அந்நஜாத் ஜனவரி -1989

in 1989 ஜனவரி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அந்நஜாத்

இஸ்லாமிய  இலட்சிய  மாத  இதழ்

நோக்கம் : 3  விளக்கம் : 10

ஜமாதுல் ஆகிர்  : 1409 ஜனவரி -1989

இதழின் உள்ளே…..

*    ஒன்றுபட்டு  செயலில்  இறங்க  அழைக்கிறோம்

*     நபிவழியில் நம்  தொழுகை

*     அல்லாஹ்வின்  சாபத்திற்குரியவர்கள்  யார்?  யார்?

*    அருள்மறையைஅறிந்து கொள்வாராக! அருண் ஷோரி!!

*    மெய்ப்பொருள் காண்போம்! அவ்வழி நடப்போம்!!

*    செயலில்  இறங்கத் தயாராவது யார்? யார்?

*    தன்னிலை விளக்கம் ஆதாரம்!  1

*    தன்னிலை விளக்கம் ஆதாரம் 2

*    நபிவழி தொகுப்பு வரலாறு!

*    ஐயமும்! தெளிவும்!!

*    விமர்சனங்கள்!  விளக்கங்கள்!!

*********************************************************************

ஒன்றுபட்டு செயலில் இறங்க அழைக்கிறோம்!

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சென்ற இதழில் நமது இந்த முயற்சியின் 3-வது கட்டமாக முஸ்லிம்கள் ஒரே தலைமையின் கீழ் இணைந்து ஒன்றுபட்டு செயல்படும் சூழ்நிலையை உருவாக்க முற்டுவதாகக் கூறி இருந்தோம். அதைப் பற்றிய விரிவான விளக்கங்களை இந்த இதழின் 26-ம் பக்கத்தில் இடம் பெறச் செய்துள்ளோம். அவற்றை நடுநிலையான, தெளிந்த சிந்தனையோடு ஆழ்ந்து நோக்கி, அவற்றிலுள்ள குறை நிறைகளை அறியத் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இஸ்லாம் முறையாக இயங்க ஆரம்பித்து விட்டால், இன்று இந்த உலகை வாட்டும்ட சர்வ பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் ஏற்பட்டுவிடும் என்பதில் ஐயமில்லை. மனிதனின் இவ்வுலக வாழ்க்கை மனிதனே கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு சுபீட்சமாகவும் மன நிறைவு தரும் நிலையிலும், அமைதிப் பூங்காவாகவும் ஆகிவிடும் என்பதிலும் ஐயமில்லை. ஆனால் இந்த நிலைகள் ஏற்பட சிந்தனையுடன் செயல்படும்ட முஸ்லிம்கள் பெரும் தியாகங்கள் செய்ய முன்வரவேண்டும்.

நபித்தோழர்கள் கொடை சிந்தனையும்,  தூரநோக்கும்  இன்று  நமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றது. காரணம் நமது இந்த பயிற்சியின் உயர் அந்தஸ்து இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இந்த நிலையில், இந்த  முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள பிரத்தியேகமான ஒரு அறிவாற்றல் வேண்டும். கண்ணுக்குப் புலப்படும்ட வெளித் தோற்றங்களைக் கண்டு ஏமாறாமல், ஆழ்ந்து நோக்கி உண்மையை உணர்ந்து கொள்ளும் விசேஷ ஆற்றல் வேண்டும். அப்படியே உண்மையை உணர்ந்து கொண்டாலும், இந்த முயற்சியில் பல எதிர்ப்புகளுக்கிடையே தன்னை இணைத்துக் கொள்ள பெரும் துணிச்சல் வேண்டும். சத்திய முயற்சியான இந்த முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது, இன்றைய சூழ்நிலைகளில் சமுதாயம் முழுவதையும் பகைத்துக் கொண்டு, அதில் ஒதுக்கப்பட்டவராம, தீண்டத்தகாதவராக தம்மைத்தாமே ஆக்கிக் கொள்வதாக இருக்கிறது. இவ்வளவு இக்கட்டான சூழல்களில் இதில் ஈடுபட்டாலும், அதற்குரிய பலன்கள் எதிர் காலத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையும், உத்திரவாதமும் வெளிப்படையில் ஐயத்திற்குரியதாகவே இருக்கிறது. வெளிப்படையாக தெளிவாகத் தெரியவில்லை. அன்றும் நபித்தோழர்கள் இது போன்றதொரு சூழ்நிலையிலேயே தங்களை மார்க்கப் பணியில் ,ஈடுபடுத்திக் கொண்டனர்.

எனவே அன்று நபித்தோழர்கள் எப்படி வெளித்தோற்றத்தில் எவ்வித உத்திரவாதமும் இல்லாத நிலையில், அல்லாஹ்வின் சொல்லின் மீதும், நபி(ஸல்)  அவர்களின் வழிகாட்டலின் மீதும் உறுதியான நம்பிக்கை வைத்துச் செயல்பட்டார்களோ,  அதே போல் இன்று யார் யார் அல்லாஹ்வின் அதே சொல்லின் மீதும், நபி(ஸல்) அவர்களின் அதே வழிகாட்டலின் மீதும் அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை வைத்துச் செயல்பட தயாராகி விடுகிறார்களோ அவர்கள், அந்த நபித்  தோழர்கள் இவ்வுலகில் எப்படிப்பட்ட பிரமிக்கத்தக்க  புரட்சிகரமான மேலான மாறுதல்களை உண்டாக்கிக் காட்டினார்களோ, அதே பொன்ற புரட்சிகரமான, உன்னதமான மாறுதல்களை உண்டாக்கிக் காட்ட முடியும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.  அந்த நபித் தோழர்கள் அல்லாஹ்வின் பார்வையில் எப்படிப்பட்ட உயர் அந்தஸ்துகளையும் பதவிகளையும் பெற்றுக்கொண்டார்களோ அதைப் போல் இன்று இப்புனிதப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களும் உயர் அந்தஸ்துகளையும்,  பதவிகளையும் பெற்றுக் கொள்வார்கள் என்பதிலும் ஐயமில்லை. நபித் தோழர்களின் உயர் அந்தஸ்துகளையும், பதவிகளையும் நாமும் அடைந்து கொள்ள முடியும் என்று நாம் கூறவில்லை. நம்முடைய நிலைக்கேற்றவாறு உயர் அந்தஸ்துகளையும், பதவிகளையும் நாமும் அடைந்து கொள்ள முடியும் என்று நாம் கூறவில்லை.  நம்முடைய நிலைக்கேற்றவாறு உயர் அந்தஸ்துகளையும், பதவிகளையும் அடைய முடியும் என்றே கூறுகிறோம். அப்படிப்பட்ட உயர் அந்தஸ்துகளையும், பதவிகளையும், இம்மையிலும், மறுமையிலும் மன நிறைவைத் தரும் வாழ்வையும் விரும்புகிறவர்கள். இந்த சத்திய முயற்சியில் தங்களை இணைத்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

தெளிவாகச் சொல்லுகிறோம். இஸ்லாத்தை இயங்க வைக்கிறோம் என்று சொல்லி தனியொரு இயக்கத்தை இயங்க வைக்கும் முயற்சியில் நாம் இறங்கவில்லை.  இஸ்லாத்தை இயங்க வைக்கும் முயற்சியில் நாம் இறங்கவில்லை. இஸ்லாத்தை இயங்க வைக்கும் முயற்சியிலேயே இறங்குகிறோம். கைமேல் பலன் என்ற நினைப்பிலும் நாம் இதில் ஈ,டுபடவில்லை. நபி(ஸல்) அவர்களுக்கே இந்த முயற்சியை நிறைவு செய்ய 21 ஆண்டுகள் பிடித்தன. எனவே நாமும் இந்த தூர நோக்குடனேயே செயலில் இறங்குகிறொம். இதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும் முஸ்லிம்கள் அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம்.

************************************************************************

நபி வழியில் நம் தொழுகை தொடர் – 25  – அபூ அப்தில்லாஹ்

நபியே! சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்து கிருபை செய்பவனாக இருக்கிறான். (3:31)

“என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள். (மாலிக்பின் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

சென்ற டிசம்பர் 88  இதழில் ஒருவர் தமது ஆடை, தலைப்பாகை அல்லது தொப்பி ஆகியவற்றின் மீது நெற்றியை வைத்த நிலையில் ஸுஜூதிலிருந்து எழுந்து உட்காருதல், சிறு இருப்பில் ஓதும் துஆ, இரண்டாவது ஸஜ்தாவும், அதன் தக்பீர்களும், இரண்டாவது ரகாஅத்துக்காக எழும்போது உட்காரக் கூடிய இருப்பின் நிலையும், அதிலிருந்து எழும் முறையும், ஆகியவற்றின் விபரங்களைப் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ் இவ்விதழில் அடுத்துள்ள நிலைகளைப் பார்ப்போம்.

இரண்டாவது ரகாஅத்திற்காக கைகளை எவ்வாறு ஊன்றி எழ வேண்டும்?

இரண்டாவது ரகாஅத்துக்காக எழும்போது, இடையில் உட்கார்ந்து கைகளை ஊன்றி எழுவதும், அவ்வாறு உட்காராமல் நேராக நிலைக்கு சென்று விடுவதுமாகிக இரு முறைகளும் ஸஹீஹான ஹதீஸ்களில் இடம் பெற்றிருப்பதால், அமல் செய்வதற்கு இரு முறைகளுமே சரியானவை என்பதை அறிந்தோம்.

இவற்றின்படி, ஒருவர் உட்கார்ந்து, பின்னர் தமது கைகளை ஊன்றி எழும்போது சாதாரணமாக கைகளை ஊன்றி எழவேண்டுமே அன்றி,  சிலர் கூறுவதுபோல், கைவிரல்களை மடக்கி, அவற்றை மூடியவாறு ஊன்றி எழ வேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லை. காரணம் அவ்வாறு கை விரல்களை மடக்கி, அவற்றை முடியுமாறு ஊன்றி எழவேண்டும் என்பதற்கு ஹதீஃத்களில் ஆதாரமில்லை.

நபி(ஸல்) அவர்கள் தமது தொழுகையில் எழும்போது, மாவு பிசையக் கூடியவன் தனது கை விரல்களை மடக்கி பிசைவது போல், தமது விரல்களை மடக்கியவாறு தரையில் ஊன்றி எழுந்திருப்பார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் என்பதாக அறிவிப்பொன்று காணப்படுகிறது.

இவ்வறிவிப்பு குறித்து “இப்னுஸ்ஸலாஹ்” அவர்கள், இது ஸஹீஹான ஹதீஃத் அல்லவென்றும், இமாம் நவவீ(ரஹ்) அவர்கள் இது எவ்வித மூலாதாதமுமில்லாத, முறைகேடான, பலகீனமான அறிவிப்பென்றும் கூறியுள்ளார்கள் என்று இப்னுஹஜர்(ரஹ்) அவர்கள் தமது “தல்கீஸ்” எனும் நூலில் (பாகம் 3, பக்கம் 492)ல் கூறியுள்ளார்கள்.

அப்படியே இது ஸஹீஹான ஒரு ஹதீஸ் என்று வைத்துப் பார்ப்போமேயானால் இதன் பொருள் மேலே கூறப்பட்டதல்ல. இவ்வறிவிப்பில் இடம் பெற்றுள்ள “ஆஜீன்” எனும் பதத்திற்கு “வயோதிகர்” என்பதுதான் பொருளாகும்”. மாவு பிசையக் கூடியவன்” எனும் பொருள் அல்ல. இதன்படி ஹதீஸின் முறையான பொருள், ஒரு வயோதிகர் தமது கைகளைத் தரையில் ஊன்றி எழுவதுபோல், நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை ஊன்றி எழுவார்கள்” என்பதேயாகும்.

இவ்வாறு அந்த அறிவிப்புக்கு இப்னுஸலாஹ் அவர்கள் விளக்கம் கூறிவிட்டு, கைவிரல்களை மடக்கிய நிலையில் ஊன்றி எழ வேண்டும் என்று கூறுவதானது, ஹதீஃதின் ஆதாரமின்றி சன்மார்க்கத்தில் இல்லாததோர் செயலை அதில் உண்டு என்று அபத்தமாக கூறுவதாகும் என்றும் அவர்களே கூறியுள்ளார்கள். (தல்கீஸ் பாகம் 3, பக்கம் 492)

இரண்டாம் ரகாஅத்தை எவ்வாறு தொழ வேண்டும்?

நபி(ஸல்) அவர்கள், முறை கேடாகத் தொழுத மனிதருக்கு தொழும் முறைகளை விளக்கிக் கூறியபின், இவ்வாறே உமது அனைத்துத் தொழுகைகளிலும் செய்து  கொள்வீராக! என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)

மேற்காணும் இவ்வறிவிப்பின்படி முதலாம் ரகாஅத்தில் இடம் பெற்றுள்ள கிராஅத்து, ருகூஃ, ஸுஜூது, சிறுநிலை, சிறு இருப்பு முதலியவற்றை நிறைவேற்றியதுபோன்றே,  இரண்டாவது ரகாஅத்திலும் அவற்றை முறையாகச் செய்ய வேண்டுமட்.

இரண்டாவது ரகாஅத்தில் கிராஅத்தை எதைக் கொண்டு துவங்க வேண்டும்?

நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் ரகாஅத்துக்கு எழுந்தால் (முதலாம் ரகாஅத்திலிருந்தது போல்) சிறிது மெளனமாக இல்லாமல் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்று கிராஅத்-ஓதலைத் துவங்கி விடுவார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)

இவ்வறிவிப்பில், இரண்டாவது ரகாஅத்துக்கு எழுந்தவுடன் சிறிதும் மெளனமான இல்லாமல், “அல்வம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்றதாக கிராஅத்தை ஓத ஆரம்பித்துவிடுவார்கள் எனும் வாசகம் இடம் பெற்றிருப்பதால், “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று ஓதாமலும் “அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்று ஓதத் துவங்கி விடுவார்கள் என்று பொருள் கொள்ள முடியாது.

காரணம் நபி(ஸல்) அவர்கள் “பிஸ்மில்லாஹ்வை” மெதுவாக ஓதிய பின்னரே அல்ஹம்துவைத் துவங்குவார்கள் என்பதை கீழ்க்காணும் வேறு ஹதீஃத்கள்  ஊர்ஜிதம் செய்கின்றன.

நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னாலும், அபூபக்கர்(ரழி), உமர்(ரழி), உஸ்மான்(ரழி) ஆகியோரின் பின்னாலும் நின்று தொழுதிருக்கிறேன். ஆனால் அவர்களில் எவரும், “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்பதை சப்தமிட்டு ஓதிக்கொண்டிருக்கவில்லை. (அனஸ்(ரழி), நஸயீ, அஹ்மத், இப்னு ஹிப்பான்)

எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்தார்கள். அப்போது அவர்கள், “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்பதை  எங்களுக்குக் கேட்கும்படி ஓதவில்லை. (இவ்வாறே) அபூபக்கர்(ரழி), உமர்(ரழி), ஆகியோரிடமிருந்தும் அதை நாங்கள் கேட்டதில்லை. (நஸயீ)

மேற்காணும் ஹதீஃத்களைப் போன்று நபி(ஸல்) அவர்கள் “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்பதை ஓதினார்கள். ஆனால் அதை அவர்கள் சப்தமாக ஓதவில்லை என்பதற்கான பல ஹதீஃத்கள் உள்ளன. (விபரத்திற்கு ஜூன் 88 அந்நஜாத் இதழ் பார்க்க)

ஆகவே நபி(ஸல்) அவர்கள் “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்பதை  சப்தமிட்டு ஓதிக் கொண்டிருக்கவில்லை என்று கூறும்போது மெதுவாக அதை ஓதியுள்ளார்கள் என்பதை தெளிவாகிறது. இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் ஒவ்வொரு ரகாஅத்திலும் “அஊது”வையும் இவ்வாறு ஓதியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரம் ஹதீஃத்களின் வாயிலாக எதுவுமில்லை. ஆகையால் முதலாம் ரகாஅத்தைத் தவிர மற்ற ரகாஅத்துகளில் அஊது ஓதவேண்டும் என்பதில்லை.

இரண்டாவது ரகாஅத்தில் இடம் பெற்றுள்ள இருப்பின் நிலை!

மூன்று அல்லது நான்கு ரகாஅத்துகளைக் கொண்டுள்ள தொழுகையில், இந்த இருப்பு “நடு இருப்பு” எனப்படும். நடு இருப்பு தொழுகையின் பிரதான சுன்னத்துகளில் ஒன்றே அன்றி, அதன் பர்ளுகளைச் சார்ந்ததல்ல. ஏனெனில் ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் அதை மறதியாக விட்டுவிட்டு, நிலைக்கு எழும்பி விட்டார்கள். பின்னர் அதற்காக தொழுகையின் இறுதியில் “ஸஜ்தா ஸஹ்வு” தான் செய்தார்களே அன்றி அதை நிறைவேற்றுவதற்காக நிலையிலிருந்து நடு இருப்புக்கு மீளவில்லை.

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு ளுஹர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது இரண்டாம் ரகாஅத்தில் உட்காராமல் எழும்பி விட்டார்கள். அதையொட்டி மற்றவரும் எழுந்து விட்டனர். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தொழுது, இறுதியாக அவர்கள் ஸலாம் கொடுப்பதை மக்கள் எதிர்பார்த்த்துக் கொண்டிருக்கும்போது, நபி(ஸல்) அவர்கள் தாம் அமர்ந்து கொண்டிருந்த அதே நிலையில், ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் தக்பீர் கூறி இரு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு, பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். (அப்துல்லாஹ்பின் புஹைனா(ரழி), புகாரீ)

நடு இருப்பில் அமரும் முறை :

நபி{ஸல்) அவர்கள் இரண்டாவது ரகாஅத்தில் உட்காரும்போது, தமது இடது காலின் மீது உட்கார்ந்து, வலது காலை (அதன் பாதத்தை) நட்டிக்கொள்வார்கள். (அபூஹுமைத்(ரழி), புகாரீ)

இருப்பில் இருக்கையில் கைகளை எங்கே வைத்து, எந்த விரலால் எவ்வாறு சமிக்கை செய்ய வேண்டும்?

நபி(ஸல்) அவர்கள் (தொழுகை இருப்பில்) தமது இடக்கையை இடது தொடை மீதும், மூட்டுக்காலின் மீதும் (சேர்ந்த அமைப்பில்) வைத்து, இவ்வாறே வலக்கையை வலது தொடை மீதும் வைத்துக் கொள்வார்கள். பின்னர்(சுண்டு விரல், மோதிர விரல் ஆகிய) இரு விரல்களையும் மடக்கியவர்களாக, (இந்நிலையில் நடுவிரலும் ஓரளவு மடங்கியேயிருக்கும்) நடுவிரல் மேல், கட்டை விரலை (சிறிது) வளைத்து வட்டமாக வைத்துக்கொண்டு, துஆ  ஓதியவர்களாக தமது கலிமா விரலை அசைத்த வண்ணம் இருந்து கொண்டிருந்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். (வாயிலுபின் ஹுஜ்ரு(ரழி), அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

விரலை அசைப்பதன் பலன் :

தொழுகையில் இருப்பில் இருக்கும்போது விரலை அசைப்பதானது ஷைத்தானுக்கு கொடுக்கப்படும் சம்பட்டி அடியாகும்.(மூஜாஹித்(ரழி), பைஹகீ)

விரலை அசைக்காமலும் சமிக்கை செய்யலாம்.

