அல்லாஹ்வின் கயிறான குர்ஆனை ஜமாஅத்தாகப் பற்றிப் பிடியுங்கள். பிரிந்து விடாதீர்கள்…(3:103)
நபியின் வருகைக்கு முன்னர் குறைஷ்கள் எப்படி நரக விளிம்பில் இருந்தார்களோ அதேபோல் இன்று முஸ்லிம்கள் நரக விளிம்பில்தான் இருக்கிறார்கள். (பார்க்க: 49:14, 12:106, 9:31)
பெயரளவில் இருக்கும் இந்திய முஸ்லிம்களுக்கு 10:103, 22:38, 30:47 இறைவாக்குகள் அளிக்கும் உத்திரவாதப்படி அல்லாஹ்வின் காப்பாற்றுதலோ, பாதுகாப்போ, உதவியோ நிச்சயமாகக் கிடைப்பதாக இல்லை. காரணம் நாம் முஸ்லிம்களாக இருக்கிறோமே அல்லாமல் முஃமின்களாக இல்லை. 800 ஆண்டுகள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்கள், அங்கு ஒருவர் கூட இல்லாமல் துடைத்தெறியப்பட்டது போல், 800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முஸ்லிம்கள் இங்கும் ஒருவர் கூட இல்லாமல் துடைத்தெறியப்படுவோமோ என்ற அச்சமே மிகைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் அதிகாரங்கள் அனைத்தும் காவி வெறி கொண்டவர்களிடமே இருப்பதால் முஸ்லிம்கள் பல வகையிலும் வதை படுகிறார்கள்.
பொதுத் தேர்தல் முடிவுற்றது; ஊடகங்களின் பரப்புரைகள், கருத்துக் கணிப்புகள் அனைத்தும் காவியினருக்கே ஆதரவாக இருக்கின்றன. அவர்கள் வெற்றி பெற்று நரபலி மோடி பிரதமரானால் 2002-ல் குஜராத்தில் இடம் பெற்ற துயரச் சம்பவம் இந்தியா முழுவதும் பரவ பெரிதும் வாய்ப்பிருக்கிறது. சங்பரிவாரங்கள் இப்போதே முஸ்லிம் விரோதப் போக்கைப் பகிரங்கமாகத் தங்கள் பேச்சுகளின் மூலம் பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். முஸ்லிம்கள் பெரும் கேடுகளை எதிர்கொள்ள வேண்டி வரும். அப்படியே காவி வெறியினர் ஆட்சியில் அமர வாய்ப்பிழந்து வேறு யார் ஆட்சியில் அமர்ந்தாலும், அது பொம்மை ஆட்சியாகத்தான் அமையும். ஆட்சி அதிகார மெல்லாம் இப்போது முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் காவி மனம் கொண்டவர்களிடமே இருந்து வரும். எனவே அப்போதும் முஸ்லிம்களுக்கு விமோசனம் ஏற்படப் போவதில்லை. அன்றாடம் செத்து, செத்துப் பிழைக்கும் பரிதாப நிலைக்கே முஸ்லிம்கள் தள்ளப்படுவார்கள். காரணம் முஸ்லிம்கள் தங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வை நம்பவில்லை. தங்களை வழிகெடுத்து நரகில் தள்ள முற்படும் மவ்லவிகளான ஆலிம்களையும், பல்வேறு இயக்கங்களின் தலைவர்களையும், அரசியல் தலைவர்களையுமே முற்றிலும் நம்பி, அவர்கள் பின் னால் கண்மூடிச் செல்பவர்களாகவே இருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் மறுமையை விட இம்மையை அதிகமாகவே நேசிக்கிறார்கள். அதனால் அதன் பின்னால் ஓடுகிறார்கள். அதுவோ இவர்களுக்குக் கிடைக்காமல் வெருண்டோடுகிறது. அன்று நபி தோழர்கள் மறுமையை உறுதியாக நம்பி அதை நோக்கி ஓடினார்கள். இவ்வுலகோ அவர்களை நோக்கி ஓடியது. இன்றுள்ள முஸ்லிம்கள் தலை கீழ்ப்பாடமாகச் செயல் படுகிறார்கள். விமோசனம் உண்டா?
முஸ்லிம்கள் இம்மையிலும், மறுமையிலும் பூரண வெற்றி பெற விரும்பினால், மனிதர்களை நம்புவதை விட்டு 2:186 இறைக் கட்டளைப்படி அல்லாஹ்வையே முற்றிலும் முழுவதுமாக நம்ப வேண்டும். அவனது 3:102, 103 கட்டளைகள்படி முஸ்லிம்களாக மட்டுமே வாழ்ந்து மரணிக்க முன்வர வேண்டும். ஜமாஅத்தாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஒன்றுபட்ட நிலையில் வாழ முன்வர வேண்டும். மத்ஹபு, தரீக்கா, இயக்கம், அமைப்பு, கழகம் என ஒருபோதும் பிரியக் கூடாது. 22:78, 41:33 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து தங்களை முஸ்லிம்கள் என்றும், எப்படிப் பட்ட உயர்பணி செய்தாலும் தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று மட்டுமே சொல்ல வேண்டும்.
2:208 இறைக் கட்டளைப்படி இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடவேண்டும். அப்படி முழுமையாக நுழையாமல் செயல்படுவது நமக்குப் பகிரங்கமான பகைவனான ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின் பற்றுவதாகும். ஒன்றுபட்ட நிலையில் ஒரே ஜமாஅத்தாக 22:78-ல் அல்லாஹ் பெயரிட்டு, நபி(ஸல்) அவர்கள் 41:33 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து நடைமுறைப் படுத்திக் காட்டிய “”ஜமாஅத்துல் முஸ்லிமீனில்” மட்டுமே முஸ்லிம்கள் அனைவரும் போய் இணைந்து தகுதியான ஒருவரைத் தங்களுக்கு அமீராக தேர்வு செய்ய வேண்டும். “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” அபூ அப்தில்லாஹ்வின் கற்பனையிலோ, வேறு எவரது கற்பனையிலோ தோன்றிய பெயரல்ல. அல்லாஹ்வின் ஜமாஅத்-ஹிஸ்புல்லாஹ் (பார்க்க 5:56)
இது 33:21 இறைக்கட்டளைப்படி அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்பி அல்லாஹ்வை அதிகமாகத் துதிப்பவர்களுக்கு மட்டுமே கைகூடும். தாஃகூத்களான மனித ஷைத்தான்களின் (மவ்லவிகள்) பின்னால் செல்பவர்கள் 47:24 சொல்வது போல் தங்கள் உள்ளத்திற்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு 17:41 இறை வாக்குச் சொல்வது போல் மேற்கண்ட தெளிவான குர்ஆன் வசனங்கள் மீது வெறுப்பையே கக்குவார்கள். இந்த ஷைத்தானிய நிலையிலிருந்து கணிசமான முஸ்லிம்கள் விடுபட்டு, 3:103 இறைக் கட்டளைப்படி ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபடாதவரை முஸ்லிம்களுக்கு இந்தியாவில் மட்டு மல்ல இவ்வுலகிலும் சுபிட்சமான, அமைதியான எதிர் காலமில்லை, மறுமையிலும் மிகக் கொடிய நரகமே என்று உறுதியாகச் சொல்லலாம். அல்லாஹ் நேர் வழிக்கு அருள் புரிவானாக!