இப்னு ஸதக்கத்துல்லாஹ்
“”…அவர்களில் ஒரு சாரார், அல்லாஹ் வின் வசனங்களைக் கேட்டு, நன்கு விளங்கிய பிறகு வேண்டுமென்றே அதை புரட்டக் கூடியவர்கள்” 2:75 மேலும், அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர். கட்டுக்கதைகளை (அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர நெறிநூலை அறிந்து வைத்திருக்கவில்லை, மேலும், அவர்கள் (வீண்) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. 2:78
மறைந்த அபூ அப்தில்லாஹ் அவர்கள் பிறை, கணக்கீடு, நாளின் துவக்கம் குறித்து பீ.ஜே. ஜமாஅத்திடம் 46 கேள்விகள் கேட்டிருந்தார்கள். வெகுநாட்களாக அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், சொல்ல முடியாமல் இருந்து விட்டு, கடைசியில் அவர்களிடம் உள்ள விளங்காதவர்களை திருப்திபடுத்துவதற்காக அவர்களை மேலும் விளங்காதவர்களாக்குவதற்காக, அவர்கள் எதையும் விளங்கி விடக்கூடாது என்பதற்காக பதில் என்ற பெயரில் உளறல்களை வாரி வழங்கி அவர்களை சுற்றலில் விட்டிருந்தார்கள். ஆகவே, அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது அவர்கள்தான். நாமல்ல, ஆயினும், அவர்கள் என்னதான் உளறிக் கொட்டினாலும், அந்த உளறல்களுக் கிடையே அல்லாஹ் 47:30ல் சொல்லியிருப்பது போல் அவர்களின் வாயிலிருந்தே உண்மையை வெளியாக்கி இருக்கிறான். அதை மட்டும்தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.
முதல் கேள்விக்கான பதிலில் : எந்த மொழியாக இருந்தாலும், பார்த்தல் என்பதற்கு கண்ணால் பார்த்தல் என்று தான் பொருள் செய்ய வேண்டும். அந்த அர்த்தம் பொருந்தாத இடத்தில் மட்டும் தான் வேறு பொருத்தமான அர்த்தம் செய்ய வேண்டும் என்றும், இரண்டாவது கேள்விக்கான பதிலில் : உதாரணமாக இந்த ஆணியின் மறை கழன்று விட்டது அல்லது லூசாகி விட்டது என்றால் நேரடி அர்த்தம் தான் இதற்குச் செய்ய வேண்டும். ஆனால் இந்த மனிதனுக்கு மறை கழன்று விட்டது என்று கூறினால் அல்லது லூஸ் என்று கூறினால் அதற்கு நேரடி அர்த்தம் செய்ய முடியாது. கிறுக்கன் என்று தான் அர்த்தம் செய்ய வேண்டும், என்றும், 14வது கேள்விக்கான பதிலில் : “”இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்ட உன்னிடம் என்ற சொல்லை இவர்கள் இருட்டடிப்பு செய்து விட்டு குழப்பப் பார்க்கின்றனர். இந்த வசனத்தில், “”உம்மிடம்” வருவார்கள் என்று அல்லாஹ், இப்ராஹீம் நபியை நோக்கிச் சொல்கிறான். இப்ராஹீம் நபியை நோக்கி உம்மிடம் மெலிந்த ஒட்டகத்தில் வருவார்கள் என்று சொன்னால் உலகம் அழியும் வரை அனைவரும் ஒட்டகத்தில் செல்ல வேண்டும் என்ற கருத்து எப்படி வரும்? இவ்வாறு கிறுக்குத்தனங்கள் எழும் என்பதால் தான், “”அது அந்தக் காலத்திற்கு மட்டும் உரியது. மற்ற மற்ற காலங்களில் அவரவர் வசதிக்கேற்ப பயணம் செய்யலாம் என்பதை வலியுறுத்தும் பொருட்டு, “”உம்மிடம்” வருவார்கள் என்று சேர்த்துச் சொல்கிறான் அல்லாஹ்” என்றும் எழுதி யிருக்கிறார்கள்.
பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்.
ஆன்லைன் பீ.ஜே.காம். புகாரி : 1913 ஹதீஃதுக்கு, நாம் உம்மி சமுதாயமாக இருக்கிறோம். நமக்கு எழுதி பதியவோ, சந்திர ஓட்டத்தை கணக்கிடவோ தெரியாது. எனவே, மாதம் என்பது நமக்கு 29 நாளாகவும் இருக்கும், 30 நாளாகவும் இருக்கும், நமக்கு பிறகு வரவிருக்கும் எழுதவும், சந்திர ஓட்டத்தை கணக்கிடவும் தெரிந்த சமுதாயம். இது விஷயத்தில் சரியான தீர்வை எட்டும் என்றும், “”கண்ணால் பார்த்தல் என்பது அந்தக் காலத்துக்கு மட்டும் உரியது. இப்போதுள்ள வசதிக்கேற்ப கணக்கிட்டு செயல்படலாம் என்பதை வலியுறுத்தும் பொருட்டு பிறை பார்த்தல் சம்பந்தமாக வரும் வசனங்களில் எல்லாம் “”ரஃயல் ஐன்” என்ற வார்த்தையை போடாமல் “”கணக்கிட்டு பார்த்து” என்ற மறைமுகப் பொருளையுடைய “”ருஹ்யத்” என்ற வார்த்தையை போட்டுள்ளான் அல்லாஹ்” என்றும், அபூ அப்தில்லாஹ் அவர்கள் விளக்கம் சொன்னார்கள்.
அந்த இரண்டு விளக்கங்களையும் அப்படியே காப்பியடித்து, “”அது அந்தக் காலத்திற்கு மட்டும் உரியது, மற்ற மற்ற காலங்களில் அவரவர் வசதிக்கேற்ப பயணம் செய்யலாம் என்பதை வலியுறுத்தும் பொருட்டு, “”உம்மிடம்” வருவார்கள் என்று சேர்த்துச் சொல்கிறான் அல்லாஹ்” என்று இவர்கள் பதில் தந்திருக்கிறார்கள். அபூ அப்தில்லாஹ் அவர்களுக்கு அரபி தெரியாதாம். விளங்கத் தெரியாதாம். குர்ஆன் ஞானம் கிடையாதாம், ஹதீஃத் ஞானம் கிடையாதாம், எனவே, அவர் சொன்ன விளக்கம் தவறாம், ஏற்றுக் கொள்ளமாட்டார்களாம். ஆனால், அதை இவர்கள் காப்பி அடிப்பார்களாம். அது தவறில்லையாம், காப்பி அடித்து நமக்கு பதிலாகத் தருவார்களாம், அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். மேலும், இப்படியொரு பதிலைத் தந்ததன் வாயிலாக புகாரீ : 1913 ஹதீஃதுக் கும், “”ருஹ்யத்” என்ற வார்த்தைக்கும் அபூ அப்தில்லாஹ் அவர்கள் சொன்ன விளக்கம், சரிதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்கள். இது போதாதென்று அவதூறு வேறு. “”உம்மிடம்” என்ற வார்த்தையை இருட்டடிப்பு செய்து விட்டார்களாம், குழப்புகிறார்களாம்.
இவர்களெல்லாம் கிறுக்கன் என்று சொல்லக் கூடாது, காரியக் கிறுக்கன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், கிறுக்கனை விட காரியக் கிறுக்கன்தான் ஆபத்தானவன். குறிப்பிட்ட அந்த வசனத்தை முழுமையாக எடுத்தெழுதி இடையில் “”உம்மிடம்” என்ற அந்த வார்த்தையை மட்டும் விட்டிருந்தால் இவர்கள் சொல்வதில் நியாமிருக்கும். நேரடிப் பொருள் எடுக்க வாய்ப்பு இல்லாத போது, அல்லது நேரடிப் பொருள் பொருந்தாத இடத்தில் மட்டும்தான் மறை முகமான பொருளை எடுக்க வேண்டும் என்று வாதம் செய்யும் இவர்களிடம், 22:27 வசனத்தில் நேரடிப் பொருள் எடுக்க வாய்ப்பு இருக்கும் பகுதியை மட்டும் எடுத் தெழுதி கேள்வி கேட்டால், அதற்கு பதில் சொல்ல வக்கற்ற இவர்கள் கேள்வியிலிருந்து தப்பிப்பதற்காக “”ஆ! இருட்டடிப்பு!” குழப்பம்! என்று எல்லோருடைய கவனத்தையும் திசை திருப்பி விட்டு அந்த சந்தடி சாக்கில் “”அது அந்தக் காலத்திற்கு மட்டும் உரியது, மற்ற மற்ற காலங்களில் அவரவர் வசதிக்கேற்ப பயணம் செய்யலாம் என்பதை வலியுறுத்தும் பொருட்டு, “”உம்மிடம்” வருவார்கள் என்று சேர்த்துச் சொல்கிறான் அல்லாஹ்” என்று அந்த வசனத்தில் உள்ள மறைமுகப் பொருளை பதிலாகத் தந்திருக்கிறார்கள்.
அதாவது, நேரடிப் பொருள், மறைமுகப் பொருள் இரண்டையும் எடுக்க வாய்ப்பு இருக்கும் இடத்தில், மறைமுகப் பொருளுக்கே இவர்கள் முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள் இப்படியொரு பதிலை தந்ததன் வாயிலாக, “”ருஹ்யத் பார்த்தல்” என்ற வார்த் தைக்கு நேரடிப் பொருள் எடுக்க வாய்ப்பு இருந்தாலும் வசதியை கருத்தில் கொண்டு அதை எடுக்காமல் மறைமுகப் பொருளான “”கணக்கிட்டு பார்த்தல்” என்ற பொருளை எடுக்கலாம் செயல்படுத்தலாம் என்று ஒப்புதல் வாக்கு மூலம் தந்திருக்கிறார்கள். அதாவது, தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்துக் கொண்டார்கள் அவ்வளவுதான். (ருஹ்யத்) “”பார்த்தல்” என்ற வார்த்தையின் நேரடிப் பொருள் இவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. எனவே, அதை நிலைநாட்டுவதற்கு ஆயிரத்தெட்டு விதண்டாவாதம். 22:27 வசனத்தில் மறைமுகப் பொருள் இவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. எனவே, அதை நிலைநாட்டுவதற்கு ஆயிரத்தெட்டு விதண்டாவாதம்.
மேலும், இவர்கள் எப்போதுமே இப்படித்தான். இவர்களுக்கு சாதகமாக இருந்தால் நேரடி பொருளை தூக்கிப் பிடிப்பார்கள். பாதக மாக இருக்கும் மறைமுக பொருளை கீழே போட்டு விடுவார்கள். இவர்களுக்கு சாதகமாக இருந்தால் மறைமுக பொருளை தூக்கிப் பிடிப்பார்கள் பாதகமாக இருக்கும் நேரடி பொருளை கீழே போட்டு விடுவார்கள். இவர்களுக்கு சாதகமாக இருந்தால் குர்ஆனை தூக்கிப் பிடிப்பார்கள். பாதகமாக இருக்கும் ஹதீஃதை கீழே போட்டு விடுவார்கள். இவர்களுக்கு சாதகமாக இருந்தால் ஹதீஃதை தூக்கிப் பிடிப்பார்கள், பாதகமாக இருக்கும் குர்ஆனை கீழே போட்டு விடுவார்கள். இவர்களுக்கு சாதகமாக இருந்தால் சஹாபாக்களை தூக்கிப் பிடிப்பார்கள். இவர்களுக்கு பாதகமாக இருந்தால் சஹாபாக்களை கீழே போட்டு விடுவார்கள். எல்லாமே பாதகமாக இருந்தால் மொழி பெயர்ப்பில் மோசடி செய்வார்கள். பலவீனமான ஹதீஃத் என்பார்கள். காரணம் சொல்லப்படவில்லை என்பார்கள். 1987லிலிருந்து இவர்கள் காலம் இப்படித்தான் கழிகிறது.
“இயக்கம்”, “”போராட்டம்” விஷயங்களில் குர்ஆன், ஹதீஃத் இரண்டுமே இவர்களுக்கு பாதகமாக இருக்கிறது. எனவே அவையிரண்டையுமே காலில் போட்டு மிதித்து விட்டார்கள். “”சூன்யம்” விஷயத்தில் குர்ஆன் வசனங்களை இவர்களுக்கு சாதகமாக மொழி பெயர்த்து (உதாரணம் ஹாரூத் மாரூத்தை ஷைத்தான் ஆக்கியது) அதை தூக்கி பிடிக்கிறார்கள். ஹதீஃத் பாதகமாக இருக்கிறது, எனவே அதை கீழே போட்டு விட்டார்கள். ஜகாத் விஷயத்தில் உமர்(ரழி) உட்பட மூத்த சஹாபாக்கள் கூற்று இவர்களுக்கு பாதகமாக இருந்ததால் சஹாபாக்களை கீழே போட்டார்கள். தாடி விஷயத்தில் இப்னு உமரின்(ரழி) செயல் இவர்களுக்கு சாதகமாக இருப்பதால் இப்னு உமரை(ரழி) தூக்கிப் பிடிக்கிறார்கள். அதிலும் இவர்களிடம் நேர்மை கிடையாது. இப்னு உமர்(ரழி) அவர்கள் பிடியளவு தாடி வைத்திருந்தார்கள். அவரை தூக்கிப் பிடிக்கும் இவர்கள் கால் இன்ச், அரை இன்ச் அளவு ஸ்டைலாக கன்னம் லேசாகத் தெரியும் அளவுக்கு தாடியை ட்ரிம் செய்து கொள்கிறார்கள்.
“”ருஹ்யத்” விஷயத்தில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களை தூக்கி பிடிக்கும் இவர்கள் “”அலக்” விஷயத்தில் அவர்களை கீழே போட்டு விட்டு மாரிஸ் ஃபுஹைலை தூக்கிப் பிடிக்கிறார்கள். இப்படியாக இவர்களின் திருவிளையாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம். அவர்களில் ஒருசாரார், மற்றொரு சாராரை ஏமாற்றும் நோக்கத்தில் (ஆளை) மயக்கும் பேச்சுக்களை பேசுகின்றனர். உம்முடைய இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இச்செயலைச் செய்திருக்க மாட்டார்கள். 6:112 எனவே நீர் அவர்களை (அவர்களின் போக்கில்) விட்டுவிடும்! அவர்கள் (ஆளை) மயக்கும் பேச்சுக்களை பேசிக் கொண்டே யிருக்கட்டும்! மேலும் (அவர்களை நாம் ஏன் விட்டு வைத்திருக்கிறோம் என்றால்) மறுமையை (நம்ப வேண்டிய விதத்தில்) நம்பாதவர்கள் இவர்களின் இந்த (ஆளை) மயக்கும் ஏமாற்றுப் பேச்சின் பக்கம் சாய்ந்து இன்புறுவதற்காகவும், மேலும் அவர்கள் சம்பாதிக்க விரும்பும் பாவங்களை சம்பாதிப்பதற்காகவும்தான். 6:113