இன்று உலகம் நரக விளிம்பில் நிற்க யார் காரணம்?

in 2017 ஜுலை,தலையங்கம்

அல்லாஹ்வின் பெரும் கிருபையால் அரபகத்தில் நிறைவு பெற்ற தூய இஸ்லாமிய மார்க்கம் நடை முறைப்படுத்தப்படும்போதே இந்தியாவின் தென் பகுதிக்கு கடல் மார்க்கமாக இஸ்லாம் வந்துவிட்டது என்பதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கின்றன. ஆக முழுமைபெற்ற இஸ்லாம் இந்தியாவின் தென்பகுதிக்குக் குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டிற்கு ஆரம்ப நிலையிலேயே அறிமுக மாகிவிட்டது. இஸ்லாம் ஆரம்ப நிலையிலேயே அறிமுகமானது போல் அல்குர்ஆனும் நம் நாட்டிற்கு அது இறக்கப்பட்ட அரபு மொழியில் அறிமுகமாகித்தான் இருக்கும். குர்ஆன் ஆரம்ப காலத்திலேயே தமிழகத்திற்கு அரபு மொழியில் கிடைத்தும் அதைப் படித்து விளங்கும் நிலையில் நம் தாய்மொழித் தமிழில் கிடைக்கவில்லை.

இங்குதான் ஒரு விஷயம் நமது கவனத்திற்கு வருகிறது. ஒவ்வொரு நபியின் மறைவுக்குப் பிறகும் “”அண்ணன் எப்போது சாவான்; திண்ணை எப்போது காலியாகும் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும், கொடிய ஹராமான வழியில் வயிறு வளர்க்கும் தாஃகூத்கள் என்ற மனித ஷைத்தான்களான மதகுருமார்கள், நபி மறைந்த மிக குறுகிய காலத்திலேயே அவரின் சமுதாயத்தில் திருட்டுத்தன மாக நுழைந்து தங்களின் ஷைத்தானிய வேலையை ஆரம்பித்து விடுகின்றனர். முழுச் சமுதாயமும் அவர்களின் மாய வசீகர உடும்புப் பிடியில் சிக்கி வருகின்றனர் என்ற பேருண்மையே அதுவாகும். அந்த வரிசையில் இறுதி நபியின் மரணத்திற்குப் பின்னரும் மிகக் குறுகிய காலத்திலேயே முஸ்லிம் சமுதாயமும் 2:186, 50:16, 56:85 இறைவாக்குகளைக் கண்டு கொள்ளாமல் இடைத்தரகர்களாக-புரோகிதப் பூசாரிகளாக அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்கும் இடையில் புகுந்து சமுதாயத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த மதகுருமார்களான ஆலிம்கள் கையில் முஸ்லிம்கள் வசமாகச் சிக்கிக் கொண்டனர். சுமார் 1300 ஆண்டு களாக முஸ்லிம சமுதாயம் இம்மவ்லவி களின் பிடியில் தான் சிக்கி இருக்கின்றது.

2:159 குர்ஆன் வசனம் கூறுவது போல் குர்ஆனின் நேரடிக் கருத்துக்களை திரித்து, வளைத்து, மறைத்து குர்ஆன் கூறாத கருத்துக்களை குர்ஆன் கூறுவதாகப் பொய் கூறும் இம்மவ்லவிகள் குர்ஆன் கூறும் உண் மைக் கருத்துக்கள் அவாம்களிடம் போய்ச் சேர விரும்புவார்களா? அந்த அளவு அவர்கள் இழிச்ச வாயன்களா? எனவே குர்ஆன் கூறும் உண்மைக் கருத்துக்கள் அவாம்களான பொதுமக்களிடம் போய்ச் சேர்ந்து விடக்கூடாது என்பதில் குறியாக மட்டுமல்ல; வெறியாக இருக்கிறார்கள் இம்மவ்லவிகள்.

எனவே இஸ்லாமும், குர்ஆனும் தமிழக மக்களுக்கு ஆரம்பக் காலத்திலேயே அறிமுகப்படுத்தப் பட்டாலும் குர்ஆன் கூறும் நேர்வழிக் கருத்துக்கள் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டே வந்தன. அதற்கு மாறாக மதகுருமார்களான இந்த ஆலிம்கள் என்ன தந்திரம் செய்தார்கள் தெரியுமா? ஆம்! பாப்பானிடம் காணப்படும் சாணக்கிய தந்திரம் முஸ்லிம் மத குருமார்களான ஆலிம்களிடம் நிறையவே காணப்படுகிறது. அவர்களிடமிருந்த அரபி மொழி அறிவு தமிழ்மொழி அறிவு கொண்டு அரபுத் தமிழ் என்ற ஒரு புதிய மொழியை உருவாக்கினார்கள். ஏற்கனவே அரபு மொழிக்கு ஆகா, ஓகோ என வானளாவப் புகழந்து முஸ்லிம்களிடையே அளவுக்கு மீறிய மரியாதையை உண்டாக்கி வைத்திருப்பதின் அடிப்படையில் அவர்கள் கற்பனை செய்த அரபுத் தமிழ் மொழிக்கும் ஒரு பொய் மரியாதையை மக்களிடையே ஏற்படுத்தினார்கள்.

அரபுத் தமிழில் குர்ஆன் போதனைகளுக்கு முற்றிலும் முரணான கபுரு வழிபாடுகள், சமாதிச் சடங்குகள், தரீக்கா சடங்குகள், மத்ஹபு சடங்குகள் இன்னும் பல ´ஷிர்க், குஃப்ர், பித்அத் எனக் கொடிய வழிகேடுகளையே இஸ்லாமிய மார்க்கம் போதிப்பதாக எழுதிக் குவித்தார்கள். அவற்றையே வேதப் புத்தகமாக மக்களிடையே பரப்பினார்கள். இன்று சுன்னத் ஜமாஅத்தினர் மார்க்கமாக நடைமுறைப் படுத்தி வரும் பல வகை மவ்லூதுகள், ராத்திபுகள், ஸலாத்துகள், அவ்ராதுகள், துஆக்கள் இவற்றையும், தமிழில் பாடி வைத்துள்ள பலவித மாலைகள், இன்னும் இவை போன்ற கவிதைகள் இவற்றையும் பொருள் விளங்கிப் படிப்பவர்கள் இவற்றில் நிறைந்து காணப் படும் ´ஷிர்க், குஃப்ர், பித்அத்களை அறியலாம். ஆம்! தாஃகூத் என்ற மனித ஷைத்தான் களின் பணியை மிகக் கச்சிதமாக இன்றும் செய்து வருகிறார்கள்.

இன்றும் சில வயதானவர்களிடம் குறிப்பாகப் பெண்களிடம் குர்ஆனின் சில வசனங்களைத் தமிழில் எழுதி அவர்களிடம் கொடுத்தால், அதுவும் அல்லாஹ் குர்ஆனில் அரபியில் சொல்லியுள்ளதை நீங்கள் விளங்குவதற்காகத் தமிழில் எழுதித் தந்திருக்கிறேன் என்று சொல்லிக் கொடுத்தாலும் அதை அவர்கள் கையில் கூட வாங்கமாட்டார்கள். பின்னர் எப்படிப் படித்து விளங்க போகிறார்கள். அதே சமயம் ஒரு சினிமா பிரசுரம் அரபுத் தமிழில் எழுதிக் கொடுக்கப்பட்டால் அதை ஆவலுடன் வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். ஆபத்தானக் கட் டத்தில் என்றும் உயிரோடிருப்பவனை “”யா அல்லாஹ்” என்று அழைப்பதற்கு மாறாக “”யாமுஹ்யித்தீன்” என்று என்றோ இறந்தவரை அழைக்கும் முஸ்லிம் கள். இதுதான் பெரும்பான்மை முஸ்லிம் ஆண், பெண்களின் நிலை. 32:13, 11:118, 119, 12:106, 25:30 இறைவாக்குகள் கூறுவது போல் நாளை நரகை நிரப்பும் மிகப் பெரும் கூட்டம்.

முஸ்லிம் மதகுருமார்களான ஆலிம்கள், மவ்லவிகள் எனப் பெருமை பேசும் வீணர்களின் துர்போத னைகளின் விளைவுதான் நரகை நோக்கி நடை போட வைக்கும் பரிதாபம். இங்கு அவர்களுக்கு இது புரியாது. நாளை அல்லாஹ்வைச் சந்திக்கும்போது தான் அறியப் போகிறார்கள். இந்தப் பரிதாப நிலை குர்ஆன் நம் தமிழ் மண்ணிற்கு அறிமுகமான காலத்திலிருந்து 1350 ஆண்டுகளாகி இருந்தும் அது தமிழில் தரப்படாததே! ஆம்! மிகச் சமீபம் காலம் வரை தமிழக முஸ்லிம்கள் தங்களுக்கு நேர்வழி காட்டும் (6:153) குர்ஆனை அவர்களின் தாய்மொழி தமிழில் பெற முடியவில்லை. மவ்லவிகள் தொடர்ந்து தடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆதிக்கம் மிகைத்து வருகிறது.

கி.பி. 20ம் நூற்றாண்டிலேயே (ஹி.1370) பெரும் போராட்டம், முயற்சி, தடை இவற்றை எல்லாம் கடந்து முதல் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு வெளி வந்தது. அதிலிருந்து இதுவரை சுமார் 15 குர்ஆன் மொழி பெயர்ப்புகள் வந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் கைசேதம் அவற்றில் ஒரேயொரு மொழி பெயர்ப்புக் கூட குர்ஆனில் உள்ளதை உள்ளபடி சொல்வதாக இல்லை. எந்த மொழி பெயர்ப்பை எடுத்துக் கொண்டாலும் அதைத் தந்தவர் எந்தப் பிரிவுக் கொள்கையைச் சேர்ந்தவரோ அந்த வழிகெட்டக் கொள்கையைச் சரிகாணும் வகையிலேயே மொழி பெயர்த்துள்ளனர். யாரும் மனசாட்சியுடன் சரியான மொழி பெயர்ப்பைத் தரவில்லை.

பெரும்பாலும் மொழி பெயர்த்தவர்கள் புரோகித இனத்தைச் சேர்ந்தவர்கள்தானே. புரோகிதப் புத்தி அவர்களை விட்டுப் போகுமா? புரோகிதத்தை விட்டு வெளியேறாதவரை அப்புத்தி ஒரு போதும் அவர்களை விட்டுப் போகவே போகாது.

கடந்த 30 வருடங்களாக அவர்களது மொழி பெயர்ப்புகளில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி வருகிறோம். அவற்றைப் பார்த்து வரும் சகோதரர்கள் நீங்கள் ஏன் ஒரு மொழி பெயர்ப்பு வெளியிடக் கூடாது என்று கேட்கின்றனர். உண்மையைச் சொல்வதாக இருந்தால் அந்நஜாத் ஆரம்பித்த நோக்கத்தின் அடிப்படையில் புரோகிதம் பற்றி குர்ஆன் சொல்லும் கருத்துக்களில் நாம் கவனம் செலுத்திய அளவு மற்ற விசயங்களில் நாம் கவனம் செலுத்தவில்லை. புரோகிதர்களை முற்றும் நிராகரித்து விட்டு ஒவ்வொரு ஆணும், பெண்ணும் குர்ஆனை நேரடியாகப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடக்க முடியும் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம்.

மவ்லவிகளால் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் மொழி பெயர்ப்புகளைப் படித்து நடுத்தர அறிவுடைய அவாம்கள் விளங்க முடியாத அளவில் தான் இன்றைய அனைத்து மொழி பெயர்ப்புகளும் இருக்கின்றன என்று சில சகோதரர்கள் கூறுகிறார்கள். நாம் அவர்களது கூற்றை ஆய்வு செய்தபோது அது உண்மைதான் என்று எமது மனதிலும் படுகிறது. ஆம்! அவர்களின் வழிகெட்டப் பிரிவுக் கொள்கைக்கு ஏற்றவாறு மொழி பெயர்த்துள்ளதில் ஒரு தடுமாற்றம்; அடைப்புக் குறிக்குள் அவர்களின் தவ றான சுய விளக்கங்களைத் திணித்திருப்பதால் ஒரு தடுமாற்றம். இதற்கெல்லாம் மேலாக மொழி பெயர்ப்பு இலக்கணம் தெரியாமல் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பெரும்பாலும் மொழி பெயர்த்துள்ளது ஒரு பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. விளங்க நம் புழக்கத்திலுள்ள ஆங்கிலத்தையும், தமிழையும் எடுத்துக் கொள்வோம்.

Please take your seat  என்று ஆங்கிலத்திலுள்ளதை எப்படித் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்? வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு “”தயவு செய்து உங்கள் இருக்கையை எடுங்கள்”. இது சரியான மொழி பெயர்ப்பா? அல்லது “”தயவு செய்து உங்கள் இருக்கையில் அமருங்கள்”. இது சரியான மொழி பெயர்ப்பா? சிந்தியுங்கள். ஆங்கிலத்தில் Take எடுங்கள் என்றிருப்பதற்கு மாறாக தமிழில் அமருங்கள் என்று மொழி பெயர்ப்புச் செய்தால் தான் சாதாரண மக்கள் விளங்குவார்கள்.

இந்த நிலை உலகிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். பொது மக்கள் விளங்கும் வகையில் எழுதப்படுவதுதான் எளிய மொழியாகும். இந்த எதார்த்த நிலையை மவ்லவிகளுக்கு எடுத்துச் சொன்னால் ஏற்பார்களா? ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். காரணம் என்ன? பொது மக்கள் குர்ஆனை விளங்காமல் முட்டுக்கட்டைப் போடுவது தானே அவர்களது இலட்சியம். அதில் தானே அவர்களின் கொடிய ஹராமிலுள்ள வயிற்றுப் பிழைப்பே தங்கி இருக்கிறது. கைகளால் உழைத்து ஹலாலான முறையில் சாப்பிட அவர்கள் முன் வராதவரை அது ஒருபோதும் சாத்தியப்படாது. (பார்க்க: 36:21)

இவை அனைத்தையும் ஆழமாகச் சிந்தித்து நாம் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். சாதாரண மக்களும் விளங்கும் அளவில் எளிய தமிழில் ஒரு குர்ஆனைக் கொடுக்க முயற்சிகள் எடுப்பது என்பதாகும். ஆனால் தனியொருவனாக அதைச் செய்வதை ஒரு போதும் சரி காணமாட்டோம். அது முறையும் அல்ல. மவ்லவிகளின் துணையைத் தேடுவதிலும் நமக்கு உடன்பாடில்லை. கழுதை உழவுக்கு வந்தாலும் மவ்லவிகள் நேர்வழிக்கு வரமாட்டார்கள் என்பது எமது 60 வருட நீண்டகால அனுபவம்.

கல்லூரிகளில் அரபு மொழி இலக்கண, இலக்கியங்களைப் பாடமாக எடுத்து அதில் திறமை பெற்ற ஒருவர், தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பாடமாக எடுத்து அதில் முழுத் தேர்வு பெற்ற ஒருவர் ஆக இரண்டு பேர் ஒத்துழைப்புடன் மூவரும் சேர்ந்து அந்த முயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே எமது முயற்சி சரியாகவும், தெளிவாகவும் அமையும். ஆயினும் பெரும் பொருளாதாரச் செலவை எதிர் கொள்ள வேண்டி வரும். பணம் படைத்தச் செல்வந்தர்களில் சிலர் இந்த வகைச் செலவை ஏற்க முன் வந்தால் எமது இத்திட்டத்தைத் துவங்கலாம் இன்ஷா அல்லாஹ். அந்நஜாத் ஆசிரியர் பணியை நாம் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்வது போல், இந்த முயற்சியையும் முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய நாம் தயாராகவே இருக்கிறோம். நாம் ஏதோ சுய ஆதாயம் அடைய இம் முயற்சியில் இறங்குவதாக அந்நஜாத்தை ஆரம்பித்த போதும், ஹதீஃத்களை மொழி பெயர்க்க முற்பட்டபோதும் பொய்யன் பீ.ஜை., KMI. போன்ற மவ்லவி வகையறாக்கள் அவதூறு பரப்பியது போல், இப்போதும் அவதூறு பரப்புவார்கள். அதற்காகவே இந்த உறுதி மொழி; அல்லாஹ் போதுமானவன்.

Previous post:

Next post: