விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 2015 ஜனவரி,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : முஸ்லிம்களிடையே நிறைந்து காணப்படும் ஷிர்க், குஃப்ர், பித்அத்களைக் கடுமையாகச் சாடுகிறார். வரதட்சணைக் கல்யாணம், பெண் வீட்டுச் சாப்பாடு, திருமணச் சடங்குகள் இவை அனைத்தும் மாற்று மதக் கலாச்சாரங்கள், மஹர் கொடுத்து மணம் முடிப்பதும், மாப்பிள்ளை வலீமா விருந்து கொடுப்பதும் தான் நபிவழி என்று பகிரங்கமாகக் கூறி வருகிறார். அவரது இந்தக் கொள்கைக்கே மாறாக அப்படி நடக்கும் அனாச்சாரத் திருமணங்களில் கலந்து கொள்கிறார். பெண் வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடுகிறார். இது என்ன கொள்கை?

விளக்கம் : ஓர் அடிப்படை உண்மையை ஒவ்வொரு ஆணும், பெண்ணும் விளங்கிச் செயல்பட்டால், முஸ்லிம் சமுதாயம் மீண்டும் அதன் உன்னத நிலையை அடைந்துவிடும். அந்த உண்மை இது தான்! இஸ்லாமிய மார்க்கத்தில் இவை எல்லாம் ஹலால்; இவை எல்லாம் ஹராம் என்றுத் திட்ட மாக, தெளிவாக அல்குர்ஆனிலும், இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது(ஸல்) அவர்களாலும் விளக்கப்பட்டு விட்டன. அல்குர்ஆன் முழுமைப்படுத்தப்பட்டு (பார்க்க : 5:3, 3:19,85) நபி(ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின்னர், மார்க்கத்தில் ஒன்றை ஹலால் என்றும், பிரிதொன்றை ஹராம் என்று சட்டம் கூற உலகில் யாருக்கும் அனுமதி திட்டமாக இல்லை. அப்படித் தங்கள் மனோ இச்சைப்படி ஒன்றை ஹலால் என்றும் பிரிதொன்றை ஹராம் என்றும் சுயமாகச் சட்டம் சொல்லுகிறவர்கள் தங்களுடைய மனோ இச்சையை ரப்பாக்கிக் கொண்ட வழிகேடர்களாக மட்டுமே இருக்க முடியும் (பார்க்க : 7:176, 18:28, 20:16, 25:43, 28:50, 45:23) மேலும் 5:87, 10:59, 16:116 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் வரம்பு மீறும் செயல், அல்லாஹ்வின் மீதே கற்பனை செய்யும் செயல், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டும் செயல், அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக்கும் செயல், அப் படிப்பட்டவர்கள் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை என்பதை இந்த வசனங்களை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயம் அறிய முடியும்.
இதை நபி(ஸல்) அவர்களும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் அது வருமாறு :

“”நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது; அழிந்து நாசமாகிறவனைத் தவிர வேறு யாரும் இதில் வழிகெட்டுச் செல்ல மாட்டான்” என்று எச்சரித்துள்ளார்கள். நூல் : முஅத்தா
இன்னும் இவைபோல் பல குர்ஆன் வசனங்களும் ஆதாரபூர்வமான ஹதீஃத்களும், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு மார்க்கத்தில் அணுவல்ல அணுவின் முனையளவும் கூட்டவோ, குறைக்கவோ முடியாது என்று அறுதியிட்டு உறுதி கூறும் நிலையில், இம்மவ்லவிகள், தங்கள் மனோ இச்சையை ரப்பாக ஆக்கி, ஹராமை ஹலாலாகவும், ஹலாலை ஹராமாகவும் ஆக்கித் தங்களது வயிறை ஹராமில் நிரப்புகிறார்கள். அவர்களைப் போல் நாமும் நமது மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராம் என்றும், ஹராமாக்கியதை ஹலால் என்றும் வரம்பு மீறிச் சட்டம் சொல்லவோ, அதன்படி நடக்கவோ ஒருபோதும் முற்பட மாட்டோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

எவையெல்லாம் ´ஷிர்க், குஃப்ர், பித்அத் என்று குர்ஆனும், ஹதீஃதும் கூறுகின்றனவோ அந்த வசனங்களை, ஹதீஃத்களை மக்கள் முன் சமர்ப்பிக்கிறோம். மக்கள், சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்கள், ஹதீஃத்களை நேரடியாகப் படித்து முடிவு செய்து கொள்ள வேண்டுகிறோம். அந்த அடிப்படையில் மார்க்க வழிகாட்டலுக்கு முரணாகத் திருமணங்களில் நடைபெறும் சடங்குகள் அனைத்தும் மாற்று மதக்கலாச்சாரம், வழிகேடுகள் என நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை எடுத்துக் காட்டியே அறிவுரை கூறுகிறோம்.

அதற்கு மாறாக அப்படிப்பட்ட அநாச்சாரங்கள் நடக்கும் திருமணங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்களா? அல்லது அன்று இப்படிப்பட்ட அநாச்சாரங்கள் இடம்பெறும் தமது பந்துக்களின், அறிமுகமானவர்களின் திருமண நிகழ்வுகளில் நபி(ஸல்) அவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்கள் என்று அறிவிப்பு இருக்கிறதா? இல்லையே!

“ஒரு தவறு நடக்கக் கண்டால் சக்தி இருந்தால் அதைக் கைகளால் தடுக்கவும். அதற்குச் சக்தி இல்லை என்றால் நாவினால் தடுக்கவும், அதற்கும் சக்தி இல்லை என்றால் அதை உள்ளத்தால் வெறுங்கள்! இதுதான் ஈமானின் இறுதி நிலை?” என்பதுதான் ஹதீஃத். இவர்களோ வெறுத்து ஒதுங்குங்கள் என்று திரித்து வளைத்துக் கூறி (பார்க்க : 2:159) மக்களைத் தவறான வழியில் இட்டுச் செல்கிறார்கள். இந்த ஹதீஃதில் வெறுங்கள் என்றிருக்கிறதே அல்லாமல் ஒதுங்குங்கள் என்ற பதம் எங்கே இருக்கிறது என்று கடந்த 25 ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்; அவர்களால் காட்ட முடிகிறதா?

“எடுத்துச் சொல்வது மட்டும்தான் உமது கடமை. அவர்களைத் திருத்தி நேர்வழிக்குக் கொண்டு வரும் அதிகாரம் உமக்கு இல்லை” என்று அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் நேரடியாகக் கடுமையாக எச்சரித்திருந்தும், அதைக் கண்டு கொள்ளாமல், அப்படிப் புறக்கணித்தால்தான் தவறு செய்யும் அவர்கள் திருந்தி நேர்வழிக்கு வருவார்கள் என்று இம்மவ்லவிகள் பகல் கனவு காண்கின்றனர். அல்லாஹ்வின் தூதருக்கே இல்லாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள தனி அதிகாரம் தங்களுக்கும் இருப்பதாகப் பெருமையடிக்கிறார்கள். அப்படிப் பெருமையடிப்பவர்களே அல்லாஹ்வோ, அவனது கண் காணிப்பில் (52:48) இருந்த இறுதி தூதரோ அவனது வழிகாட்டல்படி விதிக்காததை சட்டமாக்காததை எல்லாம் விதித்துச் சட்டமாக்கி அவர்களும் வழி கெட்டுப் பெருங்கொண்ட மக்களையும் வழி கெடுக்கிறார்கள். (பார்க்க : 2:186, 3:128, 6:153, 33:36, 6:66,107, 10:108, 11:12, 39:41, 42:6)

மார்க்கத்தில் இல்லாத மார்க்க முரணான சுன்னத் கல்யாணம், பூப்பு நீராட்டு விழா, காதணி விழா, திருமண நிச்சயதார்த்தம் போன்ற சடங்குகளுக்கு அழைக்கப்பட்டு அவற்றைப் புறக்கணித்தால் அதில் நியாயமிருக்கிறது. ஆனால் “”திருமணம் எனது சுன்னத்து, அதைப் புறக்கணிப்பவன் என்னைச் சார்ந்தவன் அல்ல” என்று நபி(ஸல்) அவர்களால் வலியுறுத்திச் சொல்லப்பட்ட திருமண நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு அதைப் புறக்கணிப்பவர்கள் நபிவழி நடப்பவர்களா? அவர்கள் நம் வீடு தேடி வந்து திருமணத்தில் கலந்து துஆ செய்ய அழைக்கிறார்களா? அவர்கள் செய்யும் அனாச்சார சடங்குகளில் கலந்து கொள்ள அழைக்கிறார்களா? அங்கு போவதால் அவர்கள் செய்யும் அனாச்சாரச் சடங்குகளுக்கு நாமும் துணை போவதாக ஆகுமா? ஒருவருடைய சுமையைப் பிரிதொருவர் சுமக்க மாட்டார் என்று பல வசனங்கள் கூறுவதின் பொருள் என்ன?

அவர்கள் செய்யும் அத்தவறுகளைச் சுட்டிக் காட்டி எச்சரிக்காமல் இருந்தால், மெளன சாமியாராக இருந்து கொண்டு அத்திருமணங்களில் கலந்தால் நாமும் குற்றவாளியாக ஆகிறோம்.

இந்த மவ்லவிகளின் குருட்டு வாதம் என்னவென்றால், அவர்கள் செய்யும் தவறுகளைப் பட்டவர்த்த னமாகச் சுட்டிக் காட்டிவிட்டுப் பின்னர் எப்படி அப்படிப்பட்டத் திருமண நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்கிறார் என்பதுதான். இவர்களின் வீண் வரட்டுக் கெளரவம், பெருமை, தவறுகளை எச்சரித்துவிட்டுப் பின்னர் அத்திருமணத்தில் எப்படிக் கலந்து கொள்வது என்ற நச்சுக் கருத்தை வெளிப்படுத்துகிறது. அப்படிப்பட்ட திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர், அத் தவறுகளைச் சுட்டிக் காட்டி எச்சரிக்காமல் மெளன சாமியாராக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நிலை! “”நபியே எடுத்துக் கூறி எச்சரிப்பது மட்டுமே உமது வேலை; அவர்களின் நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது கொண்டு அவர்களை நேர் வழிக்கு உம்மால் கொண்டு வரமுடியும் என்று எண்ணாதீர், அது உமது வேலை இல்லை என்று மேலே எடுத்து எழுதி இருக்கும் பல குர்ஆன் வசனங்களை இம்மவ்லவிகள் நம்பி ஏற்கமாட்டார்கள். 7:146 குர்ஆன் வசனம் கூறுவது போல் அவர்களின் மவ்லவி-ஆலிம் என்ற ஆணவம்-பெருமை காரணமாக அல்லாஹ்வே அவர்களை குர்ஆன் வசனங்களை விட்டும் திருப்பிவிடுகிறான். அவர்கள் நேர் வழியை ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். நரகில் கொண்டு சேர்க்கும் கோணல் வழிகளையே நேர் வழியாகக் காட்டிப் பெருங்கொண்ட மக்களை நாளை நரகில் தள்ளி அற்ப உலக ஆதாயம் அடையவே துடியாகத் துடிப்பார்கள்.

இன்னும் பெண் வீட்டுச் சாப்பாடு ஹராம். அதைச் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் விதிக்காத சட்டத்தை இவர்களாக விதித்து (பார்க்க : 42:21, 49:16) அண்ணன் தம்பி, தங்கைகளுக்கிடையே, அக்காள், தம்பி, தங்கைகளுக்கிடையே நெருங்கிய இரத்த உறவு பந்துக்களிடையே விரோத குரோதத்தை வளர்த்து இரத்த உறவுகளைத் துண்டிக்கும் கொடிய காரியத்தைச் செய்து வருகிறார்கள். பெண்ணுக்கு மஹர் கொடுத்து மண முடிப்பதும், திருமணத்தன்று கொடுக்கும் வலிமா விருந்தை மாப்பிள்ளை கொடுப்பதே சுன்னத்- நபிவழி.

அதற்கு மாறாக மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டாரும் வரதட்சணை அதாவது கைக்கூலி, சீர் செனத்தி, திருமணச் சாப்பாடு என்று பெண் வீட்டாரிடம் யாசகம்-பிச்சை கேட்பது கொடிய ஹராம், கொடிய குற்றம் என்று மார்க்கம் கூறுகிறதே அல்லாமல், அப்படிக் கையேந்திப் பிச்சை கேட்கும், பிச்சைக்காரர்களுக்கு, மார்க்கம் கொடுக்கச் சொல்கிறதா? கொடுக்காமல் மறுக்கச் சொல்கிறதா? 93:9,10 குர்ஆன் வசனங்கள் என்ன கூறுகின்றன. “”நீர் அநாதைகளைக் கடிந்து கொள்ளாதீர், யாசிப்பவர்களை (பிச்சை கேட்பவர்களை) விரட்டாதீர்” என்று கூறும் குர்ஆன் வசனங்களை, இவர்கள் நிராகரிக்கிறார்களா? யாசிப்பது-பிச்சை கேட்பது தான் குற்றம்; யாசிப்பவர்களுக்கு-பிச்சை கேட்பவர்களுக்குக் கொடுப்பது குற்றமில்லை என்பதை அறிய முடியாத இம்மவ்லவிகள் ஆலிம்களாக -மார்க்கம் அறிந்தவர்களாக இருக்க முடியுமா?
மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டாரும் யாசிப்பதால் பெண் வீட்டார் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி திருமண விருந்தைத் தருகின்றனர். இது எந்த அடிப்படையில் ஹராமாகும். சாப்பிடக் கூடாது என்ற ஹராமான சட்டத்தைச் சொல்ல முடியும்? மவ்லவிகளுக்கு இந்த அதிகாரம் இருக்கிறதா? (பார்க்க : 42:21, 49:16)

இவர்கள் 6:153 குர்ஆன் வசனம் கூறும் ஒரே நேர்வழி நடப்பவர்களாக இருந்தால், பிச்சை- யாசகம் கேட்காத மாப்பிள்ளைகளை உருவாக்க வேண்டும். ஏழைகளின் வீட்டுக் குமார்கள் 30,35 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்கும் பரிதாப நிலை சமுதாயத்தில் இருக்கவே கூடாது. அந்த நல்ல நிலையை உருவாக்க வக்கற்றவர்கள், நயவஞ்சகர்கள், கைக் கூலி-வரதட்சணைக் கொடுப்பது, சீர் செனத்திக் கொடுப்பது, திருமண விருந்து கொடுப்பது ஹராம் என்று எந்த முகத்தோடு சட்டம் சொல்கிறார்கள். இவர்களின் இந்தக் குருட்டுச் சட்டம் காரணமாக, இதுவரை எழைக் குமர்கள் கரையேற தாராள உதவி செய்து கொண்டிருந்த பெரும் செல்வந்தர்கள் இப்போது இதுதான் சாக்கு என்று பெண் வீட்டாருக்குத் திருமணத்திற்கு உதவுவது ஹராம் என்று கூறி மறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதன் விளைவு மேலும் அதிகமாகப் பெண் குமர்கள் கரையேறாமல் தவிக்கிறார்கள். தங்களின் உடல் இச்சையைக் கட்டுப்படுத்த முடியாமல், மாற்றாருடன் ஓடும் அவலக் காட்சிகளைத் தினசரி கண்டு வருகிறோம். இது தான் இந்த மவ்லவிகள் சாதித்து வரும் சாதனை. இவர்கள் பிதற்றுவது போல் முஸ்லிம் அல்லாதவர்களை முஸ்லிம்களாக ஆக்குவதை விட, முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாதவர்களுடன் ஓடும் காட்சிகளையே அதிகமாகப் பார்த்து வருகிறோம்.

அது மட்டுமா? கைக்கூலி கூடாது, சீர் செனத்தி கூடாது, பெண் வீட்டுச் சாப்பாடு கூடாது-ஹராம் என்று வாய் வீச்சில் மன்னர்களாகத் திகழும் இவர்களில் எத்தனை பேர் அவர்களின் இந்த வாக்கின் படி நடக்கிறார்கள்? 61:2,3 இறைவாக்குகள் கூறுவது போல் தங்களை மறந்து ஊருக்கு உபதேசம் செய்கிறவர்களாகவே அவர்களில் பலர் இருக்கின்றனர். அவர்கள் மறைமுகமாகப் பேரம் பேசி பெண் வீட்டாரிடம் வாங்கத்தான் செய்கிறார்கள். இந்தப் பேரம் காரணமாக திருமணத்திற்கு பின் சச்சரவு ஏற்பட்டு விவாக விடுதலை அரங்கேறும் பல நிகழ்வுகளை நாம் அறிவோம். அப்படிப்பட்ட பஞ்சாயத்துகள் நம்மிடம் வரத்தான் செய்கின்றன. இவர்கள் சமுதாயத்தையும், இரத்த உறவுகளையும் துண்டித்து, பிரித்தாளும் சூழ்ச்சி செய்து, இவ்வுலகின் அற்ப உலக ஆதாயங்களை ஹராமான வழியில் சுருட்ட முற்படுகிறார்களே அல்லாமல், குர் ஆன், ஹதீஃத் சட்டத்தை அல்லாஹ்வுக்கு அஞ்சி சொல்லவில்லை என்பதை அறியத் தருகிறோம்.

பெண் வீட்டார் நம் வீடு தேடி வந்து திருமண விருந்துக்கு அழைக்கின்றனர். இது நமக்கு உண்மையான அன்பளிப்பு. திருமண விருந்துக்கு அழையாத முறையில் அங்கு தேடிச் சென்று சாப்பிடுவது ஹராம் என்பது நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கை. காரணம் அது அங்கு போய் பிச்சைக் கேட்டுச் சாப்பிடுவது போலாகும். அதற்கு மாறாக ஓர் உணவு எந்த முறையில் வந்தாலும் அது நமக்கு அன்பளிப்பாக வந்தால் அது நமக்கு ஹலால் தான். பரீரா(ரழி) அவர்களுக்கு ஜகாத்தாக வந்த உணவை, தங்களுக்கு அன்பளிப்பாக வந்ததாகக் கூறி நபி(ஸல்) அவர்கள் அதைச் சாப்பிட்டது இதற்குப் போதிய ஆதாரமாக இருக்கிறது. மேலும் அநியாயங்கள், அட்டூழியங்களிலும், ஹராமான வழியில் பொருளீட்டுவதில் முங்கிக் குளித்த அக்கால மன்னர்களின் அன்பளிப்புளை நபி(ஸல்) அவர்கள் மறுக்காமல் ஏற்றது இதற்கு மேலும் ஆதாரமாகும்.
இந்த அடிப்படையில் பெண் வீட்டார் கொடுக்கும் விருந்து அன்பளிப்பைக் கூடாது-ஹராம் என்று கூறி இரத்த உறவுகளைத் துண்டிக்கும் வகையில் சட்டம் சொல்லும் இம்மவ்லவிகளின் வழி கெட்டக் கொள்கையைக் கவனமாகக் கேளுங்கள்! 7:86, 29:29 குர்ஆன் வசனங்கள் மற்றும் சில ஹதீஃத்கள் இவற்றை நிராகரித்து வசூல் வேட்டையைக் குறிக்கோளாகக் கொண்டு ஹராமான வழியில் இவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், சாலை மறியல் போன்றவற்றிற்கு மாற்று மதத்தினர், வட்டி மூசா, சாராயக் கடைக்காரன், முற்றிலும் ஹராமான வழிகளில் சொத்துச் சேர்த்தச் செல்வந்தர்களிடமெல்லாம் போய் வசூல் வேட்டையாடுகின்றனர். இது அவர் களுக்கு ஹலாலாம்!

அதுவும் ஒரு கும்பலாகப் போய், அவர்களை மிரட்டி, பயமுறுத்தி, நிர்பந்தித்து பெருந்தொகை வசூலிக்கின்றனர். சாதாரணமாக ஒரு கும்பலாகப் போய் வசூலித்தாலும் கூட முகத்தாட்சண்யத்திற்காகக் கூட செல்வந்தர்கள் கொடுக்கத்தான் செய்வார்கள். அதே சமயம் ஒரு ரவுடி கும்பல் போய் மிரட்டும் போது பெருந்தொகை கொடுப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா? அப்படிப்பட்ட ரவுடி பட்டாளங்கள் தான் அவர்களிட மிருக்கின்றன என்பதற்குத் தமிழகத்தில் அவர்களின் அராஜகச் செயல்கள் போதுமான ஆதாரமாகும். கலந்துரையாடலை விவாதமாக்கி அதையும் வீண் விதண்டாவாதமாக்கி எதிர் தரப்பினரை வசை மாரிப் பொழியும் நிலையிலேயே அவர்களின் ஊழியர்கள் இருக்கின்றனர். (பார்க்க : 18:56, 22:3,8, 31:20, 40:4,5,35,56,69, 6:121, 13:13, 42:35, 6:25, 8:6)

இந்த லட்சணத்தில் அவர்களின் வசூல் ராஜாவின் இச்செயலை என்ன சொல்லி நியாயப்படுத்துகிறார்கள் தெரியுமா? நபி(ஸல்) அவர்கள் மாற்று மதத்தினர், மன்னர்கள், செல்வந்தர்களிடமிருந்தும் அன்பளிப்புகளைப் பெற்றார்களாம்! அவர்கள் எல்லாம் ஹலாலான முறையில் பொருளை ஈட்டி இருப்பார்களா? இல்லையே! அப்படியானால் அன்பளிப்பாக வருவதில் ஹலால், ஹராம் பார்க்க வேண்டிய தில்லை என்பதுதான் அவர்களின் வாதம்! 1987-ல் எம்மை விட்டு வெளியேறிய பின்னர், “”அபூ அப்துல்லாவை நான் என்றுமே அமீராக ஏற்றுக் கொண்டதில்லை. இதோ இருக்கிறாரே எஸ்.கே. மதனி இவரைத்தான் நான் மார்க்கத்தில் அமீராக ஏற்றிருக்கிறேன்; அரசியலுக்கு கோவை பாஷாவை அமீராக ஏற்றிருக்கிறேன் என்று பிரகடனப்படுத்திய சில காலத்திலேயே அவரைக் கொண்டு இந்த வசூல் வேட்டையை ஆரம்பித்து விட்டார். அந்த வசூல் வேட்டை தான் இன்றளவும் தொடர்கிறது.

இவர்கள் வசூலிப்பது அன்பளிப்பா? பிச்சை-யாசகமா? என்பதை அடுத்து விரிவாகத் தருகிறோம். படித்துப் பாருங்கள்!

மவ்லவி-ஆலிம்-அல்லாமா என்று பெருமை பேசுபவர்களுக்கு அன்பளிப்பிற்கும், யாசகத்திற்குமுள்ள வேறுபாடு தெரியவில்லை என்பதுதான் வேடிக்கையான உண்மை! 7:146 இறைவாக்குக் கூறும் மாபெரும் உண்மையை “”நாங்கள்தான் மவ்லவிகள்-ஆலிம்கள் நீங்கள் எல்லாம் அவாம்கள்- ஆடு மாடுகளைப் போலுள்ளவர்கள்” என்று உண்மையின்றி பெருமை பேசும் மவ்லவிகள் தங்களின் அறிவீனத்தை நிலை நாட்டுகின்றனர்.

நமக்கு உரிமை இல்லாத ஒன்று நாம் எதிர்பாராமல் நினைத்துக்கூட பாராத நிலையில் நம்மைத் தேடி வருவது அன்பளிப்பு. திருமண விருந்து பெண் வீட்டாரிடமிருந்து வந்தாலும் அது நமக்கு அன்பளிப்பாகும். இது முழுக்க முழுக்க ஹலாலாகும். இதை ஹராம் என்று கூறுபவர்கள் மறுமையை மறந்த சுயநலவாதிகள். அவர்கள் தான் தங்களுக்கு உரிமை இல்லாததை மற்றவர்களைக் கும்பலாகத் தேடிச் சென்று அவர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியோ, வற்புறுத்தியோ, மிரட்டியோ பெறுவதை மூடத்தனமாக அன்பளிப்பு என்பார்கள். இது உண்மையில் யாசகமாகும்-பிச்சையாகும். மாப்பிள்ளை பெண் வீட்டாரிடம் கேட்கும் பிச்சையை விடக் கேடுகெட்டப் பிச்சையாகும்.

மாப்பிள்ளையாவது திருமணத்திற்குப் பின்னர் அப்பெண்ணுக்கும், அவள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கும் உணவு, உடை, உறைவிடம் கொடுக்கும் பொறுப்பை ஏற்கிறார். இவர்களோ மக்களை ஏமாற்றி தங்கள் தொப்பைகளை வளர்க்கிறார்களே அல்லாமல் சமுதாயத்திற்கு எவ்விதப் பலனும் இல்லை. பெரும் நட்டங்களையே சந்தித்து வருகிறார்கள் என்பதற்கு கடந்த 20 ஆண்டுகள் அரங்கெறிவரும் சோக முடிவுகள் போதிய ஆதாரமாகும்.

அவர்கள் மக்களிடம் கேட்கும் இந்தக் கேடு கெட்டப் பிச்சையை, நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம் அல்லாத மன்னர்களிடம் பெற்றுக் கொண்ட அன்பளிப்புகளோடு ஒப்பிட்டுப் பேசுவதை விட அறிவீனம் மூடத்தனம் பிரிதொன்று இருக்க முடியுமா? நபி(ஸல்) அவர்கள் கும்பலாக அந்த மன்னர்களைத் தேடிச் சென்று அவர்களிடம் கையேந்தினார்களா? யாசகம் கேட்டார்களா? பிச்சை கேட்டார்களா? (நவூதுபில்லாஹ்) எந்த அளவு நெஞ்சழுத்தமும், துணிச்சலும், இறையச்சமில்லா நிலையும் இருந்தால் இவர்கள் வீடு வீடாகப் படியேறி அவர்களிடம் கையேந்தி-யாசிப்பதை, பிச்சைக் கேட்பதை நபி (ஸல்) அவர்களைத் தேடி வந்து மன்னர்கள் அன்பளிப்பு அளித்ததோடு ஒப்பிட்டு நியாயப்படுத்து வார்கள்? சிந்தியுங்கள்.

ஆம்! நம் வீடு தேடி வந்து திருமண விருந்திற்கு அழைப்புக் கொடுக்கும் பெண் வீட்டு விருந்து ஹராம். சாப்பிடக்கூடாது என்று மூட ஃபத்வா கொடுக்கும் அதே வேளை, இவர்கள் வீடு வீடாகப் போய் படியேறி யாசகம்-பிச்சை கேட்பதை அன்பளிப்பு-ஹலால் என்று பிதற்றும் இவர்களின் முனாஃபிக்கத்தனத்தை-நயவஞ்சகத்தனத்தை உணர முடியாத அவர்களின் தொண்டர்களின் நிலை குறித்து வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். பெண் வீட்டு விருந்தாக இருந்தாலும் அது நமக்கு அன்பளிப்புத்தான், ஹலால்தான். அழைப்பை ஏற்பதே நபிவழியாகும்.

Previous post:

Next post: