காரணம் நீங்கினால் சட்டம் நீங்கிவிடுமா?
S. முஹம்மது சலீம், ஈரோடு
கடந்த ஜுன் மாத (2018) அந்நஜாத் இதழில் “கண்ணால் காண்பது பொய் கணக்கீட்டில் அறிவதே மெய்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. பிறையை கண்ணால் பார்க்க வேண்டும் என்ற கட்டளையானது ஒருகாரணத்தோடு சொல்லப்பட்டதாகும். எப்போது சமுதாயத்திற்கு வானியல் தொடர்பான அறிவு விசாலமாகி விட்டதோ அப்போது காரணம் நீங்கி விடுகிறது. இதனால் பிறையை கண்ணால் மட்டும்தான் பாக்க வேண்டும் என்ற சட்டம் நீங்கி விட்டது என்ற கருத்தை வலியுறுத்தி இதில் எழுதப்பட்டிருந்தது.
இந்த கருத்து கட்டுரையாளரின் சொந்தக் கருத்தா அல்லது இவ்வாறு கூறுவதற்கு நபி மொழிகளில் ஏற்கத்தக்க ஆதாரங்கள் ஏதும் உள்ளதா என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதற்காக சில நபிமொழிகளை இங்கு நாம் முன் வைக்கின்றோம். அபூ உபைத்(ரஹ்) அவர்கள் கூறியதாவது : நான் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப்(ரழி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே பெருநாள் தொழுகை தொழுவித்தார்கள். (பிறகு தமது உரையில்) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நாம் நமது குர்பானி இறைச்சிகளை மூன்று நாட்களுக்கு மேல் (சேமித்து வைத்து) உண்பதற்கு தடை விதித்தார்கள் என்று கூறினார்கள். நூற்கள் : முஸ்லிம் 3982 அஹ்மத் 409.
மூன்று நாட்களுக்கு மேல் குர்பானி இறைச்சியை சாப்பிடக்கூடாது என்ற இந்த நபிமொழியை உலக நாடுகளில் உள்ள முஸ்லிம்களால் எந்தப் பகுதியிலாவது நடைமுறைப்படுத்தப்படுகிறதா? நமக்கு நன்றாகவேத் தெரியும். எந்த பகுதியிலும் இந்த நபிமொழியை யாரும் நடைமுறைப்படுத்துவதில்லை. அப்படியயன்றால் உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குர்பானி இறைச்சியின் உப்புக்கண்டத் திற்கு ஆசைப்பட்டு மேற்கண்ட நபி மொழியை புறக்கணித்துவிட்டார்கள் என்று சொல்லலாமா? ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒன்று சேர்ந்து இந்த நபிமொழியை நடைமுறைப்படுத்தாதற்கு என்ன காரணம்? மூன்று நாட்களுக்கு மேல் குர்பானி இறைச்சியை சாப்பிடக்கூடாது என்ற சட்டம் ஒரு காரணத்தோடு கூறப்பட்ட சட்டமாகும். அந்த காரணம் நபி (ஸல்) அவர்களது காலத்திலேயே நீங்கிவிட்டதால் இந்த சட்டமும் நீங்கி விட்டது. அது என்ன காரணம்?
ஸலமா பின் அல்அக்வஉ(ரழி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஓர் ஆண்டில்) உங்களில் குர்பானி கொடுத்தவர் மூன்று நாட்களுக்குப் பின் தமது வீட்டில் (குர்பானி இறைச்சியில்) எதையும் வைத்திருக்க வேண்டாம் என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது மக்கள் அல்லாஹ்வின் தூதரே கடந்த ஆண்டில் நாங்கள் செய்ததைப் போன்றே இந்த ஆண்டும் செய்ய வேண்டுமா? என்று கேட்டார்கள் (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இல்லை (அவ்வாறு செய்ய வேண்டியதில்லை) கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந் தது (குர்பானி இறைச்சி) பரவலாக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என நான் விரும்பினேன். (ஆகவேதான் மூன்று நாட்களுக்கு மேல் உண்ணக்கூடாது எனத் தடை விதித்தேன்) என்று பதிலளித்தார்கள். நூற்கள் : அதபுல் முஃப்ரத் 563 புகாரி: 5569
நபி(ஸல்) அவர்களது காலத்தில் ஒரு ஆண்டில் ஹஜ்ஜுடைய காலத்தில் மக்கள் வறுமையில் வாடினார்கள். இந்த கால கட்டத்தில் குர்பானி இறைச்சியை சேமித்து வைத்து உண்டால் வறுமையில் வாடும் மக் களுக்கு குர்பானி இறைச்சி முறையாக சென்றடையாது எனவேதான் மூன்று நாட்களுக்கு மேல் குர்பானி இறைச்சியை சாப் பிடக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அடுத்த ஆண்டில் மக்களில் வறுமை நிலை நீங்கியவுடன் இந்தத் தடையை விலக்கிவிட்டார்கள். மக்களின் வறுமை காரணமாகவே இந்த சட்டத்தை கூறினேன். இந்த வருடம் மக்களின் வறுமை நிலை நீங்கிவிட்டதால் இந்த சட்ட மும் நீங்கிவிட்டது என்று நபி(ஸல்) அவர் களே இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் விளக்கியுள்ளார்கள்.
மற்றொரு நபிமொழியை பாருங்கள். ஆண்களுக்கு பின்னால் ஜமாஅத்தாக தொழும் பெண்கள், ஆண்கள் ஸஜ்தாவிலிருந்து நன்றாக எழுந்த பிறகுதான் பெண்கள் தங்களது தலைகளை உயர்த்த வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பெண்களுக்கு ஏனிந்த சட்டம்? ஸஹ்ல் பின் சஃத்(ரழி) அவர்கள் கூறியதாவது: (நபி(ஸல்) அவர்கள் காலத்து) மக்கள் தமது கீழாடை சிறியதாக இருந்ததால் அதைத் தம் பிடரிகள் மீது முடிந்து கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் தொழுவார்கள் எனவேதான், ஆண்கள் அமர்வில் நேராக உட்காராத வரை நீங்கள் உங்கள் தலையை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்த வேண்டாம் எனப் பெண்களுக்கு கூறப்பட்டிருந்தது. நூல் : புகாரி 814
நபி(ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த ஆண்களில் மிக அதிகமானோரிடம் ஒரே ஒரு கீழாடை மட்டுமே இருந்தது. இந்த கீழாடையை பிடரியில் முடிச்சுப் போட்டுக் கொண்டு தொழுவார்கள். இதனால் ஸஜ்தா செய்யும்போது அவர்களது பின்பகுதி தெரியக்கூடிய வாய்ப்புள்ளது. ஆகையால்தான் ஆண்கள் ஸஜ்தாவிலிருந்து எழ வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். முழுமையான ஆடையணிந்து தொழும் நிலைக்கு மக்களின் வாழ்க்கைத்தரம் எப்போது உயர்ந்து விடுகிறதோ அப்போது இந்த சட்டமும் நீங்கிவிடும். மேற்கண்ட இந்த சட்டம் நமது காலத்தில் காலாவதியாகி விட்டதால் தான் வீஹிவீமூ, மூபுஞக்ஷி போன்ற பள்ளிகளில் தொழ வரும் பெண்களிடத்தில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எந்த மெளலவியும் வலியுறுத்துவதில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இன்னொரு நபிமொழியை பாருங்கள் : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள் ஆனால் (அபுல் காசிம் என்ற) என் குறிப்புப் பெயரை சூட்டிக் கொள்ளாதீர்கள். நூல் : புகாரி 3538 இன்றைய முஸ்லிம்களில் பலர் அபுல்காசிம் என்ற பெயரை வைத்துள்ளார்கள் இவ்வாறு பெயர் வைத்தவர்கள் நபி மொழியை மீறிவிட்டார்கள் என்று எவரும் சொல்வது கிடையாது. ஏனென்றால் இதுவும் காரணத்தோடு சொல்லப்பட்ட சட்டம் தான். ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரழி) அவர்கள் கூறியதாவது : எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை யயான்று பிறந்தது அதற்கு அவர் முஹம்மத் என பெயர் சூட்டினார். அவருடைய குடும் பத்தார் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பெயரை வைக்க உம்மை நாங்கள் விடமாட்டோம் என்று கூறினர்.
ஆகவே அந்த மனிதர் தம் மகனை முதுகில் சுமந்து கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது அவனுக்கு நான் முஹம்மத் எனப் பெயரிட்டேன். என்னுடைய சமுதாயத்தார் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பெயர் வைக்க உம்மை நாங்கள் விடமாட்டோம் என்று கூறினர் என்றார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள் (ஆனால் அபுல்காசிம் எனும்) எனது குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் நானே பங்கீடு செய்பவன் (காசிம்) ஆவேன் உங்களிடையே நான் பங்கீடு செய்கிறேன் என்று கூறினார்கள். நூற்கள்: முஸ்லிம் 4321 அதபுல் முஃப்ரத் 839 காசிம் என்றால் பங்கிடுபவர் என்று அர்த்தமாகும்.
நபி(ஸல்) அவர்கள் உயிரோடு வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு தேவையான பொருளாதாரங்கள் அனைத் தும் நபி(ஸல்) அவர்களின் மூலமாகத்தான் பங்கிடப்பட்டு வந்தது. இதைப் போன்றே குர்ஆனுடைய கல்வியும் அவர்கள் மூலமாகவே மக்களுக்கு கிடைத்து வந்தது. பொருளாதாரம், குர்ஆனுடைய கல்வி உட்பட அனைத்துவிதமான நன்மைகளும் நபி (ஸல்) அவர்கள் வழியாகவே பங்கீடு செய்யப்பட்டதால் நபி(ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமே அபுல்காசிம் என்ற பெயர் வைக்க தடை செய்யப்பட்டது. இதை இன்னொரு கோணத்திலும் நாம் பார்க்கலாம்.
உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போன்று இத் தூதரை அழைக்காதீர்கள்(குர்ஆன் 24:63) என்று அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதால் நபி(ஸல்) அவர்களை வயதில் மூத்த அவர்களது பெரிய தந்தை உட்பட எந்த ஒரு ஸஹாபியும் முஹம்மத் என்று கூப்பிட மாட்டார்கள் இதனால் முஹம்மத் என்று யாரேனும் அழைத்தாலும் நபி(ஸல்) அவர்கள் திரும்பி பார்க்கமாட்டார்கள்.
இங்கு முஹம்மத் என்று ஸஹாபாக்கள் யாருக்கேனும் பெயர் இருந்தால் பிரச்சனையில்லை அதே வேளையில் அபுல் காசிம் என்ற பெயர் ஸஹாபாக்களுக்கு இருக்கும் போது யாரேனும் ஒருவர் ஸஹாபியை நோக்கி அபுல்காசிம் என்று கூப்பிடும்போது அந்த இடத்தில் நபி(ஸல்) அவர்கள் இருக்கும் பட்சத்தில் தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு கூப்பிட்டவரை நோக்கி திரும்பி பார்க்கும் நிலை ஏற்படும் இந்த சங்கடமான நிலையை போக்கவே அபுல்காசிம் என்ற பெயரை வைப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். (பார்க்க : முஸ்லிம் 4319)
அபுல்காசிம் என்ற பெயர் வைக்க நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் காலம் வரை தான் தடை செய்யப்பட்டு நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்ட பிறகு காரணம் நீங்கி விடு வதால் தடையும் நீங்கிவிடுகிறது. ஆகவே இன்றைய முஸ்லிம்கள் அபுல் காசிம் என்ற பெயரை வைப்பது நபி மொழியை மீறியதாக ஆகாது. மற்றுமொரு நபிமொழியையும் கவனியுங்கள் : களிமண் பாத்திரம், சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் பேரீச்ச மரத்தின் அடிப் பாகத்தை குடைந்து தயாரிக்கப்பட்ட மரப் பீப்பாய் போன்ற வற்றில் பானங்களை ஊற்றி வைக்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் (பார்க்க முஸ்லிம் 4049)
மேற்கண்ட பாத்திரங்களை இன்றும் முஸ்லிம்கள் பயன்படுத்தக்கூடாது என்று எந்த ஒரு அறிஞரும் ஃபத்வா கொடுப்ப தில்லை மாறாக இத்தகைய பாத்திரங்களை தாராளமாக பயன்படுத்தலாம் என்றே கூறி வருகின்றனர். மேற்கண்ட பாத்திரங்களை பயன்படுத்த ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஏன் தடை விதிக்கப்பட்டது? நபி(ஸல்) அவர்களின் வருகைக்கு முன் அரபு சமுதாயம் மிகப் பெரிய அளவில் மதுவில் மூழ்கி கிடந்தது இந்த சூழலில் குர்ஆன் அருளப்பட்ட பிறகு படிப்படியாக ஆரம்பித்து பின்னர் முழுமையாக மது தடை செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில் மதுபானங்களை ஊற்றி வைத்த பாத்திரங்களை பயன்படுத்தும் போது புதிதாக இஸ்லாத்தை தழுவிய மக்களுக்கு மதுபானம் பற்றிய ஞாபகம் வந்து அதனால் தடுமாற்றம் ஏற்பட்டு பாதை மாறிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த பாத்திரங்களை பயன்படுத்த ஆரம்பத்தில் நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் பிறகு ஈமானில் மிக உயர்ந்த நிலையை ஸஹாபாக்கள் அடைந்தபோது இந்த தடையை விலக்கிக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தோல் பாத்திரம் தவிர வேறெதிலும் பானங்களை ஊற்றி வைக்க வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி எல்லாப் பாத்திரங்களிலும் (ஊற்றி வைத்து) அருந்திக் கொள்ளுங்கள். போதை தரக்கூடியதை அருந்தாதீர்கள். அறிவிப்பாளர் : புரைதா (ரழி), நூல் : முஸ்லிம் 4066
காரணத்தோடு ஒரு சட்டம் சொல்லப்படுமானால் அந்த காரணம் நீங்கும்போது அதன் சட்டமும் நீங்கிவிடுகிறது என்பதை நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள நபி மொழிகள் இரண்டாவது கருத்துக்கு இட மில்லாமல் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சாப்பிடக்கூடாது என்ற சட்டம் மக்களின் வறுமை நிலை நீங்கிய போது மாற்றப்பட்டது. ஸஜ்தாவிலிருந்து ஆண்கள் நன்றாக எழுந்த பிறகே பெண்கள் எழவேண்டும் என்ற சட்டம் மக்களின் ஆடை பற்றாக்குறை நீங்கிய பிறகு மாற்றப்பட்டது அபுல் காசிம் என்ற பெயரை வைக்கக் கூடாது என்ற சட்டம் நபி(ஸல்) அவர்களது மரணத்திற்கு பிறகு மாற்றப் பட்டது களிமண் பாத்திரம், சுரைக்காய் குடுவை இதுபோன்ற பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் மதுபானங் கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு ஈமானில் மிக உயர்ந்த நிலையை அடைந்த போது மாற்றப்பட்டது.
இதை போன்றே பிறையை கண்ணால் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற சட்டம் வானியல் அறிவு வளர்ந்து பரவலாகி விட்ட பிறகு மாற்றப்பட்டது என்றே நாம் புரிய வேண்டும். இதுதான் நியாயமான புரிதலாகும். பிறையை கண்ணால் மட்டுமே பார்க்க வேண்டும் வானியல் அறிவை பயன்படுத்தி நோன்பை ஆரம்பிக்கவோ முடிக்கவோ கூடாது என்று பிடிவாதம் பிடிக்கும் ஆலிம்கள், குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சாப்பிடக்கூடாது என்ற நபி மொழியையும் நாம் சுட்டிக்காட்டியுள்ள மற்ற நபிமொழிகளையும் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்து அதை முஸ்லிம்களிடத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்த பிறகு பிறை பற்றி பேசுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.