அல்குர்ஆனை உள்ளது உள்ளபடி விளங்குகிறவர்கள் ஆலிம்களா? அவாம்களா?

in 2015 ஏப்ரல்

இப்து ஹத்தாது

ஆதம் நபி ஆதம்(அலை) அவர்களிலிருந்தே மார்க்கம் அறிந்த மேதைகள் -அறிஞர்கள்-ஆலிம்கள் என்று பெருமை பேசும் ஐந்து சதவிகிதம் கூட தேறாத ஒரு சின்னஞ்சிறிய கூட்டம் மதகுருமார்கள் என்றப் பெத்தப் பெயரில் இருந்து வருகிறது. இந்தச் சின்னஞ் சிறு கூட்டம் 95 சதவிகித பெருங்கொண்ட மக்களை அவாம்கள் பாமரர்கள் என இழிவுபடுத்தி, அதற்கும் ஒருபடி கீழேபோய் அவர்களை கீழ்ஜாதி, தாழ்த்தப்பட்டவர்கள் என மேலும் இழிவுபடுத்தி அவர்களை தங்களின் அடிமைகள் போல் நடத்தி வருகின்றனர். பெருங்கொண்ட மக்களும் இவர்களின் சூன்யப் பேச்சில் மயங்கி, இவர்களைக் கடவுளின் அவதாரங்களாக, சந்நிதானங்களாக (ஹழரத்), இன்னும் பல வகையான ஆராதனைக்குரியவர்களாக்கி, 9:31 இறைவாக்குக் கூறுவது போல் இம்மத குருமார்களை தங்களின் ரப்பாக-கடவுளாக்கி வழிபட்டு வருகின்றனர். இதை இம்மதகுருமார்கள் தங்களுக்குச் சாதகமாக்கி, ஆதத்தின் மக்களில் 1000க்கு 999 பேரை நரகில் தள்ளி ஷைத்தானின் நேரடி முகவர்களாக (ஏஜண்ட்) செயல்படுகின்றனர். ஷைத்தானின் சபதத்தை நிறைவேற்ற பெரிதும் துணை போகின்றனர். ஷைத்தானின் சபதம் இதுதான்.

“”என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டு விட்டதால் நான் பூமியில் (வழிகேட்டைத் தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகக் காண்பித்து(அவை மூலம்) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்” என்று கூறினான். (15:39)

“அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உன் அடியார்களைத் தவிர” (என்றும் கூறினான்) (15:40)

15:39 இறைவாக்கில் அனைவரையும் என்று ஷைத்தான் கூறியுள்ளது ஒவ்வொரு ஆயிரத்திலும் 999 பேர் என்றும், ஷைத்தானில் மாயவலையில் சிக்காமல் தப்பிப்பவர்கள் ஆயிரத்தில் ஒரேயொரு நபரே, அவர்களே அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்கள் என்றும் புகாரீ 3348, 4741, முஸ்லிம் 379 ஹதீஃத்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஆக இன்று உலகில் காணப்படும் அனைத்து மதங்களின் மதகுருமார்களும் மக்களுக்கு நேர்வழியைக் காட்டுகிறோம் என்று பொய்யாகக் கூறி ஒவ்வொரு ஆயிரத்திலும் 999 பேரை எண்ணற்றக் கோணல் வழிகளில் அழைத்துச் சென்று நரகை நிரப்ப ஷைத்தானுக்குத் துணை போகிறார்கள்.

முறையாக முழுமையாக அல்லாஹ் தனக்கு நிச்சயம் நேர்வழி காட்டுவான் என்று 2:186, 29:69 இறை வாக்குகள் கூறுவதை ஏற்று, குர்ஆனை அவர்களுக் குத் தெரிந்த மொழிகளில் படித்து வருகிறவர்கள். குர்ஆனை சரியாக உள்ளது உள்ளபடி அறிகிறவர் கள் அவாம்களான பாமர மக்களே; ஆலிம்கள் என பெருமை பேசும் மவ்லவிகள் அல்லவே அல்ல என்பதை நிச்சயம் அறிய முடியும். உதாரணமாக ஜுமுஆ : 62:2 இறைவாக்கு என்ன கூறுகிறது என்று பாருங்கள்.

அவன்தான் பாமர மக்களிடம் அவனுடைய வசனங்களைப் படித்துக் காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு நெறிநூலையும், (செயல்முறை) ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ அதற்கு முன்னர் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர். (62:2)

அவர்கள் அவாமான நபியாகிய தூதரைப் பின்பற்றுகிறார்கள்; அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். அவர், அவர்களை நன்மையைக் கொண்டு ஏவுவார். இன்னும் தீமையை விட்டும் அவர்களை விலக்குவார். தூய்மையானவற்றை ஆகுமாக்குவார், கெட்டவற்றைத் தடுத்து விடுவார். இன்னும் அவர்களை விட்டும் அவர்களுடைய சுமைகளையும், அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் இறக்கி விடுவார். எனவே, எவர்கள் அவரை நம்பி அவரைக் கண்ணியப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளியை (குர்ஆன்) பின்பற்றுகிறார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். (7:157)

(நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களே! நிச்சய மாக நான் உங்கள் அனைவருக்கும் இறைவனின் தூதராக இருக்கிறேன். வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது. அவனைத் தவிர (அடிபணிவதற்கு) கடவுள் இல்லை. அவனே உயிர்ப் பிக்கிறான். அவனே மரணிக்கச் செய்கிறான். ஆகவே இறைவன் மீதும் பாமர நபியாகிய அவனு டைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். அவரும் இறைவன் மீதும், அவனது வார்த்தைகளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார். அவரையே பின் பற்றுங்கள் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்! (7:158)

அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாவது :
நபி(ஸல்) அவர்கள் “”அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை என்று கூறி னார்கள். அப்போது நபிதோழர்கள் நீங்களுமா? என்று கேட்டார்கள். ஆம்! மக்காவாசிகள் கொடுத்த சில கீராத்கள் கூலிக்காக நான் ஆடு மேய்த்திருக்கி றேன் என்று நபி(ஸல்) அவர்கல் பதிலளித்தார்கள். (புகாரீ 2262)

இப்போது நடைமுறையில் என்ன பார்க்கிறோம். படிப்பு அறவே ஏறாத மக்குப் பிள்ளைகளைப் பார்த்து ஆடு மேய்க்கப் போடா என்று சர்வசாதாரணமாக மக்கள் கூறுவதைப் பார்க்கிறோம். ஆக மிகமிகச் சாதாரணமானவர்களிடமிருந்தே அதாவது பாமரர்களிலும் பாமரர்களையே அல்லாஹ் நபிமார்களாக, ரசூல்மார்களாகத் தேர்ந்தெடுத்துள்ளான் என்பது உறுதியாகத் தெரிகிறது. அப்படியானால் அக்காலக் கட்டங்களில் ஆலிம்கள் அல்லாமாக்கள் என்ற அறிஞர்கள் இருக்கவில்லையா? நிறைவாகவே இருந்தார்கள். அவர்கள்தான் அந்தந்தக்கால மக்களிடையே “”நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள், ஆலிம்கள், அல்லாமாக்கள் எனப் பெருமை பேசி பெருங்கொண்ட மக்களிடையே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். அந்த மக்களும் அவர்களை மதகுருமார்களாக நம்பி, அவர்களின் கூற்றுக்களை வேதவாக்காக ஏற்றுக் கண்மூடிச் செயல்பட்டனர்.

இப்படிப்பட்ட மெத்தப் படித்த மேதைகள் அச் சமூகங்களில் இருக்க அல்லாஹ் போயும் போயும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அறிவு குறைந்த பாமரர்களை ஏன் நபிமார்களாக ரசூல்மார்களாகத் தேர்ந்தெடுத்தான்? சிந்திக்க வேண்டாமா?

அரசுகள் மக்களுக்குத் தண்டோரா போட்டு முக்கிய செய்திகளை அறிவிக்க யாரைத் தேர்ந்தெடுக்கின்றன. பாமரனிலும் பாமரரையே தேர்ந்தெடுக்கின்றன. காரணம் என்ன?

அந்தப் பாமரர்கள் மட்டுமே அரசுகள் சொல்லும் செய்திகளை உள்ளது உள்ளபடி கூடக் குறைய செய்யாமல் மேலதிக செய்தியை (Extra Fitting) சேர்க்காமல் சொல்வார்கள்.

படித்தவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உலகியல் படிப்புகளைப் படித்திருந்தாலும் மார்க்கத்தின் பேரால் வயிற்றுப் பிழைப்புப் படிப்புப் படித்திருந்தாலும் அவர்களுக்கு ஆணவம், கர்வம், வீண் பெருமை எல்லாம் அவர்களை அறியாமையிலேயே ஏற்பட்டு விடுகிறது. அவர்களின் இந்த வீண் பெருமையே நாளை இவர்களை நரகில் கொண்டு சேர்க்கிறது. இதை நாம் சுயமாகச் சொல்லவில்லை அல்குர்ஆன் 2:34, 4:36, 7:36-40,146,206, 11:10, 16:22,23,49, 17:37, 21:19, 25:63, 28:83, 31:7,18, 32:15, 35:10, 39:49,72, 40:35,47,48,56,60, 45:37, 49:13, 57:23, 59:23, 34:31-33, 74:1-3 மற்றும் புகாரீ 4850, 4918, 6071, 6657, முஸ்லிம் 2620 இந்த குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களையும் நேரடியாக குர்ஆன், ஹதீஃத் நூல் களை எடுத்துச் சிரமம் பாராமல் கடும் முயற்சியாக 29:69 சொல்லும் ஜிஹாதாகப் படித்துப் பார்ப்பவர் கள் பெருமையடிக்கும் இக்கூட்டங்கள் ஒருபோதும் சுவர்க்கம் நுழையாது, அவர்களின் நிரந்தர இருப் பிடம் நரகமே என்பதை உறுதியாக அறிந்து கொள்ள முடியும்.

ஆதம்(அல) அவர்கள் காலத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் காலம் வரை, ஏன்? இன்று வரை வீண் பெருமையடிக்காத எந்த மதகுருவையும் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அனுப்பி வைத்த ஆயிரக்கணக்கான இறைத் தூதர்களில் ஒருவரையாவது இந்த மதகுருமார்கள் என வீண் பெருமை பேசும்கூட்டத்திலிருந்து ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பது விளங்குகிறதா இல்லையா?

இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? இந்த மத குருமார்களிலிருந்து ஒரேயொரு நபர் கூட நபியாகத் தேர்வாகவில்லை என்பது உண்மைதான். அதே சமயம் ஒவ்வொரு நபிக்குப் பிறகும், அந்த அந்தச் சமுதாயங்களில் திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்டு மதகுருமார்கள் என்ற பெத்தப் பெருமை யோடு அந்தந்த சமூகங்களில் பெரும்பான்மையி னரை ஆட்டிப்படைக்கும் தாஃகூத்களாக-மனித ஷைத்தான்களாக, ஷைத்தானின் ஏஜண்டுகளாகச் செயல்பட்டார்கள். செயல்படுகிறார்கள் என்பதே பெருத்த ஆச்சரியமாகும்.

இதோ நேரடி ஆதாரம் :
நபி(ஸல்) அவர்ளுக்கு 6 நூற்றாண்டுகளுக்கு முன் நபியாகத் தெரிவு செய்யப்பட்ட ஈசா(அலை) (ஜீசஸ்) அவர்களின் சமுதாயத்தின் வரலாறு இதற்குப் போதிய ஆதாரமாகும். ஈசா(அலை) அந்த பனீ இஸ்ரவேலர் சமுதாயத்தினரிடையே நபியாக வந்து சத்தியத்தை-நேர்வழியை அதாவது இறைவன் ஒருவனே, இணை, துணை, மனைவி, மகன், தேவை, இடைத்தரகர் இல்லாதவன். அந்த இறைவனுக்கும் அடியார்களுக்கும் இடையில்தரகர்களாக யாருமே இல்லை. வரவும் முடியாது என்று தெளிவாக நேரடியாகப் போதித்தார்.

மூசா(அலை) அவர்களின் போதனைப்படி நடப்பதாகப் பொய்யாகக் கூறிக்கொண்டு உஜைர் (அலை) அவர்களை அல்லாஹ்வின் மகன் (பார்க்க : 9:30) என்று கற்பனை செய்து உருவாக்கிய யூத மதத்தை மக்களிடையே பரப்பிக்கொண்டிருந்த யூத மதகுருமார்கள் ஈசா(அலை) அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்தனர். யூத மதகுருமார்களோடு சேர்ந்து பனீ இஸ்ரவேலர்களும் அவர்களைக் கடு மையாக எதிர்த்தனர். இறுதியில் அன்றைய ஆட்சி யாளர்களிடம் தங்களின் செல்வாக்கைப் பயன் படுத்தி ஈசா(அலை) அவர்களைச் சிலுவையில் அறைந்து பலநாட்கள் பட்டினி கிடந்து, வேத னைப்பட்டு, சித்திரவதைப்பட்டு இறக்க ஏற்பாடு செய்து விட்டனர். திட்டமிடுவோர்களிலெல்லாம் மாபெரும் திட்டமிடுவோன் சர்வ வல்லமை மிக்கோனும், ஞானவானுமான ஏகன் இறைவன் அல்லாஹ் ஈசா (அலை) அவர்களைத் தன்வசம் உயர்த்திக் கொண்டு அவர்களைக் காட்டிக் கொடுக்கச் சென்ற யூதாசையே சிலுவையில் அறைய வைத்தான்.

தவறானவன் சிலுவையில் அறையப்பட்டதால், அன்று மாலையே சிலுவையிலிருந்து விடு விக்கப்பட்டான். அவனே தப்பித்தேன் பிழைத்தேன் என்று காஷ்மீருக்கு ஓடிப்போய் அங்கு வாழ்ந்து மரித்தான். அவனது கல்லரையே காஷ்மீரில் காணப்படுகிறது.

ஈசா(அலை) அவர்களை அல்லாஹ் தன்வசம் உயர்த்திக்கொண்ட பின் (பார்க்க : 4:157,158) என்ன நடந்தது? மதகுருமார்களின் ராஜ்யம் ஆரம்பமாகி விட்டது. ஈசா(அலை) சத்தியபோதனையை பிரசாரம் செய்யும் காலமெல்லாம் நேர்வழியை ஏற்று வந்தவர்கள் விரல்விட்டு எண்ணும் வெறும் பன்னிரண்டு பேர்கள்தான். எஞ்சிய பெருங்கூட்டம் யூத மதகுருமார்கள் உட்பட ஈசா(அலை) அவர்களை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்படி எதிர்த்துச் கொண்டிருந்தவர்களில் ஒருவரான சவுல் யேசு தனக்குக் காட்சித் தந்ததாகப் பொய்யாகக் கூறி முக்கடவுள் கொள்கையை அதாவது இறைவனுக்கு இணைவைக்கும் பெருத்த வழி கேட்டுக் கொள்கையைப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். ஷைத்தானின் துணையுடன் அப்பொய்ப் பிரச்சாரத்திற்கே ஆதரவு பெருகியது. அவர்களை எதிர்த்த ஈசா(அலை) அவர்களை உண்மையிலேயே பின்பற்றிய நேர்வழி நடந்தவர்கள் (பார்க்க : 5:111) காலக்கிரமத்தில் அழித்தொழிக்கப்பட்டார்கள். அவர்களில் முக்கியமானவரான பர்னபாஸ் நேரடி யாகக் கண்ட காட்சிகளை அப்படியே எழுதிய “”பர்னபாஸ் கோஸ்பல்” என்ற உண்மைச் செய்திகள் அடங்கிய நூல், சவுக் என்ற பவுல் கூட்டத்தினரால் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. ஈசா(அலை) அல்லாஹ் வசம் உயர்த்தப்பட்டதிலிருந்து சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் பவுலின் சீடர்களான நால் வரால் கற்பனையாகப் புனையப்பட்ட நான்கு சுவிசேசங்களே பவுல் என்ற மதகுரு கற்பனை செய்த முக்கடவுள் கொள்கையைப் பின்பற்றும் கிறித்தவர் களிடம் வேதங்களாக இருக்கின்றன. இந்த கிறித்தவ மதமே உலகில் அதிகமான மக்களைக் கொண்ட மத மாகச் சீரோடும், சிறப்போடும் கோலோச்சி வருகிறது.

இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களின் வரு கைக்கு சுமார் 6 நூற்றாண்டுகளுக்கு முன்னர் நபி யாக வந்த ஈசா(அலை) அவர்கள் மக்களுக்குப் போதித்த தூய இஸ்லாமிய மார்க்கம், அவர்கள் அல்லாஹ் வசம் உயர்த்தப்பட்ட உடனேயே எப்படி இம்மத குருமார்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை முக்கடவுள் கிறித்தவ மதமாக மாற்றிப் பிழைப்பு நடத்துகிறார்கள் என்பதை ஈசா(அலை) அவர்க ளுக்கு அருளப்பட்ட இன்ஜீல் நெறிநூலுக்குப் பிறகு முஹம்மது(ஸல்) அவர்களுக்கு முழுமைப் படுத்தப் பட்டு பதிந்து பாதுகாக்கப்பட்ட இறுதி நெறிநூல் குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் அறிய முடியும்.

நபி ஈசா(அலை) அவர்கள், தனக்குப் பின்னர் தூதராக வந்த முஹம்மது(ஸல்) அவர்கள் பற்றிச் சொன்ன முன்னறிவிப்பு, ஈசா(அலை) இறைவன் வசம் உயர்த்தப்பட்டச் சம்பவம், காட்டிக் கொடுக் கச் சென்ற யூதாசே சிலுவையில் அறையப்பட்ட சம் பவம் இம்மூன்றும் பர்னபாஸ் கோஸ்பலில் இடம் பெற்றுள்ளன.

ஆக, இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்கள் சத்தியத்தை-நேர்வழியை -இஸ்லாமிய மார்க்கத்தை போதித்தக் காலங்களில் அவர்களைக் கடுமையாக எதிர்ப்பதுடன், பெருங்கொண்ட மக்களை அவர்களுக்கு எதிராகத் திருப்பிய பெரும்பணியைச் செய்தவர்களே இம்மதகுருமார்கள். நபிமார்களில் சிலரைக் கொலையும் செய்துள்ளனர். (பார்க்க :2:91) ஆயினும் அந்நபிமார்களின் மறைவுக்குப் பிறகு, அச்சமுதாயங்களில் திருட்டுத்தனமாகச் சட்ட விரோதமாகப்புகுந்து கொண்டு இறைவன் சொல்லாதவற்றை இறைவன் சொன்னதாக தூதர்கள் சொல்லாதவற்றை தூதர்கள் சொன்னதாக ஜமுக் காளத்தில் வடித்தெடுத்த பொய்களை இம்மதகுரு மார்கள் சொல்லி மக்களை நரகில் தள்ளி அற்ப உலக ஆதாயங்களை அடைந்துவந்தார்கள், வருகிறார்கள்.

இந்தப் படுமோசமான, வழிகேடான நிலை இறுதித் தூதருக்கு முன்னால் வந்த நபிமார்களின் சமுதாயங்களில் திருட்டுத்தனமாகப் புகுந்த மதகுருமார்களின் வழிகெட்ட நிலை மட்டுமல்ல. இறுதித் தூதரின் சமுதாயத்தில் நுழைந்துள்ள முஸ்லிம் மத குருமார்களின் வழிகெட்ட நிலையும் இதுதான்.

முன்னைய சமுதாயங்களில் புகுந்து வழிகெடுத்த மதகுருமார்களை முஸ்லிம் மதகுருமார்களும் ஜானுக்கு ஜான் முழத்துக் முழம் அப்படியே பின் பற்றுகிறார்கள். அவர்கள் ஓர் உடும்பின் பொந்தில் நுழைந்திருந்தால், முஸ்லிம் மதகுருமார்களும் அப்பொந்தில் நுழையும் நிலையிலேயே இருக்கிறார்கள். இது நபி(ஸல்) அவர்களின் முன் அறிவிப்பாகும். (பார்க்க புகாரீ 3456, 7319,7320, முஸ்லிம் 5184)

இறுதித் தூதரின் வாழ்நாளில் வாயளவில் முஸ்லிம் என நடித்துக் கொண்டு, முஸ்லிம் சமுதா யத்தில் பிரிவினையை ஏற்படுத்த இந்நயவஞ்சகர் கள், பெரிதும் முயன்றும், அவை அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டல் மூலம் முறியடித்து வந்தார்கள். (பார்க்க : 9:107) இந்நய வஞ்சகர்களின் முயற்சிகள் பலிக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்களோ இல்லையோ, உலக ஆதாயங்களைக் குறியாகக் கொண்ட இந்நயவஞ்சகர்கள் தங்கள் சதித்திட்டங்களைத் தீட்டி 21:92, 23:52 இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து ஒன்றுபட்ட ஒரே சமுதாயமாக இருந்த முஸ்லிம் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி ஆதாயம் அடையும் முயற்சியில் ஈடுபட முற்பட்டார்கள்.

முதலில் ஆட்சி அதிகார ஆசையை ஊட்டி சமுதாயத்தை ´ஷிஆ -சுன்னத் ஜமாஅத் எனப் பிளவு பட வைத்தார்கள். அதன் விளைவு ´ஷிஆ பிரிவு தங்களுக்குச் சாதகமாகப் பொய்யான செய்திகளை ஹதீஃத்கள் என்ற பெயரால் பரப்ப ஆரம்பித்தார்கள். சுன்னத் ஜமாஅத்தினர் விடுவார்களா? தங்கள் கொள்கைக்குச் சாதகமாக பொய்யான செய்திகளை ஹதீஃத்கள் என்ற பெயரால் போட்டியாகப் பரப்ப ஆரம்பித்தார்கள். கள்ள நோட்டுகளை அச்சடிப்பது போல் இரு சாராரும் போட்டிபோட்டு லட்சக் கணக்கான பொய்ச் செய்திகளை ஹதீஃத்கள் என மக்களிடையே பரப்ப ஆரம்பித்தனர்.

ஈசா(அலை) அவர்களின் சீடர்கள் போதித்த உண்மை நேர்வழிச் செய்திகளை விட,பவுல் என்ற மதகுருவும் அவரது சீடர்களும் போதித்த பொய் வழிகேட்டுச் செய்திகள் மக்களிடையே மிகமிக வேகமாக பரவியது போல், குர்ஆன், ஆதாரபூர்வ மான ஹதீஃத்களைப் பின்னுக்குத் தள்ளி, இந் நயவஞ்சகர்கள் பரப்பிய பொய்ச் செய்திகளே மிகமிக வேகமாக மக்களிடையே பரவ ஆரம்பித் தன. ஹிஜ்ரி 100க்குள்ள இந்த வழிகெட்ட நிலை மக்களிடையே பரவி நிலை கொள்ள ஆரம்பித்து விட்டது.

இந்த உண்மையை ஹிஜ்ரி 62ல் பிறந்து 101ல் மரணித்த ஐந்தாவது சீரிய கலீஃபாவாக மதிக்கப்படும் உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்களின் அறிவுரை உண்மைப்படுத்துகிறது. அது புகாரீ(ர.அ.) பாடம் 34ல் இடம் பெற்றுள்ளது. அது வருமாறு.

நபி(ஸல்) அவர்களுடைய பொன்மொழிகளை (ஹதீஃத்) ஆராய்ந்து அதனை எழுதி வைத்துக் கொள்வீராக! ஏனெனில், மார்க்கக் கல்வி அழிந்து போய் விடுமென்றும், அறிஞர்கள் சென்று விடுவார்கள் என்றும் நான் அஞ்சுகிறேன். நபி(ஸல்) அவர்களுடைய பொன்மொழிகளைத் தவிர வேறு எதையும் ஏற்கக் கூடாது. அறிவைப் பரப்பட்டும். அறியாத வர்களுக்கு அது கற்றுக் கொடுக்கப்படும் வரை அவர் கள் அமர்ந்து கொள்ளட்டும். ஏனெனில், கல்வி மறைக்கப்படாத வரை அது பாதுகாக்கப்படும். அழிந்துவிடாது என உமர் பின் அப்துல் அஜீஸ் (மதீனா ஆளூநர்) அபூபக்ருபின் ஹஸ்முக்கு எழுதினார்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் கல்வியை அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்துவிட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆகிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தமது தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். தாமும் வழிகெட்டு (பிறரையும்) வழிகெடுப் பார்கள். (அப்துல்லாஹ்பின் அம்ர்பின் ஆஸ்(ரழி) புகாரீ 100)

இந்த புகாரீ 100 ஹதீஃதும், பைஹக்கி 1908 ஹதீஃத் கூறும் “”இவ்வானத்தின் கீழ் ஆகக் கேடு கெட்ட படைப்பாக பெருமை பேசும் மார்க்க அறிஞர்கள் இருப்பார்கள் என்ற ஹதீஃதும் இம்மத குருமார்களின் எதார்த்த நிலையை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றன.

கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைப்படு வதும், மது (தாராளமாக) அருந்தப்படுவதும், விபசாரம் பரவலாய் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். அனஸ்(ரழி) புகாரீ (ர.அ.)80,81

நபி(ஸல்) அவர்களின் முன் அறிவிப்பு :
ஒரு காலம் வரும் இஸ்லாத்தின் பெயரைத் தவிர வேறொன்றும் எஞ்சி இருக்காது. குர்ஆன் ஏட்டில் இருக்குமே அல்லாமல் வேறொன்றும் எஞ்சி இருக்காது. அவர்களின் பள்ளிகள் முற்றிலும் நேர்மைத் தவறியவர்களைக் கொண்டே நிரம்பியிருக்கும்; அவர்களின் ஆலிம்கள் என்ற மார்க்க அறிஞர்கள் வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடுகெட்டப் படைப்பாக இருப்பார்கள். தீய செயல்கள் அனைத்தும் அவர்களிலிருந்தே (கோழி குஞ்சுகளைப் பொரிப்பது போல்) பொரிச்சி வெளியாகும். பைஹகி 1908 மிஷ்காத் பாகம் 1 பக்கம் 91

இந்த ஹதீஃத்கள், அஃதர் முத்தாய்ப்பாக, நாங்கள்தான் ஆலிம்கள், மார்க்கம் கற்ற மேதைகள், நாங்கள் குர்ஆனுக்குத் தரும் மேல் விளக்கப்படி தான் அவாம்கள் நடக்க வேண்டும் என்று உண்மையின்றி பெருமை பேசும் மவ்லவிகள், மவ்லவி அல்லாதவர்களை குர்ஆன் விளங்காத அறிவிலிகள் என இழிவாகப் பேசும் இம்மவ்லவிகள்தான் குர்ஆனை விளங்க முடியாத மூடர்கள் என்று குர்ஆன் 7:146 வசனமே நெற்றிப் பொட்டில் அடிப்பதுபோல் கூறுகிறது. படித்துப் பாருங்கள்.

“உண்மையின்றி பூமியில் பெருமையடிப்பவர் களை (மவ்லவிகளை அல்லாஹ்வாகிய) என் வசனங்களை (ஆயத்களை விளங்கிக் கொள்வதை) விட்டும் திருப்பி விடுவேன். அவர்கள் (குர்ஆன் ஆயத்) வசனங்கள் அனைத்தையும் கண்டபோதிலும் அவற்றை நம்பமாட்டார்கள். அவர்கள் நேர்வழி யைக் கண்டால் அதனை (தங்களுக்குரிய) வழியாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் கோணல் வழியைக் கண்டால், அதனை (தங்ளுக்குரி நேர்) வழியாக எடுத்துக் கொள்வார்கள். இது (ஏனெனில்) அவர்கள் நம் வசனங்களை (சுய, மேல்விளக்கம் கொடுத்து) பொய்யாக்குகிறார்கள். இன்னும் அவற்றை விட்டும் அலட்சியமானவர்களாக இருக்கிறார்கள் என்ற காரணத்தினாலாகும். (7:146)

இதைவிடத் தெளிவாக, நேரடியாக, நெற்றிப் பொட்டில் சம்மட்டியால் அடிப்பது போல் பெருமை பேசும் இந்தக் கால மவ்லவிகளின் இழி நிலையை வேறு யாரும் விளக்கிடத்தான் முடியுமா? அந்தோ பரிதாபம்.

உண்மையான ஆலிம்கள்-அறிஞர்கள் யார் என்பதை குர்ஆனில் “”உலில் அல்பாப்” -அறிவுடையோர் என்று கூறும் 2:179,197,269, 3:7,190, 5:100, 12:111, 13:19, 14:52, 38:29,43, 39:9,18,21, 40:54, 65:10 இந்த வசனங்கள் அனைத்தையும் நேரடி யாகப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயம் அறிய முடியும்.

புகாரீ 100வது ஹதீஃதில் நபி(ஸல்) அவர்கள் “”உலமா-அறிஞர்கள்” என்று கூறி இருப்பது இன்று வதவத எனக் காணப்படும் ஆலிம் என பெருமையடிக்கும் மவ்லவிகளைக் குறிப்பிட்டல்ல. குர்ஆனின் முஹ்க்கமாத் வசனங்களுக்கு எவ்விதச் சுய விளக்கமும் கொடுக்காது அப்படியே உள்ளது உள்ளபடி எடுத்து நடந்த “”உலில் அல்பாப்” என்ற மேலே கண்ட 16 வசனங்கள் கூறும் அறிஞர்கள் பற்றித்தான். அதில் “”கடைசியாக ஒரு அறிஞர் கூட மீதமில்லாமல் ஆகிவிட்டதும் மக்கள் அறிவீனர்க ளைத் தமது தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். தாமும் வழி கெட்டுப் பிறரையும் வழிகெடுப்பார்கள் என்று நபி (ஸல்) கூறி எச்சரித்திருப்பது, வீண் பெருமை பேசி மார்க்கத்தை நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி (2:39) தம் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருக்கும் இன்றைய மவ்லவி களைக் குறித்தே.

எப்படி ஈசா(அலை) அவர்கள் அல்லாஹ் வசம் உயர்த்தப்பட்ட பின், அவர்களின் நேர்வழி போதனையை ஏற்று நடந்த உண்மை ஆலிம்கள் மறை வுற்று, ஆலிம்-மதகுரு என்ற பெயரால் பவுலினதும் அவரது சீடர்களினதும் முக்கடவுள் கொள்கை தலைதூக்கியதோ அதேபோல் நபி(ஸல்) விட்டுச் சென்ற நேர்வழி நடந்த உண்மை ஆலிம்கள் மறைவுற்று, ஆலிம்- மதகுரு என்ற பெயரால், நபி (ஸல்) அவர்களின் முன் அறிவிப்பின்படி ஜாஹில் கள் -அறிவீனர்களையே தக்லீதின் பெயரால் வழி காட்டிகளாக மதகுருமார்களாக முஸ்லிம் சமுதா யத்திலும் நுழைந்து 32:13, 11:118,119, 50:30, இன் னும் எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் 99.9% முஸ்லிம்கள் நரகை நோக்கி நடைபோட வைக்கிறார்கள்.

இதுவரை நாம் இங்கு எடுத்து எழுதியுள்ள குர்ஆன் வசனங்கள், ஆதாரபூர்வமான ஹதீஃத்கள், கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர் களின் எச்சரிக்கை இவற்றைப் படித்து உணர்ந்த வர்கள், நாங்கள்தான் பட்டம் பெற்ற மவ்லவிகள், ஆலிம்கள், மார்க்க அறிஞர்கள், அல்லாமாக்கள் என உண்மையின்றி பெருமை பேசியும், மவ்லவி அல் லாதவர்களை அவாம்கள் -பாமரர்கள், குர்ஆனை விளங்க முடியாதவர்கள் நாங்கள் விளக்கித்தான் விளங்க முடியும் என்று இறிவுபடுத்திப் பிதற்றும் மவ்லவிகள் ஒருபோதும் குர்ஆனை விளங்க முடியவே முடியாது என்பதைத் திட்டமாக அறிய முடியும்.

அடுத்துப் பாமரரர்கள் குர்ஆனை விளங்க முடியாது என்று இம்மவ்லவிகள் பிதற்றுவதில் அணு வளவாவது உண்மை இருக்கிறதா என்று பார்ப் போம். அல்லாஹ் நபிமார்களாகத் தேர்ந்தெடுத்த வர்களில் படித்துப் பட்டங்கள் பெற்ற மதகுருமார் களில் ஒருவர் கூட இல்லை என்பதை குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்கள்படி பார்த்தோம். புகாரீ 100 ஹதீஃத்படி இன்று முஸ்லிம் சமுதாயம் தங்களின் தலைவர்களாக வழிகாட்டிகளாக ஏற்று அவர்களை தக்லீது செய்வது ஜாஹில்களையே-மூடர்களான அப்படிப்பட்ட மதகுருமார்களையே என்பதையும் குர்ஆன், ஹதீஃத் மூலம் அறிந்து கொண்டோம்.

இப்போது குர்ஆனைச் சரியாக, தெளிவாக, உள்ளது உள்ளபடி விளங்குபவர்கள் இம்மதகுரு மார்கள் இழிவுபடுத்தும் அவாம்களான பாமரர் களே என்று குர்ஆன், ஹதீஃத்கள் கூறுவதையும் பார்ப்போம். குர்ஆன் 62:2 இறைவாக்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டில் இருந்த-உம்மிய்யீன் அவாம்களான சாதாரண மக்களுக்காகவே, அவர் களிலிருந்தே அவாமானவரையே இறைவன் தனது தூதராகத் தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறது. இந்த இறைவாக்கு என்ன உணர்த்துகிறது? 7:146 இறைவாக்குக் கூறுவது போல் கற்றவர்கள்-அறிஞர்கள் என்று பெருமை பேசுபவர்கள் குர்ஆனை விளங்கும் தகுதி அறவே இல்லாதவர்கள். எனவே அவாம்களான சாதாரண பாமர மக்களே குர்ஆனை உள்ளது உள்ளபடி விளங்கும் ஆற்றல் உள்ளவர்கள் என்பதை நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் உணர்த்தவில்லையா?

அன்று நபி(ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன், வசனங்களை விளங்கி நேர்வழியை அறிந்து அதன் படி நடக்க முன் வந்தவர்கள், தாருந்நத்வா அறிஞர் களால் மிகமிக இழிவாகக் கருதப்பட்ட அடிமைகளான, கருப்பின நீக்ரோ மக்கள் தானே அதிகம். ஹதீஃத்களை முறையாக ஆய்வு செய்கிறவர்களும் இந்த உண்மையை மறுக்க முடியுமா? இன்றிருக்கும் அவாம்களான பாமரர்களை விட அன்று நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்த அவாம்கள்-பாமரர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தார்கள் என்று 62:2 இறைவாக்கு உறுதிப்படுத்தவில்லையா? ஆழ்ந்து சிந்தித்து விளங்குங்கள்.

2:2 இறைவாக்கு என்ன கூறுகிறது? இந்த குர்ஆன் தக்வா-பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழி காட்டும் என்று உறுதி அளிக்கிறது. 2:3 முதல் 5 வரையுள்ள இறைவாக்குகள் என்ன கூறுகின்றன? அறிவுக்குப் புலப்படாத அல்லாஹ் குர்ஆனில் கூறும் மறைவானவற்றை அப்படியே நம்புவார்கள். அல்லாஹ்வுக்காக தூய எண்ணத்துடன் (அற்பக் காசுக்காக அல்ல) தொழுகையை நிலைநாட்டுவார்கள். அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து கொடுக் கும் மேலே உள்ள கையுடையவர்களே அல்லாமல், வாங்கும் கீழேயுள்ள கையுடையவர்களாக இருக்க மாட்டார்கள்.

அவர்கள் இறுதி நபிக்கு இறக்கப்பட்டவற்றை யும், முன்னைய நபிமார்கள், ரசூல்மார்களுக்கு இறக்கப்பட்டவற்றையும் (இறுதி நபிக்குப் பிறகு யாருக்கும் வஹி மூலம் செய்திகள் இறக்கப்படா) நம்பிக்கை கொள்வார்கள். இந்தச் சிறப்புகளையுடையவர்களுக்கே குர்ஆன் நேர்வழி காட்டும்; அவர்களே குர்ஆனை தெளிவாக விளங்குவார்கள்.

இப்போது சிந்தியுங்கள்! மேலே குர்ஆன் குறிப் பிடும் உயர் குணங்கள் அவாம்களான பாமர மக்களிடம் காணப்படுகின்றனவா? மவ்லவிகள் என பெருமை பேசும் மதகுருமார்களிடம் காணப்படு கின்றனவா?

அல்லாஹ்மீதும், மறுமையிலும் உறுதியான நம் பிக்கை இம்மதகுருமார்களுக்கிருந்தால், 2:159 இறைவாக்குக் கூறுவது போல், அல்லாஹ்வே மனிதர்களுக்காகவே (மவ்லவிகளுக்கு அல்ல) நேர்வழியையும், தெள்ளத் தெளிவான அத்தாட்சிகளையும் குர்ஆனில் விளக்கிய பின்னரும் அகம் பாவமாக குர்ஆன் வசனங்களுக்கு சுயவிளக்கம், மேல் விளக்கம் கொடுத்து அர்த்தத்தை அநர்த்தாக்கு வார்களா? அல்லாஹ்வுக்காக தூய எண்ணத்துடன் தொழவேண்டிய தொழுகையை அற்பக் காசுக்காக -சம்பளத்திற்காக தொழுவார்களா? தொழவைப்பார்களா? உழைத்துச் சாப்பிடுவதோடு, மற்றவர்ளுக்கும் கொடுக்கும் மேலேயுள்ள கைக்கு மாறாக, மக்களிடம் கையேந்தும் கீழேயுள்ள கையுடையவர்களாக இருப்பார்களா? குர்ஆன் கண்டிக்கும் பல இழி குணங்களைக் கடைபிடிக்கும் இம்மதகுரு மார்கள் குர்ஆனை சரியா விளங்கி நடப்பவர்கள் என்று ஏற்க முடியுமா? ஒருபோதும் முடியாது. ஆம்! 7:146 இறைவாக்குக் கூறுவது போல், பெருமை யடிக்கும் இம்மதகுருமார்கள் குர்ஆனை விட்டே அலலாஹ்வாலேயே திருப்பப்படுகிறார்கள். குர்ஆன் வசனங்களையே நேரடியாக எடுத்துக் காட்டினாலும் ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாக ஏற்று, மக்களுக்கும் அதையே போதிப்பார்கள். (பார்க்க : புகாரீ ஹதீஃத் எண்:100)

அதற்கு மாறாக அவாம்களான பாமர மக்கள் தங்களுக்குத் தெரிந்த மொழிகளிலுள்ள குர்ஆன் மொழி பெயர்ப்பை அக்கறையுடன் தினசரி படித்து வருவார்களேயானால், பெரும் முயற்சி எடுத்துப் படிப்பார்களானால் 29:69 இறைவனின் வாக்குறு திப்படி இப்பாமரர்கள், இம்மதகுருமார்களைவிட அதி அற்புதமாக குர்ஆனை மிகமிகத் தெளிவாக விளங்க முடியும் என்பதே குர்ஆன், ஹதீஃத் கூறும் மறுக்க முடியாத உண்மையாகும்.

ஒட்டுமொத்த மனித குலத்தினருக்கும் (முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல)வாழ்க்கைக்கு வழி காட்டும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனை மவ்லவி, ஆலிம் என பெருமை பேசும் மதகுருமார்களை விட, அவர்களால் அவாம்கள்-பாமரர்கள் என இழிவு படுத்தப்படும் சாதாரண மக்களே தெளிவாக, சரியாக விளங்குவார்கள் என்பதற்கு குர்ஆனிலிருந் தும் ஹதீஃதிலிருந்தும் மட்டுமே ஆதாரங்களைக் கொடுத்திருக்கின்றோம். எம்மீது ஆத்திரப்பட்டுப் பயனில்லை. இவைபோல் இன்னும் எத்தனை குர்ஆன் வசனங்களை எடுத்து எழுதினாலும் பெருமையடிக்கும் ஆலிம்கள் நேர்வழியை ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். இது அல்லாஹ் 7:146 இறைவாக்கில் வெளிப்படுத்தும் உண்மை. அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் சகோதரர்கள், சகோதரிகள் சுதாரித்து இப்புரோகிதர்களைப் புறக்கணித்து 3:103 இறைக் கட்டளைப்படி குர்ஆனைப் பற்றிப் பிடித்தால் ஆயிரத்தில் ஒன்று என்ற நிலையில் சுவர்க்கம் செல்லலாம்; இல்லை என்றால் ஆயிரத்தில் 999 என்ற நிலையில் நரகம் புக நேரிடும் எச்சரிக்கை!

Previous post:

Next post: