நீதித்துறை அன்றும்! இன்றும்!!

in 2015 ஜூன்,தலையங்கம்

நீதித்துறை அன்றும்! இன்றும்!! இன்று தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லை, வாங்கப்படுகின்றன!

நூறு வருடங்களுக்கு முன்னர் வெள்ளையர் ஆட்சியில் ஒரு கொலை வழக்கு. கோடி- கண்ட கோசுப் பிள்ளை என்பவர், தன் மருமகன் மீராசா ஏவிவிட்ட தேவர் ஒருவரால் வெட்டிச் சாய்க்கப்பட்டார். காரணம்? அன்றைக்கு ரூபாய் 2½ லட்சம் பெருமானமுள்ள ஒரு தங்க, வைர நெக்லசை அன்றைய இங்கிலாந்து ராணிக்கு அன்பளிப்பாகத் தந்தவர் கோசுப்பிள்ளை. அவருக்கு நான்கு பெண் மக்கள், ஆண் வாரிசு இல்லை. தன் மூத்த மகளை தன் கூடப் பிறந்த சகோதரி மகனுக்கு மணமுடித்துக் கொடுத்தார். இரண்டாவது மகளை மேற்படி மீராசாவுக்கு மண முடித்து கொடுத்தார். இரண்டாவது மகள் இறந்ததால் மூன்றாவது மகளையும் அவருக்கே மணமுடித்துக் கொடுத்தார். இந்த நிலையில் மீராசா அவரின் நான்காவது மகளையும் அடைவது கொண்டு மாமனாரின் சொத்தை முழுமையாக அடைய பேராசை கொண்டார். மாமனார் சம்மதிக்க வில்லை.

பேராசை கொண்ட மீராசா மாமனாரைத் தீர்த்துக் கட்டி அப்பழியை அவரது மூத்த மருமகன் மீது போட்டுவிட்டு, மாமனாரின் சொத்து முழுமையும் அடையத் திட்டம் தீட்டினார். ஒரு தேவரை கூலி பேசி ஏற்பாடு செய்து, மாமனாரைக் கொன்றுவிட்டுத் தன்னிடம் வந்து சொல்ல வேண்டும். அப்போது அந்தத் தேவரையும் சுட்டுத் தள்ளிவிட்டு, தன்னுடைய மாமனாரைக் கொன்று விட்டுத் தேவர் தப்பி ஓட முற்பட்டார். நான் அவரைச் சுட்டு வீழ்த்தினேன். தேவரை ஏற்பாடு செய்தவர் அவரின் மூத்த மருமகன் என்று அவர் மீது பழியைப் போட்டு காவல்துறையில் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தித் தப்பிவிடலாம். மாமனாரின் சொத்து முழுமையும் அடையலாம் என்பது மீராசாவின் சதித்திட்டம்.

கோசுப் பிள்ளையைக் கொன்றத் தேவர் இவரிடம் வந்து சொல்லாமல் தப்பி ஓடி விட்டார். இவர் வெகு நேரம் காத்திருந்து பார்த்து விட்டு, தேவர் வரவில்லையே என்று போய் பார்த்தால் மாமனார் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். காவல் துறையின் பணி ஆரம்பமாயிற்று. குற்றவாளி மீராசா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆயினும் அவரது பொருளாதார வசதி, மக்கள் செல்வாக்கு, தேவர்களின் பேராதரவு இவை காவல்துறையை நடுங்க வைக்கிறது. ஆயினும் தந்திரமாக அவரை நெல்லைக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து கைது செய்கிறார்கள். வழக்குத் தொடரப்படுகிறது.

லண்டனிலிருந்து நார்ட்டன் என்ற பிரபல வக்கீல் வரவழைக்கப்பட்டு அந்தக் காலத்திலேயே அவருக்கு மணிக்கு ஒரு பெருந்தொகை என ஒப்புக்கொண்டு மீராசா தரப்பு வக்கீலாக வாதிடுகிறார். நீதிமன்றம் மீராசாகை, தேவர் கத்தி இருவரும் குற்றவாளிகள், தூக்குத் தண்டனை எனத் தீர்ப்பளிக்கிறது. வழக்கு கீழ்கோர்ட், மேல்கோர்ட் இன்னும் இந்தியாவில் அன்று எத்தனை கோர்ட்கள் என அனைத்திலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. எல்லா கோர்ட்களிலும் கீழ்கோர்ட் தீர்ப்பே உறுதிப்படுத்தப்படுகிறது. இறுதியில் லண்டனிலுள்ள பிரிவு கவுன்சிலிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. அங்கும் அதே தீர்ப்பு. இறுதியில் இராணியிடம் கருணை மனு, எடைக்கு எடை தங்கம் தருவதாக அறிவிப்பு அனைத்தும் நிராகரிக்கப்பட்டு மீராசாவின் தூக்குத் தண்டனை நிறை வேற்றப்பட்டது.

ஆனால் இன்றோ கொள்ளையர் ஆட்சியில் நீதித்துறையின் அவலங்களை அன்றாடம் பார்த்து வருகிறோம். சமீப காலத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புகள் அநீதமான தீர்ப்புகளே. கொலைக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தப்புவிக்கப்படுகிறார்கள். அப்பாவிகள் தூக்கிடப்படுகின்றார்கள். ஆம்! பணம் இருந்தால், ஒன்றல்ல ஒன்பது கொலை செய்திருந்தாலும் விடுதலை கிடைக்கும். கோடி கோடியாக மக்கள் சொத்தை அபகரித்திருந்தாலும் விடுதலை கிடைக்கும்.

இன்று பெரும்பாலும் தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லை. பேரம் பேசி பெருந்தொகை வாங்கிக் கொண்டு தீர்ப்புகள் விற்கப்படுகின்றன. இன்றைய நீதிபதிகளில் பெரும்பாலோர் பணத்திற்கு விலை போகக் கூடியவர்களாகத் தான் இருக்கிறார்கள். பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும் என்றும். ஈட்டி எட்டிய அளவில் மட்டுமே பாயும், பணம் பாதாளம் வரை பாயும் என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். பணத்திற்கு வாய் பிளக்காவிட்டால் அடியாட்களைக் கொண்டு கொலைமிரட்டல் விடப்படும். நேர்மையாக நடக்கும் நீதிபதிகளுக்கோ, அரசு அதிகாரிகளுக்கோ, அரசுப் பணியாளர்களுக்கோ அரசுத் துறைகளில் பணிபுரிவது முள் மேல் நடப்பதாக இருக்கிறது. அந்தளவு மேல் மட்டத்தில் ஊழலும், லஞ்சமும் பெருகிக் காட்டாறாகத் தறிகெட்டு ஓடுகிறது. அதன் விளைவு? நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை, நகை, தாலி பறிப்பு எனப் பஞ்சமா பாவங்கள் அனைத்தும் மலிந்து காணப்படுகின்றன. அன்றாடம் ஊடகச் செய்திகளாக இவைதான் பக்கங்களை நிரப்புகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட 1950களில் இப்படிப்பட்ட பஞ்சமா பாவங்கள் இந்தளவுப் பெருக்கெடுத்து ஓடவில்லை; காரணம் என்ன? இன்றைய ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், நீதிபதிகளுக்கும் பெருந் தொகையை லஞ்சமாகக் கொடுத்து எப்படிப் பட்ட மாபெரும் குற்றச் செயல்களைச் செய்தா லும் தப்பிவிடலாம் என்ற துணிச்சலே காரணம்!

சிறிது சிந்தித்துப் பாருங்கள். ஆட்சியாளர்கள் அணுவளவும் நீதி தவறாமல், நேர்மையான ஆட்சி நடத்துகிறார்கள். நீதிபதிகள் குற்றவாளிகளை குற்றவாளிகள் என்றும், குற்றமற்றவர்களை குற்றமற்றவர்கள் என்றும் சரியாகத் தீர்ப்புக் கொடுக்கிறார்கள், எப்படிப்பட்டக் கொம்பனும் குற்றம் செய்துவிட்டுத் தப்ப முடியாது என்ற நீதியான நிலை இருக்குமானால் யாரும் குற்றம் செய்யத் துணிவார்களா? ஒருபோதும் துணியமாட்டார்கள். ஆட்சியாளர்களின் ஒழுக்கக்கேடுகளும், ஊழலும், லஞ்சமுமே இன்றைய அதலபாதாள வீழ்ச்சிக்கு முழுக்காரணமாக இருக்கின்றன.

இதுவல்லாமல் ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒரு மிகப் பெரும் தவறான குருட்டு நம் பிக்கைகளில் மூழ்கி இருப்பதால், அவர்களும் தங்கள் தங்கள் பங்குக்கு ஊழலும், லஞ்சமும் பெருகக் காரணமாக இருக்கிறார்கள். ஆத்திகர்கள் எப்படிப்பட்டப் பாவங்களையும், குற்றங்களையும் செய்தாலும் தங்கள் தங்கள் மதக் கொள்கைப்படி கோவில்கள், தர்க்காக்கள், சர்ச்சுக்கள் இவற்றிலுள்ள உண்டியல்களில் தாங்கள் அநீதமாகக் கொள்ளையடித்துச் சேர்த்த கோடிக்கணக்கான பணத்தில் ஒரு பகுதியை போட்டு விட்டு, மதகுருமார்களுக்கும் ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் ஆசி பெற்றுவிட்டால் இறைவன் அவர்கள் செய்த அனைத்துக் குற்றச் செயல்களையும் மன்னித்து விடுவான் என்ற குருட்டு நம்பிக்கையில் செயல்படுகிறார்கள். நாட்டில் மலிந்து காணப்படும் கோவில்கள், தர்க்காக்கள், சர்ச்சுகள் இவற்றில் உண்டியல்களில் நிரம்பும் கோடிக்கணக்கான தங்கம், வெள்ளி, பணம் அனைத்தும் இந்த மூடநம்பிக்கையின் அடிப்படையிலேயே சேர்கின்றன.

கடவுளின் பெயரைச் சொல்லி மக்களைத் துணிந்து ஏமாற்றிப் பிழைக்கும் மதகுருமார்களின் துர்போதனைகளை நம்பி பெருங்கொண்ட மக்கள் இப்படி வழிகேட்டில் செல் கிறார்கள். உலகில் ஆட்சியாளர்களுக்கு அரசு அதிகாரிகளுக்கு, நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து குற்றச் செயல்ளிலிருந்து தப்பிப்பது போல் பொய்க் கடவுள்களுக்கும், கடவுளின் பேரால் வயிறு வளர்க்கும் மதகுருமார்களுக்கும் லஞ்சம் கொடுத்து குற்றச் செயல்களிலிருந்து தப்பி விடலாம் என்ற குருட்டு நம்பிக்கையில் பகல் கனவு காண்கின்றனர். ஆட்சியாளர்களை, அரசு அதிகாரிகளை, நீதிபதிகளை லஞ்சம் கொடுத்து மடக்குவது போல் இறைவனையும் லஞ்சம் கொடுத்து மடக்க முடியும் என்று நம்பும் ஆத்திகர்கள் எந்தளவு மூடர்களாக இருப்பார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

கடவுளின் பெயரைச் சொல்லி பெருங் கொண்ட மக்களை பெரும் பெரும் மூட நம்பிக்கைகளில் மூழ்கச் செய்யும். மதகுருமார்களின் அட்டூழியச் செயல்களைக் கண்டு சகிக்க முடியாமல், கடவுள் பெயரால்தானே இந்த மதகுருமார்கள் இப்படிப்பட்ட அநியாய அட்டூழிய மூட நம்பிக்கையில் மூழ்குகிறார்கள். அந்த கடவுளே இல்லை என்று நிலைநாட்டிவிட்டால் இந்த மூட நம்பிக்கைகள் அனைத்தும் இல்லாமல் போய்விடும் எனக் குருட்டுத்தனமாக நம்பி, தங்களைப் பகுத்தறிவாளர்கள் எனப் பிதற்றிக் கொண்டு, ஆறாவது அறிவைப் பயன்படுத்தாமல், ஐயறிவுக்குள் கட்டுப்படுபவை மட்டுமே உள் பொருள், ஐயறிவுக்குள் கட்டுப்படாதவை இல்பொருள் என்று அறிவீனமாகக் கூறும் நாத்திகர்கள், இன்னொரு வழியில் மக்களை அழிவை நோக்கி அழைத்துச் செல்கிறார்கள்.

கடவுள் பெயரைச் சொல்லித்தானே மதகுருமார்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். அதனால் கடவுளே இல்லை என்ற முடிவுக்கு வந்த நாத்திகர்கள், அரசியலைச் சொல்லித்தானே அரசியல் வியாபாரிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள். அதனால் அரசியலே இல்லை என்று முழங்கத் தயாரில்லை. தமிழகத்தில் அவர்களும் நாற்றக் குட்டையான இன்றைய அரசியலில் முங்கிக் குளிக்கிறார்கள். எது மக்களுக்கு அத்தியாவசியத் தேவையோ அவற்றில்தான் இடைத் தரகர்கள் புகுந்து மக்களை ஏமாற்றித் தவறான வழிகளில் வயிறு வளர்ப்பார்கள் என்ற உண்மை நாத்திகர்களின் பகுத்தறிவுக்கு(?) எட்ட வில்லை. அதனால் ஆத்திகர்கள் கடவுள் பெயரைச் சொல்லி எப்படி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கிறார்களோ, அதேபோல் நாத்திகர்கள் கடவுள் இல்லை என்று சொல்லி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கிறார்கள்.

தமிழகத்தில் என்று நாத்திகம் தலைதூக்கியதோ அதன் பின்னரே ஒழுக்கக் கேடுகள் அதிகமாகி, தலை தூக்க ஆரம்பித்தன. எப்படிப் பட்டக் கொடிய தீய, குற்றச் செயல்களைச் செய்தாலும், ஆட்சியரையும், அரசு அதிகாரிகளையும், நீதிபதிகளையும் லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கி அக்குற்றச் செயல்களிலிருந்து தப்பிவிடலாம், அதன் பின்னர் அக்குற்றச் செயல்களுக்குத் தண்டனையே இல்லை என்ற அசட்டுத் துணிச்சலே, குருட்டு நம்பிக்கையே நாத்திகர்கள் பெரும் பெரும் குற்றச் செயல்களில் துணிந்து ஈடுபடக் காரணமாயிற்று.

நாத்திகம் தலைதூக்கிய பின்னரே விபச்சாரம், வைப்பாட்டி என கூடாச் செயல்கள் மலிந்தன. தடை செய்யப்பட்டிருந்த குடி திறந்து விடப்பட்டது. பின்னர் அரசே டாஸ் மாக் கடைகளைச் சந்து பொந்துகளிலெல்லாம் திறந்து 10 வயது பாலகன், சிறுவயது முதல் குடிகாரர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். வரலாறு காணாத அளவில் அன்றாடம் பல சாலை விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிக்கப்படுகின்றன. கள்ள ஓட்டு கலாச்சாரம் நடை முறைக்கு வந்தது; வாக்காளர்களை அற்பக் காசுக்கு விலைக்கு வாங்கும் கலாச்சாரம் பெருகுகிறது; வாக்கு சாவடிகளைக் கைப்பற்றுவது, இப்படிப் பொதுத் தேர்தல்களில் அனைத்து வகை அட்டூழியங்களும் பெருக ஆரம்பித்தன. ரவுடிகள், தாதாக்கள், சாராய வியாபாரிகள், விபச்சார விடுதி நடத்துவோர், இப்படி அனைத்து வகை குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், கிரிமினல்கள் என பெரும் வழிகேடர்கள் MLA, MP கள் ஆகும் வாய்ப்பைப் பெற்றார்கள். மனித குலத்தைச் சீரழிக்கும் சினிமா மக்களிடையே பிரபல்யமானது. காலங்காலமாகக் கூத்தாடிகள் என அறியப்பட்டவர்கள், நடிகர், நடிகை என அறிமுகமானதுடன் அவர்களே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

குடிகாரர்கள், விபச்சாரர்கள், சாராய வியாபாரிகள், விபச்சார விடுதி நிறுவனர்கள், கேடிகள், தாதாக்கள், கிரிமினல்கள் எனத் தகுதியற்றவர்கள் அதிகமாக MLA, MP ஆனதெல்லாம் நாத்திகச் சிந்தனை தலை தூக்கிய பின்னர் தானே! என்ன காரணம்? தாம் செய்யும் அக்கிரமச் செயல்களுக்கு இவ்வுலகிலேயே ஆட்சியாளர்களுக்கு, அரசு அதிகாரிகளுக்கு, நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்துச் சமாளித்துத் தப்பி விட்டால் போதும். அதன் பின்னர் அக்குற்றச் செயல்களுக்கு தண்டனையே இல்லை என்ற அசட்டுத் துணிச்சல் தானே! மனிதர்கள் அனைவரையும் ஏமாற்றித் தப்பிவிடலாம்; ஆனால் ஓரிறைவனை ஏமாற்றித் தப்பிக்க முடியவே முடியாது என்ற உறுதியான நம்பிக்கையுள்ளவர்கள் தப்புத் தண்டாவில், குற்றச் செயல்களில் ஈடுபடுவார்களா?

நாத்திகர்கள் ஜாதி வேற்றுமையைப் போக்க, இன இழிவை அழித்தொழிக்க மதகுருமார்களை எப்படி எல்லாம் அவர்களின் முகத்திரையை கிழிக்க முடியுமோ அப்படி எல்லாம் அவர்களை அடையாளம் காட்டலாம். இறைவனுக்கு அவர்கள் ஒருபோதும் இடைத்தரகர்களாக, புரோக்கர்களாக ஆக முடியவே முடியாது என்பதைத் தெளிவாக விளக்கலாம். புரோகித மதகுருமார்கள் தங்களின் வருமானத்திற்காகக் கற்பனைச் செய்துள்ள கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை, குட்டித் தெய்வங்களை மிகக் கடுமையாக எதிர்த்து மறுக்கலாம். ஆனால் அண்டசராசரங்ளையும் மனிதனையும் படைத்த தன்னந்தனியனான, இணை துணை மனைவி, மக்கள் எதுவும் இல்லாத ஓரிறைவனையும் நாத்திகர்கள் மறுப்பதால் தான் நாட்டில் பெரும் பெரும் குற்றச் செயல்கள் மலிந்து மக்களைச் சீரழித்து வருகின்றன.

அதேபோல் இன்று நாட்டில் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், நீதி பதிகள், பொதுமக்கள் அனைவரிடமும் லஞ்ச மும், ஊழலும் பெருகுவதற்கும், அநீதமான தீர்ப்புகள் வாங்கப்படுவதற்கும், ஒழுக்கக் கேடு கள், குடி, விபச்சாரம், வன்புணர்ச்சி என அனைத்து வழிகேடுகளும் மலியவும் காரண மானவர்கள் ஆத்திகர்களை விட நாத்திகர்களே பிரதானமானவர்கள் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

Previous post:

Next post: