“ஸ்மார்ட் ஃபோன்” 

in 2018 அக்டோபர்,தலையங்கம்

அக்டோபர் 2018

முஹரம் -ஸஃபர் 1440 

“ஸ்மார்ட் ஃபோன்” 

உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் மக்களை கொன்று தீர்த்தாக வேண்டும் என்ற நோக்கத்தில் உலகம் செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதேபோல வீட்டு உபயோகப் பொருட்களிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பல பொருட்கள் மக்களை பிரயோஜனமில்லாதவர்களாக மாற்றியே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் உலகம் செயல்படுகிறதோ என்று எண்ணவும் தோன்றுகிறது.

உதாரணமாக படித்தவர்களிலிருந்து பாமரர்கள் வரை மக்களிடம் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது “ஸ்மார்ட் ஃபோன்”கள். கடைவீதிகள், சாலைகள் பேருந்து நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன் என்று எங்கு திரும்பினாலும் ஆளுக்கு ஒரு போனை காதில் வைத்துக் கொண்டிருப்பதை காண்பது அன்றாடம் தவிர்க்க முடியா நிகழ்வாகி விட்டது.

இவை மக்களிடையே ஒரு பக்கம் திருப்தியையும், மறு பக்கம் கவலையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது தான் யதார்த்த உண்மை.

பயன்பாட்டாளர்கள் தங்களுடைய தொழிற்சாலைகளிலும், கல்விக் கூடங்களிலும், அலுவலகங்களிலும், வியாபார ஸ்தலங்களிலும், மருத்துவமனைகளிலும் இன்னும் வணிக வளாகங்களிலும், தங்களுடைய பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தித் திருப்தி அடைந்து வருகின்றனர்.

அதேசமயம், ஸ்மார்ட் போன்களை பொழுது போக்கிற்காக பயன்படுத்துகின்ற பயன்பாட்டாளர்கள், சமயசந்தர்ப்பம் பாராமல் ஸ்மார்ட் போன்களை மணிக்கணக்கில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பழக்கத்தை மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது அவர்களுக்குள்ளேயே பலருக்கு கவலையைத் தந்து கொண்டிருக்கும் விஷயமாகவும் இருக்கிறது.

தங்கள் பணிகளுக்காக மட்டும் பயன்படுத்துபவர்களில் பலரும் கூட மெல்ல மெல்ல பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் பழக்கத்திலிருந்து தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தாங்கள் பார்க்கும் பணிகளில் பாதிப்பு ஏற்படுவதை உணரவும் செய்கின்றனர். பயன்பாட்டில் திருப்தி அடைந்த நிலையிலிருந்த இவர்கள், இப்போது நிறுத்தி விட முடியவில்லையே என்ற வருத்தத்தை வரவழைத்துக் கொண்டனர்.

வேண்டியதைக் கேட்டால், படபட வென அடுத்த நொடியில் அது சம்பந்தமான அனைத்தையும் வாரி இறைக்கிறது வலை தளங்கள். “இவ செஞ்ச வேலையைப் பாருங்கள்” என்ற தலைப்புடன் வலைத்தளம் அழைப்பு விடுக்கிறது. கிளிக் செய்தால், பால் உணர்வைத் தூண்டும் வீடியோக்களின் குவியல்.

இதுதான் இப்போதைய உச்சகட்ட கண்டுபிடிப்பு என்று கூற முடியாத நிலையிலும் வியாபார போட்டியின் காரணமாக காலத்திற்கேற்ப நவீன Appsகள் அறிமுகப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும், அடுத்த தலைமுறை எதை கையில் வைத்துக் கொண்டு என்னத்தை செய்து கொண்டிருக்கும் என்று இப்போதே மிரள ஆரம்பித்து விட்டனர். இப்போது கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களும், முதியவர்களும். மாணவ மாணவியர், சிறுவர் சிறுமியர், குழந்தைகள் முதல் இளம் வயதினர் வரை ஸ்மார்ட்போனில் உள்ள விதவிதமான விளையாட்டுக்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதனால் இவர்கள் சிந்தனை சிதறல்களில் சிக்குண்டு வாழ்ந்து வருகின்றனர். இது பெற்றோர்களுக்கு மீள முடியாத வருத்தத்தை தந்துகொண்டு இருக்கின்றன. மனநல மருத்துவர்கள் பெற்றோர்களை எச்சரித்து ஆலோசனைகள் வழங்க வேண்டிய சூழ்நிலை உருவாகி, அவை நடந்து கொண்டும் இருக்கிறது.

காலையில் தூக்கத்திலிருந்து எழுந்ததும் டிவி, ஐபேட், மொபைல்/ஸ்மார்ட் ஃபோன் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் அதன் கதிர்கள் தூங்கி எழுந்த நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதுவும் குறிப்பாக சிறுவர், சிறுமியர்களுக்கு என்றெல்லாம் எச்சரிக்கைகள் அறிவுரைகள் பல தரப்பிலிருந்து வெளிவர ஆரம்பித்து விட்டன.

அமெரிக்காவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சாதாரண உடல்நலக் குறைவிற்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் ஒரு பக்கமாக ஒருக்கணித்துபடுத்துக் கொண்டி ருந்த நிலையில் நீண்ட நேரம் ஸ்மார்ட் போனை உபயோகித்ததில், அந்த ஒரு பக்க உறுப்புகள் செயல் இழந்து போய்விட்டது.

வெளிநாடுகளில் தாய் தந்தை இருவரும் வேலைக்குப் போகிறார்கள். வீட்டுக்கு வந்தவுடன் ஸ்மார்ட் போனை கையில் எடுத்து விடுகிறார்கள். இணைய தளங்களில் மூழ்கி விடுகிறார்கள். குழந்தைகளை கவனிப்பது இல்லை. குழந்தைகள் தனிமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்படியான சூழல் நமது நாட்டிலும் உருவாகிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் பெற்றோரின் அன்பு, அரவணைப்பு ஆகியவைகளை இழந்து விட்ட 7 வயது சிறுவன் எமல்ரஸ்டிக் என்பவனின் அழைப் பின் பேரில் சுமார் 15 நாட்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கில் சிறுவர் சிறுமியர் கூடி பேரணி ஒன்றை நடத்தினர். “பெற்றோர்களே! செல்போனில் விளையாடாதீர்கள். என்னோடு விளையாடுங்கள்” என்பதுதான் இவனது முழக்கமாக இருந்தது.

“உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. (அல்லாஹ்வுக்கு) பயப்படுபவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும். நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?” என்ற புனித குர்ஆனின் (அல்குர்ஆன் 6:32) எச்சரிக்கையைப் பின்பற்றி, மன நலம், உடல் நலம் கெடாமல் இருக்க “இவை களைத் தவிர்த்து விடவேண்டும் அல்லது அவசர தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்” என்ற கட்டாயத்திற்குள் மனித இனம் வரவேண்டி இருக்கிறது. இவ்வாறு செயல்பட்டால்தான் ஒவ்வொரு மனிதரும் தமது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும், இல்லையேல் சீர்கெடும் அழிவும் உறுதி! அல்லாஹ் காப்பானாக.

Previous post:

Next post: