தொழுகையில் மட்டும் தொப்பி அணிவது நபி வழியா?

in 2014 மார்ச்,இறைவணக்கம்

அபூ அப்தில்லாஹ்

தொப்பி அணிவதுதான் நபிவழி(சுன்னத்) என்ற பெயரில் அஹ்மதுல்லாஹ் கா´ஃபீ, காஸிமீ என்பவர் தொகுத்து, அந்நூல் பரவலாக பள்ளிகளில் விநியோகிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல. அதிலுள்ள சில கருத்துகள் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளியிலும், தொழுகையில் தொப்பி அணிவது கட்டாயம் என வலியுறுத்தி முகப்பில் தொங்க விடப்பட்டுள்ளது. சுய சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட மக்களும் அதை மார்க்கமாக நம்பிச் செயல்படுகின்றனர். தொழுகையில் மட்டும் தொப்பி அணிந்து வேடமிட்டு நடித்து தங்கள் அரைகுறை அமல்களையும் மேலும் பாழாக்குகின்றனர்.

அந்நூலை முழுமையாகப் படித்து விளங்கியதில் நபி(ஸல்) அவர்களும், நபி தோழர்களில் பலரும் தொப்பி, தொப்பித் தலைப்பாகையை எப்பொழுதும் அணிந்திருந்தார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் அரபு நாட்டின் கடும் வெய்யில், கடும் காற்று மணலை அள்ளி வீசுவதின் காரணமாக அங்கு வாழ்ந்த யூதர்கள், கிறித்தவர்கள், மஜூஸிகள், குறைஷ் காஃபிர்கள், நாத்திகர்கள், முஸ்லிம்கள் ஆக அனைவரும் தொப்பி, தொப்பித் தலைப்பாகை அணிந்திருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. மேலும் நபி(ஸல்) அவர்கள் ஒளூ செய்யும்போது தலைப்பாகையில் மஸ்ஹு செய்தார்கள் என்ற அறிவிப்பு, தொடர்ச்சியாக அவர்கள் பள்ளியிலும், வெளியிலும் விடாமல் தொடர்ந்து தலைப்பாகை அணிந்திருந்ததையே உறுதிப்படுத்துகிறது.

ஒரு சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுகையைத் தொப்பியோ, தலைப்பாகையோ இல்லாமல் திறந்த தலையுடன் தொழுவித்தார்கள் என்ற ஆதாரபூர்வமான செய்தி புகாரீ (ர.அ.) 571 ஹதீஃதில் காணப்படுகிறதே அல்லாமல் முசல்லா வில் நின்று கொண்டு தொழுகைக்கு மட்டும் தலைப்பாகை அணிந்ததாக ஒரு ஹதீஃதும் அந்நூலிலும் இல்லவே இல்லை. வேறு ஹதீஃத் நூல்களிலும் காணக் கிடைக்கவில்லை.

ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நபி தோழர் தலைவிரி கோலமாக வந்ததைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் அதைச் சீவி ஒழுங்குப்படுத்தக் கட்டளையிட்டது ஹதீஃத்களில் காணப்படுகிறதே அல்லாமல், தொப்பிப் போடக் கட்டளையிட்டதாக இல்லை.

“”எனது எஜமானன் மீசையைக் கத்தரிக்கும் படியும், தாடியை விடும்படியும் கட்டளையிட்டுள் ளான்” என்று நபி(ஸல்) அவர்கள் ஒரு வெளிநாட்டு மன்னரின் பிரதிநிதியிடம் சொன்ன ஆதாரபூர்வ மான செய்தியே கிடைக்கிறது. தொப்பி, தொப்பித் தலைப்பாகைக்கு இப்படிச் சொன்ன ஒரேயொரு ஆதாரபூர்வமான ஹதீஃதும் இருப்பதாகத் தெரியவில்லை. தொப்பி தலைப்பாகை அணியும்படி சொல்லும் அனைத்து ஹதீஃத்களும் பலவீன மானவையே. இதை அந்நூலின் 32ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

தொப்பி, தலைப்பாகையை இந்த அளவு வலியுறுத்தும் மவ்லவிகள், வலியுறுத்தப்பட்ட சுன்னத் தான தாடியைச் சிரைப்பது பற்றி வாயே திறக்காதது மட்டு மல்ல; அவர்களில் பலர் கசகசா தாடியுடன் காட்சி அளிப்பது எமக்கு 36:21 இறைவாக்கையே நினைவு படுத்துகிறது. ஆம்! கூலிக்குத் தொழ வைப்பவர்கள் நேர்வழியில் இல்லவே இல்லை என்பதை அவர்களே உறுதிப்படுத்துகிறார்கள்!

ஆக இந்தப் புத்தகத்திலுள்ள ஹதீஃத்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்யும் போது தொப்பி, தொப்பித் தலைப்பாகை சுன்னத்தும் அல்ல; பித்அத்தும் அல்ல; ஆதத்து. வழக்கத்திலுள்ளது என்பது திட்டமாகத் தெரிய வருகிறது. மேலும் தொப்பி, தொப்பித் தலைப்பாகை முஸ்லிம்களின் அடையாளம் என்பதும் ஆதாரமற்றச் சொல்லாகும். உலக ளாவிய அளவில் நோட்டமிட்டுப் பாருங்கள். உலகின் பல பகுதிகளில் முஸ்லிம் அல்லாதவர்களின் நடை முறையிலும் தொப்பித் தலைப்பாகைப் பழக்கம் இருக்கவே செய்கிறது. வடநாட்டில் தொப்பிப் போடும் வழக்கமும் தலைப்பாகை அணியும் நடைமுறையும் பல சமூகங்களிலும் காணப்படுகிறது.

இந்து முன்னணித் தலைவர் எப்போதும் தொப்பி அணிந்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தொப்பி அணிந்தே பயிற்சி எடுக்கின்றனர். கிறித்தவ மதத் தலைவர் போப் தொப்பியுடனேயே காட்சி தருகிறார். சமீபத்தில் டெல்லி சட்டசபைத் தேர்தலில் 28 இடங்களைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சியினரும் தொப்பியுடனேயே காட்சி அளிக்கின்றனர். இப்படி முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாதவர்களிடமே தொப்பி, தொப்பித் தலைப்பாகைப் பழக்கம் அதிகமா கக் காணப்படுகிறது. இந்த நிலையில் தொப்பி, தொப்பித் தலைப்பாகை முஸ்லிம்களின் அடையாளம் என்பது ஏற்கத்தக்கச் சொல்லா? குர்ஆன், ஹதீஃத் கூறும் நடைமுறையா? சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்க அன்புடன் வேண்டுகிறோம்!

ஆயினும் இந்த மவ்லவிகள் தங்களின் ஜுமுஆ உரைகளில் “”முஸ்லிம்கள் பள்ளியிலும், வெளியிலும் எப்பொழுதும் தொப்பி, தொப்பித் தலைப்பாகை அணிந்து காட்சி தாருங்கள். நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளபடி பள்ளியிலும், வெளியிலும் கரண்டைக் காலுக்கு மேல் ஆடை அணிந்து நடமாடுங்கள் என்று வலியுறுத்திச் சொல்லுங்கள். இது வரவேற்கத் தக்கதே. ஆனால் அதற்கு மாறாக, தொழுகை வரிசையில் நிற்கும் போது தலையை மறைத்துக் கொள்ளுங்கள், கரண்டைக் காலுக்கு மேல் ஆடையை அணிந்து கொள்ளுங்கள் என்று கூறுவது, ஏதோ இவை அலைபேசியை அமைதி யாக்குவது போல் தொழுகையில் மட்டும் கடைபிடிக்க வேண்டிய சட்டங்கள் போலும் என்றே மவ்லவிகளை நம்பியுள்ள மக்கள் விளங்கிக் கொள்வார்கள். அதாவது தொழுகையில் மட்டும் இப்படி வேடமிட்டு நடிக்க வேண்டும் என்றே நினைப்பார்கள்.

வெளியில் மவ்லவிகளே தொப்பித் தலைப் பாகையுடன் காட்சியளிக்க வெட்கப்படும்போது, மக்களுக்கு மட்டும் அப்படி அறிவுரை கூற முன்வர முடியுமா? இமாம் தொழ வைக்க ஆரம்பிக்கும்போது தலைப் பாகையைக் கட்டிக்கொண்டு, தொழுகை முடிந்ததோ இல்லையோ, தலைப்பாகையைக் கழற்றி கீழே எறிய வேண்டிய கட்டாயம் என்ன? தொழுகை யாளிகள் பள்ளிக்கு வெளியே செல்லு முன்னர் தொப்பியைக் கழற்றி பாக்கெட்டில் திணிக்கும் மர்மம் என்ன? உண்மையில் தொப்பி, தலைப்பாகை முஸ்லிம்களின் அடையாளம், கண்ணியத்தைத் தருவது என்றால் வெளியில் அவற்றுடன் நடமாட அவர்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்? வேடமிட்டு நடிக்கும் ஒரு நடிகன் அந்த வேடத்துடன் வெளியே வர வெட்கப்படுவான். அப்படியானால் தொழுகையில் ஈடுபடும் இமாமும், மஃமூம்களும் வேடமிட்டு நடிக்கிறார்களா? சிந்தியுங்கள்.

இன்று பள்ளிகளில் ரெடிமேடாக வைக்கப்பட்டி ருக்கும் ஓலைத் தொப்பிகள் போல், மார்க்க அடிப் படையில் நபி(ஸல்) அவர்களது காலத்தில் பள்ளி களில் ரெடிமேடாகத் தொப்பிகள் வைக்கப்பட்டிருந் தனவா? இல்லையே! பள்ளியில் நபி(ஸல்) அவர் களது காலத்தில் இல்லாத மார்க்க அடிப்படையிலான ஒரு நடைமுறை பித்அத், வழிகேடு, நரகில் சேர்க்கும் என்பது மிகவும் பலமான ஒரு ஹதீஃத் என்பதை மறுக்க முடியுமா? அது மட்டுமா? தொழுகையாளிகளுக்கு அது எத்தனைப் பெரிய கெடுதியை ஏற்படுத் துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சிலருடைய தலையில் பேன், பொடுகு, சொரி, சிரங்கு போன்ற வியாதிகள் இருக்க வாய்ப்புண்டு. அப்படிப் பட்டவர்கள் தொழுகையில் பள்ளியில் வைக்கப்பட் டுள்ள ஓலைத் தொப்பியை அணிந்து தொழுதுவிட்டு, தொழுது முடித்த பின் அங்கேயே வைத்துவிட்டுச் சென்று விடுவார்கள். அந்த ஓலைத் தொப்பியில் எளிதாக பேன், பொடுகு, இதர நோய்க் கிருமிகள் புகுந்து கொள்ள நல்ல வாய்ப்பிருக்கிறது.

அடுத்து ஆரோக்கியமான ஒரு தொழுகையாளி அந்தத் தொப்பியை அணிந்து தொழும்போது அவரது தலைக்குள்ளும் அவை புகுந்து வேதனை தரும் நிலை ஏற்படுமா? இல்லையா? அதை வைத்துத் தொழ வருபவர்களும் வருவதை நிறுத்தக் காரணம் ஏற்படுமா? இல்லையா? சிந்திக்க வேண்டுகிறோம். தொழும் மக்களையும் தொழாதவர்களாக்க இந்த அளவு முனைப்புக் காட்டும் இரகசியம் என்ன?

மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கமாக்குவதால் எத்தனைப் பெரிய தீங்குகள் ஏற்படுகின்றன? சிந்திக்க வேண்டுகிறோம்!
எம்மைவிட அரபி மொழி ஞானம் உள்ளவர் களாக பெருமை பேசும் மவ்லவிகள் தயவு செய்து 2:186, 3:31, 7:3,146, 18:102-106, 33:21,36,66-68, 59:7 போன்ற குர்ஆன் வசனங்களைப் படித்துச் சிந்தித்து விளங்க முன்வரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!
அடுத்துத் தொழுகை வரிசையை(ஸஃப்) நேராக்குவதில் சில இமாம்கள் காட்டும் அக்கறையை வரவேற்கிறோம். புஜத்தோடு புஜம், கரண்டைக் காலுடன் கரண்டைக்கால் ஒட்டிய நிலையில் வரிசையில் நிற்கும்படி ஹதீஃத்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முறைப்படி ஸஃப் அமைந்தால் மேலும் மூவரோ, நால்வரோ அவ்வரிசையில் சேர முடியும். ஆனால் ஷைத்தானுக்கு இடம் கொடுக்க வழிவிட்டுப் பிரிந்து பிரிந்து நிற்கும் கோரக் காட்சியையே பள்ளிகள் அனைத்திலும் பார்க்க நேரிடுகிறது.

இந்த வழிகெட்ட நிலை மஸ்ஜிதுல்ஹரம், மஸ்ஜிதுன் நபவி முதல் உலகின் அனைத்துப் பள்ளிகளிலும் காணப்படுகிறது. நபிதோழர்களுக்குப் பின்னர் தாபியீன்களின் காலத்திலேயே இந்த வழிகேட்டை ஷைத்தான் இச்சமுதாயத்தில் புகுத்தி விட்டான் என்பதைக் கீழ்க்காணும் செய்தி உறுதிப் படுத்துகிறது. அது வருமாறு:

அனஸ்(ரழி) அவர்கள் மதீனா வந்தபோது நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்து கொண்ட நடைமுறைக்கு மாற்றமாக எங்களிடம் எதையேனும் காண்கிறீர்களா? என்று கேட்டோம். “”நீங்கள் வரிசைகளை ஒழுங்குப்படுத்திக் கொள்வதில்லை என்பதைத் தவிர வேறு எந்தத் தவறையும் உங்களிடம் நான் காணவில்லை” என்று அனஸ்(ரழி) கூறினார்கள்.
(புகாரீ (ரஅ)724)

மேலும் அதிக விளக்கங்கள் பெற அந்நஜாத் ஜூன் 2013 பக்கம் 19-ல் இடம் பெற்ற “”ஜமாஅத் தொழுகையில் வரிசையின் (ஸஃப்) முக்கியத்துவம்” என்ற ஆக்கத்தைப் பார்வையிடவும். மேலும் புகாரீ (ர.அ.) 719 முதல் 729 வரை படித்துப் பார்த்து தொழுகை வரிசையை ஒழுங்குபடுத்த முன்வரும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

தொப்பி, தலைப்பாகை மார்க்கத்தில் சுன்னத்து மில்லை; பித்அத்தும் இல்லை. ஆதத்-பழக்கத்தில் உள்ளது. வேண்டுமானால் முஸ்லிம்கள் அனைவரும் பள்ளியிலும் வெளியிலும் தொப்பித் தலைப்பாகை யுடன் காட்சி தர உபதேசம் செய்யுங்கள். பள்ளியில் அதிலும் தொழுகையில் மட்டும் தொப்பி அணிய இமாம்கள் வற்புறுத்தாதீர்கள். அப்படி நீங்கள் வற் புறுத்துவது கடுமையான பித்அத் மட்டுமல்ல, தொழு கையாளிகளைத் தொப்பி அணிந்து நடிக்க வைத்து அவர்களின் தொழுகையைப் பாழாக்கும் குற்றத்திற்கும், ஆளாகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங் கள்; உங்கள் நலனுக்காக எச்சரிக்கிறோம்.

சுன்னத் ஜமாஅத்தினராகிய நீங்கள் தொழுகை யில் தொப்பி அணிவதை வற்புறுத்துகிறீர்கள். அதன் மூலம் உங்கள் வழிகெட்ட மத்ஹபுகளை நிலைநாட்ட முற்படுகிறீர்கள். அதற்கு மாறாக மக்கள் முன் தொப்பியுடன் மேடையில் காட்சி அளிக்கும் புதிய வழி கெட்ட ததஜ மத்ஹப் இமாம், தொழுகையில் தொப்பி அணிவது பித்அத், தொப்பி அணிந்து தொழாதீர்கள் எனத் தனது பக்தர்களுக்குக் கொம்பு சீவி விடுகிறார். மேடைகளில் அப்பாவி முஸ்லிம்களைத் தனது தொப்பி மூலமும் சூன்யப் பேச்சு மூலமும் தன்பக்கம் கவர்ந்திழுக்கப் பார்க்கிறார்.

அதற்கு மாறாக பள்ளிகளில் அவரது கண்மூடி பக்தர்களைத் தொப்பியில்லாமல் தொழ வைத்து அங்கு தேவையில்லாமல் குழப்பத்தையும் கலகத் தையும் உண்டாக்கி சமுதாயத்தைப் பிளவுபடுத்த முற்படுகிறார். உலகியல் ஆதாயங்களைக் குறிக் கோளாகக் கொண்ட அவர் அப்படிப் பூர்வீகப் பள்ளிகளில் பெரும் குழப்பத்தையும், கலகத்தையும் உண்டாக்கி, கொலையை விடக் கொடிய செயலான (பார்க்க : 2:191) மிகக் கொடிய செயலை செய்ய வைத்து, பூர்வீகப் பள்ளிகளை மஸ்ஜிதுல்ழிரார் என இழிவுபடுத்தி, தனிப்போட்டிப் பள்ளிகள் கட்டி அவையே இறைவனை வணங்க மிகத் தூய பள்ளி கள் என பொய்யுரைத்து உலகியல் ஆதாயங்களை அடைந்து வருகிறார்.

அதைக் கொண்டும் திருப்பியுறாமல், சுன்னத் ஜமாஅத்தினர் அனைவரையும் காஃபிர், முஷ்ரிக் என வழிகெட்ட ததஜ இமாம் ஃபத்வா கொடுத்து அப்படிப்பட்ட இமாம்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்றும் ஃபத்வா கொடுப்பவர், குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் முரண்பட்ட அவரது ஆர்ப் பாட்டம், போராட்டம், பந்த், சாலை மறியல் இவற்றிற் குக் கூட்டத்தைச் சேர்க்க இவராலேயே குஃப்ர், ´ர்க் ஃபத்வா கொடுக்கப்பட்ட ஆண்களையும், பெண் களையும் மீண்டும் முஸ்லிம்கள் என ஃபத்வா கொடுக்கும் இரட்டை வேடமிடும், நயவஞ்சகரான அவரின் தீச் செயலுக்கு சு.ஜ. மவ்லவிகளான நீங்களும் துணை போகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

தொழுகையில் புஜத்திற்குப் புஜம், கரண்டைக் காலுக்கு கரண்டைக்கால் நெருக்கமாக நிற்காமல் ஸஃப்பில் ஷைத்தானுக்கு இடம் கொடுத்து முஸ்லிம் களின் தொழுகையைப் பாழாக்க வழி கொடுக்காமல் நெருக்கமாக நிற்பதை வற்புறுத்துங்கள். சுன்னத்தும் அல்லாத, பித்அத்தும் அல்லாத, பழக்கத்திலுள்ள தொப்பி தலைப்பாகைக்கு முக்கியத்தும் கொடுத்து தொப்பி அணிவதைக் கட்டாயப்படுத்தி தொழுகை யில் முஸ்லிம்களை வேடமிட்டு நடிக்க வைத்து அதன் மூலம் பெரும் பாவத்தைச் சுமக்க முற்படாதீர்கள். கடமையான அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே நாடி தொழுவதை, தொழ வைப்பதைக் கூலிக்கு-சம்பளத்திற்குச் செய்து பாவத்தைச் சுமப் பதோடு, தொப்பி அணிவதை வற்புறுத்தி மேலும் பாவத்தைச் சுமக்க முற்படாதீர்கள். அவரவர்கள் தங்கள், தங்கள் கட்டைக்குத் தேடிக் கொள்கிறார்கள், அதில் நாம் தலையிடக் கூடாது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். அல்லாஹ் போதுமானவன்.

Previous post:

Next post: