எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
ஜனவரி 2019 தொடர்ச்சி….
* ஹாஜிகள் துல்ஹஜ் பிறை ஒன்பதில் அரஃபா மைதானத்தில் தங்கி அங்கு லுஹர் அசர் தொழுகைகளைத் தொழுது மஃரிப் நேரமானதும் முஜ்தலிபாவிற்குச் சென்றால் தான் அது பரிபூரணமான ஹஜ்ஜாக அமையும் ஆனாலும் ஹஜ்ஜுக்காக வந்தவர்களுக்கு ஏதோ இடையூறு காரணமாக பிறை ஒன்பதாவது பகல் பொழுதில் அரஃபா மைதானத்தை அடைய முடியவில்லை. ஆயினும் அன்றைய மஃரிபுக்குப் பிறகானாலும் அல்லது ஃபஜ்ருக்குளேனும் அரஃபா மைதானத்தை அடைந்து அங்கு சிறிதள வேனும் தங்கிவிட்டு ஃபஜ்ர் தொழுகைக்கு முஜ்தலிபாவிற்குச் சென்று முஜ்தலிபாவில் ஜமாஅத்தாக ஃபஜ்ர் தொழுதால் அவரது ஹஜ் பரிபூரணமாக நிறைவேறிவிடும் அவர் தனது ஹஜ்ஜின் கிரிகைகளை மேற்கொண்டு தொடரலாம் என்பதனைப் பின்வரும் அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது.
நபி(ஸல்) அவர்கள் முஜ்தலிபாவில் சுப்ஹ் தொழுகைக்குத் தயாரான நேரத்தில் நான் அவர்களிடம் சென்றடைந்தேன். அல்லாஹ்வின் தூதரே நான் “தய்யீ” எனும் கஷ்டப்பிரதேச மலைப் பகுதியிலிருந்து வருகிறேன் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் எனவே எனக்கு ஹஜ் பலன் உண்டா? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் யார் நமது இந்த சுப்ஹ் தொழுகையில் பங்கெடுத்து நம்முடன் தங்கியிருந்தவர் இதற்கு முன்னர் அவர் அரஃபாவில் பகலிலோ, இரவிலோ சிறிது தங்கியிருந்தா லும் அவரது ஹஜ் நிறைவு பெறுகிறது அவர் தனது ஹஜ்ஜுக்கான ஏனைய கிரிகைகளை மேற்கொண்டும் தொடரலாம் என்று கூறினார்கள் (உர்வா பின் முளர்ரிஸ்(ரழி) திர்மிதி : 814,815,2901)
மினாவில் இருக்கும்போது ஃபஜ்ருக்குப் பின்னர் அதிகாலை வேளையில் ஆரம்பித்த துல்ஹஜ் பிறை ஒன்பதாவது அரஃபாவுடைய நாள் முஜ்தலிபாவின் சுப்ஹ் ஜமா அத் தொழுகை வரை என்பதைத் தெளிவாக அறிகின்றோம். மேற்கண்ட ஆதாரப்பூர்வ மான அறிவிப்பின் மூலம் மஃரிபில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது என்னும் மாற்றுக் கருத்துடையவர்களின் கூற்றுப் பொய்யாகி விடுகிறது. இவர்களின் வாதப்படி துல்ஹஜ் பிறை எட்டு மினாவில் இருக்கும்போது மாலை நேரம் மஃரிபிலிருந்து அரஃபாவுடை நாள் ஆரம்பித்து அன்று மாலை மஃரிபுடன் அரஃபா நாள் முடிவு பெறுகிறது. அத்துடன் அறுப்பின் பத்தாவது நாள் ஆரம் பித்து விடுகிறது அப்படியானால் அன்று பின் தங்கி மஃரிபுக்குப் பிறகு அல்லது இஷாவுக்குப் பிறகு அரஃபா மைதானத்தை அடைந்து வருபவர்களுக்கு ஹஜ் எப்படி நிறைவேறும்?
முஜ்தலிபாவின் சுப்ஹுக்குள் யார் அரஃபாவைக் கடந்து தொழுகைக்கு வந்து விட்டாரோ அவர் ஹஜ்ஜை அடைந்து விட்டார் எனும் அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களின் கூற்று என்னாவது?
* வானத்தில் நீளவாக்கில் செங்குத்தாகத் தோன்றிப் பரவக்கூடிய வைகறை எனும் ஃபஜ்ருக்கு முன்பு வரை உள்ள இருளான நேரத்தில் ஒருவர் அரஃபாவில் தங்கு வதால் அவரது ஹஜ் தவறிவிடாது என்பதாக இப்னு அப்பாஸ்(ரழி) அதாஉ(ரஹ்) ஆகியோரிடமிருந்து சரியான அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ள ஆதாரப்பூர்வமான தகவலாகும். (தஃப்சீர் இப்னு கஸீர் 1:585, 586)
* அமைதி நிலவியிருக்கும் லைலத்துல் கத்ருடைய பாக்கியமுள்ள பரிசுத்தமான நாள் சூரியன் உதயமாகும் வரை நீடித்திருக்கும்.
* நிச்சயமாக நாம் (பரிசுத்த குர்ஆனாகிய) இதை கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) என்ற நாளில் இறக்கினோம் மேலும் கண்ணியமிக்க நாள் என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) நாள் ஆயிரம் மாதங்களை விட மிகச் சிறந்ததாகும் அதில் வானவர்களும் ஜிப்ரீலும் தமது இரட்சகனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) ஒவ்வொரு காரியங்களுடனும் இறங்கு கிறார்கள். அமைதி நிலவியிருக்கும் அது (அன்றைய) விடியற்காலை (சூரியன்) உதயமாகும் வரை இருக்கும் (97:1-5) என்பதானது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலதுல் கத்ருடைய நாள் என்பது 24 மணி நேரங்களைக் கொண்ட ஒரு நாளாகும்.
* பாலை விட அதிக வெண்மையானதாகவும் அதிக இனிப்பாகவுமுள்ள “மன்னு” மற்றும் “சல்வா” என்னும் உணவுப் பொருளானது இஸ்ரவேலர்களின் இருப்பிடங் களிலேயே பனிப் பொழிவைப் போன்று சூரியன் உதயமாகும் வரை வானத்திலிருந்து பொழிந்து கொண்டிருக்கும் (த்தாதா(ரஹ்) இப்னுகஸீர் (ரஹ்) 1:217)
* ரமழானில் பிந்திய பத்தில் ஒற்றைப் படை நாளில் ஏற்படும் லைலதுல் கத்ர் என்பதற்கான அடையாளம் அந்த நாளின் இரவை அடுத்து வரும் நாளின் அதிகாலைப் பொழுதில் சூரியன் சுடரின்றி ஒளியிளந்து வெண்ணிறத்தில் மங்கலாக உதிக்கும். (உபை பின் கஅப் (ரழி) முஸ்லிம் : 1397, 2175)
* சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும் அன்றுதான் ஆதம்(அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள் அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள் அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள் அன்றுதான் யுக முடிவு நிகழும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம் : 1547, 1548)
* அடியார்களுக்குப் பொழுது புலருகின்ற ஒவ்வொரு நாளின் அதிகாலையிலும் இரண்டு வானவர்கள் இறங்கி வராமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) புகாரி : 1442, முஸ்லிம் : 1010, ரி, ஸா:295)
* அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் மனிதர்கள் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புகளுக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். (அபூ ஹுரைரா(ரழி), புகாரி : 2707, 2989, முஸ்லிம் : 1009,1302,1835, ரியாதுஸ் ஸாலிஹீன் : 248)
* சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி : 2707,2989, முஸ்லிம்: 1009, 1302, 1835, ரியா ஸாலி:248)
* சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் ஒருவர் தமது வாகனத்தின் மீது ஏறி அமர உதவுவதும் அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி : 2707,2989, முஸ்லிம் : 1009,1302,1835, ரியா ஸாலி:248)
* சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளி லும் ஒருவர் சொல்லும் ஒவ்வொரு இனிய சொல்லும் தர்மமாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி: 2707, 2989, முஸ்லிம்: 1009,1302,1835, ரியா ஸாலி:248)
* சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளி லும் ஒருவர் தொழுகைக்குச் செல்வதற்காக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தர்மமாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி : 2707,2989, முஸ்லிம் : 1009,1302,1835, ரி. ஸா.:248)
* சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளி லும் ஒருவர் தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஹுரைரா(ரழி), புகாரி : 2707, 2989, முஸ்லிம் : 1009,1302,1835, ரியா ஸாலி:248)
* சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் ஒருவர் செய்யும் ஒவ்வொரு திக்ரும் தர்மமாகும் என்று அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதர்(ரழி), முஸ்லிம் : 1302)
* சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் ஒருவர் தீமையைத் தடுத்தலும் தர்மமாகும் என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதர் (ரழி), முஸ்லிம் : 1302)
* சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் ஒருவர் லுஹாத் தொழுவதும் தர்மமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதர் (ரழி), முஸ்லிம் : 1302)
மேற்கண்ட அறிவிப்புகளின் மூலம் சூரியன் மறைந்து மஃரிப் நேரம் நாள் ஆரம்பமாகிறது என்று சொல்வோரின் கூற்றுக்கு மாற்றமாகவே நாளின் ஆரம்பம் என்பது சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளும் என்றுதான் நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்களேயல்லாது சூரியன் மறைகின்ற போதுள்ள ஒவ்வொரு நாளிலும் என்று கூறவில்லை என்பதற்கு மேலும் பல ஆணித்தரமான சான்றுகளைக் குர்ஆனிலிருந்தும் சமர்ப்பிக்க முடியும்.
* இரவு பகலை முந்த முடியாது. (36:40) ஸ (முதலில் வந்த) முற்பகல் மீது சத்திய மாக(ப் பின்னால் வந்து அதனைப் போர்த்திய) இருட்டான இரவின் மீது சத்தியமாக! (93:1,2) ஸ ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் அவர்கள் மீது அவன் அதைத் தொடராக வீசச் செய்தான். (69:7)
* அதிகாலையிலும், இரவிலும் நீங்கள் அவர்கள் அழிந்துபோன இடத்தின் மீதே செல்கின்றீர்கள். (37:137,138)
* அவனே இரவால் (முந்தியுள்ள அன்றைய) பகலை மூடுகின்றான். (7:54)
* அவ் இரவு (முந்தியுள்ள அன்றைய) பகலை வெகு விரைவாகப் பின் தொடர்கிறது. (7:54)
* சூரியன் மீதும் அதன் ஒளியின் மீதும் சத்தியமாக(ப் பின்னால்) அதைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக. (91:1,2)
* முஜாஹித்(ரஹ்) அவர்கள் 91:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “ளுஹாஹா” எனும் சொல்லுக்கு “அதன் ஒளி” என்று பொருள் என்றும் 91:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “இஃதா தலாஹா” எனும் சொல்லுக்கு “அதைத் தொடர்ந்து வரும்போது” எனும் பொருள் என்றும் கூறுகின்றார்கள். (புகாரி :5, பக்கம்:751, 752, “அஷ்ம்சு” 91ஆவது அத்தியாயத் தின் விரிவுரை)
* (முதலில் சூரியனால்) பகல் வெளியாகும் போது (ம்) அதன் மீது சத்தியமாக(ப் பின்னர் அப்பகலுக்குப் பின்னால் வந்து அதனை) மூடிக்கொள்ளும் இரவின் மீது(ம்) சத்தியமாக. (91:3,4)
* (பகலைப்) பின்தொடரும் இரவின் மீது சத்தியமாக(ப் பின்னர் சூரியனால்) வெளிச்சமாகும் விடியற்காலையின் மீது சத்தியமாக. (74:32-34)
* (முதலில் பகலின் ஒளி இருக்கும்போது) அவனே(அப்) பகலின் மீது இரவைச் சுற்றுகிறான். (39:5)
* (முதலில் பகலின் ஒளி இருந்து கொண்டிருக்கும்போது) அதன் பின்னால் வந்த) இரவை அவனே பகலில் புகுத்துகின்றான். (35:13)
* (முதலில் பகலின் ஒளி இருக்கும்போது அதன் பின்னால் வந்த) இரவால் அவன் பகலை மூடுகின்றான். (13:3)
* (நபியே!) நிச்சயமாக அல்லாஹ்தான் (முதலில்) இரவைப் பகலில் புகுத்துகின் றான் (பின்னர்) பகலை இரவில் புகுத்துகின்றான் இன்னும் (முன்னால் வரும்) சூரியனையும் (பின்னால் வரும்) சந்திர னையும் வசப்படுத்தினான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (அவை) ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணை வரை செல்கின்றன (31:29) என்பதிலிருந்து நாளின் ஆரம்பம் முதலில் பகல் என்றும் பின்னர் இரவு என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.
* அபு மூஸா(ரழி) அவர்கள் கூறியதாவது தொழுகை நேரங்களைக் கற்றுக் கொடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரழி) அவர்களிடம் சுப்ஹுத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு உத்தரவிட்டு ஒருநாள் வைகறை உதயமாகும் போதும் மற்றும் ஒருநாள் சுப்ஹுத் தொழுகையைப் பிற்படுத்தியும் தொழுதார்கள் எந்த அளவிற்கென்றால் தொழுகையை முடித்துத் திரும்பியபோது ஒருவர் சூரியன் உதயமாகிவிட்டது அல்லது சூரியன் உதிக்கப் போகிறது என்று கூறினார். (முஸ்லிம் : 1079, 1080)
* ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றுக்குள் நுழைந்து அங்கு கீழே விழுந்து கிடந்த பேரீச்சம் பழங்களை எடுத்துச் சாப்பிட்டவர்களாக கடந்த மூன்று நாட்களாக எந்த உணவையும் நான் உண்ணவில்லை. எந்த உணவும் எனக்குக் கிடைக்கவுமில்லை இது “நான்காவது நாளின் காலைப் பொழுதாகும்” என்று கூறினார்கள் (இப்னு உமர்(ரழி) தஃப்சீர் இப்னு அபீஹாத்திம் இப்னு கஸீர் (7:78) என்பதிலிருந்து நாளின் ஆரம்பம் காலைப் பொழுது என்பதை அறிகின்றோம்.
* (அனைத்துத்) தொழுகைகளையும் (குறிப்பாக)நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது) வாருங்கள். (2:223)
* ஹிஜ்ரி நான்காம் ஆண்டு அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்றுதிரண்டு முஸ் லிம்களை முற்றுகையிட்டுத் தாக்க வந்த “அஹ்ஸாப்” என்றும் “ஹந்தக்” என்றும் அழைக்கக்கூடிய அகழ்ப் போரின் போது பெரும் நெருக்கடிகளுக்கு ஆளான அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் அந்த எதிரிகளுடைய வீடுகளையும் அவர்களது புதைகுழிகளையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக அவர்கள் சூரியன் மறையும் வரை நடுத்தொழுகையான அஸர் தொழுகையிலிருந்து நமது கவனத்தைத் திசை திருப்பி விட்டார்கள் என்று கூறினார்கள். பின்னர் இரவுத் தொழுகைகளான மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளுக்கிடையே அதைத் தொழுதார்கள். (அலீபின் அபீதாலிப்(ரழி) புகாரி:2931, 4111,4533, 6396, முஸ்லிம் 1104-1108, 1314, 1317, 1109, 1316, திர்மிதி: 2908, அஹ்மது: 867, 17925, 19296, முஅத்தா மாலிக் : 308, 371, தஃப்சீர் இப்னு கஸீர்: 1:784-790)
* நடுத்தொழுகை என்பதற்குப் பலவித மான அறிவிப்புகள் வந்தாலும் அஸர் தொழுகைதான் நடுத்தொழுகை என்ப தற்கு நபி(ஸல்) அவர்கள் வரை சென்றடையக்கூடிய ஹதீஃத்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. எனவே அஸர் தொழுகைதான் நடுத்தொழுகை என்பது இப்னு கஸீர்(ரஹ்) அவர்களின் முடிவாகும். (கஸீர் : 1:787) இதன்படி ஒரு நாளின் முதலாவது தொழுகை சுப்ஹுத் தொழுகையாகும் அதனைத் தொடர்ந்து பொழுது புலரும் மேலும்,
* ஒருநாளின் ஆரம்பம் என்பது முதலில் முற்பகல் அதற்குப் பின்னர் பகல் அதற்குப் பின்னர்தான் இரவு என்பதைத் தெளிவாக நபித்தோழர்களும் அறிந்திருந்தார்கள்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)