நபி{ஸல்) அவர்கள் (இருப்பில் இருக்கும்போது) தமது விரல்களை (அரபியரின் வழக்கிலுள்ள) 53 உடைய அமைப்பில் மடக்கி வைத்துக் கொண்டு, அதாவது வலக்கையின் எல்லா விரல்களையும் மடக்கி வைத்டதுக்கொண்டு, கலிமா விரலின் நடுக்கணுவில் கட்டை விரலை வைத்தவர்களாக சமிக்கை செய்தார்கள். (இப்னு உமர்(ரழி), முஸ்லிம்) கலிமா விரலை மற்ற விரல்களுடன் இணைக்காமலும், அதை அசைக்காமலும் சமிக்கை செய்யும் மற்றொரு முறை :

நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் உட்காரும்போது, கட்டை விரலுக்கு அடுத்துள்ள கலிமா விரலைத் தவிர, மற்ற எல்லா விரல்களையும் மூடிக்கொண்டு அதை மட்டும் உயர்த்திய வண்ணம் சமிக்கை செய்தார்கள். (இப்னு உமர்(ரழி), முஸ்லிம்)

அறவே எந்த விரலையும் மடக்காமல் கலிமா விரலை மட்டும் உயர்த்தி சமிக்கை செய்யும் முறை :

நபி(ஸல்) அவர்கள் இருப்பின்போது கலிமா விரலை கிப்லாவை நோக்கி சமிக்கை செய்தவர்களாக அதைக் கூர்ந்து கவனித்த வண்ணம் இருப்பார்கள். (ஜுபைர்(ரழி), முஸ்லிம், நஸயீ, அஹ்மத்)

மேற்காணும் இந்த அறிவிப்பில் கலிமா விரலை கிப்லாவை நோக்கி சமிக்கை செய்தார்கள் என்று மட்டுமே கூறப்பட்டிருக்கிறதே அன்றி, மற்ற விரல்களை மடக்கி வைத்தார்கள் எனும் விபரம் எதுவும் கூறப்படவில்லை. ஆகவே விரல்களை மடக்காத நிலையில் கலிமா விரலைக் கொண்டு மட்டும் சமிக்கை செய்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

ஆகவே மேற்காணும் ஹதீஃத்கள் அனைத்தும் ஸஹீஹானவையாக இருப்பதால், இவற்றில் எந்த முறைப்படியும் அமல் செய்து கொள்ளலாம். ஒரு சிலர் கூறுவது கோல் “அஷ்ஹது அல்லாஇலாஹ” என்று கூறும்போது, கலிமா விரலை உயர்த்தி “இல்லல்லாஹு” என்று கூறும்போது அதை வைத்து விடவேண்டும் என்பதற்கோ, அல்லது வேறு சிலர் கூறுவதுபோல் “இல்லல்லாஹு” என்று கூறும்போது கலிமா விரலை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்கோ ஹதீஃதின் அடிப்படையில் எவ்வித ஆதாரமும் கிடையாது. “இல்லல்லாஹ்” என்று கூறும்போது விரலை உயர்த்துவது சுன்னத்து என்பதாக, முஸ்லிமுடைய ஓர் அறிவிப்பில் உள்ளது என்பதாக, பிக்ஹுகலையைச் சார்ந்துள்ள இப்னு ஹஜர் (இப்னு ஹஜர் அஸ்கலானி அல்ல) கூறியிருப்பதாக “மீர்காத்”தில் கூறப்பட்டிருப்பது, வெறும் அபத்தமானதாகும், அவ்வாறு முஸ்லிமிலோ அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா போன்ற ஸுனன்களிலோ ஸஹிஹான அறிவிப்போ, அல்லது லயீஃபான – பலகீனமான அறிவிப்போ ஏன் மவ்ழூஃ – இடைச்செறுகளான ஒரு அறிவிப்புக்கூட கிடையாது. இவ்வாறே விரலை உயர்த்தி பின்னர் அதை வைத்துவிட வேண்டும் என்பதற்கும் ஹதீஃத்களில் அறவே ஆதாரமில்லை. ஆகவே இருப்பில் அமரும்போதே கலிமா விரலை உயர்த்திக் கொள்ள வேண்டும்.  (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

************************************************************************

குர்ஆனின் நற்போதனைகள் :

அல்லாஹுவின் சாபத்திற்குரியவர்கள் யார்! யார்!  தொடர் : 3 தொகுப்பு : A.முஹம்மது அலி M.A.,(M.Phil)

1.   அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலேயே நூலை எழுதி வைத்துக்கொண்டு, பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே. அவர்களுக்குக் கேடுதான். (2:79)

2.   அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான். (2:79)

3.   அதிலிருந்து அவர்கள் ஈட்டும், சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான். (அல்குர்ஆன் : 2:79)

4.   நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்குக் கேடுதான். (அல்குர்ஆன் 21:18)

5.  பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான். (அல்குர்ஆன் : 45:7)

6.  அல்லாஹுவுடைய திக்ரை-நினைவை-விட்டும் விலகி எவருடைய இதயங்கள் கடினமாகிவிட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். (அல்குர்ஆன் : 39:22)

7.  (அல்லாஹ்வுக்கு) அவனுக்கு இணைவைப்போருக்குக் கேடுதான். (அல்குர்ஆன் : 41:6)

8.  அல்லாஹுவின் படைப்புகள் வீணாகப் படைக்கப்பட்டவை என்பது காபிர்களின் எண்ணமாகும். அக்காபிர்களுக்கு நரக நெருப்பின் கேடுதான் உண்டு. (அல்குர்ஆன் 38:27)

9.  (அல்லாஹுவுக்கு சொந்தமானவைகளை) நிராகரிப்போருக்கு கடினமான வேதனையால் பெரும் கேடுதான். (அல்குர்ஆன் : 14:2)

10. அளவு(எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். (அல்குர்ஆன் : 83:1)

11.  குறை சொல்லிப் புறம் பேசித்திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.  (அல்குர்ஆன் : 104:1)

12.  (பாராமுகமாகவும், பகட்டுக்கும் தொழும்) தொழுகையாளிக்கு கேடுதான். (அல்குர்ஆன் : 107:4)

13.  (சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு (கடைசி) அந்நாளில் கேடுதான். (அல்குர்ஆன் : 52:11)

14.  (சத்தியத்தை) நிராகரித்துக்  கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் ஒன்று கூடும் மகத்தான நாளில் கேடுதான். (அல்குர்ஆன் : 19:37, 51:60)

15.  அநியாயம் செய்தார்களே, அவர்களுக்கு நோவினைத் தரும் வேதனையின் கேடுதான். (அல்குர்ஆன் 43:65)

16.  (நமது வசனங்களை, அத்தாட்சிகளைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.  (அல்குர்ஆன் : 77:15,19,24,28,34,37,40,45,47,49, 83:10)

அல்லாஹுவைப் பற்றி கெட்ட எண்ணம் எண்ணும் நயவஞ்சக(முனாபிக்கான) ஆண்களையும், பெண்களையும், இணை வைத்து வணங்கும் ஆண்களையும், பெண்களையும், (அல்லாஹ்) வேதனை செய்வான். (அவ்வேதனையின்) கேடு அவர்கள் மீது சூழ்ந்து கொண்டு இருக்கிறது. மேலும் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான். அவர்களை சபித்தும் விட்டான். அவர்களுக்காக நரகத்தையும் சித்தம் செய்திருக்கிறான். அதுதான் செல்லுமிடங்களில் மிகவும் கெட்டது.  (அல்குர்ஆன் : 48:6)                                                                                                                                                                                                                 (இன்ஷா அல்லாஹ் தொடரும்…..)

************************************************************************

அருள்மறையை அறிந்துகொள்வாராக! அருண்ஷோரி!!  – அப்துல்லாஹ்

“அன்றி உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் நீங்கள் கேள்விப்படுவீர்கள். ஆனால் நீங்கள் (அது சமயம்) பொறுமையை மேற்கொண்டு பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே வீரமிக்க செயலாகும்.” (அல்குர்ஆன் : 3:186)

இந்த இறைவாக்குக்கு ஒப்ப அன்று முதல் இன்று வரை இஸ்லாத்தைப் பற்றி இழித்தும் – பழித்தும் முஸ்லிம் அல்லாதோரும் இஸ்லாத்தைச் சரியாகப் புரியாத முஸ்லிம்களில் சிலரும் கூறி வருகின்றனர். அன்று நபி(ஸல்) அவர்களைப் பார்த்து இவர் ஒரு சூனியக்காரர் – மந்திரவாதி – இவர் சொல்வதெல்லாம் கிறிஸ்தவ அறிஞர்களிடமிருந்து கற்றுக் கொண்டவை என்றும் வசைமொழி கூறினர். போயும் போயும் ஒரு அநாதையையா – எழுதப் படிக்கத் தெரியாதவரையா – நம்மைப் போன்ற ஒரு மனிதரையா இறைவன் நபியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்று ஏளனம் பேசினர். எவ்வளவு தான் ஏளனம் பேசினாலும், சத்தியம் வந்தது – அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே போகும் (அல்குர்ஆன் 17:81) என்ற இறைவாக்குக்கு ஒப்ப நபி(ஸல்) அவர்களின் நிலை மேலோங்க ஆரம்பித்துவிட்டது.

இவ்வாறு இஸ்லாம் மிக வேகமாக வளர்ந்து வருவதால், தங்களுடைய கிறிஸ்தவ மதம் அழிந்துவிடுமொ, என்று அஞ்சிய மேலை நாட்டவர் இஸ்லாத்தை எதிர்த்து பல சிலுவை யுத்தங்களை நடத்தி அதிலும் தோல்வியையே கண்டார்கள். இனி இஸ்லாத்தைப் போர் முனையில் வெல்லமுடியாது என்று கருதி தங்களுடைய பேனா முனையால் அதைத் தாக்கத் துவங்கினர். இஸ்லாம் ஒரு வன்முறை நிறைந்த மார்க்கம் – முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தவர்களை கொல்வது ஜிஹாத் எனும் புனிதப் போராகும் என்றும், நபி(ஸல்) அவர்களைப் பற்றி கீழ்த்தரமாக எழுதுவதோடு பல பொய்க் குற்றச்சாட்டுகளையும், இட்டுக் கட்டப்பட்ட செய்திகளையும் கொண்டு இஸ்லாத்தை இழித்துக் கூறத் தொடங்கினர். இந்த விஷமப் பிரச்சாரத்தை தங்களுடைய ஆதிக்கத்திலுள்ள காலனிகளில் பரப்பினர். மெக்டொனால்டு, வில்லியம் மூர் போன்ற பல மேலை நாட்டவர்கள் தங்கள் நூற்களில் இந்திய பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். இதன் பாதிப்பால் இன்றும் பலர் இஸ்லாத்தைப் பற்றித் தவறான எண்ணமே கொண்டுள்ளனர். முஸ்லிம்களில் சிலரும் மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு அடிமையாகி இஸ்லாத்தை முழுமையாகத் தெரியாமல், அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை செம்மையாக புரியாமல் இஸ்லாத்தைத் தவறாக விமர்சிக்கின்றனர். இன்று அந்த அணியில் தன்னையும் இணைத்துப் பெருமையடைபவர்(?)களில் சல்மான் ருஷ்தியும் ஒருவராவார். இவர் அண்மையில், “SATHANIC VERSES”  (“ஷைத்தானிய வசனங்கள்”) என்ற புத்தகத்தை (நாவல்) எழுதியுள்ளார். அதில் குர்ஆன் இறைவாக்கு அல்ல. (நவூதுபில்லாஹ்) அது ஷைத்தானிய உணர்வினால் முஹம்மது என்பவரால் உரைக்கப்பட்டது என்று கூறுவதோடு, நபி{ஸல்) அவர்களின் வாழ்க்கை முறைகளை மிகவும் கூறுவதோடு, நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறைகளை மிகவும் தரக்குறைவாக தன் மனதில் தோன்றியவாறும் விமர்சித்துள்ளார். அவர் கூறிய குற்றச்சாட்டுக்கள் எல்லாம் பொய்யானவை – ஆதாரமற்றவை – முஸ்லிம்களை புண்படுத்தக் கூடியவை என்னும் காரணத்தால் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இன்னும் பல இஸ்லாமிய  நாடுகளும் அப்புத்தகத்தை தடை செய்துள்ளன. இந்தியாவும் இப்புத்தகம் இனக்கலவரத்தை தூண்டும் – முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் என்று கருதியே தடைசெய்துள்ளது.

ஆனால் வகுப்புவாத சக்திகளான BJP. RSS  போன்ற இயக்கங்கள் இத்தடையை நீக்கவேண்டும் என்று கோரி வருகின்றனர். தங்களுடைய பத்திரிக்கையான ஆர்கனைசர் (Organiser)போன்றவற்றில் சல்மான் ருஷ்தியின் விஷக் கருத்தை எழுதி பரப்பி வருகின்றனர். இவர்களோடு சேர்ந்து Indian Express நாளிதழும் அந்தப் புத்தகம் ஏன் தடை செய்யப்படவேண்டும்? என்று வினா எழுப்பியுள்ளது.  ஏற்கனவே அதன் ஆசிரியர் அருண்ஷோரி நபி(ஸல்) அவர்கள், ஒருவர் மற்றவர்களுக்கு எதிராக செய்துள்ள கொடுமைகளையும், பாவங்களையும் மன்னித்தாரே ஒழிய, தனக்கும் தன் குடும்பத்திற்கும் எதிராக கொடுமை செய்தவர்களை தண்டித்தார். மரண தண்டனை வழங்கினார் என்று பொய்த்தகவலை தனது கட்டுரையில் எழுதி தனது வகுப்புவாத வெறியை வெளிப்படுத்தியிருந்தார். மனிதர்களின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உண்டு. இறைவனின் தூதரான முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அந்த அதிகாரம் அறவே இல்லை என்று இஸ்லாம் கூறுவதை அறியாதிருக்கிறார். அருண்ஷோரி, தற்சமயம் சல்மான் ருஷ்தி உள்ளதைத் தானே எழுதியிருக்கிறார், உள்ளதை உள்ளபடிச் சொன்னால் சிலருடைய உள்ளங்கள் துன்புறுகின்றன என்றால் அதற்கு யார் பொறுப்பு? என்று மீண்டும் உளருகிறார். இஸ்லாத்தைத் தனது கொள்கையால் வீழ்த்த முடியாது என்பதால் பொய்க்கு வக்காலத்து வாங்கி தன்னுடைய காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இனி அவர் எடுத்து வைக்கும் வாதங்களையும் அதற்குரிய விளக்கங்களையும் கீழே காண்போம்.

முதலாவதாக அருண்ஷோரி கூறுகிறார் : முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதால் சல்மான் ருஷ்தியின் புத்தகம் தடை செய்யப்படுமானால், கிறிஸ்தவர்கள்,  இந்துக்கள் போன்றவர்களின் மனதை புண்படுத்தும் குர்ஆன் ஏன் இந்திய அரசாங்கமும் தடை செய்யக்கூடாது? என்று உண்மை நிலையை அறிந்து கொண்டே பொறாமையினால் அறியாமை வினா எழுப்புகிறார். அதற்கு குர்ஆனிலிருந்து சில காரணங்களை காட்டுகிறார். குர்ஆன் சொல்கிறதாம்.

“எல்லா நபிமார்களும் மனிதர்களே! ஈஸாவும் நபியே! ஆகவே அவரும் மனிதர்தான்”.

ஆனால் பைபிள் ஈஸாவை இறைவன் என்று சொல்கிறது. குர்ஆனோ அவரை நம்மைப் போன்ற மனிதர் என்று தரம் தாழ்த்துகிறது. இச்செயல் கிறிஸ்தவர்களின் மனதைப் புண்படுத்தாதா? ஆகவே குர்ஆனையும் தடை செய்யவேண்டும் என்றும் கூறுகிறார்.

இது எவ்வளவு போலியான வாதம் என்பதைப் பார்ப்போம். உலகிற்கு நேர்வழி காட்ட வந்த நபிமார்கள் அனைவரும் மனிதர்களே என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இது எப்படி கிறிஸ்தவர்களின் மனதைப் புண்படுத்துகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. அவருடைய வாதப்படி பார்த்தால் கடவுளே இல்லை – கடவுளை கற்பிப்பவன் முட்டாள் என்று நாத்திகர்கள் சொல்வது கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திகர்களைப் புண்படுத்துகிறது. ஆகவே, நாத்திகத்தை தடை செய்யவேண்டும் என்று சொன்னால் அது முறையா? இதையே திருப்பி கடவுள் நம்பிக்கை கொள்கை எங்களை புண்படுத்துகிறது என்று நாத்திகர்கள் சொன்னால் அந்த கொள்கையை கொண்ட இந்து,  கிறித்தவ, இஸ்லாம் போன்ற மதங்களை – மார்க்கத்தை தடை செய்ய வேண்டும் என்று சொன்னால், எதை தடை செய்வது, எதை தடை செய்யாமல் இருப்பது? இந்துக்களின் கொள்கை முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்துகிறது.  ஆகவே இந்த மதத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்த அருண்ஷோரி கோருவாரா? மேலும் அருண் ஷோரியின் கூற்றுப்படி பார்த்தாலும் இஸ்லாம் ஈஸா நபியை பழித்தும் இழித்தும் பேசுகிறது? அவருடைய தூதுத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது – ஈஸா நபி தகப்பன் இல்லாமல் பிறந்ததை ஏற்றுக்கொள்கிறது. ஏன்? மர்யம் என்ற அத்தியாயத்தையே இறைவன் இறக்கி, ஈஸா நபியின் தாயின் கற்பைப் பற்றி சந்தேகிக்கிறவர்களின் கூற்றை நிராகரித்து ஈஸா(அலை) அவர்களை கண்ணியம் அல்லவா படுத்துகிறது. இதையெல்லாம் மறைத்து நாகூசாமல் எவ்வாறு துணிந்து பொய் கூறுகிறார் பிரபல பத்திரிக்கை ஆசிரியர்?

பத்திரிக்கை தர்மமான – News are secred bit views are free செய்திகள் புனிதமானவை – உண்மையானவை – கலப்படமற்றவை. ஆனால் விமர்சனங்கள் சுதந்திரமானவை என்ற நியதியைக்கூட தன்னுடைய காழ்ப்புணர்ச்சியால் மறந்து – மறைத்து சல்மான் ருஷ்தியின் பொய்ச் செய்திக்கு வக்காலத்து வாங்கி பத்திரிக்கை தர்மத்தின் புனிதத்துவத்தையே கலங்கப்படுத்தி விட்டார்.

பத்திரிக்கைச் சுதந்திரம் என்பது பொய்த் தகவல்களையும் – அரைகுறையாக இட்டுக்கட்டப்பட்ட ஆதாரமில்லாத அவதூறுச் செய்திகளையும் தருவது ஆகாது என்பதால்தான் இப்புத்தகம் தடை செய்யப்பட்டது என்பதைக்கூட தன்னுடைய வகுப்புவாத வெறியால் தன் நிலை மறந்து மறைக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக அவர் எழுதியுள்ள செய்தியில் இருந்து தெரிகிறது.

இனி அருண்ஷோரி கூறியுள்ள இரண்டாவது குற்றச் சாட்டையும் அதன் உண்மை நிலையையும் காண்போம்.

சல்மான் ருஷ்தியின் நூல் இனக்கலவரத்தையும், உள்நாட்டு குழப்பத்தையும் தூண்டும் வண்ணம் உள்ளது என்றால், அதைவிட அத்தீமைகளை அதிகம் உண்டாக்கக் கூடிய குர்ஆனையும் ஏன் தடை செய்யக்கூடாது? என்று கூறி கீழ்வரும் குர்ஆன் வசனங்களை அதற்கு சான்றாகத் தருகிறார்.

நிராகரிப்போரை உங்களால் எவ்வளவு அதிகமாக வெட்ட முடியுமோ அந்த அளவிற்கு அவர்களுடைய கழுத்தை வெட்டுங்கள். எஞ்சியவர்களைப் பிடித்து கட்டுங்கள். (அல்குர்ஆன் : 47:4)

இங்கேயும் அருண்ஷோரி இஸ்லாத்தைத் தன் கொள்கையால் வெல்ல முடியாது என்பதை அறிந்து தாழ்வு மனப்பான்மையினால் தப்பும் தவறுமாய் உண்மைக்குப் புறம்பாய் உளறுகிறார். அவர் செய்த முதல் தவறு வசனத்தை முழுமையாகக் குறிப்பிடவில்லை. இரண்டாவதாக அந்த வசனம் இறக்கப்பட்ட வரலாறு – சூழ்நிலை போன்ற உண்மைத் தகவலையும் இருட்டடிப்பு செய்துவிட்டார். அந்த வசனத்தை முழுமையாகக் காண்போம்.

(விசுவாசிகளே! உங்களை எதிர்த்து யுத்தம் புரியும்) நிராகரிப்போரை நீங்கள் சந்திப்பீர்களாயின். அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களை நீங்கள் முறியடித்து விட்டால் பிடித்துக் கட்டுங்கள். அதன் பின்னர் அவர்களுக்காக யாதொரு ஈடுபெற்றேனும் அல்லது, கருணையாகவேணும் விட்டுவிடுங்கள்.  (இவ்வாறு யுத்தம் புரியும் எதிரிகள்) தம் ஆயுதங்களை கீழே வைக்கும் வரையில் (யுத்தம் செய்யுங்கள்) (அல்குர்ஆன் : 47:4)

மேலே உள்ள இறைவசனத்தில் அல்லாஹ்வின் பாதையில் செல்வதை விட்டும் உங்களை தடுப்போரை எதிர்த்து தற்காப்புப் போர் புரியுங்கள் என்றுதான் கூறுகிறதே ஒழிய, அவ்வாறு உங்களைத் தடுக்காதவர்களையும் அருண்ஷோரி கூறுவதுபோல் ரோட்டில் செல்லும் முஸ்லிம் அல்லாதவர் அனைவரையும் வெட்டுங்கள் என்று இஸ்லாம் கூறவில்லை. மேலும் இவ்வசனம் பத்ரு போர்களத்தில் இரண்டு படைகளும் எதிர் எதிராக இருக்கும் வேளையில் அருளப்பட்டது. போர் சமயம் அருளப்படுகின்ற வசனம் எதிரிகளை வெட்டும்படியாகத்தான் இருக்கும் என்பது நடுநிலையாளர்கள் அனைவருக்கும் விளங்கும் உதாரணமாக இந்தியாவிற்கும், சீனாவிற்கும் போர் நடைபெற்ற சமயம் இந்திய அரசாங்கம் சீனர்களைக் கண்டால் விட்டுவிடுங்கள். அவர்கள் உங்களைத் தாக்க வந்தால் கருணை காட்டுங்கள் என்றா கூறியது இல்லையே! மாறாக, சீனர்களைக் கொன்றவர்களை வீரர்கள் என்றும் எதிர்த்துப் போர் புரிந்து மாண்டவர்களை நாட்டுக்காக வீரமரணம் எய்தியவர்கள் – தியாகிகள் என்றும் கெளரவித்து பட்டமல்லவா கொடுத்தது. இதேபோல் அன்றைய முஸ்லிம்கள் தங்களைப் பாதுகாக்க தற்காப்புப் போர் புரிந்தது தவறா? இஸ்லாம் செய்தால் பிற்போக்குத்தனம். அதையே மற்றவர்கள் செய்தால் முற்போக்குத்தனம். மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்கிறாரே அருண் ஷேரி. உண்மையிலேயே இவர் கூறுவதுபோல் இஸ்லாத்தில் அவர்களை கொலை செய்வதுதான் நோக்கம் என்றால் பணயக் கைதிகளான பிறகு அவர்களை கொலை செய்வது இன்னும் சுலபமாயிற்றே. ஆனால் சரண் அடைந்த அவர்களை கருணைகாட்டி விடுதலை செய்துவிடுமட்படி இஸ்லாம் சொல்கிறதென்றால், கொலை செய்வது நோக்கமல்ல என்ற சாதாரண உண்மை கூட இஸ்லாத்தின் மீது கொண்ட பொறாமையினால் இவ்வளவு பெரிய பத்திரிக்கை ஆசிரியரின் அறிவுக்குத் தென்படவில்லை.

அடுத்து, நிராகரிப்போரை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றியவாறு அவர்களை வெளியேற்றுங்கள். கலகம் கொலையை விடக் கொடியது. எனவே அவர்களை எதிர்த்து போர் செய்யுங்கள். கலகம் முடியும்வரையும் அல்லாஹ்வை அவர்கள் வணங்கும் வரையும்………………………. (அல்குர்ஆன் 2:191) என்ற இறை வசனத்தை அருண்ஷோரி அரைகுறையாக சுட்டிக்காட்டி இதுவும் வன்முறையையும், வகுப்புக் கலவரத்தையும் தூண்டுவதாகவே உள்ளது என்கிறார். அதன் முழு வசனத்தையும் கீழே காண்போம்.

அல்லாஹ்வுடைய பாதையில் (நீங்கள் சொல்வதைத் தடுத்து) உங்களை எதிர்த்தோருடன் நீங்களும் யுத்தம் புரியுங்கள். ஆனால் நீங்கள் வரம்பு மீறிவிடவேண்டாம். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் : 2:190)

ஆகவே (உங்களை எதிர்த்து யுத்தம் புரிய முற்பட) அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து அவர்கள் வெளியேற்றியவாறு,  நீங்களும் அவர்களை வெளியெற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையைவிட மிகக் கொடியது. ஆனால்(அவர்களில்) எவரேனும் (அபயம் தேடி) மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து யுத்தம் புரிய முற்படும் வரையில், நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்து யுத்தத்திற்கு வந்தால், நீங்களும் அவர்களை வெட்டுங்கள். அந்த நிராகரிப்போருக்கு உரிய கூலி இதுவே.  (அல்குர்ஆன் : 2:191)

(இதன்) பின்னும் அவர்கள் (உங்களை எதிர்த்து யுத்தம் புரியாது விலகிக் கொண்டால் (நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும் அதிக அன்புடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:192)

அன்றி(இஸ்லாத்திற்கு விரோதமாகச் செய்யப்படும்) கலகம் முற்றிலும் நீங்கி, மார்க்கம் அல்லாஹ்வுடையதாக உறுதிப்படும் வரையில் அவர்களை எதிர்த்து யுதட்தம் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கவகஞ் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களிலும்) அக்கிரமம் செய்தவர்களைத் தவிர (மற்றவர்களை துன்புறுத்தி) வரம்பு மீறாதீர்கள். (அல்குர்ஆன் : 2:193)

(இதுபோன்றே 5:33 என்ற வசனத்திலும் இறைவன் பூமியில் விஷமம் செய்து குழப்பம் செய்பவர்களை வெட்டும்படி கூறுகின்றன. ஆனால் 5:34 என்ற வசனத்தில் யாராவது பச்சாதாபப்பட்டு திருந்திவிட்டால் அல்லாஹட் மன்னிப்போனாகவும், கிருபையுடையோனுமாகவும் இருக்கின்றான் என்று கூறுகிறான்.    ஆனால் 5:34ல் அவர்களை திருந்திவிட்டால் மன்னித்துவிடுகிறான் என்ற வசனத்தையே முழுமையாக மறைத்து இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம் என்பதைப் போல் சித்தரிக்கிறார் அருண்ஷோரி என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ளவும்.)

இங்கேயும் அருண்ஷோரி வசனத்தை முழுமையாக குறிப்பிடாமல் அதன் முற்பகுதியையும், பிற்பகுதியையும் விட்டுவிட்டு பார்ப்பவர்களுக்கு இஸ்லாம் கொடுமை நிறைந்த மார்க்கம் என்று காட்டும் வண்ணம் சித்தரித்து தனது வகுப்புவாத வெறியையும், காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலே உள்ள நான்கு இறை வசனத்திலும் இறைவன் திரும்ப திரும்ப நிராகரிப்பவர்கள் தாக்கினால் தான் நீங்களம் திரும்ப தாக்கவேண்டும் என்றும், அவர்கள் விலகிக்கொண்டால் அவர்களை வெட்டாது விட்டுவிடுங்கள். ஏனெனில் இறைவன் மன்னிப்பவனாகவும் அதிக அன்புடையவனாகவும் இருக்கின்றான் என்று கூறுவதோடு மட்டும் நில்லாமல் யார் இதை மீறுகிறார்களோ, அவர்கள் வரம்பு மீறியவர்கள், அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானவர்கள் என்று எச்சரித்து மன்னிக்கும் பண்பை மக்களிடம் வளர்க்கிறது இஸ்லாம். இதைப்போய் வன்முறையைத் தூண்டும் வசனம் என்று அருண்ஷோரி கூறுவதிலிருந்து எத்தகைய கொடூர நெஞ்சம்-கபட உள்ளம் கொண்டவர் என்பது தெளிவாகிறது.

மேலும் இவ்வசனம் இறக்கப்பட்ட வரலாற்றை அறிந்தால் இன்னும் உண்மை நிலை விளங்கும். இந்த வசனம் மதீனாவில் இருந்த நயவஞ்சகர்களை (மூனாஃபிக்குகளை) குறித்து இறங்கியது. அவர்கள் எத்தகைய குற்றங்களையெல்லாம் செய்தார்களென்றால் மதீனாவில் உள்ள ராணுவ ரகசியங்களை மக்கத்து காஃபிர்களுக்கு உளவு சொல்லி “ஐந்தாம் படை” வேலை செய்தனர். மதீனாவில் அவ்ஸ்,  கஜ்ரஜ் என்ற இரு கோத்திரத்தினர் வாழ்ந்தார்கள். பல காலமாக அல்விரு வகுப்பாரும் ஒருவரையொருவர் தாக்கியே வந்தார்கள். அவ்விரு வகுப்பாரையும் இஸ்லாம் ஒன்றுபடுத்தியது. ஆனால் இந்த முனாஃபிக்குகள் அவ்விரு வருப்பாரையும் பழைய விரோத உணர்வுகளை தூண்டிவிட்டு மதீனாவில் உள்நாட்டு கலகத்தை ஏற்படுத்த முனைந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் மதீனாவில் நபி(ஸல்) அவர்களை யாராவது தாக்க வந்தால் அவர்களை எதிர்த்துப் போர் புரிய தயார் என்று நபி(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி செய்து கொடுத்துவிட்டு  அப்படி சந்தர்ப்பம் வந்த சமயங்களிலெல்லாம் ஏதேனும் சாக்கு போக்குச் சொல்லி தாங்கள் கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின் வாங்கி விடுவார்கள். அச்சமயம் அத்தகைய முனாபிக்குகளை எச்சரிக்கும் வண்ணமே இவ்வசனம் அருளப்பட்டது. நயவஞ்சகர் களை எச்சரித்து இறங்கும் வசனம் இப்படித்தானே இருக்கும். உதாரணத்திற்கு நம் நாட்டு ராணுவ ரகசியங்களை அந்நிய நாட்டிற்கு யாராவது விற்றால் – காட்டிக் கொடுத்தால் – நாட்டில் உள் நாட்டுப் போரையும், கலகத்தையும் தூண்டினால் அத்தகைய விஷமிகளுக்கு நம் இந்திய நாட்டின் பிரதமர், கருணை காட்டுங்கள்; அவர்களை விட்டுவிடுங்கள் என்று ஆணையர் கட்டளைவிடுவார்?  அத்தகைய தீய சக்திகளுக்கு எதிராக மரண தண்டனை நிறைவேற்றும்படி இன்றைய 21ம் நூற்றாண்டில் எத்தனையோ, இஸ்லாம் அல்லாத நாடுகள் கூட சட்டம் இயற்றி வைத்துள்ளன என்பதெல்லாம், அறிந்த அருண்ஷோரிக்கு அறிவில் படவில்லை. அதையே இஸ்லாம் செய்தால் அது பிற்போக்குத்தனம், ஆம்! இவர்கள் தான் தங்களை முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள். அந்துலே விவகாரத்தை அம்பலத்திற்கு கொண்டுவந்த விஷயத்தில் தன்னுடைய குற்றச்சாட்டை உறுதிப்படுத்த எத்தனை ஆதாரப்பூர்வமாக தான் சொல்லும் குற்றச்சாட்டிற்கெல்லாம் Photo Statd Copy யோடு வெளியிட்ட ஆசிரியர் இஸ்லாத்தைப் பற்றி சொல்லும்போது அந்த நிலைகளையெல்லாம் – நியதிகளையெல்லாம் – நியதிகளையெல்லாம் மறந்து காழ்ப்புணர்வு கொண்டு முன்னுக்குப்பின் முரணாகவும் – அரைகுறையாகவும் பொய்யாகவும்  வெளியிட்டு மற்றவர்களின் மனதில் தப்பு எண்ணத்தையும் இனக்கலவரத்தையும்  தூண்டிவிட்டு தன்னைத்தானே தரம் தாழ்த்தி கொள்கிறார்.

மேலும் அருண்ஷோ கூறுவதுபோல் இஸ்லாம் ஒரு வெறிகொண்டு வன்முறையைத் தூண்டுகின்ற கொடுமை மிக்க மார்க்கம் என்றால் அதைப் பற்றிய உண்மை நிலையை அறிய இஸ்லாம் போர் காலங்களில் அதுவும் வெற்றி பெற்ற சமயங்களில் மாற்று மதத்தவருடன் எவ்வாறு நடந்து கொண்டது என்பதை கீழ்வரும் வரலாறு மூலம் பார்ப்போம்.

இஸ்லாம் இவ்வுலகில் தழைத்தோழ்க காரணமாய் விளங்கிய முதல் போர் பத்ருப்போர்,  இப்போரில் எதிரிகள் மிகப்பெரிய படையுடனும் ஆயுத பலத்துடனும் நபி(ஸல்) அவர்களை எதிர்த்து போரிட்டனர். இறுதியில் வெற்றி இஸ்லாத்திற்கே, அதில் 72 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதில் இருவரை தவிர மற்றவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். வசதி படைத்தவர்களிடமிருந்து பொருளைப் பெற்றும், வசதியற்றவர்களிடமிருந்து எவ்வித  ஈட்டு தொகையும் பெறாமலும் விடுவிக்கப்பட்டனர். கல்வியறிவுடையவர்கள் முஸ்லிம்களின் குழந்தைகளில் குறைந்தது 10 பேர்களுக்காவது எழுதப் படிக்கத் தெரியும் அளவிற்கு கல்வியை போதித்த பிறகு விடுதலை செய்யப்பட்டனர். (இங்கே கல்விக்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த முக்கியத்துவம் நமக்கு படிப்பினையாகவும் அமைந்துள்ளது)

உண்மையில் இஸ்லாம் மற்றவர்கள் கொலை செய்யச் சொல்கிறது என்றால் இங்கு கைதிகளாக பிடிபட்ட  அனைவரும் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டுமே! ஆனால் அவர்களையெல்லாம் நபி(ஸல்) அவர்கள் மன்னித்து விட்டார்களே! இது போதாதா அவர்கள் கருணை நபி என்பதை நிரூபிக்க – இஸ்லாம் கொடுமை மிக்க மார்க்கம் என்பதை பொய்ப்பிக்க, இதுவெல்லாம் அருண் ஷோரியின் அறிவிற்கு படவில்லையோ?

ஏன்? மக்கா வெற்றியின்போது நபி(ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறை உலகிற்கே அவர்கள் ஒரு முன்மாதிரி என்பதை நிரூபிக்க போதுமானதாய் உள்ளதே!

சுமார் 10 ஆயிரம் முஸ்லிம்களுடன் மக்காவிற்குள் நுழைந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், அப்பொழுது நபி(ஸல்) அவர்களையும், முஸ்லிம்களையும் சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாக்கிய மக்கத்து மக்களுக்கு எதிராக அவர்கள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களை அன்று தடுத்து நிறுத்த எந்த மனித சக்தியும் கிடையாது. ஆனால் காருண்ய நபி செய்தது என்ன?

யாரெல்லாம் கஃபாவின் எல்லைக்குள் அடைக்கலம் தேடினார்களோ அவர்களுக்கு மன்னிப்பு.

முஸ்லிம்களுக்கெதிராக பல கொடுஞ்செயலை செய்தவர்களுக்கெல்லாம் தலைமை ஏற்று நின்ற அபூசுப்யானுக்கும், அவர் வீட்டில் யாரெல்லாம் அடையாளம் தேடினார்களோ அவர்களுக்கெல்லாம் பொது மன்னிப்பு என்றார்கள்.

யாரெல்லாம் பயந்து தங்கள் வீட்டில் தாழிட்டுக் கொண்டார்களோ அவர்களுக்கும் மன்னிப்பு என்று கூறிவிட்டு அம்மக்களைப் பார்த்து இனி நீங்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்க, அதற்கு அவர்கள், நீர் கண்ணியமிக்க எங்கள் சகோதரர், உம்மிடம் நாங்கள் நன்மையையே எதிர்பார்க்கிறோம் என்றனர். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் யூசூப் (அலை) அவர்கள் தங்களுக்கு எதிராக கொடுமை செய்த தன்னுடைய சகோதரர்களைப் பார்த்து ஓதிய வசனத்தை ஓதிக் காட்டுகிறார்கள்.

“கால லாதத்ரீப அலைக்குமுல் எவ்ம யஃபிருல்லாஹு
லக்கும் வஹுவ அர்ஹமுர்ராஹிமீன்”

இன்றைய தினம் உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை. அல்லாஹ் உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர் களிலெல்லாம் மகா கருணையாளன் என்று கூறினார்கள். (12:92)

எந்த மக்கள் நபி(ஸல்) அவர்கள் நடந்து சென்ற பாதைகளில் எல்லாம் கற்களையும், முட்களையும் போட்டு துன்புறுத்தினார்களோ.

கல்லாலும் – கடும் சொல்லாலும் அடித்து அவர்களைப் புண்படுத்தினார்களோ,

தொழுகையை நிறைவேற்றும்போது அழுகிய ஒட்டகக் குடலை அவர்கள் மீது போட்டு மூச்சை திணரச் செய்தார்களோ,

கூச்சலும் குழப்பமும் போட்டு அவர்கள் தொழுகையை குழப்பினார்களோ,

ஷுஅபே அபிதாலிப் என்ற கணவாயில் உணவும்,  உடையும் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல், பச்சிளம் குழந்தைகள் இருக்கின்றனர் என்பதையும் கருதாமல் ஒதுக்கி வைத்தார்களோ அத்தகைய மக்களைப் பார்த்து,

இன்றைய தினம் உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை என்று ஒரு தலைவர் சொன்னால், அவர்களைப் பார்த்து கொடுமைக்காரர் என்றால், சொல்பவர்கள் எத்தகைய கல்நெஞ்சம் கொண்டவர்களாக இருப்பார்கள்? என்பதை நாம் அறியலாம்.

அது மட்டுமா செய்தார்கள்? ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, எனது கணவர் இக்ரிமா தங்களுக்கு பயந்து அபீஸீனியாவிற்கு தப்பியோட இருக்கிறார். அவரை நீங்கள் மன்னிப்பீர்களா? என்று கேட்க, அவரையும் நான் மன்னித்தேன் என்றார்கள்.

* தன்னுடைய சிறிய தந்தை ஹம்ஸா(ரழி) அவர்களை உலக யுத்தத்தில் கொலை செய்த வஹ்ஷீயைப் பார்த்து உன்னையும் நான் மன்னித்தேன் என்றார்கள்.

*  அப்படி ஷஹீதாகி கிடந்த ஹம்ஸா(ரழி), அவர்களின் உடலிலுள்ள காதை அறுத்தார், மூக்கை அறுத்தார், அவர்களின் வயிற்றைக் கிழித்து குடலை உருவி மாலையாகப் போட்டு வெறியாட்டமாடினார். அவர்களுடைய ஈரக்குலையைக் கடித்து, மென்று துப்பினாரே, அந்த   ஹிந்தாவைப் பார்த்து, உன்னையும் நான் மன்னித்தேன் என்றார்கள்.

*  தனது சொந்த மகள் கர்ப்பினியான ஜைனப்பை தாக்கி, ஒட்டகத்திலிருந்து வீழ்த்தி அதனால் கருச்சிதைந்து அதன் காரணமாக அவர்கள் இறக்கும் நிலையை ஏற்படுத்தியவர்களைப் பார்த்து உங்களையும் நான் மன்னித்தேன் என்றார்கள்.

* தன்னை கொலை செய்ய மதினா நோக்கி வந்த சுராக்காவைப் பார்த்து உன்னையும் நான் மன்னித்தேன் என்றார்கள்.

* அதற்கு தூண்டுகோலாக இருந்த நபி(ஸல்) அவர்களைக் கொன்றுவிட்டு வந்தால் பெரும் சன்மானம் தருவேன் என்று பறைசாற்றிய ஸஃப்வானைப் பார்த்து, உன்னையும் மன்னித்தேன் என்றார்கள்.

இத்தனை காருண்யமிக்க நபியைப் பார்த்து கொடுமைக்காரர் என்று கூற இப்படித்தான் இவர்கள் மனம் துணிந்ததோ? உலக வரலாற்றின் எங்காவது வெற்றி பெற்ற படை இவ்வளவு கண்ணியமாகவும், பெருந்தன்மையாகவும் நடந்ததுண்டா?  சூறை – கற்பழிப்பு – கொள்ையடித்தல் – கொடுமைப்படுத்துதல் போன்ற செயல்கள்தான் வெற்றி பெற்ற படையின் வீரச் செயல்களாக இருந்ததாக வரலாற்றில் காண்கிறோம்.

இவ்வளவு கண்ணியமாக நடக்கச் சொல்லும் இஸ்லாத்தை, வன்முறையையும், வெறியையும் தூண்டும் மார்க்கம் என்று அருண்ஷோரியை இந்த அளவிற்கு தரம் தாழ்த்தி எழுத வைத்துள்ளது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆகவே, சகோதர சகாதரிகளே இதுபோன்று விஷமப் பிரச்சாரம் நடைபெறும்போதெல்லாம் இஸ்லாத்தின் உண்மைகளை விளக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து தெளிவுப்படுத்த வேண்டும். இன்று நமது தமிழகத்தில் மட்டும் சுமார் 23 இலட்சம் வயது வந்த முஸ்லிம்கள் உள்ளனர். ஒரு லட்சம் பேருக்கு 10 கடிதம் என்றாலும் சுமார் 23 கடிதங்கள் பொய் குற்றச்சாட்டை கூறியவர்களுக்குப் போய் சேர்ந்திருக்கும். ஆனால் நம்மில் எத்தனை பேர் அதைச் செய்தோம். வல்லநாயன் நம்மைப் பார்த்து சிறந்த சமுதாயம்  ‘ஹைர உம்மத்’ ஏனெனில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர்கள் என்று சிறப்பித்து கூறினாலே அதை நாம் செய்ய வேண்டாமா? ஆகவே இனிமேல் இதுபோன்ற பொய்ப்பிரச்சாரம் இஸ்லாத்தைப் பற்றி செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு உண்மை விளக்கத்தை அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் விளக்குவோமாக! அதன் நோக்கமாகவே இதைச் சற்று விரிவாக எழுதினோம்.

வல்ல நாயன் எல்லோருக்கும் நேரான வழியைக் காட்டியருள்வானாக! ஆமீன்.

N.B. இஸ்லாம் மாற்று மதத்தவரோடு எப்படிப்பட்ட உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. அவர்களுக்கு எத்தகைய கண்ணியம் கொடுக்கிறது என்பதைப் பற்றி அடுத்து காண்போம்.

***************************************************************************

மெய்ப் பொருள் காண்பொம், அவ்வழி நடப்போம்.   தொடர் : 2  Er.H. அப்துஸ்ஸமது, சென்னை.

நாம் படைத்தவர்களில் சிலருண்டு, அவர்கள் சத்திய வழியை (பின்பற்றுவதுடன் மற்ற மக்களுக்கும்) அறிவித்து, அதனைக் கொண்டே நீதியும் செய்கின்றனர்.” (7:181)

நிச்சயமாக நாமே இவ்வேதத்தை இறக்கி வைத்தோம். மேலும் நிச்சயமாக  இதற்கு நாமே பாதுகாவலாயிருக்கிறோம். (15:9)

என்று அல்லாஹ் மொழிந்திருப்பதற்கேற்ப அல்லாஹ்வின் அருளால் அவன் நாடியபடி, அவனுக்குக் கருவியாக விளங்கி குர்ஆனைப் பாதுகாப்பதிலும், நபிமொழிகளைச் சேகரிப்பதிலும், தொகுப்பதிலும், பாதிப்பதிலும் இவர்கள் தங்கள் சக்தியையும், காலத்தையும் அர்ப்பணித்தது போல் வேறெந்தப்பணிக்கும் அர்ப்பணிக்கவில்லை என்பது சரித்திரச் சான்றாகும். எனினும் முஸ்லிம்களிடையே மேலே கூறியவாறு அவல நிலை பரவக் காரணம் என்ன?

இறைவனால் அருளப்பட்ட வேதத்தைத் திரித்துக்கூறி இறைவனுக்கே உரித்தான இயல்புகளில் சிலவற்றை மனிதனுக்கும் உள்ளதாக நம்பியவர்களை வணங்கத் தலைப்பட்டதால் யூதக் கிறித்தவர்களுடையவும், பிற மதத்தினர்களுடையவும் இறைவழிபாடு முறைகள், சம்பிரதாயங்கள், ஒழுக்க நெறி யாவும் இறை வேதத்திற்குப் புறம்பாகவும், முரணானவையாகவும் அமைந்து விட்டன. இதேபோல் முஸ்லிம்களும் இன்று கோட்பாடுகள், சமய சம்பிரதாயங்களின் அடிப்படையில் நேர்வழியை விட்டும் அகன்று நிற்கின்றனர். அல்லாஹ்வை விட்டு வேறு இறைவனை அல்களர் ஏற்றுக் கொண்டதாக நாம் கூறவில்லை. ஆனால் அல்லாஹ் ஒருவனுக்கே முற்றிலும் வழிட்டவர்களாக அவர்களின் வாழ்க்கை முறை அமையவில்லை என்பது உண்மை. அல்லாஹ்வின் ஏகத்துவத்தில் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று நாம் விளம்பவில்லை, எனினும் மனித சமுதாய வாழ்க்கைச் சட்டதிட்டங்களை, விதிமுறைகளை இயற்றும் அறிவும், ஆற்றலும், அதிகாரமும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே உண்டு என்ற இறைக் கோட்பாட்டில் உவமையிழந்து அத்தன்மைகள் யாவும் மனிதர்களுக்கும் உண்டு என்று நம்பி அவர்களால் இயற்றப்பட்ட சட்ட திட்டங்களை, நியமங்களை ஏற்று வாழத் தலைப்பட்டனர். அதுமாத்திரமல்லாமல், ‘அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன், தீர்ப்பு நாளின் அதிபதி (ஆக உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவித் தேடுகிறோம்” (1:2,3,4) என்று ஒரு நாளைக்குக் குறைந்தது பதினேழு முறை அல்லாஹ்வின் முன் கைகட்டி நின்று உறுதி கூறும் முஸ்லிமில் உயிருள்ளவர்களும் மரித்தவர்களுமாகிய மனிதர்களிடமே தஞ்சம் அடையலாயினர்.

நபியே “பூமியும் அதிலுள்ளவைகளும் யாருக்குடையன? நீங்கள் அறி்ந்திருந்தால் கூறுங்கள்” எனக்கேளும், அதற்கவர்கள் “அல்லாஹ்வுக்குரியனவே” என்று கூறுவார்கள். நீங்கள் நல்லுணர்ச்சி பெற மாட்டீர்களா? என்று கூறும். ஏழு வானங்களுக்கு இறைவனுக்கு மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்? எனக் கேட்பீராக. அதற்கவர்கள் “அல்லாஹ்தாவ” என்று கூறுவார்கள்.  “நீங்கள் அவனை (பயபக்தியுடன்) உணர்ந்து கொள்ள வேண்டாமா?” என்று கூறும். சகல பொருட்களின் அதிகாரம் யார் கையில் இருக்கின்றது? யாராலும் இரட்சிக்கப்படாத (ஆனால் எல்லோரையும்) இரட்சிக்கப்படக் கூடியவன் யார்? நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள்) எனக் கூறும் அதற்கவர்கள் “அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள் “நீங்கள் உங்கள் அறிவை எங்கு இழந்து விட்டீர்கள்” என்று கூறும். (23:84-88)

மேலே குறிப்பிட்ட இறை வசனங்கள் இன்றைய முஸ்லிம்களின் நிலை எத்தகையது என விளக்குகின்றன.

இங்ஙனம் கொண்ட ஈமானுக்கும் முரணாக, உறுதிமொழிக்கு மாறாக, இறைவன் ஒருவனுக்கே உரிய இயல்புகளை மனிதர்கள் பறைசாற்றி, அவர்களை நம்பி வாழ முனைந்தார்கள் முஸ்லிம்கள், ஆதலின் அவர்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் மட்டுமின்றி இறைவணக்க வழிபாடுகளையும் நிர்ணயிக்கவும், நிர்வகிக்கவும் வல்ல நியதிகளும்,  நியமங்களும் முழுவதும் அல்லவெனினும் கணிசமான  அளவில் மனிதர்களால் இயற்றப்பட்டன. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முற்றிலும் அல்லாஹ்விற்கு வழிபடவேண்டிய முஸ்லிம்கள் இந்நிலைக்கு தள்ளப்பட காரணம் யாது? நேரடியாகவும், முறையாகவும், சீராகவும் திருமறையையும், நபிமொழிகளையும் கற்கவும், அறியவும் முனையாத மக்களும், மார்க்க அறிவைப்பெறவும், இறைவழிப் பாடுகளை நிறைவேற்றவும் அவர்கள் நம்பி நாடிய மவ்லவிகளுமல்லவா இதயங்களைத் தொட்டு அவைகளிடமே கேட்டு மறுமொழி பகாவீர்;

இத்தகைய அவலநிலை மாறி அல்லது மாற்றப்பட்டு முஸ்லிம்கள், கொண்ட ஈமானுக்கு ஏற்ப இறைவனை முறையாக உணர்ந்து, அவனுக்கு முற்றிலும் வழிபட்டவர்களாக வாழ்ந்திட வேண்டும். முதற்கண் “ஈமான்” என்பதனட் தாத்பரியத்தை விளங்க வேண்டும். ஈமான் என்பதை வெறும் “நம்பிக்கை” “விசுவாசம்” என்று சாதாரண ரீதியில் பொருள் கொள்ளலாகாது. ஒருவன் தான் பொதுவாக நம்பிக்கை கொண்டுள்ள தத்துவம் அல்லது சித்தாந்தத்தில் அதன் சத்தியம், உறுதிநிலை குறித்து, சந்தேகம் கொள்ள சாத்தியமுண்டு. இருந்தும் வெறும் அனுமானத்தின் அடிப்படையில் நம்பிக்கை ஏற்படலாம். ஆனால் ஈமான் என்பது அனுமானத்தின் அடிப்படையில் மேலெழுந்தவாரியாக ஏற்படும் நம்பிக்கை அல்ல. சந்தேகம், ஊகம், நிச்சயமின்மை இவைகளுக்கு அறவே இடமின்றி அறிவாய்ந்த வாய்மைகளில் ஊர்ஜிதம் பெற்ற திடச் சித்தம் (CONFIRMED CONVICTION)  ஆகும். அது ஒரு செயல் அல்ல, தீர்மானமல்ல, இசைவு பெற்ற முடிவல்ல. உண்மையென்று அறியாத நிலையில் ஏற்கும் சித்தாந்தமல்ல. ஒரு உண்மை அல்லது பொருளின் சத்தியத்தை அல்லது வாய்மையை ஐயந்திரிபுற உணர்ந்து திடவுறுதி ஏற்படும் வேளையில் ஒருவனது உள்ளத்தில் மூழ்கிப்பதே ஈமான் ஆகும். ஈமான் உள்ளதா அல்லவா என்ற சந்தேகம் எழாவண்ணம், நேரடியாகக் காணவும், தொட்டுணரவும் முன் கொண்டு வந்து வைக்கப்பட்ட திடப்பொருள் போன்றதே ஈமான். ஈமான் உள்ளத்தோடு உறைத்திட வேண்டும். ஈமான் கொண்டவை மூடலானவையோ, பூடகமானவை. (MYSTIC) மனித சுதந்திரத்தைப் பறிப்பவையோ, முன்னேற்றத்தைத் தடை செய்பவையோ அல்ல. விவேகத்திற்கும், பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்டவையுமல்ல. சாஸ்தரமுமல்ல. ஈமான் கொண்டவையாவும் உண்மை. எனவே ஈமான் கொண்டோரின் சிந்தை, சொல், செயல் யாவற்றிலும் இறையுணர்வு மிளிர்ந்து இறைவனின் விருப்பத்திற்குகந்தவைகளாகத் துவங்கும், இத்தகைய முற்றிலும் அல்லாஹ்விற்கு வழிபடும் நிலையை எய்த கீழே தருபவைகளைப் பற்றிய அறிவு இன்றியமையாதவை.

1. இறைவன் ஒருவனே என்ற வாய்மை; இவ்வாய்மையை உறுதிப்படுத்தத் தேவையான சான்றுகள்.

2. இறைவனின் பண்புகளைப் பற்றிய தீர்க்கமான தெளிவான விளக்கம்.

3. இறைவன் விரும்புபவை விரும்பாதவை.

4. தனிமனிதனையும், சமுதாயத்தையும் கட்டுப்பாட்டோடு இயங்கச் செய்ய இறைவன் வகுத்தருளிய (நியமங்கள்) விதிமுறைகள்.

5. மரணத்திற்கப்பின் மனிதர் யாவரும் இறைவனிடம் மீளவேண்டும் என்ற உணர்வு;  தன்னை வழிபட்டவர்களுக்கு, புறக்கணித்தவர்களுக்கு, நிராகரித்தவர்களுக்கு இறைவன் மறுமையில் முறையே வழங்கும் நீதி.

மனிதன் எத்துணை தான் முயன்றாலும் தன் யுக்தியாலும்,  ஆய்வாலும் மாத்திரமே இந்த ஞானத்தைப் பெறுவது சாத்தியமல்ல. தகுந்த முறையான  வரைபடமும், கருவிகளும் தக்க ஏற்பாடும் இன்றி, ஆராட்சியாளர் ஒருவர் பூமியில் உள்ள மலை உச்சிகளின் உயரங்கள், கடல்களின் ஆழங்கள், நகரங்கள், ஊர்களுக்கிடையே உள்ள தூரங்கள் யாவற்றையும் தானே தன் முனைப்பால் கணித்து விட முடியும் என்று நினைப்பது வெறும் இறுமாப்பும், மதியீனமுமேயாகும். அதேபோல் ஒருவன் தன் அறிவு கொண்டு மாத்திரம் இறைவனை அறிய முயல்வது அறிவீனமாகும். அல்லாஹு நபி(ஸல்) அவர்களுக்கு “வஹி” மூலம் அறிவித்த திருமறை, அதன் கருப்பொருளை துல்லியமாக விளங்க உறுதுணையாகும். நபிமொழி இவைகளின் துணைக்கொண்டு மாத்திரமே இறைவனை அறிவது சாத்தியமாகும் என்றாலும், இவை புகட்டும் ஞானம் மனித புத்திக்கும், புலனுணர்விற்கும் ஒவ்வாதவையோ, நம்ப முடியாதவையொ அல்ல. மறுமையின் வெற்றியை இலக்காகக் கொண்டு இம்மை வாழ்க்கையைச் செம்மைப்படுத்த மனிதனுக்குச் சீரிய அடிப்படை கொள்கைகளையும், நிறைவான ஒழுகு முறையையும் வகுத்துத் தருவதாகும். எவ்வித நிர்ப்பந்தமும் இன்றி அசையாத உறுதியான திடச் சித்தத்துடன் இறை தரும் மறையை ஏற்று ஒழுக வேண்டும். அல்லாமல் வெறும் பாரம்பரியத்தின் காரணமாக (சிந்தையும், தெளிவுமின்றி செயல்படுவதை திருமறை ஊக்குவிக்கவில்லை. கொண்ட ஈமானில் உறுதியில்லாதவர்களை, அவர்களின் புலணுர்வு கொண்டு திருமறையின் கருப்பொருளைப் பற்றி சிந்திக்கும்படி அல்லாஹ் அழைக்கின்றான்.

ஆயினும் சிந்திப்பவர்களைத் தவிர (மற்றெவரும்) இதனை உணர்ந்து கொள்ளமாட்டார்கள்”  (2:269)

இவ்வாறே நாம் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நம் வசனங்களை விவரிக்கின்றோம். (10:24)

நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அதில் ஒவ்வொன்றையும் ஞானத்தின் அடிப்படையில் விவரித்திருக்கின்றோம். (அன்றி அது) ஈமான் கொண்ட மக்களுக்கு நேரான வழியாகவும், அருளாகவும் இருக்கின்றது(7:52)   (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

*************************************************************************

செயலில் இறங்கத் தயாராவது யார்? யார்??

அன்பார்ந்த சகோதரர்களே!  அஸ்ஸலாமு அலைக்கும்!

சென்ற இதழில் நமது எதிர்கால திட்டத்தைப் பற்றி விளக்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தோம். புதிதாக எத்திட்டத்தையும் நாம் தீட்டப்போவதில்லை. சுமார் 1400 வருடங்களுக்கு முன் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் அமுல் நடத்தப்பட்டு ஓர் இஸ்லாமிய வல்லரசு அமைத்து காட்டப்பட்டுவிட்டது. பெரும்பாலான முஸ்லிம்கள் ஷைத்தானின் தூண்டுதலால் அல்லாஹ் கொடுத்த திட்டத்தைக் கைவிட்டு, மனித திட்டங்களை இஸ்லாத்தின் பெயரால் செயல்படுத்தி வருகிறார்கள். முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கு இதுவே பிரதான காரணமாகும். எனவே இப்போது நமது தலையாய கடமை இஸ்லாத்தில் நுழைந்துள்ள மனித அபிப்பிராயங்களை நீக்கி, நபி(ஸல்) அவர்கள் கொடுத்த திட்டத்தை அமுல்படுத்துவது மட்டுமே.

தங்களை இஸ்லாமிய சிந்தனையாளர்கள்,  இஸ்லாமிய அடிப்படையிலான செயல்திறன் மிக்கவர்கள் என்று சொல்லிக் கொண்டு இஸ்லாத்தை நிலை நிறுத்த பாடுபடுபவர்களையும் ஷைத்தான் தனது மாய வலையில் சிக்க வைத்துள்ளான் என்பது வேதனைக்குரிய விஷயமாகும். எனவே அவற்றைத் தெளிவாக விளங்கி அவற்றை விட்டு நீங்குவது ஒவ்வொரு முஸ்லிமின் நீங்காக் கடமையாகும். அவற்றை விரிவாகப் பார்ப்போம்.

ஷைத்தானின் மாயை 1 :

மனித அபிப்பிராயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த மார்க்க விஷயங்களில் சிறியது, பெரியது என இவர்களாகவே பாகுபடுத்தி, சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவதை தேவையற்ற செயலாக கருதுகின்றனர். தேவையற்ற எந்த ஒரு விஷயத்திம் நபி(ஸல்) அவர்கள் ஈடுபட்டதில்லை. இந்த நவீன சிந்தனையாளர்கள் நினைப்பது போல் சின்ன விஷயங்கள் தேவையற்றனவாக இருந்தால் நபி(ஸல்) அவர்கள் அவற்றில் கவனம் செலுத்தியே இருக்கமாட்டார்கள். உண்மை என்ன தெரியுமா? சிறிய விஷயமாக இருந்தாலும், பெரிய விஷயமாக இருந்தாலும் அவை அனைத்தும் இருக்க வேண்டிய முறைப்படி இருந்தால் மட்டுமே எதுவும் இயங்க முடியும். இல்லையென்றால்,பெயரளவில் அந்த ஒன்று இருக்குமேயல்லாமல் இயங்க முடியாது. உதாரணமாக,

ரூ. 2 இலட்சம் பெருமதியான ஓர் உயர் ரக கார், அதில் பிரதான இன்ஜினிலிருந்து ஏனைய நான்கு டயர், டியூப் அனைத்தும் சரியாகவே இருக்கின்றன. டாங்க் நிறைய பெட்ராலும் இருக்கிறது. மூன்று டயர்களில் காற்று சரியாக இருக்கிறது. ஒரே ஒரு டயரில் மட்டுமே காற்று இல்லை. (டயருக்கு வெளியே காற்று தாராளமாக இருக்கிறது) பெட்ரோல் பங்கில் காற்று ஓசியில் கிடைக்கிறது. காசு கொடுப்பதில்லை. ரூ.2 இலட்சம் காசுக்கு இந்த ஓசிக் காற்று சின்னஞ் சிறிய விஷயம்தான். எனவே ஒரு டயரில் காற்று இல்லாத நிலையில் இன்ஜினை இயங்கச் செய்தாலும் அந்த காரை முறையாக இயங்கச் செய்ய இந்த புத்திசாலிகளால் முடியுமா? 100 மைல் பிரயாணத்தில் 75 மைலை அந்த காரைக் கொண்டு கடந்து விடலாம் என்று இவர்கள் சொல்ல முன் வருவார்களா? இன்னொரு உதாரணம்.

ஒரு கைக்கெடிகாரம், அதனது பிரதான உறுப்புகள் அனைத்தும் சரியாக இருக்கின்றன. ஏர்ஸ்பிரிங்கை ஸ்டெட் துவாரத்தில் செலுத்தி அது நகர்ந்து விடாமல் இருக்க சொருகும் சிறிய பின் மட்டுமே இல்லை. சின்னஞ்சிறிக விஷயம்தான்.  அது இல்லாமல் கடிகாரம் இயங்க முடியும் என்று சொல்ல இந்த புத்திசாலிகள் முன் வருவார்களா? இப்படி பல உதாரணங்கள் தரமுடியும். ஆக ஒன்று முறையாக இயங்க வேண்டுமென்றால், அதனது பெரிய விஷயத்திலிருந்து சிறிய விஷயம் வரை எப்படியிருக்க வேண்டுமோ அப்படியே இருக்க வேண்டும். அப்போதுதான் அது இயங்கும். இதை மறுக்காத புத்திசாலிகள் இஸ்லாம் இயங்க மட்டும் சிறிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியதில்லை என்று சொல்வதாக இருந்தால் அவர்கள் ஷைத்தானின் இந்த மாய வலையிலிருந்து விடுபடவில்லை என்பதுதானே அதன் பொருளாகும். அறிவுடையோர் அந்த வலையை அறுத்தெரிய முயற்சிப்பார்களா?

ஷைத்தானின் மாயை :2

நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து சொற்ப காலம் வரை இயங்கிக் கொண்டிருந்த இஸ்லாம், அதன்பின் மனித பிப்பிராயங்கள்  புகுத்தப்பட்டு முடக்கப்பட்டது. இஸ்லாத்தை மீண்டும் இயங்க வைக்க பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த முயற்சியில் ஈடுபடுபவர்கள் இஸ்லாத்தை இயங்கவைக்க பாடுபடுகிறொம் என்று சொல்லி, அவர்கள் அதனை இயக்க புதியதொரு இயக்கத்தை உண்டாக்கி விடுகிறார்கள். அதன் விளைவு இஸ்லாம் இயங்குவதற்கு பதிலாக அவர்களின் இயக்கம் இயங்க ஆரம்பித்து விடுகின்றது. அதன்மூலம் இவர்கள் உலக ஆதாயம் அடைகிறார்களேயல்லாமல், இஸ்லாம் இயங்குவதாகவோ, அதைக் கொண்டு மக்கள் பலன் அடைவதாகவோ இல்லை. சுருங்கச் சொன்னால் இஸ்லாத்தை இயக்க, இயக்கம் அமைத்தவர்கள் தங்களின் இயக்கம் முடங்காமல் இருக்க இஸ்லாத்தை முடக்கி விடுகிறார்கள்.

ஷிர்க், பித்அத்களை விட்டு விடுபட்டு சத்திய முயற்சிகளில் ஈடுபட்டிருப்போரும், பல இயக்கப் பெயர்களில் இயங்கி வருவதால், சில சமயங்களில் தங்கள் இயக்கப் பெயரே முன்னணியில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கிடையில் போட்டாபோட்டியும், அதனாலேயே கருத்து வேறுபாடுகளும்,  கசப்புணர்வுகளும் ஏற்பட்டு மேலும் பிளவுகள் வலுவடைகின்றன. தங்கள் இயக்கத்திலுள்ள பாசத்தினால் அதற்கு கெளரவக் குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில், தங்கள் இயக்கத் தலைவர் மற்றும் முக்கிய அங்கத்தினர்களின் குறைகளைத் தெளிவாகத் தெரிந்த நிலையிலும், அவற்றைக் கண்டித்துத் திருத்த முற்படுவதில்லை. இயக்கவழிபாடு அவர்களை இந்த அளவு செயலிழக்கச் செய்து விடுகிறது.

இவ்வுலகில் எந்த ஒரு முயற்சி செய்வதாக  இருந்தாலும், பொருளாதாரம் அவசியப்படுகின்றது. பொருளாதாரம் இல்லாமல் ஓர் இயக்கம் இயங்குவது சாத்தியமில்லை. ஓர் இயக்கத்தை அமைத்து வளர்த்து வரும்போது அதன் வளர்ச்சிக்கேற்றவாறு, பொருளாதாரத் தேவையும் அதிகப்படுகின்றது. இதற்கும் ஏற்பாடாகி இயக்கம் சிறப்பாக செயல்படும் நிலையில் இருக்கும்போது, ஷைத்தான் அந்தப் பொருளாதாரத்தை கொடுக்கும் இயக்கத்தின் மூலம் தனது திறமையை காட்ட ஆரம்பித்துவிடுகின்றான். அவர்கள் மூலம் மனித அபிப்பிராயங்களை மார்க்கத்தில் நுழைக்க தூண்டுகின்றான். பொருளாதார உதவி செய்வதால் அவர்களை அறியாமலேயே அவர்களிடம் ஓர் ஆதிக்க உணர்வு ஏற்பட்டுவிடுகின்றது. இதன் முடிவு, ஒன்று பொருளாதார சிக்கலில் இவர்களின் இயக்கம் முடங்கவேண்டும். அல்லது இவர்களின் இயக்கம் இயங்க பொருளாதார உதவி அளிப்பவர்களின் மனித அபிப்பிராயத்தை ஏற்று சத்தியத்தை முடக்க வேண்டும். அதன் விளைவு இவர்கள் எந்த இஸ்லாத்தை இயங்கவைக்க இயக்கம் ஆரம்பித்தார்களோ அந்த இயக்கம் இயங்க பிரதான இஸ்லாத்தின் இயக்கத்தை முடக்கி விடுகிறார்கள். ஆம் அவர்களின் இயக்கம் முடங்கினால் அது அவர்களின் மானப் பிரச்சினை.

கெளரவம் பிரச்சினை என கருதுகின்றனர். இந்த நிலையில் இஸ்லாம் முடங்குவது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது. இலட்சியத்தை அடைய வகுத்த வழி இலட்சியத்தை விட முக்கியமானதாக ஆகிவிட்து. இதில் சிக்குபவர்களை அறிஞர்களாக ஏற்றுக் கொள்ள முடியுமா?

தாங்கள் செய்வது குர்ஆன், ஹதீஃதுக்கு முரணானது என்று நன்றாக அறிந்து கொண்டே, தங்கள் இயக்க நலன் கருதி அதனை செய்பவர்கள் இயக்க வழிபாட்டுக்காரர்கள் என்று அழைப்பதில் தவறுண்டோ? நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் எங்கள் இயக்க விதிகள் எங்கள் கைகளை கட்டியுள்ளன” என்று ஒரு இயக்கத்தில் பிரதான உறுப்பினர் ஒருவர் கூறியது இங்கு நமது சிந்தனைக்குரியது. இந்த துர்பாக்கிய நிலைகளைக் கடந்து இஸ்லாத்தை இயங்க வைக்கும் நிலையில் எந்த இயக்கமும் இயங்குவதாக நமக்குத் தெரியவில்லை. அப்படி இருந்தால் இது சின்ன விஷயத்தானே என்று இஸ்லாத்தின் எந்த அம்சத்தையும் உதாசீனம் செய்யும் நிலையில் அந்த இயக்கம் இருக்காது.

நபி(ஸல்) அவர்கள் தங்களுக்கு அருளப்பட்ட குர்ஆனைக் கொண்டு, 23 வருட கால அவகாசத்தில், முடங்கிக் கிடந்த இஸ்லாத்தை முறையாக இயக்கிக் காட்டினார்கள். இன்று பல இயக்கங்கள் அதை விட அதிக காலங்கள் உழைத்தும், இஸ்லாத்தை முறையாக இயங்க வைக்க முடியவில்லை. இதிலிருந்தே அந்த இயக்கங்கள் மனித அபிப்பிராயங்களை மார்க்கத்தில் கலக்காமல் செயல்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மனித அபிப்பிராயங்கள் கலக்காத நிலையில் குர்ஆனும், அதற்கு விளக்க உரையான நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளும் மட்டுமே மார்க்கமாகக் கொள்ளப்பட்டிருந்தால், நிச்சயமாக இஸ்லாத்தை முறையாக இயங்க வைத்திருக்க முடியும்.

எமது இந்த முயற்சியில் இயக்க ஆதிக்கம் ஏற்படாமல் சிறிய விஷயத்திலிருந்து பெரிய விஷயம் வரை கவனிக்கப்பட்டு, குர்ஆன், ஹதீஃத் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டு மனித அபிப்பிராயங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுமேயானால், நிச்சயமாக இன்னும் நிச்சயமாக எமது இந்த முயற்சியினால் முடங்கிக் கிடக்கும் இஸ்லாம், முறையாக இயங்க ஆரம்பித்துவிடும். மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைய ஆரம்பித்து விடுவார்கள் என்பதில் ஐயமில்லை.  இன்ஷா அல்லாஹ்.

ஷைத்தானின் மாயை : 3

அடுத்து இஸ்லாத்தை முடங்கச் செய்ய,   ஷைத்தான் செய்த பெரியதொரு சூழ்ச்சி, தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான இயக்கங்கள் அமீருடைய விஷயத்தில் அல்குர்ஆன் 4:59 வசனம் காட்டும் வழிகாட்டலுக்கு மாற்றமாக மனித அபிப்பிராயத்தைப் புகுத்தியதாகும்.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். இன்னும் அல்லாஹ்வின் தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும்,  இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (4:59)

இன்று தலைவர்கள் – அமீர்கள், கமிட்டி என்ற அடிப்படையில் பெரும்பான்மையினரின் விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இதனை ஜனநாயகம் என்று பெருமையாக பேசிக் கொள்கின்றனர். புத்திசாலிகளையும் ஏமாற்றும் ஒரு அமைப்பே ஜனநாயக அமைப்பு என்பதை தங்களை புத்திசாலிகள் என்பவர்களும் புரிந்து கொள்வதாக இல்லை. 11 நபர்கள் கொண்ட கமிட்டியில், 6 நபர்கள் மிகவம் தவறான ஒரு அபிப்பிராயத்தில் இருந்தால், எஞ்சியுள்ள 5 நபர்கள் மிகச் சரியான முடிவில் இருந்தாலும், இறுதியில் பெரும்பான்மையினர் விருப்பமே அமுல் செய்யப்படும். இப்போது இந்த மிகத் தவறான முடிவுக்கு அந்த 5 நபர்களும் உடந்தையாகி விடுகின்றனர். இங்கு அறிஞர்களும் அறிவிலிகளின் நிலைக்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

அதேபோல் காலத்திற்குக் காலம் அமீரை மாற்றுவதும், உடன் இருப்பவர்களின் அபிப்பிராயங்களை அனுசரித்தே அமீர் செயல்படவேண்டும் என்று இவர்கள் முடிவு செய்து வைத்திருப்பதும், சத்தியத்தை மறைக்கத் துணைபோவதாகும். இவை காரணமாக அமீருக்கு – தலைவருக்கு  அல்லாஹ்வை திருப்தி செய்வதை விட, உடன் இருப்பவர்களைத் திருப்தி செய்யும் அக்கரையே மிகைத்து விடுகிறது. காரணம் உடன் இருப்பவர்களின் அதிருப்தி, இங்கேயே அமீரைப் பாதிக்கும். அல்லாஹ்வுடைய அதிருப்தியின் விளைவு நாளை மறுமையில் சந்திக்கும் ஒன்றாக இருக்கிறது. எனவே, சத்தியம் மறைக்கப்பட்டு, இஸ்லாம் முடக்கப்பட இவை காரணங்காள அமைகின்றன.

மேலும் இப்படி பெரும்பான்மையினரின் விருப்பப்படி முடிவுகள் எடுக்கப்படுவதால், அந்த முடிவுகள் குர்ஆன்,, ஹதீஃத்படி இருக்கிறதா? இல்லையா? என்ற சிந்தனையும் மங்கி விடுகின்றது. பெரும்பான்மையினரின் முடிவு என்ற மாயையில் சத்தியம் முடக்கப்பட்டு விடுகின்றது. இப்படிப்பட்ட கெடுதிகளைத் தடுத்து சத்தியம் நிலைநாட்டப்பட இஸ்லாம் இயங்கிக் கொண்டிருப்பதற்கு அல்லாஹ்வின் திட்டமே மிகச் சரியாகும்.

இருப்பவர்களில் மிகவும் தகுதி வாய்ந்தவர் – அமீராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் முடிவு எடுக்கும் முழு அதிகாரத்தை அமீருக்கே இஸ்லாம் வழங்குகின்றது. கூட இருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்கும், சில சந்தர்ப்பங்களில் கேட்காமலும் முடிவெடுக்கும் அதிகாரம் அமீருக்குண்டு. கூட இருப்பவர்கள் அனைவரின் ஆலோசனைக்கும் மாற்றமாக முடிவெடுக்கும் அதிகாரமும் அமீருக்குண்டு.

உதாரணமாக, அபூபக்கர்(ரழி) அவர்கள் மிகவும் நெருக்கடியான நிலையில் அமீராகத் தெரிவு செய்யப்படுகிறார்கள். நாட்டில் பல காரணங்களால் கொந்தளிப்பு நிலவுகின்றது. இந்த நிலையில் ஒரு கூட்டம் ஜகாத் கொடுக்க மறுக்கின்றது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தருணம் இதுவல்ல. நிலைமை மிக மோசமாக இருக்கிறது. சிறிது விட்டுப் பிடியுங்கள் என்று அபூபக்கர்(ரழி) அவர்களை, அமீராகத் தெரிவு செய்ய முழு முதல் காரணமாக இருந்த உமர்(ரழி) அவர்கள் முதற்கொண்டு, உடன் இருந்த அனைவரும் இந்த  ஆலோசனையைத் தருகிறார்கள். அபூபக்கர்(ரழி), உடன் இருந்த அனைவரின் ஆலோசனைகளையும் நிராகரித்து விட்டு, இக்கட்டான அந்த நிலையிலும் ஜகாத் கொடுக்க மறுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இங்கு அமீரின் கண்முன் குர்ஆன், ஹதீஃதே பிரதான இடத்தைப் பெறுகின்றன. உடன் இருப்பவர்களின் திருப்திக்காக வளைந்து கொடுக்கும் எண்ணம் தோன்றாதிருக்க இஸ்லாம் வழி வகுத்திருக்கிறது.

அதே சமயம் அமீர் இஷ்டப்பட்டதையெல்லாம் செய்துவிடமுடியாது. குர்ஆன் ஹதீஃதுக்கு மாற்றமாக அமீர் ஒரு செயலில் இறங்கினால் உடன் இருக்கும் ஆலோசகர்கள் மட்டுமல்ல. சாதாரண ஒரு நபரும் அமீரின் அந்தத் தவறைச் சுட்டிக்காட்ட பூரண உரிமை பெற்றிருக்கிறார்கள். அமீருக்குக் கட்டுப்பட்டு கடப்பதெல்லாம், நன்மையான காரியங்களில் மட்டுமே என்று மார்க்கம் தெளிவாகக் கூறுகின்றது. அதற்கு அளவுகோலாக குர்ஆனையும், ஹதீஃதையும் எடுத்துக் கொள்ளும்படி 4:59 வசனம் தெளிவுபடுத்துகின்றது.

மார்க்கத்தில் மனித அபிப்பிராயத்தை நுழைத்தல், இன்றைய அரசியலில் நடப்பதுபோல் செல்வாக்கு, பணம், குலம், கோத்திரம் இவற்றைக் கொண்டு கோஷ்டி பிரிவுகளை உண்டாக்கிக் கொண்டு தங்களின் பலத்தைக் காட்டி அமீரை தலைவரை தங்கள் நோக்கத்திற்கு இணங்கச் செய்தல், சத்தியத்தை விட்டும் பிறழச் செய்தல் போன்ற துர்ச் செயல்கள் நடைபெறாமல் இந்த அழகிய முறை மூலம் தடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சந்தேகம் : முடிவு செய்யும் முழு அதிகாரம் அமீருக்கு மட்டுமே உண்டு. ஆலோசனை கூறுபவர்கள் அனைவரின் கருத்தையும் நிராகரித்து விட்டு முடிவு எடுக்கும் அதிகாரமும் அமீருக்கு உண்டு என்றால் பின் ஏன் அவர் உடன் இருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்க மார்க்கம் வலியறுத்துகின்றது என்பதாகும். எந்த மனிதனிடத்திலும் உயர்ந்த சிறந்த ஆலோசனை தோன்றலாம். அமீரின் சிந்தனையிலில்லாத சிறந்த ஆலோசனையைத் தந்து விடலாம். மனித இயல்பு என்ற அடிப்படையில் அமீர் குர்ஆனை, ஹதீஃதை மறந்து ஒரு முடீவு செய்யும்போது அவருக்கு அதனை நினைவுபடுத்தலாம். ஆக இப்படி அமீர் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் மிக பொருத்தமான, சிறந்த நல்ல முடிவை எடுக்க , அவருக:கு உதவி  செய்யும் வகையிலும், அமீர் குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் செயல்படுகிறரா? என்று கண்காணிக்கவும் இந்த ஆலோசனை முறையை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அதல்லாமல் மனிதபிப்பிராயங்களை மார்க்கத்தில் புகுத்த, இந்த ஆலோசனை முறைக்கு இஸ்லாம் வழிவகுக்கவில்லை. அதிலும் பெரும்பான்மை என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு, அமீரை தங்கள் இஷ்டத்திற்கு வளைக்க இஸ்லாம் வழிவகுக்கவில்லை. அதிலும் பெரும்பான்மை என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு, அமீரை தங்கள் இஷ்டத்திற்கு வளைக்க இஸ்லாம் கண்டிப்பாக அனுமதி வழங்கவில்லை. இது சத்தியம் மறைக்கப்பட்டு இஸ்லாத்தை முடங்கச் செய்ய ஷைத்தான் திட்டமிட்டுத் தந்துள்ள,  மிக அழகாகத் தெரியும் ஒரு நச்சுத் திட்டமாகும். அமீரின் செயலில் சந்தேகம் வந்தால், அதனைத் துணிந்து கேட்டு சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள மார்க்கம் வலியுறுத்துகிறது என்பதற்கு, ஜும்ஆ பிரசங்கள் செய்ய வந்த அமீர் – உமர்(ரழி) அவர்களிடம் ஒவ்வொருவருக்கும் கிடைத்த பங்கைவிட அதிக துணியில் எப்படி சட்டை தைத்தீர்கள் என சந்தேகத்தைக் கிளப்பி, அதற்கு அவர்கள் தமது மகனுக்குக் கொடுக்கப்பட்ட பங்கையும் சேர்த்து சட்டைத் தைத்துள்ளதாக பெறப்பட்ட விளக்கம், தக்க சான்றாகும். அமீர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்லர். தொடுக்கப்படும் விமர்சனத்தை குர்ஆன், ஹதீஃத்படி தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளார் அமீர்.

ஷைத்தானின் மாயை : 4

இஸ்லாத்தை இயங்க வைக்கும் முயற்சியில் ஆர்வமுடன் செயல்படும் சிந்தனையாளர்களிடையே காணப்படும் இன்னொறு தவறு.

நாம் முன்பு விளக்கியதுபோல் இஸ்லாத்தை இயங்க வைக்கிறோம் என்று இவர்கள் இயக்கங்களாக இயங்கி வருவதால், இவர்களுக்கிடையே போட்டி, பொறாமை வளர்ந்து விடுகின்றது. ஒரு இயக்கம் மற்ற இயக்கங்களைவிட நாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்ளும் நோக்கத்துடன் செயல்பட முனைகிறார்கள். மற்றவர்களைத் தங்கள் எதிரிகளாக எண்ணிக்கொண்டு அவர்களின் தவறுகளை மிக வன்மையாகக் கண்டித்துப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அதே சமயம் தங்கள் அணியில் இருப்பவர்களின் தவறகளைக் கண்டிக்கத் துணிவதில்லை. அப்படி கண்டிப்பதை ஹிமாலயத் தவறாகக் கருதுகின்றனர். தங்களுக்கொரு நியாயம், மற்றவர்களுக்கொரு நியாயம் என்ற நிலை இங்கு ஏற்பட்டு விடுகின்றது. இஸ்லாம் இதை வரவேற்கவில்லை. தவறு எங்கிருந்து வந்தாலும் அதைக் கண்டிக்க இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அப்படி கண்டிப்பதால் சத்திய பிரச்சாரத்திற்கு பங்கம் ஏற்பட்டு விடுகிறது என்று இவர்கள் தங்கள் மனிதாபிப்பிராயங்களைக் கொண்டு முடிவு செய்கிறார்கள். இது தவறு. இன்னும் தெளிவாகச் சொல்வதாக முடிவு செய்கிறார்கள். இது தவறு.  இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் சத்திய பிரச்சாரத்தில் முன்னணியில் இருப்பவர்களின் சிறு தவறுகள் முதல் உடனுக்குடன் கவனிக்கப்பட்டு, எவ்வித தாட்சண்யமும் இன்றுி கண்டிக்கப்பட வேண்டும். இதுவே அவர்களை நிதானமாக நடக்கச் செய்வதுடன் தனி மனித வழிபாடு ஏற்படாமல் தடுக்கிறது. இதுவே இஸ்லாம் இயங்குவதற்குரிய வழியாகும். சத்திய இஸ்லாத்தை மக்களுக்கு போதித்துக் கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின்  சிறு சிறு தவறுகளைக் கண்டித்து பல குர்ஆன் வசனங்கள் காணப்படுவது இதற்கு தெளிவான ஆதாரமாக இருக்கிறது.

பிரச்சாரத்தின் முன்னணியில் இருப்பவர்கள் சத்தியத்தை மறைக்க முன்வரவில்லை என்பதற்காக, தங்கள் மனித அபிப்பிராயங்களை ஏற்று வளைந்து கொடுக்கவில்லை என்பதற்காக, அவர்கள் மீது வீண் பழி சுமத்தி அவதூறு பரப்புவது பெருங்குற்றமாகும். இது ஷைத்தானின் வேலையாகும்.  அதே சமயம் அவர்களிடம் உண்மையாக இடம்பெறும் சிறிய தவறுகளையும் பகிரங்கமாகக் கண்டித்து அவர்களும் மனிதர்களே, உயர்ந்த பணி செய்வதினால் தவறு இடம் பெறாக இறையம்சம் பெற்றவர்கள் அல்லர் என்பதை நிலைநிறுத்திக் கொண்டே இருக்கவேண்டும். இதனை நபி(ஸல்) அவர்களை கண்டித்து இறக்கபட்ட குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்ற. இதற்கு மாற்றமாக தீன்பணியில் ஈடுபட்டிருப்பவர்களின் சேவைகள் புகழப்பட்டு, அவர்களின் உண்மையான தவறுகளும் மறைக்கப்படுவதால், அது தனி மனித வழிபாட்டிற்கு வழி வகுக்கின்றத. தரீக்காக்களின் பெயராலும், இன்னும் பல பெயர்களாலும் மனித வழிபாடு உருவானதற்கு இதுவே காரணமாகும்.

சீர்திருத்தப் பணியில் முன்னணியில் நின்று செயல்பட்டவர்களின் ஆரம்பக் கால சேவைகள் பெரிதும் புகழப்பட்டு. அவர்களது பேணுதலற்ற நிலைகள், பொய் சொல்லும் நிலைகள், அவர்கள் செய்யும் தீன்பணி கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் மறைக்கப்பட்டதால், அவர்கள் நிதானமிழந்து பிதற்றவும், அவர்கள் வழிகெடவும், மக்களை வழிகெடுக்கவும் காரணமாயிற்று. இதனை அறிஞர்களும் படிப்பினையாகக் கொள்வதாக இல்லை. அவர்களது தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். அது இஸ்லாத்திற்கு நலமாக அமைந்திருக்கும்.  எனவே, தீன்பணியில் ஈடுபடுபவர்களின், குறிப்பா அதில் முன்னணியில் இருப்பவர்களின் உண்மையான தவறுகள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு, திருத்தப்பட முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமேயில்லை. இதுவே மனித வழிபாட்டைத் தடுக்க சிறந்த வழியாகும்.

தவறைக் கண்டித்துத் திருந்துவதில் தூர இருப்பவர்களை விட நெருக்கமாக இருப்பவர்களிடம் அதிக கண்டிப்புக் காட்ட வேண்டும். ஷைத்தான் இன்று அதற்கு மாற்றமான நடைமுறையைக் கைக்கொள்ளச் செய்துள்ளான். தூரமாக இருப்பவர்களை தங்கள் எதிரிகளாகக் கருதி மிக வன்மையாகக் கண்டிப்பவர்கள், நெருக்கமாக இருப்பவர்களின் தவறுகள் கண்டிக்கப்படுவதை ஹிமாலயத் தவறாகக் கருதுகின்றனர். அடுத்து முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களில் யாரையும் (சத்தியத்தை எதிர்த்து நேரடியாக நம்மோடு போராட வருபவர்களைத் தவிர  மற்ற மாற்றுமத சகோதரர்களில் யாரையும் எதிரியாகக் கருதுவதும் கூடாது.) நமது எதிரிகளாக எண்ணக்கூடாது. வழிகெட்டுச் செல்லும் 72 கூட்டமும் என்து உம்மத்திலுள்ளவர்களே என்று நபி(ஸல்) அவர்களே சொல்லி இருக்கும்போது, அந்த மக்களை இந்த உம்மத்திலிருந்து வெளியெற்ற நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அப்படி அவர்களை வெளியேற்றிவிட்டால், அதன்பின் அவர்களைக் கண்டிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர்கள் நம்மவர்கள். எனவே திருந்தி நல்லவர்களாக இருக்க வேண்டும். அறியாது தவறு செய்யும் பிள்ளையைக் கண்டித்துத்துத் திருத்தும் தகப்பனின் நிலை. அந்த பிள்ளை விஷயத்தில் எப்படி இருக்குமோ, அதே போன்ற ஒரு நிலையில் கண்டிக்க வேண்டும். எதிரிகளாக எண்ணி கண்டிக்கவேகூடாது. முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களை காஃபிர் என்று ஃபத்வா கொடுக்கவோ, அவர்களின் பின்னால் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுக்கவோ முற்படக்கூடாது. இது தவறாகும்.

இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்ன இன்ன காரியங்கள் ஷிர்க்கை உண்டாக்கும். இன்ன இன்ன காரியங்கள் குப்ரை ஏற்படுத்தும். இவைகள் இஸ்லாத்தை விட்டு வெளியேறச் செய்துவிடுமட் என குர்ஆன், ஹதீஃதைக் கொண்டு பொதுவாக எச்சரித்து, அப்படிப்பட்ட தவறுகளை விட்டும் மக்களை தடுக்கப் பாடுபடுவது குஃப்ர் ஃபத்வா கொடுத்ததாக ஆகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தகப்பன் பிள்ளையை இப்படி நீ செயல்பட்டால் நாளை கஷ்டப்படுவாய், வறுமையில் வாடுவாய், யாரும் உன்னை மதிக்க மாட்டார்கள் என்று எச்சரித்து திருத்த முற்படுவது போலாகும் இது. தங்களுக்கொன்று ஓர் அணி அமைத்துக் கொள்வதால்தான். மற்றவர்களை எதிர் அணிகளாகக் கருதி அவர்களை வரம்புமீறி இகழும் நிலையும், குஃப்ர் ஃபத்வா கொடுக்கும் நிலையும், அவர்களிடையே வரட்டு கெளரவம் பாராட்டும் நிலையும் ஏற்படுகின்றது. ஓர் உண்மை முஸ்லிமுக்கொன்று ஒரு தனி அணி இருக்க முடியாது. அவர் அல்லாஹ்வின் அணியிலுள்ளவர். எனவே அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கக் கடமைப்பட்டவர். அல்லாஹ்வுக்குரிய தனித் தன்மைகள் மாசுபடுவதையும், அல்லாஹ் கொடுத்த மார்க்கம் வளைக்கப்படுவதையும் பெரும் கெளரவப் பிரச்சினையாக ஒரு முஸ்லிம் எண்ண வேண்டுமேயல்லாமல், சத்தியத்தை மறைத்து தனது வரட்டு கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஒரபோதும் முனையக் கூடாது.

மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள தவறுகளை விட்டு விடுபட்டு, நமது இந்த முயற்சியில் முன்னேறிச் செல்லவேண்டும் என்பதே நமது பேரவாவாகும். தீனுடைய நலனைக் கருத்தில் கொண்டு பாடுபட்டு வரும் இயக்கங்கள்,  ஜமாஅத்துகள் இந்தத் தவறுகளை விட்டு விடுபட்டு இருப்பதாக நமக்கு தெரியவில்லை. இந்த நமது கருத்தை மற்றவர்கள் விமர்சிக்க உரிமையுண்டு.

நம்மை விமர்சிக்க மற்றவர்களுக்கு உரிமை உள்ளது. அந்த விமர்சனங்கள் சரியா? அல்லது தவறா? எனப் பாரிசீலிக்க நமக்கு கடமை இருக்கிறது. விமர்சனங்கள் சத்தியமானவையாக இருந்தால் அவற்றை ஏற்று திருத்திக் கொள்ளவும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.

மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள ஷைத்தானின் மாயைகளிலிருந்து விடுபட்டு, சுமார் 1400 வருடங்களுக்கு முன் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தி காட்டித்தந்த அதே முறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், ஒரு இஸ்லாமிய வாழ்க்கை நெறியை அகில உலகிற்கும் அறிமுகப்படுத்துவதுதான் நமது நோக்கமாகும். உடனே 21ம் நூற்றாண்டை சந்திக்க வேண்டிய மக்களை 6-ம் நூற்றாண்டின் காட்டுமிராண்டி வாழ்க்கைக்கு இட்டுச் செல்லப் போகிறீர்களா? என்று நுனிப்புல் மேய்பவர்கள் கேட்கலாம்.  ஒட்டகங்களிலும்,  கோவேறு கழுதைகளிலும் பிரயாணம் செய்துகொண்டு, அன்று மக்கள் உபயோகித்தவற்றையே இன்றைய மக்களும் உபயோகிக்க வேண்டும் என்று நாம் சொல்லவரவில்லை.

மனிதன் மனிதனாக வாழ, மனிதனைப் படைத்த அல்லாஹ் தனது தூதர் மூலம் கற்றுக்கொடுத்த வாழ்க்கை ஒழுக்க நெறிகளை கடைபிடித்து மனிதனாக வாழ வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம். அதை விட்டு மனிதன் என்று சொல்லிக் கொண்டு 29-ம் நூற்றாண்டின் நாகரீகம் என்ற நினைப்பில் இரண்டுகால் மிருகமாக மனிதன் வாழ முற்படுவதையே கண்டிக்கிறொம்.  இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்கிறோம். மனிதனுக்குரிய வாழ்க்கை நெறிகளை மனிதனே வடிவமைத்துக் கொள்ள மடியாது. அதற்குரிய ஆற்றலும் மனிதனுக்கில்லை. உரிமையும் மனிதனுக்கில்லை என்கிறோம். தனக்கு அதிகாரம் இல்லாத ஒன்றில் மனிதன் தலையிட்டதால்தான். உண்மை பேசவேண்டும் என்று சொல்லிக்கொண்டே பொய் பேசுபவனாகவும், சுயநலம் கூடாது என்று சொல்லிக்கொண்டே சுயநலக்காரனாகவும் பிறருக்கு உபகாரியாக இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே உபத்திரவம் கொடுப்பவனாகவும்  சுருங்கச் சொன்னால் சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாத ஒரு இழிவான வாழ்க்கை வாழ்கிறான் மனிதன். இந்த இழிவான மிருக வாழ்க்கையை விட்டு உயர்ந்து மனித வாழ்க்கை வாழவே இஸ்லாம் அழைப்பு விடுக்கிறது. மனிதன் தனக்குள் ஏற்பட்ட முன்னேற்றம் என நினைத்து மிருக வாழ்க்கை வாழ்வதை இஸ்லாம் தடை செய்கிறதேயல்லாமல், வெளிப் பொருட்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பயன்படுத்தி உலக வாழ்க்கையை வனப்புடனும், வசதியுடனும், செழிப்புடனும் நடத்திக் கொள்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை. அவையும் அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்த அருட் கொடைகளே என்ற நன்றியுடன், அவற்றை ஆராய்ந்தறியவும், அவற்றை பயன்படுத்திக் கொள்ளவுமே இஸ்லாம் கட்டளையிடுகிறது.

மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள ஷைத்தானின் மாயைகளை விட்டு விடுபட்டு, மனித அபிப்பிராயங்கள் கலக்காமல் மிகத் தூய்மையான முறையில் செயல்படும் ஒரு ஜமாஅத் இருந்தால், நாமும் அந்த ஜமாஅத்துடன் சேர்ந்து செயல்பட கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் அப்படி ஒரு ஜமாஅத் செயல்படும் நிலையில் இரண்டாவதொரு ஜமாஅத்தை உருவாக்க மார்க்கம் அனுமதிக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு ஜமாஅத் செயல்படுவதாகத் தெரியவில்லை. எனவே அப்படி ஒரு ஜமாஅத்தை தனியொரு இயக்கப் பெயர் இல்லாமல், நபி(ஸல்) அவர்களது காலத்திலும் அதன் பின் 4 கலீஃபாக்களின் காலத்திலும் செயல்பட்டதுபோல், “இஸ்லாம்” என்றே இயங்கும் வகையில் முதல் கட்டமாக தமிழகம் தழுவிய அளவில் அமைத்து செயலில் இறங்கத் திட்டமிட்டுள்ளோம். நமது இந்த திட்டத்தில் குறைபாடு காண்கிறவர்கள் குர்ஆன், ஹதீஃத் அடிப்படையிலான ஆதாரங்களுடன் விமர்சனம் செய்தால் நாம் அதனை பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம்.

நாம் மேலே சுட்டிக் காட்டியவை உண்மையில் ஷைத்தானின் மாயைகள் தான். நாங்கள் அவற்றிலிருந்து விடுபட்டு, 1400 வருடங்களுக்கு முன் நபி(ஸல்) அவர்கள் அமைத்துக் காட்டிய அதே முறையில் இஸ்லாமிய நெறியை முற்றிலும் கடைப்பிடித்தொழுகி, அதனை அகில உலகிற்கும் அறிமுகப்படுத்தி, அகில உலக முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைக்கச் செய்யப்படும் முதல் கட்ட முயற்சியில் ஒன்றுபட்டு செயல்படத் தயாராக இருக்கிறோம் என்று ஒப்புக்கொள்ளும் தமிழக சகோதரர்கள். (வெளி நாடுகளில் இருப்பவர்களும்) கடிதத் தொடர்பு கொள்ளுமாறும். அவசிய ஆலோசனைகளுக்கு அழைப்பு அனுப்ப, தெளிவான முகவரிகளுடன் தங்களின் ஒப்புதல் கடிதத்தை அந்நஜாத்திற்கு அனுப்பி உதவுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

************************************************************************

தன்னிலை விளக்கம் ஆதாரம் : 1

துபை I.A.C.க்குச் சொந்தமானதை அபகரித்து விட்டதாக, அடுத்தவருக்குச் சொந்தமானதை நம்முடையதாக்கி, அமானித மோசடி செய்துவிட்டோம்” என்று சிலர் செய்தி பரப்பி வருவது அவதூறுதான் என்பதற்கு, நீங்கள் எண்ணித் தொடங்கிய இலட்சியங்களை என்று தெளிவாகக் குறிப்பிட்டு அன்றைய I.A.C. தலைவர் மவ்லவி K.முஹம்மது இக்பால் மதனீ எழுதிய கடிதம் :

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்புள்ள சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர்களுக்கு தங்களன்பு மறவாத K.M.I.மதனீ ஹஜ்ரத் கூறும் துஆ ஸலாம்.

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நலம், நலமே விளைய துஆ செய்கிறேன்.

டெலிபோனில் பேசிய பேச்சின் பொருள் நான் விளங்கிக் கொண்டேன். அல்லாஹ்த ஆலா ரொம்ப பொறுமையை உங்களுக்கு தந்துள்ளான். இன்னும் அதிகமான பொறுமையையும் தந்து காரியத்தில் ஸ்தரத்தையும் தந்து, எறியப்படும் ஏவுகணைகள் என்னும் தீய எண்ணங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்து, அல்லாஹ் அருள்செய்து, நீங்கள் எண்ணித் தொடங்கிய இலட்சியங்கள் அவன் முன், அதன் பின் நீங்களும் நாங்களுமாக நின்று நிறைவேற ரப்புல் ஆலமினிடம் இருகரமேந்திய வண்ணமுள்ளோம். ஆகவே P.J. அவர்களின் குணத்தை 1 மணி நேரத்தில் கண்டு கொண்டவன் நான். அவர் ஓர் தொட்டாச்சினிங்கி என்பம் யாமறிந்ததே. இனியும் கொஞ்ச காலம் தாங்கள் பொறுமையுடன் தள்ளிவிட்டால் அடுத்து நாமெல்லாம் ஒன்றாக இருந்து பேசி நல்லதொரு முடிவெடுத்து காரியத்தை கொண்டு செல்ல ரப்பு கிருபை செய்வான். எனவே அவர் வகையில் தங்களுக்கு மனக்குறை இருப்பின் அல்லாஹ்விற்காக முழுமையாக மறந்து மன்னித்து விடுங்கள். அல்லாஹ் அதற்கு பெரும் பகரத்தைத் தருவான். மற்றபடி தங்கள் கடிதம் பார்த்து, வஸ்ஸலாம். இப்படிக்கு, தங்களன்பு மறவாத, (ஒ-ம்) கே.முஹம்மது இக்பால் மதனீ. 05.09.86 துபை.

************************************************************************

தன்னிலை விளக்கம் ஆதாரம் : 2

“அந்நஜாத் பணத்தில் ஊழல் செய்துவிட்டோம்” என்று சிலர் செய்தி பரப்பி வருவதும் அவதூறுதான் என்பதற்கு, அவர்களே 8.3.87ல் அளித்துள்ள சான்றிதழ்.

அந்நஜாத் ஆரம்பித்த ஏப்ரல் 1986லிருந்து 16.2.87 முடிய உள்ள அந்நஜாத்தின் வரவு செலவு கணக்குகளையும், மாநாட்டு வரவு செலவு கணக்குகளையும் பரிசீலனை செய்வதற்கென்று ADHOCகமிட்டியால் நியமனம் செய்யப்பட்ட மூவர் அடங்கிய குழுவினர், ஜனாப். அபூஅப்துல்லாஹ் அவர்களால் கொடுக்கப்பட்ட அனைத்து வரவு செலவு கணக்குகளையும் பரிசீலனைச் செய்து, கணக்குகளுடன் BALANCE SHEETஐ ADHOC கமிட்டியிடம் சமர்ப்பித்தனர். அனைத்து வரவுகளும் செலவுகளும் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சரிபார்த்து ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ள ADHOC  கமிட்டி அங்கத்தினர்கள் :

1. மவ்லவி S. கமாலுத்தீன் மதனீ (தலைவர்)

2. மவ்லவி P.ஜெய்னுலாப்தீன்,

3. மவ்லவி M. சையது முஹம்மது மதனீ,

4.  அபூஅப்தில்லாஹ்,

5.  M.R. கான்(ஊட்டி)

6.  மவ்லவி M.முஹம்மது யூசுப் மிஸ்பாஹி

7.  S.M. சையத் அஹ்மது

8.  M.ஷாஹுல் ஹமீது

9. K.S. முஹம்மது முபாரக்

குறிப்பு : இவற்றின் ஒரிஜினல் போட்டோ காப்பிகளைப் பெற விரும்புவோர் ரூ.4/- தபால் தலைகள் அனுப்பி, தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.

**************************************************************************

நபிவழித் தொகுப்பு வரலாறு – தொடர் : 22  – அபூ அஸ்மா

ஹதீஃத்களை எடுத்துக் கூறுபவர் 10 குறைபாடுகளை விட்டும் பரிசுத்தமானவராயிருத்தல் வேண்டும்.

1. அவர் பொய் பேசுபவராகயிருத்தல் கூடாது.

2. பிறர் இவர் பொய்யரோ என்று சந்தேகிப்பதற்கு இடமளிப்பவராகவுமிருத்தல் கூடாது.

3. சன்மார்க்கத்திற்குப் புறம்பானவற்றை – ஹராமானவற்றைச் செய்பவராயிருத்தல் கூடாது.

4. ஹதீஃத் கலாவல்லுநர்களுக்கு அறிமுகமில்லாதவராயிருத்தல் கூடாது.

5. பித்அத்தான நூதன அனுஷ்டானமுடையவராயிருத்தல் கூடாது.

6. தமது அறிவிப்புகளை எடுத்துக் கூறும்போது, எப்போதேனும் பெரும் தவறிழைத்தவராயிருத்தல் கூடாது.

7. தமது கவனக் குறைவின் காரணமாக சின்னஞ்சிறு தவறுகளை அடிக்கடி செய்பவராயிருத்தல் கூடாது.

8. தமது மறதிழ மேலீட்டின் காரணமாக ஹதீஃத்களை எடுத்துக் கூறுகையில் தவறிழைப்பவராயிருத்தல் கூடாது.

9. தமது அறிவிப்பு நம்பகமான மற்றொரு அறிவிப்பாளரின் அறிவிப்புக்கு முரண்படுவதாயிருத்தல் கூடாது.

10. நினைவாற்றல் மோசமானவராயிருத்தல் கூடாது.

மேற்காணும் குறைபாடுகள் காணப்படும் அறிவிப்பாளரின் அறிவிப்புகள் லயீஃபு பலகீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை எனும் தரத்தையடைவதோடு, ஏற்புக்குரியவையுமல்ல.

எவற்றிலிருந்து? எவ்வாறு? ஸஹீஹான ஹதீஃத்கள் தெரிவுசெய்யப்படுகின்றன?

நாம் ஸஹீஹான ஹதீஃத்களைத் தெரிவு செய்வதற்காக, புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா ஆகிய ஆறு அரும் பெரும் நூற்களில் இடம் பெற்றுள்ள ஹதீஃத்களை மட்டுமின்றி, முஸ்னத் அஹ்மது, தப்ரானி, தாருகுத்னீ, இப்னுஹிப்பான் போன்ற ஏனைய ஹதீஃத் தொகுப்புகளிலுள்ள ஹதீஃத்களையும் ஆதாரமாகக் கொள்கிறோம். ஏனெனில் அவற்றிலும் ஸஹீஹான ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன.

பொதுவாக எந்த ஹதீஃத் தொகுப்புகளிலிருந்து ஹதீஃத்களை எடுத்தாலும், அதற்காக அறிவிப்பாளரின் பரிசீலனை ஒன்றையே நமக்கு உரைகல்லாக வைத்திருக்கிறோம். அறிவிப்பாளர் நம்பகமானவரா? நம்பகமற்றவரா? என்பன போன்ற விபரங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக, “தஹ்தீபுத் தஹ்தீபு, மீஜானுத்தஃதீல் இன்னும் இவை போன்ற அரும் பெரும் நூற்களின் துணைக் கொண்டு அவர்களின் நம்பக நிலையை, நாம் ஊர்ஜிதம் செய்துகொண்ட பின்னரே தெளிவு செய்கிறோம்.

ஆகவே நாம் நூற்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன்றி,  அந்த நூற்களில் இடம் பெற்றுள்ள ஹதீஃத் அறிவிப்பாளர்களின் நம்பக நிலையை அறிந்து, அதை முன் வைத்தே அந்த ஹதீஸ் ஸஹீஹானதா? பலகீனமானதா? என்ற முடிவுக்கு வருகிறோம்.

ஸிஹாஹுஸ்ஸித்தா என்று சொல்லப்படும் ஆறு பெரும் நூற்களில் உள்ளவை அனைத்தும் ஸஹீஹானவை என்று எவ்வாறு கூற முடியாதோ, அவ்வாறே அவை அல்லாதவற்றில் உள்ளவை அனைத்தும் ஸயீஃபானவை – பலகீனமானவை என்றும் கூற முடியாது. ஆகவே ஸஹீஹான ஹதீஸ்களை தெரிவு செய்வதற்கு உரைகல், அறிவிப்பாளர்களின் நம்பக நிலையைப் பரிசீலனை செய்வது ஒன்றேயாகும்.

முக்கிய ஹதீஃத் தொகுப்புகளும், அவற்றின் தொகுப்பாளர்களும் :

ஹதீஃத் தொகுப்பாளர் :                                                  தொகுப்புகளின் பெயர்                              மறைவு ஹிஜ்ரி

1.     இமாம் மாலிக்  (ரஹ்)                                              முஅத்தா இமாம் மாலிக்                                 179

2.     இமாம் அப்துல்லாஹ்பின்  (ரஹ்)                     கிதாபுமுஜ்ஜுஹ்து                                        181

3.     இமாம் ஸுப்ஃயானு ஸஸ்வ்ரீ(ரஹ்)              ஜாமிஉஸூஸீஃப்யான்                                    185    

4.     இமாம் முஹம்மத் (ரஹ்)                                         முஅத்தா இமாம் முஹம்மத்                             189

5.     இமாம் ஷாபியீ (ரஹ்)                                                 முஸ்னது ஷாபியீ                                         204

6.     இமாம் தயாலிஸீ (ரஹ்)                                            முஸ்னது தயாலிஸீ                                       204

7.     இமாம் வாகிதீ (ரஹ்)                                                   வாகிதீ                                                      207

8.     அப்துர் ரஜ்ஜாக் (ரஹ்)                                                 முஸன்னஃப் அப்திர் ரஜ்ஜாக்                              211

9.     ஹுமைதீ  (ரஹ்)                                                            முஸ்னது ஹுமைதீ                                       219

10.     தாரமீ  (ரஹ்)                                                                    முஸ்னது தாரமீ                                          225

11.    இப்னு அபீஷைபா (ரஹ்)                                           முஸன்னஃபு இப்னீ அபீஷைபா                          235

12.    அஹ்மதுபின் ஹம்பல் (ரஹ்)                                முஸ்னது அஹ்மத்                                       241

13.    புகாரீ(ரஹ்)                                                                        அல்ஜாமி உஸ்ஸஹீஹ் புகாரீ                          256

14.    முஸ்லிம் (ரஹ்)                                                              ஸஹீஹ் முஸ்லிம்                                      261

15.    அபூமுஸ்லிம்(ரஹ்)                                                       ஸுனனு அபீ முஸ்லிம்                                  262

16.    இப்னுமாஜ்ஜா(ரஹ்)                                                      ஸுனனு இப்னி மாஜ்ஜா                                 273

17.    அபூதாவூத் (ரஹ்)                                                           ஸுனனு அபீதாவூத்                                      275

18.    திர்மிதீ (ரஹ்)                                                                    அல்ஜாமி உத்திர்மிதீ                                     279

19.    இப்னு அபித்துன்யா (ரஹ்)                                       கிதாபுத்துஆ                                                                                             281

20.    ஹாரிஸ்(ரஹ்)                                                                  முஸ்னது ஹாரிஸ்                                      282

21.    அபூபக்ரில் பஜ்ஜார்(ரஹ்)                                           முஸ்னது பஜ்ஜார்                                        292

22.    நஸயீ(ரஹ்)                                                                        ஸுனது நஸயீ                                           303

23.    அபூயஃலா(ரஹ்)                                                               முஸ்னது அபூயஃலா                                     307

24.    இப்னு ஜரீர்(ரஹ்)                                                            இப்னு ஜரீர்                                               310

25.    தஹாவீ (ரஹ்)                                                                  தஹாவீ                                                   311

26.    இப்னுகுஜைமா(ரஹ்)                                                    ஸஹீஹ் இப்னி குஜைமா                               311

27.    இப்னு அவானா(ரஹ்)                                                  ஸஹீஹ் இப்னி அவானா                               316

28.    இப்னுஹிப்பான்(ரஹ்)                                                 ஸஹீஹ் இப்னி ஹிப்பான்                              354

29.    தப்ரானீ(ரஹ்)                                                                    முஃஜமத் தப்ரானீ                                         360

30.    காமிலுபின் அதீ(ரஹ்)                                                 காமிலுபின் அதீ                                          365

31.    தாருகுத்னீ (ரஹ்)                                                            ஸுனனு தாரி குத்னீ                                     385

32.    இமாம் ஹாக்கிம்(ரஹ்)                                               முஸ்தத்ரக் ஹாக்கிம்                                   405

33.    இப்னு மர்தூயா(ரஹ்)                                                   இப்னு மர்தூயா                                          410

34.    அபூநயீம்(ரஹ்)                                                                  ஹில்யா                                                  430

35.    பைஹகீ(ரஹ்)                                                                    ஸுனனு பைஹகீ                                        458

36.    கதபுபஃதாதீ (ரஹ்)                                                           கதீபுபஃதாதீ                                               463

37.    பக்வீ  (ரஹ்)                                                                       ஷாஸுஸ்ஸுன்னா                                      516

38.    தைலமீ (ரஹ்)                                                                    முஸ்னது பிர்தவ்ஸ்                                     568

ஹதீஃத் கலை இந்தியாவில் யார் மூலம் எப்போது பரவியது?

பிரிவினைக்கு முன் அகண்ட இந்தியாவில் முதன் முதலாக எப்போது பரவியது?

பிரிவினைக்கு முன் அகண்ட இந்தியாவில் முதன் முதலாக ஹிஜ்ரீ 1052ல் காலமாகிய ‘ஷைக் அப்துல்ஹக் முஹத்திஸ் தெஹ்லவீ” இப்னு ஸைஃபுத்தீன் தருக்(ரஹ்) அவர்கள் ஹதீஃத் கலையைப் பிரகாசிக்கச் செய்தார்கள்.   

அவர்களுக:குப் பின் ஹிஜ்ரீ 1176ல் காலமாகிய ஷாஹ் வலிய்யுல்லாஹ் தெஹ்லவி(ரஹ்) அவர்களும், அவர்களுக்குப் பின்னர், அவர்களின் புதல்வர் ஷாஹ் அப்துல் அஜீஸ் தெஹ்லவீ(ரஹ்) அவர்களும் அவர்களுக்குப் பின்னர் அவர்களின் பேரர் ஷாஹ் முஹம்மத் இஸ்ஹாக் தெஹ்லவி(ரஹ்) அவர்களும் ஹதீஃத் கலையின் புனிதப் பணியை மேற்கொண்டனர்.

ஷாஹ் முஹம்மத் இஸ்ஹாக் தெஹ்லவி(ரஹ்) அவர்களிடம் ஹதீஃத் கலையைக் கற்றுத் தேறிய மாணவப் பெருமக்களட் அநேகர் உளர். ஷாஹ் அப்துல் கனீ முஜத்தித் தெஹ்லவீ, ஹுமத்துல்லாஹ் கீரானவீ, ஸய்யித் முஹம்மத் ஹுஸைன் பிஷாவரீ, ஷாஹ் முஷ்யித்தீன் அப்துல் லதீஃப் வேலூரீ ஆகியோர் அவர்களில் குறிப்பிடத் தக்கவராவர்.

தேவ்பந்து தாருல் உலூம் உடைய ஸ்தாபகரும், முதல்வருமாகிய முஹம்மத் காஸிம் நானூத்தவீ(ரஹ்) அவர்களும், அம்மதரஸாவின் இரண்டாம் முதல்வராகிய ரஷீத் அஹ்மத் கங்கோஹீ(ரஹ்) அவர்களும் மேற்காணும் ஷாஹ் அப்துல்கனீ முஜத்தித் தெஹ்லவீ(ரஹ்) அவர்களின் அன்பு மாணவராவர்.

பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் நிறுவனர் ஷாஹ் அப்துல் லஹ்ஹாம் வேலூரீ(ரஹ்) அவர்கள் மேற்காணும் ரஹ்மத்துல்லாஹ் கீரானலீ(ரஹ்) அவர்களிடமும், ஸய்யித் முஹம்மத் ஹுஸைன் பிஷாவரீ(ரஹ்) அவர்களிடமும், ஹதீஸ் கலை பயின்றுள்ளார்கள். சுருங்கக் கூறின் ஷாஹ் வலியுல்லாஹ் தெஹ்லவீ(ரஹ்) அவர்களும் அன்னாரின் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், மாணவர்கள் வாயிலாகவே அனைத்திந்தியாவிலும் ஹதீஃத் கலை பரப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்காணும் விபரங்களை ஆழ்ந்து நோக்குமிடத்து, நபித்துவ காலம் முதல், நமது காலம் வரை எக்காலக் கட்டத்திலும் ஹதீஃத் களைச் சேகரித்தல், அவற்றைக் கற்றல், கற்பித்தல், நூல் வடிவாக்குதல் போன்ற காரியங்களில் இடையில் தொய்வேற்பட்டு விடாது தொடர்ந்து சேவைகள் நடைபெற்று வந்துள்ளன. இன்னும் அவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன எனும் உண்மை நிலையை உணருகிறோம்.

ஆகவே வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹதீஃத்களைக் கற்று பிறருக்கு கற்பித்து, அவற்றில் ஸஹீஹான ஹதீஃத்களின்படி நல் அமல்கள் செய்வதற்கு தவ்பீக் செய்தருள்வானாக! ஆமீன்.

**************************************************************

ஐயமும் !  தெளிவும் !!

ஐயம் : கடைக்கு திருஷ்டிப் பரிகாரம் செய்வதற்காக உப்பு, மிளகாய் படிகாரம் முதலியவற்றை போட்டு, கடையைச் சுற்றி கடைக்கு வெளியில் அதை வைத்து எரிக்கின்றனர். இது பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?  S.அப்துல் கையூம் வேலூர்.

தெளிவு : தாங்கள் கூறுவதுபோல் செய்வதன் காரணமாகவோ அல்லது படிகாரத்தை கம்பளிக் கயிற்றில் கட்ட கடையின் வாயிலில் தொங்க விடுவதினாலோ அல்லது கடைக்கு முன்னால் ஒரு தேங்காயை ஒரே போடாகப் போட்டு உடைப்பதன் மூலமோ நமக்கு ஏற்படும் தீங்குகள் அகன்றுவிடும் என்று நினைப்பதெல்லாம் அர்த்தமற்ற மூடப் பழக்கங்களே அன்றி வேறில்லை.

நமக்கேற்படும் தொல்லைகள் நீங்குவதற்கு அவற்றை, அகற்றும் வல்லமைப் படைத்த அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதைத் தவிர வேறு வழியில்லை. நபி(ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் பின் வருமாறு தன்னிடம் பாதுகாப்புத் தேடும்படி பணிக்கிறான்.

(நபியே!) சொல்வீராக! விடியற்காலையின் ரட்சகன் (விடிவு காலத்தை உண்டுபண்ணும் ரட்சகன்) இடம் அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும், இருள் பரவும்போது ஏற்படும் (இரவின்) தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று (சொல்வீராக!)

மேற்கூறப்பட்டவை “சூரத்துல் ஃபலக்கு” என்னும் “குல்அ ஊது பிரப்பில்பலக்” என்ற சூராவின் பொருளாகும். இந்த சூராவையோ அல்லது இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்களையோ, நாம் ஓதி அனைத்து கஷ்டங்களுக்கும் அல்லாஹ்விடமே பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டி கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து நடந்து கொள்வோமாக!

ஐயம் : திருஷ்டிக்காக அல்லது கை கால்களின் வலி நீங்குவதற்காக பொதுவாக நமக்கு ஏற்பட்டுள்ள சங்கடங்களை அகற்றுவதற்காக கழுத்திலோ, கையிலோ, காலிலோ, கருப்புக் கயிற்றை ஓதி முடிச்சுகள் பற்றி போட்டு அல்லது முடிச்சுகள் போடாது கட்டிக் கொள்வது பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? அப்துல் ஹமீது, புதுக்கோட்டை.

தெளிவு : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்களின் துணைவியார் ஜைனபு(ரழி) அவர்கள் கூறுகிறார்கள். ஒருமுறை அப்துல்லாஹ்பின் மஸ்ஊது(ரழி) அவர்கள் எனது கழுத்தில் ஓர் கயிற்றைக் கண்டு இது என்ன? என்றார்கள். இது எனக்காக மந்திரித்த கயிறு என்றேன். உடனே அவர்கள் அதைப் பிடித்து அறுத்துவிட்டு, நீங்கள் அப்துல்லாஹ் (வாகிய என்னுடைய) குடும்பத்தார் ஷிர்க்கை விட்டும் வெகு தூரத்திலுள்ளவர்கள் (இவ்வாறு செய்வது முறைதானா) “நிச்சயமாக மந்திரமும், திருஷ்டிக்காக மந்திரித்த கயிறும், சூனியம் செய்தல் ஆகியவை அனைத்தும் ஷிர்க்கு என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.

அதற்கு நான், நீங்கள் என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? என்று கண்(தனது வலியின் காரணத்தால்) நீராக வடித்துக்  கொண்டிருந்தது. நான் ஒரு யூதரிடம் சென்றேன். அவர் அதற்கு மந்திரித்தவுடன் நின்றுவிட்டது என்றேன்.

அப்போதவர்கள் இதெல்லாம் ஷைத்தானுடைய வேலையாகும் அவன் தனது கையால் கண்ணில் இடிக்கிறான். மந்திரித்தால் அதை விட்டும் விலகிக் கொள்கிறான். (இது போன்றவற்றிற்கு) நபி(ஸல்) அவர்கள் ஓதியது போன்று நீர் ஓதினாலே உமக்குப் போதுமே என்று கூறிவிட்டு (இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள் என்றார்கள். அதாவது) அத்ஹிபின் பஃஸரப்பன்னஸ் – வஷ்ஃபி அன்தஷ்ஷாபீ – லாஷிஃபாஅ இல்லாஷிஃபாவுக – ஷிஃபா அன்லா யுகாதிரு ஸகமா. (அபூதாவூத்)

பொருள் : மக்களின் ரட்சகா! சிரமத்தை அகற்றி, ஆரோக்கியத்தைத் தந்தருள்! நீதான் சுகமளிப்பவன். நீ சுகமளிக்காது வேறு எவராலும் சுகம் அளிக்க இயலாது. ஒரு நோயையும் விட்டு வைக்காது பூரண சுகத்தையும் நல்குவாயாக! மேற்காணும் ஹதீஃதிலிருந்து கருப்புக் கயிறோ, கம்பளிக் கயிறோ, மந்திரித்தக் கயிறோ, மற்றெந்தக் கயிறொ கையிலோ, காலிலோ, கழுத்திலோ, இடுப்பிலோ குணத்தை நாடி கட்டுவதெல்லாம் சன்மார்க்கத்திற்குப் புறம்பான செயல் என்பதை மிகத் தெளிவாக அறிகிறோம்.

ஐயம் : நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள (இஷ்கில்) மவ்லூது ஓதாவிட்டாலும் குர்ஆன் ஷரீஃப் ஓதி ஹதியா செய்து விருந்து கொடுக்கலாமா? முஹம்மது எஹ்யா, காரைக்கால்.

தெளிவு : தங்களது கேள்வியிலிருந்து தாங்கள் நபி(ஸல்) அவர்கள் மீது இஷ்கைக் காட்டும் வழி தெரியாமல் வருந்துகிறீர்கள் என்பது தெரிகிறது. நப(ஸல்) மீது புகழ்பாக்களான மெளலூது-தவறெனில்-குர்ஆன் ஓதி ஹதியா செய்வது மூலம் அன்பைக் காட்டலாமா? எனக் கேட்கிறீர்கள். நபி(ஸல்) அவர்கள் மீது அளவு கடந்த அன்பைக் காட்ட அவர்கள் காட்டித் தந்த வழிமுறைதான் நல்லது. தனக்கு குர்ஆன் ஓதி ஹதியா செய்யும்படி நபி(ஸல்) அவர்கள் நமக்கு ஏவவில்லை. நபி(ஸல்) அவர்கள் மரணத்திற்குப்பின், எந்த நபித்தோழரும் குர்ஆன் ஓதி அவர்கள் ஹதியா செய்ததாக ஆதாரமும் அறவே யில்லை. ஆனால் நாம் குர்ஆன் ஓதினால் நாம் ஹதியா செய்யாமலே, நமக்குரிய நன்மைகள் குறைக்கப்படாமல் நபி(ஸல்) அவர்களுக்கும் நன்மை சென்றடைகிறது என்பதை மறுக்கமுடியாது. நபி(ஸல்) அவர்கள் மூலம் நாம் குர்ஆனைப் பெற்றோம். அவர்கள் மூலம் நேர்வழியான இஸ்லாத்தைப் பெற்றோம்ட. எனவே எந்த ஒரு நன்மையான செயலை வாழையடி வாழையாக செய்ய வைத்தார்களோ, அவர்களுக்கு அந்நன்மையின் பங்கு போய் தானாக சேர்ந்து கொண்டே இருக்கும். எனவே நாம் குர்ஆன் ஓதினால், அதை ஹதியா செய்யாமலேயே அவர்களுக்கு நன்மை கிட்டும்.

மேலும் நபி(ஸல்) மீது இஷ்கைக் காட்ட நபி(ஸல்) காட்டித் தந்த ஸலவாத்தை அதிகமாக ஓதுங்கள். இது அல்லாஹுவே நமக்கு இடும் ஆணையாகும்.

நிச்சயமாக அல்லாஹுவும், அவனது வானவர்களும் நபியின் மீது ஸலாவத்துச் சொல்கிறார்கள். (எனவே) விசுவாசிகளே! நீங்களம் அவர்மீது ஸலவாத்துச் சொல்லி சலாமும் பகருங்கள். (அல்குர்ஆன் : 33:56)

இந்த இறைவசனத்தில் விசுவாசிகளே! என அழைத்து நபி(ஸல்) மீது ஸலவாத்துச் சொல்ல ஆணையிடுகிறான். இவ்விறை ஆணைப்படி நபி(ஸல்) மீது  அதிகமாக ஸலவாத் சொல்ல ஆணையிடுகிறான். நபி(ஸல்) மீது அதிகமாக ஸலவாத் சொல்வது அவர் மீதுள்ள அளவு கடந்த அன்பை (இஷ்கை) வெளிப்படுத்தும் செயலாகும். வேறு ஒரு இடத்தில் அல்லாஹ் :

(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 59:7) என்கிறான்.

மேலும் குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹுவை வழிபடுங்கள். ரசூல்(ஸல்) அவர்களைப் பின்பற்றுங்கள் என்றெ ஆணையிடுகிறான். எனவே அல்லாஹ்விடம் நன்மை பெற நாம் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடிதான் செயல்பட வேண்டும். அவர்கள் விலக்கியதை நாமும் விலக்க வேண்டும். அவர்கள் ஏவியதை நாம் செயல்படுத்த வேண்டும். இப்படி இஸ்லாத்தின் ஏவல் விலகலில் நபிவழியை செவ்வென நிறைவேற்றுவதுதான் நபி(ஸல்) அவர்கள் மீது நாம் காட்டும் அளவற்ற அன்பு (இஷ்த்) ஆகும். எவ்வித சடங்குகளுமின்றி ஏழை எளியவருக்கு உணவளிப்பதை இஸ்லாம் வரவேற்கிறது.

ஐயம் : தலாக் உரிமை ஆண்களுக்கு மட்டும் உள்ள உரிமையா? பெண்களுக்கும் அவ்வுரிமை உண்டா? சீனத் காதிர் – அபிராமம்.

ஹனபி மத்ஹபைச் சார்ந்த ஒரு குடிகார கணவரிடமிருந்து மன விலக்குப் பெற மனைவிக்கு மார்க்கத்தில் உரிமையுள்ளதா? குர்ஆன், ஹதீஃத் ஆதாரத்தில் விளக்கவும். மு. யூசுப் ரஹ்மத்துல்லாஹ், நாகூர்.

தெளிவு :  பெரியவர் யூசுப் ரஹ்மத்ல்லாஹ் அரபிக் கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டிய கேள்வியை நமக்கு அனுப்பிவிட்டார் போலும். இதற்கு குர்ஆன், ஹதீஃத் ஆதாரத்தில் இஸ்லாம் கூறும் விடையைக் காண்போம்.

கணவர்களுக்கு பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமை உண்டு.  ஆயினும், ஆண்களுக்கு அவர்கள் மீது ஒருபடி உயர்வுண்டு.  (2:228)

மெற்படி குர்ஆன் வசனத்தில் அல்லாஹ்,  கணவன், மனைவிக்குள்ள உரிமைகளை சரிசமமாகவே கூறுகிறான். இருப்பினும் ஆண்களுக்கு ஒருபடி உயர்வுண்டு எனவும் அறிவிக்கிறான். திருமணம் என்பது இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு “ஒப்பந்தமாகும்”. அந்த ஒப்பந்தத்தில், இடம் பெறும் இருவரில், இருவருக்கும் அந்த  ஒப்பந்தத்தை முறிக்க உரிமை இருந்தால்தான் அதனை ஒப்பந்தமாகக் கொள்ள முடியும்.

ஆனால் அல்லாஹ் ஆண்களுக்கு ஒருபடி உயர்வுண்டு எனக் கூறியிருப்பதால் அந்த உயர்வு என்ன என்பதை அறிய வேண்டும். அது ஆண் தலாக் கொடுக்கலாம், கொடுக்க  முடியும் என்பதாகும். பெண் தலாக் கொடுக்க இயலாது. ஆனால் தலாக்கை கணவனிடமிருந்து பெற உரிமையுண்டு. இதற்கு நபி(ஸல்) காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.

ஜைனபு(ரழி) அவர்கள் தனது கணவர் ஜைது(ரழி) அவர்களிடமிருந்து விவாக விடுதலை பெற விரும்பழி நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜைனபு(ரழி) அவர்கட்கு “தலாக்” கொடுத்து விடும்படி ஜைத்(ரழி) அவர்களிடம் சொன்னார்கள். அதன்படி அவரும் “தலாக்” கொடுத்து  விட்டார். இதிலிருந்து பெண்கள் தலாக் சொல்ல முடியாது. தலாக் கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என்பது தெளிவாகின்றது.

ஒரு சில மத்ஹபுகளில் கணவன் தலாக் கொடுத்தால் காரணம் சொல்லத் தேவையில்லை. ஆனால் பெண் தலாக் கேட்டார். அதற்கான காரணங்களைக் கூற வேண்டும் என எழுதியுள்ளனர். இதற்கு எவ்வித குர்ஆன், ஹதீஃத் ஆதாரமில்லை. எவ்வித காரணமுன்றி கணவனுடன் வாழ மனைவி பிரியப்படவில்லையெனினும், அம்மனைவி கணவனிடமிருந்து தலாக் பெற உரிமையுண்டு என்பதை மேற்கண்ட ஜைது ஜைனப்(ரழி) அன்ஹுமா! நிகழ்ச்சி தமக்கு தெளிவுப்படுத்துகிறது.

அப்படி ஒரு பெண் விவாக விடுதலை கோரினால் (குலாஃ) கணவன் அதைக் கொடுக்க கடமைப்பட்டுள்ளான். அதற்கு அந்தக் கணவன் உடன்படாவிட்டால் சம்பந்தப்பட்டுள்ளான். அதற்கு அந்தக் கணவன் உடன்படாவிட்டால் சம்பந்தப்பட்ட பெரியவர்கள், முக்கியஸ்தர்கள் அந்தப் பெண்ணை அவளது கணவனிடமிருந்து இப்போதைய அரசு சட்டங்களை அனுசரித்து பிரித்து (பஸ்கு செய்து) விட வேண்டும் அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம் : எனது முஸ்லிம் நண்பர் ஒருவர் ஏழை குமர்களுக்கு தங்கத்தில் தாலி செய்து தானம் செய்து வருகிறார். இப்படி செய்வது சதக்கத்துன் ஜாரியா என அவரது ஷைக் கூறியதாக கூறுகிறார். இப்படி தாலி செய்து தானம் செய்வது குர்ஆன், ஹதிஃத் அடிப்படையில் கூடுமா? இது சதக்கத்துன் ஜாரியாவா? என்பதை விபரமாக விளக்கவும். டாக்டர் ஹெச்.அப்துல் காதிர், சென்னை-82.

தெளிவு : தாலி, கருகமணி போன்றவை இஸ்லாத்தில் இடம் பெறாத ஒன்றாகும். பாத்திமா(ரழி) அவர்களின் திருமணத்திற்கு வானவர் ஜிப்ராயில்(அலை) தாலி கொண்டு வந்தார் என உமர் புலவர் தனது சீராப்புராணத்தில் எழுதி வைத்திருப்பதை சிலர் ஆதாரமாகக் கூறுவார்கள். இதற்கு எவ்வித குர்ஆன், ஹதீஃத் சான்றுகளுமில்லை. தாலி, கருகமணி போன்றவை நமது நாட்டின் மாற்று மதத்தினரிடமிருந்து சம்பிரதாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே இஸ்லாத்திலேயே இல்லாத ஒன்றினை தானமாகக் கொடுப்பது எவ்விதம் (சதக்கா) தானமாகும்! என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

உங்களில் (ஆணாயினும், பெண்ணாயினும்) எவருக்கும் வாழ்க்கைத் துணையில்லாவிட்டால், அவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள். (அல்குர்ஆன் 24:32) என அல்லாஹ் ஆணையிடுகிறான். இக்குர்ஆன் வசனப்படி அவர், ஏழைக் குமருக்கு திருமணம் நடக்க உதவியமைக்கு கட்டாயம் நன்மை கிடைக்கும். ஆனால் அது தாலியாக தங்கத்தில் தர வேண்டுமெனச் சொல்வது தவறு. அதனை மார்க்கமாக்கினால் அது பித்அத்தாகவே முடியும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு. ஒவ்வொரு வழிகேடும் நரகின்பால் இட்டுச் செல்லும் என்ற நபிமொழியை நினைத்துப் பாருங்கள்.  நமது விஷயங்களில் இல்லாததொன்றை ஒருவர் புதிதாக உண்டுபண்ணினால் அது மறுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (அன்னை ஆயிஷா(ரழி), புகாரி)

நிலைமை இப்படியிருக்க தாலி செய்து தானம் செய்பவர், தனது. ஷைக் இதனை சதக்கத்துன் ஜாரியா எனக் கூறியதாக ஆதாரம் காட்ட முற்படுவது அபத்தமாகும். தாலி போன்ற சடங்குகள் இஸ்லாத்தில் இல்லை என்பது கூட தெரியாத ஒருவரை எப்படி மார்க்க ஆலோசகராக உங்கள் நண்பர் ஏற்றாரோ? யாமறியோம்.

ஸதக்கத்துன்  ஜாரியா என்பது பள்ளிவாசல் கட்டுவது, குர்ஆன் வாங்கி மக்கள் ஓதுவதற்காக  ஏற்பாடு செய்வது. குடிதண்ணீருக்காக கிணறு வெட்டி அதனால் மக்கள் பயன் அடையும்படி செய்வது போன்றவையே அன்றி, தாலி செய்து தானம் செய்வதெல்லாம் இதில் இடம் பெறாது.

ஐயம் : உடல்நிலை சரியில்லாத நேரத்தில் (கடினமான காய்ச்சல் குளிக்க முடியாத சூழ்நிலையில்) குளிப்பு கடமையாகி விட்டால் தொழுகைகளை எப்படி நிறைவேற்றுவது? கலா செய்து கொள்வது கூடுமா? குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் பதில் வேண்டுகிறேன். அப்துல் லத்தீப், திருச்சி.

தெளிவு : ஒளூ செய்ய இயலாத குளிக்க முடியாத நேரங்களிலும் தொழுதாக வேண்டும் என்றிருப்பதால் ஒளூவுக்குப் பகரமாக, குளிப்புக்குப் பகரமாக “தயம்மும்” செய்து கொண்டு தொழுதாக வேண்டும் என்று குர்ஆனும், ஹதீஃதும் கூறுகின்றன.

மார்க்க விஷயங்களில் கவனம் செலுத்தாதிருப்பதன் காரணமாக நம்மில் அநேகருக்கு “தயம்மும்” எவ்வாறு செய்ய வேண்டும் என்பது கூடத் தெரியாது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தயம்மும் என்றால், இரு கைகளையும் தரையிலோ, சுவற்றிலோ அடித்து, அவற்றால் முகத்தையும், இரு கைகளையும் மணிக்கட்டு வரைத் தடவிக் கொண்டால் போதும். தயம்மும் செய்துகொண்ட மாத்திரத்தில் குளித்தவராக, ஒளூ செய்தவர்களாக நாம் சுத்தமாகி விடுகிறோம். பின்னர், தொழ வேண்டியதுதான். (தயம்மும் பற்றிய அதிக விளக்கத்திற்கு அந்நஜாத் 87, டிசம்பர் இதழ் பார்க்க)

ஐயம் : இரவு நேரங்களில் கண்ணாடியில் பார்ப்பது கூடாது என்பதாக ஹதீஃத்களில் தடை செய்யப்பட்டுள்ளதா? ஆர். முஹம்மத் பாரூக், மானூர்.

தெளிவு : இரவில் கண்ணாடி பார்ப்பதற்குத் தடை இருப்பதாக ஸஹிஹான ஹதீஃத்களில் எதுவுமில்லை. அலி(ரழி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் செய்த வஸிய்யத்து – உபதேசங்கள் என்னும் ஒரு நூல் உள்ளது. அதில் நீர் இரவில் கண்ணாடியில் பார்க்க வேண்டாம்! ஏனெனில் அதனால் மாறுகண் ஏற்படும். என்று கூறப்பட்டுள்ளது. இது போன்ற பல விஷயங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இத்தகைய நூற்கள் ஆதாரமானவை அல்ல. காரணம்: இவற்றில் ‘ஸனத்’ அறிவிப்பாளர் தொடர் எதுவும் கிடையாது.

ஐயம் : மறைவான ஒரு மையித்திற்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா? ஹதீஃத்களில் இதற்கு ஆதாரமுண்டா? என்.எம்.ரயீஸ். தல்கஸ்பிடிய,  இலங்கை.

தெளிவு : மறைவான மையித்திற்காக ஜனாஸா தொழுகை நடத்துவது கூடும். இதற்கு பின் வரும் ஹதீஃத் சான்றாக உள்ளது. நபி(ஸல்) அவர்கள் நஜ்ஜாஷி அரசர் மரணமான தினத்தன்று மக்களுக்குச் சென்று, அங்கு நமது ஸஹாபாக்களை அணி வகுக்கச் செய்து நான்கு தக்பீர்கள் கூறி அவருக்காக மறைவான மய்யித்துத் தொழுகை தொழ வைத்தார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்,அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

ஐயம் : ஒருவர் ஒத்திக்கு ஒரு வீட்டை வாங்கி அதில் தான் குடியிருக்காது, மற்றவருக்கு வாடகைக்கு விட்டு அவரிடமிருந்து வாடகைப் பணம் வாங்குகிறார். இவ்வாறு வாடகைப் பணம் வாங்குவது ஹலாலாகுமா? அல்லது ஒத்திக்கு வாங்கிய அந்த வீட்டில் தாமே இருப்பது எப்படி? ஆதாரத்துடன் பதில் தருக. அப்துர்ரவூப், திருச்சி.

தெளிவு : இஸ்லாமிய முறைப்படி எப்பொருளையும் ஒத்திக்கு வாங்குவதே கூடாது என்றிருக்கும்போது, அதைப் பிறருக்கு வாடகைக்கு விடுவதும்தான் கூடாது. தாமே அதில் குடியிருப்பது என்பதும் கூடாத ஒன்றாகும். பிறர் வீட்டில் குடியிருப்பவர் அந்த வீட்டாருக்கு வாடகை செலுத்தக் கடமைப் பட்டிருக்கும்போது, வீட்டுக்கு வாடகையில்லை. கொடுத்த பணத்துக்கு வட்டியில்லை என்று கூறி வீடுவதால் அது வட்டியாகாது என்று கருதுவது தவறாகும்.

“முமின்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் உள்ள வியாபார முறை அல்லாமல் ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்!” (அல்குர்ஆன் 4:29)

“எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மழுீறி அநியாயமாக இவ்வாறு செய்தால்’ விரைவாகவே அவரை தாம்(நரக) நெருப்பில் நுழையச் செய்வோம். (4:30)

மேற்காணும் வசனங்கள் மார்க்கச் சட்டத்திற்குப் புறம்பாக கொடுக்கல் வாங்கல் செய்வதைத் தடை செய்வதோடு, அத்துமீறி நடப்போருக்கு நரக வேதனை உண்டு என்பதனையும் எச்சரிக்கை செய்கின்றன.

ஐயம் : அல்லாஹ்வுக்காக ஒரு முஸ்லிமை வெறுத்தொதுக்கலாமா? அவரது தேவைகளை பஹிஷ்கரிக்கலாமா? விளக்கம் தேவை. எம்.ஏ.ஹாஜி.முஹம்மது, நிரவி.

தெளிவு : எவர் அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காக வெறுத்து, அல்லாஹ்வுக்காகக் கொடுத்து, அல்லாஹ்வுக்காக கொடுக்க மறுத்து விடுகிறாரோ, அவர் ஈமானை நிறைவு செய்துவிட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூ உமாமா(ரழி), அபூதாவூது, திர்மிதீ.)

மேற்காணும் ஹதீஃதின்படி ஒரு முஸ்லிமை, வெறுப்பதும், அவருக்கு எதுவும் கொடுக்காமல் இருப்பதும் சரி என்பதாகத் தெரிந்தாலும், தொடர்ந்து இந்த நிலை நீடிப்பதை நபி(ஸல்) அவர்களின் கீழ்க்காணும் ஹதீஃத் தடை செய்கிறது.

ஒருவர் தனது சகோதரரை மூன்று தினங்களுக்கு அதிகமாக வெறுத்திருப்து முறையாகாது. இருவரும்ட சந்தித்துக் கொள்ளும் போது இவரை விட்டு அவரும், அவரை விட்டு இவரும் முகம் திருப்பிக் கொள்கின்றனர். இவ்விருவரில் சிறந்தவர் (மற்றவருக்கு) ஸலாம் கூறி முந்துபவரேயாவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஅய்யூபுல் அன்ஸாரீ(ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஆகவே வெறுப்பை மூன்று தினங்களுக்கு அதிகமாக  நீடித்துக் கொண்டு செல்லாது, விரைவில் சமாதானமாகி விடுவதே முறையாகும்.

************************************************************************

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

உங்களது சில இதழ்களில் ‘ஜியாரத்’ நபி(ஸல்) அவர்களின் ஸுன்னத்து என்கிறீர்கள். தர்காக்களுக்கு ‘ஜியாரத்’ செல்வது கூடாது என்று சில இதழ்களில் எழுதுகிறீர்கள். இது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே?  S.A.G. ராபி, திருச்சி.

இதனை மேலோட்டமாகப் பார்க்கும்போது முரணாகத் தெரியும். சிந்தித்து விளங்கிக் கொண்டால் முரண்பாடு தீர்ந்துவிடும். நபி(ஸல்) அவர்கள்ட கற்றுத்தந்த ‘ஜியாரத்’ நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற பாகுபாடின்றழி இறந்தவர்களை அடக்கஞ் செய்யப்பட்டிருக்கும் பொது கபாஸ்தான்களுக்குச் சென்று, அதன் மூலம் நாமும் மரணிப்பவர்களே என்ற எண்ணத்தையும், மறுமையின் சிந்தனையையும் உண்டாக்கிக் கொள்வதாகும். நபி(ஸல்) அவர்கள் ஜியாரத்தில் ஓதக் கற்றுத் தந்த துஆவும் இதனையே உறுதிப்படுத்துகின்றது. ஆனால் தர்காக்களுக்கு ‘ஜியாரத்’ செல்பவர்கள், அந்த நோக்கத்தோடு செல்வதில்லை. அங்கு அடக்கமாகி இருக்கும் அவுலியா(?)விடம் தங்களின் தேவைகளை முறையிடுவதற்கும், குறைந்தபட்சம் அல்லாஹ்விடம் தங்களுக்காக பரிந்துரை செய்யும்படி சொல்லுவதற்காகவும், (அவர்கள் செவியுறமாட்டார்கள் என்பது தனி விஷயம்) செல்லுகிறார்கள். தர்காக்களில் அடக்கமாகி இருப்பவர்களை அவுலியாக்கள் என்று நம்புகின்றனர். ஆதம்(அலை) அவர்கள் முதல் உலகம் இறுதிவரை தோன்றும் மக்கள் அனைவரையும் இரு கூட்டங்களாக மட்டுமே பிரிக்க முடியும். ஒரு கூட்டம் நல்லவர்கள் – அவுலியாவுல்லாக்கள் மற்ற கூட்டம் கெட்டவர்கள் – அவுலியாவுஷ் ஷைத்தான்கள், மூன்றாவது ஒரு கூட்டம் நிச்சயம் இருக்க முடியாது. அப்படியானால் தர்காக்களில் அடங்கி இருப்பவர்களை அவுலியாக்கள் என்று நம்பி செல்லும் இவர்கள், தங்களை அல்லாஹ்வின் நேசர்கள் இல்லை – அவுலியாவுல்லாக்கள் இல்லை என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். இவ்வாறு தம்மைத்  தாமே தரம் தாழ்த்திக் கொள்வானேன்? எனவேதான் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற பாகுபாடின்றழி அடக்கம் செய்யப்பட்டுள்ள பொது கபுரஸ்தானுக்கு செல்வதை ஸுன்னத் – ஆகும் என்றும், தர்காக்களுக்குச் செல்வதை ஆகாது என்றும் கூறுகிறொம்.

ஹஸன் குத்தூஸ் என்பவரிடமிருந்து நஜாத் ஆசிரியருக்கு எழுதப்பட்ட கடிதம் என்று காதியானிகளின் ஏட்டில் ஒரு கடிதம் பிரசுரம் ஆகி இருக்கிறதே? S.A. லியாகத் அலி, திருச்சி-2.

அப்படி ஒரு கடிதம் எவரிடமிருந்து இன்றைய தேதிவரை நமக்கு வரவில்லை. காதியானிகளைப் பொறுத்தமட்டில் நாம் முன்பே எழுதியது போல், நமது விளக்கங்கள் அவர்களுக்குப் பலன் தரப்போவதில்லை. தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்பவே முடியாது. வாதத்தை வாதத்தால் வெல்ல வக்கற்றவர்கள் வக்கனை பேசுவது போலவே காதியானிகளும் வக்கனை பேசுகின்றனர். அவர்களது வக்கனைகள் சுய சிந்தனை மழுக்கப்பட்ட மக்களைத் தக்க வைத்துக் கொள்ள பயன்படலாம். சுய சிந்தனையாளர்கள், அவர்களின் எழுத்திலேயே அசடு வழிவதைப் புரிந்துகொள்ள முடியும். அரபழி தெரியாதவர், ஆலிமல்லர் என்ற முகல்லிதுகளின் பல்லவியையே காதியானிகளும் பாட ஆரம்பித்துள்ளனர்.

பாமர முஸ்லிம்கள் கிறிஸ்தவம் நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள் என்று காரணம் காட்டி ஈஸா(அலை) அவர்களைப் பற்றி குர்ஆன் கூறும் உண்மைகளை மறைக்க வேண்டும் என்று சொல்லுகிறவர்கள், அதே பாமர முஸ்லிம்கள் வழிகெட்ட காதியானிஸம் நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள் என்டற காரணம் காட்டி, காதியானிகளை ‘காஃபிர்கள்’ என்று ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்வார்களா? அது நியாயம் என்றால் இதுவும் நியாயம்தான்.

தங்களுக்குப் பாதகமானவை குர்ஆனில் கூறப்பட்டிருந்தாலும் அவை கஸஸுல் அன்பியா கட்டுக் கதைகள் என்று கூறத் தயங்காதவர்கள், தங்களுக்குச் சாதகமானவை கஸஸுல் அன்பியா நூலைவிட கேடுகெட்ட நூற்களில் கூறப்பட்டிருந்தாலும், அவற்றைத் தூக்கிப் பிடிக்கத்  தயங்கமாட்டார்கள் காதியானிகள். அதனால்தான் ஏற்றி எண்ணப்படும் தப்ஸீர்களில் ஒன்றான தப்ஸீர் இப்னு கதீர் வால்யூம் 2, பக்கம் 228-லும், இன்னும் பல தப்ஸீர்களிலும் காணப்படுமட் 7:73 வசனத்தின் விளக்க உரையில் காணப்படும் சூல் ஒட்டகை கற்பாறைக்குள்ளிலிருந்து வெளிவந்த அதிசயம் காணப்படுவது கட்டுக்கதை என்றும், மேலும் 7:77, 11:64, 17:59, 26:155, 54:27, 91:13 ஆகிய வசனங்களில் காணப்படும் பெண் ஒட்டகைப் பற்றிய செய்திகள் அனைத்தும் கட்டுக்கதைகள் என்றும் எழுதுகின்றனர் காதியானிகள், மனித அறிவுக்கு அப்பாற்பட்ட அதிசயங்களை அல்லாஹ் சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறவர்கள் அல்ல காதியானிகள். சுருங்கச் சொல்லின் அல்லாஹ்வின் உள்ளமையை மறுப்பவர்கள் நாஸ்திகர்கள் அல்லாஹ்வின் வல்லமையை மறுப்பவர்கள் காதியானிகள்.

ஈஸா(அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்ற தங்களின் பொய் வாதத்தை நிலைநாட்ட, குர்ஆனின் சில வசனங்களைத் திரித்து விளையிட்டிருந்தனர் காதியானிகள், அந்த வசனங்களுக்கு உரிய விளக்கங்களை உரிய ஆதாரங்களுடன் வெளியிட்டு, காதியானிழகளின் ஆகாசப் புளுகுகளை அம்பலப் படுத்தியிருந்தோம்.

ஈஸா(அலை) அவர்கள் மரணிக்கவில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லும் ஒரேயொரு வசனத்தையேனும் காட்டுங்கள் என்று கேட்டிருந்தோம். ஈஸா(அலை) உயிரோடு இருப்பதைத் தெரிவிக்கும் ஒரு ஆதாரத்தையும் தரவில்லை என்று காதியானிகள் வக்கனையாக எழுதியுள்ளனர். அவர்கள் கூற்றுப்படியே ஈஸா(அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகக் குறிப்பிடும் ஒரேயொரு வசனத்தையேனும்ட அவர்கள் காட்டட்டுமே பார்க்கலாம்.

குர்ஆன் இறங்கிக் கொண்டிருக்கும்போது மரணிக்காமல் உயிருடன் இருந்த நபி(ஸல்) அவர்கள் பின்னால் மரணிப்பவர்களே என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறும் 3:144 வசனம் போலவே 5:75 வசனமும் அமைந்திருப்பது. கி.பி. 625-ல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தது போல், நபி ஈஸா(அலை) அவர்களும் உயிருடன் இருந்தார்கள் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி தெள்ளத் தெளிவாக விளக்குகின்றது. அதன் பின் கி.பி.632ல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மரணித்த சம்பவம் தெளிவாக இருக்கிறது. அதே போல் கி.பி.625-க்கு பிறகு ஈஸா(அலை) மரணித்ததற்கு ஆதாரம் இருந்தால் காதியானிகள் காட்டட்டுமே. இந்த 5:75 வசனம் ஈஸா(அலை) அவர்கள் இன்றுவரை மரணிக்கவில்லை. இனிமேல் மரணிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதை நேரடியாகவே தெள்ளத் தெளிவாக சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது. இதனை அறிவாளிகள் அறிந்து கொள்ள முடியும்.

நமது நூல் வெளியானதும், அதற்கு மறுப்பு நூல் எழுதி இலவசமாக வேண்டுவோருக்கு அனுப்புவதாக வாக்களித்த காதியானிகள், அதற்கு மாறாக ‘ஆறின் கஞ்சி பழங்கஞ்சி’ என்ற பழமொழழிக்கொப்ப விஷயத்தை ஆறப்போடும் நோக்கில் தங்கள் ஏட்டில் சிறிது சிறிதாக வெளியிட முற்பட்டுள்ளனர்.  இதுவே அவர்களின் முகத்தில் அசடு வழிவதைக் காட்டுகிற. நமது நூலில் காணப்படும் விமர்சனங்கள் அனைத்திற்கும் மறுப்புத் தெரிவித்து தனி நூலாக அவர்கள் வாக்களித்தது போல் வெளியிடட்டும். அவர்களின் ஆகாசப் புளுகுகளை, அவர்களின் ஆதரவாளர்களே தெளிவாக அறிந்து கொள்வார்கள்.

‘லஃனத்துல்லாஹி அலல் காதிபீன்’
பொய்யர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!

ஊட்டி M.R. கான் பெயரில் ஒரு துண்டு பிரசுரம் வெளியாகியுள்ளதே? S.முஹம்மது சலீம், பாலக்கரை.

அவதூறு பரப்பி வருவதாக நாம் வீண்பழி சுமத்தி வருகிறோம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களின் சந்தேகத்தைப் போக்கி,  குறைசொல்லி, கிண்டல் செய்து, புறம் பேசித் திரிபவர்களுக்குக் கேடுதான் (104:1) என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கைக்கு அஞ்சாமல் குறை பேசி புறம் சொல்லித் திரிகிறார்கள் என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளனர். சம்பந்தப்பட்ட நமது துண்டு பிரசுரத்திற்கு, நம்பந்தப்பட்டவரே பதில் அளிக்காமல், இன்னொருவரின் பெயரில் ஒளிந்து கொள்வதே அவர்களின் யோக்கியதாம்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஹதீஃத்களை அறிவிப்பவர்களின் யோக்கியதாம்சங்களை வைத்தே அவர்களின் மூலம் அறிவிக்கப்படும் ஹதீஃத்களை முடிவு செய்கிறோம். இங்கு மார்க்கப் பிரச்சாரம் செய்யும் இருவர் ஒருவரை ஒருவர் பொய்யர் என்று சொல்லும்போது, அவர்களில் பொய்யர் யார்? என்று முடிவு கட்டுவதே முதல் வேலையாகும். அதன் பின்பே அவர்கள் கூறும் மார்க்க மஸாயில்களைப் பரிசீலிக்க வேண்டும் என்பதே முறையாகும். அவர்கள் குறிப்பிடும் மஸாயில்களின் உண்மை நிலையை அறிந்து கொள்வதை விட ஒரு முஸ்லிமைப் பற்றி தப்பெண்ணம் கொண்டிருப்பது சரியா? தவறா? என்று சரியான முடிவுக்கு வருவது பிரதான காரியமாக இருக்கிறது என்பதை சாதாரண மனிதனும் ஒப்புக் கொள்வான். இதற்கு மாற்றமாகப் பேசுவதிலிருந்தே அவர்களின் நிலை புரிகின்றது.

அடுத்து ரூ. 30 ஆயிரம் ஊழல் செய்துள்ளதைக் கண்டு பிடித்தது போலும், அதனை நாம் ஓராண்டில் தந்து தீர்ப்பதாக ஒப்புக் கொண்டு எழுதித் தந்தது போலும், மக்களை நம்பச் செய்யும் வகையில் ஒரு புதிய அவதூறை வெளியிட்டுள்ளர். அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், நாம் எழுதித் தந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்களே அந்த வாசகத்தை வெளியிட்டு, வேண்டுவோருக்கு அதனட் ஒரிஜினல் போட்டோ காப்பியையும் அனுப்பித் தரட்டுமே பார்க்கலாம்.

குர்ஆனை விளங்குவது யார்? என்ற தொடர் கட்டுரையை நிறுத்தி வைத்துள்ளீர்களே ஏன்?  ரபீக், திருச்சி.

அதன் இறுதிப் பகுதியில் ‘முத்தஷாபிஹாத்’ வசனங்கள் பற்றி நாம் தெளிவுபடுத்தி இருந்தோம். அதற்கு மாற்றமான கருத்துக்களை இதுவரை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படாத அபத்தங்களை எல்லாம் ‘முத்தஷாபிஹாத்’ வசனங்களின் விளக்கம் என்று தொடர் கட்டுரை ஒன்று ஒரு ஏட்டில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தக்லீதை மறுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே ‘முஹ்க்கமாத்’ வசனங்களிலும்  மாறுபட்ட கருத்துக்கள் உண்டு என்று எழுதி தக்லீதையும்ட மத்ஹப்களையும் நியாயப்படுத்தி எழுதி வருகிறது. அந்த ஏடு. அந்தத் தொடர் கட்டுரை வரிக்கு வரி அலசப்பட்டு விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் அந்த ஏடு தனது தொடர் கட்டுரையை முடிக்கட்டும். அவர்களின் ஆட்சேபணைகளுக்கெல்லாம் விளக்கம் கொடுத்து நமது கட்டுரையை முடிவுறச் செய்வோம்.

Previous post:

Next post: