் கருதினால், நாட்காட்டியையும், அதை கணக்கிடுவதையும் வலியுறுத்தும் 2:189, 10:5, 55:5, 17:12, 9:36,37, 36:39.40, 6:96 போன்ற எண்ணற்ற இறை வசனங்கள் வலியுறுத்துவது என்ன?
4. சர்வதேச அளவில் பிறையைப் பார்க்க வேண்டும் என்ற நிலைப்பாடு உலகின் அனைத்து நாடுகளையும் அதன் மக்களையும் 24 மணிநேரம் என்ற ஒரு நாளுக்குள் உள்ளடக்கிய ஒன்றா? புரியும்படி சொல்வதென்றால் சர்வதேசப் பிறை நிலைப்பாட்டின் எல்கை என்ன? சர்வதேசப் பிறை நிலைப்பாட்டின் எல்கை தூரத்தை அடிப்படையாகக் கொண்டதா? அல்லது நேரத்தை அடிப்படையாகக் கொண்டதா? அதை வலியுறுத்தும் குர்ஆன், சுன்னா ஆதாரங்கள் எங்கே உள்ளது?
5. உலக நேரம் 16 மணிக்குப் பின்னர் (அதாவது அமெரிக்கப் பகுதியில்) ஒரு வெள்ளிக் கிழமையில் முதல் நாளின் பிறை அது அஸ்தமிக்கும் மஃரிபு வேளையில் புறக்கண்களுக்குத் தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம். சர்வதேசப் பிறை நிலைப்பாட்டின்படி அது ரமழான் தலைப்பிறை என்றே ஒரு வாதத்திற்காக கொள்வோம். அவ்வாறு அந்த வெள்ளிக்கிழமை மஃரிபு வேளையில் அமெரிக்காவில் பிறை பார்க்கப்படும் போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிழக்குப் பகுதியிலுள்ள நாட்டு மக்கள் அடுத்த நாள் சனிக்கிழமையாக விடிந்து சனிக் கிழமையின் காலைப் பொழுதில் இருப்பர். அப்போது அந்நாடுகளிலுள்ள முஸ்லிம்களின் நிலைமை என்ன? அம்மக்கள் ரமழான் மாத முதல் நோன்பை சர்வதேச அமெரிக்க முஸ்லிம்களைப் போல சனிக்கிழமை அன்று துவங்க இயலாமல் போகுமே? இதற்கு சர்வதேசப் பிறை நிலைப்பாடு கூறும் தீர்வு என்ன?
6. மேற்படி கிழக்கத்திய நாடுகளிலுள்ள மக்கள் ஞாயிற்றுக்கிழமையைத்தான் ரமழான் முதல் நாளாகக் கொள்ள வேண்டுமா? அவ்வாறு கொண்டால் சர்வதேச முஸ்லிம்களுக்கு ரமழான் முதல் நாள் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று இரண்டு வெவ்வேறு கிழமை களில் வருவது சர்வதேசப் பிறை நிலைப்பாட்டின்படி சரியானதுதானா? இதற்கு குர்ஆன் சுன்னா ஆதாரங் கள் எங்கே?
7. அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை பிறை தென்படும்போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சனிக்கிழமை என்ற அடுத்த நாளுக்குள் சென்று விட்டதால், பெருநாள் கழித்து அந்நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் நோற்கவியலாது போன அந்த முதல் நாளின் நோன்பை களா செய்ய வேண்டுமா? அவ்வாறு களா செய்ய வேண்டுமென்றால் அதற்கு ஆதாரமாக அமைந்த குர்ஆன் சுன்னாவின் நேரடி வழிகாட்டல் எங்கே உள்ளது?
8. சர்வதேசப் பிறை நிலைப்பாட்டின்படி சில நாடு களிலுள்ள மக்கள் நோற்க இயலாது போகும் ரமழான் முதல் நாளின் நோன்பை பெருநாள் தினத்திற்குப் பின்னர் களா செய்வதுதான் மார்க்கச் சட்டம் என்றால் சர்வதேச பிறை நிலைப்பாட்டின்படி சர்வதேச முஸ்லிம் களில் ஒரு சாராருக்கு ரமழான் மாதம் 30 நாட்களாக இருந்தால் பிறிதொரு சாராருக்கு ரமழான் 29 நாட்களில் முடியும். அதெபோல ஒரு சாராருக்கு ரமழான் 29 நாட்களாக அமைந்து விட்டால் பிரிதொரு சாராருக்கு 28 நாட்களிலேயே மாதம் முடிந்து விடும். இதுதான் சர்வதேசப் பிறை நிலைப்பாடு தந்த பிறைத் தீர்வா? இது சர்வதேசப்பிறை என்ற நிலைப்பாட்டை உலக முஸ்லிம்கள் நடைமுறைபடுத்த முடியாமல் ஏற்பட்ட தோல்வியாக இது தெரியவில்லையா?
9. சர்வதேசப் பிறை கருத்துடைய சிலர் இன்று துல்லியமான பிறைக் கணக்கீடை “பித்அத்’ என்றும் “ஹராம்’ என்றும் பிரச்சாரம் செய்யத் துணிந்துள்ளனர். இஸ்லாமிய மார்க்கத்தில் சந்திர மாதத்தை முற்கூட்டியே கணக்கிடுவது “பித்அத்’ என்பதற்கோ “ஹராம்’ என்ப தற்கோ குர்ஆன் ஹதீஃதிலிருந்து நேரடியான ஆதாரத் தைத் தரமுடியுமா?
10. பிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்தே நோன்பை விடுங்கள் என்றே ஹதீஃத்கள் போதிப்பதாகவும், அவை சர்வதேசப் பிறை நிலைப்பாட்டைத்தான் குறிக்கிறது என்றும் சொல்கின்ற னர். அப்படியயனில் அதே ஹதீஃத்களைதான் தத்தமது பகுதி பிறை மற்றும் மண்டல, மாநில, தேசியப் பிறை நிலைப்பாடுகள் உடையோர் தங்களது பிறை நிலைப் பாடுகளுக்கு மேற்படி ஹதீஃத்களையே ஆதாரமாகக் கருதுகின்றனர். இந்நிலையில் மேற்படி நிலைப்பாடுகள் பற்றியும், அந்நிலைப்பாடுகள் கொண்டவர்கள் பற்றிய சர்வதேசப் பிறையினரின் மார்க்கத் தீர்ப்பு என்ன?
11. பிறை என்று மொழி பெயர்க்கப்படும் “ஹிலால்’ என்ற பதம் எந்த நாளுக்குரிய சந்திரனுக்கு கூறப்படும் சொல்லாகும்? எந்த நாளின் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டதாகச் சொல்கிறார்கள்? இதற்கான ஆதாரத்தைத் தர இயலுமா?
12. மாதத்தின் 29-வது நாள் மாலை 30-வது நாளின் மஃரிபில் பிறை பார்க்க வேண்டும் என்பதற்கு குர்ஆன் ஹதீஃதில் எங்கே ஆதாரம் இருக்கிறது? 29-வது நாள் மாலை 30-வது நாளின் மஃரிபில் பிறை பார்க்கச் செல்ல வேண்டும் என கூறினால், பிறை பார்க்கச் செல்பவருக்கு அன்றைய மஃரிப் தொழுகை ஜமாஅத்தில் கலந்து கொள்ளாமல் தொழுகையை பிற்படுத்தி தொழுது கொள்வதற்கு மார்க்கத்தில் சலுகை ஏதும் வழங்கப்பட்டுள்ளதா? நாம் இதை வீம்புக்காக இவ்வாறு கேட்கவில்லை, மாறாக 29வது நாள் மாலை 30வது நாளின் மஃரிபு தொழுகை வக்து நேரத்தில்தான் பிறை புறக் கண்களுக்குத் தெரிவதாக சர்வதேசப் பிறையினரும் நம்பியுள்ளனர். எனவேதான் இவ்வாறு நாம் வினா எழுப்புகிறோம். மேலும் மாதத்தின் இறுதிப் பகுதி தேய்பிறை நாட்களான 28, 27,26 போன்ற நாட்களிலும் பிறையானது மேற்கு திசையில் மஃரிபு வேளையில்தான் தெரிகிறதா?
13. சர்வதேசப் பிறை நிலைப்பாட்டின்படி 29வது நாளின் மாலையில் மேகம் மூட்டமாகி வானத்தை மேகம் மறைத்திருந்தால்தான் அந்த மாதத்திற்கு 30 நாட்களாக முடிவு செய்ய முடியும். இந்நிலையில், சர்வதேசப் பிறை கருத்துடைய இயக்கத்தினர் தயாரித்து வெளியிடும் நாட் காட்டிகளில் இன்னென்ன மாதங்கள் 29 நாட்களில் முடிகிறது என்றும், இன்னென்ன மாதங்கள் 30 நாட்களில் முடிகின்றது என்றும் எவ்வாறு முற்கூட்டியே அச்சிட முடிகிறது? இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் துல்லியமான பிறைக் கணக்கீடு பித்அத், ஹராம் என்றால் சர்வதேசப் பிறையினர் தோராயமாகக் கணக்கிட்டு நாட்காட்டி வெளியிடுவது பித்அத், ஹராம் இல்லையா?
14. மார்க்க வியங்களுக்கு முர்ஸல் (தொடர்பு அறுந்த) வகை ஹதீஃத்கள் பிரதான ஆதாரமாகாது என்று நம்பும் சர்வதேசப் பிறைக் கருத்துடைய அறிஞர்கள், பிறை பற்றி பிரச்சாரம் செய்யும் போது மட்டும் ஹதீஃத்களின் பலவீனமான நிலைகளைக் கண்டு கொள்வதில்லை. தங்கள் நிலைப்பாட்டிற்கு நபிவழி ஆதாரமில்லை என்பதினால் பிறை குறித்த பலவீனமான ஹதீஃத்களைக் கூட ஆதாரமாக முன்னிறுத்துவதைக் காண்கிறோம். எனவே பிறை வியமாக வரும் ஹதீஃத்களுக்கு மட்டும் அறிவிப்பாளரான ஸஹாபியின் பெயர் குறிப்பிடாமல் ஹதீஃதை அறிவிக்கலாம் என்ற புதிய சட்டம் ஏதும் ஹதீஃத் கலையில் புதிதாக உருவாக்கப் பட்டுள்ளதா? பிறை விஷயத்திற்கு மட்டும் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட, தொடர்பு அறுந்த அறிவிப்புகளை ஆதாரமாகக் கொள்ளலாம் என்ற சட்டம் ஏதும் உள்ளதா? அப்படி ஏதுமிருந்தால் அதை ஆதாரத்துடன் நமக்கு காட்டுமாறு கேட்கிறோம்.
15. சர்வதேசப் பிறை கருத்துடைய சிலர் நபி(ஸல்) அவர்கள் தம்முடைய ஹஜ்ஜில் அரபாவில் தவறான நாளில் நின்றுவிட்டார்கள் என்று ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் கூறியதாக பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். நமக்கு எதிரான மேற்படி பொய்ப் பிரச்சாரத்திற்கு தகுந்த ஆதாரத்தை மக்கள் மத்தியில் சமர்ப்பித்து அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் தம்முடைய ஹஜ்ஜில் அரபாவில் நின்ற கிழமையையும் சர்வதேசப் பிறை நிலைப்பாட்டின்படி அறிந்து தெளிவாக நமக்கு அறிவிக்க வேண்டும். நபி(ஸல்) அவர்களின் ஹஜ்ஜு சம்பந்தமாக வரும் ஹதீஃதில், “லைலத்து ஜம்இன்’ என்ற பதத்திற்கு என்ன பொருள் என்பதையும் மேற்படி சர்வதேசப்பிறை கருத்துடையோர் தெளிவுபடுத்த வேண்டும்.
16. ஹிஜ்ரி கமிட்டியினர் “ஸூமூ லி ருஃயத்திஹி’ என்று வரும் ஹதீஃத் சொற்றொடரின் “ஹி’ என்பதைத் தவறாக விளங்கியுள்ளனர். நாங்கள்தான் சரியாக விளங்கியுள்ளோம் என்று சர்வதேசப் பிறை கருத்துடைய சிலர் கூறி வருகின்றனர். அப்படியானால் “ஹி’ என்ற பதம் எதைக் குறிக்கின்றது? எந்தப் பெயர்ச் சொல்லும் முன்னால் குறிப்பிடப்படாமல், “ஹி’ என்ற பதத்தைக் கூறி பொத்தாம் பொதுவாக சொல்வது அரபி மொழி இலக்கணப்படி சரியானதுதானா? அல்லது அது தவறானதா? சந்திரன் என்ற ஒருமையான கோளின் “அஹில்லாஹ்’ என்ற பன்மையான அனைத்து படித்தரங்களையும் மேற்படி “ஹி’ என்ற பதம் குறிக்கிறது என்று நாம் கூறுவதை எந்த அரபு இலக்கண விதிப்படி மாற்றுக் கருத்துடையோர் மறுக்கிறார்கள்.
17. நபிதோழர் இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவிக் கும் “அஷ்ஹரு திஸ்வூன இஷ்ரீன லைலத்தன்’ என்ற ஹதீஃத் தொடரில் “ஸுமூலி ருஃயத்திஹி’ என்பதில் உள்ள “ஹி’ என்ற பதம் எதைக் குறிக்கின்றது? இன்னும் அதே ஹதீஃதில் இடம் பெறும் “ஃப இதா ரஅய்துமூஹூ’ என்பதில் உள்ள “ஹூ’ எதைக் குறிக்கின்றது? மேலும் அந்த ஹதீஃதில் இடம் பெறும் மற்றொரு சொற்றொடரான “வலா தஃப்திரு ஹத்தா தரவ்ஹூ’ என்பதில் உள்ள “ஹூ’ எதை குறிக்கின்றது?
“அஷ்ஹரு திஸ்வூன இஷ்ரீன லைலத்தன்’ என்ற சொற்றொடர் இல்லாமல் நேரடியாக “ஹத்தா தரவ்ஹூ’ அல்லது “ஸூமூலிருஃயத்திஹி’ அல்லது “ஃப இதா ரஅய்துமூஹூ’ என்று ரிவாயத்துகளிலுள்ள “ஹி’, “ஹூ’ போன்ற பதங்கள் எதைக் குறிக்கின்றன? ஹிஜ்ரி கமிட்டி அறிஞர்களுக்கு அரபி மொழி தெரியவில்லை என்று விமர்சிக்கும் அரபி மொழி விற்பனர்கள் இவற்றிற்குப் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளதால் இவ்வாறு கேட்கிறோம். மேற்படி பதங்கள் பிறை என்ற ஒரேயொரு படித்தரத்தை மட்டும் குறிக்கிறதா? அல்லது பிறைகள் என அனைத்துப் படித்தரங்களையும் குறிக்கின்றனவா?
18. “ஸூமூலி ருஃயத்திஹி’ என்று வரும் ஹதீஃதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் “ஃபஇன் கும்ம அலைக்கும்’ என்ற வார்த்தைக்கு என்ன பொருள் கொள்ள வேண்டும்? “கும்ம’ என்ற பதத்திற்கு “மேகம் மறைத்தால்’ என்று மட்டும்தான் அர்த்தம் என்று சர்வதேசப் பிறை கருத்துடை யோர் நம்பியுள்ளனர். “கும்ம’ என்பதற்கு “மேகம்’ என்று எவ்வாறு முடிவு செய்தார்கள்? மேலும் “அலைக்கும்’ என்ற பதம் யாரைக் குறிக்கும்? ஒட்டு மொத்த சர்வதேச உம்மத்தையா? அல்லது ஒரு பகுதியில் வாழும் மக்களையா? ஒட்டுமொத்த மக்களைத்தான் அச்சொல் குறிக்கிறது மண்டல, மாநில, தேசியப் பிறை எல்கையை அல்ல என்று சர்வதேசப் பிறையினர் கூறினால் அந்த எல்கையை வரையறுத்துக் கூற முடியுமா?
19. “ஸூமூலிருஃயத்திஹி’ என்ற சொற்றொடர் வரும் ஹதீஃதில் இடம்பெறும் “ஃபஇன் கும்ம அலைக்கும்’ என்பதில் “கும்ம’ என்றால் “மேகமூட்டம் தான்’ என்ற சர்வதேசப் பிறை கருத்துடையோர் வாதிடுகின்றனர். அப்படியானால் நபி(ஸல்) அவர்கள் “கும்ம’ என்ற பதத்தைப் போலவே “கும்மிய’, “உஃமிய’, “கபீ(ய்)ய’, “க(றூ)ம்மிய’, “ஹஃபிய்ய’, போன்ற பதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். மேற்படி “கும்மிய’, “உஃமிய’, “கபீ(ய்)ய’, “க(றூ)ம்மிய’,”ஹஃபிய்ய’, போன்ற பதங்க ளும் “மேகமூட்டம்’ என்றுதான் பொருள் கொடுக்க வேண் டுமா? இல்லை என்றால் மேற்படி சொற்களுக்கு என்னதான் பொருள்?
20.29வது நாளில் மேகம் வானத்தை மறைத்து பிறை தென்படாவிட்டால் அந்த மாதத்தை முப்பது நாட் களாக பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கூறுபவர்கள் மேகமும் மறைக்காமல் வானம் தெளிவாக இருந்து, பிறையும் தெரியாமல் இருந்தால் அந்த மாதத்தை எத்தனை நாட்களாக முடிவு செய்ய வேண்டும்? நபி(ஸல்) அவர்கள் வானம் தெளிவாக இருந்து பிறை தெரியாமல் இருக்கும் போது எவ்வாறு முடிவெடுத்தார்கள்? அதற் கான குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் எவை? சர்வதேசப் பிறை கருத்துடையோர் விளக்கம் தருவார்களா?
21. பிறையைப் புறக்கண்களால் பார்த்தே அமல் செய்ய வேண்டும் என்று வாதிக்கும் சர்வதேசப் பிறை கருத்துடையோர் ஸஹருடைய வக்தை அறிவது, நோன்பு திறக்கும் நேரம் மற்றும் கிரகணத் தொழுகை போன்ற இபாதத்துக்களை கண்ணால் பார்த்து அமல் செய்ய வேண்டும் என்பதை மறுக்க இயலாது. அப்படியா னால் கிரகணத் தொழுகை தொழுவதற்காக கிரக ணத்தை பார்க்கும் முன்னரே அறிவிப்பு செய்வதேன்? ஸஹருடைய வக்தையும், நோன்பு திறக்கும் நேரத்தை யும் கடிகாரத்தை வைத்து முடிவெடுப்பதேன்? விஞ்ஞான சாதனங்களைப் பயன்படுத்தி நபி(ஸல்) அவர்களின் நேரடிக் கட்டளைகளைச் செயல்படுத்தாமல் புறக் கணிப்பதேன்?
22. பிறையைப் புறக்கண்ணால் பார்க்காது கணக் கீடு செய்வது சுன்னாவிற்கு மாற்றமாகும் என்றும் சுன்னாவிற்கு மாற்றமாக செயல்பட்டால் “குஃப்ரு’ என்றும் தற்போது கூறுகின்றனர். அப்படியானால் சர்வதேச/சவுதி தேசப் பிறைக் கருத்துடைய ஒரு இயக்கத்தின் முன்னால் தலைவர் ஸஹருடைய இரண்டாம் பாங்கு தேவையில்லை. அது குழப்பம் விளைவிக்கும் என்று சொன்னது மட்டும் “குஃப்ரு’ ஆகாதா?
23. பிறை பார்த்தவர்கள் அதை என்னிடம் கூற வேண்டும். நான் தான் பிறையை அறிவிப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் என்றாவது கட்டளையிட்டார்களா? அவ்வாறு ஆணையிட்டார்கள் என்றால் அவ்வாறு இட்ட கட்டளை ஹதீஃத்களில் எங்கே உள்ளது? அப்படி ஏது மில்லை என்றால் நபி(ஸல்) அவர்களே அறிவிக்காத பிறைத் தகவலை அறிவிப்பதற்கு ஜமாஅத் தலைவர்களுக்கோ, இயக்கத் தலைவர்களுக்கோ என்ன உரிமை இருக்கிறது? அந்த உரிமையைக் கொடுத்தது யார்?
24. “லா நக்துபூ வலா நஹ்ஸிபு’ என்று வரும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிக்கு “நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதும் கூடாது, எண்ணுவதும் கூடாது என்ற நபி(ஸல்) அவர்கள் பிறைகளைக் கணக்கிடுவதைத் தடை செய்து விட்டார்கள்’ என்று சர்வதேசப் பிறை கருத்துடையோர் பிரச்சாரம் செய்கின்றனர். அந்த ஹதீஃதை “பிறைகளைக் கணக்கிடுவதைத் தடை செய்து விட்டார்கள்’ என்று மொழி பெயர்ப்பது எப்படி? இது சரியான மொழிபெயர்ப்புதானா? எந்த அரபு இலக்கண இலக்கிய விதிப்படி அவ்வாறு மொழிபெயர்த்தார்கள்? அல்லது விஞ்ஞானத்தின் அடிப்படையில் நாட்காட்டியை அமைத்திட உதவும் வானியல் பெளதீகம் (புவிமிrலிஸ்ரீஜுதீவிஷ்உவி) என்னும் விண்ணியல் அறிவை அந்த கால சமுதாயம் அறிந்திருக்கவில்லை என்று ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் பொருள் கொள்வது எந்த விதத்தில் தவறானதாகும்?
25. மாற்றுக் கருத்துடையோர் கூறுவது போல் “லா நக்துபூ வலா நஹ்ஸிபு’ என்பதற்குக் கணக்கிடுவதும் கூடாது, எழுதுவதும் கூடாது என மொழி பெயர்த்தால், முஸ்லிம் சமுதாயத்திற்கு எழுதும் முறைகளும், கணக்கிடு தலும் ஹராம் என்ற நிலை ஏற்படும். மேலும் நபி தோழர் களிடமிருந்து செய்திகளை தாபியீன்கள் பெற்றது முதல் ஹதீஃத் அறிவிப்பாளர் தொடரையும் உறுதிப்படுத்துவது உட்பட இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளை உறுதிப் படுத்திடும் ஹிஜ்ரி நாட்காட்டியின் கணக்கீடுகளும் ஹராம் என்று மறுக்கப்பட வேண்டிய கணக்குகளா? இவற்றை மாற்றுக் கருத்துடையோர் சிந்திக்க மறுப்பதேன்?
26. நபி(ஸல்) அவர்கள் தொழுகை நேரங்களை சூரியனால் ஏற்படும் நிழல்களின் அளவுகளைக் கொண்டு முடிவு செய்தார்கள். இன்று தொழுகை நேரம் என்று கூறி நேரக் கணக்குப் பட்டியலை நடைமுறைப் படுத்துவது ஹராமில்லையா? கணக்கிடமாட்டோம் என்ற கூற்றிற்கு முரணானது இல்லையா? இதுபோன்ற தொழுகை நேரக் கணக்கை முன்கூட்டியே கணக்கிட்டு அட்டவணையிட்டு அதைப் பார்த்து நபி(ஸல்) தொழுதார்கள் என்பதற்கு ஒரேயயாரு ஆதாரத்தையாவது மேற்படி சர்வதேசப் பிறையினரால் எடுத்துக் காட்டிட முடியுமா? இதுபோன்று நபி(ஸல்) அவர்கள் சுன்னத்தாகக் கூறி நடைமுறைப் படுத்திக் காட்டாத செயல்களை மார்க்கத்தின் பெயரால் செய்வது குற்றமாகாதா என்று அவர்கள் பாணியிலேயே கேட்க விரும்புகிறோம்.
27. சர்வதேசப் பிறைக் கருத்துடையோர் இதுவரை சவுதி அல்லாத வேறு நாடுகளிலிருந்து 29வது நாளின் மஃரிபில் பிறைப் பார்த்தத் தகவலை தங்களுக்கு அளித்தவர்கள் யார்? யார்? என்று அவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்களா? நாங்கள் சவுதி அரேபி யாவின் தகவலைத்தான் பின்பற்றுகின்றோம் என அவர்கள் கூறுவார்களேயானால், சவுதியில் பிறைப் பார்த்து இவர்களுக்குத் தகவல் கொடுத்த நபர்களின் பட்டியலையாவது அவர்களின் முகவரியுடன் வெளியிட இயலுமா? வெறுமனே சவுதி அரபியாவின் தொலைக் காட்சியைப் பார்த்துவிட்டு அறிவிக்கும் இவர்களின் பிறை நிலைப்பாடு சர்வதேச பிறை நிலைப்பாடா? சவுதி தேச பிறை நிலைப்பாடா?
இப்படி பல்வேறு கேள்விகளை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். பிறைகளைப் புறக் கண்களால் பார்ப்பது தொடர்பாக “விடையே இல்லாத வினாக்களா இவை?’ என்ற தலைப்பிட்டு சில பொது வான கேள்விகளை முன்னரே நாம் கேட்டுள்ளோம் (பார்க்க : www.mooncalendar.in ) அக்கேள்விகளுக்கு சர்வதேசப் பிறை கருத்துடையவர்கள் உட்பட எந்தப் பிறை நிலைப்பாட்டினரும் முறையான விடைகளை இது வரை அளிக்கவில்லை. அக்கேள்விகளோடு சேர்த்து மேற்படி இக்கேள்விகளையும் நாம் கேட்பது சம்பந்தப் பட்டவர்களின் அறியாமையை வெளிக்கொண்டு வந்து மக்கள் மத்தியில் அவர்களை இழிவுபடுத்துவதற்காக அல்ல. நிச்சயமாக அப்படிப்பட்ட எத்தகைய எண்ணமும் எங்களுக்கில்லை. மாறாக அவர்கள் சிந்திப்பதற்காகத் தான் இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ளோம். ஒரு எதிர் மறையான பொருளில் உண்மையை விளக்குவதற் காகத்தான் இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ளோம். ஒரு எதிர் மறையான பொருளில் உண்மையை விளக்கு வதற்காகத்தான் நாம் மேற்படி கேள்விகளைக் கேட்டுள்ளோம்.
மேற்கண்ட கேள்விகளுக்கு சர்வதேசப் பிறை கருத்துடையோரால் குர்ஆன், சுன்னா அடிப்படையில் தெளிவான, ஆதாரப்பூர்வமான பதிலைத் தர இயலாது என்பதை மக்களும் தெரிந்தே வைத்துள்ளனர். காரணம் சர்வதேசப் பிறை அல்லது சவுதி தேசப் பிறை என்ற பிறை நிலைப்பாடுகளுக்கு மார்க்க ஆதாரமில்லை. அந் நிலைப்பாடுகள் அறிவுப்பூர்வமானதாகவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையகும்.
எனவே நபி(ஸல்) அவர்கள் புறக்கண்ணால் மட்டும்தான் பிறந்த பிறையை பார்க்க வேண்டும் என்று கட்டளையிடவில்லை. பிறைகளைக் கணக்கிட்டு நாட்காட்டியைப் பின்பற்றுவதைத் தடை செய்யவில்லை என்பதை மிகமிகத் தெளிவாக அறிந்து கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ். எனவே பிறை குழப்பத்திற்கு மகத்தான தீர்வு சந்திரனின் படித்தரங்களை துல்லிய மாகக் கணக்கிட்டு வழங்கப்பட்டுள்ள ஹிஜ்ரி காலண் டரை பின்பற்றுவதுதான் என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்துகிறோம். ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க சட்டமில்லை என்பதை ஆணித்தரமாக இங்கு பதிவு செய்கிறோம்.